சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 9, 2024
பார்வையிட்டோர்: 26,808
எனது மனைவியின் காலில் சுளுக்கு ஏற்பட்டிருந்தது.
பாட்மின்டன் விளையாட்டில் பல பரிசுகளைப் பெற்றவர். அவர் பிரபல பெண்கள் கல்லூரியில் படிக்கும் போது, பள்ளியின் பாட்மின்டன் குழுவுக்குத் தலைமை தாங்கியவர். பல மாணவிகளுக்குப் பயிற்சியாளராகவும் அங்கு இருந்திருக்கின்றார்.
கனடாவுக்குப் புலம் பெயர்ந்து வந்த பின் இங்கேயும் அவரது ஆர்வம் குறையவில்லை. பல போட்டிகளில் பங்குபற்றிப் பரிசுகள் பெற்றிருக்கின்றார். இங்கேயும் வலைப்பந்தாட்டக் குழுவுக்கும் பயிற்சியாரளாரக் கடமையாற்றி வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றுக் கொடுத்தவர். புலம் பெயர்ந்த கனடாவிலும் எம்மவர்களில் அனேகமான பெண்கள் பொழுது போக்குவதற்காக தங்களுக்குப் பிடித்தமான துறைகளில் சங்கீதம், நடனம், விளையாட்டு என்று ஈடுபட்டார்கள். அதுபோலத்தான் இவரும் விளையாட்டுத் துறையில் பொழுது போக்காக ஈடுபட்டார்.
ஒரு நாள் பாட்மின்டன் விளையாடும் போது ‘யானைக்கும் ஒரு நாள் அடிசறுக்கும்’ என்பது போல அவருக்குக் காலில் சுளுக்கிவிட்டது. அதற்காகத் தயவு செய்து யானை என்று குறிப்பிட்டதற்காகப் பெரிய உருவம் என்று சொல்கிறேன் என்று நினைத்து எங்களுக்குள் இந்தப் பிரச்சினைப் பெரிதுபடுத்த வேண்டாம். பொதுவாக விளையாட்டு வீராங்கனைகள் போல அவருக்கும் கச்சிதமான உடம்புதான்.
புலம்பெயர்ந்த மக்களின் புதிய தலைமுறையினருக்குச் ‘சுளுக்கு’ என்றால் என்னவென்று புரியுமோ என்று தெரியாது, ஊரிலே என்றால் எண்ணெய் தடவி சுளுக்கு எடுத்து விடுவார்கள். அதுவும் முதலில் கால் வெளியே வந்து பிறந்தவர்கள்தான் சுளுக்கெடுப்பதில் வல்லவர்கள் என்று ஊரிலே அதற்கும் ஒரு கதை சொல்வார்கள். இங்கே அப்படி எல்லாம் செய்ய முடியாது. அதனால் அதற்கான ‘பிசியோதொரப்பி’ வைத்தியரிடம் சென்றோம். காப்புறுதி இருந்ததால், ஒவ்வொரு நாளும் ஒரு வாரத்திற்காவது தொடர்ந்தும் வரவேண்டும் என்றார்கள்.
அங்கேதான் தற்செயலாக நிக்கோலாஸ் என்பவரைச் சந்தித்தேன். வரவேற்பு அறையில் கதிரையில் உட்கார்ந்து அங்கிருந்த ‘றீடேஸ் டையஸ்ட்’ புத்தகத்தை எடுத்து வாசித்துக் கொண்டிருந்தபோது அருகில் அவர் வந்தமர்ந்தார். கையிலே ஒரு சொக்லட் வைத்திருந்தார். தானும் தனது மனைவியைக் சிகிட்சைக்காகக் கூட்டி வந்ததாகவும், மாடிப்படியில் சறுக்கிவிட்டதாகவும் சொன்னார். மனைவிக்குச் சாக்லட் பிடிக்கும் என்பதால் வெளியே போய் வாங்கி வந்ததாகச் சொன்னார். நானும் எனது மனைவியைச் சிகிட்சைக்காக அழைத்து வந்ததாகச் சொன்னேன்.
அவருடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது, ‘தனக்கு என்ன வயது இருக்கும் என்று சொல்லுங்க பார்க்கலாம்’ என்றார்
‘என்ன, ஒரு 73 – 74 க்குக் கிட்ட இருக்கும் என நினைக்கிறேன்’ என்றேன்.
அவர் சிரித்துவிட்டுச் சொன்னார் ‘இல்லை எனக்கு 84 ஆச்சு’ என்று. அவரை இளமையாகப் பத்து வயது குறைத்து நான் காட்டியதில் அவருக்குள் மகிழ்ச்சி இருந்தது. அவரது மனைவி கலிஸ்ராவுக்கு 78 வயது ஆகிறது என்றார்.
மறுநாளும் நிக்கோலாஸ் மனைவியைக் கூட்டி வந்திருந்தார். உரையாடிக் கொண்டிருக்கும் போது ‘மன்னிக்கணும்’ என்று சொல்லிவிட்டு எழுந்து வெளியே சென்றார். சற்று நேரத்தால் வந்து ‘சாக்லட் வாங்கப் போனேன்’ என்று சொல்லி எனக்கும் ஒன்றைக் கொடுத்தார்.
அந்னியர்கள் யாராவது உணவுப் பொருட்களைக் கொடுத்தால் அதை வாங்கிச் சாப்பிடக்கூடாது என்று மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வகையில் நானே அறிவுறுத்தி இருக்கின்றேன். எனவே அதை நான் சாப்பிடாமல் வைத்திருந்தேன்.
சக்கர நாற்காலியில் இருந்த அவரது மனைவி கலிஸ்ரா சிகிட்சை முடிந்து அறையைவிட்டு வெளியே வந்த போது, அவரை அறிமுகம் செய்து வைத்தார்.
பதிலுக்கு அவர் ‘வயது போனால் இப்படித்தான், கண், காது, மூக்கு, பல்லு என்று எல்லாம் எங்களுக்கு இருக்கிறது என்பதை அவை அடிக்கடி தரும் வேதனை மூலம் நினைவூட்டிக் கொண்டிருக்கும்’ என்றார் வேடிக்கையாக.
‘உண்மைதான் 78 வருடங்களாக எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் இவை எல்லாம் உங்களுக்குச் சேவை செய்திருக்கின்றனவே, அதை மறக்கலாமா?’ என்றேன்.
‘நீங்கள் வேடிக்கையாகச் சொன்னாலும் அதில் ஒரு உண்மையிருக்கிறது’ என்றவர் தொடர்ந்து ‘இளமையில் அழகிற்கு மெருக்கூட்டுவதற்குத்தான் இந்த உறுப்புக்களைப் பயன்படுத்தி இருப்போமே தவிர, அவற்றின் பயன்பாட்டைப்பற்றி நாங்கள் யாரும் நினைத்தும் பார்த்ததில்லை.’ என்றார்.
அங்கே நடந்த ஒருவாரச் சந்திப்பில் நானும் நிக்கோலாசும் நல்ல கூட்டாளிகளாகி இருந்தோம்.
ஒரு நாள் அவர் ‘நீங்கள் காதல் திருமணமா?’ என்று என்னிடம் கேட்டார்.
‘ஆமா என்ற நான், நீங்கள்…?’ என்று கேட்டேன்.
அது ஒரு பெரிய கதை என்று சொல்லத் தொடங்கினார்.
‘நாங்க கிரேக்கநாட்டைச் சேர்ந்தவங்க, கிறீக் மொழிதான் எங்க தாய் மொழி. பெற்றோர்கள் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எனக்குப் பள்ளிப்படிப்பில் அதிக நாட்டம் இருக்கவில்லை. அதனாலே உயர்வகுப்பில் மேற்கொண்டு படிக்காமல் குழப்பிவிட்டேன். பிக்கப், டிராக்டர், பெரிய வண்டிகள் என்று எல்லாமே ஓட்டக் கற்றுக் கொண்டிருந்தேன். வேலை ஏதாவது செய்து சம்பாதிக்கலாம் என்று வேலை தேடிய போது எனது படிப்புக்கு ஏற்றமாதிரி பெரியதொரு விவசாயப் பண்ணையில் வண்டி ஓட்டும் வேலை கிடைத்தது. அங்கேதான் முதன் முதலாக கலிஸ்ராவைச் சந்தித்தேன்.’ என்றார்.
‘அப்படியா, முதல் சந்திப்பு எப்படி இருந்தது?’ என்றேன்.
‘முதல் சந்திப்பா, அதையேன் கேட்கிறீங்க, திமிர் பிடித்தவள் என்றுதான் முதலில் நினைத்தேன். காரணம் என்னைப் போலவே அவளும் வண்டி ஓட்டும் வேலைதான் அங்கே செய்தாள். ஆனால் அவள் மட்டும் விரும்பிய நேரம் வருவாள், விரும்பிய நேரம் போவாள். எனக்கு மட்டும் கட்டுப்பாடு விதிக்கும், என்னோடு மட்டும் கராராக இருக்கும் முதலாளி அவளுக்கு மட்டும் கட்டுப்பாடு இல்லாமல் பல்லை இளித்துக் கொண்டிருப்பார். அது எனக்கு எரிச்சலைத் தந்தது.’ என்றார்.
நான் அவர் சொன்னதைக் கேட்டுச் சிரித்தேன். ‘அனேகமான காதல், இப்படித்தான் ஊடலில் ஆரம்பித்து மெல்ல மெல்ல அரும்பு விட்டிருக்கும், அதுதான் இங்கேயும் நடந்திருக்கும்’ என்று ஊகித்தேன்.
‘நீங்க சிரிக்கிறீங்க, ஒருநாள் பொறுக்க முடியாமல் முதலாளியிடம் கேட்டேன், அதற்கு ‘உன்னைப் போலவா அவள், அவள் உன்னைவிட உயர் வகுப்பில் படிக்கிறாள், ஓய்வு நேரத்தில் மட்டும்தான் வருவதாகச் சொன்னாள், படிக்கிற பிள்ளைகளைக் குழப்பக்கூடாது, அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அதுதான்!’ என்றார்.
நான் படிக்கவில்லை என்பதைச் சொல்லிக் காட்டியது எனக்கு என்னவோ போல இருந்தது. நாங்கள் ஒவ்வொரு நாளும் காலையில் முதலாளி வீட்டிற்குப் போய்த்தான் எங்கள் வண்டிகளை எடுக்க வேண்டும், வேலை முடிந்ததும் மறுபடியும் அங்கே கொண்டுபோய் முற்றத்தில் விடவேண்டும். ஒரு நாள் காலை அங்கே வண்டியைத் துடைத்துக் கொண்டிருந்த போது முன்கதவு திறந்து மூடும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன்.
தலைவிரி கோலமாக, கதவைத் திறந்து வந்த ஒருத்தி அவசரமாக விரல்களால் முடியைக் கோதி, ரப்பர்பான்ட் போட்டவள், அங்குமிங்கும் பார்த்தாள். அப்புறம் ஆடைகளைச் சரி செய்து கொண்டு முற்றத்தில் நின்ற ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு வேகமாகக் கிளம்பிச் செல்வதை அவதானித்தேன்.
முதலாளியின் மனைவி சில வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டாள் என்பதையும் நான் அறிந்திருந்தேன். யாராக இருக்கும் என்று உற்றுப் பார்த்தால் அவள்தான். அவள் என்னைக் கவனிக்கவில்லை, அதிகாலையில் முதலாளி வீட்டில் இருந்து அவசரமாகக் கிளம்பிச் செல்லும் அவளுக்கு அங்கே என்ன வேலை? எனக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது.
அன்று நான் பார்த்த காட்சி பண்ணை முதலாளி அவளுக்காக ஏன் பரிந்து பேசுகின்றார் என்பதற்கு அர்த்தம் என்னவென்று புரிந்தது போலவும் இருந்தது. அவர்கள் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று நான் ஒதுங்கிப் போயிருக்கலாம், ஆனால் ஏன் என்னால் ஒதுங்கிப் போக முடியாமல் இருந்தது என்பதற்கு என்னிடமும் ஒரு காரணம் இருந்தது. அது என்னவென்றால் என்னை அறியாமலே அவளிடம் எனக்கு ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டிருந்ததுதான்.
ஒருநாள் அவள் வரவில்லை, நான்தான் அவளது வேலையையும் செய்ய வேண்டியிருந்ததால், உடம்பு களைத்துப் போயிருந்தது. அன்று முதலாளி வீட்டில் அவளைக் கண்டதில் இருந்து மனசும் உடைஞ்சு போயிருந்தது. என்னுடைய வேலையில் முதலாளி குற்றம் கண்டுபிடித்துத் திட்டியபோது, என்னால் தாங்கமுடியாமல் இருந்தது.
கோபம் தலைக்கேறவே ‘அந்த மகாராணி வேலைக்கு வரமாட்டா, அவளுடைய வேலையையும் நான்தான் சேர்த்துச் செய்ய வேணும், அதில் வேறு பிழை பிடிக்கிறியா, உன்னுடைய …..?’
அருகே நின்ற சகதொழிலாளி சட்டென்று எனது கைகளைப்பற்றி மேற்கொண்டு எதுவும் திட்டாமல் என்னை நிறுத்தி விட்டான்.
உண்மையிலே ‘உன்னுடைய வைப்பாட்டியிடம் போய்ச் சொல்லு’ என்றுதான் ஆத்திரத்தில் சத்தம் போட்டுக் கத்தவிருந்தேன். ஆத்திரத்தில் நான் அப்படிச் சொல்லாமல் விட்டது எவ்வளவு நல்லதாகப் போய்விட்டது என்பதை அப்புறம்தான் புரிந்து கொண்டேன்.
‘என்னாச்சு உனக்கு, ஏன்டா இப்படி இருக்கிறாய்?’ என்று திட்டினான் நண்பன்.
‘இவர் தினமும் திட்ட எவ்வளவுதான் பொறுமையாய் இருக்கிறது, யார்ரா அவள்?’
‘அவளா? அவள்தான்டா இந்தத் தோட்டத்திற்கே முதலாளி, அவளைப்போய்த் திட்டலாமா?’ என்றான் நண்பன்.
‘என்னடா சொல்லுறாய்?’
‘ஆமாடா, அவளை யாரென்று நினைச்சாய், பண்ணை வீட்டுக்காரி, முதலாளியின் ஒரே மகள், அவள்தான் அவருடைய வாரிசு!’
‘முதலாளியோட மகளா? அவள் அப்படி ஒருநாளும் காட்டிக் கொள்ளவில்லையே.’
‘அதுதாண்டா அவள், ரொம்ப சகஜமாய் எல்லோரோடும் பழகுவாள், தான் பணக்காரி என்ற கர்வமே அவளிடம் இல்லை, ரொம்ப நல்லவள்’
நான் அவளைப்பற்றித் தப்புக் கணக்குப் போட்டிருந்ததை, ‘கண்ணால் காண்பதும் பொய்’ என்பதை உணர்ந்தேன். அதன்பின் அவ்வப்போது அவள் சிரித்தால் நானும் சிரிப்பேன்.
அவளுடைய பிறந்த தினத்தைப் பண்ணையிலேதான் கேக் வெட்டிக் கொண்டாடினாள். அப்புறம் எல்லோரும் தண்ணியடிச்சு, ஆடிப்பாடிக் கொண்டிருந்தார்கள்.
நான் ஒரு மேசையில் உட்கார்ந்து வைன் அருந்திக் கொண்டிருந்தேன். எனக்கருகே வந்தவள் சட்டென்று ‘வாயைத்திறவுங்க’ என்றவள், கையிலே மறைத்து வைத்திருந்த கேக்துண்டை எனக்கு ஊட்டிவிட்டாள்.
அப்புறம் நடனமாடும் போது என்னுடன் சிறிது நேரம் நடனமாடினாள். மதுபோதையில் நான் அவளைத் தப்புத்தப்பாய்த் தொட்டிருக்கலாம், ஆனால் அவள் எதுவும் சொல்லவில்லை. சிரித்துக் கொண்டே ‘குட்நைட்’ சொல்லி விடைபெற்றாள்.
அன்றிரவு எனக்குத் தூக்கமே வரவில்லை. நடனமாடும் போது அவளை இறுகக் கட்டி அணைத்ததாகவும், கன்னத்தில் முத்தம் கொடுத்ததாகவும் வெறி முறிந்தபோது ஞாபகம் வந்தது. என்னால் அவளைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. எல்லாமே சட்டென்று மாறிவிட்டது போல இருந்தது. அதன்பின் வேலைநாட்களில் நாங்கள் ஓய்வெடுக்கும் போது அங்கே வந்து எல்லோரோடும் கலகலப்பாகப் பேசுவதையும், என்னையே அடிக்கடி வம்புக்கிழுப்பதையும் என்னால் உணரமுடிந்தது.
ஒருநாள் வேலைக்குப் போகும் போது சோளக்காட்டுக்குள் மறைந்திருந்து வெளியே வந்தவள் என்னை இடைமறித்தாள். பள்ளிச் சீருடையில் இருந்த அவள் என் கையைப்பிடித்து உள்ளே இழுத்துச் சென்று, ‘ஐ லவ்யு’ என்று சொல்லிக் கன்னத்தில் முத்தமிட்டாள். நான் என்ன சொல்வது என்று தெரியாமல் உறைந்து போயிருந்தேன்.
அவள் எங்கே, நானெங்கே? காதலா..?
அதன் பின் நாங்கள் அடிக்கடி சந்தித்து கொள்வோம். அவளுக்குச் சாக்லட் பிடிக்கும் என்பதால், சந்திக்கும்போதெல்லாம் நானும் சாக்லட் வாங்கிச் செல்வேன். முதலாளிக்கு இது தெரியவந்ததால், அவளைக் கட்டுப்படுத்தத் தொடங்கினார். ஜாடைமாடையாக அவள் தனது விருப்பத்தைத் தகப்பனிடம் சொல்லிப் பார்த்தாள், அவர் சம்மதிக்கவே இல்லை. அவள் பண்ணைப் பக்கம் வருவதைத் தடுத்து, நாங்கள் சந்திப்பதை நிறுத்தப் பார்த்தார்.
‘ஓடிப்போவோமா?’ என்று அவளே ஒருநாள் கேட்டாள். நான் அதிர்ச்சியில் திகைத்துப்போய் நின்றேன்.
நான் எவ்வளவு சொல்லியும் அவள் கேட்கவில்லை.
இருவருக்கும் பாஸ்போட்டை அவளே ஏற்பாடு செய்துஇ சுற்றுலாப் பயணிகள் போல இத்தாலிக்குச் சென்று அங்கிருந்து கனடாவுக்கு வந்தோம்.
இங்கே வந்ததும் ‘பிக்கப் வண்டி’ ஒன்றை வாங்கி, சிறுதோட்டம் செய்பவர்களுக்குத் தேவையான பொருட்களைக் குறிப்பாகப் இயற்கைப்பசளை போன்றவற்றை விநியோகம் செய்தோம். முடிந்தவரை, இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தோம். அதில் நல்ல வருமானம் கிடைத்ததால், அதையே நாங்கள் இப்போது ஒரு நிறுவனமாக்கி இருக்கிறோம். இதுவரை மகிழ்ச்சியாக வாழ்ந்தோம், வயசு போனதால இப்போ வாழ்க்கை அப்படி இப்படி என்று ஓடிக்கொண்டிருக்கிறது’ என்று அவர் தனது கதையைச் சொல்லி முடித்தார்.
அதன் பின் அவரைப் பல தடவைகள் சந்தித்தேன். எங்களுக்கும், எங்கள் அயலவர்களின் பூந்தோட்டங்களுக்கும், பின்வளவில் உள்ள காய்கறித் தோட்டங்களுக்கும் அவரது நிறுவனமே பராமரிப்பு வேலைகளைச் செய்வதற்கு முடிந்தளவு உதவிகளைச் செய்தேன். ஒருநாள் அவரது மனைவி கான்சர் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், மனைவியின் வாழ்க்கை குறுகிவிட்டது என்பதையும் கவலையோடு தெரிவித்தார். அவர் குறிப்பிட்டது போலவே இரண்டு மாதங்களில் மனைவி இறந்துவிட்டாள். மயானத்தில் நடந்த அவரது மனைவியின் இறுதிச் சடங்கிலும் கலந்து கொண்டேன்.
பெட்டியை மூடுமுன் கடைசி மரியாதைக்காக கணவனை அருகே விட்டார்கள். அவர் மனைவியை முத்தமிட்ட பின் தனது கோட் பைக்கட்டில் நிதானமாகக் கையைவிட்டு எதையோ எடுத்தார். என்னவாய் இருக்கும் என்று ஆவலோடு எட்டிப் பார்த்தேன். சாக்லட்!, அதன் கவரை உரித்து சாக்லட்டை எடுத்து குலுங்கி அழுதபடியே மனைவியின் வாயில் வைத்தார். நாங்கள் கடைசியாக வாய்கரிசி போடுவது போல அவர் அதைச் செய்தார். இதுவரை காலமும் அவரிடம் இருந்து ஆசையோடு சாக்லட் வாங்கிச் சாப்பிட்ட கலிஸ்ராவால் அன்று அவர் கொடுத்த அந்த சாக்லட்டைச் சாப்பிட முடியாமல் போய்விட்டது.
அவர் அதற்காக வருத்தப்படவில்லை, ஏனென்றால் உயிரோடு அவள் அருகே இருந்தபோதே அவர் தனது அன்பைக், காதலை மனப்பூர்வமாகப் பலவிதமான முறையில் அவளிடம் வெளிக்காட்டியிருந்தார். மேலை நாடுகளில் புரிந்துணர்வோடு ஒருவருக்கொருவர் துணையாகக் கடைசிவரை வாழ்வதென்பது ஆச்சரியமானதுதான், அப்படியான புரிந்துணர்வுள்ள ஒரு வாழ்க்கையைத்தான் அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள்.
தாயகயுத்தத்தில் நெருங்கிய உறவுகளை இழந்த நாங்களும், பிரிவுத் துயரின் வலி எவ்வளவு கொடுமையானது என்பதை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறோம். ‘மிகுதிக் காலத்தையும் கலிஸ்ராவின் நினைவாகவே வைராக்கியத்தோடு வாழ்ந்து முடிப்பேன்’ என்ற மனநிலையில் உள்ள அவருக்கு, என்னால் முடிந்தளவு ‘பிறப்பு என்று ஒன்றிருந்தால், இறப்பு என்றும் ஒன்றிருக்கும், உலகே மாயம், இதுதான் இந்த உலகம்’ என்று ஆறுதல் மட்டும்தான் சொல்லமுடிந்தது.