நாகம்மாளும் அவள் வாங்கும் வட்டியும்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 15, 2022
பார்வையிட்டோர்: 4,212
கரோனா வைரஸ் உயிர் பயத்தில், அந்த தெருவில் இருந்த வீடுகளின் கதவுகள் முழுவதும் சாத்தியிருந்தாலும், கை பேசி வழியாக அவர்களின் தொடர்புகள் நடந்து கொண்டுதான் இருந்தது. இதில் சுக துக்க நிகழ்வுகள் ஆண்களும், பெண்களும் பரிமாறி கொண்டாலும் நாகம்மாவின் மரணம் அவர்கள் அனைவரின் மனதையும் சற்று கலக்கித்தான் விட்டது.
நாகம்மா சிரித்த முகம், அதுவும் பணம் வட்டிக்கு கொடுக்கும்போது அவள் காட்டும் புன்னகை, இதை கண்டு மயங்காதவர்கள் யாரும் அந்த தெருவில் இருக்க முடியாது. ஆனால்…
அவளின் மற்றொரு முகத்தை அவர்கள் மாத இறுதியில் பார்க்க நேரும்போது, அப்பப்பா அந்த தெருவில் இருக்கும் ஆண்கள் காதை பொத்தி கொண்டு வீட்டுக்குள் ஓடி விடுவார்கள் என்றால் நாகம்மாவிடம் வட்டிக்கு வாங்கியிருந்த குடும்பத்தின் நிலையை சற்று யோசித்து பாருங்கள்.
ஒவ்வொரு பண்டு பாத்திரங்களை கறந்து விடுவாள் நாகம்மா, அதுவும் வட்டிக்காசுக்காக. அசல் அப்படியே உறங்கி அவளுக்கு மாதா மாதம் இப்படி ஏதாவது ஒன்றாக கறந்து கொடுத்து கொண்டிருக்கும்.
இவளிடம் இனிமேல் கடன் வாங்க கூடாது என்று அப்பொழுது முடிவெடுக்கும் இந்த தெருவாசிகள் ஒருவாரமோ இல்லை ஒரு மாதமோ அவர்களின் மன நிலை மாற்றம் அடைந்து போகும் அளவுக்கு அவர்களின் நிலைமை மாறிவிடும். பாவம் அவர்கள் என்ன செய்ய முடியும் ? அன்றாட வேலைக்கு செல்பவர்களும், மாத ஊதியத்திற்கு சில பல சிறு குறு நிறுவனங்கள், கடைகளில் வேலை பார்ப்பவர்கள் ஆயிற்றே.
அப்படியும் நாகம்மாளிடம் போக கூடாது என்று வைராக்கியமாய் இருக்கும் ஒரு சில குடும்பங்களுக்கு நாகம்மாளின் திடீர் விஜயம், கொஞ்சி குலாவுதல், சிரித்த முகம் இவைகள் எல்லாம் அவர்களின் வைராக்கிய மனநிலையை அசைத்து விடும்.
யாருக்காக நான் உழைக்கிறேன், உங்களுக்காகத்தானே, உங்களுக்கு இல்லாத பணம் எனக்கெதுக்கு? நான் ஏன் சத்தம் போடறேன்? நீங்க ஒழுங்கா கடன் கட்டினா அடுத்தடுத்து பணம் கடன் கிடைக்குமில்லையா? இப்படி மனம் உருக ஐஸ் கட்டிகளாக தலையில் அபிஷேகம் செய்து வட்டிக்கு பணம் வாங்க வைத்து விடும் சாமார்த்தியம் அவளுக்கு இருந்தது.
அப்புறம் என்ன? இவர்களின் வைராக்கியம் காணாமல் போய் மறு மாதமே இவளிடம் வசவுகளை வாங்கி கட்டி கொண்டிருக்கும் அனேக குடும்பங்களை இந்த தெருவில் பார்க்கலாம்.
எல்லாம் போகட்டும், நாகம்மாளுக்கு என்ன ஆச்சு? கொரோனாவால போனாளா? இல்லை இயற்கையான மரணமா? இதுதான் அன்றைக்கு மிகப்பெரிய பேச்சாக இருந்தது அந்த தெருவுக்கு.
நாகம்மாவின் அப்பா அம்மா இருந்த போது அவர்கள் குடும்பமும் வட்டிக்கு கடன் வாங்கி பிழைப்பு நடத்தும் அளவில்தான் இருந்தது.நாகம்மாளுக்கு பதினெட்டு கடந்து, வட்டிக்கு கடன் உடன் வாங்கி அவர்கள் பெற்றோர் மணம் முடித்து கொடுத்த பின்னால் கொஞ்சம் கொஞ்சமாக மருமகன் மூலமாக வியாபாரத்தில் வந்த லாபம் கைக்கு வர அவர்களின் குடும்பம் பொருளாதாரத்தில் கை கொஞ்சம் ஓங்க ஆரம்பித்தது.
வியாபாரம் என்றவுடன் பொருள் வியாபாரம் என்று நினைத்து கொள்ள வேண்டாம். இதே குறை வட்டிக்கு வாங்கி நிறை வட்டிக்கு முடியாதவர்களுக்கு கொடுத்து, அவர்களை மிரட்டி உருட்டி சம்பாதிக்கும் தொழில்தான்.
ஆரம்பத்தில் நாகம்மாளும் இந்த தொழிலில் பாவ புண்ணியம் பார்த்து பயந்துதான் இருந்தாள். நாள் பட நாள் பட தன் கணவனின் செய்கைகள் இவளிடம் ஒட்டி கொள்ள, அவனை விஞ்ச ஆரம்பித்தாள்.
இவளின் தொழில் திறமை வளர வளர கணவனின் விலகலை கவனிக்க மறந்து விட்டாள். இவளுக்கென்று ஒரு பெண் குழந்தை பிறந்து இவளின் பண வெறியினால் அதுவும் அப்பனிடமே போக ஆரம்பித்தது. சட் சட்டென இவளின் பெற்றோர்கள் ஒவ்வொருவராய் இறந்து விட அவளின் பின்புல பலமும் குறைந்து விட்டது.
நாகம்மாளின் கணவன் விடிந்து எழுந்து, மகளை கூப்பிட்டு கொண்டு வெளியே சென்றவன் அப்படியே காணாமல் போய் விட்டான். எங்கு போனான்? என்பதே கேள்விக்குறியாய் இரண்டு மூன்று வருடங்கள் இவள் காத்திருந்ததுதான் மிச்சம், தொலை தூரத்தில் எங்கோ குடும்பம் ஒன்று உருவாகி இருப்பதாக கச முச பேச்சு. அது கூட இவளை கல்யாணம் பண்ணுமுன்னேயே அவனுக்கு கல்யாணம் ஆகியிருந்ததும், அந்த மனைவிக்கும் குழந்தை இல்லாததால் இந்த பெண் குழந்தையை அவளிடம் கொண்டு ஒப்படைத்து விட்டதாக பேச்சு விஷயமாக இருந்தது அந்த தெருவாசிகளுக்கு.
தனிமை நாகம்மாளுக்கு தாங்க முடியாத கோபத்தை தர இந்த கோபத்தை எல்லாம் அவள் தன் தொழிலில் காட்ட ஆரம்பித்தாள். மனதுக்குள் இவள் சில நேரங்களில் இவள் வசை பாடிக்கொண்டிருக்கும் குடும்பத்தின் மீது அநுதாபம் பிறந்தாலும், அவர்கள் குழந்தை, குடும்பத்துடன் இருப்பது அவளுக்கு எரிச்சலையும், ஆங்காரத்தையும் உருவாக்க தன்னை அந்த நேரத்தில் கோபக்காரியாய் காட்டிக்கொண்டாள்.
அது மட்டுமல்ல, இப்பொழுது அவளுக்கு தன் சுக துக்கம் சொல்லி தோள் சாய ஒரு ஆள் தேவை, ஆனால் யாரை நம்புவது? எவனையாவது கல்யாணம் செய்து கொள்ளலாம் என்றால் வருபவன் இவள் முதல் கணவனை போல் இருந்து விட்டால் என்ன செய்வது? முதலாவது அம்மா, அப்பா இருந்தார்கள், இப்பொழுது !
இதற்கு இடையில் இவளை வளைத்து போட ஒரு சில ஆண்களின் வலை வீச்சையும் சமாளிக்க தன்னை ஒரு கோபக்காரியாகவே அந்த தெருவில் காட்டிக்கொள்ள வேண்டி இருந்தது.
தனக்கான ஒருவன் வேண்டும், இப்படி நினைத்து நினைத்தே அவள் நாற்பதை கடந்து விட இதோ இப்பொழுது மரணத்தை தழுவி விட்டாள்.
நாகம்மாளின் வீட்டின் கதவு மட்டும் திறந்திருக்க அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் மெல்ல அவரவர் வீட்டு வாசலில் நின்று வேடிக்கை பார்க்க
நாகம்மாளின் உடல் அரசாங்க விருந்தாளியாக, முழு கவச உடை அணிந்த நகராட்சி ஊழியர்களால் ஆம்புலசின் மூலம் கொண்டு செல்லப்பட்டது.
இனி இவள் வீடு யாருக்கு சொந்தம்? அப்பாடா இவளிடம் வாங்கிய கடன் யாருக்கு தெரியும்? இப்படி யோசித்து நிம்மதியான ஒரு சில குடும்பம், எப்படியாவது வாங்கின பணத்தை கொடுத்துடணும், ஆனா யாருகிட்டே கொடுக்கணும்? இப்படியும் எண்ணிக்கொண்ட பல குடும்பங்கள்..
இவர்களின் வாழ்க்கை நிம்மதியாய் ஒரு வாரம் ஓடியிருக்கலாம், மறு வார முதல் நாள் அவர்களின் வீட்டு வாசலின் முன்னால் ஒரு சிறு பெண் நின்று கொண்டிருந்தாள், வயது பதினெட்டிலிருந்து இருபதுக்குள் இருக்கும், நாகம்மாளின்
இளவயது தோற்றமாய், எங்க அம்மாகிட்ட வாங்கின பணத்துக்கு இன்னும் வட்டி வரலை, சத்தமாய் இவர்களிடம் கேட்க இவர்கள் விழித்தனர்.
என்ன முழிக்கறீங்க, இவ யாருன்னுதானே, நான் அவங்க பொண்ணுதான், நீங்க வாங்கின பணம் எல்லாத்தையும் அம்மா இந்த இந்த நோட்டுல எழுதி வச்சிருக்காங்க, சரி எப்ப பணம் கொடுப்பீங்க?
இவர்களுக்கு நாகம்மாளிடம் சுதந்திரம் கிடைத்தாலும், இந்த வட்டி வரவு செலவு கணக்குக்கு என்றும் சுதந்திரம் கிடைக்க போவதில்லை.