காதல் தர வந்தேன்…!





(2001ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8
அத்தியாயம்–5
“இன்னும் கொஞ்சம் ரசம் விடு!” சீனிவாசன் சொன்னதும் வசந்தி கரண்டியால் எடுத்து விட்டாள்.
“ஏன்… உன் முகம் ஒரு மாதிரியாயிருக்கு?”
“ஒண்ணுமில்லே….”
“உங்கப்பா இறந்ததற்காக கவலைப்படறே… அதானே?”
“வருத்தப்படாம இருக்க முடியுமா? பெத்த அப்பாவாச்சே?” குரல் நெகிழ்ந்தது.
“நல்ல மனுஷன்தான்! ஆனா, எமனுக்கு நல்லவங்க, கெட்டவங்களெல்லாம் கண்ணுக்குத் தெரியாது. அதையே நினைச்சிட்டிருந்தா எப்படி? செத்தவங்களை பத்தி கவலைப்படறதைவிட… இருக்கிறவங்களைப் பத்தி கவலைப்படு…”

“நாம வசதியானவங்க இல்லேதான்! சின்ன வீட்ல இருக்கிறவங்கதான். ஆனா நமக்கு விசாலமான மனசிருக்கு வசந்தி. உன் தங்கச்சி மீனாவுக்கு இனி யார் இருக்கா? அவளை அந்த வீட்லே தனியா விட்டுட்டு வந்திருக்கியே… கொஞ்சம் கூட பொறுப்பில்லாம? ஆம்பளை இல்லாத வீடுன்னு எவனாவது வீட்டுக்குள்ளே புகுந்திட்டா அவ கதி என்னாகறது? அவளுக்காக தனியா சமைக்கப் போகிறோமா என்ன? அவளையும் நம்ம. வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்திருக்கலாமே!” என்றான் சீனிவாசன்.
இந்த வார்த்தையை அவள் எதிர்பார்த்ததுதான். அவளுக்கு தெரியாதா தன் கணவனைப் பற்றி.
“நான் கூப்பிட்டேன். அவதான் பிடிவாதமா வர மறுத்திட்டா! இன்னும் கொஞ்ச நாள்ல லேடிஸ் ஹாஸ்டல்ல தங்கிக்கறேன்னு சொன்னா. அதனால் விட்டுட்டேன்!”
“வயசுப் பொண்ணு… நாமெல்லாம் இருக்கறப்ப ஹாஸ்டல்ல தங்கறதா? பைத்தியக்காரி அவதான் ஏதோ உளர்றான்னா… நீயும் தலையாட்டிக்கிட்டு வந்துட்டியா? நான் போய் கூப்பிடறேன்!”
பயந்து விட்டாள் வசந்தி.
“ஐயோ…. வேணாங்க! நானே அவளை ரொம்ப வற்புறுத்தினேன். பிடிவாதமா வரமறுத்திட்டா. அவளைப் பத்தி எனக்குத் தெரியும். வர மாட்டா. தான் நினைச்சா.. நினைச்சதுதான். மோர் விடவா?”
“வேண்டாம்!” என்றான் யோசனையுடன், தட்டிலேயே கையை கழுவிக் கொண்டு எழுந்தான்.
வசந்தி கணவனை வெறித்துப் பார்த்தாள்.
அவளுக்கு மீனா மீது அன்பிருந்தது. அக்கறையும் இருந்தது. நியாயமாய் பார்க்கப் போனால் அவளை அவள்தான் தன் பொறுப்பில் அழைத்து வந்திருக்க வேண்டும். ஆனால், முடியவில்லை. காரணம்… மீனாவின் அதீத அழகு. இரண்டாவது கணவனின் வக்கர குணம். சீனிவாசனுக்கு சபல புத்தி அதிகம். நிறைய பெண்கள் தொடர்பு உண்டு. அதன் காரணமாய் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை வரும். ஆனால் சீனிவாசன் தன்னை திருத்திக் கொள்ளவில்லை. இந்த நிலையில் தங்கையை எப்படி வீட்டிற்கு அழைத்து வர முடியும்? பாலுக்கு பூனை காவல் போல.
அதைவிட, மீனா அங்கிருப்பதே பாதுகாப்பு என்பதை தெளிவாய் உணர்ந்திருந்தாள்.
“கடவுளே… என் தங்கையை எந்தக் குறையும் வராமல் நீதான் பாது காக்கணும்!” அவளால் வேண்டிக் கொள்ள மட்டுமே முடிந்தது.
“ரொம்ப டல்லாயிட்டே மீனா?” பாண்டியன் அவள் அருகில் வந்தமர்ந்தான்.
“…”
“இப்படி உங்கப்பா உன்னை அனாதையா விட்டுட்டு போவார்னு… நான் நினைச்சிக்கூட பார்க்கலே…”
“…”
“போனவரையே நினைச்சி உன் உடம்பை வருத்திக்காதே மீனா! எப்படி இளைச்சிட்டே பார்! சாப்பிடறியா இல்லையா? நீ இப்படி இருக்கறது என் மனசுக்கு கஷ்டமாயிருக்கு மீனா!”
“…”
“இனிதான் நீ யோசிச்சு, புத்திசாலித்தனமா ஒரு நல்ல முடிவை எடுக்கணும். மனுஷன் வாழ்றதுக்கு பணம் அவசியம் மீனா. அந்தப் பணத்தை சம்பாதிக்கத்தானே உங்கப்பா வெளியூருக்குப் போனார். கரிக்கட்டையா திரும்பி வந்தார். என் பேச்சை ஆரம்பத்திலேயே கேட்டிருந்தா உங்கப்பாவை பறி கொடுத்திருக்க வேண்டாம். அந்தப் பணத்தை நீயே சம்பாதிச்சிருக்கலாம்.” என்றான் அவளை அர்த்த புஷ்டியுடன் பார்த்தபடி.
“…”
“நீ அமைதியா இருக்கிறதைப் பார்த்தா நான் சொல்றதை யோசிக்கறேன்னு தெரியுது. இதோ பார் மீனா….. நாட்லே முக்கால்வாசிப் பேர் இப்படித்தான் மீனா. அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போறாங்க! உனக்கும் இப்ப யாருமில்ல! அப்பாவும் போயிட்டார். இத்தனை அக்காள்கள் இருந்தும் யாராவது உதவுனாங்களா? அவ்வளவுதான்! எல்லாரும் சுயநலக்காரங்க மீனா. எனக்கு உன்மேல அக்கறை மட்டுமில்லே; அன்பும் இருக்கு. அன்புன்னு சொல்றதை விட காதல் இருக்குன்னு சொல்லலாம். நீ மட்டும் சரின்னு ஒரு வார்த்தை சொல்லு… கடைசி வரைக்கும் நான் உன்னை வச்சி காப்பாத்தறேன்…”
“…”
“யோசி… நல்லா யோசி… இன்னைக்கு நைட்டு நான் உன் வீட்டுக்கு வருவேன், நல்ல பதிலா சொல்லு… உனக்கும் எனக்கும் ஏதோ ஒரு பந்தமிருக்கு மீனா… இல்லேன்னா இப்படி உன்னையே விரட்டி விரட்டி வருவேனா சொல்லு? கதவை உள்தாழ்ப்பாள் போடாம வச்சிரு என்ன? வரட்டுமா?” பாண்டியன் எதையோ சாதித்து விட்ட திருப்தியில் விசிலடித்த படி எழுந்து போய் விட்டான்.
அதுவரை மௌனமாயிருந்த மீனாவின் உதடுகள் அழுகையில் துடிக்க ஆரம்பித்தது.
மீனா அவன் வரவை எதிர்பார்த்தபடியே காத்திருந்தாள். பக்கத்து வீட்டுப் பாட்டியை இன்று வர வேண்டாம் என்று சொல்லி’ விட்டிருந்தாள்.
மணி நள்ளிரவு பன்னிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தது.
தாழ் போடாத கதவு மெல்ல திறந்து… பாண்டியன் முகம் எட்டிப் பார்த்தது.
“அட… சொன்னபடியே எனக்காகக் காத்துக்கிட்டிருக்கியா மீனு?” செல்லமாய் குழைந்தபடி அவளருகில் வந்தான்.
“…”
“வந்தவனை வான்னு கூட வரவேற்க மாட்டியா மீனுக்குட்டி?” என்றவன் சட்டென அவள் தோளில் கை வைத்தான்.
திடுக்கிட்ட மீனா அவன் கையை தட்டி விட்டாள்.
“ஏய்…என்ன?”
“வெளியே போடா நாயே!” என்றாள் மீனா ஆத்திரத்துடன்.
“மீ….னா!” அதிர்ந்தான்.
“ஏண்டா… ஆம்பளைத் துணை இல்லேன்னா.. எல்லா தெரு நாயும் மாமிசத் துண்டை தேடி வர்ற மாதிரி வர்றீங்களே… வெக்கமாயில்லே…?”
“என்னடி பத்தினி மாதிரி பேசறே? காலையிலே சொன்னப்ப அமைதியா கேட்டுக்கிட்டு… எனக்காக தாழ் போடாம வச்சிருந்துட்டு… இப்ப என்னடி பேச்சு மாறறே? வேற எவனாவது அதிகமா பணம் தர்றேன்னு சொல்லிட்டானா?”
“இப்படித்தான் பணம் சம்பாதிச்சு உயிர் வாழணும்னா அப்படிப்பட்ட உயிர் எனக்குத் தேவையே இல்லே! கை நீட்டி சம்பளம் வாங்கினா… கையை தொட ஆசைப்படறியே… நீயும் ஒரு பெண் வயித்திலேதானே பிறந்தே?”
“ப்ச்… டயலாக் பேசி போரடிக்காதே! இங்கே பார்? என்னை பகைச்சுக் கிட்டு உன்னால் வாழ்ந்திட முடியாது. உன்னை வாழ விடமாட்டேன். வேலையை விட்டே தூக்கியடிப்பேன்! மரியாதையா வா!” வெறித்தனமாய் அவளை இழுத்து அணைக்க முற்பட்டபோது பளாரென முதுகில் அடி விழுந்தது.
திடுக்கிட்டு திரும்பிய பாண்டியனின் முகம் வெளிறியது.
ஏழுமலை நின்றிருந்தார்.
“அ…. அப்பா…!”
“சீ…. உன் வாயால் கூப்பிடாதடா அப்படி? எனக்கு பிள்ளையா பொறந்துட்டு ஏண்டா உன் புத்தி நாய் மாதிரி அலையுது? மீனா தங்கமான பொண்ணுடா! தன் சுய உழைப்பால் படிச்சு முன்னுக்கு வர்ற பொண்ணு! அவளோட ஏழ்மைய உனக்கு சாதகமாக்கிக்கப் பார்த்தியே ராஸ்கல்! இன்னைக்கு அவகிட்டே நீ பேசினதையெல்லாம் என்கிட்டே மறைக்காம சொல்லிட்டா! அதனாலதான் உனக்கு முன்னால இங்கே வந்து காத்திருந்தேன். இனி, இவளுக்கு எந்தவிதத்திலேயாவது தொல்லை கொடுத்தியோ… நானே உன்னை போலீஸ்ல பிடிச்சிக் கொடுத்திடுவேன்…. சொல்லி விட்டேன்! போடா வெளியே!” உறுமினார்.
பாண்டியன் விட்டால் போதுமென்று ஓடிவிட்டான்.
“அவன் சார்பில நான் உன்கிட்டே மன்னிப்புக் கேட்டுக்கிறேன் மீனா! நீ எங்க டிராவல்ஸ்ல வொர்க் பண்ற சலுகையில அவன் இப்படியெல்லாம் நடந்துக்கிட்டான். அவன் கண்ணுல நீ பட வேண்டாம். நாளைலேர்ந்து நீ நம்ம டிராவல்ஸ்ஸுக்கு வேலைக்கு வரவேண்டாம்மா! உன்னோட நன்மைக்காகத்தான் சொல்றேன். புரிஞ்சுக்குவேன்னு நம்பறேன். நானே உனக்கு தெரிஞ்ச நல்ல இடத்திலே வேலை வாங்கித் தர்றேன். இந்தாம்மா. இதுல மூவாயிரம் ரூபா இருக்கு. செலவுக்கு வச்சுக்க… நான் வர்றேம்மா” என்று ஒரு கவரை கொடுத்து விட்டுப் போய் விட்டார்.
கதவை தாழ் போட்டுவிட்டு ஆயாசத்துடன் பாயில் வந்தமர்ந்தாள்.
“எதிர்காலம் பற்றிய பயம் இன்னும் விஸ்வரூபமெடுத்தது. பாண்டியன் தொல்லை விட்டது சரி! வேலை போய் விட்டதே! மறுபடி வேலை தேடணும். ஏழுமலை சார் சொல்லிவிட்டார் என்பதற்காக அவர் உதவியை நாடி சிரமப்படுத்துவது சரியல்ல. ஹும்…” பெருமூச்சொன்றை எறிந்து விட்டு படுக்கையில் சரிந்தாள்.
உறக்கம் வருவேனாப் பார் என்று அடம் பிடித்தது.
அந்நேரம்… கதவு தட்டப்பட்டது.
‘யாராய் இருக்கும்… இந்த நேரத்தில்?’ வியப்பால் எழுந்தாள்.
“யாரு?”
“நான்தான் மீனா… கதவைத் திற…” சீனிவாசனின் குரல் ஒலித்தது.
மீனாவின் ஆச்சரியம் மேலும் அதிகரிக்க கதவைத் திறந்தாள்.
“என்ன மாமா… இந்த நேரத்திலே?”
“ஏன் வரக் கூடாதா?”
அவன் கேட்ட கேள்வியே சரியில்லை. மீனா பதை பதைக்கும் நெஞ்சுடன் அவனையே பார்த்தாள்.
“சாப்பிட்டியா மீனா?”
“ம்..!”
“ரொம்ப இளைச்சிட்டியேம்மா! ஆனாலும் உனக்கு ரொம்பத்தான் பிடிவாதம். வசந்தி கூப்பிட்டும் கூட வீட்டுக்கு வரமாட்டேன்னுட்டியாமே! ஏன் மீனா… நாங்க உன்னை நல்லா பார்த்துக்க மாட்டோமா?”
“அக்கா என்னை கூப்பிடலியே!” என்றாள் ஆச்சரியமாய்.
“நினைச்சேன். அப்பவே நினைச்சேன். அவளுக்கு உன்மேல பொறாமை மீனா.. நீ ரொம்ப அழகாயிருக்கேயில்லே.. அந்த எரிச்சல். எங்கே அவளை விட்டுட்டு நான் உன் மேல ஆசைப்பட்டுடுவேனோன்னு பயம். ஹஹ்ஹா..” என்று வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தான்.
மீனா பயத்துடன் அவனையே பார்த்தாள்.
“ஆனா, அவ பயப்படறதிலேயும் ஒரு அர்த்தமிருக்கு மீனா! யாரையும் வீழ்த்தற அழகு உன்கிட்டே இருக்கு! நான்கூட கொஞ்சம் தடுமாறிப் போயிட்டேன்னா பார்த்துக்க. சரி அதை விடு! நீ இங்கே தனியா இருக்க வேணாம் மீனா! உன்னைக் காப்பாத்தற பொறுப்பு எனக்கும் இருக்கு. நாளைக்கே நீ என்னோட கிளம்பி எங்க வீட்டுக்கு வந்திடு!”
“இ… இல்லே மாமா! இங்கே எனக்கு எந்த தொந்தரவும் இல்லே. நான் இங்கேயே இருக்கேன். நீங்க கிளம்புங்க!”
“ப்ச்… புரிஞ்சுக்காம பேசாதே! மெனக்கெட்டு ஒருத்தன் நைட்ல இங்கே வர்றான்னா என்ன காரணம்? சரி… நீ நம்ம வீட்டுக்கு வர வேணாம்… நான் இங்கே வர்றேன்… உனக்கு துணையா நான் இருக்கேன்… என்ன சொல்றே?” சீனிவாசன் மெல்ல நெருங்கி வந்து அவள் கைகளைப் பற்றிக் கொண்டான்.
“ச்சே!’ என்று கைகளை உதறி விடுவித்துக் கொண்டாள்.
“நீங்களா…. நீங்களா இப்படியெல்லாம் நடந்துக்கறீங்க?”
“மீ….னா!”
“நீங்க பார்க்க வளர்ந்த பொண்ணு நான்! என்கிட்டேயே இப்படி கேவலமா நடக்க உங்களுக்கு எப்படி மாமா மனசு வந்தது? கட்டினவளுக்கு துரோகம் பண்ண நினைக்கிறீங்களே… இது வசந்தி அக்காவுக்கு தெரிஞ்சா எவ்வளவு வருத்தப்படுவா?”
“ஏதோ போனா போகட்டும்… தனியா இருக்கியே உதவலாம்னு வந்தா…”
“எது? இதுவா மாமா உதவி? அதைவிட நாலு முழ கயித்திலே தொங்கி நிரந்தரமா எங்கப்பாகிட்டேயே போய் சேர்ந்திடுவேனே! எதற்கு இந்த மானங்கெட்ட பொழைப்பு! போங்க.. வெளியே போயிடுங்க… இனி இந்தப் பக்கம் வராதீங்க. மறுபடி இதை மாதிரி வந்து தொந்தரவு பண்ணீங்கன்னா… எழுதி வச்சிட்டு செத்துப் போவேன்?” என்றாள் உறுதியாக.
சீனிவாசன் நடுங்கியபடி வெளியேறிவிட்டான். மீனா தொய்ந்து போய் அமர்ந்து விட்டாள்.
இந்த உலகத்துல கன்னிப் பெண்கள் தனித்து வாழவே முடியாதா? ஏனிப்படி வல்லூறுகள் என்னைச் சுற்றி வட்டமிடுகின்றன?
பாரிஜாத மலர்களாவதைவிட பருத்தி பூக்களாவது சிறப்பு. மணப்பதை விட மானத்தை காப்பது மேல்.
எந்த சூழலிலும் என் மானத்தை இழக்க மாட்டேன். இனி இங்கே தனியே இருப்பது புத்திசாலித்தனமில்லை. முடிவு செய்து விட்டாள் மீனா.
அத்தியாயம்–6
அக்கா வீட்டில் போய் தங்குவது என்று முடிவாகி விட்டது. ஆனால், எந்த அக்கா வீட்டிற்குப் போவது என்றுதான் புரியவில்லை.
நான்கு சகோதரிகளும் சென்னையில்தான் வசிக்கிறார்கள்.
வசந்தி அக்கா வீட்டிற்குப் போக முடியாது. சீனிவாசனின் புத்தி தெரிந்தும் அங்கு போவது… கண்ணை மூடிக் கொண்டு கிணற்றில் விழுவதற்கு சமம்.
சாந்தியாக்கா பாவம் கஷ்டப்படுகிறாள். அவள் கணவருக்கும் சரிவர சம்பளம் வராதபோது நான் வேறு எதற்கு சுமையாக?
மாலினி கொஞ்சம் சுயநலக்காரி. எந்த ஒரு சின்ன விஷயத்திற்கும் முகத்திலடிப்பதுபோல் பேசி விடுவாள்.
பிரேமா அக்கா வீட்டிற்குப் போகலாமா? அவளும் அப்படி ஒன்றும் வசதிக்காரி இல்லை. அவள் கணவன் எக்ஸ்போர்ட் கம்பெனியில் சூபர்வைசராக இருப்பவர். அவளுக்கு என் மீது அன்பு இருக்கிறது. சிறு வயதில் என்னை அவள்தான் தூக்கி வளர்த்தாளாம். அப்பா சொல்வார்.

அவளிடமே போகலாம். யோசித்துக் கொண்டிருக்க எனக்கு யோக்கியதை இல்லை. கெஞ்சியாவது தங்கிக் கொள்ள வேண்டியதுதான். ஒரு தோல் பையில் சில உடைகளை வைத்து எடுத்துக் கொண்டு பிரேமா இருந்த போரூருக்கு பஸ் ஏறினாள்.
இவளை சற்றும் எதிர்பார்க்காத பிரேமாவுக்கு நிஜமாகவே தூக்கி வாரிப் போட்டது. பிரேமாவின் மாமியார் பார்த்தப் பார்வையில் ‘இவளெங்கே இங்கே?’ தெரிந்தது.
“வா மீனா? என்ன இங்கே?” எதற்காக வந்தே என்பதுப் போல் இருந்தது தொனி பிரேமாவிடமிருந்து.
“சு… சும்மாதான்க்கா! உன்னைப் பார்த்துட்டுப் போகலாம்னுதான் வந்தேன். அத்தான் இல்லையா?”
“வேலை விஷயமா மங்களூர் போயிருக்கார். வர மூணு நாள் ஆகும். இப்படி உட்காரு.”
“விக்னேஷும்.. ரவிக்குமாரும் எங்கே?”
“ஸ்கூலுக்குப் போயிருக்காங்க. காபி சாப்பிடறியா?”
“சரிக்கா! அத்தே… நீங்க எப்படியிருக்கீங்க..?” அக்காவின் மாமியாரைக் கேட்டாள்.
“ஏதோ இருக்கேன்ம்மா.. ஆமா… உங்கப்பா செத்ததுக்கு அரசாங்கத்தி லேர்ந்து பணம் தர்றேன்னு சொன்னாங்களே எப்ப வருதாம்?”
“இன்னும் ரெண்டு மாசமாகுமாம்!”
“சீக்கிரம் வந்தா நல்லது. சந்திரனுக்கு கல்யாணத்துக்கு நாள் வேற குறிச்சிட்டேன்”.
மனம் பிசைய அக்காவைப் பார்த்தாள். பிரேமா வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.
‘அப்பாவின் உயிர் விற்ற காசுக்குதான் எத்தனை தேவைகள்? அக்காவின் மச்சினனுக்கு கல்யாணம் பண்ணக் கூட அப்பாவோட பணம் உதவுகிறதே!’ துளிர்க்க நினைத்த கண்ணீரை கண்களை சிமிட்டி உள்ளிழுத்துக் கொண்டாள்.
“மதியம் இருந்து சாப்பிட்டுட்டுப் போ… கொல்லையிலே வத்தல் காயப்போட்டிருந்தேன். அதைப் பார்த்திட்டு வர்றேன்.” மாமியார்காரி பட்டம்மாள் எழுந்து சென்றாள்.
“ஹாய் மீனா… எப்ப வந்தே? ஸாரி…. கேள்விப்பட்டேன், ரொம்ப வருத்தமாயிருந்தது. நடந்ததை மறந்திட்டு… நடக்கப்போறதை பத்தி யோசி… ஓக்கே?” அந்தப் பக்கமாய் வந்த பிரேமாவின் மச்சினன் சந்திரன் இவளைப் பார்த்ததும் நின்று பேசினான்.
“வேற வழி? என்ன பண்ணினாலும் அப்பா திரும்ப வரப் போவதில்லே… ஆமா… நீங்க எப்ப பெங்களூர்ல இருந்து வந்தீங்க…? சென்னைக்கே ட்ரான்ஸ்ஃபர்ல வந்துடலாமே!”
“வந்து நாலு நாளாச்சு மீனா? ட்ரான்ஸ்ஃபர் அவ்வளவு ஈஸியா கிடைச்சிடாது. ட்ரை பண்ணிட்டுத்தானிருக்கேன். அடுத்த மாசம் எனக்கு மேரேஜ் பிக்ஸ் பண்ணியிருக்காங்க… தெரியுமா? கண்டிப்பா நீ வரணும்!”
“ஷ்யூர்!”
“அர்ஜெண்ட்டா வெளியே கிளம்பிட்டிருக்கேன்… வந்து பேசறேன் ஓக்கே?”
“சரி!” என்றாள் சிரித்தபடி.
சந்திரன் போய் விட்டான்.
பிரேமா மீனாவின் உடைகளடங்கிய பேகை பார்க்கத் தவறவில்லை. ‘ஒருவேளை….இங்க தங்க வந்திருக்காளோ? கடவுளே… இதென்ன புதுப் பிரச்னை?’ சங்கடத்தில் வியர்த்தாள் பிரேமா
“மீனா… இப்படி வா…” என்று சமையலறைக்கு அழைத்துச் சென்றாள். “காபி சாப்பிடு” என்று டம்பளரை நீட்டினாள்.
“என்னக்கா… என்னை விருந்தாளி மாதிரியே ட்ரீட் பண்றே?”
“இன்னைக்கு ஸன்டேக் கூட இல்லையே… வேலைக்குப் போகலியா மீனா…?”
“இல்லேக்கா…” என்று ஆரம்பித்தவளின் கண்கள் சட்டென கலங்க ஆரம்பித்தன.
“ஏண்டி அழறே?”
கேட்டதுதான் தாமதம்.
பாண்டியன் வீட்டிற்கு வந்தது, வேலையை விட்டது, வசந்தியின் கணவர் வந்தது… எல்லாவற்றையும் மடைதிறந்த வெள்ளம் போல் கொட்ட ஆரம்பித்து விட்டாள்.
கேட்க கேட்க ஒருபுறம் நெஞ்சு பதறியது பிரேமாவிற்கு. ஆனால், மறுபுறம் மீனா இங்கே வந்து நிரந்தரமாய் தங்கிவிடுவாளோ என்று நெஞ்சு பக்பக்னெ அடித்துக் கொண்டது.
“அதனால…..”
“போதும் அழாதே மீனா! கடவுள் உனக்கு ஒரு நல்ல வழியை காண்பிப்பார். கவலைப்படாதே! எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு. நீ அப்படி உட்கார்ந்து ரெஸ்ட் எடு! ரொம்ப டயர்டா தெரியறே!” அவள் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் சென்று விட்டாள் பிரேமா.
அந்த செய்கை மீனாவிற்கு ஏமாற்றத்தைத் தந்தது.
பிளாட்பாரத்தில் பஸ்ஸிற்கு காத்திருக்கும் பயணியைப் போல் நடுரோட் டில் நிற்பதுபோல் தன்னை உணர்ந்தாள்.
தங்கைக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள் பிரேமா!
“பிரேமா…!” கொல்லைப்புறத்திலிருந்து பட்டம்மாள் அழைப்பது கேட்டது.
“இதோ… வர்றேன்… என்று குரல் கொடுத்தவள், “சாப்பிட்டுக்கிட்டிரு… வந்திட்டேன்!” என்று போனாள்.
ஐந்து நிமிடம் சென்றிருக்கும்.
சாப்பிட்டு முடித்த மீனா கை கழுவ கொல்லைப்புற பக்கமாய் சென்றபோது, மாமியாரும், மருமகளும் பேசிக் கொண்டிருந்தது தெளிவாய் காதில் விழுந்தது.
“என்னடி.. உன் தங்கை பெட்டியும், கையுமா வந்திருக்கா… இங்கேயா தங்கப் போறா?”
“தெ…. தெரியலே அத்தே…!”
“கேட்டுத் தெரிஞ்சுக்க! ஆனா அவ வயசுப் பொண்ணு. அதை ஞாபகம் வச்சுக்க. சந்திரனுக்கு வேற கல்யாணம் ஆகப் போகுது. வயசுப் பையன் இருக்கிற வீட்லே உன் தங்கை தங்கினா… அது சரிப்படாது. நம்ம வீடோ சின்னது. நீ புருஷன் குழந்தையோட இருக்கிற ஒரே ஒரு பெட்ரூம்ல படுத்துக்கறே! ஸ்டோர் ரூமை சுத்தம் பண்ணி அங்கேதான் சந்திரன் தங்கியிருக்கிறான். நான் கிழவி… வராந்தாவில படுத்துக்கறேன். உன் தங்கையை அப்படி படுக்க வைக்க முடியுமா? அப்பா, அம்மா இல்லாத பொண்ணுதான். இல்லேங்கலே! ஆனா, அதுக்காக வேலியிலே போற ஓணானை காதுக்குள்ளே விட்டுக்கறது புத்திசாலித்தனமான காரியமில்லே! தங்கச்சிதானேன்னு மனசு இளகி சரின்னுடப்போறே? எந்த நேரத்திலே எது வேணாலும் நடக்கும். யார் கண்டது? இந்தக் காலத்திலே ஆண் பிள்ளைங்களையும் நம்ப முடியல, பெண் பிள்ளைங்களையும் நம்ப முடியலே. எதையும் விளக்கி சொல்லி மனசை கஷ்டப்படுத்தவும் நான் விரும்பலே. சொல்றதை சொல்லிட்டேன்.” பட்டம்மாள் பேசி முடித்தாள்.
பிரேமா பாடுதான் திண்டாட்டமாகி விட்டது. எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த மீனாவின் இதயம் ரெண்டாய் விண்டுப் போனது. சப்தம் எழுப்பாமல் அப்படியே திரும்பி விட்டாள். இதயத்து வேதனையை முகத்தில் காட்டாமல் சாதுர்யமாய் மறைத்தாள். கையை கழுவிக் கொண்டு பிரேமாவைத் தேடி வந்தாள்.
“அக்கா…”
“என்ன?” என்றாள் குரலில் சற்றே எரிச்சல் கலந்து.
“நான் புறப்படறேன்க்கா!”
சட்டென தலைதூக்கிப் பார்த்தாள்.
‘நாங்கள் பேசியதைக் கேட்டிருப்பாளோ?’
“நான் ஹாஸ்டல்ல தங்கலாம்னுதான் புறப்பட்டேன். அதுக்கு முன்னால உன் கையால சாப்பிட்டு போகணும்னுதான் இங்கே வந்தேன். திருப்தியா சாப்பிட்டேன். இது போதும்க்கா! வரட்டுமா?”
“மீனா… உன் நிலைமை இப்படியாடி ஆகணும்?” உடைந்து போனாள் பிரேமா.
“ப்ச்… என்ன இது? அழாதே! நீ இப்படி அழுதா… நான் எப்படி தைரியமா இருப்பேன்…? சந்தோஷமா அனுப்பி வை!”
“போய் வாடி! அப்பப்ப வந்துட்டுப் போ!”
“சரிக்கா… வர்றேன்!” என்று அவளிடமும், அத்தையிடமும் சொல்லிக் கொண்டு புறப்பட்டாள்.
அவள் போகும் பாதை… ஒரே நேர்க் கோடாய் போய்க் கொண்டே யிருந்தது. நிழலுக்கு ஒதுங்க ஒரு மரமும் தென்படவிலை.
‘எங்கே போவது? நான் பாட்டிற்கு ஹாஸ்டலில் தங்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன். எப்படி தங்க முடியும்? வேலையும் இல்லை. கையிலிருக்கிற பணத்தை வைத்துக் கொண்டு எத்தனை மாதம் ஓட்ட முடியும்? வேலை கிடைக்கும் வரைக்குமாவது பிரேமா வீட்டில் தங்க இடம் கிடைத்திருந்தால் நன்றாயிருந்திருக்கும். என்ன பண்ணப் போகிறேன்?’ சோர்ந்து போய் ஒரு கல்லின் மீது அமர்ந்து விட்டாள்.
எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தாளோ… அவளுக்கே தெரியாது.
அருகில் ஒரு கார் வந்து நின்ற சப்தம் கூட அவளை கலைக்கவில்லை.
“சரிதான்… இங்கே போதிமரம் கூட இல்லையே… இங்கே உட்கார்ந்து தவம் பண்றே?” குரல் கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.
மாதவன் கார் மீது சாய்ந்தபடி- இவளையே பார்த்துக் கொண்டிருந்தான். மாதவன் -மாலினியின் கணவன்.
“மா….மா!”
“ஆ….மா!” என்றான் அவனைப் போலவே.
“நீங்க எங்கே இங்கே?”
“அதையேதான் நானும் கேக்கறேன். நீ எங்கே இங்கே?”
“ஒ…. ஒண்ணுமில்லே… மாமா.. சும்மாதான்?”
சில கணங்கள் அவளையே பார்த்த மாதவன் தலையாட்டிக் கொண்டான்.
“இங்கே பக்கத்துல உங்க பிரேமா அக்கா வீடு இருக்கில்லே?”
“ஆ…..ஆமாம்!”*
“அங்கே போய்ட்டு வந்தியா?”
“ம்!”
“மேலும் மேலும் கேள்வி கேட்டு கஷ்டப்படுத்த விரும்பலே! என்னால புரிஞ்சுக்க முடியுது மீனா! உனக்கு இப்படியொரு கஷ்டம் வந்திருக்க வேண்டாம். உனக்கு இப்ப பாதுகாப்பான ஒரு இடம் தேவை? உன்னை பாதுகாக்கற பொறுப்பு எனக்கில்லையாம்மா? ஒரு போன் பண்ணியிருந்தா… நானே வந்து அழைச்சிட்டுப் போயிருப்பேனே! நல்லவேளை ஃபாக்டரி போயிட்டு திரும்பிட்டிருந்தேன். உன்னை பார்த்துட்டேன். தாங்க் காட்! வா… வண்டியில ஏறு!”
“இல்லை மாமா… பரவாயில்லே!”
அவள் பேகை வாங்கி காரில் வைத்த மாதவன்,
“ஏறு!” என்றான் அழுத்தமாய் உச்சரித்து.
அதற்கு மேல் மறுப்பு சொல்லாமல் ஏறி அமர்ந்தாள்.
– தொடரும்…
– காதல் தர வந்தேன்…! (நாவல்), ஏப்ரல் 2001, ரமணிசந்திரன் மாத இதழ்.