சங்கமேஸ்வரியின் லட்சியம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 22, 2015
பார்வையிட்டோர்: 8,900
அப்பா எனக்கு இந்த கல்யாணம் வேணாம்ப்பா ! சொன்ன மகளின் தலையை தடவி ஏன் சாமி” இப்படி சொல்ற,மனதில் வந்த ஏமாற்றம் தெரியாமல் மகளிடம் அன்புடன் கேட்டான் அண்ணாமலை, அப்பா, அம்மாவும் இல்ல, நீ மட்டும் தனியா இருக்கற, இது வரைக்கும் நான் இருந்ததனாலே நீ நிம்மதியா இருந்தே, இப்ப நான் உன்னைய விட்டுட்டு போயிட்டன்னா அப்புறம் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவ, மகளின் தலையை மெல்ல தட்டி ஏம்மா நாம என்ன பொ¢ய பங்களாவிலயா இருக்கோம், இந்த ரோட்டு ஓர குடிசையிலதான இருக்கோம், நீ நாலு தெரு தள்ளி இன்னொரு குடிசைக்குத்தான போகப்போற, அப்பப்ப என்னைய வந்து பாத்துக்கடா அது போதும், நான் சமாளிச்சுக்குவேன்.
அண்ணாமலையும், அவன் பெண்ணும் இந்த சென்னை கார்ப்பரேசன் தெருவில் குடிசைப்பகுதியில் தங்கியிருந்தனர், அண்ணாமலையும்,அவன் மனைவியும் கிராமத்த விட்டு பஞ்சம் பிழைக்க இந்த சென்னை மாநகரத்துக்கு வந்து அவர்களால் சம்பாதிக்க முடிந்தது இந்த் ஒரு குடிசைதான். அதற்குள்ளாகவே அவனுக்கு ஒரு பெண் பிறந்து அவளுக்கு அவங்க ஊர் அம்மனின் பேரான சங்கமேஸ்வரி என வைத்து கார்ப்பரேசன் ஸ்கூலில் ஐந்தாவது படித்துக்கொண்டிருக்கும் போதே அண்ணாமலையின் மனைவி ஒரு விபத்தில் இறந்து விட்டாள், அதற்குப்பின் சங்கமேஸ்வரி அவள் அப்பனின் தேவைகளை கவனிக்க படிப்பை தியாகம் செய்ய வேண்டியதாகிவிட்டது.
அண்ணாமலை எந்த வேலையானாலும் செய்யப்போவான்,அந்த மாபெரும் நகரத்தில் கட்டட வேலைக்கும் தோட்ட வேலைக்கும் இவனுக்கு அழைப்புக்கள் வர ஓரளவு வருவாயுடனே அவனும் அவன் மகளும் வாழமுடிந்தது.சங்கமேஸ்வரிக்குத்தான் ஒரே குறை, நாலு எழுத்து படிக்கமுடியவில்லையே என்று மனதுக்குள் வருத்தப்பட்டுக்கொண்டே இருப்பாள் அண்ணாமலைக்கு அவளின் ஏக்கங்கள் புரிபடாமலே இருந்தது, அவனைப்பொருத்தவரை உழைத்து களைத்து வரும்போது சமைத்து வைத்திருந்தால் சாப்பிட்டுவிட்டு நன்றாக உறங்கிப்போவான்.ஆனால் அவ்வப்பொழுது மகளுக்கு திண்பண்டங்கள் வாங்கித்த்ருவதோடு தன் கடமையை முடித்துக்கொள்வான்.எப்பொழுதாவது தன் மகளை பக்கத்து குடிசைப்பெண்களுடன் சினிமா பார்க்க அனுப்பி வைப்பான். அவனுக்கு மனதில் பாசம் உண்டு. ஆனால் எதை வைத்து அதை வெளிப்படுத்துவது என்பதுதான் அவனுக்கு புரியவில்லை, ஒரு நாளாவது உனக்கு என்ன ஆசை என்று வாய் விட்டு கேட்டிருந்தால் அவள் தன் படிப்பாசையை அவனிடம் கொட்டியிருப்பாள். அவனும் கேட்கவில்லை, அவளுக்கும் அதை உணர்த்த தெரியவில்லை.
இந்த மாப்பிள்ளை விசயம் கூட அவன் கூட கட்டட வேலை செய்யும் மாரியப்பந்தான் இந்த யோசனையையும், அவனே தன் குடிசைக்கு பக்கத்தில் இருக்கும் குடும்பத்தில் ஒரு பையன் இருப்பதாகவும் அதையே பேசிவிடலாம் என முடிவு செய்து கல்யாணத்திற்கு நாள் குறித்து வைக்கவும் ஏற்பாடு செய்து விட்டான்.இப்பொழுது இவளின் பேச்சு இவனுக்கு ஏமாற்றத்தை தோற்றுவித்தது.என்றாலும் சரியாகிவிடும் என்று தோன்றியது, எதற்கும் நண்பனிடம் சொல்லி வைக்கலாம் என்று சொல்லிவைத்தான்.
மாரியப்பன் சங்கமேஸ்வரியிடம் வந்து ஏம்மா இப்படி சொல்ற, நீ உங்கப்பனை பத்தி கவலைப்படாதே, நாங்க எல்லாம் பாத்துக்கறோம் என்று சமாதானப்படுத்தினான்.
உண்மையில் சங்கமேஸ்வரி கவலைப்பட்டது அதற்கல்ல, தனக்கு வரும் புருசனும் கட்டட வேலைக்கு செல்பவனாக இருக்கிறானே என்ற கவலைதான். அவனாவது நாலெழுத்து படித்திருந்தால் கொஞ்சம் நன்றாக இருக்குமே என்ற நினைப்புதான்
அவள் மனதில் ஓடிக்கொண்டிருந்த்து. ஆனால் அதை சொன்னால் அப்பன் சங்கடப்படுமே என்றுதான் கல்யாணமே வேண்டாம் என்று சொன்னாள், அதற்கே அவளுக்கு ஆளாளுக்கு அறிவுரை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
கல்யாணம் முடிந்துவிட்டது,அவளது வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை, அப்பனுக்கு சோறாக்கிப்போட்டது போல கணவனுக்கு சமைத்து போட்டுக்கொண்டிருந்தாள் அவ்வளவுதான், அப்பனாவது எந்த கெட்ட பழக்கம் இல்லாமல் இருந்ததால் வீடு அமைதியாக இருக்கும். இவனோ தினமும் குடிதான், வீட்டில் ஒரே ரகளை அவளுக்கு ஒரு மாதத்திலேயே வெறுத்துப்போய் விட்டது.தகப்பனிடம் புகார் சொன்னால் எடுபடாது என்பது தெரியும், நேராக மாரியப்பனிடம் சென்றாள், நீங்கள் பாத்து வச்ச கல்யாணந்தானே, இவன் செய்யும் அட்டகாசத்துக்கு ஒரு முடிவு சொல்லுங்கள் என்று கேட்கவும், மாரியப்பன் இவள் புருசனிடம்
சென்று நியாயம் கேட்க அவன் மாரியப்பனை வாயில் வந்தபடி பேசிவிட்டான்.அவன் மனம் வெறுத்து அம்மா என்னை மன்னிச்சுடு, நான் இவன் இப்படி இருப்பான்னு நினைக்கவே இல்லை, வேற உதவி எதுன்னாலும் எங்கிட்ட கேளும்மா.
இப்படியே ஆறு மாதம் ஓடியிருக்கும், ஒரு நாள் சங்கமேஸ்வரியின் கணவன் குடிசைக்கு போதையில் வந்தவன் சங்கமேஸ்வரியை காணாமல் திகைத்து நின்றான். கூப்பிட்டு கூப்பிட்டு பார்த்தான். அந்த குடிசையில் சங்கமேஸ்வரியின் எந்த பொருட்களையும் காணவில்லை. நேரே அண்ணாமலையின் குடிசைக்கு போய் வாசலில் நின்று கத்தினான். வெளியே வந்த அண்ணாமலை என்னவென்று விசாரிக்க சங்கமேஸ்வரி இங்கு வந்தாளா என்று கேட்டான். அவள் இங்கே வரவேயில்லை என்னவாச்சு என்று பதற்றத்துடன் கேட்க உன் ஓடுகாலி மகள் எங்கே போனாளோ என்று வசவுகளாக பேச ஆரம்பித்தவன்,போதை குறைய குறைய திரும்பி குடிசைக்கு நடக்க ஆரம்பித்தான்.
அதன் பின் சங்கமேஸ்வரியை பார்க்கவே முடியவில்லை, அவள் கணவன் தற்பொழுது வேறொரு பெண்ணை மணந்து கொண்டுவிட்டான். மனமொடிந்து போன அண்ணாமலையை மாரியப்பன்தான் தேற்றினான். ஊராரை பொருத்தவரை சங்கமேஸ்வரி ஓடிப்போனவள்.
சங்கமேஸ்வரியோ தற்பொழுது கோயமுத்தூரிலுள்ள் ஒரு பள்ளியில் ஆயாவாகவும், இரவு நேர படிப்பகத்தில் படித்துக்கொண்டு எட்டாவது வகுப்புக்கான தேர்வை எழுத தயாராகிக்கொண்டிருக்கிறாள்.இதற்கான புணணியம் மாரியப்பனைத்தான் போய்ச்சேரும், தான் வேலை செய்துகொண்டிருந்த முதலாளியிடம் சங்கமேஸ்வரியை பற்றி சொல்லி அவளுக்கு ஒரு வாழ்க்கையை கொடுத்தவன்,உன் தகப்பனை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று உறுதி மொழியும் கொடுத்திருக்கிறான்