கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 14, 2025
பார்வையிட்டோர்: 6,294 
 
 

காதல் எனும் தலைப்பில் கல்லூரி ஆண்டு விழா மேடையில் தனக்கு பேசக்கொடுத்த வாய்ப்பை எப்படி பேசுவது என வார்த்தைகளை வாரக்கணக்கில் தனக்குள்ளேயே தேடிக்கொண்டிருந்தாள் ரம்யா.

கல்லூரியில் சேர்ந்த மூன்று ஆண்டுகளில் உடன் படிக்கும் பல பேர் காதல் ஜோடிகளாக வலம் வரும் நிலையில், படிப்பு மட்டுமே கல்லூரி கால நோக்கமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால் தன்னை மிகவும் விரும்பி அணுகி கேட்ட ஆண்களிடமிருந்து புன்சிரிப்பை பதிலாக்கி ஒதுங்கிச்சென்றாள்.

இப்படிப்பட்ட குணமுள்ளவளிடம் காதல் எனும் தலைப்பில் பேசச்சொல்வது சரியாக இருக்குமென நம்பினர் நிகழ்ச்சி நடத்திய நிர்வாகத்தினர்.

“காதல்ங்கிற வார்த்தையை காமமா மக்கள் எப்ப நெனைச்சாங்களோ அப்பவே அந்த வார்த்தை செத்துப்போச்சு. காதலுக்கு இன்னொரு பேரு அன்பு. விருப்புன்னும் சொல்லலாம். சம வயது பெண்களை ஆண்களும், ஆண்களை பெண்களும் விரும்புவது மட்டுமல்ல காதல். கைகோர்த்து ஏமாற்றும் நோக்குடனோ, எதிர்பார்ப்புகளுடனோ ஒருவர் மீது மற்றவர் நம்பிக்கையற்று போலி வேசத்தில் சுற்றித்திரிவதல்ல காதல். வயது வித்தியாசமின்றி சக மனிதர்கள் மீதும், மற்ற ஜீவராசிகளின் மீதும் இரக்கம் காட்டி நம்பிக்கை கொள்ள வைப்பது தான் உண்மையான காதல். ஆக காதலின் மறு பெயர் நம்பிக்கை. விருப்புக்கு மறு பெயர் காதல், நம்பிக்கை. வெறுப்புக்கு மறு பெயர் மோதல், பகை… அனைவரும் மற்றவர்கள் மீதும் காதல் கொள்ளுங்கள், காதலால் பிறர் மனங்களை வெல்லுங்கள்” பேசி முடித்ததும் அரங்கில் ஏற்பட்ட கரவொலி பேசிய ரம்யாவை மெய்சிலிர்க்க வைத்தது.

அடுத்த நாள் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் பதட்டத்துடன் நின்று கொண்டிருந்தாள். பேருந்து வர மிகவும் தாமதமானது. வீட்டிலிருந்து அம்மா அலைபேசியில் விடாமல் அழைத்துக்கொண்டே இருந்தாள்.

“ரம்யா….. இன்னும் ஊட்டுக்கு வராம எங்கடி சுத்திகிட்டிருக்கே….?”

“அம்மா…. எதுக்கும்மா போன விடாம அடிச்சிட்டே இருக்கே. பஸ்வந்தா எனக்கு வரத்தெரியாதா? அவசரம்னா கல்யாண ரிசப்ஷனுக்கு நீயும் அப்பாவும் போயிட்டு வாங்க…”

“நீ வராம எப்படிடீ….? அங்கதான் நம்ம எல்லாச்சொந்தமும் வரும். உன்ன பாக்கனும்னு எல்லாரும் கேட்பாங்க…”

“சரி போன வை . எப்படியாச்சும் வாரேன்” என்றவள் சுற்றிலும் பார்த்தாள். ‘ரம்யா எப்போதாவது தன்னோடு பேச மாட்டாளா?’ என நினைத்து ஏங்கிக்கொண்டிருந்த வருண், பைக்கில் அமர்ந்திருந்தவன் இறங்கி வந்து “என்ன ரம்யா ஒரே பதட்டமா இருக்கே? பஸ் வராது போலிருக்கு. நான் வேணும்னா இழுத்தான்…..”

“சரி. வண்டிய எடு” என்றவுடன் உற்சாகத்தில் ஓடிச்சென்று தனது புல்லட்டை ஸ்டாட் செய்த மறு விநாடி அவனது தோளைத்தொட்டபடி டக்கென ஏறி பின்னே அமர்ந்த ரம்யாவை அங்கிருந்தவர்கள் வியப்புடன் பார்த்தனர்.

வீட்டின் முன் இறங்கியவள் அவனை நன்றியுடன் ஒரு பார்வை பார்த்து, “தேங்க்ஸ் வருண்” என சொன்னது அவனுக்குள் ஆயிரம் படாடாம்பூச்சிகளை பறக்கச்செய்தது.

அடுத்த நாள் கல்லூரியில் ரம்யாவை அனைவருமே அதிசயமாக பார்த்தனர்.

“என்னடி ரம்யா நேத்தைக்கு காலைல கூட கல்லூரியில் கல்வியை மட்டும் தான் காதலிக்கப்போறதா சொன்னே…. வருண் எப்போ புத்தமா மாறினான்…?” கேட்ட சிகிக்கு பதில் கூற முடியாமல் தவித்தாள்.

‘ஒரே வரியில் ‘ஹெல்ப் பண்ண வந்தான்’ னு சொல்லியிருக்கலாம். அவளால் சொல்ல முடியவில்லை. காரணம் அவள் மனதுக்கு வருணின் செயல் மிகவும் பிடித்துப் போயிருந்தது. பேருந்து வர தாமதமானதையும், தான் அவசரமாக செல்ல தவிப்புடன் நின்றிருந்ததையும் கவனித்தே உதவி செய்ய வருகிறானென்றால் தேவையை சொன்னால் செய்யாமலிருப்பானா? இப்படிப்பட்டவன் வாழ்க்கைத்துணையாக வருவதில் என்ன தவறு இருக்கிறது? இது தான் அவன் மீது ஏற்பட்ட நம்பிக்கை. நம்பிக்கை தானே காதல் என்று பேசினேன். அதை நான் பெற என்ன தடை? நானும் மனுசி தானே….? ‘ என தனக்குத்தானே சமாதானப்படுத்திக்கொண்டாள்.

வருணின் அலைபேசி எண்களை வாங்கிக்கொண்டவள் பாடத்தில் அவனுக்கு இருக்கும் சந்தேககங்களைத்தீர்த்தாள். ரம்யா நண்பியான பின் பாக்கி வைத்திருந்த பேப்பர்களில் தேர்ச்சி பெற்றதால் நல்ல சம்பளத்தில் ஐடி கம்பெனியால் தேர்வு செய்யப்பட்டிருந்தான்.

கடைசி வருடத்தின் ஆண்டு விழாவில் வருணுக்கு பேச வாய்ப்பு கிடைத்தது.

“இப்பூமியில் பிறந்த ஒவ்வொருவருக்கும் பமற்றவர்கள் மீது காதல் வர வேண்டும். அந்தக்காதல் பிறருக்கான தேவைகள் அவர்களால் இயலாத சமயத்தில் பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டுமே தவிர, உண்மை முகத்தைக்காண்பதால் வரும் காதலாக இருக்கவேண்டுமே தவிர மேக்கப் முகத்தையும், மாயாஜால பேச்சையும் நம்பி வருவதாக இருக்கக்கூடாது” என பேசியதைக்கேட்டு பலரும் கைதட்டி முடித்த பின்னும் ரம்யாவின் கைகள் தட்டுவதை நிறுத்த மறுத்ததைக்கண்டு பூரித்துப்போனான் வருண்.

கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *