தீதும் நன்றும் பிறர் தர வாரா!
காரை விட்டிறங்கிய சிவகுமார் மெதுவாக கழுத்து டையை தளர்த்திய வண்ணம் உள்ளே நுழைந்தார். மதிய உணவிற்காகவும், குட்டித் தூக்கத்திற்காகவும் அவர் வீட்டிற்கு வருவது வழக்கம். இந்த ஊருக்கு வந்து பதினைந்து ஆண்டுகளில் மருத்துவமனையும், மருத்துவ தொழிலும் துவங்கி ஊரே அதிசயிக்கும் வண்ணம் நல்ல கைராசிக்காரர் எனப் பெயரும் புகழும் பெற்றுவிட்டார். அவர் மருத்துவமனையும் நகரப் பேருந்து வழித்தடத்தில் ஒரு முக்கிய நிறுத்தம் என ஆகிவிட்டது.
களைப்புடன் உள்ளே வந்தவர் முன்னறையில் கூடை நாற்காலியில் அமர்ந்து ஆனந்த விகடன் படித்துக்கொண்டிருந்த சின்ன மைத்துனரின் மனைவி தமிழ்ச்செல்வியை அப்பொழுதான் பார்த்தார். சின்ன மைத்துனரின் பெண் இவர் வீட்டில்தான் தங்கி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள். மைத்துனர் இருப்பது சிறிய ஊர், அத்துடன் கல்லூரி வசதியும் இல்லாததால் இந்த ஏற்பாடு. ஊர் பக்கத்தில்தான் என்பதால் வார இறுதியில் தன் பெண்ணைப் பார்க்க மைத்துனரோ அல்லது அவரது மனைவியோ தவறாது வருவார்கள்.
“என்னம்மா எப்ப வந்தீங்க? சின்னவர் நல்லா இருக்காரா?”
“பதினோரு மணி பஸ்ல வந்தேன், அவரும் சவுக்கியம்தாண்ணே”
“சரி சாப்பிட்டீங்களா?”
“நீங்க போய் சாப்பிட்டு தூங்குங்கண்ணே, நானும் ஜனனியும் அப்புறம் சாப்பிடறோம்”
சரி என்று சொல்லி சிவகுமார் உள்ளே சென்றதும் விகடனில் விரல் அடையாளம் வைத்திருந்த இடத்தில் இருந்து சிவசங்கரியின் “ஒரு மனிதனின் கதை”யை தொடர்ந்து படிக்க ஆரம்பித்தார் தமிழ்ச்செல்வி.
உடை மாற்றிக்கொண்டு சாப்பாட்டு மேஜையில் அமர்ந்த அவர் டிரான்சிஸ்டர் ரேடியோவை திருப்பினார் “வடிவேலன் மனசு வச்சான் மலர வச்சான் மணக்குது ரோஜாச் செடி” என்ற அவருக்கு பிடித்த பாடல் ஒலித்தது. மனைவி ஜனனி கையில் சாம்பார் பாத்திரத்துடன் வந்த பொழுது அவர் முகம் சரியில்லாததைக் கண்டு பாடல் ஒலியைக் குறைத்தார்.
“சின்னண்ணி என்ன சொல்றாங்க?” என்று பேச்சுக் கொடுத்தார்.
இதற்காகவே காத்திருந்தது போல் பொரிந்து தள்ளினார் ஜனனி.
சமீபத்தில் ஜனனியின் பெரியண்ணன்; அவர் குடும்பமும் சின்ன அண்ணன் இருக்கும் அதே ஊர்தான், தன் மாமனாருக்கு உடல் நலம் சரியில்லாததால் ஜனனியின் கணவரிடம் அழைத்து வந்து அவர் மருத்தவ மனையிலேயே சேர்த்து சிகிச்சை பெற வைத்தார். மீண்டும் அதே காரணம், இந்த ஊரில் மருத்துவ வசதி அதிகம் அத்துடன் மைத்துனர் மருத்துவமனையில் சிறப்பு கவனிப்பும் கிடைக்கும் என்பதால். நீரழிவு, இரத்த கொதிப்பு என ஏகப்பட்ட உடல் உபாதைகளுடன் இருந்த அந்த மாமனாரும் மிகவும் வயோதிகர். இரண்டு வாரம் தீவிர சிகிச்சை. ஊரில் இருந்து உறவினர் குடும்பம் ஒவ்வொன்றாக வந்து நலம் விசாரிக்க என்று தங்கிச் சென்றவண்ணம் இருந்ததால் ஜனனி வீட்டில் எப்பொழுதும் ஒரே கூட்டம் அலை மோதியது, சளைக்காத தொடர்ந்த வேலை ஜனனிக்கு. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்ததால் நோயாளியை யாராலும் பார்க்க முடியாத வருத்தம் அனைவருக்கும். பெரிய அண்ணனின் மாமியார் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டார். அதுவும் சில வேலைகளில் மட்டும். நோயாளியின் உடல்நிலையில் பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லை.
உறவினார்கள் விசாரணைகளுக்கு, அதெல்லாம் சரியாகி விடுவார் என்று சிவகுமார் ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார். தேவையில்லாமல் யாரையும் கவலையடையச் செய்வது அவருக்குப் பழக்கமில்லை. இரண்டு வாரம் தாண்டியபின் ஒரு நாள் அந்த வயோதிகர் கோமாவில் விழுந்ததுடன் நிலைமை மோசமானது. உடனே சிவகுமார் பெரிய மைத்துனரை அழைத்து நிலைமையை விளக்கினார். பெரியவருக்கு இனிமேல் எந்த சிகிச்சையும் பலனளிக்காது. உயிருடன் இருக்கும்பொழுதே ஊருக்கு அழைத்துச் சென்று விடுங்கள் என்று தன் மருத்துவமனை ஊர்தியில் செவிலியர் உட்பட சகல வசதிகளுடன் ஊருக்கும் அனுப்பி வைத்தார். அந்த மாமனாருக்கு சொந்த மகன்கள் ஊரிலேயே இருந்தாலும் பெரிய அண்ணி தன் தந்தையின் மீது உள்ள அதீத அன்பால் அவரைத் தன்னுடனையே வைத்து பராமரித்து வந்தவர் மீண்டும் பராமரிப்பைத் தொடர்ந்தார். ஆனால் அவரது வயோதிக தந்தை ஓரிரு நாட்களில் மரணமடைந்தார். ஜனனியும் குடும்பத்துடன் இறுதி மரியாதை செலுத்தி விட்டு வந்தார். இது நடந்து ஒரு மாதம் இருக்கும்.
அந்த வயோதிகர் மறைந்த பின் குடும்பத்தில் ஒரு களேபரமே நடந்திருக்கிறது. என்ன எல்லாம் சொத்து தகராறுதான், வேறென்ன? பெரிய அண்ணியின் தந்தை உயில் எதுவும் எழுதவில்லை. சொத்தில் ஆண் பெண் அனைத்து வாரிசுகளுக்கும் சம உரிமை உண்டு என்ற சட்டம் இல்லாத காலம் அது. பெரிய அண்ணி மற்ற மகன்களை விட அன்பும் பாசமும் வைத்து தன் தந்தையை பராமரிதிருந்தாலும், உயில் இல்லாததால் அவர் சகோதரர்கள் ஆண் வாரிசுகளுக்குள் சொத்தை பிரித்துக் கொண்டு சகோதரிக்கு பெரிய நாமம் போட்டு விட்டார்கள். ஆத்திரம் தாளாத பெரிய அண்ணிக்கு சிவகுமார் தன் தந்தையின் நிலையை முன்பே எச்சரித்திருந்தால் அப்பாவிடம் உயில் எழுதி வாங்கியிருக்கலாம் என ஆதங்கம். கோமாவில் இருந்தவரிடம் என்ன எழுதி வாங்க முடியும். வெறுப்பின் உச்சத்தில் இருந்தவர் ஊரில் துக்கம் விசாரிக்க வந்தவர்களிடம் சிவகுமார்தான் தன் தந்தையை கொன்றுவிட்டார்(?) என்று பழி போட ஆரம்பித்தார். தன் நாத்தனாரின் கணவரின் மேல் வீண் பழி போடுகிறோம் என்ற எண்ணம் அவருக்குக் கொஞ்சமும் இல்லை. ஜனனியின் பெரிய அண்ணனும் தன் மனைவியை கண்டித்தபாடில்லை.
இதனால் ஜனனியின் பிறந்த ஊரில் அவரையும், அவர் கணவரைப் பற்றியும், அவரது தொழில் திறமையைப் பற்றியும் ஒரேப் பேச்சாக வதந்தி உலாவ ஆரம்பித்திருந்தது. சின்னஅண்ணி தமிழ்ச்செல்வியைப் பார்ப்பவர்கள் எல்லோரும் சிவகுமாரின் தொழில் திறமையை, கைராசியைப் பற்றி கேள்வி கேட்டுத் துளைக்க அவர் நிலைமை தர்ம சங்கடமானது. ஊரில் இருந்து வந்த தமிழ்ச்செல்வி முதல் வேலையாக இதை ஜனனியிடம் சொல்லி பெரியவர் குடும்பத்தின் பழிபோடும் படலத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கச் சொன்னார். தன் கணவரின் புகழையும், திறமையையும் கண்டு பெருமையாக இருந்த ஜனனிக்கு இதைக் கேட்க சகிக்கவில்லை. பெரிய அண்ணனிடமும், பெரிய அண்ணியின்மேலும் ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. யாரோ சொன்னால் பரவாயில்லை, தன் சொந்த அண்ணன் குடும்பமேவா இதைச் செய்கிறது என்ற வேதனை ஜனனிக்கு. கணவருக்கு உணவு பரிமாறிக்கொண்டே ஆத்திரமும் அழுகையும் தொண்டையை அடைக்க, வார்த்தை தடுமாற சொல்லி முடித்தார். ஏதாவது ஒரு வார்த்தை சொன்னாலும் மடை திறந்தது போல் அழுதுவிடும் நிலையில் இருந்த ஜனனியைப் பார்த்து, சரி, சரி விடு, சொத்து கிடைக்காம போன ஏமாற்றம் அவங்களுக்கு, என்று சமாதானமாக சொல்லிவிட்டு ட்ரான்சிஸ்டருடன் படுக்கை அறைக்குப் போய்விட்டார் சிவகுமார். எதற்கும் அசராத குணம் அவருடையது.
அதன்பின் சாப்பிட அமர்ந்த ஜனனியும் தமிழ்செல்வியும் உரையாடலைத் தொடர்ந்தார்கள். மேலும் விபரம் கேட்க கேட்க வெறுப்பின் உச்சியில் இருந்த ஜனனி, தமிழ்செல்வியிடம், “சின்னண்ணி, இப்படியெல்லாம் பேசறாங்களே, இவங்க கும்புடுற திருப்பதிசாமி இவங்கள என்னன்னு கேட்பாரு பாருங்க” என்று நொந்து போய்ச் சொன்னார். ஜனனியின் குடும்பம் தெய்வ நம்பிக்கை உள்ள குடும்பம். ஆனால் அதற்காக எப்பொழுதும் கடவுளைப் பற்றியே பேசிக் கொண்டும், நினைத்துக் கொண்டிருக்கும் தீவிர பக்தி வகையைச் சேர்ந்தவர்கள் இல்லை. அவர்கள் வீட்டில் சிலருக்கு சாமி பெயர் இருக்கும், சிலருக்கு மத சார்பற்ற பெயரும் இருக்கும். கடவுள் பெயர்களில் சைவப் பெயர்களும் இருக்கும், வைணவப் பெயர்களும் இருக்கும். முக்கியமான நாட்களில் முடிந்தால் கோவிலுக்குப் போவார்கள். சிவனோ, விஷ்ணுவோ, ஏசுவோ அதைப் பற்றி அலட்டிக் கொள்வதில்லை. போக முடியாவிட்டால் அதற்காக வருத்தப்பட மாட்டார்கள். விரதம், நோன்பு இது போன்ற எதையும் கடை பிடிப்பதில்லை. அனைத்துப் பண்டிகைகளையும் கொண்டாடுவார்கள். கடவுள், மதம் இவற்றைப் பொறுத்தவரை மிதவாதிகள் எனக் கூறலாம்.
ஆனால் பெரிய அண்ணி ஊர்மிளாவின் குடும்பம் அதற்கு நேர் மாறானது. பரம்பரை பரம்பரையாக அதி தீவிர வைணவர்கள். மருந்துக்கும் குடும்பத்தில் ஒருவருக்கும் வைணவப் பெயர் தவிர வேறு பெயர் இருக்காது. திருப்பதி வெங்கடாஜலபதியின் தீவிர பக்தர்கள். பெரியண்ணன் சிவநேசன் பெயரையும் சிவராமனாக்கி விட்டார்கள். ஒவ்வொரு சனிக்கிழமையும், விரதம் நோன்பு என அமர்களப் படுத்துவார்கள். புரட்டாசி ஆரம்பித்தால் வெங்கட்ரமணா கோவிந்தா என்ற கோஷம்தான். ஆண்டுக்கு ஒரு முறையாவது திருப்பதி செல்லாமல் இருக்கமாட்டார்கள்.
இது நடந்து ஏறத்தாழ ஓராண்டு ஓடியிருக்கும். கணவரையிழந்த ஊர்மிளாவின் தாயாரும் அந்த சோகத்தை தாங்க முடியாமல் உடல் நலிவுற்றார். வழக்கம் போல் பெற்றோரின் மேல் பாசமுள்ள பெரிய அண்ணி ஊர்மிளா தன் தாயை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார். ஆனால் உறவு நலிவடைந்ததால் சிவகுமாரிடம் மருத்துவத்திற்கு அழைத்துவர விரும்பவில்லை. வீட்டிலேயே மருத்துவ வசதி செய்துகொடுத்தார்கள். ஆனாலும் அந்த வயதான மூதாட்டியும் போகும் நேரம் வந்ததால் தன் கணவரைத்தேடி வைகுண்டப் பதவியடைந்தார். சிவகுமார் என்ன சொல்லியும் ஜனனி தன் பெரிய அண்ணனை துக்கம் விசாரிக்க செல்லவும் இல்லை, மரியாதை நிமித்தமாக செல்ல நினைத்த சிவகுமாரையும் போக விடவுமில்லை. கோபமாக அவங்க உறவே நமக்கு வேண்டாம் என்று சொல்லித் தடுத்து விட்டார். சொத்திற்கு மதிப்பு கொடுத்து உறவுகளை இழித்துப் பேசிய பெரிய அண்ணன் குடும்பத்தை உறவினர் என்று ஏற்றுக் கொள்ள அவர் விரும்பவில்லை.
வழக்கம் போல் தன் பெண்ணைப் பார்க்க வந்த ஜனனியின் சின்ன அண்ணன் ஆனந்தனும், சின்ன அண்ணி தமிழ்செல்வியும் ஒருவித பரபரப்புடன் ஜனனியிடம் வந்தார்கள். காபியை கலந்து கொடுத்தவண்ணம் அவர்களை நலம் விசாரித்தார் ஜனனி.
“ஜனனி, இதக் கேட்டியா? உனக்கு ட்ரங்கால் போடாம நேராவே வந்து சொல்லனும்னு நினைச்சேன்”
“என்ன அண்ணி, என்ன ஆச்சு? உங்க பொண்ணுக்கு வரன் ஏதும் வந்திருக்கா?”
“அட, அதில்லைங்கறேன், நீ சொன்ன மாதிரியே திருப்பதிசாமி பாடம் கத்து கொடுத்திட்டாரு பெரியவர் வீட்டுக்கு.”
பிறகு அண்ணனும் அண்ணியும் ஜனனியிடம் சொன்ன தகவல் இது. பெரிய அண்ணி ஊர்மிளாவின் தாய் இறக்கும் முன் அவரிடம் கையிருப்பாக கணிசமான தொகை இருந்தது. தன் கணவரின் நிதி நிர்வாகத்தில் குறிப்பிடக்கூடிய வகையில் பங்கு வகித்த அந்த மூதாட்டி தன் கைவசம் பல ஆயிரங்களுக்கு ஒரு நல்ல தொகையைப் பல ஆண்டுகளாகவே சேமித்து வைத்திருந்தார். பேரப்பிள்ளைகளுக்கு அந்த பணத்தில் பரிசுகளாகவும் வாங்கித் தரும் பணக்கார அன்பு பாட்டி அவர். மேலும் அவரும் பெரிய இடத்தில பிறந்து வளர்ந்ததால் கொத்து, கொத்தாக தங்க, வைர நகைகளும்; அத்துடன் அவர் கணவர் வருமான வரி காரணமாகவும், அவர் பெயரில் துவக்கினால் ராசி என்று நம்பிக்கையில் ஆரம்பித்த சில வியாபார நிறுவனங்களையும் சட்டபூர்வமாக அவர் வசத்தில் வைத்திருந்தார். இவை அனைத்தும் உயில் மூலம் பெரிய அண்ணி ஊர்மிளாவின் கைவசம் இப்பொழுது. தாய் இறந்த பின்பே இதைத் தெரிந்து கொண்ட ஊர்மிளாவின் சகோதரர்கள் சொத்து கைவிட்டு போன கொதிப்பில் தன் சகோதரி மேல் பழி போட ஆரம்பித்துள்ளார்கள், அதுவும் எப்படி?
சொத்துக்காக அலைந்த ஊர்மிளா எப்படியும் தன் தாய் வசம் இருக்கும் சொத்தினைக் கைப்பற்ற எண்ணி, அவரை தன் வீட்டிலேயே பராமரிக்கிறேன் என இருத்திக் கொண்டு, உடல் நலமில்லாதவரிடம் உயில் எழுத நிர்பந்தித்து, உயில் கையில் கிடைத்தவுடன் மற்றவர்கள் உயில் எழுதிவிட்ட விபரம் அறியக் கூடாதென்று விஷம் வைத்து கொன்று விட்டார். மாறாக, அந்த தாயே தன் மகளுக்கு குடும்ப சொத்தில் ஒன்றும் இல்லாது போனதை எண்ணி வருந்தி உயில் எழுதி வைத்திருக்ககூடும். எது எப்படியோ, ஆனால், இப்பொழுது ஊர் முழுவதும் ஊர்மிளாவின் சகோதர்கள் பரப்பிவிடுவது சொத்துக்கு ஆசைப்பட்டு எங்கள் சகோதரியே எங்கள் அம்மாவிற்கு விஷம் வைத்து விட்டார் என்பதே. ஊர் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட செய்தியாகப் போனது இது.
குறிப்பு:
இக்கதை “வகுப்பறை” தளத்தில் வெளியிடப்பட்டது