சங்கர்லால் வந்துவிட்டார்!
கதையாசிரியர்: தமிழ்வாணன்
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு:
கிரைம்
கதைப்பதிவு: June 12, 2026
பார்வையிட்டோர்: 97
(1980ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-5 | அத்தியாயம் 6-10
1

உதவிப் போலீஸ் கமிஷனர் வகாப் காலையில் எழுந்தவுடன் எல்லையற்ற மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.
அவருடைய வீட்டில் இங்கும் அங்குமாக ஓடியாடிக் கொண்டிருந்த அவருடைய பிள்ளைகளைக் காலையில் எழுந்ததும் ஓர் அதட்டல் போட்டு அடக்கமுயலுவார். முடியாது அவரால்,
உதவிப் போலீஸ் கமிஷனர் வகாப், வீட்டிற்கு வெளியே ஓர் அதட்டல் போட்டால் அஞ்சா நெஞ்சம் படைத்த கொலையாளிகளும், கொள்ளையையே தமது தொழிலாகக் கொண்டு திரிபவர்களும் கூடக் கொஞ்சம் நடுங்குவார்கள்! சங்கர்லாலின் அன்பும் நட்பும் உதவியும் என்றும் வகாபுக்கு உண்டு. இதனால் வகாபின் செல்வாக்கு எவ்வளவோ உயர்ந்திருக்கிறது. ஆனால் –
அவருடைய வீட்டில் அவருக்கு அவ்வளவு செல்வாக்கு இல்லை. அவருடைய அதட்டலுக்கு, அவருடைய பிள்ளைகளில் ஒன்றுகூட அஞ்சியதில்லை! போலீஸ்காரர்களைக் கண்டு சில பிள்ளைகள் அஞ்சுவது நடைமுறை ஆனால், வகாபின் வீட்டிலோ, அவருடைய பிள்ளைகளைப் போலீஸ்காரர்கள் தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சுவார்கள். இன்னும் கொஞ்சம் மிஞ்சிப் போனால், போலீஸ்காரர்கள் வகாபின் பிள்ளைகளைத் தூக்கிக் கொண்டு போய் கடையில் அவர்கள் கேட்கும் இனிப்புகளை வாங்கிக் கொடுப்பார்கள். அங்கே வரும் போலீஸ்காரர்களின் தொப்பிகளைக் கழற்றுவதும், அவர்களுடைய மடிப்புக் கலையாத உடைகளைப் பிடித்து இழுப்பதும் குழந்தைகளுக்கு விளையாட்டு! வகாபிற்கு நிறையப் பிள்ளைகள்! மொத்தம் எத்தனை என்பதைப் பிள்ளைகளையெல்லாம் எதிரே நிற்க வைத்து எண்ணிப் பார்த்துத்தான் சொல்ல வேண்டும்! வகாபிற்கே நினைவு இருக்காது! ஒன்று இரண்டா அவற்றை அடக்கி வழிக்குக் கொண்டு வர?
சங்கர்லாலுடன் எல்லா வழக்குகளிலுமே வகாப் தொடர்பு கொண்டிருந்த போதிலும்கூட, இன்னும் அவரால் உதவிப் போலீஸ் கமிஷனர் பதவியை விட்டுக் கமிஷனர் பதவிக்கு வர முடியவில்லையே என்று வகாப் துணைவிக்குத் துன்பம்! அதனால் அடிக்கடி அவள் வகாபிடம் சலித்துக் கொண்டாள். இந்த நிலையில், வகாபிற்குத் தனது வீட்டில் செல்வாக்கு இருக்க நியாயமில்லை!
வகாப் அன்று பிள்ளைகளை அதட்டல் போடாமல், எழுந்ததும் தமது மனைவியைப் பார்த்து மெல்லச் சிரித்தார். “இன்று, சங்கர்லால் நம் வீட்டுக்கு வரப்போகிறார் கவனம் இருக்கிறதா!” என்று கேட்டார்.
வகாபின் மனைவி சொன்னாள் : “சங்கர்லால் மட்டுமா வருகிறார்? அவருடைய குடும்பமே அல்லவா வருகிறது! சுத்தரிக்காயையும் மைனாவையும் பார்க்க வேண்டும் என்று வெகு நாட்களாக எனக்கு ஆசை, அவர்களை வரவேற்க எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டேன். நீங்கள் எதற்கும் இப்போதே போய் எத்தனை மணிக்கு விருந்து என்பதை நினைவுபடுத்திவிட்டு வாருங்கள்.”
வகாப் எழுந்து குளிக்கச் சென்றார். சங்கர்லாலுக்கு, அவர் மீண்டும் நேரத்தைப் பற்றியோ, அவர் ஏற்பாடு செய்திருக்கும் விருந்தைப் பற்றியோ நினைவுபடுத்த வேண்டிய தேவை இல்லை. ஆனாலும், இரண்டு நாட்களுக்கு முன்னால் தொலைபேசியில் சங்கர்லாலை அழைத்து. அவரையும் இந்திராதேவி, மாணிக்கம், கத்தரிக்காய், மைனா, மாது ஆகியோரையும் இன்று விருந்துக்கு வரவேண்டுமென்று வேண்டிக் கொண்டார். மாலை ஆறு மணிக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும் சொன்னார்.
சங்கர்லால் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். வகாப் எதற்காக விருந்து வைக்கிறார் என்பது சங்கர்லாலுக்குத் தெரியும். ஆனாலும், வகாபைக் கேலி செய்ய வேண்டும் என்று. “வகாப், விருந்திற்கு வர எனக்கும், அதைவிட இந்திராவுக்கும், எல்லாரையும் விடக் கத்தரிக்காய்க்கும், மிக்க மகிழ்ச்சி. விருந்து எதற்கு என்று சொல்லவில்லையே! புதிதாக உங்களுக்கு ஏதாவது குழந்தை பிறந்திருக்கிறதா?” என்று கேட்டார்.
சங்கர்லாலின் பக்கத்தில் நின்றிருந்த இந்திரா வாய்விட்டுக் கலகலவென்று சிரித்தாள்! அவளுடைய கள்ளம் சிறிதும் இல்லாத சிரிப்பொலி தொலைபேசியில் பாய்ந்து வகாபின் செவியில் விழுந்தது. வகாப் மெல்லச் சிரித்துக் கொண்டே, “சங்கர்லால், இருக்கும் பிள்ளைகளை வைத்து அடக்குவதே முடியாத செயலாக இருக்கிறது. இன்னும் எதற்கு எனக்குப் பிள்ளைகள்! உங்களுக்குத் தான் பிள்ளையே இல்லை, வேண்டுமானால், எங்கள் வீட்டிலிருந்து இரண்டு பிள்ளைகளை அனுப்பி வைக்கிறேன். அப்புறம் பாருங்கள். உங்களால் எந்த வழக்கையுமே சுவனிக்க முடியாது!!” என்றார்.
“தப்புக் கணக்குப் போட்டு விட்டீர்கள்! கத்தரிக்காய் ஒருவனும் சரி, உங்கள் வீட்டிலிருக்கும் அவ்வளவு பிள்ளைகளும் சரி! சுத்தரிக்காய் இந்திராவைப் பார்த்தால் எப்படி அஞ்சுகிறான் தெரியுமா? இந்திரா அவனைக் கொஞ்சம் முறைத்துப் பார்த்தாலே போதும்!” என்று சங்கர்லால் சொன்னதும், இந்திரா படபடவென்று சங்கர்லாலிடம் பேசும் ஓசை கேட்டது. ஊடலில் நாம் ஏன் உயிரைவிட வேண்டும் என்று தொலைபேசியை வைத்து விட்டார் வகாப்!
வகாப், இவற்றையெல்லாம் எண்ணிக் கொண்டே குளித்துவிட்டு, தமது அறைக்குச் சென்றார். உடைகளை அணிந்து கொண்டு, தொப்பியை மாட்டினார். சன்னல் வழியாகத் தோட்டத்தைப் பார்த்தார்.
வகாபின் வீடு சிறிய வீடுதான். ஆனாலும் அது அழகாக. இருந்தது. வீட்டைச் சுற்றிலும் அழகான தோட்டம். தோட்டத்தில், மா இலைத் தோரணங்களையும் வண்ணக் காகிதங்களையும் தொங்கவிட்டுக் கொண்டிருந்தார்கள் சில போலீஸ்காரர்கள். தோட்டத்தில், புல்வெளியில், நீண்ட மேசையும் நாற்காளிகளும் போடப்பட்டிருந்தன. அந்த இடத்தில்தான் மாலை விருந்து நடக்க ஏற்பாடு ஆகியிருந்தது.
வகாப், சங்கர்லாலின் பங்களாவுக்குப் போகத் தமது பழைய காரில் புறப்பட்டபோது, அவருடைய மூத்த மகன் அமீது ஓடிவந்தான். “அப்பா நானும் வருகிறேன்” என்றான்.
லகாப், ஏதாவது போலீஸ் அலுவல் காரணமாக வெளியே புறப்பட்டிருந்தால், அமீது இரண்டு அறைகள் வாங்கி இருப்பான்! ஆனால், இப்போது, மகிழ்ச்சியின் பெருக்கில் திணறிக் கொண்டிருந்ததால் “சங்கர்லலானின் பங்களாவை நான் ஒரு தடலை கூடப் பார்த்ததில்லையே!”
“சரி காரில் ஏறு” என்றார் வகாப், இன்னும் சிறிது நேரம் அவனிடம் பேசிக் கொண்டிருந்தால், மற்றப் பிள்ளைகளும் ஓடி வந்து காரில் ஏறிக் கொள்ளுவார்கள் என்பதை அவர் அறிந்திருந்தார்!
அமீதுக்குப் பன்னிரண்டு வயது ஆகிறது. அவன் ஏழாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். அவனும், அப்பாவைப் போலவே உதவி போலீஸ் கமிஷனராகிவிட வேண்டும் என்று அடிக்கடி அவரிடம் சொல்லிக் கொண்டிருந்ததால், அவன் மீது அன்பு மிகுந்துவிட்டது! அவன் வகாபின் காக்கி உடைகளைப் போலவே ஒரு சோடி வேண்டும் என்று ஒரு தடவை பிடிவாதம் பிடித்தபோது, உதவிப் போலீஸ் கமிஷனர் உடை மாதிரியே காக்கித் துணியில் தைத்து, அவனுக்குத் தகுந்த தொப்பியும் வாங்கிக் கொடுத்திருந்தார். அவற்றை அவன் இப்போது அணிந்து கொல்டிருந்தான். அவன் காரில் ஏறி உட்கார்ந்தான். கார் புறப்பட்டது.
வழியில் அமீது வகாபைப் பார்த்துக் கேட்டான் : “அப்பா, விருந்துக்கு இந்திராதேவியும் வருவார்களா?”
“ஆமாம்” என்றார் வகாப்.
“மாணிக்கம் வருவானா?”
“கத்தரிக்காயும் மைனாவும் கூட வருவார்கள்!” ‘விருந்து எதற்கு அப்பா?”
“சங்கர்லாலும் இந்திராவும் சுவிட்சர்லாந்துக்குப் போய் விட்டு, நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தியாவுக்கு வந்திருக்கிறார்கள். முதல் முதலில் அவர்களுக்கு விருந்து அளிக்கும் பேறு நமக்குத்தான் அமீது, நமக்குத்தான்!” என்றார் வகாப்.
“சங்கர்லாலுக்கும் இந்திராதேவிக்கும் ஏதாவது பரிசு கொடுப்பீர்களா?” என்று கேட்டான் அமீது.
“போடா முட்டாள்! அவர்களுக்குப் பரிசு கொடுத்து நமக்கு கட்டுமா? வசதியிருந்தால் விலை மதிக்க முடியாத பொருளை அவர்களுக்குப் பரிசு தரலாம். இப்போது நாம் இருக்கும் நிலையில், அன்பு ஒன்றுதான் நாம் அவர்களுக்கு அளிக்கும் பரிசு!” என்றார் வகாப்.
அமீது, அதற்குமேல் ஒன்றும் பேசவில்லை. அவன் மனம் சிந்தனையுள் இறங்கியது.
வகாபின் கார், மலைப்பாதையின் மேல் வளைந்து வளைத்து சென்றது. முல்லைவன மலைத் தோட்டத்தை அடைந்து, பங்களாவின் முன் காரை நிறுத்தினார் வகாப்.
பொன்னன், துப்பாக்கியைத் தோளில் போட்டபடியே ஓடி வந்து காரின் சுதலைத் திறந்துவிட்டு, சல்யூட் அடித்து நின்றான்.
வகாபும், அமீதும் இறங்கிப் பங்களாவிற்குள் நுழைந்தார்கள். கூடத்து நாற்காலியில் சங்கர்லாலும் இந்திராவும் உட்கார்ந்து தேநீர் அருந்தியபடி சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.
வகாபையும், அமீதையும் பார்த்ததும் எங்கேயோ நின்று கொண்டிருந்த மாது இன்னும் இரண்டு கோப்பைகள் தேநீர் கொண்டுவர ஓடினான்.
சங்கர்லால் நேநீர்க் கோப்பையை வைத்துவிட்டு, வகாபைக் கைகுலுக்கி வரவேற்றார்.
“விருந்தைப்பற்றி மீண்டும் சொல்லி விட்டுப் போக வந்தீர்களா? அல்லது ஏதாவது வழக்குத் தொடர்பாக வந்தீர்களா?” என்று கேட்டாள் இந்திரா.
உதவி போலீஸ் கமிஷனர் வகாப் பதில் சொல்லுவதற்குள், சங்கர்லால் சொன்னார் : “வழக்குப் பற்றி வந்திருந்தால், அவருடைய மகனை அழைத்து வந்திருக்கமாட்டாரே! இது தெரியவில்லையா இந்திரா உனக்கு?”
இதற்குள் இந்திரா எழுந்து, அமீதின் பக்கத்தில் சென்று, உங்கள் மகனா? என்ன பெயர்?” என்று அவன் முதுகில் தட்டினாள்.
“அமீது” என்றான் பையன்.
“என்னுடன் வா அமீது” என்று சொல்லி அவனை உள்ளே அழைத்துச் சென்றாள் இந்திரா. கத்தரிக்காயையும் மைனாவையும் அறிமுகப்படுத்தினாள், இதற்குள் மாணிக்கமும் அங்கு வந்து சேர்ந்தான்.
இந்திரா சுவிட்சர்லாந்திலிருந்து வாங்கி வந்த ஓர் அழகான ஓடும் மோட்டார் பொம்மையை அவனிடம் கொடுத்த போது, அமீது வியப்பால் இந்திராவின் முகத்தைப் பார்த்தான், மகிழ்ச்சிப் பெருக்கால் ‘நன்றி’ என்று கூட அவனால் சொல்ல முடியவில்லை! அவனை மீண்டும் கூடத்திற்கு அழைத்துச் சென்றாள், அப்போதுதான் மாது தேநீர்க் கோப்பைகளுடன் அங்கு தோன்றினான்.
2
பிற்பகல், மூன்று மணி.
சங்கர்லாலும், இந்திராதேவியும், மாணிக்கமும், கத்தரிக்காயும், மைனாவும் சரியாக ஆறு மணிக்குத் தனது இல்லத்திற்கு வருவார்கள் என்று எண்ணினான் அமீது. விருந்தின் போது, இந்திராவுக்கு ஏதாவது பரிசு தர வேண்டும் என்று எண்ணினான். அவன் நீண்ட நேரம் சிந்தித்தபின், தன்னுடைய மேசை அறையைத் திறந்தான். அதில், அவன் காசு சேர்த்து வைசிக ஓர் உண்டி இருந்தது. அதை உலுக்கி உள்ளேயிருந்த காசுகளைக் கொட்டினான். அதில் இரண்டேகால் ரூபாய் இருந்தது. இரண்டேகால் ரூபாயில் என்ன வாங்குவது?
அமீது ஒன்றும் புரியாமல் சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே, அவனுடைய வகுப்பு நண்பன், அடுத்த வீட்டிலேயே குடியிருந்த மணியரசு ஓடிவந்தான், “என்னடா அமீது? உங்கள் வீட்டில் அமர்க்களமாக இருக்கிறது? வண்ண விளக்குகளும், வண்ணக் காகிதங்களும் தோரணங்களும் தொங்குகின்றன! எவராவது விருந்துக்கு வருகிறார்களா” என்று கேட்டான்,
“ஆமாம் மணியரசு, சங்கர்லால் தமது குடும்பத்துடன் இங்கே மாலை வருகிறார். நீ சங்கர்லாலையும், இந்திராதேவியையும் நேரில், பக்கத்திலேயே நின்று பார்க்கலாம்! இந்திரா தேவிக்கு ஏதாவது பரிசு தர வேண்டும் என்று எண்ணுகிறேன். என்ன கொடுக்கலாம்? நம்முடைய பரிசைப் பார்த்ததும், இந்திராதேவி மட்டுமல்ல, சங்கர்லால் கூட அப்படியே அயர்ந்து விடவேண்டும்! என்ன கொடுக்கலாம் சொல்லு” என்று கேட்டான் அமீது.
மணியரசு சிறிது நேரம் சிந்தித்துப் பார்த்தான். அவன் கொஞ்சம் வேடிக்கை மனம் படைத்தவன், ஆகையால், “உயிருள்ள பொருளாகக் கொடுத்தால் என்ன?” என்று கேட்டான்!
“சங்கர்லாலின் பங்களாவில், அழகான பறவைகள் இருக்கின்றன. துள்ளி விளையாடும் மான் குட்டிகள் இருக்கின்றன. என்னிடம் இருப்பது இரண்டேகால் ரூபாய்! இந்தக் காசைக் கொண்டு நான் என்ன வாங்க முடியும்!” என்று கேட்டான் அமீது.
“அழகான சீமை முயல் குட்டிகளாக நாம் வாங்கிக் கொடுப்போமே! என்னிடம் ஒரு ரூபாய் இருக்கிறது. அதையும் கொண்டு வருகிறேன். நீ உன் சைக்கிளை எடுத்துக் கொள், நான் என் சைக்கிளை எடுத்துக் கொள்கிறேன். இருவரும் மூர்மார்க்கெட்டுக்குப் போவோம் மூர்மார்க்கெட்டில் கிடைக்காத முயல், அடர்த்தியான காட்டில் கூடக் கிடைக்காது!” என்றான் மணியரசு.
“சரியான முடிவு! சங்கர்லால் வீட்டில் சீமை முயல் கிடையாது! ஒரு கூடையில் சீமை முயல் குட்டியைப் போட்டு, விருந்தின் போது நான் இந்திராதேவியிடம் கொடுக்கிறேன். எல்லாரும் ஆவலுடன் கூடையையே பார்ப்பார்கள். இந்திரா தேலி கூடையைத் திறந்ததும், முயல் குட்டி குதித்து, எகிறி ஓடும்! எதிர்பாராத இந்தப் பரிசைக் கண்டதும், எல்லாரும் கையொலி செய்வார்கள். மகிழ்ச்சிப் பெருக்கால் குட்டிக்கரணம் போடும் சுத்தரிக்காய், இப்போதெல்லாம் பெருந்தன்மையுடன் குட்டிக்கரணம் போடுவதில்லையாம். அவன் கூடத் தன்னை மறந்து குட்டிக்கரணம் போடுவான் பார்!” என்றான் அமீது.
இருவரும் –
தங்கள் சைக்கிள்களில் புறப்பட்டு விட்டார்கள். இருவருமே இரண்டு சிறிய சைக்கிள்களை வைத்திருந்தார்கள். பள்ளிக்கூடம் போய்வர, அவை இப்போது அவர்களுக்குப் பெரும் உதவியாக இருந்தன.
மூர்மார்க்கெட்டின் எதிரில் சைக்கிள்களை வைத்துப் பூட்டிவிட்டு, இருவரும் உள்ளே சென்றார்கள். வழியில் பல புத்தகக் கடைகளும், பொம்மை விளையாட்டுக் கடைகளும் இருந்தன. வழியில் இருந்த கடைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்ற போது, புத்தகக் கடைக்காரன் ஒருவன், அஞ்சல் தலை ஆல்பம் ஒன்றை அவர்களுக்கு எடுத்துக் காட்டினான்.
அமீதுக்கு அஞ்சல் தலைகள் சேர்ப்பது ஒரு பொழுது போக்கு. உலகத்திலுள்ள இரண்டொரு நல்ல அஞ்சல் தலைகள் அந்த ஆல்பத்தில் இருந்தன. ஆல்பத்தைப் புரட்டிப் பார்த்துவிட்டு, “என்ன விலை?” என்று கேட்டான்.
“இரண்டு ரூபாய்” என்றான் கடைக்காரன்,
கையிலிருக்கும் காசு போதாது என்ற எண்ணத்துடன், “ஒரு ரூபாய்க்குக் கொடுத்தால் வாங்கிக் கொள்கிறேன்” என்றான். ஆல்பம் வாங்கிவிட்டால் முயல் குட்டிகள் வாங்க முடியாதே என்ற நோக்கத்துடன், வேண்டாம் என்று சொல்லுவதற்குப் பதில், ஒரு ரூபாய்க்குக் கேட்டு வைத்தான்!
“பிடி ஆல்பத்தை” என்று ஆல்பத்தைக் கொடுத்து விட்டான் கடைக்காரன்! அமீது ஒரு ரூபாயைக் கொடுத்து விட்டு, ஆல்பத்தைப் பெற்றுக் கொண்டு, முயல் விற்கப்படும் இடத்தை அடைந்தான். அவனுடன் சென்ற மணியரசு “இவ்வளவு மலிவாக இந்த ஆல்பத்தைக் கொடுப்பான் என்று நான் நினைக்கவே இல்லை!” என்றான்.
முயல் குட்டி விற்பவன், அழகான சோடி முயல் குட்டிகளை எடுத்துக் காட்டினான். அந்தச் சீமை முயல் குட்டிகளின் கண்களை இன்றெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம்! அவற்றின் உடல்கள் வெல்வெட்டைப் போல் மிருதுவாக இருந்தன. ஆனால், விலையைப் பொறுத்தவரையில், இரண்டே முக்கால் ரூபாய்க்கு ஒரு நயா பைசாகூடக் குறையாது என்று ஒரே முடிவாக அறிவித்து விட்டான் கடைக்காரன்.
அமீதிடம் இரண்டேகால் ரூபாய் தான் இருந்தது. வாங்கிய ஆல்பத்தைத் திருப்பிக் கொடுத்துவிடலாம் என்று எண்ணி, இருவரும் ஆல்பம் விற்ற கடைக்காரனிடம் சென்றார்கள். ஆனால், அவன், விற்ற ஆல்பத்தை வாங்கவே முடியாது என்றும், ஒரு தடவை விற்றது விற்றதுதான் என்றும் சொல்லி விட்டான்!
அமீது அவனிடம் முடிந்தமட்டும் கேட்டுப் பார்த்தான். பாதி விலைக்கு எடுத்துக் கொண்டாலும் போதும் தனக்கு இப்போது வேண்டியது எட்டணாக் காசுதான் என்று கேட்டுப் பார்த்தான். பயனில்லை!
கடைக்காரன் கல்மனம் பெற்றவன். முடியவே முடியாது என்று உறுதியாகச் சொல்லிவிட்டான் இறுதியாக!
மணியரசின் மனம் துடித்தது. எப்படியும் சோடி சீமை முயல் குட்டிகளை வாங்கிக் கொடுத்து விடுவது என்ற எண்ணத்துடன், “வாடா போகலாம், வீட்டில் போய் அம்மாவிடம் எப்படியாவது எட்டணா வாங்கி வந்து விடுகிறேன்” என்றான்.
“போய்த் திரும்பிவர நேரமிருக்குமா?” என்று ஐயத்தைக் கிளப்பினான் அமீது.
“முயன்று பார்ப்போம். சும்மா நின்றுகொண்டு நேரத்தை வீணாக்குவதைவிட, முயன்று பார்த்தாலாவது முயல்களைப் பெறலாம் -” இருவரும் புறப்பட்டார்கள். வழியில் –
“பையன்கள் தேவை” என்று எழுதப்பட்ட வண்ணப் பலகை ஒன்று ஒரு வீட்டின் முன் மாட்டப்பட்டிருந்தது.
அமீது, சைக்கிளை நிறுத்தினான். மணியரசும் சைக்கிளை நிறுத்தினான்.
“பையன்கள் தேவையாமே!” என்றான் அமீது.
“போய்த்தான் பார்ப்போமே! முன்பணமாக எட்டணாக் காசு கொடுத்தால் போதும் என்று சொல்லலாம்” என்றான் மணியரசு
இருவரும் உள்ளே சென்றார்கள். எதிரே ஒரு பெரிய அறை தெரிந்தது. அலுவலக அறையைப் போல் இருந்த அதில் மேசையின் பின்னால் தடித்த கொழுத்த மனிதர் ஒருவரும் அவருக்கு எதிரே, ஒல்லியான உயரமான போட்ட பேன்ட் மனிதர் ஒருவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
இரண்டு பையன்களைப் பார்த்ததும், தடித்த மனிதன் தலையைத் தூக்கிப் பார்த்தார்.
அமீது முதலில் பேசினான் : “பையன்கள் தேவை என்று விளம்பரம் செய்திருக்கிறீர்களே, என்ன வேலை!”
தடித்த மனிதர் சொன்னார் : “உங்களிடம் சைக்கிள் இருக்கிறதா? அப்போதுதான் வேலை தர முடியும்.”
“இருவரிடமும் சைக்கிள் இருக்கிறது” என்றான் மணியரசு, “அப்படியானால் முதலில் ஒரு வேலையைச் செய்யுங்கள். அதற்கப்புறம் உங்கள் மீது நான் நம்பிக்கை வைத்துக் கொள்கிறேன்” என்று சொல்லித் தடித்த மனிதர் ஒரு சிறிய பார்சலை அமீதிடம் கொடுத்தார். அது காகிதத்தால் நன்றாகக் சுட்டப்பட்டு முத்திரை வைக்கப்பட்டிருந்தது. “இதை, இந்த முகவரியில் கொடுக்க வேண்டும். நீங்கள் போவதற்குள் இதோ என் எதிரில் நிற்கிறாரே இவர் காரில் அங்கே வந்துவிடுவார். இவர் வராவிட்டாலும் காத்திருந்து இவரிடம் கொடுங்கள்” என்று சொல்லி ஏதோ ஒரு முகவரியை எழுதிக் கொடுத்தார்.
“இதைக் கொண்டு போய்க் கொடுக்க எங்களுக்கு எவ்வளவு?” என்று கேட்டான் மணியரசு.
“எவ்வளவு வேண்டும்!” என்று கேட்டார் தடித்த மனிதர், தமது கழுத்துப் பட்டையைச் சரி செய்து கொண்டே..
“எட்டணா தருவீர்களா?” என்று கேட்டான் அமீது.
“ஒரு ரூபாய் தருகிறேன். விரைவில் கொண்டு போங்கள்” என்றார் நின்றவாறு சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த ஒல்லியான மனிதர்,
அமீதும் மணியரசும் வெளியே வந்தபோது, நான்கைந்து வீடுகளுக்கு அப்பால், ஒரு கடையில் சிகரெட் வாங்கிக் கொண்டிருந்தார் ஒரு மனிதர். அவர் கால் சட்டையும், கோட்டும் அணிந்திருந்தார். அவர் சற்று நேரத்திற்கு முன்பு தான் கிராப்பு வெட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் தலை எடுத்துச் சொல்லிற்று.
அவரைப் பார்த்ததும் அமீது சைக்கிளை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டான். ‘மணியரசு, அதோ அந்த மனிதர் இரகசியப் போலீசைச் சேர்ந்தவர்! அவர் என்னைக் கண்டால் காதைப் பிடித்துத் திருகி, ‘எங்கே வந்தாய்? கையில் என்ன? என்றெல்லாம் குடைந்து கேட்டு அப்பாவிடமும் சொல்லிவிடுவார். அவர் பார்ப்பதற்கு முன்பே வேறு பக்கம் பறந்து விடலாம்” என்றான்!
இருவரும். அந்த வீட்டின் பக்கவாட்டில் பின்புறமாகச் சென்று மறைந்து விட்டார்கள்!
அமீதும் மணியரசும் மறைந்ததும் ஒல்லியான மனிதர் வெளியே வந்து காரில் ஏறினார். அப்போது –
கடைமுன் நின்றிருந்த இரகசியப் போலீஸ் அதிகாரி வேகமாக நடந்து வந்து அவருடைய காரிலேயே ஏறிக் கொண்டு, “காரைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு விடுங்கள்” என்றார்!
ஒல்லியான மனிதர் சிரித்தார் : “என்னைச் சோதனை போடப் போகிறீர்கள், அவ்வளவு தானே? என்னிடம் ஒன்றும் இல்லாவிட்டால் என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்டார்.
“விட்டு விடுகிறோம். வழக்கம் போல!” என்றார் இரகசியப் போலீசைச் சேர்ந்தவர்.
போலீஸ் ஸ்டேஷனுக்குள் சென்ற ஒல்லியான மனிதர் வெளியே வர ஒரு மணி நேரமாகிவிட்டது! அவர் சலிப்புடன் காரை மயிலாப்பூரை நோக்கி விட்டார். வழியில் –
சைக்கிள்களில் அமீதும் மணியரசும் திரும்பிக் கொண்டிருந்தார்கள்.
அவர் காரை நிறுத்தியதும், இருவரும் சைக்கிள்களை நிறுத்தினார்கள்.
“எங்கே அந்தப் பார்சல்? நான் வரும் வரையில் உங்களைக் காத்திருக்கச் சொன்னேனே!” என்றார் அவர்.
“எவ்வளவு நேரம் காத்திருப்பது? உங்கள் காரோட்டி, பார்சலைக் கொடுத்துவிட்டுப் போகும்படி சொன்னார். கொடுத்து விட்டோம். அவரே எங்களுக்கு ஒரு ரூபாய் கொடுத்துவிட்டார்!” என்றான் அமீது.
காரில் வந்தவர் வியப்புடன் அவர்களைப் பார்த்தார். “என்னுடைய காரோட்டியா! எனக்குக் காரோட்டியே கிடையாதே! எப்படி இருந்தான் அந்த மனிதன்! விரைந்து இருவரும் காரில் ஏறுங்கள். சைக்கிள்களைக் காரில் தூக்கிப் போடுங்கள்”
அமீதும் மணியரசும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றார்கள். பிறகு –
சைக்கிள்களைப் பின்னால் தூக்கிப் போட்டுவிட்டு, காரின் முன் சீட்டிலேயே இருவரும் உட்கார்ந்தார்கள்.
கார்-
எங்கேயோ சென்று மறைந்தது!
3
மணி ஆறரை.
வகாபின் வீட்டுத் தோட்டத்தில், வண்ண விளக்குகளின் ஒளியில், சங்கர்லால் குடும்பத்தினருக்கு விருந்து சிறப்பான முறையில் நடந்து கொண்டிருந்தது.
இந்த நேரத்தில் வகாப்பின் முகத்தில் ஒளியே இல்லை. வகாபின் மனைவி இந்திராவிடம் கூடப் பேச முடியாமல் பொங்கிவரும் துக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.
நீண்ட நேரமாக வகாபின் போக்கைக் கவனித்த சங்கர்லால், வகாப்பைப் பார்த்து, “ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள்?” என்றார். வகாப் –
“ஒன்றுமில்லை சங்கர்லால்” என்று மழுப்பினார்.
விருந்து முடிந்ததும், வகாப் சங்கர்லாலிடம், பகல் மூன்று மணியிலிருந்து என் மகனைக் காணோம்! அவனுடன் பக்கத்து வீட்டுப் பையன் மணியரசையும் காணோம்! இருவரும் சொல்லாமல் வெளியே போனது இதுதான் முதல் தடவை. இந்த நேரத்தில் விருந்துக்கு வராமல் இருவரும் எங்கு போயிருப்பார்கள்? நினைக்கும் போது எனக்கு அச்சமாக இருக்கிறது சங்கர்லால், அச்சமாக இருக்கிறது!” என்று சொன்னார்.
சங்கர்லால் வகாபின் முதுகில் தட்டி, “அச்சம் கொள்ளாதீர்கள் வகாப். அமீதைக் கண்டுபிடிக்காமல் நாம் விட்டுவிடப் போகிறோமா?” என்று சொல்லிவிட்டு, வகாபின் மனைவி நின்றிருந்த பக்கம் பார்த்தார். அவன் கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது. இந்திரா வகாபின் மனைவியிடம் நெருங்கித் தேறுதல் அளித்துக் கொண்டிருந்தாள்.
கத்தரிக்காயும் மைனாவும் ஒருவரை ஒருவரை ஒருவர் கேள்விக்குறியோடு பார்த்துக் கொண்டார்கள். அவர்கள் பார்த்துக் கொண்ட விதம், அமீது எங்கே போயிருப்பான் என்று ஒருவரை ஒருவர் கேட்டுக் கொள்வது போலிருந்தது.
மாணிக்கம் சிந்தனையுடன் எல்லாரும் பேசிக் கொள்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான்,
அப்போது –
பக்கத்து வீட்டுக்காரர், மணியரசின் அப்பா ஓடிவந்தார். ‘சங்கர்லால், என்னுடைய மகன் மணியரசு என் இரு கண்களைப் போன்றவன். அவனைத் தவிர எனக்கு வேறு பிள்ளையும் கிடையாது. அவன் இதுவரையில் எங்குமே சொல்லாமல் கொள்ளாமல் போனதில்லை. இன்று எவரிடமும் சொல்லாமல், அவன் உண்டியில் சேர்த்து வைத்திருந்த சில்லறைக் காசுகளை எடுத்துக் கொண்டு போய்விட்டிருக்கிறான்! என் மகனைக் கண்டு பிடித்துத் தாருங்கள் சங்கர்லால்” என்று அழமாட்டாத குறையாகச் சொன்னார். அவருடைய மனைவி, மணியரசின் அன்னையும் கூடவே ஓடிவந்தான், நீர் ததும்பும் கண்களுடன், இந்திராவுக்கு, அவளை வேறு நேற்றும் வேலை வந்துவிட்டது!
மணியரசின் அப்பாவைப் பார்த்து, “உங்கள் மகனை எப்போதிலிருந்து காணோம்?” என்று மெல்லக் கேட்டார் சங்கர்லால்
“மூன்று மணியிலிருந்து காணோம்” என்றார் மணியரசின் அப்பா, பிறகு, “நண்பர் வகாபிற்காவது ஏகப்பட்ட பிள்ளைகள்! எனக்கு ஒரே மகன்!” என்றார் அவர்.
வகாப் அப்போது சங்கர்லாலைப் பார்த்த விதம், ‘எவ்வளவு பிள்ளைகள் இருந்தாலும், போனால் போகட்டுமே என்று விட்டு விட முடிகிறதா! பெற்ற மனம் சும்மாயிருக்காதே!’ என்று சொல்லுவதைப் போலிருந்தது!
வகாப் ஏதோ நினைத்துக் கொண்டவரைப் போல் மணியரசின் அப்பாவைப் பார்த்து, “உங்கள் மகனும் சைக்கிளில் தானே சென்றான்!” என்று கேட்டார்.
“அவன் போனதை யார் பார்த்தார்கள்! மணியரசைக் காணோம். அத்துடன் அவன் சைக்கிளையும் காணோம். ஆகையால், அவன் சைக்கிளில் தான் போயிருக்க வேண்டும் என்பது தெளிவு” என்றார் மணியரசின் அப்பா.
“அமீதும் சைக்கிளில் தான் போயிருக்கிறான்” என்றார் வகாப்.
சங்கர்லால் அவர்கள் பேசிக் கொண்டதை அமைதியுடன் கேட்டுக் கொண்டிருந்தார்.
இதற்குள், வகாபின் மனைவி லீட்டிற்குள் ஓடினாள். சில நிமிடங்களில் அவள் திரும்பி வந்து, “அமீதின் உண்டியும் காலியாக இருக்கிறது; அவனும் காசுகளை அள்ளிக் கொண்டு எங்கேயோ போய்விட்டான்!” என்றாள்.
“சில்லறைக் காசுகளை எடுத்துக் கொண்டு அவர்கள் எங்கே போகப் போகிறார்கள்!” என்று சொல்லிக் கொண்டே சங்கர்லால், வகாபின் பிள்ளைகளைப் பார்த்தார். அமீது காணவில்லை என்றதும், அந்தப் பிள்ளைகளும் கூட ஏக்கத்துடன் சங்கர்லாலைப் பார்த்தனர்.
வகாபின் நான்கு வயதுப் பெண் குழந்தை மீனா. கையில் ஒரு பெரிய பொம்மையைத் தூக்கி வைத்துக் கொண்டு இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருந்தது. சங்கரலால் அந்தக் குழந்தையை அழைத்தார். அதன் பக்கத்தில் குனிந்து, அதைச் சேர்த்து அணைத்தவாறு, நான் யார் தெரிகிறதா?” என்றார்.
“சங்கர்லால்” என்றாள் மீனா.
“உன் பெயர்?”
“மீனா” என்று சொல்லிவிட்டுச் சுற்றி நின்றவர்களைப் பார்த்தாள் அவள்.
சங்கர்லால் மீனாவை அணைத்தபடி, “மீனா, உன் அண்ணன் அமீது எங்கே போனான் தெரியுமா?” என்று கேட்டார்.
மீனா கொஞ்சம் கூடத் தயங்காமல் சொன்னாள். “மூர்மார்க்கெட்டுக்குப் போவதாகச் சொன்னான். அவனும் மணியரசும் ஒன்றாகப் போனார்கள். அமீது என்னைச் சைக்கிளில் ஏற்றிப் போக மறுத்துவிட்டான்”
அவள் இவ்வளவு அழகாகப் பேசியது சங்கர்லாலுக்கே வியப்பாக இருந்தது.
சங்கர்லால் வகாபை அழைத்துக் கொண்டு தனியே சென்றார் : “வகாப், இதில் கவலை கொள்ளுவதற்கு ஒன்றுமே இல்லை.அமீதும் மணியரசும் ஏதோ வாங்கிவர மூர்மார்க்கெட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் இதுவரையில் மூர்மார்க்கெட்டில் விலை பேசிக் கொண்டிருக்க நியாயம் இல்லை. எல்லா போலீஸ் நிலையங்களுக்கும், கார்களில் சுற்றிக் கொண்டிருக்கும் போலீசுக்கும். இரண்டு சிறிய சைக்கிள்கள் ஒன்றாக எங்கேயாவது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றனவா என்று கவனிக்கும்படி ரேடியோச் செய்தியில் போலீஸ் இலாகாவைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் அறிவியுங்கள். நான் மாணிக்கத்தை மூர்மார்க்கெட்டுக்கு அனுப்பி வைக்கிறேன்.”
“ஆகட்டும் சங்கர்லால்” என்று வகாப் தொலைபேசி இருந்த இடத்தை நோக்கிச் சென்றார்.
சங்கர்லால் மாணிக்கத்தை அழைத்தார். “மாணிக்கம் வாடகைக் கார் ஒன்றைப்பிடித்துக் கொண்டு மூர்மார்க் கெட்டுக்குப் போ. அமீதும் மணியரசம் வந்தார்களா, அவர்கள் என்ன வாங்கிக்கொண்டு போனார்கள் என்று மெல்ல விசாரித்துக் கொண்டு தேராக முல்லைவனம் மலைத் தோட்டத்திற்கு வா. நான் இந்திராவையும் மற்றவர்களையும் அழைத்துக் கொண்டு பங்களாவுக்குப் போகிறேன்” என்றார்.
“இதோ புறப்பட்டு விட்டேன் அண்ணா” என்று சொல்லி வீட்டு வெளியே நடந்தான் மாணிக்கம்.
சங்கர்லால், இந்திராவையும் மாதுவையும், கத்தரிக்காய் மைனாவையும் காரில் ஏற்றிவிட்டு, வகாபிடம் விடைபெற்றுக் கொண்டு காரில் ஏறினார்.
கார் புறப்பட்டது.
வகாபும் அடுத்த வீட்டுக்காரரும் அழமாட்டாத குறையாக அங்கே நின்றிருந்தார்கள்.
4
மறுநாள், காலை மணி ஒன்பது.
முல்லைவனம் மலைத் தோட்டத்தை நோக்கி வகாபின் கார் பறந்து வந்தது. அது, காரோட்டுபவர் இல்லாமலே, வழக்கமாகப் பல தடவைகள் சங்கர்லாலின் பங்களாவுக்கு வந்து விட்டுப் போன பழக்கத்தால் ஓடுவதுபோல் ஓடியது!
வகாபின் கார் சங்கர்லாலின் பங்களாவின் முன் நின்றது. பொன்னன் ஓடிவந்து உதவிப் போலீஸ் கமிஷனர் வகாபுக்கு ஒரு சல்யூட் அடித்துவிட்டு, காரின் கதவைத் திறந்தான். வகாப் பதிலுக்குச் சல்யூட் அடித்துவிட்டு, “சங்கர்லால் இருக்கிறாரா?” என்று கேட்டுக் கொண்டே வந்து இறங்கினார்.
“இருக்கிறார்” என்றான் பொன்னன்.
வகாப், பங்களாவின் கூடத்தில் போய் நின்ற போது, கூடத்தில் சங்கர்லாலும் இந்திராவும் மாணிக்கமும் கயல்விழியும் உட்கார்ந்து தேநீர் பருகிக் கொண்டிருந்தார்கள். மைனாவும் கத்தரிக்காயும் தோட்டத்திலிருந்து சன்னல் வழியாக வகாபை எட்டிப் பார்த்தார்கள்.
“வாருங்கள் வகாப்” என்றார் சிரித்துக் கொண்டே சங்கர்லால்,
மாது, இதற்குள் வகாபிற்கும் தேநீர் கொண்டுவந்தான். அவர் தேநீரைப் பருகிக் கொண்டே “நான் இங்கே வரும் போதெல்லாம் தேநீர் பருகி விட்டுப் போகிறேன். நீங்கள் எல்லாரும் ஒரு நாள் என் வீட்டிற்கு வந்து தேநீர் பருகியதால் எத்தனை தொல்லைகள் பாருங்கள்!” என்று கேலியாகச் சொல்லிக் கொண்டே கயல்விழியைப் பார்த்தார். வகாப் சொன்னதின் பொருள் சங்கர்லாலுக்குப் புரிந்துவிட்டது!
”வகாப், கயல்விழியை உங்கள் வீட்டுக்கு வரவேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. அவள் தனது அன்னையை இழந்துவிட்டு, மேரியின் வழக்கில் மீண்டு, மாணிக்கத்தை மணந்து கொண்டும்கூட, ஒரேயடியாக மகிழ்ச்சி வெள்ளத்தில் குதித்துவிடாமல் தன்னைத் தானே தேற்றிக் கொண்டிருக்கிறாள். நேற்றுக் கயல்விழியை நாங்கள் அழைத்தபோது, ‘நானும் அத்தானும் ஒன்று. அத்தான் வந்தால் தானும் வந்த மாதிரி தான். உடல் நிலை எனக்குச் சரியாக இல்லை’ என்று சொல்லி விட்டாள். இந்திராவும் எங்கே அப்படிச் சொல்லிவிடுவாளோ என்று அச்சம் கொண்டுவிட்டேன் நான்! நல்ல காலமாக மாணிக்கம் கைகொடுத்தான், ‘நாம் இருவரும் ஒருவர்தானே? நான் நின்று விடுகிறேன். நீ போய்விட்டு வாயேன்!’ என்றான். கடைசியில் ஒரு வழியாக சமாதானம் செய்து மாணிக்கத்தையே அழைத்து வந்தோம்!” என்றார் சங்கர்லால்.
வகாபின் மனத்தில் ஏதோ ஒன்று உறுத்தியது. அவர் உள்ளூர், ‘கயல்விழியின் அன்னையைக் கைது செய்தவன் நான், அதனால் அவளுக்கு என் வீட்டிற்கு வரப் பிடிக்கவில்லையோ என்னவோ?” என்று எண்ணினார். பிறகு, தனக்குள்ளேயே, ‘கயல்விழி அப்படிப்பட்டவள் அல்ல! அவளுடைய வேதனைகள் இன்னும் அகலவில்லை. இன்னும் கொஞ்ச நாளைக்கு இப்படித்தான் இருப்பாள். பிறகு எல்லாம் சரியாகிவிடும்’ என்று முடிவு கட்டினார்.
சங்கர்லால், பேச்சின் திருப்பத்தை மாற்றினார். “உங்கள் முகத்தைப் பார்த்ததுமே, அமீது இன்னும் வீட்டிற்கு வரவில்லை என்பது தெரிந்துவிட்டது!” என்றார்.
“ஆமாம் சங்கர்லால்”
“மாணிக்கம் சில செய்திகளைக் கொண்டு வந்தான். மூர்மார்க்கெட்டில், ஏதோ ஒரு கடையில், தபால் தலைகள் ஆல்பம் ஒன்றை இருவரும் வாங்கியிருக்கிறார்கள். பிறகு, முயல் குட்டியை வாங்க விலை பேசிவிட்டுத் திரும்பிப் போய்விட்டிருக்கிறார்கள். எங்கே போனார்கள் என்று தெரியவில்லை” என்றார் சங்கர்லால்.
“முயல் குட்டி எதற்கு இவர்களுக்கு?” என்றார் வகாப் வியப்புடன்.
“எங்களுக்குப் பரிசு தர எண்ணியிருப்பார்கள்” என்றார் சங்கர்லால்,
“ஆமாம், அப்படித்தான் இருக்கும்” என்றாள் இந்திராவும். “அந்த இரண்டு சைக்கிள்களையும் எங்கேயுமே காணோம்!” என்றார் வகாப்.
சங்கர்லால் சிந்தனையுள் ஆழ்ந்தார்.
வகாப் தேநீரைக் குடித்து முடிந்துவிட்டு, “சங்கர்லால், இன்று ஒரு வழக்கு சென்னையின் சுற்றுப்புறத்தில், பெரிய கோயில் ஒன்றில், விலை மதிக்க முடியாத நகைகள் களவு போய்விட்டன. களவு போன நகைகள் அனைத்தும் கோயிலுக்குச் சொந்தமானவை. திருடியவனைப் பிடித்து வெகு நாட்கள் ஆகிவிட்டன. வழக்கின் முடிவு இன்று. திருடியவன் ஆணை பெறுவான் என்பதில் ஐயமில்லை. ஆனால், அவன் திருடிய நகைகள் பற்றி எவ்வளவோ கேட்டுப் பார்த்தாகிவிட்டது. அவன் உண்மையைச் சொல்ல மறுக்கிறான். இப்போது வழக்கு மன்றத்திற்குத்தான் போகிறேன் நான்” என்றார் வகாப்,
“வேடிக்கையான வழக்குத்தான்” என்றார் சங்கர்லால், அவர் சிரித்துக் கொண்டே, “களவு போன பொருள்கள் கிடைக்காமலே, ஒருவனைக் குற்றவாளியாக்கித் தண்டனை பெறச் செய்வது மிகவும் கடினமான செயல்!” என்றார்.
“சாட்சியங்கள் அவனுக்கு எதிராக இருக்கின்றன. அவன் திருடினான் என்பதை அவனே மறுக்கவில்லை. திருடிய பொருள்கள் எங்கே இருக்கின்றன என்பதைத்தான் சொல்ல முடியாது என்கிறான்” என்றார் வகாப்,
“இந்த வழக்கில், நீதிபதியின் தீர்ப்பைத் தவறாது நான் கேட்க ஆசைப்படுகிறேன். எனவே, நானும் வருகிறேன் வகாப்!” என்று சொன்னார் சங்கர்லால்.
5
சங்கர்லாலின் கார், முன்னே சென்றது. வகாபின் கார் பின்னால் சென்றது. சென்னை உயர் நீதி மன்றத்தின் எதிரே. ஒரு மர நிழலில், இரண்டு கார்களும் நின்றன. சங்கர்லாலும் வகாபும் ஒன்றாகப் பேசிக் கொண்டே நீதி மன்றத்தின் உள்ளே நுழைந்தார்கள்,
மணி பதினொன்று.
எந்த வழக்கிலும், சங்கர்லால் குற்றவாளியைக் கண்டு பிடித்து நீதி மன்றத்துக்கு அனுப்புவதோடு சரி. வழக்கின் இறுதியில், நீதிபதியின் தீர்ப்பு என்ன என்பதை அவர் எதிர்பார்த்து இதுவரையில் போனதே கிடையாது. தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பது சங்கர்லாலுக்கே நன்றாக தெரியும். அவர் நினைத்ததற்கு மாறாக எதுவுமே நடப்பதில்லை. ஆனால்
இன்று, முதன் முதலாக, தனக்குத் தொடர்பில்லாத ஒரு வழக்கின் முடிவைக் காண, குற்றவாளிக்கு என்ன ஆணை கிடைக்கப் போகிறது என்பதை நேரில் காண வகாபுடன் வந்திருந்தார். சங்கர்லாலையும் வகாபையும் கண்டதும், நீதி மன்றத்தில் புரிவோகும். வழக்குசுளைக் காண வந்திருந்த பொது மக்களும் வழக்கறிஞர்களும் சங்கர்லாலைச் சூழ்ந்து கொண்டார்கள். கூட்டத்தைச் சமாளிக்க வகாப் கைகளை அசைத்து, சங்கர்லாலுக்கு வழி விட்டார். நீதி மன்றத்தின் ஒரு கூடத்தில், வகாப் சங்கர்லாலை ஒரு நாற்காலியில் உட்கார வைத்து விட்டுத் தானும் பக்கத்தில் மற்றொரு நாற்காலியில் உட்கார்ந்தார்.
நீதிபதி வந்துவிட்டார்.
நீதிமன்றத்தில் கூடியிருந்த அத்தனை பேர்களும் சங்கர்லால் உட்கார்ந்திருந்த கூடத்திற்கே வந்துவிட்டார்கள். அரசினர் வழக்கறிஞரும், மற்ற வழக்கறிஞர்களும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்! நீதிபதியின் முகத்தில் கூட இலேசாக வியப்புத் தோன்றி மறைந்தது. கைதிக் கூண்டில் –
குற்றவாளி நின்றிருந்தான். அவன் கையில் விலங்குகள் போடப்பட்டிருந்தன. அவன் நீலச்சட்டையும், வெள்ளை முகம் இரும்புச் சிலையின் முகத்தைப் போல் இருந்தது. வேட்டியும் அணிந்திருந்தான். தலை சுலைந்து கிடந்தது. அவன் அவன் சங்கர்லாலைப் பார்த்துவிட்டுக் கூடத்தை ஒரு முறை பார்த்தான்.
கூடியிருந்த மக்கள் இலேசாகப் பேசியதால் நீதிபதி.எழுந்த ஒலியை அடக்க, மேசையின் மேல் மரச் சுத்தியலைத் தட்டி ஓசை எழுப்பினார். நீதிமன்றத்தில் –
அமைதி நிலவியது,
நீதிபதி, தமது தீர்ப்பைக் கூறுமுன், கைதிக் கூண்டில் நின்ற குற்றவாளியைப் பார்த்து, ‘சவரிமுத்து, ஏற்கனவே நீ பலவிதக் குற்றங்களை இழைத்திருக்கிறாய். திருடுவது, கொள்ளையடிப்பது என்பன உன் தொழிலாகி விட்டன! இந்தத் தடவை பல இலட்ச ரூபாய் மதிப்புள்ள கோயில் நகைகளை நீ திருடியிருக்கிறாய் என்பதில் கொஞ்சமும் ஐயமில்லை. சாட்சியங்கள் எல்லாம் உனக்கு எதிராகவே இருக்கின்றன. ஆனால், நகைகள் இருக்குமிடத்தை நீ சொல்லிவிட்டால், உனக்குக் கொடுக்கும் ஆணையில் கொஞ்சம் குறைக்கலாம். நகைளை எங்கே மறைத்து வைத்திருக்கிறாய் என்பதைச் சொல்லு?” என்று கேட்டார்.
அவரவர்கள் மூச்சுவிடும் ஓசை கூடக் கேட்கும் அளவுக்கு, நீதி மன்றத்தில் அமைதி நிலவியது. ஆனால் –
கைதி பதில் சொல்லவில்லை. அவன் முகம் இரும்பைப் போலவே இருந்தது!
நீதிபதி மீண்டும், அமைதியான குரலிலேயே கேட்டார்: “நான் கேட்டட் கேள்விக்குப் பதில் சொல்லப் போகிறாயா, இல்லையா! பதில் சொல்லாவிட்டால், நீதி மன்றத்தை அவமதித்ததாகக் சுருதப்பட்டு, உன்னுடைய ஆணைக் காலம் நீட்டிக்கப்படும்!”
கைதி, அப்போதும் பேசவில்லை; சிறிது நேரம் கழித்து அவன், வாயைத் திறந்து, உரத்த குரலில் சொன்னான் : “நான் கோயில் நகைகளை திருடவில்லை. நகைகளை நான் களவாடாத போது, அவற்றை எப்படி நான் ஒளித்து வைத்திருக்க முடியும்!”
கூட்டத்தினிடையே பலத்த பேச்சொலி எழுந்தது. சங்கர்லால் இப்படி அப்படித் திரும்பாமல் கைதிக் கூண்டில் நின்றவனையே பார்த்துக் கொண்டிருந்தார்.
வகாப், பல்லைக் கடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.
நீதிபதி மீண்டும் மேசையின் மேல் சுத்தியலால் தட்டி விட்டு, தமது தீர்ப்பை அறிவித்தார். “குற்றவாளி குற்றத்தை ஒப்புக் கொள்ள மறுப்பதுடன், இறுதிவரையில் நகைகளை மறைத்து வைத்திருக்கும் குற்றத்திற்கு ஆளானவனாதலால் ஏழு ஆண்டுக் கடுங்காவலுக்கு இவனை அனுப்பி வைக்கிறேன்!”
கைதியின் முகம், இப்போதும் முன்போலவே இரும்பைப் போல் இருந்தது.
கூட்டத்தில் பரபரப்பும் பேச்சுக் குரல்களும் எழுந்தன. அப்போது –
பன்னிரண்டு வயது மதிக்கத் தக்க ஒரு பெண் எழுந்தாள், ‘அப்பா!” என்று சுத்தினாள் மிகுந்த ஆவேசம் வந்தவளைப் போல்!
சங்கர்லால், அப்போதுதான் அந்தப் பெண்ணைத் திரும்பிப் பார்த்தார். அந்தப் பெண் ‘அப்பா’ என்று அலறியதும், கைதிக் கூண்டில் நின்றவன் திரும்பி அப்பெண்ணைப் பார்த்தான்,
அவள் மீண்டும் சுத்தினாள் : “அப்பா! சொல்லிவிடுங்கள் அப்பா! நகைகளை வைத்திருக்குமிடத்தைச் சொல்லிவிடுங்கள் அப்பா!”
சைதியின் முகத்தில் ஈவு இரக்கம் எதுவுமே இல்லை. அவன் மூகத்தில் கொஞ்சமும் மாறுதல் ஏற்படவில்லை.
அவன் எதுவுமே பேசவில்லை.
கைதியைப் போலீசார் அழைத்துச் சென்று விட்டார்கள். நீதிபதி தமது அறைக்கு எழுந்து போய்விட்டார்.
சங்கர்லால் வகாபைப் பார்த்து, “வகாப், உங்களுக்கு என் பாராட்டுகள்” என்றார். வழக்கில் வெற்றி பெற்றுக் குற்றவாளியைக் கூண்டில் தள்ளியதற்காகச் சங்கர்லால் அவரைப் பாராட்டினார் ஆனால் –
வகாப் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. குற்றம் புரிந்தவனைப் பிடித்துச் சிறையில் தள்ளி மட்டும் பயன் ‘சங்கர்லால், என்ன? களவுபோன பொருள்களைக் கண்டு பிடிக்காத வரையில், இழுக்கு எனக்கு மட்டுமல்ல, போலீஸ் இலாகாவுக்கே உண்டு. நீங்கள் இல்லாத காலத்தில் வந்து சிக்கிய வழக்கு இப்படியா முடிய வேண்டும்! அதோ, அந்தக் கைதிக்கு இதயம் என்பதே இல்லை. அவன் பெற்ற மகள் அடிபட்ட மான்குட்டியைப் போல் துடிப்பதைக் கண்டும்கூட அவன் மனம் இரங்கவில்லையே! இவன் எங்கே உண்மையைச் சொல்லப் போகிறான்!” என்றார்.
சங்கர்லால் எழுந்து, அந்தப் பெண்ணின் பக்கத்தில் சென்று. அவள் முதுகைத் தட்டி, அவள் காதருகில், “உன் பெயர் என்ன!” என்றார்.
அவள் கண்களில் நீர் நிறைந்தது. அவள் தொண்டை அடைக்க, பேச இயலாமல் திணறினாள்!
சங்கர்லால் மீண்டும் கேட்டார் : ‘உன் பெயர் என்ன! என்னிடம் சொல்ல மாட்டாயா!”
அவள் அழுது கொண்டேயிருந்தாளே தவிர, பதில் சொல்லவில்லை. சங்கர்லால் அவளுடைய முதுகில் தட்டிவிட்டு, “சொல்லாவிட்டால் துன்பம் இல்லை. வேறு எவரையாவது கேட்டு எப்படியாவது நான் தெரிந்து கொள்கிறேன்” என்று இரக்கத்துடன் சொல்லிவிட்டு, வகாபை நோக்கி வந்தார்.
வகாப், “அந்தப் பெண் என்ன சொன்னாள்?’ என்று ஆவலுடன் கேட்டார்.
“அவன் பெயரைக் கேட்டேன். அதைக் கூடச் சொல்ல இயலவில்லை அவனால். துக்கம் அவள் தொண்டையை அடைக்கிறது! சவரிமுத்துலின் முகவரி உங்களுக்குத் தெரியுமா இல்லையா?” என்றார் சங்கர்லால்,
“சவரிமுத்துவின் முகவரி என்னிடம் இருக்கிறது. உங்களுக்கு வேண்டுமா?” என்று கேட்டார் வகாப்.
“ஆமாம், ஒரு துண்டுக் காகிதத்தில் குறித்துக் கொடுங்கள் வகாப்!” என்றார் சங்கர்லால்.
வகாப் தமது குறிப்புப் புத்தகத்தை எடுத்து, ஒரு காகிதத்தில் சவரிமுத்துலின் முகவரியை எழுதினார். அதை அப்படியே பிய்த்துச் சங்கர்லாலிடம் கொடுத்தார்.
சங்கர்லால் அதை வாங்கித் தமது சட்டைப் பையில் போட்டுக் கொண்டு காரை நோக்கி நடந்தார்.
வழக்கின் முடிவு வகாபைப் பொறுத்தவரையில் வெற்றிகரமாக இல்லை. சவரிமுத்து. கடைசிக் கட்டத்தில், எப்படியும் உண்மையைக் கக்கிவிடுவான் என்று எதிர்பார்த்து –
ஏமாந்தார் வகாப்!
சங்கர்லாலின் கார் முன்னே சென்றது. வகாபின் கார் பின்னால் சென்றது.
– தொடரும்…
– சங்கர்லால் வந்துவிட்டார்! (மர்ம நாவல்), சங்கர்லால் துப்பறியும் மர்ம நாவல்கள், மணிமேகலைப் பிரசுரம், சென்னை.
தொடர்புள்ள சிறுகதைகள்
பால்ய காலத்துச் சிநேகிதி!
வ.ந.கிரிதரன்
June 9, 2026
உறுப்புகளைத் தேடி…
காரை ஆடலரசன்
June 9, 2026
அமெரிக்காவில் கிச்சா
கிரேஸி மோகன்
June 9, 2026