சொல்ல முடியாத கதை…!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 9, 2024
பார்வையிட்டோர்: 2,726 
 
 

(2003ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-13

அத்தியாயம்-10

ஊரே கூடி இருந்தது. பிணம் குளக்கரையோரம் குப்புற கிடந்தது. ஆனால் ராணி இல்லை.

‘‘யாருங்க அது ?‘‘ – சிவபுண்ணியம் பக்கத்தில் நின்றவரை விசாரித்தான்.

‘‘தெரியலை !‘‘- அவர் உதட்டைப் பிதுக்கினார்.

‘‘புரட்டிப் பார்த்துட வேண்டியதுதானே !‘‘

‘‘போலீஸ{க்குச் சொல்லி இருக்கு.‘‘

போலீஸ் ஜுப் தூரத்தில்தெரிந்தது.

வந்து நின்றதுமே திடுதிப்பென்று இரண்டு கான்டபுள்கள் இறங்கி ‘‘நகருங் நகருங்க ‘‘- என்று கூட்டத்தை விலக்கி இன்ஸ்பெக்டர் காத்தவராயனுக்கு வழி விட்டார்கள்.

பிணம் உப்பிப் போய் இருந்தது.

புரட்ட…..‘‘.ஹா !‘‘ எல்லோரும் பயத்தில் முகத்தைத் திருப்பினார்கள், மூடினார்கள்.

கூட்டத்தில் ஒருத்தி மட்டும், ‘‘ஐயோ ! என் மவளே !’’ என்று அலறினாள்.

‘‘யாரும்மா இது ?‘‘ இன்ஸ்பெக்டர் காத்தவராயன் பார்வையை அவள் பக்கம் திருப்பினார்.

‘‘என் மவங்க. யாரோ இப்படி பண்ணிட்டாங்களே ! நான் என்ன பண்ணுவேன். ‘‘ மார்பிலும் முகத்திலும் அறைந்து கதறி உருண்டு புரண்டாள்.

காத்தவராயன் அவளைத் தூக்கி நிறுத்தினார்.

‘‘இந்தா! அலட்டாம இவ யார் என்னங்குற விபரத்தைச் சொல்லிடு ‘‘- அதட்டினார்.

‘‘நான் செல்லம்மாங்க. இது என் பொண்ணு. 17 வயசு. முந்தா நேத்து பசங்ககிட்ட பேசாதேடின்னு அடிச்சேன். எங்கேயோ கிளம்பினா. கோபத்துல போறாள் திரும்பிடுவாள்ன்னு விட்டேன். பாவி மக இப்புடி விழுந்து உசுரை மாய்ச்சுக்குவாள்ன்னு தெரியலையே யம்மா யம்மா !‘‘- அழுதாள்.

‘‘நீ தேடலையா ?‘‘

‘‘எங்களுக்குள் சண்டைன்னா இப்படி எங்கேயாவது போய் அசலூர்ல ரெண்டு நாள் தங்கி வருவா. இப்பவும் அப்படித்தான் போயிருப்பாள்ன்னு நெனைச்சேன். பாவிப் பொண்ணு இப்படி செத்துக்கெடக்காளே. ஐயோ..! நான் என்ன பண்ணுவேன்.‘‘

தலையில் அடித்துக்கொண்டு மறுபடியும் உருண்டாள். ‘‘சரிப்பா பாடியைத் தூக்கி கரையில போடுங்க. ‘‘-சப்- இன்ஸ்பெக்டர் நான்கு ஆட்களை உசுப்பினார்.

அவர்கள் குளத்தில் இறங்கி…போலீஸ் அதிகாரி சொன்னபடி செய்தார்கள்.

பிணத்தின் நெஞ்சில் கத்திக் குத்து விழுந்திருந்தது.!

கொலை !!

காத்தவராயனுக்கு மண்டை காய்ந்தது.

‘‘எவன்டா பண்ணி இருப்பான் ?‘‘- காவல் நிலையத்திற்குள் அவர் எதிரிலுள்ள கான்ஸ்டபுள்களிடம் எகிறி விழுந்தார்.

பாவம். அவர்கள் விழித்தார்கள்.

‘நம்ம ஏரியாவுல நமக்குத் தெரியாம ஒரு கொலையா ?!‘ அவருக்குள் அவமானம்,

‘அந்தப் பொண்ணு தப்புத் தண்டாவா ?‘ ஊரெல்லாம் விசாரித்தார்.

‘இல்லே சார்.‘ – எல்லாரும் ஒட்டுமொத்தமாக சொன்னார்கள்.

பின் எப்படி கொலை ? – மண்டையைப் பிய்த்தார். முடிதான் கொட்டியது.

மறுபடியும் செல்லம்மாவிடம் சென்றார்.

‘‘உன் மவ கோவிச்சிக்கிட்டு எந்த ஊருக்குப் போவா ?‘‘ – விசாரித்தார்.

‘‘பக்கத்து ஊரு பக்கனப்பட்டி ஐயா !‘‘- அவளுக்கு இன்னும் மகள் சென்ற துக்கம் விடவில்லை. அழுதாள். ‘‘அங்கே எங்கே ?‘‘

‘‘சின்னம்மா வூட்டுக்குப் போவா. அம்பது மைல்.‘‘

அங்கே சென்றார்.

‘‘அந்த பொண்ணு வர்லியே ! ஏன் சார் தேடறீங்க?!‘‘ – விதவை. அவளுக்கு விசயம் தெரியாமல் விழித்தாள்.

‘‘செத்துட்டா.‘‘

‘‘ஐயோ என் சொக்கத்தங்கம் போயிட்டாளா ?‘‘ அவளும் கதறினாள்.

‘‘ஏம்மா உனக்கு சேதி தெரியாதா?‘‘

‘‘தெரியலிங்களே!‘‘

புல்லட்டில் ஏறினார்.

‘‘சார்! ‘‘பின்னால் உட்கார்ந்திருந்த ஏட்டு அவர் காதைக் கடித்தார்.

‘‘என்ன?‘‘

‘‘அந்த பத்திரிக்கைக்காரனுங்களும் பேங்க்காரனுங்களும் கண்டுபுடிக்கிறதுக்குள்ளே நாம கண்டுபுடிச்சுடனும்‘‘ – மெல்ல சொன்னான்

‘‘ஏன்?!‘‘

‘‘அவனுங்க இந்த கொலையை வேற வழியில பார்க்கிறானுங்க.‘‘

‘‘எப்படி?‘‘

‘‘அந்த பைத்தியம் காணாம போனதையும் இந்த கொலையையும் முடிச்சுப் போடுறானுங்க.‘‘

‘‘என்னப்பா இது. மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிப் போடுறாப் போல இருக்கு ?‘‘- காத்தவராயன் திடுக்கிட்டார்.

‘‘பத்திரிக்கைக்காரனுங்க புத்தியே தனி சார். நமக்கு முந்தி அவனுங்க கண்டு பிடிச்சிட்டா நமக்குப் பேர் கெடைக்காது. நாறும் !‘‘- சொன்னான்.

‘நீங்க என்ன புடுங்குனீங்கன்னு டி.எஸ். பி மட்டமாய்க் காய்வார்.!‘ நினைக்க சொரக்கென்றது. தலை சுழன்றது. இந்த பத்திரிக்கைக்காரர்கள் ஏன் வந்து திடீரென்று முளைத்தார்கள்….?-அவர்கள்மேல் வெறுப்பு வந்தது. நம்மகிட்ட விளக்கம் கேட்டுத்தான் அவனுங்க எழுதனும்.

அவனுங்க எழுதினதை வைச்சு நாம கேசை முடிச்சா எவ்வளவு அவமானம் நினைக்க கடுப்பாக இருந்தது. பத்திரிக்கைகாரர்கள் துணிச்சலில் சிவபுண்ணியம் அலுவலகத்திற்கு விடுப்புப் போட்டுவிட்டு இதில் முழுமூச்சாக இறங்கினான்.

‘‘உங்களுக்கு ஏங்க இந்த வெட்டி வேலை ?‘‘ சௌம்மியா சொன்னதையும் அவன் காதில் வாங்கவில்லை. ‘இவ எப்புடி காணாம போனா. அவ எப்புடி செத்தா ?‘ கை வேலை செய்தாலும் மாஸ்டருக்கும் இதே மனக் குமைச்சல். எவனாவது உளறி துப்பு கொடுப்பான். இல்லை… எவன் பேச்சிலாவது உபயோகமிருக்கும் உற்றுக் கேட்டுக்கொண்டே வேலையைக் கவனித்தார்.

நல்லசிவம் கடையை நோக்கி வந்தார்.

அவர் இவர் பரம கூட்டாளி.

‘டீ ’ போடச்சொல்லி பெஞ்சில் அமர்ந்தவர் ‘‘ஏன்டா ! அன்னைக்குப் பன்னண்டு மணிக்கு மேல இங்கே கார் வந்து நின்னுதே என்ன சேதி ?‘‘- கேட்டார்.

‘‘என்னைக்கு ?‘‘ – டீயை ஆற்றி அவர் கையில் கொடுத்தார்.

‘‘போன வாரம். அந்த பொண்ணு செத்துப்போன ரெண்டுமூணு நாளைக்கு முன்னாடி ‘‘.

‘‘கார் எங்கே நின்னுது ?‘‘

‘‘உன் கடை வாசல்லதான். ‘‘

‘‘இந்த கடை வாசல்லேயா ?!‘‘

‘‘ஆமா.‘‘

‘‘பன்னண்டு மணிக்கா ?!‘‘

‘‘அந்த நேரத்துல உங்களுக்கு என்ன வேலை ?‘‘

‘‘பன்னண்டு மணி பஸ்ல ஊருக்குப் போனேன். பஸ் இந்த வழியா போகும்போது கார் ஒன்னு இருட்டோட இருட்டா கறுப்பா கெடந்துது, பஸ் டிரைவர்கூட லைட்டைப் போடாம இப்படி நிறுத்தி வைச்சிருக்கானுங்க பாருங்க விபத்து ஏற்படன்னு திட்டிக்கிட்டே வண்டி ஓட்டினார்.‘‘

‘‘கார் கிடந்ததே எனக்குத் தெரியாதே ?!‘‘

‘‘நீ அசந்து தூங்கி இருப்பே. எந்த பொறம்போக்காவாது ஓரத்துல நின்னு ஒன்னுக்கு அடிச்சிருப்பான். ‘‘

‘‘காரை உங்க கண்ணால பார்த்தீங்களா ?‘‘

‘‘நல்லா பார்த்தேன்.‘‘

‘‘நம்பரைக் கவனிச்சீங்களா ?‘‘

‘‘இருட்டுல அதெல்லாம் தெரியலை. ஏன் ?‘‘

‘‘மறுநாள் காலையில ஒதியன் மரத்தடியில இருந்த பைத்தியத்தைக் காணோம்.‘‘

‘‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ?‘‘

‘‘இருக்கனும்.!!‘‘ – அழுத்தமாக சொல்லி டீயை ஆற்றி அவர் முன் வைத்தார்.

அத்தியாயம்-11

‘கறுப்பா சிவப்பா ? கார் அந்த நேரத்துல ஏன் வந்துது எதுக்கு வந்துது ? ராணியைத்தான் கடத்திப் போனாங்கன்னா எப்புடி கடத்திப் போனாங்க. ராணியை இங்கே கடத்திப் போக அங்கே செத்துக்கிடந்த செல்லம்மா மகளுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ? கார் புதுசா பழசா ? மாருதியா அம்பாசிட்டரா வேற எதுவா ? ‘- சிவபுண்ணியம் டீ மாஸ்டர் பத்திரிக்கைக்காரர்களான விஜயன் வ Pரனுக்கெல்லாம் இதுதான் பேச்சாக இருந்தது.

‘ராணியைக் கடத்திப் போய் என்ன செய்ஞ்சாங்க? கொலை செய்ஞ்சாங்களா பிரசவம் பார்க்க எங்கேயாவது விட்டுப் போயிருக்காங்களா. எங்கே எந்த இடம் ?‘ – குழம்பினார்கள்.

‘‘எங்க பத்திரிக்கைக்கு எல்லா ஊர்லேயும் நிருபர்களிருக்காங்க. மடம், மருத்துவமனை, அனாதை ஆசிரமம்ன்னு எல்லா இடத்திலேயும் தேடிப் பார்க்கச் சொல்லலாமா….?‘‘ – விஜயன் தன் கருத்தைத் தெரிவித்தான்.

‘‘அது சாத்தியமா ? ‘‘-சிவபுண்ணியம் யோசனையுடன் மற்றவர்களைப் பார்த்தான்.

‘‘சாத்தியம்தான் . சிரமம்.‘‘

‘‘அட! விட்டுத் தொலைச்சிடலாம்ப்பா.‘‘- வீரனுக்கு வெறுப்பு வந்தது.

‘‘விட்டுடலாம். ஆனா ஒரு தப்பை மறைக்க ரெண்டு உசுரை மறைக்கிறாங்க.. அந்த உயிர்கள் என்ன ஆச்சு ஏது ஆச்சு நல்ல விதமா இருக்கா இல்லியா அப்புடின்னு தெரிஞ்சிக்க வேணாமா ?ஒருத்தி செத்தும் இருக்கா. எப்படி விடுறது ?‘‘- மாஸ்டர் விடுவதாய் இல்லை. கண்ணெதிரிலேயே ஒரு பொருள் காணாமல்போன வருத்தம் அவருக்கு.

‘‘ஆமா இதுவும் நியாயமான கேள்விதான்.‘‘ சிவபுண்ணியம் ஒத்துப்பாடினான்.

அப்படியே டீக்கடைக்கு வந்த தினத்தந்தி பேப்பரைப் பிரித்தான். கொட்டை எழுத்து செய்திகளை வாசித்தான். ‘கார்களைத் திருடி விற்கும் பிரபல கொள்ளையன் கைது !‘ கவனத்தைக் கவர்ந்தது. உரக்க வாசித்தான்.

‘‘எங்கே இன்னொருதரம் படி?‘‘ – டீ மாஸ்டர் அவனிடம் காது கொடுத்தார்.

படித்தான்.

‘‘அந்த சேதிதான் நீங்களும் படிக்கிறீங்களா?‘‘ – கேட்டு எதிர்பள்ளிக்கூட வாட்ச்மேன் வந்தான்.

எல்லோரும் அவனை உற்றுப் பார்த்தார்கள்.

‘‘நம்ம பள்ளிக்கூடத்துல ஒரு சின்ன திருட்டு சார். போலீஸ்ல என்னை விசாரிக்க வரச்சொல்லி இருந்தாங்க. நான் போனபோது ஒயர்லெஸ்ல இன்னைக்கு பத்திரிக்கையில சேதி வந்திருக்கே அந்த காணாம போன கார் உங்க பக்கம்தான் வந்திருக்கு விசாரிச்சி விபரம் சொல்லுங்கன்னு சேதி வந்துது. இது என்னடா கருமாந்திரம்ன்னு இன்ஸ்பெக்டர் அலுத்துக்கிட்டார்.‘‘ -சொன்னான்.

‘‘இங்கேதான் முடிச்சி இருக்கு !‘‘- சிவபுண்ணியம் அழுத்தமாக சொன்னான்.

‘‘இது ஏன் இங்கே வந்துது. எதுக்காக வந்துதுன்னெல்லாம் போலீஸ் ரெண்டு நாள்ல விசாரிச்சுடுவாங்க. நாம ரெண்டுநாள் பொறுமையா இருந்தா அவங்களையே கேட்டுத் தெரிஞ்சிக்கலாம்.‘‘ – என்றான் வ Pரன்.
பிரிந்தார்கள்.

இன்ஸ்பெக்டருக்கு விசாரணையில் இறங்குவதைத் தவிர வேறு வழி இல்லை. புல்லட்டில் ஏட்டை ஏற்றிக் கொண்டு புறப்பட்டார்.

வழியில் ரிக்ஷாக்காரன். ஆட்டோக்காரனென்று கண்ணில் பட்டவர்களையெல்லாம் விசாரித்தார். ஒன்றும் பிரயோசனமில்லை. மெல்ல வந்தார். பள்ளிக்கூடத்தின் வாசலில் வண்டியை விட்டார்.

அது சாயந்தரநேரம். இருட்டும் சமயம். வாட்ச் மேன் வேலுச்சாமி அப்போதுதான் வந்திருந்தார் போல. வேட்டி சட்டை அழுக்காகமல் வெள்ளையாக இருந்தது,

போலீஸ் தலையைக் கண்டதுமே இவர்கள் தம்மைத் தேடிவரவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.
‘‘திருட்டு சமாச்சாரம் எதிர் பள்ளிகூடம் சார்‘‘ – என்றார்.

‘‘இல்லே நாங்க உங்களைத் தேடித்தான் வந்திருக்கோம். ‘‘ மெல்ல சொல்லி அவர் எழுந்த நாற்காலியில் அமர்ந்தார். காத்தவராயன்.

அந்த திருட்டில் தன்னையும் சம்பந்தப்படுத்தியிருப்பார்களோ என்று நினைக்க வாட்ச்மேனுக்குள் கலவரம் மூண்டது.

‘‘ச..சார் எனக்கும் அந்த திருட்டுக்கும் சம்பந்தமில்லே.‘‘ என்றார். தானாக.

‘‘தெரியும். பத்து நாளைக்கு முன்னாடி ஒரு நாள் ராத்திரி அந்த ஒதியன் மரத்தான்ட ஒரு கார் வந்து நின்னதா கேள்வி அதைப் பத்தி உன்னண்ட விசாரிக்கனும்.‘‘-காத்தவராயன் லத்தியைக் கைகளில் உருட்டினார்.

‘‘தெ…தெரியாது.‘‘

‘‘ஒரு அறை விட்டேன்னா மூஞ்சி மொகரைக் காணாம போயிடும். அந்த கார் நிக்கிற நேரம் நீ வெளியில வந்து ஒன்னுக்கு அடிச்சிட்டுப் போயிருக்கே. எப்புடி தெரியாம போகும் ?‘‘

‘‘யா….யார் சார் சொன்னா?‘‘

‘‘எவனோ ஒரு பொறம்போக்கு ரெண்டாம் ஆட்டம் சினிமா பார்த்துட்டு வந்தவன் சொன்னான். உனக்குத் தெரியுமா தெரியதா?!‘‘

‘‘பார்த்தேன் சார்.‘‘

‘‘என்ன பார்த்தே?‘‘

‘‘கார் நின்னுது. இருட்டுல நாளைஞ்சு ஆம்பளைங்க நடமாட்டம் தெரிஞ்சுது. அதுக்கு மேல நான் பார்க்கலை. குளிர் தாங்கலை உள்ளே போயிட்டேன் சார்.‘‘

‘‘அடுத்த நாள் காலையில அந்த இடத்துல பைத்தியம் இல்லே. அப்படித்தானே ?‘‘!

‘‘தெ…………தெரியலை சார்.‘‘

‘‘அப்புடித்தான்.!‘‘ – இன்ஸ்பெக்டர் அழுத்தமாக சொன்னார்.

வாட்ச்மேன் முகத்தில் பேயடித்தது.

‘‘இன்னும் என்ன தெரியும் சொல்லு ?‘‘ பார்த்தார்.

‘‘சத்தியமா வேற ஒன்னும் தெரியாது சார்‘‘ – படாரென்று காலில் விழுந்தான்.

இன்ஸ்பெக்டருக்கு இவனிடம் இதற்குமேல் ஒன்றும் இல்லை புரிந்தது. அங்கே இருந்து காரைத் திருடி வந்து இங்கே உள்ளவளைக் கொண்டு போய் தொடர்பேர்த்திவிட்டு தன்னை இன்னும் சங்கடத்தில் மாட்டவிட்டுட்டான்களே நினைக்க வேதனையாக இருந்தது,

‘‘சரி தேவைப் பட்டா நான் உன்னை விசாரணைக்கு அழைப்பேன். மரியாதையா வந்து ஒழுங்கா பதில் சொல்லனும்.‘‘ – என்று மிரட்டிவிட்டு எழுந்தார்.

‘ராணி என்ன ஆனாள் ?‘ – அவருக்குள் கேள்வி எழுந்தது. அடுத்து யாரை விசாரிக்கலாம் என்று யோசித்துக் கொண்டே காவல் நிலையம் நோக்கி வண்டியை விட்டார்.

‘‘சார் ! டி.எஸ்.பி லைன்ல இருக்கார் சார்.‘‘ போன் பேசிக் கொண்டிருந்த ஒரு கான்ஸ்டபுள் அதன் வாயைப் பொத்தி இவரிடம் நீட்டினான்.

‘‘சார் ……..!‘‘- இவர் குரல் கொடுத்த அடுத்த வினாடியே…‘‘அந்த பொண்ணு கொலை என்னாச்சு காத்தவராயன்‘‘ டி.எஸ்.பி குரல் எகிறியது.

‘‘நான் விசாரணையில இருக்கேன் சார்.‘‘

‘‘போய்யா புடலங்காய் ! ரெண்டு நாள்ல சீக்கிரம் முடி. இல்லேன்னா மாதர் சங்க அமைப்பு ஒன்னு கொடி பிடிக்கிறதா இருக்கு. புடிச்சா நாறிடும்.‘‘ எச்சரித்தார்.

‘‘சரி சார். ‘‘- காத்தவராயன் பவ்வியமாய் தலையசைத்து போனை வைத்தார்.

அத்தியாயம்-12

தினசரியைப் புரட்டிக்கொண்டிருந்த சிவபுண்ணியம் அந்த விளம்பரத்தைப் பார்த்ததும் பரபரத்தான்.

காணவில்லை.

வயது 25. புத்திசுவாதீனமில்லாதவள். கர்ப்பவதி. இருக்கும் இடம் தெரிந்தவர்கள் தயவுசெய்து தெரிவிக்க வேண்டிய முகவரி 15, பஞ்சகல்யாணி தெரு, பரிசப்பட்டி. பொள்ளாச்சி தக்க சன்மானம் வழங்கப்படும். ராணியின் புகைப்படத்துடன் இருந்த விளம்பரத்தைப் படித்ததும் வேர்த்தான்.

வண்டியை எடுத்துக் கொண்டு விரைந்தான். வீரன், விஜயன் வீட்டிலில்லை. வண்டியைத் திருப்பினான்.
எதிரே வந்தார்கள். நிறுத்தினான்.

அவர்கள் அருகில் வர..‘‘ ராணியோட சொந்தக்காரங்களும் அவளைத் தேட ஆரம்பிச்சுட்டாங்க.‘‘- சொன்னபடி அவர்களிடம் தினசரியை நீட்டினான்.

‘‘ஆமா ‘‘- வீரன் வாங்காமல் அறிந்தவன் போல் பதில் சொன்னான்.

‘‘நீங்க இந்த விளம்பரம் பார்த்தாச்சா ?!‘‘

‘‘பார்த்தாச்சு. படிச்சாச்சு !‘‘- விஜயன்

அடுத்து சிவபுண்ணியத்திற்கு என்ன பேசுவதென்று புரியவில்லை. திகைப்பாய் நின்றான். சிறிது நேரம் கழித்து விளம்பரத்துல ‘‘சின்ன உறுத்தல் !‘‘- என்றான்.

‘‘என்ன?‘‘

‘‘கர்ப்பவதின்னு போட்டிருக்கு. ராணி கர்ப்பவதியாகித்தான் வீட்டைவிட்டு வெளியேறி இருக்கான்னு தோணுது. ஆக அவளுக்கு இங்கே தப்புத்ண்டா நடக்கலை புரியுது.‘‘- தன் மனதில் பட்டதைச் சொன்னான்.

‘‘நிச்சயமாத் தெரியுமா ?‘‘ – விஜயன் அவனைக் கூர்ந்து பார்த்தான்.

‘‘ஏன் ?!‘‘ – சிவபுண்ணியம் முகத்தில் திகில் பரவியது. ‘‘அவசரத்துல நீங்க தப்பு பண்றீங்க சிவபுண்ணியம்!‘‘ – வீரன் மென்மையாக சொன்னான்.

‘‘என்ன?!‘‘

‘‘ராணி மாதவிலக்காய் இருந்ததை நீங்களும் உங்க மனைவியும் பார்த்ததா எங்ககிட்ட சொல்லி இருக்கீங்க.‘‘

‘‘ஆமா…‘‘ என்று தலையசைத்தவன் ‘‘அது ஏன் எங்காவது அடிபட்ட கறையாய் இருக்கக்கூடாது நான் தப்பா புரிஞ்சிருக்கக்சுடாது ?‘‘- என்றான்.

‘‘அப்படி இருக்க வாய்ப்பே இல்லே. பொம்பளைங்க இந்த விசயத்துல தப்பு சொல்ல மாட்டாங்க.‘‘- வீரன் உறுதியாக சொன்னதும் சிவபுண்ணியத்திற்குப் பேச வாய் வரவில்லை. வீரன் தொடர்ந்தான்.

‘‘உங்க வழிக்கே நான் வர்றேன். ராணி என்னைக்கு வீட்டை விட்டு வெளியேறினாள்ன்னு நம்ம யாருக்கும் தெரியாது. உங்க கணக்குப்படி பார்த்தா ராணி இங்கே வந்து பத்து மாசம் தாண்டுது. ராணி வீட்டைவிட்டு வெளியேறும்போதே கர்ப்பம்மன்னா குழந்தை இந்நேரம் பொறந்திருக்கனும். கர்ப்பம் வாய்ப்பு இல்லை. அப்படியே இருந்தாலும் இப்போ ஏன் அவுங்க ராணியைத் தேடனும் ? விளம்பரப்படி பார்த்தால்… கர்ப்பம், மனநிலை சரி இல்லாதவள்ன்னு தெரியுது. தெரிஞ்சும் ஏன் துரத்தி விட்டாங்க. வெளியே விட்டாங்க. இப்போ எதுக்குத் தேடறாங்க. தேட இத்தனை மாசம் ஏன் அவகாசம் ?‘‘

‘‘ஆக… இந்த விளம்பரத்தை பிறந்த வீடோ புகுந்த வீடோ கொடுத்திருக்காதுன்னு சொல்றீங்களா வீரன் ?‘‘- சிவபுண்ணியம் அவனைப் பரிதாபமாகப் பார்த்தான்.

‘‘அப்படித்தான் தோணுது.‘‘

‘‘கெடுத்தவன் கொடுத்திருக்கலாமா…?!‘‘

‘‘கொடுத்து கண்டுபிடிச்சு சாகடிக்கலாம்ன்னு நெனைக்கிறானா அப்புடி செய்ஞ்சா மாட்டிக்க மாட்டானா ?‘‘- விஜயன் சிவபுண்ணியத்திடம் கேள்விகள் கேட்டான்.

அவன் குழப்பமாக நின்றான்.

‘‘படத்தை உத்துப் பாருங்க. விளம்பரம் யார் குடுத்தாங்கன்னு தெரியும்‘‘-.வீரன் முகத்தை வலுக்கட்டாயமாக இறுக்கிக் கொண்டு கூறினான்.

சிவபுண்ணியம் பார்த்தான். விளம்பரத்தில் வித்தியாசம் தெரியவில்லை.

‘‘போட்டோவைப் பாருங்க தெரியும்.‘‘

பார்த்தான்.

‘‘இந்த போட்டோ நீங்க எங்க பத்திரிக்கைக்கு அனுப்பியது.‘‘

‘‘ரொம்ப குழம்பாதீங்க. இந்த விளம்பரம் கொடுத்தது நாங்க.‘‘

சிவபுண்ணியம் அதிர்ச்சியாய் அவர்களைப் பார்த்தான். ‘‘அந்த விளம்பர விலாசம். பொள்ளாச்சியில இருக்கிற என் நண்பனுடையது.‘‘

‘‘எதுக்காக இந்த விளம்பரம் ?‘‘-அதிர்ச்சி விலகாமல் கேட்டான்.

‘‘அப்படி கேளுங்க சொல்றேன். இவளைக் கெடுத்தவனுக்குப் பத்திரிக்கைக்குச் சேதி போயிடுச்சுஇ நம்ம
தலைக்கு வில்லங்கம் வரும்ன்னு பயம் வரும். புகுந்த பொறந்த வீடுங்களுக்கு பொண்ணு இப்புடி ஆகிட்டாளேன்னு அனுதாபம் வந்து தேடி வரலாம். வராமலும் போகலாம் அடுத்து.. ‘‘-என்று வீரன் தொடங்குவதற்குள்..

‘‘கெடுத்தவனுக்கு ராணி இருக்கிற இடம் காட்டிக்கொடுக்கிறது போல இருக்கே.‘‘ – சிவபுண்ணியம் சொன்னான்.

‘‘அதனால அவளுக்குப் பாதிப்பு ஏற்படாது. பாதுகாப்பா இருக்கா. நெருங்க முடியாது தனக்குத்தான் வில்லங்கம் வரும்ன்னு ராணியைத் தொட்டவனுக்குப் பயம்தான் வரும். அடுத்து முக்கியமான விசயம் ராணிக்குச் சொந்தக்காரங்களை நாம கண்டுபிடிச்சு ஆகனும்.‘‘

‘‘ஏன் ?‘‘

‘‘ராணி எப்புடி பாதிக்கப்பட்டான்னு தெரியனும்.‘‘

‘‘தெரிஞ்சு?‘‘

‘‘ராணி வரதட்சணைக் கொடுமை மற்ற எந்த விதத்திலேயாவது பாதிக்கப் பட்டிருந்தா சம்பத்தப்பட்டவங்களைத் தண்டிக்கனும். பெண்கள் ரொம்ப பாதிக்கப்படுறாங்க சார். அவுங்க முகமூடிக்கிழிக்கப்பட்டாத்தானே மத்தவங்களுக்கும் பயம் வரும்.?!‘‘

‘‘நியாயம்தான். ஆனா இது சாத்தியமா. தோண்டத்தோண்ட வெறும் குப்பையா வருமே. அனுமார் வால் போல நீளுமே !‘‘

‘‘ஆமாம்.!‘‘

‘‘இந்த விளம்பரத்தினால பலன் ஒன்னும் பெரிசா வரப்போறதாய் எனக்குத் தோணலை. எல்லாரும் கப்சிப்ன்னு ஆகிடுவாங்க.‘‘- சிவபுண்ணியத்திற்கு ஏனோ நம்பிக்கை இல்லை. பட்டும்படாமல் சொன்னான்.

‘‘ஆகட்டும்.!…. நாம தேடிக் கண்டுபிடிக்கலாம்.‘‘

‘‘அதுக்கு இந்த விளம்பரம் தேவை இல்லியே ?‘‘

‘‘இதுல பலன் இருக்கு சிவபுண்ணியம் சார். சம்பந்தப்பட்டவங்க கம்முன்னு இருந்தாக்கூட ராணியைப் பத்தி தெரிஞ்சவங்க அவளது சொந்தம் உறவு நட்பு எந்த வகையிலேயாவது நமக்கு தகவல் தருவாங்க. கேட்டா பதில் சொல்வாங்க. ‘‘

விஜயன், வீரன் புத்திசாலித்தனம் சிவபுண்ணியத்திற்குப் புரிந்தது.

‘‘வாயைப் பிளக்காதீங்க. வாங்க நமக்கு அடுத்த வேலை இருக்கு‘‘ – விஜயன் சிவபுண்ணியம் கையைப் பிடித்து இழுத்தான்.

இன்ஸ்பெக்டர் காத்தவராயனுக்குக் கொஞ்சம் சலிப்பு மந்தப் புத்தியேத் தவிர ஜகஜ்ஜாலக்கில்லாடி. வேலையில் கொஞ்சம் சுறுசுறு. தட்டிவிட்டால் போதும் இடுக்கில் நுழைந்து தடுக்கில் வந்து விடுவார்.
ராணி எங்கிருந்து வந்தாள் என்று விசாரணை வாலைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டே மச்சக்குப்பம் வந்தார். அங்குள்ள காவல் நிலையத்தில் நுழைந்து விபரம் சொல்லி ஒரு போலீஸ்காரரைத் துணிக்கழைத்துக்கொண்டு படுகூர் வந்தார். அவருக்கு முன் விஜயன் வீரன் சிவபுண்ணியம் இருப்பதைப் பார்த்து அதிர்ந்தார்.

‘‘இங்கே எப்படிப்பா வந்தீங்க ?!‘‘ – அவர்கள் தலையைப் பார்த்ததுமே கேட்டார்.

‘‘எல்லாம் உங்க வழிதான் சார். இந்த பத்திரிக்கையில உள்ள படத்தைக்காட்டி மொதல்ல இவ எங்கேயிருந்து வந்தாள்ன்னு விசாரிச்சுதொடர்ந்து இங்கே வந்துட்டோம் சார்.‘‘- விஜயன் சிரித்துக் கொண்டே சொன்னான்.

‘‘பத்திரிக்கைக்காரங்க கெட்டிக்காரங்கப்பா. பேசாம எங்க வேலையை உங்ககிட்ட ஒப்படைச்சுட்டு நாங்க ஒதுங்கிடலாம்ப்பா. ‘‘- வாயாரப் பாராட்டினார். ‘‘அப்புறம் இங்கே வந்து என்ன சாதிச்சீங்க? ‘‘-வீரன் தோள் மேல் கை போட்டார்.

‘‘ராணியைப் பத்தி விசாரிச்சு நீங்க கைது பண்ண ரெண்டு ஆட்களை தயாரா வைச்சிருக்கோம் சார்.‘‘

‘‘எப்படி எப்புடி??‘‘

‘‘இந்த ஊருக்கு வந்த உடனே இவ இந்த ஊரு, பேரு செங்கமலச்செல்வி, ஏழாம் நம்பர் வீடுன்னு விசாரிச்சுத் தெரிஞ்சுகிட்டோம். அடுத்து இவ ஏன் இப்படி ஆனாள்ன்னு விசாரிச்சா எல்லாம் வரதட்சணை பிரச்சனை. மாமியாரும் புருசனும் ரொம்ப கொடுமை பண்ணி இருக்காங்க. சொன்னபடி புகுந்த வீட்டுல ஏன் செய்யலைன்னு தினம் அடி உதை.

கொள்ளிக்கட்டையால சூடு, சிகரெட்டால சூடுன்னு தினம் சித்திரவதை. செங்கமலம் உள்ளுக்குள் நொந்து பொங்கி புத்தி பேதலிச்சுப் போயிட்டாள். துரத்திட்டாங்க.‘‘ – வீரன் தாங்கள் விசாரித்த முழுவிபரத்தையும் சொன்னான்.

‘‘கொலை முயற்சியும் நடந்திருக்கு. நாங்க சம்பந்தப்பட்டவங்க காதுக்குப் போகாம மக்களிடம் ஜாக்கிரதையா விசாரிச்சிருக்கோம். அம்மாவும் புள்ளையும் வீட்டுல இருக்காங்க. கைது செய்யுங்க சார்.‘‘- சிவபுண்ணியம் சொன்னான்.

‘‘எல்லா பேங்க்காரரும் நகர்ந்தாலும் சிவபுண்ணியம் மட்டும் இதுல கெட்டியா இருக்கிறது எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு!‘‘- என்றார் காத்தவராயன் அவனைப் பார்த்து.

‘‘சுயநலம் கெடையாது சார். மனநிலை சரி இல்லாதவ, புத்தி பேதலிச்சுப் போனவ, கேவலம் ஒரு பைத்தியக்காரின்னு கூட பார்க்காம தன் காம இச்சையைத் தீர்த்த மனுச மிருகத்தை நினைக்கும் போது நாட்டுல இப்படிபும் ஒரு அநியாயமான்னு எனக்குள்ளே ஒரு வெறுப்பு, கொதிப்பு சார். தன் வயித்துல வளர்றது என்ன்னனு தெரியாமலே வயிறு தள்ளி திரியற சில மனநோயாளிங்க பைத்தியத்தைப் பல இடங்கள்ல பார்த்திருக்கேன் சார். நம்ம ஊர்லேயும் இப்படி ஒரு அநியாயமாங்குற போது மனசு பாதிச்சுப் போச்சு. இறங்கிட்டேன்.‘‘ – என்றான்.

‘‘ரொம்ப நல்ல மனசு.‘‘- என்று அவன் முதுகைத் தட்டி பாராட்டிய காத்தவராயன் ‘‘நான் சம்பந்தப்பட்ட ஆட்களை இழுத்துப் போய் போலீஸ் முறைப்படி விசாரிச்சு சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்ன்னுதான் இந்த ஊரு போலீஸ்காரரைக் கூட்டி வந்தேன். என் வேலையைச் சுலபமாக்கிட்டீங்க. வாங்க போய் அவுங்களைக் கைது செய்வோம்‘‘; – நடந்தார்.

‘‘ராணி விசயம் முடிஞ்சுடுச்சா சார் ?!‘‘- சிவபுண்ணியம் ஆச்சரியமாக கேட்டான்.

‘‘இன்னும் இல்லே. அடுத்து அவதான் கெடுத்தவன் கொண்டு போனவன் எல்லாம வேணும்.; கூண்டோடு பிடிக்கனும். மாட்டாம எங்கே போயிடுவானுங்க‘‘. – கூறி விரைவாக நடந்தார்.

அத்தியாயம்-13

இன்ஸ்பெக்டர் காத்தவராயன் ராணி கொலைக்காரனை எப்படிக் கண்டுபிடிப்பது…? – தீவிர யோசனையிலிருந்தார். ஆளை உசுரோட வைச்சிருக்கானா கொன்னுட்டானா நினைக்க திகிலாய் இருந்தது.

‘‘சார் என் மனசுல சின்ன கிளிக் ‘‘- ஏட்டு பவ்வியமாக வந்து நின்றார்.

‘‘சொல்லு ?‘‘

‘‘தமிழ்நாட்டுல உள்ள எல்லா போலீஸ் ஸ்டேசனுக்கும் தகவல் கொடுத்து ராணி இருக்காளான்னு தேடிப்பார்க்கச் சொல்லலாம் சார்.‘‘

‘‘ஆள் இருந்தா கண்டுபிடிக்கலாம். இல்லேன்னா ?‘‘

விழித்தான்.

அப்போது………

‘‘ஐயா..! என் மவளைக் கொலை செய்ஞ்சவனைக் கண்டுபிடிச்சாச்சு !! ‘‘ செல்லம்மாள் தலைவிரிகோலமாக அரற்றிக் கொண்டே நுழைந்தாள்.

‘‘யார் ?‘‘- திடுக்கிட்டார்.

‘‘ஆத்தங்கரை அரசமரத்துல கட்டி வைச்சிருக்காங்க‘‘- அழுதாள்.

காத்தவராயன் இரண்டு கான்ஸ்டபுள்களை அழைத்துக் கொண்டு அவளையும் அள்ளிப் போட்டுக் கொண்டு விரைந்தார். ஊரே கூடி இருந்தது. 30 வயது இளைஞன் மரத்தில் கட்டப்பட்டு இருந்தான். மக்கள் அடித்துத் துவைத்ததில் அவன் சட்டையெல்லாம் நார்நாராய்க் கிழிந்திருந்தது. வாய் கிழிந்து ரத்தம் ஒழுகியது. முகம் விகாரமாக வீங்கி இருந்தது. சிவபுண்ணியம், மாஸ்டா,; வ Pரன், விஜயன்…. சூழ்ந்திருந்தார்கள்.

‘‘நகருங்க நகருங்க‘‘- காத்தவராயன் உள்ளே நுழைந்தார். ‘‘சார் ! இவன் கண்ணப்பன். அடுத்த ஊர். செல்லம்மா மக மேல ரொம்ப நாளா கண்ணு. இன்னைக்கு மத்தியானம் குடிச்சிட்டு செல்லம்மாகிட்ட வந்து உன் மவளை யார் கொன்னது தெரியுமான்னு வம்பு பண்ணி இருக்கான். அவ அலறி அடிச்சிக்கிட்டு வெளியே வந்து கதறி இருக்கா. ஊர் மக்கள்ல்லாம் போட்டு தொவைச்சதுல நான் கொலை செய்ஞ்சதை கண்ணால பார்க்கலை. தூக்கி கெணத்துல போட்டதைப் பார்த்தேன்னான்.‘‘ – சிவபுண்ணியம் அவரிடம் விசயத்தைச் சொன்னான்.
‘‘என்னடா ? ‘‘- காத்தவராயன் லத்தியால் அவன் முகத்தை நிமிர்த்தினார்.

‘‘சார். அன்னைக்கு ராத்திரி அந்தப் பொண்ணு அம்மாகிட்ட கோவிச்சுக்கிட்டு ராத்திரி நேரம் ரோட்டுல போனதைப் பார்த்தேன். பின்னாலேயே போய் மடக்கலாம்ன்னு ஆசை. பதுங்கிப் பதுங்கிப் போனேன். அப்போ ஒரு கார் திடீர்ன்னு வந்து நின்னுது. பைத்தியத்தைக் கடத்தினதை இவதான் பார்த்தா தூக்கி வண்டியில போடுங்டா நமக்கும் தீனின்னு கார்ல யாரோ குரல் கொடுத்தாங்க. அதைத்தொடர்ந்து ரெண்டு மூணு பேர் உடனே இறங்கினாங்க. அவ ஓட ஆரம்பிக்கிறதுக்குள்ளே ஒரே குத்து தூக்கி கெணத்துல எறிஞ்சுட்டுப் போயிட்டாங்க. அவுங்க என்னைக் கண்டுக்கலை. ஆனா கொலையைக் கண்ணால பார்த்த எனக்கு போலீஸ் நம்பளையும் புடிச்சு உள்ளாற போட்டுடுமேன்னு வெளியில சொல்ல பயம். இன்னைக்குத் தண்ணியப் போட்டுக்கிட்டு எக்குத்தப்பா உளறிட்டேன்ய்யா ‘‘- கையெடுத்துக் கும்பிட்டு அழுதான்.

இனி இவனை அடித்துப் புண்ணியமில்லை. சப்- இன்ஸ்பெக்டருக்குத் தோன்றியது.

‘‘சரி வண்டியில ஏறு !‘‘- கட்டுகளை அவிழ்த்து ஏற்றினார். சிவபுண்ணியம் விஜயன் வீரன் மாஸ்டர் ஆட்களைப் பார்க்க ஏனோ அவருக்குப் பிடிக்கவில்லை. தன்னை சிக்கலில் மாட்டவிட்டுவிட்டார்கள் கேசையும் துப்புத் துலக்கி தனக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள் என்கிற வெறுப்பு.

‘‘வண்டி பின்னால யாரும் வரக்கூடாது !‘‘- உத்தரவிட்டு ஜீப்பைக் கிளப்பினார்.

காவல் நிலையத்தில்.!

திருடப்பட்ட கார் கிடைத்துவிட்டதாக சேதி காத்திருந்தது.

காத்தவராயன் சுறுசுறுப்பானார்.

பொள்ளாச்சி காவல் நிலையத்தில் கருணாகரன் அடிபட்டு உதைபட்டு ரொம்ப நொந்து போயிருந்தான். அவனுடன் இன்னும் மூன்று பேர்கள் நின்றார்கள்.

காத்தவராயன் அவர்களைத் தன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விஜயனுக்கும் வீரனுக்கும் ‘‘வந்து நியூஸ் எடுத்துக்கிட்டுப் போங்கப்பா‘‘ -வீராய்ப்பாய்த் தகவல் கொடுத்தார்.

அவர்களுடன் சிவபுண்ணியம், டீ மாஸ்டர், சிவா, கணேஷ் கோஷ்டியே சென்றார்கள்.

சிவபுண்ணியம் குற்றவாளிகளில் ஒருவனாய் நிற்கும் மதனைப் பார்த்து அதிர்ந்தான்.

‘‘மதன் சார்! இப்போ கிளைமேக்ஸ் சொல்லுங்க ?‘‘- என்றார் காத்தவராயன் அவனைப் பார்த்து.
அவன் கைகளைக் குறுக்காக கட்டியபடி வாயைத் திறந்தான்.

‘‘சிவபுண்ணியம் எனக்கு நண்பர் சார். ஒரு நாள் அவர் வீட்டுக்கு வரும்போது ராணியைப் பார்த்தேன் சார். நத்தையில் முத்து போல அருமையா இருந்தா. அப்பவே எனக்கு அவள் மேல் கண். அடையனும்ன்னு ஆசை. நண்பன் வீட்டுல ஒருநாள் தங்கி…அப்புறம் ஒரு வாரம் டவுன்ல தங்கினேன். நான் மெடிக்கல் ரெப் என்பதால் பைத்தியத்துக்கு என்ன மருந்து கொடுத்தா ஒரு மணி நேரமாவது… தூங்கும், மயக்கமாய் இருக்கும்ன்னு தெரியும். என் கெட்ட நேரம் இவ டவுன் பக்கம் தென்பட்டாள். ஒரு நாள் எப்படியோ பேச்சு கொடுத்து மாத்திரையைக் கொடுத்து ஆளை மயக்கி கெடுத்துட்டேன். ஆனா அவ கர்ப்பம் ஆவாள்ன்னு கனவுலகூட நெனைக்கலை. கர்ப்பம் ஆனதும் அதிர்ச்சியாய் அடைந்தேன். நம்மால்…மனநிலை பிறழ்ன்றவளுக்குக் கஷ்டம் நம்ம வாரிசு வேற வீணா இவ வயித்துல வளருதேன்னு எனக்குள் உறுத்தல். அப்புறம் இந்த சேதி பத்திரிக்கையில் வர்றதாய்க் கேள்விபட்டேன். அப்படி ஆனால் எனக்கு தொந்தரவு வரும்ன்னு பயம் வந்துச்சு.‘‘

‘‘ராணியைக் கிளப்பி கொண்டு வந்து எங்கேயாவது தள்ளிவிட்டு… பைத்தியம் விழுந்து செத்துப் போயிடுச்சின்னு பேர் பண்ணலாம்ன்னு நெனைச்சி கடத்தத் திட்டம் போட்டேன். இந்த நண்பர்களிடம் சேதி சொன்னேன். நல்ல ஐடியா. இதனால் பிரச்சனை வராதுன்னு சொல்லி சரி சொன்னாங்க. ஒரு நாள் இரவு காரில் இவர்களோடு வந்து ஆளைக் காட்டினேன். நாங்க கடத்தும் போது ஒரு பொண்ணு பார்த்துட்டா. அனாவசியமா கொலை செய்ய வேண்டியதாய்ப் போச்சு. பசங்க அவசரப்பட்டு பிணத்தைக் கிணத்துல போட்டுட்டாங்க. அதுதான் இவுங்க செய்த பெரிய முட்டாள்தனம். அந்த பிணத்தைக் கிணத்துல போடலைன்னாலும் தப்பு செய்த நாங்க மாட்டுவோம். என்ன கொஞ்சம் காலம் கடந்து மாட்டுவோம்.‘‘ – நிறுத்தினான்.

‘‘ராணி என்னாச்சு ..?’’ காத்தவராயன் கேட்டார்.

‘‘அவளைக் கொல்ல எனக்கு மனசு வரலை. திடீர்ன்னு எனக்கு பிள்ளைப் பாசம். வாரிசைப் பார்க்க ஆசை. காரணம் என் மனைவி தலை பிரசவத்தில் பிள்ளையோட இறந்து போனாள். அந்த தாக்கம்…. தாய் சரி இல்லேன்னாலும் பிள்ளையாவது நமக்கு முழுசாக் கிடைக்கும்ன்னு ராணியை அனாதை ஆசிரமத்துல சேர்த்துவிட்டேன். அங்கே அவளுக்கான மருத்துவ பராமரிப்பு, குழந்தை பிறப்பு… மொத்த செலவும் நான் ஏத்துக்கிட்டேன். காலத்தில் ராணிக்குப் பெண் குழந்தை பிறந்தது. ஆனா…துரதிர்ஷ்டம் ராணி குழந்தை முகத்தைப் பார்த்த அடுத்த விநாடி செத்துப் போனாள். காமாட்சி அனாதை ஆசிரமத்துல விபரம் இருக்கு. குழந்தை இருக்கு.’’ நிறுத்தினான்.

எல்லோரும் அவன் முகத்தைப் பார்த்தார்கள்.

மதன் தொடர்ந்தான்.

‘‘அடுத்து எனக்கு ஒரு பெரிய உதவி. நண்பன் சிவபுண்ணியம் என்னை மன்னிச்சு என் குழந்தையை எடுத்து வளர்க்கனும். அவ பிறப்பு வெளியில் தெரியக்கூடாது. அவ காதுல விழக்கூடாது. இதையெல்லாம்விட ஒரு பெரிய காரியம் என் தங்கை சௌம்மியாவுக்கும் நண்பன் சிவபுண்ணியத்துக்கும் பிள்ளை இல்லாத குறையைத் தீர்த்துட்டேன் திருப்தி. எல்லாரும். என்னை மன்னிக்கனும்.‘‘ கையெடுத்துக் கும்பிட்டு தழுதழுத்தான்.

அனைவருக்கும் கஷ்டமாக இருந்தது.

சிவபுண்ணியத்திற்குக் கண்கள் குளமானது.

சிவபுண்ணியம் நீண்ட பெருமூச்சு விட்டு தன் நினைவுகளைக் கலைத்தார் .

கலங்கிய கண்களைத் துடைத்தார்.

அம்மா பெண்ணைத் தவிர சுற்றிலும் யாருமில்லை. எல்லோரும் வேலையை முடித்து எப்போதோ போயிருந்தார்கள். ‘‘ஏன்ப்பா அழறீங்க ?‘‘ – ப்ரியா அவர் அருகில் வந்தாள். ‘ சொல்லமுடியாத கதைம்மா !’ – சிவபுண்ணியத்திற்குச் சொல்ல வாய் வந்தது,

எப்படி சொல்ல முடியும் ?!’ அதனால்….

‘‘ஆனந்தக் கண்ணீர்ம்மா !’’ சொல்லி மகளைப் பாசத்துடன் அணைத்தார்.

அவர் மனைவி சௌம்மியா அவர்களைப் பரிவாய்ப் பார்த்தாள்.

முற்றும்.

– 12-05-2003 மாலைமதியில் பிரசுரமான குறுநாவல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *