மாலவல்லியின் தியாகம்
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: December 9, 2024
பார்வையிட்டோர்: 2,956
(1957ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15
பத்தாம் அத்தியாயம்
நிழல் உருவம்!
களங்கமில்லாத வானத்தில் சஞ்சரிக்கும் சந்திரனின் பேரொளி, அலைகளின் சுருதி லயத்தில் மயங்கி நிற்கும் அமைதி நிறைந்த கடற்கரையை இன்ப லோகமாக்கி யிருந்தது. உலக சந்தடியிலிருந்து விலகி இந்த இன்ப லோகத்துக்கு வந்து மெய்ம்மறந்த நிலையில் இருக்கும் இளங் காதலர்களின் உள்ளத்தின் நிலையைப் பற்றி நாம் தான் என்ன சொல்ல முடியும்? பூதுகன் தான் என்ன சொல்ல முடியும்? அவனுக்கு மாலவல்லியைப் பற்றி ஏற்பட்ட சந்தேகங்கள் மேலும் மேலும் வளரத் தொடங்கின. வைகைமாலை அவன் விருப்பத்துக்கு மாறாக அவனைத் தன் மாளிகையிலிருந்து வெளியேற்றியது அவனுக்குச் சிறிது மன வருத்தத்தை உண்டாக்கியிருந்ததே யானாலும், மாலவல்லியைப் பற்றி ஒரு அந்தரங்க ரகசியத்தைத் தெரிந்து கொண்டதில் வைகைமாலை தன்னைத் துரிதப்படுத்தி யனுப்பியதும் நன்மைக்குத்தான் என்று அவன் மனத்தில் சிறிது ஆறுதல் ஏற்பட் டது. இந்தச் சமயத்தில் இளம் காதலர்களை நெருங்கி அவர்கள் இன்ப லோக யாத்திரைக்கு இடையூறு விளைவிக்க அவன் விரும்பவில்லை. அதோடு அவனுடைய நினைவெல்லாம் அப்பொழுது வைகைமாலையின் மீதே இருந்தது. “எப்படியோ இந்த ரகசியத்தைத் தெரிந்து கொண்டு விட்டோம். இதைப் பற்றிப் பின்னர் பார்த்துக் கொள்வோம். இவர்கள் இன்பத்துக்குத் தடையாய் இருப்பானேன்?” என்று எண்ணி அப்பொழுதே அந்த இடத்திலிருந்து திரும்பி விடுவதற்கு நினைத்தான்.
சிறிது தூரத்தில் உட்கார்ந்திருந்த காதலர்கள் மெய்ம்மறந்து ஏதோ பேசிக் கொண்டிருந்தார்களே யொழிய, தங்களை வேறொரு உருவம் சிறிது தூரத்தில் நின்று கவனிப்பதைப் பற்றிய கவலையே அவர்களுக்கு ஏற்படவில்லை. சிறிது நேரம் அந்த இடத்திலிருந்த அந்த இடத்திலிருந்த படியே பார்த்துக் கொண்டிருந்த பூதுகன் திரும்பி நடக்க எத்தனித்த போது கலங்கரை விளக்கத்துக்குச் சமீபத்திலிருந்து யாரோ கனைப்பது போன்ற சத்தம் கேட்டது. அவன் திரும்புவதற்குள் அவ்வுருவம் அவன் மீது பாய்ந்தது.
பூதுகன் கண்ணிமைப் பொழுதில் இந்த உருவம் யாரென்று உணர்ந்து கொண்டான். அது பிக்ஷு வேடத்தில் இருக்கும் கலங்கமாலரையர் தான்!
பூதுகன் அப்படியே கலங்கமாலரை யரைத் தூக்கிக் கடலில் எறிந்தான். அவரும் தம்மை ஒருவிதமாகச் சமாளித்துக் கொண்டு அலையோடு வந்து கரையேறி அவனை ஆவேசமாகத் தாக்க வந்தார். மறுபடியும் அவருடைய காலையும், கையையும் பிடித்துத் தூக்கிக் கடலில் எறிந்தான். பாவம், பூதுகன் தானாகக் கற்றுக் கொண்ட இந்தப் புதுப் போர் முறையைக் கலங்கமாலரையர் எப்படி அறிந்துகொள்ள முடியும்?
அவர் ஒரு தடவையாவது பூதுகனைக் கடலில் தூக்கி எறிந்துவிட வேண்டும் என்றுதான் முயற்சித்தார். முதலில் கடலில் விழுந்த அவர்தான் மறுபடியும், மறுபடியும். கடலில் விழுந்து தவிக்க வேண்டி யிருந்தது.
தங்களுக்கு அருகில் இவ்வளவு அமர்க்களம் நடப்பதைச் சிறிது தூரத்தில் உட்கார்ந்திருந்து, இந்த உலகத்தையே மறந்திருக்கும் இளங் காதலர்கள் எவ்வளவு நேரம் உணராமலிருக்க முடியும்? தண்ணீரில் ஏதோ விழுவதுபோன்ற சத்தம் இரண்டொரு முறை கேட்கவே அவர்கள் ஏதோ என்னவோ என்று தங்கள் பேச்சிலேயே கவனமாய் இருந்து விட்டனர். ஆனால் இடை இடையே ஏற்படும் உறுமலும், சிறு சிறு சத்தமும் இலேசாக அவர்கள் காதில் விழுந்து கவனத்தைக் கலைத்தன. அவர்கள் சட்டென்று திரும்பிப் பார்த்தபோதுதான் சிறிது தூரத்தில் பூதுகன் கலங்கமாலரையனைத் தூக்கி எட்டாவது முறையாகவோ, பத்தாவது முறையாகவோ கடலில் எறியப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தான்.
“மாலவல்லி! அதோ யாரோ சண்டை போட்டுக் கொள்ளுகிறார்கள். நான் போய்ப் பார்த்து விட்டு வருகிறேன்” என்று கூறி மாலவல்லியின் அருகிலிருந்த ஆடவன் எழுந்தான்.
பிக்ஷுணிக் கோலத்திலிருந்த மாலவல்லி ஏதோ திகில் அடைந்தவள் போல் அந்த இடத்திலேயே தயங்கி நின்றாள். அந்த வாலிபன் பூதுகனுக்கும் மாலரையருக்கும் ஆவேசமாகச் சண்டை நடக்கும் இடத்துக்கு வந்து, அவர்கள் இருவரையும் உற்று நோக்கினான். பாவம், ஒரு பௌத்த பிக்ஷு! அவரைத் தூக்கிக் கடலில் எறிந்து ஒரு குழந்தை பந்து விளையாடுவது போல விளையாடுகிறான் ஒரு வாலிபன். “இது என்ன தகாத காரியம்? இந்த பிக்ஷு இந்த வாலிபனுக்கு என்ன தீங்கு இழைத்திருக்கக் கூடும்?” என்று மனத்தில் எண்ணிய அந்த வாலிபன் தன்னுடைய பலத்தையும் சிறிது காட்டி, பூதுகனிடமிருந்து அந்த புத்த பிக்ஷுவைக் காப்பாற்ற நினைத்தான்.
அந்த வீரன் அதிக நேரம் தாமதிக்க வில்லை. சட்டென்று பூதுகன் மீது பாய்ந்தான். இப்படித் திடீரென்று ஒரு வாலிபன் தங்கள் சண்டையில் குறுக்கிட்டுத் தன்மீது பாய்ந்து தாக்குவான் என்று பூதுகன் எதிர்பார்க்க வில்லை. அந்த வாலிபன் யாரென்று அவன் அறிந்து கொண்டான். பூதுகன் எதிர்பார்த்ததுதான் இது.
பூதுகன் சிறிது அபாயகரமான நிலையில் தானிருந்தான். ஏனென்றால் இரு தாக்குதல்களையல்லவா அவன் சமாளிக்க வேண்டி இருந்தது! கலங்கமாலரையர் தமக்கு உதவியாக வேறொரு வீரன் கிடைத்ததும் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு பூதுகனை ஒரே யடியாக வீழ்த்தீவிட நினைத்தார். அதனால் அவரும் தம் இழந்த பலத்தை மறுபடியும் வரவழைத்துக் கொண்டு பூதுகன் மீது வேகமாகப் பாய்ந்தார்.
அந்தப் பெளத்த பிக்ஷு ஆவேசமாகப் பூதுகன் மீது பாய்வதைக் கண்டதும் தனியாகப் பூதுகனோடு சண்டையிட்டுக் கொண்டிருந்த வாலிபன் சட்டென்று அவனோடு சண்டை போடுவதை நிறுத்திக் கொண்டான். அந்தச் சமயம் சிறிது தூரத்தில் நின்று கொண்டிருந்த மாலவல்லியும் சண்டை நடக்கும் இடத்தை நோக்கி மெதுவாக வந்தாள்.
பூதுகனைத் தாக்கிய வாலிபன், அந்தப் பௌத்தத் துறவியும் அவனை மிக ஆவேசமாகத் தாக்க ஆரம்பித்ததும் பூதுகனைத் தாக்குவதை நிறுத்திக் கொண்டது, சிறிது ஆச்சர்யத்தை யளிக்கலாம். அந்த வாலிபனும் அந்தத் துறவி பூதுகனை அவ்வளவு ஆவேசத்தோடு தாக்குவதைக் கண்டு தான் ஆச்சரியம் அடைந்து நின்று விட்டான். ஒரு துறவிக்கு இவ்வளவு ஆக்ரோஷமும் ஆவேசமும் ஏன் வர வேண்டும்? ஒரு துறவி இப்படி ஒருவனோடு சண்டை செய்வது தர்மத்துக்கு உகந்ததா? அன்பையும் அஹிம்சையையும் பொறுமையையும் உலகத்தில் ஏற்படுத்தி உலகையே சுவர்க்கமாக்க வேண்டும் என்று தன் வாழ்நாள் முழுவதையுமே ஒவ்வொரு ஜீவனின் நலனுக்காகவும் அர்ப்பணித்த புனிதனான அந்த போதிசத்வரின் புனித வழியைப் பின் பற்றும் சீடர்களா இவர்கள்?
அவ்வளவு நேரம் அவனுக்குப் பூதுகன் மீது எவ்வளவு கோபமும் ஆத்திரமும் இருந்ததோ அவ்வளவு கோபமும் ஆத்திரமும் பிக்ஷுவின் மீது திரும்பியது.
“போடு, கடலில். மறுபடியும் தூக்கிப் போடு கடலில். சீவர ஆடை அணிந்த இவனை என் கைகளால் நான் தாக்க விரும்ப வில்லை. நீயே அவனைத் தூக்கிக் கடலில் போடு. அன்பு வழியை விட்டுப் பகை வெறிகொண்டிருக்கும் இத்தகைய துறவிகளைக் கடலில் எறிந்து கொன்று விடுவது உலகத்துக்கு எத்தனையோ நன்மையாக முடியும்” என்று ஆத்திரத்துடன் மொழிந்தான் அந்த வாலிபன்,
பூதுகன் மாலரையரைத் தூக்கிக் கடலில் எறியும் சமயம், மாலவல்லி இடையே வந்து. “நிறுத்துங்கள்! ஒரு ஜீவனைக் கடலில் எறிந்து கொல்வதினால் என்ன பலன் ஏற்பட்டு விடப் போகிறது? ததாகதரின் அன்புருவை மனத்தில் எண்ணி அவரை மன்னித்து விட்டு விடுங்கள். பிக்ஷு என்பதற்காக அல்ல; ஒரு மனிதனைக் கொன்ற பாபம் உங்களுக்கு ஏற்பட வேண்டாம் என்பதற்காகத்தான்” என்று பூதுகனைப் பார்த்துச் சொன்னாள்.
பூதுகன் கலகலவென்று ஏளனச் சிரிப்பு சிரித்தான். கடற்கரையில் அந்தச் சிரிப்பும் ஏதோ அலையோசையைப் போலத்தானிருந்தது. “பாபமா, எங்கள் தரும சூத்திரத்தில் அப்படி ஒரு வார்த்தையும் கிடையாது.நான் பூதுகன். சார்வக சமயத்தைச் சேர்ந்தவன். நீங்கள் எல்லாம் சொல்லிக் கொண்டு திரிவீர்களே, நாஸ்திகன், நாஸ்திகன் என்று. அந்த வகையைச் சேர்ந்தவன், பாபம், புண்ணியம், நரகம், சுவர்க்கம் இதில் எதுவுமே எங்களை வந்து அண்டாது என்ற கொள்கையுடையவன். தான் நாஸ்திகளுாயினும் அன்பு இரக்கம், பச்சாத்தாபம், இத்தகைய மனித உணர்ச்சிக்குப் புறம்பானவன் அல்ல. ஆனால் அத்தகைய உணர்ச்சிகளைப் பெரிது பண்ணி இந்த உலகத்தில் தீமைகளை வளர விடுவதில் எனக்கு விருப்பம் இல்லை. புத்தரை வணங்குகிறேன். ஆனால் இத்தகைய பாபாத்மாவை வஞ்சகக்காரனைக் கடலில் எறிந்து ஒழித்து விடுவதுதான் நீங்கள் சொல்லும் புண்ணியம் என்று நினைக்கிறேன்” என்றான்.
பூதுகனுடைய நீண்ட பருத்த புஜங்களிடையே கலங்கமாலரையர் சிக்கிக் கொண்டிருந்தார். அவருடைய கரங்கள் மேலெழும்பாவண்ணம் கிடுக்கி போல் தன் நீண்டகரங்களால் பிணைத்து உடும்பு போல் பிடித்துக் கொண்டிருந்தான் பூதுகன். உண்மையாகவே இந்தச் சந்தர்ப்பத்தில் தன் பலத்தையெல்லாம் இழந்திருந்த கலங்கமாலரையர் அப்பொழுது அவன் விட்டால் போதும், எப்படியாவது உயிர் தப்பி ஓடி விடலாம் என்றுதான் எண்ணினார்.
மாலரையரின் முகத்தைப் பார்க்க மாலவல்லிக்கும் அவளோடு நின்ற அந்த அழகான வாலிபனுக்கும் சிறிது மன இரக்கம் ஏற்பட்டது. “இந்தத் துறவி உங்களை மறுபடியும் தாக்க வந்தது பிசகுதான். இது துறவிக்குரிய குணமும், கொள்கையும் ஆகாது. இப்படிப் பட்டவர்கள் துறவறத்துக்குரிய ஆடைகளை அணிந்து வெளிக் கிளம்புவதை நான் வெறுக்கிறேன். ஆனால் மறுபடியும் நீங்கள் இவரைக் கடலில் தள்ளி உயிர் வாங்க நினைப்பது கொடிது. எனக்காகவாவது அவரை விட்டு விடுங்கள். ஓடிப் போய் உயிர் வாழட்டும்” என்றான் அந்த வாலிபன்.
“நான் இவனை விட்டு விடுகிறேன். ஆனால் இப்படிப்பட்ட துரோகி இப்படிப்பட்ட வேஷத்தில் இந்தக் காவிரிப் பூம்பட்டின புத்த விஹாரத்தில் ஒரு வினாடி கூட இருக்கக்கூடாது. நாளைய தினம் இவனை இந்தப் புத்த விஹாரத் தில் பார்க்க நேர்ந்தால் மறுபடியும் என்ன நடக்குமோ? இவன் உயிரை வாங்காமல் நான் விட மாட்டேன். நீங்களே கேளுங்கள். இங்கிருந்து இப்படியே இவன் ஓடி விடுகிறானா என்று. உங்களுக்காக இவனை உயிரோடு விட்டு விடுகிறேன்” என்றான் பூதுகன்.
அந்த வாலிபன் “பிக்ஷுவே! நீங்கள் இங்கிருந்து ஓடி விடுகிறீர்களா? உண்மையாகவே உங்களைப் போன்றவர்கள் புத்தப் பள்ளிகளிலும், ஆலயங்களிலும் இருப்பது தவறு என்று நான் நினைக்கிறேன். நான் ஜைன சமயத்தைச் சேர்ந்தவன். இருப்பினும் புத்தரிடம் ஆழ்ந்த பக்தி உள்ளவன். நீங்கள் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து போய் விடுவதுதான் நல்லது” என்றான்.
கிடுக்கிப் பிடியில் தவித்துக் கொண்டிருந்த கலங்கமாலரையர் மெதுவான குரலில், “சரி! நான் போய் விடுகிறேன்” என்று கூறினார்.
பூதுகன் தன் பிடியைச் சிறிது தளர்த்தி, “உன்னை விட்டு விடுகிறேன். ஏன் தெரியுமா? அந்தக் கொடும்பாளூர் வீரர்கள் உன்னைக் கொன்று அடைய வேண்டிய பாக்கியத்தை நான் அடைய வேண்டா மென்பதற்காகத்தான் / இன்னொரு விஷயத்தையும் நினைவில் வைத்துக் கொள். ‘மறுபடியும் சோழ சாம்ராஜ்யம் இந்நாட்டில் மகோன்னத நிலையை அடையப் போவதை உன்னாலோ என்னாலோ தடுக்க முடியாது என்பதுதான் அது. ஏனென்றால் மக்களின் மனநிலை அப்படி இருக்கிறது” என்று சொல்லி அவரை விடுவித்தான்.
உயிர் பிழைத்த கலங்கமாலரையர் அவமானம் மிக்கவராய் எவ்வித வார்த்தையும் சொல்லாமல் தலைகுனிந்த வண்ணம் மெதுவாக நடந்தார்.
அந்த பௌத்த பிக்ஷுவுக்கும். பூதுகனுக்கும் இத்தகைய கொடூரமான சண்டை நடப்பதற்குக் காரணம் என்னவென்று அந்த என்னவென்று அந்த வாலிபனுக்குத் தெரியாது. அதைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அவர்கள் இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது கேட்பதற்கு அவகாசம் இல்லாதிருந்தது. ஆரம்பத்தில் பிக்ஷுவிடம் அவனுக்குச் சிறிது இரக்கம் ஏற்பட்டிருந்தாலும் பின்னால் அந்த பிக்ஷு பூதுகனை முரட்டுத்தனமாகப் பாய்ந்து தாக்க நினைத்த போது சட்டென்று அவன் மனத்தில் ஒரு வெறுப்பு தோன்றி விட்டது. அவன் சாதாரண பிக்ஷு அல்ல என்ற முடிவுக்கு வந்து விட்டான் அந்த வாலிபன். அதோடு மட்டுமல்ல; கடைசியாக அந்த பௌத்த பிக்ஷவைத் தன் பிடியிலிருந்து விடும்போது, பூதுகன் சொல்லிய வார்த்தைகள் அவனுக்குச் சிறிது ஆச்சரியத்தை அளித்ததோடு அவர்களுக்குள் ஏற்பட்டுள்ள சச்சரவு எதன் காரணமாக இருக்கும் என்பதையும் அவனால் ஓரளவு உணர்ந்து கொள்வதற்கு அனுகூலமாயிருந்தது.
மாலவல்லி அந்த வாலிபனுக்கு நெருங்கினாற் போல் நின்று கொண்டிருந்தாள். சிறிது நேரத்துக்கு முன்னால் வைகைமாலையின் வீட்டில் கண்ட அந்த இளைஞன் பூதுகனை மறுபடியும் கடற்கரையில் தான் ஒரு வாலிபரோடு தனித்திருக்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாகக் காண நேர்ந்தது, பிக்ஷுணிக் கோலத்திலிருந்த அவளுக்கு அவளுக்கு வெட்கமாகவும் தலை இறக்கமாகவும் தானிருந்தது. அவன் தன்னுடைய தோழி வைகைமாலையின் காதலன் என்பது அவளுக்கு நன்கு தெரியும். அவனுடைய குணம், கொள்கை இவைகளைப் பற்றி யெல்லாம் அடிக்கடி வைகைமாலை சொல்லக் கேட்டிருக்கிறாள். நாஸ்திகப் பிரசாரகனான அவன் புத்த பிணியாகிய தன்னை நடுநிசியில் ஒரு வாலிபனோடு தனித்திருந்ததைப் பார்த்து விட்டது தனக்கு மாத்திரம் அல்லாமல், புத்த சமயத்துக்கும், புத்த சங்கத்துக்கும் எத்தகைய இழுக்கை ஏற்படுத்தும் என்பதை யெண்ணி அவள் நடுங்கினாள்.
அமைதி நிறைந்த அந்தக் கடற்கரை லவொளியில் அம்மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்த வண்ணமே சிறிது நேரம் மௌனமாக நின்றனர். பூதுகன் பேச ஆரம்பித்தான். அவனுடைய பேச்சில் கேலித்தனம் மிகுந்திருந்தது. அவன் மாலவல்லிக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் வாலிபனைப் பார்த்து, “பகவதியை எனக்கு நன்றாகத் தெரியும். தங்களைத்தான் தெரியாது. பகவதியின் மனம் புத்த பெருமானின் களங்கமற்ற ரூப சௌத் தரியத்தில்தான் பக்தியும், பற்றும் கொண்டிருக்கிறது என்று நினைத்தேன். தங்களைப் போன்ற யௌவன வாலிபரிடமும் அவள் மனம் லயித்திருப்பதைக் கண்டு எனக்கு மகிழ்ச்சி. இதைக் கேட்டால் என்னுடைய காதலி வைகைமாலையும் சந்தோஷப்படுவாள். வீணாக இந்தச் சீவர ஆடைக்குத் தன் மனத்தையும் யௌவனத்தையும், எழிலையும் பலி கொடுக்காமல் இவ்வுலகில் ஒவ்வொருவரும் அனுபவிப்பதற்காகத் தேங்கிக் கிடக்கும் இன்பத்தில் திளைத்து அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கம் பகவதிக்கு ஏற்பட்டதிலும் எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. போகட்டும்! நான் யாரென்று தாங்கள் தெரிந்து கொண்டிருக்கலாம். ஆனால் தாங்கள் யாரென்று நான் அறிந்து கொள்ளவில்லையே?”
அந்த வாலிபனுக்கும் அப்பொழுது சட்டென்று பதில் சொல்ல முடியாதபடி சிறிது சங்கடம் ஏற்பட்டது. அவன் மாலவல்லியின் முகத்தைப் பார்த்தான். ஆனால் அவளோ மன அச்சத்தினால் கவிழ்ந்திருந்த தலையை நிமிர்த்தாமலே நின்று கொண்டிருந்தாள். பூதுகன் அவ்விருவருடைய முகத்தையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான்.
இளம் வாலிபன் சிறிது தைரியம் கொண்டவனாகப் பேசத் தொடங்கினான். “நான் கங்கபாடியைச் சேர்ந்தவன். என் பெயர் வீர விடங்கன். ஒரு சாதாரணப் போர்வீரன்” என்றான்.
பூதுகன் சிரித்துக்கொண்டே, “நீங்கள் கங்கநாட்டைச் சேர்ந்தவரா? மிகவும் சந்தோஷம். சாதாரணப் போர்வீரராக யிருந்தாலென்ன? இராஜகுமாரர்கள் கூட இவ்வளவு அழகாகவும் கம்பீரமாகவும் இருப்பதில்லையே? நான்கூட உங்களைப் பார்த்ததும் நீங்கள் ராஜகுமாரராய்த்தான் இருக்க வேண்டுமென்று நினைத்தேன். தமிழகத்தின் முக்கால் பகுதியைத் தன் ஆட்சியின்கீழ் வைத்திருக்கும் பல்லவ சக்கரவர்த்திக்கு உங்கள் அரசர் ராஜசிம்மர் உற்ற நண்பர் அல்லவா? எனக்கு ஒரு ஆச்சர்யம்! ஜைன சமயத்தைச் சேர்ந்த உங்களுக்குப் புத்த சங்கத்தைச் சேர்ந்த இந்த மங்கையிடம் காதல் ஏற்பட்டது தான் விந்தை – இதிலிருந்து தெரிய வில்லையா? கடவுளின் தோட்டத்தில் அவருக்கு அர்ப்பணிப்பதற்காக மலர்ந்த தேனை ஏந்தி வண்டை அழைக்காமல் மலராகவே இருந்தாலும் அந்த மலர் இருப்பதில்லை; அழகு, அன்பு, காதல் இவை எல்லாம் சாதி, மதம், கொள்கை, அந்தஸ்து இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவை என்று. இத்தகைய அந்தரங்கமான காதல் இருக்கும் போது இவள் ஏன் இப்படித் துறவுக் கோலம் பூண்டு திரிய திரிய வேண்டும்? நீங்கள் ஏன் கங்கபாடியிலிருந்து காவிரிப் பூம்பட்டினம் வரையில் வர வேண்டும்? இவளை ஏதேனும் ஒரு முறையில் விவாகம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தக் கூடாதா?” என்றான்.
வீரவிடங்கள் என்னும் அவ்வாலிபன் பூதுகனின் வார்த்தைக்கு எவ்வித பதிலும் சொல்லவில்லை. சிறிது தயங்கிய படியே நின்றான். அப்பொழுதுதான் மாலவல்லிக்குப் பேசுவதற்குச் சிறிது தைரியம் ஏற்பட்டது. “எங்கள் விவாக விஷயத்தைப் பற்றி நாங்களே யோசித்து முடிவு செய்து கொள்கிறோம். நாங்கள் இருவரும் சந்திப்பதைப் பார்த்ததினாலேயே நீங்கள் இவ்வித முடிவுக்கு வந்து யோசனை சொல்லத் தொடங்கி யிருக்கிறீர்கள். அது தவறு – நீங்கள் சொல்லியபடி எங்கள் இருவருக்கும் உள்ள சம்பந்தத்தை நான் மறுக்கத் தயாராக இல்லை. அதனால் எங்களுக்கு யோசனை சொல்ல ஒருவர் வேண்டுமென்று நாங்கள் நினைக்கவில்லை. மன்னிக்க வேண்டும்! தயவுசெய்து எங்கள் விவாக விஷயமாகத் தாங்கள் யோசனை கூற வேண்டாம்” என்றாள்.
“ஆமாம்! அவள் விருப்பம் போல் தான் என் விருப்பமும். எங்களுடைய அந்தரங்கமான வாழ்க்கையில் பிறருடைய யோசனைகளுக்கு இடமே இல்லை. மன்னிக்கவும். உங்களுடைய நட்புக் கிடைத்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம். ஆனால் எங்களுடைய விவகாரம் தவிர தவிர மற்ற எதைப் பற்றியும் உங்களோடு பேசவோ, அல்லது உங்கள் யோசனையைக் கேட்கவோ நான் சித்தமாக இருக்கிறேன்” என்றான் வீர விடங்கன்.
பூதுகன் தனக்குள் சிரித்துக் கொண்டே, “உண்மைதான். பிறர் காதல் வியவகாரங்களைப் பற்றிப் பேச நானும் விரும்ப மாட்டேன். ஆனால் சில சமயங்களில் இந்தப் பொல்லாத காதல், மதம், அரசாங்கம், தேசம், போர் முதலியவைகளோடு தன்னைப் பிணைத் துக் கொண்டு விடுகிறது. காதலினால் மதம் பாழாகிறது. காதலினால் சாம் ராஜ்யங்கள் பாழாகின்றன: சில சாம் ராஜ்யங்கள் நிலைநிறுத்தப்படுகின்றன. காதலினால் எவ்வளவு மன்னாதி மன்னர்களெல்லாம் ஒருவரோடு ஒருவர் போரிட்டு மாண்டிருக்கிறார்கள் என்பதைக் கணக்கிட்டுச் சொல்ல முடியாது. உங்கள் காதல் விவகாரங்களில் நான் தலையிட விரும்பவில்லை. ஆனாலும் இதையெல்லாம் சொல்லலாம் என்ற ஆசையில் சொல்லி விட்டேன். உங்கள் காதல் எந்த சாம்ராஜ்யத்தை அழிப்பதற்காக இருந்தாலும், எந்த சாம்ராஜ்யத்தை நிலைநிறுத்துவதற்காக இருந்தாலும், எந்த தருமத்தைக் குலைப்பதற்காக இருந்தாலும், எந்த தருமத்தை நிலை நாட்டுவதற்காக இருந்தாலும் அது நீடூழி வாழட்டும்! அதைப்பற்றி இனி மேல் நான் பேசவில்லை” என்றான்.
“எந்த சாம்ராஜ்யத்தைக் குலைப்பதற்காகவோ அல்லது நிலைநிறுத்துவதற்காகவோ, எந்த தருமத்தை குலைப்பதற்காகவோ அல்லது எந்த தருமத்தை நிலைநிறுத்துவதற்காகவோ ஏற்பட்டதில்லை எங்கள் காதல்……” என்றான் வீரவிடங்கள்.
“மிக்க மகிழ்ச்சி. உங்கள் காதல் – காதல் சாம்ராஜ்யத்தைக் காப்பாற்றுவதற்காகவும் காதல் தருமத்தை நிறுத்துவதற்காகவுமே ஏற்பட்டது என்று சொல்லி இருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும்” என்றான் பூதுகன் சிரித்துக் கொண்டே.
“உங்களைப்போல் மனம் விட்டுப் பேசும் நண்பர்களைக் கண்டால் எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று கூறினான் வீரவிடங்கன்.
“உங்களுக்குப் பிடிக்கலாம். ஆனால் இந்தப் பெண்களுக்கே மனம் விட்டுப் பேசுபவர்களைக் கண்டால் பிடிக்காது” என்றான் பூதுகன் மாலவல்லியைப் பார்த்துக்கொண்டு.
“மனம் விட்டுப் பேசுபவர்களைக் கண்டால் பிடிக்காது என்று அர்த்தமில்லை. மனம் விட்டு எல்லாவற்றையுமே பேச நினைப்பவர்களைக் கண்டால் தான் பெண்களுக்குப் பிடிப்பதில்லை” என்று சொன்னாள் மாலவல்லி சிறிது கோபம் நிறைந்த குரலில்.
”நண்பரே! இப்படி ஒரு வார்த்தையைக் கூடப் பொறுமையுடன் சகித்துக் கொள்ள முடியாத பெண்களைப் பௌத்த சங்கத்தில் சேர்த்துக்கொள்ளுகிறார்கள். பாருங்கள்! பாருங்கள்! அதுதான் விநோதம். அதிலும் பிசகில்லை குண்டலகேசியைப் போல் எவரிடத்திலும் வாதாடி வெற்றி கொள்ளும் பெண்கள் தானே அவர்களுக்கு வேண்டியிருக்கிறது? ஆனால் குண்டலகேசியைப் போல் தன் கணவனையே மலையிலிருந்து உருட்டித் தள்ளும் குணம் எல்லாப் பெண்களிடமும் குடிகொள்ளாதிருந்தால் மிகவும் உத்தமம்தான்” என்றான் பூதுகன் நகைத்தபடியே. ”ஏன்? அவள் தன் கணவனைக்கொன்றதில் என்ன பிசகு இருக்கிறது? தன்னைத் தாக்க வந்த பசுவையும் கொல்லலாம் என்று சாஸ்திரம் சொல்கிறது. பெரிய கள்வனை மணந்துகொண்ட குண்டலகேசி அவனைக் கள்வனென்று பாராமல் கணவன் என்பதற்காக எவ்வளவோ அன்பாக நடந்து கொண்டாள், அப்படி இருக்கையில் அவள் அணிந்து கொண்டிருந்த ஆபரணத்துக்காக அவளை மலை உச்சியிலிருந்து தள்ளிவிட நினைத்தான். கணவன் என்று சொல்லிக் கொள்ளும் அந்த மகாபாவி. இத்தகைய கொடுமையாளனை உலகத்தில் வைத்திருப்பது பிசகு எனக் கருதி, அவன் தன்னை மலையிலிருந்து தள்ளி விடுவதற்கு முன்னால் குண்டலகேசி அவனை மலையிலிருந்து தள்ளி விட்டாள். கணவனைக் கொன்றோம் என்பதற்குப் பிராயச்சித்தமாக புத்த பிக்ஷுணியாகி, ததாகதரின் திருப்பாத கமலங்களையே சரணென்று நம்பி விட்டாள் அவள்” என்றாள் மாலவல்லி.
இதைக் கேட்ட வீரவிடங்கன் சிறிது ஆத்திரம் கொண்டவனாக, “தன் கணவனையே கொன்ற ஒருத்தியின் பாபத்துக்குப் பிராயச்சித்தம் பௌத்த சங்கத்தில் பிக்ஷுணியாகச் சேர்ந்து விடுவதுதானா? இதை நான் ஒப்புக் கொள்ள முடியாது. கணவனைக் கொல்வதைவிட உலகத்தில் மகா பாதகம் ஏதேனும் உண்டா? அன்பு வழிக்கும், அஹிம்சா தருமத்துக்கும் எவ்வளவோ முரணானது. எங்களுடைய ஜைன சமா ஐத்துள் இத்தகைய பெண்களுக்கு இடமே இருக்காது. புத்த சங்கத்துள் பிணிகளுக்கு அளிக்கப்படும் உரிமைகளும், பதவிகளும் ஜைன சமயத்தைச் சேர்ந்த பெண்ணுக்குக் கொடுக்கப் படுவதில்லை. முதலில் தன்னுடைய மண வாழ்க்கையில் ஜைன சமயத்தைச் சேர்ந்தவளாக இருந்த குண்டலகேசி தன்னுடைய அகிருத்தியங்களுக்குப் பின், அச்சமயத்தினர் தன்னை விரும்ப வில்லை, தனக்கு சன்னியாச யோக்கியதை அளிக்கவில்லை என்பதற்காகவே புத்தசமயத்தில் சேர்ந்தாள்” என்றான்.
வீரவிடங்கனின் வார்த்தை மாலவல்லிக்குச் சிறிது ஆச்சர்யத்தை அளித்தது. “நீங்கள் தயவு செய்து என் எதிரில் புத்த சமயத்தைப் பற்றிப் பரிகசிக்க வேண்டாம். நான் அப்புறம் ஜைன சமயத்தைப் பற்றி ஏதேனும் சொன்னால் மனத்தாங்கல் படுவீர்கள். ஜீவ இம்சை செய்யக் கூடாதென்று மயில் பீலியால் தரையைத் துடைத்துக் கொண்டே நடந்து செல்லும் ஆடையணிந்து கொள்ளாத திகம்பரர்களைப் பற்றி நான் சொல்லப் புகுந்தால் மிகவும் வெட்கக்கேடாக முடியும். உடம்பில் உள்ள அழுக்கில் கிருமிகள் இருக்கும்: தேய்த்துக் குளித்தால் அவை இறந்து விடும் என்று குளிக்காமல் அஹிம்சா தர்மம் பேசி உடல் நாற்றம் எடுக்க ஊரில் திரிபவர்களைப் பற்றி நான் சொல்ல வேண்டுமா?”
வீரவிடங்கனுக்கும், மாலவல்லிக்கும் மத சம்பந்தமான வாக்குவாதம் ஏற்பட்டு விட்டதைப் பார்த்துப் பூதுகன் சிரிததான். அவனுக்குச் சரியான சமயம் வாய்த்தது. “பார்த்தீர்களா? எந்த சாம்ராஜ்யத்தைக் குலைப்பதற்காகவோ, நிலைநிறுத்துவதற்காகவோ எந்த தருமத்தைக் குலைப்பதற்காகவோ நிலைநிறுத்துவதற்காகவோ எங்களுக்குள் காதல் ஏற்படவில்லை யென்று சொன்னீர்களே? இப்பொழுது சகிப் புத்தன்மை இல்லாமல் அவரவர்கள் கொள்கைகளை அவரவர்கள் உயர்வாகப் பேசித் தர்க்கம் செய்கிறீர்கள் பார்த்தீர்களா? காதலுக்காக மனிதன் மற்ற எல்லாவற்றையும் எளிதில் துறந்துவிட முடிகிறதில்லை.அப்படித் துறந்தால் எவ்வளவோ விஷயங்கள் பாதிக்கப்படுகின்றன. இவ்வளவு காதலோடு இருக்கிறீர்களே ? உங்கள் சமய உணர்ச்சி உங்களை விட்டு மாறி விட்டதா?” என்றான் பூதுகன்.
வீரவிடங்கணும் மாலவல்லியும் பூதுகனின் வார்த்தையைக் கேட்டு வெட்கம் மிகுந்த நிலையில் நின்றனர். பூதுகன் மேலும் அவர்கள் நிலையைச் சங்கடத்துக்கு உள்ளாக்கப் பிரியம் இல்லாதவன் போல், “சரி, நாழிகையாகி விட்டது. போதும். இப்படியே இங்கு நின்று பேசிக் கொண்டிருந்தால் பொழுதுகூட விடிந்து விடும். பகவதி இப்போதே பௌத்த விஹாரத்துக்குச் சென்று விடுவது நல்லதல்லவா?” என்றான்.
அவர்களும் அப்பொழுதுதான் சுய உணர்ச்சி பெற்றவர்கள் போல அவ்விட மிருந்து மெதுவாக நடந்தார்கள். பூதுகனுக்கு மாலவல்லி விஹாரத்துக்குச் சென்றபின் வீரவிடங்கன் எங்கு செல்கிறன் என்று அறிந்து கொள்ள ஆவல். அவ்விருவரையும் வழியனுப்புவது போல அவர்களைப் பின் தொடர்ந்து மெதுவாக நடந்தான். அங்கிருந்த விஹாரத்திலுள்ள சம்பாதிவனம் சமீபத்தில்தான் இருந்தது.
அவர்கள் அந்த வனத்தை நெருங்கியதும் அவ்வனத்துக்கு வெளிப்புறம் இருந்த மரத்தில் ஒருகுதிரை கட்டப்பட்டுக் கம்பீரமாக நின்றுகொண்டிருந்தது.
அந்தக் குதிரையைப் பார்த்ததுமே பூதுகனுக்கு அந்தக் குதிரைக் குரியவன் வீரவிடங்கன்தான் என்பது விளங்கி விட்டது. வீரவிடங்கன் குதிரையின் முதுகில் தட்டி விட்டு மரத்தோடு பிணைத்திருந்த கடிவாள வாரை அவிழ்த்தான். மாலவல்லி தன் காதலனின் பிரிவுக்குரிய நேரம் நெருங்கி விட்டதை யறிந்து சிறிது மன வியாகூலம் அடைத்தவள் போல் ஒரு புறமாக ஒதுங்கி நின்றாள். பூதுகன் கங்கபாடியிலிருந்து வந்திருக்கும் வீர விடங்கன் எங்கு தங்கி இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ள ஆசைப்பட்டவன் போல் “நீங்கள் இந்தச் சோழ நாட்டில் எங்கு தங்கியிருக்கிறீர்கள் என்று நான் அறிந்து கொள்ளலாமா?” என்று கேட்டான்.
வீரவிடங்கன் சற்றுத் தயங்கியவனாக, “இங்கு இந்த நாட்டில் தங்குவதற்கு என்று ஒரு இடம் வேண்டுமா? பல ஊர்களைச் சுற்றிக் கொண்டு இங்கு வருவேன்” என்றான்.
“அப்படியென்றால் இன்னும் சில நாட்கள் இங்கு தங்குவீர்கள் என்று நினைக்கிறேன்!” என்றான் பூதுகன்.
”ஆம். இந்திர விழா வரையில் இந்த ஊரில் இருப்பேன், மருவூர்ப்பாக்கத்தில் எங்கள் நாட்டிலிருந்து வந்திருக்கும் வர்த்தகர் ஒருவரோடு தங்கி இருக்கிறேன்” என்றான்.
” சரிதான். நாளை மறுதினம் இந்திர விழா. நாளைய தினம் இரவும் நீங்கள் இருவரும் சந்திப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் இந்திரவிழாவன்று இந்தக் கடற்கரை நீங்கள் தனிமையில் சந்திப்பதற்கு இடம் தராது. இந்திர விழாவன்று கூட்டமும் கேளிக்கையும் தானே அதிகமாக இருக்கும்?” என்று சொன்னான் பூதுகன்.
வீரவிடங்கனும் மாலவல்லியும் இதற்கு எந்த விதமான பதிலும் சொல்லவில்லை.
வீரவிடங்கன் குதிரைமேல் பாய்ந்து ஏறி உட்கார்ந்து மாலவல்லியிடம், ‘போய் வருகிறேன்’ என்று சொல்வது போல் தலையை அசைத்தான். அவளும் துயரம் தோய்ந்த முகத்தோடு அவனுக்கு விடையளிப்பது போல் தலையை அசைத்தாள். எஜமானரின் உத்தரவை எதிர்பார்ப்பதுபோல் புறப்படும் வேகத்தில் நின்று கொண்டிருந்தது அந்தக் குதிரை. “தங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. இனி அடிக்கடி சந்திப்போம்” என்று பூதுகனுக்குத் தன் வணக்கத்தைச் செலுத்திவிட்டு மாலவல்லியிடம் விடைபெற்றுக் கொண்டு குதிரையைத் தட்டி விட்டான் அவ்வீர வாலிபன்,
அச்சமயம் வீரவிடங்கனின் குதிரை எந்த மரத்தில் சுட்டப்பட்டிருந்ததோ அந்த மரத்தடியின் நிழலில் நிழலோடு நிழலாக ஒதுங்கி ஒளிந்திருந்த ஒரு உருவம் அவர்கள் மூவரும் மூன்று பாதைகளில் சென்று மறைத்த பின் வெளியேறி, அந்தச் சம்பாதி வனத்துக்குள் அதிவேகமாக மாலவல்லியைத் தொடர்ந்து சென்று மறைந்ததை யார் அறிந்திருக்க முடியும்?
முன் கதை
பெருமை பொருத்திய சோழ சாம்ராஜ்யம் கரிகாலன், நலங்கிள்ளி முதலிய பேரரசர்கள் பெருமையுடன் ஆண்ட பின் நிலைகுலைந்து. தாழ்வுற்ற நிலைக்கு வருகிறது. காஞ்சியிலிருந்து பல்லவப் பேரரசும் மதுரையிலிருந்து பாண்டியப் பேரரசும் சாம்ராஜ்ய ஆசை கொண்டு போராடும் காளம். இந்நிலையில் இடையே இருந்த சோழநாடு பலவித இன்னல்களுக்கு உள்ளாகிறது.
சோழநாட்டு ம நாங்கள் அடையும் இன்னல்களுக்கிடையே மறுபடியும் நாட்டில் சோழ சாம்ராஜ்யம் ஏற்பட்டால்தான் நாடு நலமடையும் என்பதை உணர்கிறார்கள். ஒரு புறம் அரசியல் போராட்டம், ஒருபுறம் மதப் போராட்டக் குழப்பருமாவிருக்கும் வேளையில் நாட்டு நலனை எண்ணி மறுபடியும் சோழ சாம்ராஜ்யம் ஏற்பட வேண்டுமென்பதற்காக முயற்சி செய்யும் வீரவாலிபர்களும் தோன்றுகிறார்கள்.
சோழ மன்னர்களின் தலைநகராக ஒரு காலத்தில் விளங்கிய காவிரிப்பூம்பட்டினம் என்னும் பெருமை பொருந்திய நகரில் ஆரம்பமாகிறது. பூதுகன் என்ஒெரு நாஸ்திகவாதி, வாலிபன், புரட்சிகரமான சித்தமுள்ளவன். நெஞ்சகத்தில் மறுபடியும் நாட்டிலே சோழ அரசு நிலவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். காவிரிப்பூம்பட்டினத்துக் கடை வீதியில் வேடிக்கை பார்த்தவண்ணம் வருகிறான். அங்கொரு வாலிபன் தன் காதலிக்கு முத்துச்சரம் வாங்கிக் கொடுக்கத் தயங்குகிறான். பூதுகன் உலகில் இன்ப வாழ்க்கை வாழவேண்டியதை அவனுக்கு உபதேசம் செய்யும்போது அந்த வாலிபனால் தாக்கப்படுகிறான்.
பொறுமையும் பெருத்தன்மையும் கொண்டு பூதுகன் தன்னைத் தாக்கிய வாலிபனுக்குச் சில எச்சரிக்கைகள் செய்து விட்டுப் போகிறான். அவன் சிறிது தூரம் சென்றதும் ஒரு பிரபு இரு யவன நங்கைகளை விலைக்கு வாங்கத் தயங்கியபோது ‘உலகில் இன்பம் அனுபவிக்கவே பிறந்தோம்’ என்று கூறி அவர் தயக்கத்தைப் போக்குகிறன். பிறகு பூதுகன் கடற்கரையை நோக்கிச் செல்கிறான்.
பூதுகன் கடற்கரைப் பக்கம் வரும்போது பெருமழை பிடித்துக் கொள்கிறது. அவன் மழைக்குத் தப்புவதற்காகக் கடற்கரைக்குச் சமீபமாக உள்ள சம்பாதிவன புத்த விஹா ரத்துக்குச் சென்று ஒதுங்குகிறன்.
புத்த விஹாரத்தில் பூசை நேரம். பிக்ஷுக்களும் பிணிகளும் புத்த பெருமானின் சிலைக்கு பலர் அர்ப்பணித்து வணங்குகின்றனர், அச்சமயத்தில் இளம் வயதுடைய ஒரு பீக்ஷுணி பகவானுக்கு மலர் சமர்ப்பிக்கப் போகும்போது அவன் ஏதோ பெரும் குற்றம் செய்தவன் – தகாதவன் என்று சொல்லி ஒரு பௌத்த பிக்ஷு அவளைத் தடுக்கிறார். தலைமை பீக்ஷுவாக இருக்கும் அக்க மகாநோர். அந்த பிஷாவைச் சமாதானம் செய்து அந்த பிணியை மனச் சமர்ப்பீக்கச் செய்கிறர். இவைகளை எல்லாம் மறை விலிருந்து பூதுகன் கவனிக்கிறன்.
அங்கு பிரார்த்தனை முடிந்தபின் பிக்ஷுக்களும் பிக்ஷுணிகளும் கலைந்து விடுகின்றனர். ஆனாள் ஒரு பிக்ஷு மாத்திரம் தனியே நின்று கொண்டிருக்க, பூதுகன் அவரை இன்னாரென்று தெரிந்து கொண்டு அவரிடம் நெருங்கிப் பேசுகிறான். அந்த பிஷு தஞ்சையை ஆளும் மாறன் முத்தரையன் என்னும் அரசனின் சேனாதிபதியாக இருந்த களங்கமாலரையர். மறுபடியும் நாட்டில் சோழ சாம்ராஜ்யம் ஏற்படாத வண்ணம் குழ்ச்சி செய்பவர். பூதுகன் அவரிடம் நெருங்கிப் பேசி அவரை வெளியே அழைத்துக் கொண்டு வந்து அவருடைய அபிப்பிராயத்தை அனுசரித்தவன் போல் பேசி அவரிடமிருந்து படைண்மைகளைத் தெரிந்து கொள்ளப் பிரயாசைப்படுகிறான்.
இந்தச் சமயத்தில் அந்த புத்த விஹாரத்தி லிருந்து அன்று மாலை எந்தப் பெண் புத்த பசுவானுக்கு மலர் அர்ப்பணிக்க அருகதையற்றவள் என்று சொல்லப்பட்டாளோ, அந்தப் பெண் எங்கோ போவதைப் பார்க்கிறார்கள். அந்தப் பெண்ணைத் தொடர்ந்து அன்று மாலை அந்தப் பெண் மீது குற்றம் சுமத்திய பிஷுவும் போகிறார். இதைக் கண்டு ஆச்சரியமடைந்த பூதுகன் அவர்களைப் பின் தொடர்ந்து செல்கிறான். அந்த இளம் பிஷுணி கடற்கரை, மருவூர்ப்பாக்கம் முதலிய இடங்களைத் தாண்டி, பட்டினப்பாக்கத்தில் இசைக்கணிகையர்களும், நாட்டியக் கணிகையர்களும் வசிக்கும் விதிக்கு வருகிறாள். அவ் வீதியில் அந்த ஒரு வீட்டில் நுழைவதைக் கண்டு பூதுகன் ஆச்சரியப்படுகிறான். அந்த பிஷுணியைத் தொடர்ந்து வந்த பிஷு, அந்த வீட்டுக்குள் செல்ல முடியாமல் நிற்கும் போது பூதுகன் வந்து அவருக்குக் கேலியாகப் பலவித உபதேசங்களைச் செய்து அனுப்பி விட்டு அந்த வீட்டுக்குள் செல்கிறான்.
பூதுதன் எதிர்பாராத விதமாக அவ்விட்டுக் கூடத்தில் ஒரு அழகான பெண் நாட்டியமாடவும், பிஷுணிக் கோலத்திளிருந்த பெண் அவள் நாட்டியதத்துக்குத் தக்க வண்ணம் வீணையை மீட்டிப் பாடிக் கொண்டிருப்பதையும் பார்க்கிறான். நாட்டியம் ஆடும் பெண் ‘வைகைமாலை’; பூதுகனின் காதலி. அவள் பூதுகனைக் கண்டதும் தன் நாட்டியத்தை நிறுத்திக் கொண்டு அவனோடு தனித்து வந்து பேசுகிறான். பூதுகன் அந்த இளம் வயதுள்ள பிஷுணிக்கும் அவளுக்கும் ஏற்பட்டுள்ள நட்பு பற்றி விசாரிக்கிருன். அவன் மாளவள்ளி என்னும் அந்த பிஷுணியைப் பற்றிச் சொல்கிறான், பூதுகன், அந்தப் பிஷுணியைப்பத்தித் தனக்கு ஏற்பட்டுள்ள சந்ர்தகத்தைச் சொல்கிறான். இந்நிலையில் அந்த மாலவல்லி என்னும் பிஷுணி விடைபெற்றுக் கொண்டு செல்கிறாள்.
பூதுகனிடமிருந்து மாலல்லிக்கு எதிர்வாக ஒரு பௌத்த பிஷு அவளைக் கண்காணிக்கிறான் என்பதை அறிந்து கொண்ட வைகைமாலை அந்த நடுநிளையில் தன் தோழியாகிய மாலவல்லிக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படப் போகிறது என்று சொல்லிப் பூதுகனை அனுப்புகிறாள். பூதுகன் வைகைமாலையின் வார்த்தை யைத் தட்ட முடியாதவனாய்க் கிளம்பிக் கடற்கரைப் பக்கம் வருகிறான். அப்போது கடற்கரை நிலவொளியில் புத்த பிஷுணியாகிய மாலவல்லி ஒரு அழகான வாலிபனுடன் அமர்ந்து சல்லாபமாகப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்துத் திகைக்கிறான்.
மாலவல்லி ஒரு அழகான வாலிபனோடு காதல் கொண்டிருக்கிறாள் என்று எண்ணிய போது, திடீரென்று புத்த பிஷு வேடத்தில் இருந்த களங்கமாளரையர் அவன் மீது பாய்ந்து தாக்கவே, பூதுகன் அவரைத் தூக்கிக் கடலில் பல தடவைகள் எறிகிறான். இந்தச் சமயம் மாலவல்லியோடு பேசிக்கொண்டிருத்த வீரவிடங்கன் என்னும் வாலிபன் வந்து பூதுகனைத் தாக்குகிறான். கடைசியில் கலங்கமாலரையரின் கபட எண்ணங்களை அறிந்து கொண்ட வீரவிடங்கனும் கலங்கமாலரையரைக் கண்டித்து மன்னித்து அனுப்புகிறான்.
பதினோராவது அத்தியாயம்
ரவிதாசனின் கொலை
வீரவிடங்கனும் மாலவல்லியும் மரத்தடியிலிருந்து விடைபெற்றுச் சென்றதும், பூதுகன் வைகைமாலையின் வீடு நோக்கி நடந்தான். அவன் மனத்தில் எத்தனை எத்தனையோ எண்ணங்கள் எழுந்தன. அவன் எதிர்பாராத வண்ணம் அன்று நடந்த காட்சிகள் அவன் மனத்தை மிகவும் சிந்திக்க வைத்தன. வைகைமாலை வீட்டுக்கு வருவது போல் புத்த விஹாரத்தை விட்டு வெளிவரும் மாலவல்லி, இடை வழியில் தன் காதலனைச் சந்திப்பது எதிர்பாராத ஒரு நிகழ்ச்சியாகத்தான் இருந்தது.
அதோடு மட்டுமல்ல: அன்று மாலை புத்த விஹாரத்தில் தன்னோடு மிகவும் அந்தரங்கமாகப் பேசிக் கொண்டிருந்த கலங்கமாலரையர் அன்று இரவு வேளையில் எதிர்பாராத வண்ணம் தன் மீது திடீரென்று பாய்ந்து கொல்ல எத்தனித்ததும் அவனுக்குச் சிறிது வியப்பைத் தான் அளித்தது. அது மாத்திரமல்ல : மாலவல்லியின் காதலன் வீரவிடங்கன் தன்னை ஒரு சாதாரணப் போர்வீரன் என்று சொல்லிக் கொண்டதையும் அவனால் நம்ப முடியவில்லை.
அவனுடைய கம்பீரமான உருவமும், அழகும் அவன் சவாரி செய்யும் குதிரையின் லட்சணமும் அவனை ஒரு சாதாரண வீரன் என்று மதிக்கக் கூடிய நிலையில் இல்லை. கங்கபாடியைச் சேர்ந்தவனா அல்லது வேறு நாட்டைச் சேர்ந்தவன என்ற கவலை அவனுக்கு இல்லை. அவன் சாதாரண வாலிபன் அல்ல என்பது மாத்திரம் அவனுக்கு நிச்சயமாகத் தெரிந்தது. ‘மாலவல்லி,’ பிணிக் கோலம் பூண்டு திரிவதுபோல் அவனும் ஏதோ ஒரு காரணத்துக்காகத் தன் பெயரை மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறான்’ என்று அவன் திடமாக நம்பினான். ஆனால் அவனுக்கு ஒரு உண்மை விளங்கி விட்டது. அவன் ஜைன மதத்துக்கு ஆதரவாக நின்று தன் காதலி மாலவல்லியினிடமே தர்க்கம் செய்யத் தொடங்கியதிலிருந்து அவன் ஜைன சமயத்தைச் சேர்ந்தவன் தான் எனத் திடமாக நம்பினான். கங்கை குல மன்னர்களும், கங்க நாட்டு மக்களும் ஜைன சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அவனுக்குத் தெரியும். மிகவும் கம்பீரமாக விளங்கும் வீர விடங்கன் கங்கை குல அரச பரம்பரையைச் சேர்ந்தவனாக இருப்பானோ என்ற சந்தேகம் வேறு அவனுக்கு ஏற்பட்டது. நிச்சயம் அவன் ஒரு சாதாரணப் போர் வீரனல்ல என்ற முடிவுக்குத்தான் அவன் வந்தான்.
‘கலங்கமாலரையன் ஏன் கடற்கரைக்கு இந்தச் சமயத்தில் வந்தான்’ என்ற குழப்பம் வேறு அவனுக்கு ஏற்பட்டது. மாலவல்லி புத்த விஹாரத்தை விட்டுக் கிளம்பியபோது அவளைப் பற்றிய விவரம் தனக்கு ஒன்றும் தெரியாது போலத் தன்னிடம் பேசிய கலங்கமாலரையன் அதற்கு முன்பே அவளைப் பற்றி ஏதோ சில விவரங்கள் அறிந்து அவளை உளவு பார்த் துக் கொண்டு வந்திருக்கிறான் என்றும் பூதுகனுக்குத் தோன்றியது. பூசைக்குப் பின் எல்லாப் பிஷுக்களும் சபையை விட்டுக் கலைந்ததும் பின்னும் கலங்கமாலரையன் அங்கு நின்று கொண்டிருந்தது. ஏதோ ஒரு காரணத்துக்காகத் தான் இருக்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது. எப்படி இருந்தாலும் இவ்விஷயத்தில் அதிக கவனம் செலுத்தித் தெரிந்து கொள்ள வேண்டுமென்று அவன் தீர்மானித்தான்.
பூதுகன் வைகைமாலையின் வீட்டை அடைந்தபோது நடுநிசியிலும் அந்த வீட்டின் கதவு திறந்திருந்தது. வீட்டுக்குள் சரவிளக்குகள் பிரகாசித்துக் கொண்டிருந்தன. வீட்டின் வெளி வாசலில் வெளிப்புறத்தை நோக்கியவாறு உட்கார்ந்திருந்த வைகைமாலை அவன் வரவை எதிர்நோக்கி இருந்தவள்போல் பரபரப்போடு காணப்பட்டாள். அவன் வீட்டில் நுழைந்ததும் எதிரே ஓடிவந்து, ”என்ன நடந்தது? மாலவல்லி பத்திரமாகப் போய்ச் சேர்ந்துவிட்டாளா?” என்று கேட்டாள்.
பூதுகன் விஷமமாகச் சிரித்துக் கொண்டே, “ஒரே வார்த்தையில் உன்னிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட முடியாது. அவளுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை. ஆனால் நீ ஆச்சரியப்படக் கூடிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. மனத்தைக் கொஞ்சம் அமைதியாக வைத்துக் கொண்டு என்னோடு வா! நான் மிகவும் களைத்திருக்கிறேன். பொழுது விடிவதற்கு இன்னும் அதிக நேரம் இல்லை. இன்ப வேட்கையில் அலைபவன் இந்தச் சிறிது நேரத்தையும் வீணாக்கி விட்டானானால் வாழ்வின் முக்கால் பாகத்தையும் இருளில் தடுமாறி வீணக்கியதற்கு ஒப்பாகும். இன்பம் சொரியும் வெண்ணிலவு மேல்வானில் சென்று அமிழ்வதற்கு முன்னால் நாம் மேல் மாடத்துக்குச் செல்வோம், வா” என்று சொல்லியபடியே அவளுடைய மெல்லிய கரத்தைப் பற்றி இழுத்த வண்ணமே மாடத்துக்கு நடந்தான். அவனுடைய கைப்பிடியில் சிக்கி நடந்து கொண்டிருந்த வைகைமாலை, ”கிணற்று நீரை வெள்ளமா கொண்டு போய் விடும்?” என்று சொல்லிக் கொண்டே நடந்தாள்.
அவன் அவளுக்கு எதுவுமே பதில் சொல்லாமல் அவள் கையையும் விடாமல் பற்றிக்கொண்டு மேல் மாடத்துக்கு வந்து அங்கிருந்த மஞ்சத்தில் அவளை அமர்த்தி அவளுக்குப் பக்கத்தில் தானும் அமர்ந்து கொண்டான். ”கிணற்று நீரை வெள்ளம் கொண்டு போய் விடாது- எனக்குத் தெரியும். ஆனால் அந்தக் கிணற்று நீர் வற்றி விடக் கூடாதல்லவா? வைகைமாலா! உன்னுடைய மனத்தில் தோன்றும் உணர்ச்சி ஊற்றும் எப்பொழுதும் ஒரேவிதமாக இருப்பதில்லை. இன்று மனத்தில் ஏற்படும் ஆசையும் நாளை வா என்றால் வருவதில்லை. இன்று அனுபவிக்க வேண்டியதை இன்றே அனுபவித்து விடவேண்டும். இப்பொழுது இளமையும் அழகும் கொண்ட இவ்வுருவம் தளர்ந்து அழகு குன்றி விடுகிறது. இந்த உடல் வேறு, ஆன்மா வேறு என்று சொல்கிறவர்களின் வாதத்தை மறுக்கிறவன் நான். ஒவ்வொரு ஜீவனின் பருவ முதிர்ச்சிகளுக்குத் தக்கவாறு தேக நிலையின் மாறுதலுக்குத் தக்கவாறு அவனுடைய எண்ணங்களும் செய்கைகளும் மாறுபடுகின்றன. இதனால் ஆத்மாவும் தேகத்தோடு சம்பந்தம் உள்ளது தான், இந்த உடல் சுகத்தை விரும்பும் போது அதுவும் சுகத்தை விரும்புகிறது. இந்த உடல் அழியும் போது அதுவும் அழிந்து விடுகிறது. இந்தப் பிறப்பிலேயே இந்த உடலை ஒட்டிய ஆத்மா அல்லது இந்த ஆத்மாவை யொட்டிய உடல் தன் சுகத்தையும் துக்கத்தையும் அனுபவித்துத் தீர்த்துவிட வேண்டும். இந்த உலகத்தில் சுகமும் இன்பமும் அனுபவித்தால் அதுவே சுவர்க்கம். இந்த உலகத்தில் துக்கமும் கஷ்டமும் அனுபவித்தால் அதுவே நரகம். இதுதான் நாஸ்திகவாதி என்று உலகம் சொல்லும் எங்களுடைய கொள்கை, வைகைமாலா! எனக்கு நீ இன்பமும் சுகமும் தந்து சுவர்க்க போகத்தைக்கொடு, துடிப்புக்கும் துக்கத்துக்கும் உள்ளாக்கி என்னை நரகத்தில் ஆழ்த்தி விடாதே!” என்றான்.
வைகைமாயை ஏளனமாகச் சிரித்தாள், ”உங்கள் கொள்கைகளைப் பற்றி வேறு எங்கேனும் பிரசாரம் செய்து கொண்டு போங்கள். உங்களிடமிருந்து இதைப் போன்ற வார்த்தைகளை ஆயிரம் தடவை கேட்டு விட்டேன். இப்பொழுது நான் உங்களிடமிருந்து எதைக் கேட்க விரும்பினேனோ. அதைப் பற்றிப் பேசுவதுதான் இலட்சணமாகும். நீங்கள் எத்தகைய கொள்கை உடையவர்கள் ஆயினும் உங்களுக்காக என்னை எப்பொழுதோ அர்ப்பணித்துக் கொண்டு விட்டேன். உங்கள் விருப்பத்தை நிறைவேற்றத்தான் நான் இருக்கிறேன். உங்களுக்குள்ள மன ஆர்வமும் துடிப்பும் எனக்கும் உண்டு. ஆனால் நடந்த விவரங்களைத் தெரியப்படுத்தினால் என் மனம் ஆறுதல் அடையும். எனக்கு மன ஆறுதலை அளிக்காமல் நீங்கள் பேசுவதையே பேசிக்கொண்டே போனால்…” என்று சொல்லி ஒருவிதமான கோபமும் பரிவுணர்ச்சியும் கொண்டவள் போல் பார்த்தாள்.
”அட! ஒரு பௌத்த பிஷுணிகூடத் தன் காதலனிடம் பிணக்கம் காட்டாத போது உனக்கு இவ்வளவு பிணக்கம் ஏற்படுவதுதான் மிக்க ஆச்சரியமாய் இருக்கிறது. இது அவன் செய்த பாக்கியம்!'” என்றான்.
பூதுகனின் வார்த்தையைக் கேட்டதும் வைகைமாலை ஆச்சரியம் அடைந்தவளாக “நீங்கள் என்ன சொன்னீர்கள்?” என்றாள் அவன் முகத்தை உற்று நோக்கிக்கொண்டே.
“என்ன சொன்னேனா? நான் எதைச் சொல்லியிருந்தாலும் அதை உனக்குப் புரியும்படியாகத்தான் சொல்லி இருப்பேன்” என்றான் பூதுகன்.
“எல்லாம் புதிர் போடுவது போல் இருக்கிறதே?” என்றாள் அவள்.
“ஆமாம்! புதிர் போடுவது போலத்தான் ஒவ்வொன்றும் நடக்கிறது. இவைகளைப் புரிந்து கொள்ள முடியாமல் நான் எவ்வளவு திணறுகிறேன் தெரியுமா? வைகைமாலை! நான் இந்தச் சந்தர்ப்பத்தில் உயிர் பிழைத்து வந்ததே துர்லபம் என்றுதான் சொல்ல வேண்டும். அதனால்தான் இந்த இன்பகரமான இரவைப் போல் வாழ்க்கையில் மறுபடியும் ஓர் இரவு கிடைக்குமோ, கிடைக்காதோ என்று எண்ணி இதைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்” என்றான்.
வைகைமாலை அவனுடைய பேச்சைக் கேட்டதும் மேலும் திகைப்படைந்தவளாய், “உங்கள் உயிருக்கு அபாயம் நேர்ந்ததா? அப்படி என்ன நடந்தது?” என்று கேட்டாள்.
”அவைகளை யெல்லாம் விவரமாகச் சொன்னால் தான் விளங்கும். நான்
Page 45 Missing. If you have Kalki 10-03-1957 book, please send this page.
ரையனும் என்னை வீராவேசத்தோடு தாக்க ஆரம்பித்தான், மாலரையன் என்னைத் தாக்க ஆரம்பித்தவுடன் மாலவல்லியின் காதலன் என்னைத் தாக்குவதை நிறுத்திக் கொண்டான். உடனே மாலரையனைத் தூக்கிக் கடலில் எறிய எத்தனித்தேன். உடனே மாலவல்லியும் அவள் காதலனும், மாலரையனை மன்னித்து விடும்படி வேண்டிக் கொண்டனர். நானும் அவர்களுடைய வார்த்தைகளுக்கிணங்கி, அவன் மறுபடியும் இந்தக் காவிரிப்பூம் பட்டினத்தில் தலை நீட்டக்கூடாது என்று சொல்லி விரட்டி அனுப்பிவிட்டேன். அதற்குப் பின் நாங்கள் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டோம். மாலவல்லி புத்த விஹாரத்துக்குச் சென்றாள். அவளுடைய காதலன் தன்னுடைய கம்பீரமான குதிரையில் உல்லாசமாக அமர்ந்து எங்கோ சென்றான். நான் இந்த இரவு வீணாகிவிடுமோ என்றெண்ணி ஓடோடி வந்தேன். உன்னைப் பார்க்க. அவ்வளவு தான்” என்று சொல்லி ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு நிறுத்தினான்.
“அதிருக்கட்டும். அந்த மாலவல்லியின் காதலன் என்றீர்களே அவன் யார்?” என்றாள் வைகைமாலை.
“அவன் தான் கங்கபாடியைச் சேர்ந்தவன் என்றும், சாதாரணப் போர் வீரன் என்றும், தன் பெயர் வீரவிடங்கள் என்றும் சொல்லிக் கொள்கிறான். இது எவ்வளவு தூரம் உண்மையோ? என்னால் நம்பவே முடியவில்லை. காதல் விவகாரம் என்றால் இப்படிப்பட்ட பொய் பித்தலாட்டங்க ளெல்லாம் நிறைய உண்டு…” என்றான் பூதுகன்,
“ஏன் உங்களால் நம்ப முடியவில்லை? இதெல்லாம் பொய் பித்தலாட்டமென்று நீங்கள் நினைக்கக் காரணம் என்ன?” என்று கேட்டாள்.
”அவன் சவாரி செய்யும் குதிரை சாதாரணப் போர்வீரன் சவாரி செய்யும் குதிரையாகத் தோன்றவில்லை. அத்தகைய உயர்ந்த சாதிக் குதிரை ஒரு அரசனையோ அல்லது அரச குமாரனையோ தான் தன் முதுகில் கம்பீரமாக ஏற்றிச் செல்லும் என்று நினைகிறேன்” என்றான் பூதுகன்.
“அப்படி என்றால் அவனை ஒரு அரச குமாரன் என்கிறீர்களா?”
”ஆம்! அவனைப் பார்த்தால் அப்படித் தான் தோன்றுகிறது. ஒருவேளை அவன் சொல்லுகிறபடி சாதாரணப் போர் வீரனாக இருந்தால் இத்தகைய அழகோடும், கம்பீரத்தோடும், துரதிர்ஷ்டத்தையும் பெற்றவன் என்றுதான் சொல்ல வேண்டும்” என்றான்,
வைகைமாலை பேசாது மௌனத்தில் ஆழ்ந்திருந்தாள். அவள் ஏதோ ஆழ்ந்த சித்தனையில் இருக்கிறாள் என்பதை அவள் முகக்குறி எடுத்துக் காட்டியது.
”என்ன யோசிக்கிறாய்? இவைகளை யெல்லாம் யோசித்துக் கண்டுபிடித்து விடமுடியாது, அதோ அந்த நிலவைப் பார், நம்மிடம் விடைபெற்றுக்கொள்ள மன்றாடுகிறது. உடலைச் சிலிர்க்க வைக்கும் இந்தத் தென்றல் காற்றில் ஏதோ ஒரு மணம் வீசுகிறது பார்! இது எந்த மலரின் மணம் என்று கண்டுபிடிக்க முடியாதபடி எல்லா மணங்களின் மலரையும் கலந்தல்லவா எடுத்துக் கொண்டு வந்து வீசுகிறது? நீ அதிகமாக மனம் குழம்பி யோசித்தால் தாமரையின் மேல் நிழல் படர்ந்தாற்போல் உன் அழகு சிறிது மங்கி விடுகிறது. இன்று நீ உன் நீண்ட அழகிய கூந்தலை எடுத்துச் சுருட்டிக் கொண்டை போட்டிருப்பது எவ்வளவு அழகாக இருக்கிறது தெரியுமா? வைகைமாலா! கொஞ்சம் என்னைப் பார்! அதோ சந்திரனை மறைக்க மேகம் ஒன்று வருகிறது. அதற்குள் நீ ஒரு புன்சிரிப்பு சிரித்து உன் முகத்தின் முழு சௌந்தர்யத்தையும் எனக்குக் காட்டிவிடு” என்று சொல்லித் தன் அகன்ற விழிகளால் அவளை விழுங்கிவிடுவதுபோல் பார்த்தான், அவன் விழிகளில் காதல் களி நடம் புரிந்தது.
அவள் மிகவும் வெட்கம் நிறைந்தவளாக, “அதிருக்கட்டும். மாலவல்லியைப் பற்றியும் அவள் காதலனைப் பற்றியும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”என்று கேட்டாள்.
“இந்த இன்பகரமான இரவு வேளை யில், இருவரும் அவர்களையே பற்றிப் பேசிப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தால் இந்த நிலவு நம்மைப்பார்த்து ஏளனம் செய்து சிரித்து விட்டுப் போய் விடும். இதோ பார். அவ்விரு காதலர்களைப் பற்றியும் நாம் அப்புறம் பேசிக் கொள்ளலாம். இப்பொழுது நாம் இருவரும் காதலர்கள் என்பதை மாத்திரம் நினைவு வைத்துக்கொள்” என்றான் பூதுகன் காதல் பொங்கி வழிய. “போதும் உங்கள் பரிகாசம்” என்றாள் வைகைமாலை,
மேல் வானத்தடியில் நகர்ந்து கொண்டிருந்த வட்ட நிலவை ஒரு கருமேகம் வந்து தழுவிக் கொண்டது. காதலர்கள் இருவரும் இவ்வுலகையே மறந்து இன்பப் பேச்சுகளிலே மூழ்கியிருந்தனர்.
மறுநாட் காலை பூதுகன் வைகைமாரையிடம் ஏதோ சொல்லிவிட்டு அவளிடம் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினான்; அவன் பட்டினப்பாக்கம் தாண்டி மரூர்ப் பாக்கத்துக்கு வந்தபோது அங்கிருந்த வர்த்தகர்கள் வியாபாரத்தை ஆரம்பிப்பதற்காகத் தங்கள் கடைகளைத் திறந்து கொண்டிருந்தனர். என்றும்போல் இல்லாமல் இன்று மரூர்ப்பாக்கத்திலிருந்த வியாபாரிகளிடையே ஏதோ பரபரப்பு மிகுந்திருந்தது. பலர் பல இடங்களில் சிறு சிறு கும்பலாகக் கூடி எதையோ பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். பூதுகனுடைய ஆவலெல்லாம் முதல் நாளிரவு சந்தித்த மாலவல்லியின் காதலன் வீரவிடங்கனை அங்கெங்கேனும் காணலாமோ என்பதுதான்.
ஆனால் அங்குமிங்கும் வர்த்தகர்கள் கூடி எதையோ பற்றிக் கவலையாகப் பேசிக் கொண்டிருப்பதிலிருந்து நகரிலோ அல்லது அதன் சுற்று வட்டாரங்களிலோ ஏதோ ஒரு சம்பவம் நடந்திருக்கிறது என்பதை அவனுக்கு அறிவுறுத்துவதுபோல் இருந்தது. அவன் ஓரிடத்தில் பேசிக்கொண்டிருக்கும் ஒரு அவர்கள் கூட்டத்தினரை நெருங்கி, பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டான்.
அவன் அங்கு கேள்விப்பட்ட விஷயம் அவனுக்கே பெருத்த ஆச்சரியத்தையும் திகைப்பையும் அளிப்பதாக இருந்தது. அன்று காலையில் பௌத்த விஹாரத்தில் காஞ்சியிலிருந்து புதிதாக வந்திருந்த பௌத்த பிக்ஷ ரவிதாசர் என்பவர் கத்தியால் குத்தப்பட்டு இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார் என்ற செய்திதான் அது. அவனுக்கு எல்லாம் ஆச்சரியத்துக்குமேல் ஆச்சரியமாக இருந்தது. முதல் நாள் இரவு நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சியும் அவன் நினைவுக்கு வந்தது. ரவிதாசன் யாரால் கொல்லப்பட்டிருப்பான்? ஒருவேளை கலங்கமாலரையன் அவளைக் கொன்றிருக்கலாமோ? அல்லது தனக்கு எதிராக இருந்து தன் ரகசியங்களைத் தெரிந்து கொண்டு தன்னை அவமானப் படுத்துவதற்கு நினைக்கும் தாசனைக் கொல்வதற்கு மாலவல்லியும் அவள் காதலன் வீரவிடங்கனும் ஏதேனும் சூழ்ச்சிகள் செய்திருக்கலாமோ என்றெல்லாம் மனங் குழம்பியவாறு அவன் நிற்கும்போது அவனுடைய தோளை யாரோ பின்புறத்திலிருந்து தொடவே சட்டென்று திரும்பிப் பார்த்
தான். அவன் எதிரே வீரவிடங்கன் நின்றுகொண்டிருந்தான்.
பன்னிரண்டாம் அத்தியாயம்
அக்கமகாதேரர்
“ஓ, நண்பரா! வாருங்கள். இவ்வளவு சீக்கிரத்தில் மறுபடியும் உங்களைச் சந்திக்க முடியும் என்று நான் நினைக்கவே இல்லை. சம்பாதி வன புத்த விஹாரத்தில் யாரோ ஒரு புத்த பிக்ஷுவை எவனோ கத்தியால் குத்திக் கொன்று விட்டுப் போய் விட்டானாம். என்ன அக்கிரமம், பாருங்கள்” என்றான் பூதுகன் வீரவிடங்கனிடம்,
”ஆமாம், அக்கிரமம்தான்! நேற்று இரவு உங்களிடம் சிக்கிக் புத்தபிக்ஷுவைப் பிடிக்க வந்த எமன் உங்களிடமிருந்து அவனைப் பிரிக்க முடியாமையால் வேறு எங்கோ ஏமாந்திருந்த வேறு ஒரு புத்த பிக்ஷுவின் உயிரைக் கொள்ளை கொண்டு போய் விட்டான். தம்முடைய கொள்கைகளிலிருந்து மாறி அக்கிரமச் செயல் புரிய நினைக்கும் எந்த வெளி வேஷத் துறவிக்கும் இத்தகைய கதிதான் நேரிடும்” என்றான் வீரவிடங்கன்.
“அது தான் தெரிந்திருக்கிறதே! ஆனால் தம்மீது பிறர் வஞ்சம் வைத்துப் பிறர் தம்மைக் கொல்ல நினைக்கும் அளவில் ஒரு பௌத்த பிக்ஷு என்ன அப்படி அக்கிரமச்செயல் செய்திருக்கப் போகிறார்?” என்றான் பூதுகன்.
“என்ன அக்கிரமச் செயலில் ஈடுபட்டிருந்தாரோ யார் கண்டார்கள்? ஏதேனும் தகாத காரியங்களில் ஈடுபடாத வரையில் சாதாரண புத்த சன்னியாசியைப் படுகொலை செய்ய வேண்டுமென்று எந்த மனிதனுக்கு எண்ணம் ஏற்பட்டிருக்கப் போகிறது?” என்று பதிலளித்தான் வீரவிடங்கன்.
”அந்தப் பௌத்த பிக்ஷு காஞ்சியிலிருந்து வந்தவராம். அவர் பெயர் ரவிதாசராம். ஏற்கனவே அவர் ஜைன சமயத்தினராக இருந்தார் என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஒருவேளை அவர் ஜைன மதத்திலிருந்து விலகிய பிறகு ஜைன மதவாதிகள் அவர் மீது ஆத்திரம் வைத்து ஏதேனும் செய்திருக்கலாமோ?” என்றான் பூதுகன்.
“ஜைன மதவாதிகளா? ஒரு நாளும் இத்தகைய காரியங்களில் ஈடுபடமாட்டார்கள். வேறு யாரோதான் அவரைக் கொலை செய்திருக்க வேண்டும்” என்றான் வீரவிடங்கன்,
“நீங்கள் சொல்வதும் சரிதான். பல கெட்ட எண்ணங்கள் கொண்ட வஞ்சகர்கள் எல்லாம் புத்த சங்கத்தில் சுலபமாக பிக்ஷுகளாகச் சேர்ந்து விட முடிகிற தென்றால் அக்கிரமங்கள் நடப்பதற்குக் கேட்பானேன் ? மனத்தில் ஒரே கவலைதான். நேற்று இரவு நெடு நேரம் வரையில் கடற்கரையில் இருந்த மாலவல்லியே இந்தக் கொலைக்குக் காரணமாவாள் என்று உலகம் கூறினால் அது அவளுக்கு எத்தகைய தீங்கை விளைவிக்கும் என்பதைப் பற்றித்தான் நாம் யோசிக்க வேண்டியிருக்கிறது” என்றான் பூதுகன்.
இதைக் கேட்டதும் வீரவிடங்கன் திகைப்படைந்தவனாக, “அப்படி அவள் மீது பழியைச் சுமத்துவதற்குக் காரணம் என்ன இருக்கிறது?” என்று கேட்டான்.
“தினம் இரவு வேளையில் ஒரு பிக்ஷுணி தனக்குரிய இடமாகிய பௌத்த விஹாரத்திலிருந்து வெளிக்கிளம்பிச் செல்லுவதே மிகத் தவறான காரியம் அல்லவா!” என்றான் பூதுகன்.
“தவறுதான். ஆனால் அவளுக்கும் இந்தக் கொலைக்கும் சம்பந்தம் இருக்குமென்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று கேட்டான் வீரவிடங்கன்.
“நான் அப்படி நினைக்கவில்லை. ஆனால் மாலவல்லியின் நடத்தையைக் கண்டு மற்றவர்கள் அவளைச் சந்தேகித்துக் குற்றம் சொல்லாமல் இருக்க முடியாது அல்லவா?” என்றான் பூதுகன்.
“அது உண்மைதான்” என்று கூறிச் சிறிதுநேரம் யோசனையிலிருந்து விட்டு, “அப்படி ஏதேனும் நடந்தால் அதை என்னால் பொறுக்க முடியாது. நான் என்னுடைய உயிரைக் கொடுத்தேனும் அவளைக் காப்பாற்றி விடுவேன்” என்றான் வீரவிடங்கன் தீர்மானமான குரலில்.
“இதுகூட நீங்கள் செய்யாவிட்டால் என்ன இருக்கிறது? ஆனால் இப்பொழுது அதைப் பற்றி யோசித்து நாம் குழப்பமடைவதைவிட இத்தகைய ஆபத்து ஏற்படாத வண்ணம் பாதுகாப்பதற்கு வேண்டிய யோசனை செய்வது தான் நல்லது” என்றான் பூதுகன்.
“என்ன செய்யலாம்?”
“நாம் முதலில் நிலைமையை அறிந்து கொள்வது மிகவும் அவசியம். நாம் இருவரும் புத்த விஹாரத்துக்குப் போய்ப் பார்த்தால், அங்குள்ளவர்கள் என்ன பேசிக் கொள்ளுகிறார்கள் என்பது நமக்கு விளங்கி விடுமல்லவா?” என்று யோசனை கூறினான் பூதுகன்.
“அதுவும் நல்ல யோசனை தான். வாருங்கள் போவோம். நேற்று உங்கள் நட்பு கிடைத்தது நல்லதென்று நினைத்தேன். இன்று கிடைத்த உங்கள் நட்பு கிடைத்தற்கரியது என்று எனக்கு விளங்கியது!” என்றான் வீரவிடங்கன் மகிழ்ச்சியோடு.
“நண்பர்களாகி விட்டால் ஒருவரோடு ஒருவர் உண்மையாகவும் உள் அந்தரங்கத்தோடும் ஒளிவு மறைவு இல்லாமலும் நடந்து கொள்வது எவ்வளவு சிறந்ததாக இருக்கும் தெரியுமா?அப்படியே நீங்கள் நடந்து கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று கூறினான் பூதுகன்.
பூதுகனின் வார்த்தை வீரவிடங்கனின் மனத்தில் ஏதோ கிளர்ச்சியை ஏற்படுத்தி விட்டது என்பது அவனுடைய முக பாவத்திலிருந்து நன்கு தெரிந்தது. “நான் எப்பொழுதும் என்னோடு உயிருக்கு உயிராகப் பழகுகிறவர்களிடம் உண்மையாகவும் உள் அந்தரங்க சுத்தி யோடும் தான் நடந்து கொள்வது வழக்கம்” என்றான் வீரவிடங்கன்.
“அது வரையில் சந்தோஷம். அப்படியே நாமும் நடந்து கொள்வோம்” என்று சொல்லிய படியே அங்கிருந்து நடந்தான் பூதுகன். அவனைப் பின் தொடர்ந்து நடந்து சென்றான் வீரவிடங்கன். அவர்கள் இருவரும் சம்பாதிவன புத்த விஹாரத்தை அடைந்த பொழுது அங்கு சிறிது கூட்டம் நிறைந்ததாக இருந்தது. அந்த விஹாரத்திலுள்ள பெளத்த பிக்ஷுக்களும், மக்களில் சிலரும், அரசாங்க அதிகாரிகள் சிலரும் கூடி இருந்தனர். எல்லோருடைய முகத்திலும் ஒரு பரபரப்பு உணர்ச்சி தென்பட் டது. சிலர் கூடிக் கூடி ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர். பூதுகனும் வீரவிடங்கனும் புத்தபிரான் சன்னதி போல் விளங்கிய அந்தப் பெரிய கூடத்துக்கு வந்து சேர்ந்தனர். அந்தக் கூட்டத்தின் நடுவே கொலை யுண்ட ரவிதாசரின் உடல் கிடத்தப் பட்டிருந்தது. அதைச் சுற்றிலும் அரசாங்க அதிகாரிகளும், பிக்ஷுக்களும் குழுமி இருந்தனர்.
ரவிதாசரின் மார்பில் கத்தியால் குத்தப்பட்டிருந்த காயம் ஆழமாகப் பதிந்திருந்தது. அதோடு மட்டுமல்லாமல் அவருடைய தேசத்தில் பல பாகங்களில் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டிருந்தன, அவர் தம்மைக் கொல்ல வந்த எதிரியோடு தீவிரமாகப் போர் புரிந்த பின்தான் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதை அவர் உடலில் பல இடங்களில் இருந்த காயங்கள் நன்கு உணர்த்தின. அரசாங்க அதிகாரிகள் அந்தப் புத்த சங்கத்தின் மகாதேரராய் விளங்கும் அக்கமகாதேரரை விசாரணை செய்து கொண்டிருந்தார்கள், வீரவிடங்கனின் கண்களும், பூதுகனின் கண்களும் பிக்ஷணிக் கோலம் தரித்த மாலவல்லி அங்கெங்கேனும் இருக்கிறாளா என்பதைத்தான் தேடின. ஆனால் அவனைப் பார்க்க முடியவில்லை. அங்கு நின்று பேசிக் கொண்டிருந்த பலருடைய வார்த்தைகளைக் கேட்க முடிந்தது, அவர்களால். அவர்களுடைய வார்த்தைகள் பூதுகனுக்கும் வீரவிடங்கனுக்கும் பெரிய கலக்கத்தையும், அதிருப்தியையும் கொடுப்பதாய் இருந்தன.
அந்த புத்த விஹாரத்தில் பிக்ஷவாயிருந்த கலங்கமாலரையரும் பிக்ஷுணியாக இருந்த மாலவல்லியும் திடீரென்று தலை மறைந்து விட்டதால் ரவிதாசர் கொலைக்கு அவர்கள் தான் காரணமாக இருக்க வேண்டும் என்று எல்லோரும் பேசிக் கொண்டார்கள். அதிலும் முக்கியமாக ரவிதாசர் பிக்ஷுணியாகிய மாலவல்லியிடம் ஏதோ குற்றங் கண்டு அதை விசாரணை செய்ய வேண்டும் என்று விரும்பியதும் மற்ற எல்லோருக்கும் தெரியும், இந்த விரோதத்தின் காரணமாக இத்தகைய கொடூரமான செய்கை நடந்திருக்கலாமோ என்று யாவருக்கும் தோன்றியது. அங்கு விசாரணைக்காக வந்திருந்த அரசாங்க அதிகாரிகளிடம் ஒவ்வொருவரும் அதையேதான் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தனர்.
தலைமை பிக்ஷுவாக இருந்து அந்த விஹாரத்தைப் பாதுகாத்து வந்த அக்க மகாதேரர் மிகவும் மனம் உடைந்து போயிருந்தார். புத்தரின் சன்னிதானத்தில் இத்தகைய கொடூரமான செய்கை நடந்தது, உன்னதமான புத்த லட்சியங்களைக் கொண்ட சங்கத்துக்கும், பௌத்த சமயத்துக்கும் இழுக்கை ஏற்படுத்திவிட்டதாக எண்ணி மனம் புழுங்கினார். அந்த மகான், கருணை உருவாகிய புத்தர் பெருமானின் கொள்கைகள், இலட்சியங்கள், கனவுகள் இவைகளெல்லாம் அவருடைய. சீடர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களாலேயே பாழாக்கப் படுவதை எண்ணி அவர் மனம் புழுவாய்த் துடித்தது. அவர் இப்பொழுது எதுவுமே பேசும் நிலையில் இல்லை. அவருடைய மனம் புத்த பெருமானின் பொறுமை மிக்க திருவுருவை எண்ணி, ‘பொறுமை எங்கே? பொறுமை எங்கே?’ என்று தேடிக் கொண்டிருந்தது. இத்தனை நன்மார்க்கங்களைப் பின்பற்றாத பிக்ஷுக்களும் பிக்ஷுணிகளும் நிறைந்த அந்த விஹாரத்திலிருந்து எங்கேனும் வனாந்தரங்களிலுள்ள மலைக் குகைகளில் போய்த் தங்கியிருந்து நிர்வாண சித்தியை அடையும் மார்க்கத்தைக் கைக் கொள்ளலாம் என்றே நினைத்தது.
மாலவல்லியை அங்கே காணாமல் மனக்குழப்பமும் திகிலும் அடைத்திருந்த பூதுகனுக்கு அக்கமகாதேரரின் வேதனை குழ்ந்த முகம் மிகுந்த பச்சாத்தா பத்தை உண்டாக்கியது. இத்தகைய புனித மூர்த்தி ஏன் இந்த ஊழல்கள் நிறைந்த பிக்ஷுக்களிடையே சுழன்று கொண்டிருக்க வேண்டும் என்றுதான் அவனுக்குத் தெரியவில்லை. அக்கமகாதேரர் ஒருவரைத் தவிர அங்குள்ள மற்ற எந்த பிக்ஷவும் புத்த பெருமாளின் புனித மார்க்கங்களை அனுசரித்து ஒழுகும் சீலர்களாக அவனுக்குப் படவில்லை. கொடூர செய்கைக்குக் காரணமாக மாலவல்லி இருக்க மாட்டாள் என்று அவன் நினைப்பது போல் அக்கமகாதேரரும் நினைக்க்கூடும் என்று நம்பினான். மெதுவாக அவரிடம் நெருங்கிப் பேசி அவருடைய மன அபிப்பிராயத்தைத் தெரிந்து கொள்ள நினைத்தான். அவரை அணுகித் தன் வணக்கத்தைச் செலுத்திவிட்டு, “இந்தக் கொடூரமான செயல்களைப் பற்றி அடிகளின் அபிப்பிராயம் என்ன?” என்று கேட்டான்.
ஆழ்ந்த சிந்தனையிலிருந்த அக்கமகாதேரர் வருத்தம் நிறைந்த குரலில், “எதையும் புத்தர்பிரான்தான் அறிவார். உலகத்தின் துயரைத் துடைத்து அன்பை நிலைநாட்டுவதற்காக நிறுவப்பட்ட தரும சங்கத்திலும் கூட இத்தகைய கொடூரமான செய்கைகள் நடப்பதை எண்ணித்தான் மனம் இடிந்து போய் விட்டது. நான் எதையும் சொல்ல முடியாத நிலையில் இப்பொழுது இருக்கிறேன். இது நடந்ததற்காக வருந்துகிறேனே தவிர, ‘இது எப்படி நடந்தது? இதை யார் செய்தார்கள்?’ என்பதில் என் சிந்தனையைச் செலுத்துவதும் தவறு. என்னைப் போன்ற நிலையில் உள்ளோர். இது மாத்திரம் அல்ல, எங்குமே இம்மாதிரி நேராதவண்ணம் தடுக்கவேண்டுமென்று புத்தர்பிரானை பிரார்த்திப்பதுதான் வழி” என்றார்.
அந்த மகாபுருஷரின் வார்த்தைகள் அவர் எத்தகைய உயர்ந்த நோக்கமும் கொள்கையும் உடையவர் என்பதைத் தான் பூதுகனுக்கு எடுத்துக் காட்டுவதாக இருந்தன. அவரைக் கிளறி எதையும் கேட்க விரும்பாவிட்டாலும் அவர் மனத்திலும் ஒரு உண்மையைப் பதிய வைக்கப் பூதுகன் விரும்பினான்.
“தேவரீர்! இச்சங்கத்தில் மகா தேரராய் இருக்கிறீர்கள். இச்சங்கத்தின் பொறுப்புக்களை நீங்கள் உணராமல் இருக்க முடியாது. இச்சங்கத்தைச் சீராக வைத்துக் கொள்வதில் மற்றவர்களுக்கு உள்ள கடமையைவிட உங்கள் கடமை மிகப் பெரிது. இன்று நடந்த காரியத்தை இப்படியே விட்டு விட்டால் நாளை புத்தர் பெரு மானின் சன்னிதானத்தில் இதை விட ஈனமான காரியங்களெல்லாம் நடப்பதற்கு இடம் கொடுப்பது போல் ஆகி விடுமல்லவா? நான் தங்களுக்கு அதிகம் சொல்ல வேண்டாம். தாங்கள் இது விஷயத்தில் சிறிது கவனம் செலுத்துவீர்கள் என்றே நினைக்கிறேன். ஏனென்றால் நீங்கள் கவனம் செலுத்தா விட் டால் உண்மையான குற்றவாளி கண்டு பிடிக்கப்படாமல் குற்றமற்றவர்கள் கொடுமை யனுபவிக்கும் நிலைமை ஏற்படும். இந்தச் சங்கத்தில் ஏற்பட்ட கொடுமையோடு இன்னொரு கொடுமையையும் அறியாமையினால் ஏற்படுமானால் அது புத்தர்பிரானின் உள்ளத்துக்கு உவப்பானதாகாது.”
“நீ சொல்வது சரிதான். உண்மையான துறவு மார்க்கத்தைக் கொண்ட ஒருவன் இத்தகைய காரியங்களில் எல்லாம் ஈடுபடுவது அவனுடைய மனச் சாந்தியைக் குலைப்பதோடு அவனுடைய தருமத்துக்கும் புறம்பானதாக இருக்கிறது. நான் கூடுமான வரையில் பிக்ஷுக்களையும், பிணிகளையும் அழைத்து ஓரளவு வேண்டுமானால் விசாரிக்க முடியும். அவர்களிடமிருந்து ஏதேனும் உண்மை வெளியானால் நல்லதுதான். அந்தக் கடமை எனக்கு எப்பொழுதும் உள்ளது. அது மனவேதனை நிரம்பிய தாயினும் அதைச் செய்ய நான் எப்பொழுதும் சித்தமாய் இருக்கிறேன்” என்றார் அக்கமகா தேரர்.
“இந்த விஷயத்தில் இதுவரை கவலை செலுத்த அடிகளார் மனம் ஒப்பியதில் நான் மிகவும் மகிழ்ச்சி யடைகிறேன். இந்தக் குரூரம் நடந்ததற்கு இங்கிருந்த ஒரு பௌத்த பிக்ஷுணியே காரணமாக இருப்பாள் என்று தங்களுக்கு ஏதேனும் தோன்றுகிறதா?…” என்று கேட்டான்.
“அதையும் புத்தர்பிரான்தான் அறிவார். நான் சட்டென்று எப்படி அப்படிச் சொல்ல முடியும்?”
“இங்குள்ள மற்றவர்கள் அப்படிப் பேசிக் கொள்ளுகிறார்களே……?”
“மற்றவர்களின் அபிப்பிராயத்துக்கு நான் என்ன செய்ய முடியும்?” என்றார் அவர்.
“அதுவும் உண்மைதான். ஆனால் இந்தச் சங்கத்தை அரசியல் நோக்கம் கொண்ட சூழ்ச்சிக்காரர்கள் தலைமறைவாக இருந்து காரியங்களைச் செய்ய அனுகூலமான இடம் எனக் கருதி பிக்ஷுக் கோலம் பூண்டு புகலிடமாக அடைந்திருக்கிறார்களே, அது உங்களுக்குத் தெரியுமா?”
“இருக்கலாம். புத்த சங்கத்தில் ஈடுபட்டுச் சில மார்க்கங்களைப் பின்பற்றத் துணிந்தவர்களுக்கு இங்கு பிக்ஷுக்களாக உரிமை அளிக்கப்படுகிறது. ஆனால் யார் யார் எந்த நோக்கத்தில் சங்கத்தில் வந்து சேருகிறார்கள் என்று நான் எப்படி அறிந்திருக்க முடியும் ?”
“அதை நான் ஒப்புக் கொள்கிறேன். கொலை செய்யப்பட்டுக் கிடக்கும் ரவிதாசரும் தலைமறைவாகப் போய் விட்ட கலங்கமாலரையரும் ஏதோ தங்கள் சொந்த நோக்கத்துடன் தான் இந்தச் சங்கத்தில் புகுந்து ஏதோ சூழ்ச்சிகரமான காரியங்களில் ஈடுபட்டிருந்தார்கள் என்பது தங்களுக்குத் தெரியுமா? அதோடு பிக்ஷுணியாக இருக்கும் இளம் பெண் மாலவல்லி ஏதோ உலகத்தில் தன்னைச் சூழ்ந்திருந்த ஆபத்திலிருந்து தன்னை விலக்கிக் கொண்டு வாழவோ. அல்லது தான் அனுபவிக்க விரும்பும் சுகங்களைப் பிறருடைய இடையூறின்றி அனுபவிக்கவோதான் இந்த புத்த சங்கத்தில் பிக்ஷுணியாகச் சேர்ந்தாள் என்று நான் நினைக்கிறேன். முக்கியமாக, கலங்கமாலரையர் தஞ்சை மன்னர் மாறன் முத்தரையரின் சேனாதிபதியாக இருந்தவர். அவருடைய எண்ணம் எல்லாம் மறுபடியும் இந்நாட்டில் சோழ வம்சத்தினரின் உன்னத சாம்ராஜ்யம் ஏற்படக் கூடாது என்பது தான். அதற்காக அவர் பல சூழ்ச்சிகளையும் அடாத செயல்களையும் செய்து வருகிறார். அவருடைய சூழ்ச்சிகளையும் தகாத காரியங்களையும் சுயரூபத்தில் இருந்து செய்வது தன் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும் என்பதை உணர்ந்து தான் பிக்ஷக் கோலம் பூண்டு பல காரியங்களைச் செய்ய முயன்றிருக் கிறார் என்று தெரிகின்றது. இத்தகைய கேவலமான காரியங்களை யெல்லாம் மகா உத்தமராகிய நீங்கள் எப்படி அறிந்திருக்க முடியும் ? அதோடுமட்டு மல்ல;கொலையுண்டுகிடக்கும் ரவிதாசர் காஞ்சியிலிருந்து வத்தவர், ஏற்கனவே ஜைன சமயத்தைச் சேர்ந்தவர் எனக் கருதுகிறேன். இளம் துறவி மாலவல்லியும் காஞ்சியிலிருந்து வந்தவள். மாலவல்லி இக்காவிரிப் பூம்பட்டினத் துக்கு வந்து ஒரு பௌத்த பிக்ஷணி ஆகி விட்டாள் என்பதையறிந்து தான் ரவி தாசரும் இங்கு வந்து ஒரு பௌத்தத் துறவி ஆகி இருக்க வேண்டும். அவர் ஒரு பௌத்த பிக்ஷுக்குரிய கடமை களையும் தர்ம் வழிகளையும் பின் பற்ற மல் ‘எப்பொழுதும் பிக்ஷணியாகிய மாலவல்லி என்ன செய்கிறாள்? எங்கே போகிறாள்?’ என்பதிலேயே கவனம் செலுத்தக் கூடியவராக இருந்திருக் திருர். இவற்றை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டாம். நேற்று மாலை இங்கு புத்தர் பெருமானின் திருவடி களில் அந்த பிக்ஷுணி மலர்களைச் சமர்ப்பிக்கச் சென்றபோது அவள் ஏதோ தகாத காரியங்களை செய்து விட்டாள் என்று ரவிதாசர் குற்றம் சாட்டி அவள் பெருமானின் திருவடிகளில் மலர் அர்ச்சிக்க அருகதையற்றவள் என்று கூச்சலிட்டதையும் தாங்கள் அறிவீர்கள். அந்த பிக்ஷுணி ஏதோ குற்றம் செய்தவளாகவே இருப்பினும் பூசை நேரத் தில் அவளைத் தடுப்பது எவ்வளவு மதியீனம், கேவலம்? இது உண்மை யான ஒரு பிக்ஷுக்குரிய தருமமா? இதிலிருந்து தாங்கள் ஊகித்துத் தெரிந்து கொள்ளலாம். இந்த பௌத்த விஹாரதில் எத்தகைய மனிதர்கள் எல்லாம் துறவுக்கோலம் பூண்டு திரிகிறார்கள் என்று.”
அக்கமகா தேரர் எல்லாவற்றையும் கேட்டு விட்டுக் கண்களை மூடிக்கொண்டு மௌனமாக நின்று கொண்டிருந்தார். அவர் மனத்தில் எத்தகைய வேதனைகள் எழுந்து துன்புறுத்துகின்றன என்பது அவருடைய முகக்குறியிலிருந்து விளங்கியது. ”இங்கு என்ன நடக்கிறது என்று அறியாது போனது என்னைப் போன்ற துறவிக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டம்தான் எப்படியோ இந்தப் பௌத்த விஹா ரத்துக்கும் பெளத்த சங்கத்துக்கும் ஏற்பட்ட பெரிய களங்கம் இது ஒன்று போதும். இனிமேல் இப்படிப்பட்ட களங்கம் ஏற்படாத வண்ணம் இந்த சேதியமும், சங்கமும் காப்பாற்றப் பட்ட்டும்” என்று சொல்லி விட்டுத் திரும்பினார். உலகில் யாவற்றையும் துச்சமாக எண்ணித் துறந்து விட்டுச் சாந்தி நிலையில் மனத்தைப் பக்குவப் படுத்தி வைத்துக் கொண்டிருந்த அக்க மகா தேரரின் மனநிலை பூதுகனைத் திகைக்க வைத்தது.
தன்னோடு வந்த வீரவிடங்கனின் ஞாபகம் வரவே அவன் எங்கே இருக்கிறான் என்பதைப் பார்க்க விரும்பினான். ஆனால் சிறிது நேரத்துக்கு முன் வரை தனக்குச் சிறிது தூரத்தில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டிருந்த வீரவிடங்கனை அப்போது காணவில்லை. அவன் வேறு எங்கேனும் போயிருப்பானோ என்று சுற்றிலும் தேடினான். பூதுகனுக்கு எல்லாம் விநோதமாக இருந்தது. வீரவிடங்கன் இப்பொழுது எங்கே போயிருப்பான்? ஒருவேளை அவன் வெளியே ஆசிரமத்தில் எங்கேனும் இருப்பானோ என்று நினைத்து அங்கிருந்து வெளியே வந்து தோட்டத்தைச் சுற்றிப் பார்க்கத் தொடங்கினான். சல்லடை போட்டுச் சலித்துப் பார்த்தான். பாவம்! தோட்டத்திலும் அவனைக் காணவில்லை. தன்னிடம் சொல்லாமல் வீரவிடங்கள் அந்த இடத்தைவிட்டு அகன்றதற்குக் காரணம் தெரியவில்லை.
பூதுகணுக்கு வீரவிடங்கன் அந்த இடத்தை விட்டே போய் விட்டான் என்பது நன்கு விளங்கியது. தனக்கு உற்ற நண்பனாகி விட்டது போல் பேசிய வீரவிடங்கன் இப்படிப்பட்ட முக்கியமான சந்தர்ப்பத்தில் தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் போய் விடுவான் என்று நினைக்க வில்லை. அவ னுடைய காதலி அந்த புத்த விஹாரத்திலிருந்து தலைமறைவாக எங்கோ போய் விட்டாள் என்பதைக் கேள்விப் பட்டதும், புத்தவிஹாரத்தை விட்டு ஓடி விட்டவள்தான் அங்கு நடந்த கோரக் கொலைக்குக் காரணமாக இருக்க வேண்டும் என்று மற்றவர்கள் பேசிக் கொண்டதும் வீரவிடங்கன் உள்ளத்திலும் பெரிய திகிலையும் துயரத்தையும் ஏற்படுத்தி விட்டது என்பதைப் பூதுகன் உணர்ந்திருந்தான். ஆனால் அவன் இத்தகைய துயரம் நிறைந்த வேளையில் தன்னிடம் சொல்லிக் கொள்ளாமலேயே போய் விடுவான் என்று அவன் நினைக்கவில்லை.
அப்பொழுது தான் அவன் உள்ளத்திலும் அந்தக் கோரக் கொலைக்கும் வீரவிடங்கனுக்கும் கூட ஏதாவது சம்பந்தம் இருக்குமோ என்று நினைப்பதற்கு இடம் உண்டாயிற்று. பெரிய சாம்ராஜ்யச் சூழ்ச்சியில் இத்தகைய கொலை நடந்திருக்கா விட்டாலும் காதலிலும், பெண்ணாசையிலுங் கூட இத்தகைய கோரக் கொலைகள் எல்லாம் நடப்பது சகஜம்தானே? மாலவல்லியை உளவு பார்த்து வந்த ரவிதாசனைப் பற்றி வீரவிடங்கன் நிச்சயமாக அறிந்துதான் இருக்க வேண்டும் என்று திடமாக நம்பினான். மாலவல்லி, ரவிதாசன். வீரவிடங்கன், கலங்கமாலரையன் இவர்கள் நால்வரும் ஏதோ பகைமையோடும் போட்டியோடும் கூடிய காரியத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதைப் பூதுகன் உணர்ந்து கொண்டான். அவன் மனம் குழம்பிய படியே மெதுவாக நடந்தான்.
– தொடரும்…
– மாலவல்லியின் தியாகம் (தொடர்கதை), கல்கி வார இதழில் 1957-01-13 முதல் 1957-12-22 வரை வெளியானது.
– கி.ரா.கோபாலனின் மறைவுக்குப் பின் அவர் எழுதி வைத்திருந்த குறிப்புகளைக் கொண்டு ‘மாலவல்லியின் தியாகம்’ தொடரின் கடைசி பத்து அத்தியாயங்களையும் எழுதி முடித்தார் கல்கியில் மற்றொரு உதவி ஆசிரியராக இருந்த ஸோமாஸ்.