சியாமளாவின் எதிர்பார்ப்பு




ராஜேந்திரன் தம்பதிகளுக்கு இப்பொழுது ஒரே கவலை தங்கள் பெண் சியாமளா எப்பொழுது திருமணத்துக்கு சம்மதிப்பாள் என்பதுதான். சில நேரங்களில் இந்த பெண்ணுக்கு அதிக செல்லம் கொடுத்து வளர்த்து விட்டோமோ என்கிற கவலையும் வருவதுண்டு. ராஜேந்திரன் தன் மனைவி கமலாவிடம் இதை பற்றி சொல்லி எல்லாம் உன்னால்தான் என்று சத்தம் போடுவார். அதற்கு கமலா இதுக்கு காரணமே நீங்கள் கொடுத்த செல்லம்தான் என்று பதில் கொடுப்பாள்.
சியாமளா இவர்கள் கவலைப்படுவது போல கல்யாணமே செய்து கொள்ளக் கூடாது என்ற எண்ணத்திலெல்லாம் இல்லை. அவளோ இந்த பெண்கள் கூட்டத்தில் நிற்கும் போது பலரை அழகில் கவரக்கூடியவள் என்பதில் சந்தேகமில்லை. வயது இருபத்தி ஐந்து ஆகி விட்டது, ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக வேலை செய்கிறாள். படிப்போ முதுகலை முடித்து அதற்கும் மேலே ஏதோ ஏதோ..
அவளும்தான் என்ன செய்வாள், அம்மா சொந்தம் அப்பா சொந்தம் என்று இரண்டு மூன்று ஜாதகங்கள் வந்திருந்தது, அவர்களின் போட்டோக்களையும் அப்பா அவளிடம் கொடுத்து அபிப்ராயம் கேட்டிருக்கிறார். அவளுக்கு அவர் கொடுத்திருந்த அத்தனை ஜாதகக்காரர்களின் குடும்ப விவரங்களை தெரிந்து வைத்திருந்தாள். அதுவும் அம்மாவே ஓரிரு முறை இவர்கள் இப்படி, உங்கப்பா குடும்பத்துல இப்படி என்று சொல்லியிருக்கிறாள். அவள் சொல்லியிருந்தபடி அங்கு வாழ்க்கைப்பட்டால் தனக்கு அவ்வளவு சுதந்திரம் கிடைக்க வாய்ப்பு இருக்காது என்னும் எண்ணம்தான் அவள் மனதுக்குள் வந்தது.
வாசகர்களுக்கு மெல்ல புரிந்திருக்கும், அவளின் மன நிலை என்னவென்று. அதுதான் அதுவேதான். அவள் நினைப்பதை அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் கேட்க வேண்டும், அவ்வளவுதான். இந்த எண்ணத்தில் இருப்பவளுக்கு சொந்தக்காரர்களின் குடும்பத்துக்குள் போய் குப்பை கொட்ட முடியுமா? அவளுக்கு அரசல் புரசலாய் அந்த குடும்பத்தின் விஷயங்கள் ஓரளவுக்கு தெரியும். ஒரு குடும்பத்தில் தலைவர் கை ஓங்கியிருக்கும், இன்னொரு குடும்பத்தில் தலைவியின் கை ஓங்கியிருக்கும், இல்லையென்றால் பையனின் கை கூட சில விஷயங்களில் ஓங்கியிருக்கும். (பையன் என்று சொன்னது மாப்பிள்ளையாக வரப்போகிற பையன்)
அதாவது இவள் கட்டிக்கொள்ளப்போகும் பையன் கை கூட அந்த குடும்பத்தில் ஓங்கியிருக்க கூடாது. இவள் போனவுடன் அந்த குடும்பம் அவள் கையில் பொறுப்பை கொடுத்து நீ எது சொன்னாலும் எங்களது வேலை தலையாட்டுவதுதான் என்று சொல்லி விடவேண்டும். இதைத்தான் அவள் மனம் எதிர்பார்க்கிறது. என்ன செய்வது? பார்க்கும் குடும்பம் எல்லாம் யாரோ ஒருவர் சொல் பேச்சை கேட்கிறார்கள்.
சரி சொந்தக்காரர்களின் குடும்பம் வேண்டாம், வெளியிலிருந்து மாப்பிள்ளை எடுக்க ஜாதக கட்டை எடுத்தால், எடுத்தவுடன் தரகர் அம்மா அந்த குடும்பத்துல ஐயா தங்கம், அம்மா தங்கம், அவங்க பொறுப்புலதான் அந்த குடும்பம் அமோகமா இருக்கு என்று உளறி விடுகிறார். இது போதுமே சியாமளாவிற்கு, அவர்களே அங்கு பொறுப்பாய் இருக்கும் போது தான் போய் அங்கு என்ன சாதிக்க முடியும்?
இவள் மனம் அறிந்தாவது இந்த தரகர் அம்மா நீ போய்தான் அந்த குடும்பத்தை மேல கொண்டு வரணும், என்று சொல்லியிருந்தால், இவள் சட்டென தலையாட்டி இருப்பாள். அவளை பொறுத்தவரை பையன் சுமாராய் இருந்தாலும் சரி, தான் சொல்வதை கேட்க வேண்டும், அவ்வளவுதான்.
எப்படியோ இவள் எதிர்பார்ப்பிற்கு ஏற்றாற் போல் தரகர் ஒரு ஜாதகம் கொண்டு வந்து கொடுத்து விட்டு எல்லாம் பையன் கல்யாணம் பண்ணி வர்ற பொண்ணு கையிலதான் இருக்கு. இப்படி தெரியாமல் சொல்லிவிட்டார். அவ்வளவுதான் சியாமளா படக்கென்று பச்சைக்கொடி காட்டி விட்டாள்.
ராஜேந்திரனுக்கும், கமலாவுக்கும் மிகுந்த சந்தோஷம், அப்பா ! மகள் ஒரு வழியாய் ஒத்து வந்தாளே. அவளது ஆழ் மன எண்ணங்களை இருவருமே அறிந்திருக்கவில்லை. அதே நேரம் அவர்கள் மனசுக்கு உள்ளூர ஒரு வருத்தமும் வந்து விட்டது. இதை விட மேம்பட்ட ஜாதகங்களும், குடும்பங்களும் வந்து கேட்கும்போது பெண் வேண்டாமென்று மறுத்து விட்டு இந்த ஜாதகத்திற்கு ஒத்துக்கொண்டாளே.
அவர்கள் குடும்பத்தில் இருந்து நல்ல சமிக்ஞையும் வந்தது. மாப்பிள்ளையின் அக்கா வந்து இவள் தலையை சுற்றி திருஷ்டி கழித்து நீ வந்துதான் அவனை முன்னேற்றி விடணும், அன்பாய் சொல்லி விட்டு சென்று விட்டாள். இது போதுமே சியாமளாவிற்கு. நீ ரொம்ப அழகாய் இருக்கிறாய் என்று சொல்லியிருந்தால் கூட அவள் இந்த அளவுக்கு சந்தோஷப்பட்டிருக்க முடியுமா?
கல்யாணத்தை சீரும் சிறப்புமாக நடத்தி அழுது கொண்டே மகளை அனுப்பி வைத்தனர் ராஜேந்திரன் தம்பதியினர்.
ஒரு வாரம் கல்யாண கலாட்டாக்கள் எல்லாம் ஆடி ஓடி பறந்து சென்று விட்டது.
சியாமளா தன் கணவனிடம் கம்பீரமாய் சொன்னாள், என்னைய கொண்டு போய் காலேஜுல விட்டுட்டு நீங்க ஆபிசுக்கு போலாம், ஓ தாராளமாய், மனைவியின் மயக்கம் தீராமல் தலையாட்டினான் மாப்பிள்ளை.
அம்மா உனக்கு என்ன பிடிக்கும்? அன்பாய் கேட்ட மாமியார், இவள் இது இதுவெல்லாம் எனக்கு பிடிக்கும், நீங்கள் சமையல்காரியை கூப்பிடுங்கள், அவளுக்கு நானே சொல்லி விடுகிறேன், கம்பீரமாய் சொன்னாள் சியாமளா.
மாதம் ஒன்று ஓடியிருந்தது. சியாமளாவிற்காக காத்திருந்தது அந்த குடும்பம், ஒரு பொருளை அங்கும் இங்கும் மாற்ற வேண்டுமென்றாலும் கூட சியாமளாதான் முடிவு செய்ய வேண்டும். அவள் கணவனோ சியாமளா சொன்னால்தான் செய்வான். இது அவர்கள் குடும்பம் முழுக்க கடை பிடிக்க பிடிக்க இவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் மனதுக்குள் கோபம் துளிர் விட ஆரம்பித்து விட்டது.
இது என்ன இதுக்கெல்லாமா என்னைய எதிர்பார்க்கிறது? நீங்களே எடுத்து செய்ய கூடாதா? இப்படிப்பட்ட கேள்விகள் இவள் வாயிலிருந்து வர ஆரம்பித்தன.
காலை எழுந்தது முதல் காப்பியா டீயா என்கிற கேள்வியில் ஆரம்பித்து மாலை அலுத்து களைத்து வீடு வரும்போதும் என்ன டிபன் செய்யலாம் என்ற கேள்வியுடன் இவளுக்காக காத்திருந்த வீடு, ஐயோ போதும் போதும் என்கிற எண்ணமே அவள் மனதுக்குள் அலற ஆரம்பித்திருந்தது.
இப்பொழுதெல்லாம் மாமியாரிடமிருந்தோ, கணவனிடமிருந்தோ, எங்கிருந்து கேள்விகள் வந்தாலும், இதுவெல்லாம் என் கிட்டே கேட்கணுமா? உங்களுக்கு தெரியாத விஷயமா? நீங்களே செய்து விடுங்கள் என்று சொல்ல ஆரம்பித்து விட்டாள்.
ஒரு கட்டத்தில் தனி குடித்தனம் போய் விடலாமா, என்னும் எண்ணம் கூட வந்தது. ஆனால் அவள் கணவன் நீ சொன்னா சரி என்று கிளம்பி விட்டால், இவள் பாடு மிகுந்த கஷ்டம் என்பதை இத்தனை நாள் அவனுடன் வாழ்ந்ததில் புரிந்து கொண்டிருந்தாள். எல்லா வேலைகளும், உத்தரவுகளும் அவளுக்காக காத்திருந்து இவள் கல்லுரிக்கு போய் வேலை செய்வாளா, இல்லை இவர்கள் குடும்ப விஷயம் எல்லாவற்றையும் கவனித்து கொண்டிருப்பாளா? இப்பவாவது ஏதோ மாமியாரும், சமையல்காரியும் சொன்னதை செய்வதற்காகவாவது தயாராய் இருக்கிறார்கள். தனியே போனால் இவளே தான் உத்தரவும் போட்டும், செயலையும் செய்ய வேண்டும்.
எப்படியோ சியாமளா வழக்கமான குடும்ப பெண்ணாய் மாறி அவளின் வாழ்க்கையை பற்றி விசாரிப்பவர்களிடன் சமயத்திற்கு தகுந்தாற்போல மற்றவர்களை தூக்கி பேசி காரியத்தை முடித்து கொள்ளும் சாமார்த்தியக்காரியாகி விட்டாள்.
இருந்தாலும் அவள் மனசுக்குள் ஒரு வெற்றிடம் வந்து விட்டது என்பது மட்டும் உண்மை. காரணம் அவள் நினைத்தது நடந்திருக்கிறதா, இல்லையா என்பதே அவள் மனதுக்கு இதுவரை புரியவில்லை.