சொர்க்கத்தின் வாசற்படி!
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 3, 2024
பார்வையிட்டோர்: 2,637
இறந்து போன தொன்னூறு வயதைக்கடந்த ரங்கு என்கிற ரங்கம்மா பாட்டியின் அருகில் கூடி நின்ற உறவுப்பெண்கள் அவரது பெருமையைச்சொல்லி பாட்டுப்பாடி கட்டி அழுதனர். ஒரு படி மேலாக பாட்டியின் முதல் மகனின் மனைவி அமுதா தன் நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறியது காண்போரையும் கண்ணீர் சிந்த வைத்தது.
‘மாமியா செத்துப்போனதுக்கு கூட பெத்த தாய் போன மாதர துக்கத்துல அழுகறாளே…?’ என பக்கத்து வீட்டினரும், உறவினரும் நேரில் அமுதாவைப்பார்த்து ஆச்சர்யப்பட்டனர்.
“என்னடி நெசமாவே அழுகறியா…? இல்லே சொந்த பந்தத்துக்காக அழுகறியா…? நீயே பேத்தி எடுத்துட்டே. அப்ப உனக்கு பேத்தின்னா உன்ற மாமியாக்காரிக்கு கொள்ளுப்பேத்தின்னு வெச்சுக்கோ. முழுசா வாழ்ந்து முடிச்சிட்டு போறவங்களை சந்தோசமா அனுப்பி வைக்கறத உட்டுப்போட்டு சின்ன வயசுல வாழ, வாழ போனவங்களுக்கு துக்கம் தாங்காம அழுகற மாதர அழுகறே…?” சினேகிதி வசந்தி கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல கண்சிமிட்டி கூட்டத்தை விட்டு தனியறைக்கு அழைத்துச்சென்று கதவைத்தாழிட்டாள் அமுதா.
“எப்பப்பாத்தாலும் அதப்பண்ணாதே….இதப்பண்ணாதே… அவ கூடப்பேசாதே…. இவங்கூடப்பேசாதே…. அவ கெட்டவ…. இவ நல்லவ…. இதத்திண்ணா அது வரும்… அதத்திண்ணா இது வரும்…. னு காத்தால எந்திருச்சா தூங்கப்போற வரைக்கும் கல்யாணமான காலத்துல இருந்து நானே பேத்தி எடுக்க வரைக்கும் மாமியா கெழவி கிட்ட சமாளிச்சுப்போட்டேன். ஒன்னி மேலாவது உசுரு போற வரைக்கும் நிம்மதி கெடைக்கப்போகுதுன்னு நெனைச்சதுல தேம்பித்தேம்பி அழுது போட்டேன். அதப்போயி சொந்தக்காரங்க தப்பாப்புரிஞ்சு போட்டாங்க. அத நீயும் அப்புடியே நம்பீட்டே….”முகம் மலர தோழி வசந்தியின் தோளில் தட்டியபடி வறண்ட உதடுகளை சிரமப்பட்டு விரித்துச்சிரித்தாள் அமுதா.
“என்னதா இருந்தாலும் உன்ற புருசனப்பெத்தவங்கள தொல்லைன்னு சொல்லவே கூடாது. அவங்களுக்கு தன்னோட மாமியா சொன்னத உன்னோட மாமியா உனக்கு சொல்லியிருக்காங்க. அனுபவமில்லாத சின்ன வயசுல மனம் போல வாழற நம்மள அனுபவமுள்ள பெரிய வயசுக்காரங்க அவங்க பட்ட அனுபவத்த வெச்சு பாதுகாக்கப்பாத்திருக்கறாங்க. என்ன மத்தவங்கள விட உன்ற மாமியாக்காரி கொஞ்சம் ஓவராப்பண்ணிட்டாங்க. இவ்வளவு நேரம் பிரச்சினை போச்சுன்னு யோசிச்சு போலியா அழுத நீயி, இப்பப்போயி யோசிக்காம மனசால அழு. அப்பத்தா மாமியாரோட ஆத்மா சாந்தி அடையும். சொல்லப்போனா இப்ப நீ அழுதது போலின்னு என்ற கிட்ட நீ சொன்னது கூட அவங்களோட ஆத்மாவுக்கு தெரிஞ்சிருக்கும். ஆத்மா என்ன பாடுபடும்…? நெஜமா அழுதீன்னு வெச்சுக்கோ உன்னை மன்னிச்சு, உனக்கு நல்லது பண்ணும்…” என தோழி வசந்தி பேசியவுடன் உணர்ச்சி வசப்பட்டு மாமியாரின் சடலத்தின் நெஞ்சின் மீது விழுந்து எழுந்து, விழுந்து எழுந்து அழுதபோது சடலம் சற்று அசைந்தது.
“பாட்டிக்கு உசுரு வந்துருச்சு….பாட்டி பொழைச்சுட்டாங்க….” என அருகிலிருந்தவர்கள் சத்தமிட, இதைக்கண்ட அமுதாவுக்கு மயக்கம் வந்து விட்டது.
பாட்டி எழுந்து அமர்ந்து “நீங்க என்னத்துக்கு கூட்டமா அழுகறீங்க….? சொர்க்கத்து வரைக்கும் போயிருந்தேன். ஆனா சொர்க்கத்துக்கு உள்ள போறதுக்கு என்ற ஊட்டுக்காரர் உடவே மாட்டேன்னு வாசப்படியோட திருப்பி அனுப்புச்சுட்டாரு. இங்கெனத்துக்கு வந்தே….? மருமக அமுதாவுக்கு நல்லது கெட்டது, நல்லவங்க, கெட்டவங்களப்பத்தி ஆரு சொல்லிக்கொடுப்பா…? நீ போன்னு முதுகப்புடிச்சு தள்ளி அனுப்புச்சுப்போட்டாரு. நூலேணில போயி, நூலேணிலயே எறங்கி வந்துட்டேன்….” எனக்கூறி தனது பற்களற்ற பொக்கை வாயில் சிரிக்க, மயக்கம் தெளிந்து மாமியார் சொல்வதைக்கேட்ட அமுதாவுக்கு மாமியார் பிழைத்துக்கொண்டதால் ஏற்பட்ட உண்மையான கவலையால் கண்களில் கண்ணீர் கரை புரண்டு ஓடியது.