தேடல்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 1, 2024
பார்வையிட்டோர்: 1,674
நடேசன் ஆழ்ந்த சிந்தனையுடன் மடக்கிக் கட்டின கைலியுடன் மொட்டை மாடியில் மெதுவாக உலாத்தினான்.
வீட்டு வாசலில் ரிக்ஷாவில் ஏறும் முன் ரமா, “டாடி… நான் ஸ்கூலுக்குப் போய்ட்டு வர்றான். பை!” என்றாள்.
“சரி! பை பை!” என்று கையசைத்தான். சிகரெட்டைப் பற்ற வைத்து மீண்டும் உலாத்தினான். காபியோடு படியேறி வந்த மாதவி.
“இது மூணாவது காபி. எப்ப குளிச்சி, எப்ப டிபன் சாப்பிடப் போறீங்க…?” என்றாள்.
“என் பிரச்சனை புரியாமப் பேசாதே. என் மேல எவ்வளவு நம்பிக்கை இருந்தா சீதாராமன் இந்தப் பொறுப்பை ஒப்படைச்சிருப்பான்!”
“எதாச்சும் யோசனை தோணிச்சா இல்லையா?”
“இல்லையே மாதவி. ரொம்ப டென்ஷனா இருக்கு எனக்கு” என்று காபியைப் பருகினான்.
“சீதாராமன் எப்போ வர்றதா சொல்லிருக்கார்?”
“நாளைக்குக் காலைல ஒம்போது மணிக்கு டாண்னு வந்து நின்னிடுவான். அவனுக்கு என்ன பதில் சொல்றது? என்னைக் கேவலமா நினைக்கமாட்டான்?”
“அவர் சொன்னாருன்னு நீங்க ஏன் ஒத்துக்கிட்டீங்க?’
“முடியுங்கற நம்பிக்கைலை ஒத்துக்கிட்டேன்.”
“சரி. நான் கீழேப் போறேன். நிறைய வேலை இருக்கு. சீக்கிரம் வந்து குளிங்க.” என்று டபரா செட்டுடன் மாதவி சென்றாள்.
மற்றொரு சிகரெட்டைப் பற்ற வைத்து யோசிக்க ஆரம்பித்தான், நடேசன்.
வேலைக்காரி செண்பகம் பக்கெட் நிறைய துவைத்த துணிகளோடு வந்து, உதறி உதறி கொடியில் போட்டு கிளிப் வைத்துவிட்டு, “அய்யா!” என்றாள், தயக்கத்துடன்
“என்ன ?”
“நீங்க பல தடவை புத்தி சொல்லியும் அந்த மனுஷன் கேக்கறதா இல்லீங்க. அந்தச் செறுக்கி வீடே கதின்னு கெடக்கறான்யா.”
“இத பாரும்மா. நானும் எத்தனை தடவைதான் அவனுக்கு அட்வைஸ் பண்றது? சில ஜென்மங்களைத் திருத்தவே முடியாது. இனிமே உன் புருஷன் கிட்ட என்னைப் பேசச் சொல்லாதே!”
“அது இல்லிங்கய்யா. அவ வூட்டுக்குப் போவாதேன்னு சொன்னா அந்தாளு கேக்கப் போறதில்லைன்னு நல்லாப் புரிஞ்சிப் போச்சுய்யா. அவளை வெட்டி விடறதா இல்லை. மூணு கொழந்தைகளை வெச்சிக்கிட்டு அல்லாடுறேன்யா. எவகூடவோ இருந்துட்டுப் போவட்டும். தாலி கட்டுன பாவத்துக்கு செலவுக்கு பணம் கொடுக்கச் சொல்லுங்கய்யா…”
“இத பாரு! நான் வேற ஒரு டென்ஷன்ல இருக்கேன். இப்ப உன் குடும்பப் பிரச்சனைக்கு பஞ்சாயத்து பண்ணிட்டிருக்க நேரமில்லை. ரெண்டு நாள் கழிச்சி அவனை வந்து பார்க்கச் சொல்லு புரிஞ்சுதா?”
சிகரெட்டை மிதித்துவிட்டுக் கீழே சென்றான்.
நடேசன் குளித்து, டிபன் சாப்பிட்டு மற்றொரு காபியை ரசித்துக் குடித்தபடி ஒரு வார இதழைப் புரட்டிக் கொண்டிருந்தான்.
“குட் மார்னிங் நடேசன்”
தலை முழுக்க நரைத்த ஏகாம்பரம். பக்கத்திலுள்ள காலனியில் குடியிருப்பவர். தினசரி ஓசிப் பேப்பருக்காகப் புன்னகையோடு குட்மார்னிங் சொல்லிக் கொண்டு வந்து விடுவார்.
“வாங்க சார்”
“என்ன சார் விசேஷம் பேப்பர்ல…?”
அமர்ந்து உரிமையுடன் புரட்டினார்.
“நான் இன்னும் பேப்பர் படிக்கலை சார்”
“ஏன்? அது சரி, உங்க கண்ணு ஏன் இப்படி சிவந்திருக்கு?”
“ராத்திரி சரியாத் தூக்கமில்லை .”
“உடம்பு சரியில்லையா?”
“இல்லை. ஒரு யோசனையில் இருந்தேன்.”
“நேத்து ராத்திரி நான் கூட ஒரு யோசனைல் ரொம்ப நேரம் தூங்கலை.”
“உங்களுக்கு என்ன யோசனை?”
“எங்க காலனில நேத்து ராத்திரி ஒரு திருடன் வந்துட்டான்.”
“அப்புறம்?”
“அவனைக் கையும் களவுமாப் பிடிச்சிட்டாங்க. சின்ன வயசுப் பசங்க சேர்ந்து அவனை உதை பின்னி எடுத்துட்டாங்க. சத்தம் கேட்டு நான் பால்கனிலேர்ந்து பார்த்தேன். எட்டு பேர் சேர்ந்து அவனைப் பந்தாடறாங்க. அவன் ரத்த காயத்தோட பதர்றான். நான் ஓடிப்போயி எல்லாரையும் விலக்கினேன். முறையா போலீஸ் ஸ்டேஷன்ல ஒப்படைக்கிற பொறுப்பை நான் எடுத்துக்கிட்டேன். ஒரு துண்டுல அவன் கையைக் கட்டி ஒரு ஆட்டோல் ஏத்தி கூட்டிட்டுப் போனேன்.”
“போலீஸ்ல ஒப்படைச்சிட்டிங்களா?”
“அதான் இல்லை .”
“ஏன்?”
“அவனுக்குப் பதினேழு பதினெட்டு வயசுகூட இருக்காது. ஆட்டோல போனப்போ பேச்சுக் கொடுத்தேன். ப்ளஸ் டூ படிச்சிருக்கான். மேல படிக்க வசதியில்லை . வேலையும் கிடைக்கலை. இதான் முதல் முயற்சியா திருடப் பார்த்திருக்கான். மாட்டிகிட்டான். என்னைப் போலீஸ்ல ஒப்படைக்காதீங்க சார். இனிமே சத்தியமா திருடமாட்டேன்னு கெஞ்சினான். பாவமா இருந்திச்சி. சரின்னு அவுத்து விட்டு போகச் சொல்லிட்டேன், காலனிக்கு வந்து போலீஸ்ல ஒப்படைச்சிட்டதாப் பொய் சொல்லிட்டேன்.”
“உங்க இரக்கத்தை சாதகமாக்கி அவன் தப்பிச்சிட்டான் சார். ஒரு திருடன் செய்யற் சத்தியத்தைப் போயி நம்பியிருக்கீங்களே…”
“இதே மாதிரிதான் என் வைஃபும் சொன்னா. நான் செஞ்சது சரியா இல்லை அசட்டுத் தனமான்னு ராத்திரி பூரா யோசிச்சேன். சட்டத்தில் பெனஃபிட் ஆஃப் தி டவுட்ன்னு ஒண்ணு இருக்கு சார். ஒருவேளை அவன் கெஞ்சலும், சத்தியமும் உண்மையா இருந்தா? அப்படி நினைச்சி மனசை சமாதானப்படுத்திக்கிட்டேன்.”
“எந்தக் காலத்தில் சார் இருக்கிங்க நீங்க? எனக்கென்னவோ நீங்க ஏமாந்துட்டிங்கன்னுதான் தோணுது” என்றான், நடேசன்.
ஏகாம்பரம் பெருமூச்சு விட்டார்.
அவர் போன கொஞ்ச நேரத்தில் ரிக்ஷா வந்து யூனிஃபார்ம் கலையாமல் ரமா இறங்கி ஓடி வந்தாள்.
நெற்றியைத் தட்டி யோசித்தபடி இருந்த நடேசனிடம் வந்து, “டாடி, இன்னிக்கு எங்களுக்கு ஸ்கூல் லீவு” என்றாள்.
“ஏம்மா ?”
“ஏழாம் கிளாஸ் சில படிக்கற மரியாங்கிற கர்ள் புவனா டீச்சரை காம்ப்பஸால வெறித்தனமா குத்திட்டா. ரத்தம் ரத்தமா கொட்டி ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போய்ட்டாங்க. போலீஸ் எல்லாம் வந்து விசாரிக்குது. அதனால லீவு விட்டுட்டாங்க.”
“அந்தப் பொண்ணு என்ன மென்ட்டலா? எதுக்கு டீச்சரைக் குத்தினா?”
“இல்லைப்பா. சமீபத்தில் மரியாவோட அப்பாவும், அம்மாவும் டைவர்ஸ் பண்ணி பிரிஞ்சிட்டாங்களாம். அதில் இவளுக்கு அம்மா மேல கோவமாம். டீச்சர் அம்மாவை மதிக்கணும்னு ஏதோ அட்வைஸ் செஞ்சதுக்கு இவளுக்கு வெறி வந்து ஏழு தடவை காம்பஸால குத்திட்டா. போலீஸ்காரங்க கேக்கறப்பா…”
“சரி, சரி போதும். டிரெஸ் மாத்திட்டுப் போய் ஏதாச்சும் படி. மிச்சக் கதை எல்லாம் உங்கம்மா கிட்ட சொல்லிக்க. டாடியை டிஸ்டர்ப் பண்ணாதே!” என்றான் நடேசன்.
“இருங்கப்பா. நான் ஃபுல்லா சொல்லிடறேன்.”
“நான் ஏற்கனவே டென்ஷனா இருக்கேன்னு சொல்றேனில்ல..?”
நடேசன் அதட்டியதும் ரமா மிரண்டு விலகினாள். மாலை ஐந்து மணிக்கு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்தான், நடேசன்.
மாதவி அருகில் வந்து, “சீதாராமன் போன் செஞ்சாருங்க…” என்றாள்
“எப்போ ?”
“நீங்க பால் வாங்கப் போயிருந்திங்களே, அப்போ?”
“ஏதாவது உளறித் தொலைசியா?”
“நான் என்ன உளறப் போறேன்? என்கிட்ட ஏன் கோபப்படறீங்க?”
“சரி, என்ன சொன்னான் அவன்?”
“நாளைக்கு ஒம்போது மணிக்கு வர்றதா சொல்லி இருந்தாரில்லையா, எட்டு மணிக்கே வர்றாராம்.”
“கிழிஞ்சது. வந்தா என்னடி பதில் சொல்றது?”
“என்னைக் கேட்டா?”
“என் மரியாதை போயிடும் மாதவி?”
“இதை ஒத்துக்கறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும்” என்று நொடித்து விட்டுப் போனாள் மாதவி.
தரையைக் கூட்டின செண்பகம் அருகில் வர, இரண்டு கால்களையும் உயர்த்தி நாற்காலி மேல் வைத்துக் கொண்டான்.
“அய்யா !”
“ம்…?”
“நீங்க அவருக்குப் புத்தி சொல்ல வேண்டியதில்லை”
“ஏன் திருந்திட்டானா?”
“இல்லை . என் பிரச்சனைக்கு நானே ஒரு முடிவு எடுத்துட்டேன்.”
“என்ன செஞ்சே?”
“அந்த சரோஜாவைக் கொண்டாந்து என் வீட்லயே சேர்த்துக்கிட்டேன். அவளுக்கும் சேர்த்து பொங்கிப் போடறேன்று சொல்லிட்டேன். சக்காளத்தியோட அனுசரணையாய்ப் போயிடறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.”
“எப்படி மனசு கேக்கும்?”
“என் மனசைப் பார்த்தா, பிஞ்சுங்க வயிறு காயுதேய்யா. என் மனசைவிட பசங்க வயிறு முக்கியமில்லையா?”
“சரி, ஏதோ பிரச்சனை தீர்ந்தா சரி”
நடேசன் தன் சொந்த யோசனையில் மீண்டும் இறங்கினான்.
காலை எட்டு மணிக்கு சீதாராமன் வந்ததும் அவனை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று அவன் கைகளைப் பிடித்துக் கொண்டான் நடேசன்.
“சீதாராமா, நீ சப்-எடிட்டரா வேலை பார்க்கற பத்திரிகைல சிறுகதை எழுதச் சொல்லி வாய்ப்புக் கொடுத்தது உன் பெருந்தன்மை. ஜோக்கும், துணுக்கும் எழுதிட்டிருக்கிற நான் ஜம்பமா எழுதித் தர்றேன்னு ஒப்புக்கிட்டேன். ஆனா பாரு , ரெண்டு நாளா நானும் மண்டையைப் போட்டு உடைச்சிக்கறேன். கதை எழுதறதுக்கு ஒரு சின்ன தீம் கிடைக்கமாட்டேங்குது. ஐம் ஸாரி. எனக்குக் கதை கிடைக்கலை” என்றான், நடேசன்.