தீக்குளி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 17, 2025
பார்வையிட்டோர்: 255 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வாணத்தின் வெடிப்பைக் காட்டிலும் அதன் அவசரம் தான் அவனை எழுப்பிற்று. யார் விட்டு எங்கிருந்து கிளம்பியதோ ? ஆனால் அவனை மாத்திரம் அறைகூவி அழைத்துத் தட்டியெழுப்பிற்று. 

“தோ பார்! கிளம்பப் போகிறேன் – கிளம்பிக்கொண் டிருக்கிறேன் – கிளம்பிவிட்டேன் !* 

கண் விழித்துக் கொண்டிருக்கையிலேயே அதன் பொறிவால் ஆகாயத்தில் வரைந்த வளை கோட்டைத் தான் கண்டான். ஜன்னலுக்கு கௌரி கட்டியிருந்த வெள்ளைத் திரையினூடே அத் தீக்கோடு மங்கலாய்த் தான் தெரிந்தாலும் புலன்களுக்கும் தாண்டிய உள்ளறிவில் கத்திபோல் சரேலென உள் சொருகிற்று. அதுவே சுரீலென வலித்தது. கட்டிலுக்கு வெளியே தொங்கிய கை வேதனையில் முஷ்டித்து விரிந்தது. 

வெடிப்பிலிருந்து பச்சை, நீலம், ஊதா, சிவப்புப் பொறிகள் சரம் சரமாய்க் குடை கவிழ்ந்து இறங்கின. 

ஒரு கணம், ஜன்னல் சட்டமிட்ட வானவெளி ஜோதி மயமாகி, மறுகணம் பொறிகள் கருகின. மனக்குகையில் கலைந்த இருள் படலங்கள் வானளவு எழும்பி, வான் திரும்பவும் இருண்ட இருள் அவனையும் கவ்வித் தன்னுள் இழுத்தது. 

மாட்டேன்! மாட்டேன் ! உள்ளுணர்வு அலறிற்று ஆயினும் மனக் குகையில் கலைந்த இருள் படலங்களின் பலாத்கார ஆலிங்கனத்தில் அவன் புதைய ஆரம்பித்து விட்டான். பழைய நினைவுகளுள் அழுந்திக் கொண்டிருக் கையிலேயே வெளியரவங்களின் ஊமைச் சப்தங்கள் மேல் மோதின. 

தெருவில் பையன்களின் ஆரவாரம். கீழே குடித்தனக் காரர் வீட்டில் ரேடியோவின் தும்மலும் இருமலும் வாந்தி யும் கனைப்பும். குழந்தைகள் ஏற்றும் மத்தாப்புகளின் திடீர் திடீர்ச் சீறல், 

குடித்தனக்கார மாமி அபசுரமான கட்டைக் குரலில் பாடுகிறாள். “கௌரி கல்யாணம் வைபோ ஓ ஓகமே!-‘ பாட்டோடு பாட்டாய், “நீங்களும் தேச்சுண்டு டுங்களேன்! விடிஞ்சா அமாவாசை!” என்று புருஷனைக் கூப்பிட்டுப் பார்க்கிறாள். 

அரவங்கள் அவன்மேல் கூடுகட்டிக் கொண்டிருக்கை யிலேயே கட்டிலில் படுத்தபடி அவன் வருடங்களைக் கடந்து கொண்டிருந்தான். பின்னோக்கி ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து. 

மாமனார் வீட்டுக்குப் போய் இந்தத் தீபாவளியோடு ஐந்து வருடங்களாகிவிட்டன. 

கௌரி ஐந்து உடன் பிறந்தவர்களுக்கிடையில் ஒரே பெண்: செல்வக்குமாரி. முதல் பிறப்பு. ஆகையால் தலை தீபாவளி மட்டுமல்லாமல் மற்றைய தீபாவளிகளுக்கும் அவள் வீட்டிலிருந்து அவளுக்கும் அவனுக்கும் வலுக்கட்டாயமான அழைப்பு வரும். ஒவ்வொரு தீபாவளியும் தலை தீபாவளி மாதிரித்தான். 

ஆனால் கலியாணமாகி கடைசியாய்ச் சென்ற அந்த மூன்றாவது தீபாவளிக்குப் பிறகு அவனும் மாமனார் வீட்டுக்குப் போகவில்லை. அவளும் பிறந்த வீடு எட்டிப் பார்க்கவில்லை. இப்பொழுது அவன் வருஷங்களைக் கடந்துவிட்டு அந்த மூன்றாவது தீபாவளிக்கு வந்து விட்டான். வேலைத் தொந்தரவால் முதல்நாள் மாலை தான் வர முடிந்தது. 

மச்சான்மார்களுக்கு அத்திம்பேர் மேல் உயிர்: கடைக் குட்டி மாது வாசலுக்கும் உள்ளுக்குமாய் அலைந்தான். அத்திம்பேரின் வரவையறிவிப்பதில் எல்லோருக்கும் ‘பஸ்டா’யிருக்கணும், அதில் ஒரு பெருமை. 

ஆனால் வாசலில் வண்டி வந்து நின்றபோது அவன் சமையல்கட்டில் இருக்கும் சமயமாய்த்தான் நேர்ந்தது. அம்மா தலை திரும்பிய நேரம் பார்த்து மைசூர்ப்பாகுக் கட்டியை லவட்டிக்கொண்டு விழுந்தடித்து வருவதற்குள் கௌரியும் அவள் புருஷனும் வண்டியை விட்டு இறங்கிக் கொண்டிருந்தார்கள். 

“அம்மாவ்! அத்திம்பேர் வந்துட்டார்! அக்கா வந்துட்டா!” 

முன்றானையில் கையைத் துடைத்துக் கொண்டு அவன் அம்மா வந்தாள். 

“வாங்கோ! வாம்மா, கௌரி!” 

வாய் வரவேற்கையிலேயே கண் மகளை வெள்ளோட் டம் விட்டது. வெளித் தோற்றத்திலிருந்தே உள் அந்தரங் கத்தை அறியப் பார்க்கும் ஸ்திரி சாமர்த்யம் ‘சௌக் கியமா’ என்று கேட்டால் நான் சௌக்கியம் என்றுதான் கிடைக்கும் பதிலடியில் பதுங்கும் அசௌக்யம், அவலம், நிஜம் எது என்று தனக்கே கண்டுகொள்ளப் பார்க்கும் மிருக சூசகம். 

“என்னம்மா சௌக்கியமா?” 

கௌரியின் சிரிப்பு சந்தோஷத்துடன்தான் ஒலித்தது. ஆனால் நெஞ்சில் இடறும் ஒற்றைப் பருக்கை போல் களரியின் கலகலப்பில் ஏதோ ஒரு பொய்மை ஒளிந்தது போல் அவள் தாய்க்குப் பட்டது. இம்மாதிரி ஒருவரை யொருவர் தாயும் பெண்ணும் ஊடாராய்ந்து கொண்டி ருக்கையிலேயே மாது, மைசூர்ப்பாகின் நெய்யும் அவன் எச்சிலும் தோய்ந்த கையுடன் அத்திம்பேர் தோளைக் கட்டித் தொங்கிக் கொண்டே அவருடன் மாடிக்குப் போய் விட்டான். படிக்கட்டுக்கள் ஏறி முடிவதற்குள் சமாச்சாரங் களை எல்லாம் கொட்டியாகிவிட்டது. 

“அப்பாவும் அண்ணன்மார்களும் மாச்சுக்குப் போயி ருக்கா. பள்ளிக்கூடத்திலே நாங்க எல்லாம் வாத்தியா ரோடே செஞ்சிக்கு எக்ஸ்கர்ஷன் போனோம்.நானும் எதிர்த்தாத்து சுப்புணியும் ‘எனிமி’. எங்க பள்ளிக்கூடத் திலே ‘ஓல்ட் பாயிஸ்’ டிராமா போடப்போறா. அதில் நான் ‘நாரதர்”. அத்திம்பேர் ! அத்திம்பேர்! நீங்களும் ஒரு டிக்கெட் வாங்கறேளா? வாங்கணும்! அதெல்லாம் முடியாது ரைட் !” 

கேள்வி, பதில் எல்லாம் அவனே போட்டுக்கொண்டு விஷயத்தை முடித்துக்கொள்வது மாதுவின் தனிப்பாணி 2 அவன் பாணியே அவன் கவர்ச்சி. 

மாதுவின் லொடலொடாவுக்குப் பதிலே பேசாமல் தன் கழுத்தைக் கட்டிய மாதுவின் ஆசைக் கனத்தைத் தாங்கிக் கொண்டு புன்னகை புரிந்தவண்ணம், அவள் கணவன் படிகளை ஒவ்வொன்றாய் ஏறுவதை கெளரி தன் தாயாருடன் பேசிக் கொண்டிருக்கையிலேயே ஓரக்கண் ணால் கவனித்தாள். அவளையுமறியாமல், அவளுக்குத் தன் தம்பிமேல், அவனுடைய பின்னணியில் மற்றைய உடன்பிறந்தார்மேல், ஒரு அசூயை எழுந்தது. சில நாட் களாகவே அவள் தன் நினைவுக்கு விளங்காது, உள் பட்டுக்கொண்டிருக்கும் சொல்ல இயலாத வேதனையில் ஒரு இம்மி கூடிற்று. 

சற்று நேரத்திற்குப் பிறகு காப்பியை ஏந்திக்கொண்டு கௌரி மாடிக்குச் சென்றபொழுது அவள் கணவன் தனியாய்த்தான் அறையிலிருந்தான். அறைக்கு வெளியே வாசற்புறம் பால்கனியிலிருந்து, மாடியே அதிரும் குரலில் மாது, “கேட்கிறதா? கேட்கிறதா?” என்று கேட்டுக் கொண்டிருந்தான். பொறுமையுடன் நெருப்புப் பெட்டி டெலிபோனைக் காதில் வைத்துக்கொண்டு அத்திம்பேர் யுன்னகை புரிந்தவண்ணம், ‘ஊம்’, கொட்டிக் கொண்டிருந்தார். 

காப்பி டம்ளரும் கையுமாய், அவனைச் சிந்தித்தபடி வாசற்படியில் நின்றாள். அவளுக்கு அவன்மேல் ஒரே எரிச்சல் எழுந்தது. ஒருமையில் கூட எண்ணங்கள் ஓடின. 

ஆளுக்குத் தக்கமாதிரி பச்சோந்தியாய் இவனால் எப்படி அவ்வளவு உண்மை போன்ற வர்ணம் மாற முடியறது? குழந்தைக்குச் சரி குழந்தையாய் நெருப்புப் பெட்டி போனை எப்படிக் காதில் வைத்துக் கொள்ள முடியறது? ஆபீஸில் இவனுக்கே ஒரு தனி போன் இருக்கிறது எனக்குத் தெரியாதா? இந்த போனே அந்த போன்மாதிரி, பெரிய காரியத்தில் தன்னை மறந்த தினு சில் எப்படி மாதுவோட விளையாட முடியறது ? மாது ஒரு சமயம் செய்யும் நிர்த்தூளி எல்லோருடைய பொறு மைக்கும் பெரிய சோதனை. ஆனால் இந்த மனுஷனின் பொறுமை அல்ல பொறுமைகளுக்கு எல்லையே கிடை யாதோ? இதோ. முகம் இப்போ என்பக்கம் திரும்பு கிறது. மனுஷன் வர்ணம் மாறுவதைப் பார், பாரேன் இந்த விந்தையை ! கன்னத்தின் கோணத்தில் ஒரு சிறு ஒடிப்பு. உதட்டோரத்தில் ஒரு இழுப்பு. எனக்கேற்ற சிரிப்பில் முகம் வார்ப்பு மாறி அந்தச் சிரிப்புக்கேற்ற மலர்ச்சியில் முகம் திரியறது. 

அவளுக்கு அச்சமயம் ஏன் அவ்வளவு கோபம் வந்ததோ! கடுகடுத்த முகத்துடன் விடுவிடெனப் போய் அவர் குனிந்து காதண்டை பிடித்துக் கொண்டிருந்த நெருப்புப் பெட்டியைப் பிடுங்கி வீசி எறிந்தாள். 

அவன் கோபிக்கவில்லை. ஒருக்காலும் அவன் அவளைக் கடிந்ததில்லை. அவள் கோபத்தின் வேடிக்கை யைத் தனக்கே அனுபவிக்கும் மோனச் சிரிப்பில் அவன் கண்கள் அவளைச் சிந்தித்தன; அம்மாதிரி நிலையில் அவனைப் புரிந்து கொள்ள முடியாமல் அவள் திகைத் தாள். அச்சமயங்களில் யாவிலும் பரவிநிற்கும் பரம் பொருளின் தன்மையை அவன் தாங்கியிருந்தது போல் அவளுக்குத் தோன்றும். இப்படி ஆயிர மூர்த்திகள் அவ னில் இருப்பின் அவற்றுள் அவளுடைய மூர்த்தி எது? அதை அவள் அடைந்து தனக்கென்றே இருத்திக் கொள்வது எப்படி? போகப்போக இடத்தைக் கொடுத் துக்கொண்டே எட்ட எட்டப் போவது தெரியாவிடினும், அவைகளின் ஊமை உறுத்தல் தாங்கக்கூடியதாயில்லை. 

தன் சீற்றத்தின் காரணம் தனக்கே தெரியாமல் அதன் வேதனையை மாத்திரம் பட்டுக்கொண்டு, கையை நெறித்தபடி அவள் நிற்கையில், கௌரியின் அழகு ப்ரமிக்கத்தக்கதாய்த் தான் இருந்தது. அதை அறிந்து தானோ என்னவோ அவளைச் சீண்டுதற்கென்றே, அச் சீண்டலில் அவள் அழகைத் தூண்டுவதற்கென்றே, அவன் உதட்டில் கட்டிய அரும்பு கலையாமல்,அவன் கண்கள் அவள்மேல் சிந்தனையில் ஆழ்ந்தன. 


அந்தத் தீபாவளியைக் கௌரி மறக்கவே முடியாது. ஸ்நானம் பண்ணிவிட்டு, பளீரடிக்கும் வெண்ணெற்றியில் சந்தனப் பொட்டு அதனுள் நெற்றிக் கண்ணெனக் குங்குமம் துலங்க, கர்ணன் குண்டலங்களுடன் பிறந்தாற் போல் உடலோடிழைந்த புதுமஞ்சள் பட்டு ஜிப்பா சரிகை வேட்டியுமாய், மாடியறையினின்று அவன் வெளிப்படுகையில் அவள் கீழே மாடிப்படி அடியில் நின்று கொண்டிருந்தவள், கைக்காரியத்தை மறந்து அவனில் தன்னையிழந்து நின்றாள். அவன் தன்னுள் பதுக்கிய எல்லையற்ற சக்திகளுள் இப்படித் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்வதும் ஒன்றா? வேளைக்கு வேளை சட்டையுரிப்பு. கலியாணமாகி மூன்று வருடங்களாகியும் எப்படி இன்னும் இந்தப் புது மெருகு இவர்மேல் இப்படி கமழ்கிறது? கலியாணத்திற்குப்பின் அவளுக்கு உடல் குழைந்துவிட்டதாக அவள் பிறந்த வீட்டிலேயே சொல்கிறார்கள். ஆனால் இவர் மாத்திரம் என்றும் புது மெருகு அழியாமல் மார்க்கண்டனாய்த் தானிருப்பாரா? 

அவனைப் பார்க்கையில் ஒரு பக்கம் பெருமிதம் பொங்கிற்று. ஆனால் ஓர் அச்சமும் அவ்வுவகையைச் சூழ்ந்தது. அவன் மேல் நிலைத்த பார்வையைக் கலைக்க. இயலாது, அவனின்று பறந்த அவன் உள் ஒளியில் கண் கூசி, கதவின் மேல் சாய்ந்தாள். 

சர்க்கஸ் புலி நெருப்பு வளையங்களுள் நுழைந்து வருவதுபோல் புன்னகை புரிந்தபடி படிகளின் வழியிறங்கி வந்தான். 

“அத்திம்பேர்! அத்திம்பேர்!!”

அந்த அவசர விளிப்பு அவளை மூர்ச்சையினின்று விடுவித்தது. திடுக்கிட்டுக் குரல் வந்த திக்கில் திரும்பினாள். 

மாது வாசற்குறட்டில் ஒரு வாணத்தை வைத்துக் கொண்டு செத்துப்போனதை உயிர்ப்பிக்க முயன்று கொண்டிருந்தான். அவன் கண்களில் ஏமாற்றக்கண்ணீர் துளும்பிற்று. 

“ஏமாத்திட்டான் அத்திம்பேர்!” 

அத்திம்பேர் சாவதானமாக அவனிடம் சென்றார். அவள் பார்வை விடாது தொடர்ந்தது. சிரித்துக் கொண்டே வாணத்தை இடறினார். பிரயோஜனமில்லை என்ற பாவனையில் மாது உதட்டைப் பிதுக்கித் தலையை ஆட்டினான். 

“அத்திம்பேர்! அத்திம்பேர்! தரேளா? கடை இந்தத் தெரு திருப்பத்திலேதான் இருக்கு, திறந்துதான் இருக்கு-” 

அத்திம்பேர் கீழே உருண்ட வாணத்தைக் கையிலெடுத்தார். திரியிருக்கிறதா என்று பார்ப்பதற்காக அதை உற்று குனிந்து நோக்- 

“படார்..”

ஐந்து வருடங்களுக்கு முன் நேர்ந்த அந்தச் சமயத்துடன் மறுபடியும் மோதின அதிர்ச்சியில், அவன் கட்டிலில் துடித்து விழுந்தான். 

அறையில் கந்தக நாற்றம் பொசுங்கிற்று. 


ஆகாயத்தில் வாணம் வெடித்தபோது கௌரி வெந்நீருள்ளில் இருந்தாள். குடை அவள் மேலும் கவிந் தது. அவளும் அதன் நிழலுள் நழுவினாள். பிடரியினின்று அவிழ்ந்து புரளும் நீண்ட கருங் கூந்தலாள் கௌரி. இருண்ட சிந்தனைகளைத் தனக்குள் அடைத்த கெளரி, 

நல்லவேளையாக ஒண்டிக்குடித்தனமானாலும், தனி வெந்நீருள், கதவைத் தட்டி அவளை அவசரப் படுத்து வார் இல்லை. 

கௌரிக்கென்னவோ ஆசைதான், யாராவது பெரியவளாய், குடித்தனக்கார மாமியாத்தானிருக்கட்டுமே- தனக்கு ஒரு கை எண்ணெய் வைத்தால் தேவலைதான். ஆனால் தானாகப் போய் மாமியைக் கேட்க லஜ்ஜை. மாமியும் முன் வரவில்லை, “ஒண்டியாயிருக்கையே, சிறிசாயிருக்கையே வா வா, வெத்திலையை வாயில் அடைச்சுக்கோ, நான் கௌரி கல்யாணம் பாடறேன். என்று. மாமியைக் குற்றம் சொல்வதிலும் முறையில்லை. அவள் குழந்தைகளுக்கு உழல்வதே அவளுக்குச் சரியா யிருந்தது. 

ஒன்று புரிந்தது. தனிக்குடித்தனம் சில விஷயங் களுக்குச் சரியாயிருக்கலாம். ஆனால் தனித் தீபாவளி என்னவோ நிச்சயமாய்ச் சரியாயில்லை. 

ஆனால் இந்தத் தனிக்குடித்தனமே அவள் தாயின் திட்டம்தான். அவள் தாயே திட்டம் போட்டு எதையும் நடத்துவதில் கெட்டிக்காரி. “நான் மாமியார், மாமனார், நாலு கொழுந்தன்மார், நாத்திமார் நடுவிலே வாழ்க்கைப் பட்டு, பட்டது போதும்; என் பெண்ணாவது கண்ணைக் கசக்காமல் வாழறதைக் கண்ணோலே பார்க்கிறேன்” என்று போவோர் வருவோரிடம் அவள் முறையிட்டுச் சொல்லும் தினுசிலிருந்து ஏதோ தன் தாயார் சிங்கம் புலி கரடி நடமாடிய கூட்டுக்குள்தான் காலம் கடத்திக் கொண்டிருந்தாள் என்று நினைத்துக்கொண்டிருந்தாள் ஆனால் அவளுக்கு நினைவு தெரிந்தது முதல் அம்மாதிரி சித்தி, சித்தப்பா, அத்தை, பாட்டி, பாட்டனார் எல்லோ ரையும் சேர்ந்தாப்போலேயோ அடிக்கடியோ அவள் பார்த்ததில்லை. 

விஷயமறிந்த ஒன்றிருவர் சொல்வதும் காதில் விழுந்தது. அவள் தாய் புக்ககத்தில் காலெடுத்து வைத்து ஒரு வருடத்திற்குள் பொட்டலமாயிருந்த குடும்பத்தைப் யத்து கோலமாக்கி ஒருத்தருக்கொருவர் விரோதமுண் டாக்கி, தானும் விரோதமாகி தன்னோடு தன் கணவனையும் கைக்குழந்தை கௌரியுடன் கூட்டுக் குடும்பத்திலிருந்து பிய்த்துக்கொண்டு வந்து விட்டதாகச் சொல்லிக் கொண்டார்கள். ஆனால் அதைப்பற்றி கௌரிக்கு அதிகம் தெரியவோ ஆராயவோ வழியில்லை; சந்தர்ப்பமில்லை. அவளுடைய தாயார், தனக்கும் தன்னுடைமைக்கும் சௌகரியம் என்று அமைத்துக் கொண்ட சூழ்நிலையில் வளர்ந்தாள். 

தனாலேதானோ அல்ல கௌரி என நாமம் அ படைத்து விட்டதனாலேயோ அவள் சில சமயங்களில் தன்னை மலையத்வஜ ராஜகுமாரியாகக்கூட நினைத்துக் கொண்டு விடுவாள். சுபாவத்தில் அவளைச் சாது, ஒரு சிறு அசடு என்றுகூட சொல்லலாம். ஆனால் இந்த எண்ணம் – தான் ஏதோ ரொம்ப ‘உசத்தி’ என்கிற எண்ணம் மாத்திரம் அவளுள், வயதுடன் கூடவே வளர்ந்து வந்தது. ஐந்து தம்பிமார்களுக்கிடையில் ஒரு செல்வ குமாரியாக வாய்ந்த செல்லம், உற்பவித்த உதர மகிமை, வீட்டில் அவள் தாய் நடத்திய பூரண ஆட்சி, பிறரிடம் காட்டும் மேட்டிமை எல்லாம் சேர்ந்து அவ்வெண்ணத்திற்கு ஊட்டம் அளித்தன. அப்பாவுக்கு அம்மாவிடம் இருந்த பயம் எல்லோருக்கும் வெட்ட வெளிச்சம். குத்திமாட்டி இழுக்கும் கொடுஞ் சொற்களைக் கக்குவதில் அவள் தாய் வரப்ரசாதி. ஆபீஸ் விட்டால் அப்பா வீட்டில் அதிகம் தங்குவதில்லை. அவருக்கு “மாட்ச்’ பைத்தியம். அந்த சாக்கில் அடிக்கடி வெளி யூரும் போய்விடுவார். அவருடைய பரம விரோதிகூட சொல்வான். “அந்த மனுஷன் சந்தோஷமாய் இருக்கும் வேளையே ‘மாட்ச் மைதானத்தில்தானே!” 

ஆகையால் வீட்டில் அம்மாவும் அவளும் இட்ட சட்டமும் அடித்த கொட்டமும்தான். 

கௌரிக்குக் கலியாணம் ஆவதற்கு மூன்று வருடங் களுக்கு முன்தான் அப்பா அம்மாவின் ஓயாத பிடுங்கலின் பேரில், ஒரு நிலத்தை வாங்கி ஒரு வீட்டைக் கட்டி முடித்தார். வீடு, பார்க்க அழகாய்த்தானிருந்தது. சிநேகிதர்களையும் புதியவர்களையும் வீட்டுக்குள் அழைத்துப் போய் அதன் நாலு அறைகளையும் மொட்டை மாடியையும் சுற்றிச் சுற்றி வந்து, “இதோ பாருங்கோ சமையலுள்ளில் தனிக்குழாய், வெந்நீருள்ளில் தனிக் குழாய். இந்தச் சாரியிலே ஒரு சின்னக் குடித்தனமும் வெச்சிருக்கேன். ஆம்படையான் பெண்டாட்டி, வீடில்லாத் திண்டாட்டத்திலே வந்து கேட்டா என்ன சார் பண்றது? மாட்டேன்னு சொல்ல வாய் வரமாட்டேன்கறது” என்று தன் முதுகைத் தானே தட்டிக் கொள்ளும்போதும் பெருமையாய்த்தானிருந்தது. ஆனால் இந்தக் கௌர வத்தில் ஒரு பெரிய ஓட்டையும் விழுந்திருந்தது, வீட்டைக் கட்டி முடிக்கு முன்னாலேயே கடன் சுமையா யிறங்கிற்று. அப்புறம் மனைவி படுத்தும் வேதனை தாங் காது, மாடிமேலும் கட்டடம் எழுப்பினார். அதற்குமேல் எழுந்து கொக்கரித்து சதிராடும் கடன் அசுரனை உணரு கையில் பீதிதான் விளைந்தது. ஆனால் அம்மாவுக்கு இன்னும் திருப்தி ஏற்படவில்லை. பக்கத்து வீட்டுக் காரன் தெருவை அடைத்துப் பந்தல் போட்டதால், “அதற்குக் குறையாமல் நம் வீட்டுக் கலியாணமும் நடந் தால்தான் அந்தாத்து மாமியை நான் தலை நிமிர்ந்து பார்க்க முடியும்” என்று அவள் பண்ணிய அட்டகாசத் திற்கு இணங்கி கௌரி கலியாணமும் சிறப்பாகக் கொண்டாடிய பின்னர், இன்னமும் ஒரு சுள்ளி வைத் தால் முதுகு முறியும் கடன் பளுவடியில் அப்பா அழுந்தி ஆயிற்று. 

ஆனால் அதைப்பற்றி கௌரிக்கு என்ன கவலை? என்ன தெரியும்? அவள் வளர்ந்த முறையே கஷ்டப் படுவது புருஷர்கள் பங்கு, சுகப்படுவது நம் கடமை என்று கடன் பட்டாவது ஊர் மெச்சப் பால் குடிப்பது தான் குடும்ப கௌரவம் என்ற முறையில் வாழ்க்கை நோக்கு அவளுக்கு அவள் வளர்ந்த முறையில் அமைந்தது. கௌரியின் தாயார் தேடிய திட்டத்திற்கு ஏற்ப அவளுக்கு மாப்பிள்ளையும் வாய்த்து விட்டான். தாய் தகப்பன், உடன்பிறந்தார் எவருமில்லை. நல்ல உத்தியோகத்திலிருந்தான். பந்தலில் பார்த்தவர்கள் பெண்ணைவிட பிள்ளையே எடுப்பு என்று சொன்னார்கள்.  

ஏற்கெனவே வீட்டில் குடியிருக்கும் தம்பதிகளை விரட்டி விட்டுப் பெண்ணையும் மருமகப்பிள்ளையையும் தன் கண் காணிப்பிலேயே வைத்துக்கொள்ளலாம் என்ற யோசனை கூட கௌரியின் பெற்றோர்களுக்கு இருந்திருந்தால் அந்த எண்ணம் பலிக்கவில்லை. மாப்பிள் ளைக்கு உத்யோகம் வெளியூரில். 

கௌரி, கணவன் வீட்டுக்குப் புறப்படுகையில் அவளு டைய சிநேகிதிகளும் பக்கத்து வீட்டு மாமிகளும் – சிலர் நிஜ அசூயையுடனேயே, உனக்கென்னடியம்மா குறைச்சல், கண்ணிறைஞ்ச கணவன் அவன் உத்யோகம் கை நிறைஞ்ச காசு, நீ பிறந்த இடத்திலும் ராணிதான், போகுமிடத்திலும் ராணிதான். மடிநிறைஞ்ச குழந்தை ஒண்ணுதான் இனி பாக்கி” – என்று சொல்லி வழி அனுப்பியபோது கௌரிக்குப் பெருமை கங்கு கரை யுடைந்தது. அச்சமயத்தில் அவள் தன்னைப்பற்றியும் தன் கணவனைப் பற்றியும் என்னென்ன நினைத்துக் கொண்டிருந்தாளோ அவளுக்கே தெரியாது. ஆனால் அந்த உருவமற்ற எண்ணங்களும் உணர்ச்சிகளும் கட்டிய கோட்டைகளும் “ஹிமவானின் புத்ரி” என்னும் ஒரே எண்ணத்தின் நடுத் தண்டிலிருந்து முளைத்து அதையே சுற்றிச் சுற்றிப் படர்ந்தவையாய்த்தான் உழன்றன. 

குடும்ப வாழ்க்கையில் இன்றியமையாத சிறு மோதல் களும் மனஸ்தாபங்களும் அவர்களிடையில் நேராமல் இல்லை. ஆனால் எப்படியும் அவைகளுக்குத் தான் காரணமில்லாமல் அம்மோதலின் அதிர்ச்சிகள் அவனைத் தாக்காதபடி லாகவமாய் விலகிக் கொள்ளும் சாமர்த்தியம்-அவனுக்கிருந்தது. ஆகையால் அவைகளின் வேகம் முழுவதையும் அவள் மேலேயே விழுந்தது. ஒவ்வொரு சச்சரவையும் சாவகாசமாய்த் தனக்குத்தானே அலசிப் பார்த்துக் கொள்கையில் தர்க்கத்திற்குக் காரணம் அவனாயிருக்கமாட்டான். “நீயே பார், நானா பண்ணி னேன்?” என்று அவன் சுட்டிக்கூடக் காண்பிப்பதில்லை. எந்தக் காரியத்தை அவள் அத்தனை இடும்பு செய்து சாதித்துக் கொண்டாளோ, சாதித்த பின்னர் அதன் சக்கைதான் அவளிடம் எஞ்சிற்று அதன் வெற்றியும் சுவையும் அவன் புன்னகையில் உதட்டோரம் சுழித்த குழிகளில் தங்கிப் போயின. அதற்காக அவள் எடுத் தாடிய சொரூபங்களே அவளைக் கேலி செய்தன. பிறந்த வீட்டில் அவள் அழுச்சாட்டியங்களுக்கு அப்பா பயந்து கீழ்ப்படிந்து போவார். ஆனால் இங்கோ அப்படியில்லை. தும்பையறுத்துக் கொண்டு பின்னங்கால்களை உதைத்துக் கொண்டு துள்ளி, குடல்தெறிக்க எங்கென்று கூடத் தெரி யாது ஓடும் கன்றுக்குட்டியின் விடுதலையில் எவ்வளவு பொய்மையும் கேலிக்கிடமும் இருந்ததோ அப்படித்தான் முடிந்தது, அவளுடைய சொரூபங்களின் வியர்த்தம். 

ஆனால் அவனையும் எப்படி அத்தனை சிநேகி தர்கள் ஈ மாதிரி மொய்த்தார்கள்? அவளுக்கு ஆச்சரியமா யிருக்கும்.”உடம்பு சிரமமாயிருக்கிறது” என்று சாக்குச் சொன்னாலும் “சரிதாம்பா வீட்டை அடைகாத்தது போதும் நாங்கள் வேணுமானால் காலைப் பிடிக் கிறோம்” என்று குண்டுக் கட்டாய்த் தூக்கிக்கொண்டே போய்விடுவார்கள். தன் கணவன் எத்தனையோ விஷயங் களுக்கு நடுநாயகமாக விளங்கியது கெளரிக்கும் பெருமை, சந்தோஷந்தான். ஆனால் தன் அசூயையே மனதில் உறுத்தி உறுத்தி, அரித்துத் தள்ளிக் குவிந்து மலையாகியளித்த காக்ஷி அவளுக்கே பயமாயிருந்தது இவ்வளவு பெரிய குப்பை மேடா நான்? ஏன் இப்படி என்னோடேயே போராடிண்டிருக்கேன் ? ஆனால் யுத்தம் நடந்து கொண்டேயிருந்தது. குப்பை இன்னும் ஏறிக் கொண்டேயிருந்தது. 

நாளடைவில் கௌரி தன்னிலேயே புழுங்க ஆரம்பித் தாள். மனம் இதுவரை தோன்றாத புதுப்புது சந்தே. கங்கள் புழுத்த எண்ணங்களின் களமாகியது. 

அவருக்கு என்மேல் பிரியமில்லையா? அதனால்தான் ஒதுங்கி ஒதுங்கிப் பிடிபடாமல் போகிறாரா? புருஷர் களே இப்படித்தானா? சமூகத்தில் கலியாணம் என்று ஏன் ஏற்பட்டிருக்கிறது? இந்த அவஸ்தை படத்தானா? இதுதான் முடிவா ? லக்ஷிய புருஷன் எனக்குக் கிட்டியும் என் வாழ்வு ஏன் லக்ஷிய வாழ்வாயில்லை? லக்ஷிய புருஷர்கள் எல்லாம் சுவரில் படமாகவும் மாடத்தில் பொம்மையாகவும் பூஜை பண்ணச் சரியே அன்றி; சதையும் பிண்டமுமாய் சேர்ந்து வாழ லாயக்கற்றவர் களா? பிறந்த வீட்டிற்கே திரும்பிப் போய் விடுவோமா? 

அந்த ப்ரம்மாஸ்திரத்திற்கு அம்மாவிடம் அப்பா பயந்து போவார்.ஆனால் இந்த ஆசாமி மசியமாட் டானே! போகிறேன் என்றால் சற்றேனும் கோபம் செய்யாது இரு கைகளையும் வாசற்புறம் நீட்டி வழி காட்டி விடுவான். அப்படி வீடு திரும்புவதைவிட தோல் வியும் அவமானமும் வேறெது? வாழாவெட்டியாய் இருப்பதற்கு ஒரு வழியாகக் கைம்பெண்ணின் கதியே தேவலை. 

அவள் கணவன் மேல் புரியாத பகை அவளுக்கு வளர ஆரம்பித்தது. எந்தச் சமயமும் தன்னுள் உவகை பூத்த வண்ணம் எப்படி அவனால் இருக்க முடிகிறது? ஆனால் சற்றேனும் களைப்புத் தட்டாது சதா களை திகழும் அம்முகம் கலங்குவதுதான் எப்போ? அதைக் கலக்க வைப்பதுதான் எப்படி ? காலம், வயது – எல்லோரையும் பாதிக்கும் சக்தி அவனிடம் மாத்திரம் நீர்த்துப் போய்விட்டதா? இதுவே தான் அவள் கவலை, புழுக்கம், வேதனை. 

பாதியிரவில் திடுக்கென்று சில சமயங்களில் விழித் துக்கொள்வாள். பக்கத்தில் அவன் முகத்தின்மேல் நிலா வின் ஒளியில் ஜன்னல் கம்பிகளின் நிழல் கட்டானிட்டது. வங்கி வங்கியாய்ச் சுருண்ட ஒரு மயிர்த்திருகு, நெற்றி யில், காற்றில் அசைந்தது. நிர்மலமாய்த் தூங்கும் அம் முகத்தை, அப்பொழுதுதான் தலையணை மேல் மலர்ந்த நீலமலர் போன்று மாசுமறுவற்ற அம்முகத்தைப் பிராண் டினால் என்ன? 

பேய் எண்ணங்கள்! பயங்கர எண்ணங்கள். 

மண்டையைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு கு குடு வென்று குழாயண்டை ஓடி முகத்தை நனைத்துக் கொள்வாள். 

அவளுள் நேர்ந்து கொண்டிருப்பதையெல்லாம் அவன் அறிவானோ? ஆனால் அவன் அவளிடம் நடந்துகொள்ளும் முறையில் வேறுபாடு ஏதும் தெரிய வில்லை. 

இம்மனோ நிலையில்தான் அவள் இந்தத் தீபா வளிக்குப் பிறந்தகம் வந்திருந்தாள். அவளுக்கே தெரிந் தது. இது யாருடனும் பங்கிட்டுக் கொள்ளக்கூடியதாயு மில்லை. தனக்குத்தானே பொருமித் தன்னையே தின்று கொண்டிருந்தாள். 


ஆகையால், யானைவெடி அவள் புருஷன் முகத்தில் வெடித்ததும், வெடி வெடித்ததாகவே அவளுக்கில்லை. இத்தனை நாள் தன்னுள்ளே உருண்டு திரண்டு குமுறிக் கொண்டிருந்த எரிமலைதான் வெடித்தாற் போலிருந்தது. ஒரு வேளை இதைத்தான் அவள் வேண்டினாள் என்று அவனே அறிந்து, யுத்தத்தில் அம்பை மார்பில் தாங்கிக் கொள்ள முன் வரும் சுத்த வீரனைப் போல், தானே அவள் எண்ணத்தின் வெடிப் பைத் தாங்க அவ்வளவு அலங்காரத்துடன், சிரித்த முகத்துடன் அதை நோக்கிச் சென்றானோ? அவள் கணவன் வெடியின் ஜோதியில் ஒருகணம் ஜ்வலிப் பதைக் கண்டாள், அவ்வளவுதான்- 

அவளுக்கு நினைவு தப்பிவிட்டது. 


ஏறக்குறைய ஒரு வருஷம் ஆஸ்பத்திரியில் படுத்த படுக்கையாய் அவன் கிடந்தான். முதல் ஒன்றிரண்டு மாதங்களுக்கு மயக்கமருந்திலேயே அவனைக் கிடத்தி னார்கள். நினைவு தாங்க உடலுக்குச் சக்தி இருக் குமோ எனும் பயம். இடையிடையே விதவிதமான கோளாறுகள் நேர்ந்தன. ரண ஜன்னியும் கண்டுவிட்டது. 

அவன் தீயிலேயே குளித்திருந்தான். 

பிறகு அவன் நினைப்பை அவனிடம் திருப்பிக் கொடுக்க மெதுவாய்த் துணிந்தனர். 

“சாவே வாவா” என்று கூவி அழைத்தால் வந்து விடுமா? கட்டிலோடு பிணைத்த கட்டிலிருந்து திமிர அவன் துடித்துப் புரளுகையில் வெறித்த பார்வையுடன் கௌரி, இதயத்தில் விழுந்துவிட்ட பள்ளத்தின் அடி பாதாள ஆழத்திலிருந்து, செயலற்று அவனருகே நின்று கொண்டிருந்தாள். காங்கையடித்த கண்கள், பார்வை யிலாது கட்டிலிலிருந்து அவளைப் பதில் வெறித்தன. 

வலியின் வேதனையிலேயே உடைப்பெடுத்து ஓடிய பிரமையில் ஒரு சமயம் அவன், தன்மேல் செஞ்சுடர்க் குழம்பு ஊற்றிக் கொண்டேயிருப்பதாகக் கதறுவான். இன்னொரு சமயம் செஞ்சுடரின் நடுவே மிளிரும் நீல ஜோதியில் தான் மிதந்து கொண்டிருப்பதாக அலறுவான். மற்றும் ஒரு வேளை, கந்தகத்தின் எரிப்பில் எழும் மஞ்சள் தீயில் தான் புகுந்து புறப்பட்டுக் கொண்டிருப்பதாகக் கற்பனையின் விபரீதம் ஓடும். 

அவள் சிலையாகச் சமைந்து அவனையே வெறித்த யார்வை நிலை மாறாது நின்றாள். 

அவன் ஆபீஸே திரண்டு ஆஸ்பத்திரிக்கு வந்தது. அவனுக்கு சுயநினைவில்லாததால் அவனுடைய முதலாளி அவளிடம் வந்தார். ‘பணக்கவலை, வேலைக்கவலை எதுவும் நீங்கள் படவேண்டாம். மாதா மாதம் ஆஸ்பத்திரி யில்லை ஆபீஸுக்கு அனுப்பித்து விடணும். ஐந்து வருட மானாலும், அவருடைய நாற்காலி மேஜை அவருக்கே காத்திருக்கும். இன்னும் இதே ரீதியில் ஏதேதோ தைரியம் சொன்னார். 

அவர் பேச்சை அவள் க்ரஹித்துக் கொண்டாளோ? அறியாள். ஆனால் ஒரு தோற்றம் நெஞ்சில் பதிந்தது. ஆபீஸில் அத்தனைபேர் வேலை செய்ய அவர்கள் நடுவே இன்னமும் வருஷம், ஒன்றோ இரண்டோ, எத்தனை காலமோ, அல்லது காலத்திற்குமோ, காலியாய் ஒரு மேஜையும் ஒரு நாற்காலியும் கண்ணெதிரில் எழுகையில், தன்மேல் விழுந்து கொண்டிருப்பதாக அவன் அலறும் எரி நீர்வீழ்ச்சியிலிருந்து ஒரு வாளி, கண்ணுக்கு தெரியாக் கைகள் எடுத்து அவள் மேலும் வீசியதுபோல் அடிவயிற் றிலிருந்து அனல் கிளம்பிற்று. அதன் ஜ்வாலையில் அவள் எரிந்தாள். மருண்ட கண்கள் அப்படியே தாழ்ந்து கழுத்தங்குழியெலும்பின் மேல் சாதுவாய் உறங்கும் மஞ்சள் சரடைப் பார்த்து பயங்கரத்தில் புருவங்கள் சுளித்தன. அது தன்னைக் கடிப்பதற்காகக் கழுத்தைச் சுற்றிக் கொண்ட பாம்பா அல்ல தன் வாழ்வின் ரக்ஷையா ? 

அந்த உள் பயத்திற்கு ஏற்ப,அவன் உடல்நிலையில் எதிர்பாராக் கோளாறுகள் புகுந்தன. ஊன், மாமிசம் முதற் கொண்டு வெந்து போனதால் மூன்று முறை புது ரத்தம் பாய்ச்சியும் உடல் மஞ்சள் பூத்துவிட்டது. ஒரு மருந்துக்கொரு மருந்து கொடுத்து நிலைமை இன்னமும் மோசமாகிவிட்டது. இரவும் பகலுமாய் வைத்தியர்கள் அவனைச் சுற்றி வட்டமிட்ட வண்ணமாயிருந்தனர். 

அவன்மேல் கவிந்துகொண்ட கருமேகத்துடன் அவன் போராடுகையில், அவன் இத்தனை நாளாகத் தன்னுள் சேர்த்து வைத்திருந்த மனோபலம் அனைத்தும் செல வாகி வருவதைக் கண்கூடாகக் காண்கையில். இந்தப் போராட்டம் ஒரு பக்கம் அச்சத்தை விளைவித்தாலும், அதன் காம்பீர்யத்தையும் அவளால் தரிசிக்க முடிந்தது. இந்த யுத்தத்தின் யானைப் பசியில் தன் கணவனுக்கு அவள் இப்போது செய்த பணிவிடை அனைத்தும் ஈடிழந்து, பொருட்டிழந்து, பிசுபிசுத்து, சூன்யமாய்ப் போவதையும் கண்டாள். 


வயதான சுமங்கலி ஒருத்தி அவளை மாங்கல்யபிச்சை எடுக்கச் சொன்னாள். அவள் சொல்லிக் கொடுத்த படியே, ஜாதி முறைப்படி கொசுவம் வைத்துக் கட்டிக் கொண்டு, முன்றானைத் தலைப்பை இரு கைகளிலும் பிடித்துக் கொண்டு, கால் மெட்டி ஒலிக்க, விடுவிடென வீட்டுப்படி இறங்கி,”என் புருஷனுக்கு உயிர்ப்பிச்சை போடுங்கோ எனக்கு மாங்கல்ய பிச்சை போடுங்கோ!” என்று கேட்டுக்கொண்டே தெருவழியே அவள் கோவிலுக் குச் செல்கையில், அவளுக்கே இதுவரை தெரியாத ஏதோ ஒன்று அவளுள் புரண்டது. சொல்லிக்கொடுத்த வார்த்தை களேயாயினும் அவை தொப்புளினின்றெழுந்த கதற லாய்த்தான் வெளிவந்தன. பிச்சையிட்ட கைகள் வெட வெடத்தன. அவளை முகமெடுத்துப் பார்க்க யாவரும் அஞ்சினர். 

கௌரி. 

ஹிமவான் புத்ரி. 

பாண்டிய ராஜகுமாரி. 

அவளையும் மீறி, சமயத்திற்கு அவளுள் எழுந்த சக்திதான் காரணமோ, வைத்தியத்தின் சாமர்த்தியமோ. அவனுடைய பலம் தானோ,~ பெரியவர்களின் ஆசியோ அகஸ்மாத்தோ, ஒருவாறாக, அவன் தன்மேல் கவிந்த கருமேகத்தின் தழுவலினின்று மீண்டான். ஆயினும் எப்படிப்பட்ட மீட்சி! 

ஆஸ்பத்திரியில் இருந்தவரை கூடத் தெரியவில்லை. விடுதலையடைந்து வீட்டுக்கு வந்த சில நாட்களுக்குப் பிறகுதான் தெரிந்தது. பழரஸம் பிழிந்தோ, மருந்தோ ஏதோ எடுத்துவரக் கீழே போன கௌரி மறுபடி மாடியேறி வந்தபோது அசப்பில் அவன் நிலைகண்டு அயர்ந்து நிலை வாசல்மேல் அப்படியே சாய்ந்தாள். பகீர் என்றது. 

அவன் சாய்வு நாற்காலியில் சாய்ந்து சுவரைப் பார்த் துக் கொண்டிருந்தான். முகத்திலும், மார்பிலும், கழுத் தலும் தழும்புகள் வீறுவீறாய்த் தடித்து எழும்பின.புருவங் களும் கண் ரப்பைகளும் இருந்த இடம்கூடத் தெரியாது தீய்ந்து போயிருந்தன. 

உயிருக்கும் சாவுக்கும் ஒரு வருடமாய் நடந்த போர்க் களமாய் உடல் விளங்கிற்று. உயிர் உடலோடிருந்ததால் ‘என் வெற்றி’ என்றாலும் சாவு, எப்படியும் உடல் எனக்குத்தான் சொந்தம்’ என்று ஸ்தாபிப்பதுபோல் தன் முத்திரையை உடலெங்கும் பொறித்திருந்தது. 

“கௌரி ! திருப்திதானே ?” என்று ஒருகுரல் அவளுள் திடுக்கென எழுந்ததும் அது பேசியே கேட்டதுபோல் கௌரி சுற்றுமுற்றும் விழித்துப் பார்த்து, விதிர்விதிர்த்துப் போனாள். அவளால் அங்கு நிற்கமுடியவில்லை. கைச் சாமானுடன் தடதடவெனக் கீழேயிறங்கி, உக்கிராண உள்ளில் ஓடோடியும் போய் அதன் இருளில் சரண்புகுந் தாள். தன்னின்று தனக்குத்தானே தன் குரல் கேட்ட பயங்கரம், பொறியில் எலிபோல் உடல் பூரா வெடவெட வென உதறிற்று. 


அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் ஊர்ந்துசென்றது, ஏனென்று அவளுக்கே தெரியவில்லை. அவளுக்கு அவள் தாய்வீட்டுக்குப் போக்குவரத்துப் படிப்படியாய் குறைந்து போய் அறுந்தும் போயிற்று. அவளுக்கு அங்கு போகவே பிடிக்கவில்லை. திரும்பத் திரும்பதன்னை “ஐயோ கௌரி! என்னடி இப்படி ஆயிடுத்தேடீ!” என்று உபசாரம் கேட்க வருபவர்களைக் கண்டாலே கரிப்பெடுத்துவிட்டது, யயமெடுத்துவிட்டது. “என்னடி இப்படி பண்ணீட்டை யேடீ ! என்பதைத் திருப்பித்தான் அவர்கள் அப்படி கேட் டார்கள் போல் தோன்றிற்று. 

ஏனென்று புரியாமலே அவளுக்குத் தன் தாய்மேல் திடீரென்று வெறுப்புத் தட்டிற்று. ஏதோ ஒரு முறையில் இதற்கெல்லாம் தன் தாய்தான் காரணம் என்று தோன் றிற்று. தனக்கு அப்படித் தோன்றுவதன் நியாய அநியாயம் தோன்றினாலும் தோன்றாவிட்டாலும் ஏதோ ஒருவிதத்தில்- தனக்கு அது எப்படி என்று புரியாவிட் டாலும் போகட்டும் – தன் அடிப்படையில், தனக்குத் தோன்றியதுதான் சரி என்று பட்டது. தனக்குத் தானே இட்டுக்கொண்ட சிறையின் இரும்பு கிராதிகளின் வழி யாகத் தன் கணவனை வெறித்துக்கொண்டு உள்ளுக்கு உக்கிப்போய்க் கொண்டிருந்தாள். தன் எண்ணத்திலேயே அவனைச் சுட்டுவிட்ட ஏக்கம், இவ்வளவு கிட்ட இருந்தும் அவளுக்கும் அவனுக்குமிடையில் அவள் உணர்ந்த எட்டாத தூரம். அவளும் ஒரு தீயில் குளித்துக்கொண்டு தானிருந்தாள். 


இந்த ஐந்து வருடங்களாய் அவனுள்ளும் ஏதோ நேர்ந்துகொண்டு தானிருந்தது. அவனுடைய உடல் நிலையையும் மனம் படக்கூடிய பாட்டையும் உத்தேசித்து ஆபீஸில் அவனுக்கென்று தனி இடவசதியும் வேலை வசதியும் ஏற்பாடாயின. இஷ்டப்பட்டால், சௌகரியப் பட்டால். அவன் ஆபீஸுக்கு வரலாம். அல்லது வீட்டி லேயே வேலையைச் செய்து ஆள் மூலம் அனுப்பலாம். சில சமயங்கள் வேலை செய்யாமலும் இருக்கலாம். 

ஆனால் அவன் வெறி பிடித்தாற்போல் உழைத்தான். அம்பு பாய்ந்த மிருகம் இடந்தெரியாமல் அங்குமிங்கு மாய் வேகமாய் ஓடுவதுபோல் அவன் வேலையில் முனை கையில் அவனுக்கு குறுக்கே எவரும் ஏதும் சொல்லவும் முடியவில்லை; தடுக்கவும் முடியவில்லை. வேலை வெறியி லேயே தன்னை மறக்க முயன்றான். 

ஆயினும் அம்மாதிரி முடுக்கிக்கொண்ட வேகம் நீடித்து நிற்க முடியாதாகையால் அவன் மறுபடியும் தன்னிடமே மீளும் நேரங்கள், அவனை விழுங்கக் காத்துக்கொண்டே இருந்தன. அம்மாதிரி நேரங்களில் எவரும் அவனிடம் அண்டமுடியாதபடி அவன் இருந்தான்.அநேக வேளைகள் மாடியறைக் கதவு மூடியபடியே யிருக்கும். 

கௌரி அறைக்கு வெளியே கைகளைப் பிசைந்து கொண்டு, பீதியும் கவலையும் அவளில் ஏற்றிய பிரமிக்கத் தக்க அழகில் மிளிர்ந்துகொண்டு நிற்பாள். 

உள்ளே என்ன பண்ணிண்டிருக்கார்? என்னவாவது பண்ணின் டூடுவாரோ? 

கதவின் சந்து வழி தைரியமிருந்தால் எட்டிப் பார்ப் பாள். சாய்வு நாற்காலியிலே சாஞ்சுண்டு மண்டைக்கும் பின்னால் கைகோத்துண்டு என்ன யோசனை பண்ணிண்டிருக்கிறார்? 


அதே கேள்விதான் அறைக்குள் அவனுக்கும் தோன் றிக்கொண்டிருந்தது: திரும்பத் திரும்ப. திரும்பத் திரும்ப. 

“என்ன குருட்டு யோசனை பண்ணிக் கொண்டிருக் கிறேன்? எனக்கு ஏன் இது நேர்ந்தது? எனக்கு-எனக்கு எனக்கா?” 

அவன் அகந்தைகள் என்னென்னவோ அவையனைத் தும் அவன்முன் அலங்கோலமாய்ச் சென்றன. தன்னைப் பற்றி அவன் என்னென்ன எண்ணிக் கொண்டிருந்தானோ எல்லாம் அவனைக் கேலி செய்தன. 

“ஏ, மனிதா ! நீ விழுந்த நிலையென்ன பார்த்தாயா?”

காலடியிலிருந்த செருப்பைத் தூக்கி சுவரின்மேல் ஆத்திரத்துடன் வீசியெறிந்தான். ஆனால் அது அவன் மேல்தான் சுவரிலிருந்து குதித்துத் திரும்பிற்று. 

கண்களில் சிவப்பு நரம்புகள் துடித்தன. இப்போ தெல்லாம் சற்றுநேரம் சேர்ந்தாப்போல் விழித்துக்கொண் டிருந்தாலே விழிகளில் கண்ணீர் நிறைந்தது. 

“எனக்கு ஏன் இது நேர்ந்தது?” 

ஐந்து வருடங்களாய் அலுக்காத, சலிக்காத கேள்வி: 

சில சமயங்கள் சமாதானத்தைத் தானே இட்டுக் கட்டிப் பார்த்துக் கொள்வான். 

சீ ! என்னைவிட எத்தனைபேர் கேவலமாயில்லை ! எத்தனை பேர் கால்போய் கைபோய் நளாயினியின் கணவன்போல் கூடையில் தூக்கிக்கொண்டு போகும் ‘கேஸ்’களாக இல்லை ? அவர்களைவிடவா நான் மோசம்? 

குருட்டு யோசனைகளிடையே அவனுடைய முந்தைய நாட்களின் நினைவு வரும். 

இளம் வயதிலே பெற்றோரை யிழந்து உற்றார் உறவினர் ஆதரவின்றி, நடுத்தெருவில் நின்று. நாலுபேர் வீட்டில் வாரச் சாப்பாடு சாப்பிட்டுத் தருமசம்பளம் பெற்று படாத கஷ்டங்கள் பட்டு, தன் முயற்சியாலேயே படித்து, உத்தியோகமும் தானே தேடிக்கொண்டு, படிப்படியாக உயர்ந்து, தானே முன்னுக்கு வந்து, மனிதர்களோடு மனிதனாகத் தானும் தன்னாலே தலை நிமிர்ந்து ஆகி ஆகி ?……. ஆகி?? …ஆகி?? உச்சாணிக் கிளையிலிருந்து இது மாதிரிச் சறுக்கித் தடாலென்று விழவா? 

இதுதான் தன்னை உறுத்தும் கேள்விக்குப் பதிலா ? கௌரி, ஜன்னலுக்கு அலங்காரமாய்க் கட்டியிருந்த வெண்திரை, வண்ணான் மடிப்பிலிருந்து பிரிந்து வந்த தூய வெண்மையுடன் காற்றில் படபடத்தது. 

அவன் கேள்வி முற்றுக்கூடப் பெறாமல் பந்துபோல் அவனிடம் திரும்பத் திரும்ப வந்தது. அதனின்று அவன் ஓடி ஒளியப் படும் அவதிக்குச் சாவே மேல் என்று தோன் றிற்று. குனிந்த தலையுடன் இறக்கை யொடிந்த பறவை போல் அவன் மௌனமாய் உட்கார்ந்திருப்பதைக் காண் கையில் வயிறு ஒட்டிக்கொண்டது. ஜீவ தாதுவே அவனுள் கருகி விட்டாற் போலிருந்தது. 


கௌரி கட்டிலண்டை வந்து நின்றாள். கவிழ்ந்து கிடக்கும் அவன் உடல் குலுங்குவதைக் கண்டாள். 

பிறகு என்ன நேர்ந்ததென அவளுக்கே தெரியாது. அவளை ஒரு வெள்ளம் அடித்துக்கொண்டு போயிற்று. மெதுவாய் அவனை மல்லாத்தி மூர்க்கமான பரிவுடன், அப்படியே வாரி இறுகத் தழுவிக்கொண்டாள். 

விடியற்காற்று ஜன்னல் வழி உள் புகுந்து அவர்கள் மேல் சில்லென்று மோதிற்று.

– கங்கா (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1962, ஐந்திணைப் பதிப்பகம், சென்னை.

லா.ச.ரா லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *