பீலி மேலே போகிறது
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 1, 2024
பார்வையிட்டோர்: 578
(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வெற்றுக்கூடையில் திணிக்கப்பட்டிருந்த காய்ந்த தேயிலைமாற் றுடன் காலை எடுத்துப் படிக்கட்டில் வைத்தவள் ஒரு கணம் நின்று உற்றுக் கேட்டாள்.
பீலிக்கரையில் ஒரே கூட்டம்….
லயத்தில் ஒரே கூச்சல்…
“அந்தியானா இதே எளவுதான்” என்று முனகியபடி கூடைக்கு வெளியே நீட்டிக் கொண்டிருந்த காய்ந்த மிளாறு, பிடரியைப் பிராண் டாத வகையில் பவ்வியமாகக் கூடையை இறக்கிப் பாதையில் வைத்து விட்டு, பாதை ஓரத்தில் கிடந்த காய்ந்த சவுக்கு இலைகளைப் பொறுக்கி கூடைக்குள் திணித்துக் கொண்டாள்.
சவுக்குச் சருகு அடுப்பைப் பற்ற வைக்க… தேயிலை மிளாறு அடுப்பை எரிய வைக்க…
இறங்கும் சூரியன் சற்றே மலையடிவாரங்களை மஞ்சளாக்கி விட்டு மறைகின்றான்.
இவளுடன் கொழுந்து நிறுத்த பக்கத்து காம்பிராப் பெண் அதோ ஏறிவருகின்றாள், இன்ஜின் ரூமிலிருந்து.
துவட்டியும் துவட்டாமலும் ஈரம் சொட்டச் சொட்ட இடுப்பளவு , தொங்கும் கூந்தல். கம்
குடம் வைக்கச் சற்றே இடம் கொடுத்து மறுபக்கம் நொடித்து நிற்கும் இடை….
சற்றே ஓடி அடி வைக்கும் அழகு நடை… தோளில் தொங்கும் துவைத்துப் பிழிந்த ரவிக்கை… உடலில் ஒட்டிக்கிடக்கும் ஈரச் சேலை.
இறங்கிய கதிரவன் ஒரு வினாடி ஏறி அவளைப் பார்த்துச் சிரித்து விட்டு மீண்டும் இறங்கிக் கொண்டான்.
காலடிச் சப்தம் கேட்டு கிழவி திரும்பினாள். “என்ன பெரியாயி, இன்னம் லயத்துக்கே போவலியா? நானு கூடையை வச்சிட்டு இஞ்சினீரு காம்புராவுக்குப் போயி குளிச்சிட்டு ஒரு கொடம் தண்ணீயும் கொண்டாந்துட்டேன்.”
“ஒனக்கென்னாடி ஆயா. ஓடுர பாம்பை மிதிக்கிற வயசு. குளுருமா ஒன்னா? அம்மாதொலை போய்… பச்சைத் தண்ணீலே தலையை நீட்ட என்னால ஆவுதா? அதான் ஒரு கூடை மிளாறு பொறுக் குனேன். கொழுந்து நிறுத்ததும், இதோ கொஞ்சம் சவுக்குத் தழையும் பொறுக்கிக்கிட்டேன். போயி ஒரு வாளி தண்ணி காயவச்சி தலையில ஊத்துனாத்தான் சரிவரும். என்னமோ ஆயா! ரெண்டு நாளு குளிக்காட்டி எலும்பெல்லாம் முறியுது!” என்றபடி, கிழவி முன் நடக்க மற்றவள் தொடருகின்றாள்.
தண்ணீர் தளும்பி தளும்பி, உலரும் அவளது சேலையை ஈரமாக் கிக் கொண்டிருக்கிறது.
பீலிச் சண்டை இன்னும் ஓய்ந்தபாடில்லை. கீழே லயத்திலிருந்து ஒவ்வொருவராக பெண்கள் மேலே ஏறி வருகின்றனர்… இடையில் குடமும் கையில் வாளியுமாக!
“ஏண்டி மேலே போறே, நம்ம பீலியில தண்ணி வல்லியா?”
“வருது இத்தினியூண்டா!. ஒரு கொடம் நெறைய நாலு நாள் செல்லும். அதுல தொண்ணாந்துகிட்டு நிக்கங்காட்டியும் இஞ்சினீர் காம்புராவுக்கே நடந்துறலாம்டி….” கூறியபடி அவள் மேலே நடக்கின்றாள்.
“இவ வூட்டுக்கு நேரே பீலி இருக்குறதுனாலே இவளுக்கு மட்டுந் தான் சொந்தமுன்னு நெனச்சிக்கிட்டா! செய்யிறேன் இவளுக்கு நல்ல வேல்…” கத்திக் கொண்டே படியேறுகின்றாள் இன்னொருத்தி.
“நீ எப்படி பெரியாயி வென்னி வைக்கப்போறே? அந்தியானா இந்தப் பீலீச் சண்டையே பெரிய சண்டையின்னு தெரியுந்தானே!”
“அந்தக் குட்டிகிட்ட சொல்லிட்டுத்தான் வந்தேன் வாளியை நெறச்சி வை. அந்திக்கு வந்து குளிக்கணும்னு!”
“ஆனானப்பட்டவங்களே அவகிட்ட இந்தபாடு படயில், பச்சப் புள்ளை என்ன செய்யும். புடிச்சிவச்சிருந்தா குளி. இல்லாட்டி கப்சிப்னு கிடந்திடு. பீலிக்கரை பேச்சே பேசாதே. மொய் மொய்னு புடிச்சுக்குவா!”
இருவரும் லயத்தை நெருங்குகின்றனர். “அலுத்துக்களைச்சு மனுசா வந்தா ஒரு கொடம் தண்ணி வுடுறாளுகளா? கழுவி கட்டையில வைக்க. இப்பவே புடிச்சி றொப்பிக்கிறாளுக… த்தூ..!”
கோபமாகப் பொரிந்து தள்ளியவள் நங்கென்று குடத்தை வைத்து விட்டு சேலையை இழுத்துச் செருகிக் கொண்டாள்:
நங்கென்று அவள் வைத்த குடம் அடுத்ததில் மோத, அது ஆடி மற்றதைத் தட்டிவிட, உருண்ட குடம் மற்றுமொன்றை உருட்டிவிட, நாலைந்து குடங்கள் கணகணவென்று உருண்டு கானில் விழுந்தன.
வெண்கல ஓசை நாராசமாய் காதுள் பாய இரண்டாவது காம்பிராவில் இருந்து ஒடிவந்தவள் காளியாய் நின்றாள்.
“அடியேய்…! உன்னைய தண்ணி புடிக்க வுடாட்டி அவளுகளைக் கேளு! அவளுக மேல்ல போய்ப் பாயி! எதுலையோ உள்ளதைப் போயி எதுலையோ காட்டுற மாதிரி ஏவூட்டு கொடத்தை உருட்டி வுட்டாக்கா! ஒம்புருசனா வாங்கித் தருவான்?”
அவளுடைய குடமும் ஐந்து மணியில் இருந்துதான் கியூவில் – இன்னமும் இடம் கிடைக்கவில்லை . அந்தக் கோபம் தான் அவளுக்கு.
சமயம் பார்த்துக் கொண்டிருந்தாள் சண்டை பிடிக்க.
“எம்புருசன் ஏண்டி ஒனக்குக் கொடம் வாங்கிக் குடுக்கப் போவுது! என் வீடுதான் பீலிக்கு நேரா இருக்குன்னு கொடம், குண்டான், சட்டி, பானை, சப்புச் சவுருன்னு கொண்டாந்து குமிச்சிக்கிட்டாக்க!. கொடம் வைக்க சொட்டு எடம் இருக்கா..?”
“ஏவூட்டு வீடாடி பீலிக்கு நேரே இருக்கு? வந்துட்டா நீட்டி மொழக்க!”
“நாங்க நீட்டவும் இல்லே மொழக்கவும் இல்லேடி, ஆயா! நீ தான் நீட்டுறே இப்போ..! ஒன் வீடு பீலிக்கு நேரே இல்லாட்டி கெடயேன் செத்த நாயாட்டம்!”
பைப்பிற்கு நேரே உள்ள வீட்டுக்காரியின் கைவாளிதான் இப்போது பைப்பில் தொங்குகிறது. மெல்லியதாக வழியும் நீர் வாளியில் நிரம்பி யதும் கீழே உள்ள குடத்தில் விழும். குடமும் அவளுடையதேதான்…!
அவள் வீட்டுக் கதவும் பைப்பும் நேருக்கு நேராக இருப்பதால் வீட்டு வேலைகளை செய்து கொண்டே பீலிக்கரையில் ஒரு கண் வைத்துக் கொள்வாள்.
பீலியண்டை யாரும் நிற்காத நேரம் பார்த்து வாளியைத் தூக்கிக் கொண்டு உள்ளே மறைந்து விடுவாள். தண்ணீர் குடத்தில் விழும்.
முக்கால் குடம் நிறையும் போதே வேறு ஒரு பாத்திரத்தை வைத்து வாளியை மாட்டி விட்டு உள்ளே போய் விடுவாள்.
மற்ற வீட்டுக்காரிகள் “சரி, குடம் இருக்கட்டும், நாம் ஏதாவது வீட்டு வேலை செய்து விட்டு வருவோம்” என்ற நினைப்பில் போய் விட்டு கொஞ்சம் நேரம் கழித்து வந்து பார்த்தால், அதே குடத்தில் முன்பிருந்த அதே அளவுக்கும் குறைவாக தண்ணீர் நிறைந்து கொண்டிருக்கும்.
பிறகு இதே கூச்சல்தான் ! சண்டை போடத் தெரியாதவர்கள் அல்லது சண்டை போடத் தைரியம் இல்லாதவர்கள் தமக்குள் தாமே முனகிக் கொண்டு மேலே ஏறிப் போய்விடுவார்கள்.
இடுப்பும் குடமுமாக மேலே போகிறவர்கள் ஒவ்வொருவராக இந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள்தான்!
“பைப்புக்கும் நேரே உள்ள வீடு” என்ற பேச்சு காதில் விழுந்ததும் பாய்ந்து வந்து நிற்கின்றாள் வீட்டுக்காரி.
“ஏண்டி சும்மா கெடக்குற கோடாலியை எடுத்து கால்ல போட் டுக்குறே. நான் பாட்டுக்குத்தானே உள்ளே கெடக்குறேன். என்னைய எதுக்கு இழுக்குறே..! யாரு கூட மல்லுக்கு நிக்கலாம்னு வந்தியோ?”
“ஐயோ, என் பத்தினித் தங்கம் உள்ளேயே இருக்காளாம் உள்ளே…! நீ மட்டும் உள்ளேயே அமுங்கிட்டாப் போதுமாடி. உன்னூட்டு குடம், குண்டான், கும்பா சருவச் சட்டிகளையும் உள்ளேயே வச்சுக்க. சோத்துப்பானையில் இருந்து எச்சிக் கொத்தருதி உன்னோட அத்தனை சாமானும் பீலில் தானே இருக்கு!”
”ஏய் நல்லா பார்த்துப் பேசு. ஏவுட்டாடி இங்கே கெடக்குற அத்த னையும்!. பீலில் இருக்குற கொடம் மட்டுந்தான் என்னுது! அது ரொம்புனதும் நீ புடிச்சுக்கயேன்…”
“அடடா ஒண்ணும் தெரியாத பாப்பா..! ஊருக்கோ போட்டாளாம் தாப்பா..! கொடம் மாத்தி வாளி, வாளி மாத்தி கொடம்னு நீயே ரொப்பிக்கிட்டாக்க மத்தவங்க ஆக்குறது அரிக்குறது இல்லே!. இன் னொருக்கா மட்டும் வை, ஓ வூட்டு கொடத்தே தூக்கிக் குப்பை மேட்டுல வீசுறேனா இல்லியா பாரு!”
“வீசுடி பார்ப்போம்…! போனா போவுதுன்னு பாத்தா மேலே மேலே போறே!”
“நீவைடி வீசுறேனா இல்லியான்னு பார்ப்போம்…!”
“இதோ வச்சேன்..!”
“இதோ வீசுனேன்..!”
பலம் கொண்ட மட்டும் காலை ஓங்கி ஒரு உதை விட்டாள். டமடம்’ வென்று உருண்டு ஓடி ஒரு கல்லில் மோதி நின்றது குடம்.
குடத்திலிருந்த நீர் காய்ந்து கிடந்த இடத்தை ஈரமாக்கிக் கொண்டு ஓடுகிறது.
தனது குடம் உருண்ட கோபம் முகத்தில் கொள்ளாய் வெடிக்க உதைத்து விட்டவளை ஒன்றும் செய்யமுடியாத ஆத்திரத்தில் அவள் உடல் ஆடியது.
பீறிட்டு எழுந்த ஆத்திரத்தை அடக்க முடியாத வண்ணம் கோபத் தால் கொதித்தாள்.
அரசனுக்குக் கோபம் வந்தால் நாடழியும்…புருசனுக்குக் கோபம் வந்தால் வீடழியும்…இவளுக்கு வந்த கோபத்தால் கேவலம் ஒரு பீலி கூடவா அழியக் கூடாது.
“இந்த நாசமாய்ப்போன பீலி இங்கே இருக்கிறதுனாலே தானே இத்தனை வம்பும்” என்றபடி பைப்பை ஒரே இழுப்பில் இழுத்து வைத்து நெளித்தாள்.
சொட்டு சொட்டாய் விழுந்து கொண்டிருந்த தண்ணீரும் பொட்டென்று நின்றுவிட்டது.
எப்போதாவது ஒரு குடம் கிடைக்காமலா போகும் என்ற நம்பிக் கையில் சோம்பல்தனமாகப் பீலியைக் காத்துக்கிடந்தவர்கள் வாய்க் கொன்றாக முனகிக் கொண்டு இடுப்பில் இடுக்கிய குடத்துடன் படி யேறி மேலே நடக்கின்றனர்.
மேல் மூச்சு வாங்க படியேறி மேலே வந்தால் ஒரு மண் றோட்டு. மண்றோட்டு வழியே இரண்டு மொடக்கு தள்ளி உள்ள காட்டில் தான் பெரிய தண்ணீர் டங்கி இருக்கிறது. அங்கே நீரூற்று இருப்பதால் மரம் மட்டைகளை வெட்டாமல் விட்டுவிட அது கட்டுக்கு மீறி வளர்ந்து காடாகி பட்டப்பகலிலேயே இருண்டு கிடக்கிறது.
இருட்டி விட்டால் அந்தப் பக்கம் யாரும் போகமாட்டார்கள். ஜன நடமாட்டம் இல்லாத ஒதுக்குப்புறமான இடம் அது என்பதாலும் விரைவாக நீர் ஊறும் ஊற்றுக்கண்கள் நிறைய இருக்கின்றன என்பதாலும் பெரிய நீர்த்தேக்கம் இரண்டை நிர்மாணித்து யந்திரம் போட்டு அங்கிருந்து நீரை இழுத்தெடுக்கிறது தோட்ட நிர்வாகம். மலை உச்சியில் இருக்கும் துரை பங்களாவுக்கு.
ஏதாவது காரணத்தால் தேக்கங்களில் தண்ணீர் வற்றி விட்டால் சேற்றையும் உறிஞ்சி எடுத்து மேலே அனுப்பி விடும் எந்திரம்.
ஆகவே நீர்நிலை பார்த்து இஞ்சினை ஒட்டவும் நிறுத்தி வைக்கவும் ஒரு ஆளை நியமித்துள்ளார் துரை.
ஐந்து ஐந்தரை மணி ஆகிவிட்டதென்றால் தண்ணிக்கார கிழவனைத் தவிர இஞ்சின் காம்பிராக் காட்டுப் பக்கம் ஒரு ஈ காக்கை நடமாடாது.
காலை ஆறுமணிவரை தண்ணீர் பிடிக்க முடியும்.
நீர்த்தேக்கம் இரண்டும் நிரம்பியபின் வழிந்தோடும் நீர் திடுதிடு வென்று இரவு பகலாக ஊற்றிக் கொண்டே இருக்கிறது. என்றாலும் கீழே உள்ள இந்த நாலு லயத்து ஆட்களும் தண்ணீருக்கு சண்டை
போடாத நாளே கிடையாது.
இங்கிருந்து லயத்துக்குத் தண்ணீர் எடுக்க எந்த விதத்திலும் முடி யாது என்பது ஒருபுறமிருக்க, எந்த விதத்திலாவது முடியுமா என்று அக்கறைப்பட யாரும் இல்லை, யாருக்கும் தோன்றவில்லை.
லயத்துக்கு பீலி வராத நாட்களில் யாரும் தண்ணீருக்காக பீலிக் கரையில் காத்துக்கிடப்பதில்லை, இப்போது போல்.
வீட்டருகே பஸ் ஸ்டாண்ட் இருந்துவிட்டால் இதோ வரும் அதோ வரும் என்று காத்துக்கிடந்தே காலத்தைப் போக்குவோம் அல்லவா? அதைப் போலத்தான்.
வேலை முடிந்து வந்ததும் அடுத்த வேலையாக ஒவ்வொருவராக நடப்பார்கள் இடுப்பும் குடமுமாய்!
சில வீடுகளில் பெயர் பதியாத சிறிசுகள் காலையில் இருந்தே தண்ணீரில்தான் கிடக்குங்கள். என்றாலும் வேலை முடிந்து வந்த கையோடு பெரியவர்கள்தான் வீட்டுப் பாவனைக்கு தண்ணீர் தூக்கி வருவார்கள்.
நாலைந்து பெண்கள் உள்ள வீடென்றால் எல்லாருமாக ஒரு நடை போய் கைகால் முகம் கழுவிக் கொண்டு தலைக்கொரு குடத் துடன் வந்து விடுவார்கள். பிறகு இரண்டு பெண்கள் மூன்று நாலு நடை என்று தண்ணீர் தூக்க மற்றவர்கள் சமையல் இத்தியாதிகளைக் கவனிப்பார்கள்.
தானே தண்ணீரும் தூக்கிக் கொள்ளவும் வேண்டும்….. சமைக் கவும் வேண்டும் என்று ஆகிவிட்ட ஒற்றைக் கட்டைகளுக்குத்தான் சிரமம்.
சும்மா கிடைக்கும் தண்ணீருக்காக இத்தனை சிரமம்படுகின் றோமே என்பது கூடத் தெரியாமல் எதேச்சையாகத் தண்ணீர் தூக்கிக் கொண்டிருந்த நாலு லயத்துப் பெண்களுக்கும் ஒரு இடிவிழுந்தது.
ஒரு நாள் மாலை. மணி ஏழு ஏழரை இருக்கலாம். விரியும் போர்வையாய் இருள் இறங்கிக் கொண்டிருக்கிறது. பட்டப் பகலிலேயே இருட்டிக் கொண்டிருக்கும் இஞ்சின் காம்பிராக் காட் டைப் பற்றிக் கூறவே தேவையில்லை.
நேராகவும் கோணலாகவும் நெட்டையாகவும் குட்டையாகவும் வளர்ந்து நிற்கும் மரங்கள்.
மரங்களின் மேல் கன்னங்கரேல் என்று கூட்டம் போட்டுக் கொண்டுக் கிடக்கும் இலைக் கற்றைகள்.
இலைக் கற்றைகளுடன் பின்னிப் பிணைந்து பாம்பு பாம்பாய் தொங்கிக் கொண்டும் நீட்டிக் கொண்டும் நெளியும் காட்டுக் கொடிகள்.
‘ஓஸ்ஸ்’ என்ற இரைச்சலுடன் இருட்டுக்குள் ஊற்றிக் கொண்டி ருக்கும் எஞ்சின் காம்பிரா நீர்.
மரங்களில் தொங்கும் வௌவால்கள் சப்பித் துப்பும் பழக் கொட் டைகள் இஞ்சின் காம்பிராத் தகரக் கூரையில் விழுவதால் ஏற்படும் ‘டங் டங்’ ஒலி .
எல்லாமாகச் சேர்ந்து அந்த இடத்தை ஒரு அசாதாரண அமைதி யுடன் கூடிய பயங்கர இடமாக ஆக்கி வைத்திருக்கிறது.
மிகவும் தாமதித்து மலையில் இருந்து வந்த ஒரு பெண் அந்த இருண்ட நேரத்தில் எப்போதும் போல் எதேச்சையாக இஞ்சின் காம் பிராவை நோக்கி நடந்தாள்… தண்ணீர் பிடிக்க.
செவ்வரளி மரத்தைத் தாண்டியபடி இறங்கியவள் தூக்கிய காலை கீழே வைக்க மறந்து நின்றாள்.
“ஆ…” என்று பலம் கொண்ட மட்டும் கத்தினாள் என்றாலும் வாய் பிளந்து நின்றதே தவிர சத்தம் வரவில்லை.
பயங்கரத்தைப் பலப்படுத்தும் வகையில் தவளைகள் கிறீச்சிடுகின்றன.
வியர்த்துக் கொட்ட ஒரு வினாடி விதிர்விதிர்த்து நின்று விட்டவள் ஓடி வந்து லயத்துக் கோடியில் விழுந்தாள் பேச்சு மூச்சற்று!
குடம் உருண்டோடிய சத்தம் கேட்டு ஓடி வந்தவர்கள் அவளை சூழ்ந்துக் கொண்டனர்.
அட்டைக் கரியாய் அப்பிக் கிடந்த மரங்களிடையே வட்டமாக ஒரு கரிய முகம் தெரிந்ததாம்…பேய் முகம்…அசிங்கமாக சிரித்துக் கொண்டு. நீளமாக கை நீட்டி இவளைப் பிடிக்க முயன்று மரத்துக்கு மரம் குதித்துத் தாவி இவளை நெருங்கியதாம்.
அருகே வந்ததும் பயங்கரமாகச் சிரித்துக் கொண்டு வானத்துக்கும் பூமிக்கும் ஒரே கறுப்பாய் நின்றதாம்!
பிறகு தனக்கு ஒன்றுமே தெரியாது ஓடி வந்து விழுந்தது உட்பட என்று ஒரு வாரத்துக்குப் பின் மற்றவர்களிடம் கூறினாளாம்.
அதிலிருந்து காலை ஆறுக்கு முன்பும் மாலை ஆறுக்குப் பின்பும் அந்தப் பக்கம் யாரும் இறங்குவதில்லை.
மினுக் மினுக்கென்று எரியும் லாந்தருடன் கூனிக் கூனி இறங்கும் தண்ணிக்காரக் கிழவனைத் தவிர.
ஆறரைக்கு பிறகு பெரட்டுக்கு வருகிறவர்களை “வேலை கிடையாது போ” என்று விரட்டி விடுகின்றார் கண்டாக்கையா.
அந்த நாலு லயத்து ஆட்களும் ஏழு ஏழரைக்குத்தான் பெரட்டுக்கு வருகின்றார்கள் என்றால் யார் வேலை கொடுக்கப் போகிறார்கள்.
தொடர்ந்து இரண்டு மூன்று நாள் விரட்டப்பட்ட நாலு லயத்துப் பெண்களும் ஒருசேரத் தலைவரிடம் போனார்கள்.
தலைவர் துரையிடம் போனார்.
துரை இஞ்சின் காம்பிராவுக்குப் போனார்.
இஞ்சின் ரூமில் இருந்து தண்ணீர் எடுத்துத்தர இயலுமா என்று ஆராயும் அக்கறை துரைக்கு வருவதற்கு நாலு லயத்துப் பெண்களும் வேலைக்கு நேரம் கழித்துப் போக வேண்டியிருந்திருக்கிறது…!
நாலு லயத்துப் பெண்களும் நேரம் கழித்து வேலைக்குப் போக பேய் பயங்காட்ட வேண்டியிருந்திருக்கிறது..!
வாழ்க அந்த பேய் திரும்பி வந்த துரை உதட்டைப் பிதுக்கிக் கொண்டார். ‘டாங்க்’ நிரம்பி வழிந்தோடும் நீர் இந்த லயங்களின் பக்கம் வர வழியே இல்லை.
“லயத்துக்கு துரை பைப் போட்டுத் தரும்வரை எட்டு மணிக்கு பெரட்டுக்கு வரட்டும்” என்னும் உத்தரவாதத்துடன் ஆபீசிலிருந்து திரும்பினார் தலைவர்.
இஞ்சின் ரூமைத் தவிர்த்து வேறு எங்காவது ஊற்றுக்கண் இருக் கிறதா என்று தேடி, லயத்திலிருந்து படியேறியதும் வரும் மண் பாதைக்கும் மேல் தேயிலை பயிரிடப்படாத … பயிரிட முடியாத….. ஒரு பள்ளத்தாக்கில் காட்டுக் கொடிகள் மண்டிக்கிடக்கும் அந்த இடத்தில் லேசாக நீர் ஊறுகிறது என்பதைக் கண்டு பிடித்து அவ்விடத்தை தோண்டி ஒரு சிறிய டாங்க்’ கட்டி அதிலிருந்து பைப்பை இழுத்து இந்த நாலு லயத்துக்கும் மத்தியில் பூட்டி விட்டார் துரை!
‘புதுசா டங்கி கட்டி….
புருபுருன்னு பைப்பிழுத்து….
நாலு லயத்தாளுக்கும்…
நல்ல தண்ணி வந்திருச்சி..!’
என்று கும்மியடித்து மகிழ்ந்தார்கள் லயத்துப் பெண்கள்.
லயத்துக்கு பைப் வந்த சுருக்கைப் பார்த்தால் ‘சுவிட்ச்’ எங்கே இருக்கிறது என்கின்ற உண்மை எல்லோருக்குமே தெரிகிறது!
தெரிந்து என்ன பயன் லயத்தடிக்குப் பீலி வந்துவிட்டது! ஒன்றுக்குக் கீழ் ஒன்றாக உள்ள அந்த நாலு லயத்துக்கும் மத்தியில் உள்ள இரண்டாவது லயத்தின் முதல் காம்பிராவண்டை பீலி நின்றது.
முதல் வீட்டுக்காரிக்கு உண்டான மகிழ்ச்சி நாலு லயத்துப் பெண்களுக்கு உண்டான மகிழ்ச்சியிலும் பார்க்கக் கூடியது.
தண்ணீர் ஒழுங்காக வந்து கொண்டிருக்கும் வரை சரி. வெயில் காலங்களில் தண்ணீர் குறைந்து இதோ இன்று போல் வருகிறது என்றால் இதே சண்டைதான்….இதே கூச்சல்தான்…
பீலி யாருடைய வீட்டுக்கு நேராக இருக்கிறதோ அவளுடன் மற்ற வீட்டுக்காரிகள் சண்டை!
பீலி எந்த லயத்தில் இருக்கிறதோ அந்த லயத்துப் பெண்களுடன் மற்ற லயத்துப் பெண்கள் சண்டை!
இப்படி ஒரே பீலிச் சண்டைதான்! லயத்துக்குப் பீலி வந்து ஒரு வருடமாகிவிட்ட பிறகு ஒரு நாள். முதன்முறையாக ஒரு பெண்ணின் கோபத்துக்கு அந்தப் பீலி ஆளானது.
துரையும் தலைவரும் ஒரு தீர்மானத்துக்கு வந்தார்கள். முதல் காம்பிராவுக்கு நேராக நின்ற பைப் இப்போது ஆறாவது காம்பிராவுக்கு நேராக நின்றது.
ஆறாவது காம்பிராவண்டையும் ஒருநாள் இதே கலவரம் வந்தது. பைப் உடைந்தது.
துரை ஒரே பிடியாக நின்றார், “இந்தப் பைப்பை இனி சரிக்கட்டிக் கொடுக்க மாட்டேன்” என்று.
“நீங்கள் பைப்பை ரிப்பேர் செய்து கொடுக்காவிட்டால் ஆட்கள் மீண்டும் இஞ்சின் காம்பிராவுக்குத்தான் தண்ணீர் பிடிக்கப் போயாகணும்..! ஒரு சமயம் போல் இருக்குங்குளா? புலியே அடிக்காவிட்டாலும் கிலி அடித்து விடுமே! யாருக்காவது ஏதாவது நடந்து விட்டால்!. நடப்பது பிறகு இருக்கட்டும். வேலை விட்ட பிறகு தண்ணீருக்குப் போக இயலாது என்பதால் ஆட்கள் காலையிலேயே தண்ணீர் பிடித்து வைத்து விட்டுத்தான் பெரட்டுக்கு வரப் பார்ப்பார்கள்!. அதற்காகவாவது துரையவர்கள் தயவு பண்ணனும்!”
“சரி” என்று எழுந்த துரை பைப்பைத் திருத்தித் தருவதாகக் கூறினார், ஒரு நிபந்தனையுடன்…
அதாவது இனிமேல் உடைந்தால் திருத்தித்தர மாட்டேன் என்பதே அந்த நிபந்தனை.
இரண்டாவது லயத்தில் இருந்த பைப் ஒரு படி இறங்கி மூன்றாவது லயத்துக்கு வந்தது.
இதெல்லாம் பழைய கதை.
இன்றும் அதே பழைய கதைதான் புதிதாக நடந்திருக்கிறது. பைப் உடைந்து ஒரு வாரம் ஆகவிட்டது.
பைப் உடைந்த கதை தலைவருக்குப் போனதும் தலைவர் ஆபீசுக்குப் போனார்.
ஆபிசீல் இருந்த துரை கோபித்துக் கொண்டு பங்களாவுக்குப் போனார்.
சென்ற முறை தலைவர் எழுதி கையெழுத்திட்டுக் கொடுத்திருந்த அறிக்கையை கிளார்க் வாசித்துக் காட்டினார், துரை வாசித்துக் காட்டச் சொன்னதாகக் கூறி.
பீலி விசயமாக மீண்டும் துரையைக் காணச் சென்ற தலைவர் புதிய திட்டத்துடன் போனார்.
“பைப் ரிப்பேர் செய்ய ஏற்படும் செலவை அந்த நாலு லயத்து ஆட்களிடமும் பிடித்துக் கொள்ளுங்கள்” என்பது தான் அந்தப் புதுத் திட்டம்.
தனது செவ்விளநீர். முகத்தை சிறுத்துக் கொண்ட துரை “நொன் சென்ஸ்” என்றபடி பக்கவாட்டில் தலையை ஆட்டினார்.
“முடியாது தலைவரே..! இன்னைக்கு நான் ரிப்பேர் செலவை வாங்கிட்டா நாளைக்கு ஒரு தடவை உடையும் போது அதிகாரம் பண்ண ஏலுமா? சத்தம் போட ஏலுமா? நாங்கள்ல சல்லி போட்டோம்..அப்படீம்பானுகள்!”
“இவனுகளைப் பத்தி உனக்கு சரியா தெரியாது தலைவர், நான் தான் கொடுக்கணுமே தவிர ஒரு சதம் வாங்க மாட்டேன். அது எனக்குப் புடிக்காது.”
“அப்படீன்னா இப்ப நீங்க பீலியை சரிக்கட்டுறீங்க. இன்னொருக்கா ஒடையுமுன்னும் எதிர்பார்க்கறீங்க இல்லீங்களா” தலைவர் துரையை மடக்கினார்.
“அதுதான் இல்லே! தலைவர் சொல்லுறதுல பாதி சரி. அதாவது பீலியை சரி கட்டுவேன். அதோட, இனி இப்படி சண்டையில் உடையாமலும் பாத்துக்குறுவேன்!”
“எப்படீங்க..! காவல் போடப் போறீங்களா?”
“ம்.. வேற வேலை கெடையாது. பீலிக்கெல்லாம் காவல் போட்டால் தோட்டம் என்னாத்துக்காகும்!. இஞ்சின் காம்பிராவுக்குப் போய் தண்ணி புடிக்க ஆளுகள் பயப்புடுது அவ்வளவு தானே. லயத்துல இருந்து படியேறி மேலே வந்ததும் ஒரு மண்றோட்டு இருக்குல்லியா?. அந்த எடத்துல பைப்பை நிப்பாட்டிட்டா? ஒரு காம்பிரா ஆளோட மத்த காம்பிரா ஆள் சண்டை போடாது. ஏன்னா எந்த ஒரு லயத்துக்கிட்டயோ, காம்பிராக்கிட்டயோ பீலி நிக்கப் போறதில்லே” துரை சிரித்துக் கொண்டார்.
பெருமாள் மாடாய் தலையை ஆட்டிவிட்டு ஆபீஸ் படியிறங்கி தலைவர் கீழே போகின்றார்.
பீலி மேலே போகிறது.
– சிந்தாமணி 1965.
– இன்டியா டுடே இலக்கிய ஆண்டு மலர் 1994.
– தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 2014, பாக்யா பதிப்பகம், ஹட்டன்.