தொ(ல்)லைபேசி? – ஒரு பக்க கதை





‘இந்த வீட்டில் இணைய தள இணைப்பிலிருந்து அனைத்து வசதிகளும் இருக்கு. ஆனா தொலைபேசி மட்டும் அரத பழசு.!!
அழைத்தால் எடுத்து…. ” ஹலோ..! ” சொல்ற அமைப்பு.
அழைக்க வேண்டும் என்றால் எண்களை அழுத்தி ஒலிவாங்கியைக் காதில் வைக்கும் அமைப்பு.
.இதில் அழைப்பு எண்கள் தெரியும் வசதியோடு இருக்கும் அதி நவீன கருவிகளும் இருக்கும்போது…இன்னும் ஏன் பழசு.??……!!
அப்பா, மகன், மகள், மனைவி…. ஆளுக்கொரு கைபேசிகள் இருக்கும்போது…அதி நவீன தொலைபேசி கருவி வீண். என்று விட்டு விட்டார்களா..?
அப்படி இருந்தாலும் அது பெரிய ரூபாய் இல்லை. வீட்டிலுள்ளவர்கள் அத்தனைப் பேர்களும் சம்பாதிப்பு. தங்கள் மதிப்பு, மரியாதை நிமித்தமாவது…. வாங்கி வைத்திருக்கலாம்..! – என்று யோசிக்கும்போதுதான் எனக்குள் இடைச் சொருகளாக இன்னொரு நினைவு வந்தது…!…
எவர் கள்ளத்தனத்தைக் கண்டு பிடிக்க இப்படி ஒரு ஏற்பாடு.. .? !!
அப்படி என்றாலும்….எல்லோரிடமும் கைபேசிகள் இருக்கும் போது அவர்கள் இந்த எண்ணிற்கு அழைக்க வேண்டிய அவசியம் இல்லை.
எதற்கு இந்த அரத பழசு. என்ன காரணம் இந்த தொலைபேசி..? என்று நினைக்கும்போதுதான்…
“என்னடா… என்னைப் பார்க்க வந்து பேசாமலிருக்கே..?” நண்பன் நாச்சியப்பன் என்னைக் களைத்தான்.
“ஒண்ணுமில்லே..மூலையில் இருக்கும் அந்த தொலைபேசிதான் எனக்குள் உறுத்தல் …?” என்றேன்.
“என்ன உறுத்தல்..?”
“அழைப்பு எண்கள் தெரியாத அரதபழசா இருக்கே…?!” இழுத்தேன்.
“அதுவா..! இந்த கைபேசியில் அழைக்கும் எல்லா எண்களும் தெரியுது. எதிரி, பிடிக்காதவர்கள் எண்கள் தெரிந்தால் ‘ வேண்டாம்..! ‘ என்று எடுக்காமல் ஒதுக்கி தப்பிக்கிறோம். இதிலாவது அப்படி தப்பிக்காமல் கோழைத்தனமாய் ஒதுங்க வேண்டாம் என்கிற எண்ணம். ” என்றான்.
சந்தேகம் தீர்ந்தது.
“சரி” தலையாட்டினேன்.