காதலா? கருணையா?
கதையாசிரியர்: பிரித்திகா மோகன்காந்தி
கதைத்தொகுப்பு:
காதல்
கதைப்பதிவு: July 14, 2026
பார்வையிட்டோர்: 51

இருண்ட அறைக்குள், திறன்பேசித் திரையின் மெல்லிய வெளிச்சம் என் முகத்தில் மட்டும் படர்ந்திருந்தது. அந்தத் திரையில் தெரிந்த ‘பம்பல்’ என்ற டேட்டிங் செயலிப் பக்கங்களைச் சலிப்புடன் நகர்த்திக் கொண்டிருந்த எனக்கு, அன்றுதான் அவன் அறிமுகமானான்.
‘அர்ஜுன்’ என்ற பெயருக்குக் கீழே எவ்வித ஆடம்பரமான சுயவிவரங்களும் இல்லை. ஆனால், அந்தத் திரையில் தெரிந்த அவனின் புகைப்படம் என் சலிப்பையெல்லாம் ஒரே நொடியில் போக்கிவிட்டது. அவனது இருபது வயதில் தன் குடும்பத்தின் உதவியோடு புத்தகக் கடைக்கு முதலாளியாக மாறி, பத்து ஆண்டுகள் கழித்து இப்போது லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் வெற்றிகரமான தொழிலதிபராக உயர்ந்திருந்தாலும், அதன் எந்தவொரு பந்தாவும் அவனது பக்கத்தில் தெரியவில்லை.
எனக்கு இருபத்தெட்டு வயது. ஒரு முன்னணி விமான நிறுவனத்தில் விமானப் பணிப்பெண்ணாகப் பணிபுரிவதால், எப்போதும் வானில் பறந்து கொண்டே இருக்கும் நாடோடி வாழ்க்கைதான் என்னுடையது. அப்படிப்பட்ட என் வாழ்வில், இதுவரை காதல் காற்று வீசவே இல்லை. எப்போதும் வறண்டு கிடக்கும் என்னுடைய வாழ்க்கைக்கு ஒரு துளி நீராகக் கிடைத்தவன்தான் அர்ஜுன். பார்க்க அத்தனை அழகாகவும் பண்போடும் இருக்கும் அவனின் சாதாரணப் புன்னகையோடு தொடங்கிய எங்களின் உரையாடல், அடுத்தடுத்த நாட்களில் விடியும் வரை தொடரும் நீண்ட அரட்டைகளாக மாறும் என்று நான் அன்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.
நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி, இதோ மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. வெவ்வேறு நாடுகளுக்குப் பறக்கும் என் நேர மண்டல குழப்பங்களுக்கு நடுவே, தினமும் காலையில் அவனிடமிருந்து வரும்
“குட் மார்னிங் மீரா”
என்ற குறுஞ்செய்திதான் என் நாளின் தொடக்கமாக இருந்தது. விமானம் தரை இறங்கியதும் தங்கும் விடுதியில் சோர்வாக விழும் நேரங்களில் அவனோடு பேசும் அந்த ஆடியோ மற்றும் வீடியோ கால்கள், என் அன்றாட நீண்ட நேரப் பயணத்தின் களைப்பையெல்லாம் அப்படியே துடைத்தெறிந்துவிடும். மேகங்களுக்கு நடுவே பயணிக்கும் என் அன்றாட வாழ்க்கைக்கு நடுவே, அர்ஜுனும் நானும் எங்களுக்கான ஒரு குட்டி உலகத்தை டிஜிட்டல் திரைக்குள் உருவாக்கிக் கொண்டோம்.
இரவு நேர வீடியோ கால்களில், நான் என் விமானப் பணிப்பெண் ஒப்பனைகளைக் கலைத்துவிட்டுச் சோர்வாக அமர்ந்திருக்கும் போதும், அர்ஜுன் தன் வேலைகளையெல்லாம் தள்ளிவைத்துவிட்டு, என் சோர்வை மாற்றத் தன் அழகான புன்னகையோடு காத்திருப்பான். அவன் பேசும் விதம், அவனது அசாத்திய புத்திசாலித்தனம், மனிதர்களை அவன் அணுகும் முறை என அனைத்தும் எனக்குள் ஒரு புதிய ஈர்ப்பை உண்டாக்கின. பணத்தை விடக் குணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அவனது தெளிவு என்னை வியக்க வைத்தது. வாய் திறந்து “காதலிக்கிறேன்” என்று நாங்கள் இருவரும் இன்னும் சொல்லிக் கொள்ளவில்லை என்றாலும், எங்களின் மௌனங்களிலும் பகிரப்படாத வார்த்தைகளிலும் காதல் ததும்பி வழிவதை என்னால் உணர முடிந்தது.
“அர்ஜுன், வருகின்ற புதன்கிழமை எனக்கு வேலை இல்லை. நாம் ஏன் நேரில் சந்திக்கக் கூடாது? மாலை வேளையில் அந்தப் புதிய காஃபி ஷாப்பில் சந்திக்கலாமா? நேரில் பேச நிறைய விஷயங்கள் இருக்கின்றன,”
என்று ஒருநாள் நான் ஆவலோடு கேட்டேன். மறுமுனையில் சில நிமிடம் மௌனம் நீடித்தது. பின்னர்,
“மீரா, எனக்கு அலுவலகத்தில் கொஞ்சம் வேலைப்பளுவாக இருக்கிறது. இந்த வாரம் வேண்டாம், அடுத்த வாரம் பார்த்துக் கொள்ளலாம்,”
என்ற அவனது வழக்கமான பதில் வந்தது.
இது முதல் முறையல்ல. கடந்த ஒரு மாதத்தில் நான் எத்தனையோ முறை நேரில் சந்திக்கக் கூப்பிட்டும், அவன் ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு காரணத்தைக் கூறித் தவிர்த்துக் கொண்டே இருந்தான். நாங்கள் இருவரும் குலாய் என்னும் ஒரே மாவட்டத்தில் தான் வசிக்கிறோம். ஆரம்பத்தில் அவனது வேலை நிமித்தமாக அவன் பிஸியாக இருக்கிறான் என்று நினைத்த எனக்கு, நாட்கள் செல்லச் செல்ல மனதில் ஒரு மெல்லிய சந்தேகம் முளைக்கத் தொடங்கியது.
“என்னிடம் இருந்து அவன் ஏதோ ஒன்றை மறைக்கிறானோ?”
என்ற எண்ணங்கள் என் தூக்கத்தைக் கலைத்தன. அந்தச் சந்தேகம் எனக்குள் அளவற்ற மனவேதனையை உண்டாக்கியது.
மேலும் இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. எங்களின் பழக்கம் தொடங்கி இப்போது ஐந்து மாதங்கள் நிறைவடைந்திருந்தன. அர்ஜுன் இன்னும் என்னை நேரில் சந்திக்க மறுத்துக் கொண்டே இருந்தான். ஆனால், அவனது குறுஞ்செய்திகளிலும் பேச்சிலும் இருந்த அன்பு சற்றும் குறையவில்லை. இந்த முரண்பாடு என் சந்தேகத்தை இன்னும் அதிகமாக்கியது.
“இப்படியே போனால் இந்த உறவுக்கு ஒரு அர்த்தமே இல்லாமல் போய்விடும். எப்படியாவது அவனை நேரில் சந்தித்து என் காதலை வெளிப்படுத்த வேண்டும், அதே நேரத்தில் அவனுடைய மௌனத்திற்கான காரணத்தையும் அறிய வேண்டும்”
என்று நான் தீர்க்கமாக ஒரு திட்டமிட்டேன். இன்னும் இரண்டு நாட்களில் அர்ஜுனின் பிறந்தநாள் வரவிருந்தது. அவனுக்குத் தெரியாமல் ஒரு சர்ப்ரைஸ் பர்த்டே பார்ட்டி நடத்த அதுதான் சரியான தருணம் என்று முடிவு செய்தேன். அவன் எங்கு வேலை செய்கிறான், எங்கு இருக்கிறான் என்று அவனாக எனக்குச் சொன்னதே இல்லை. ஆனால், அவன் எப்போதாவது முகநூலிலும் இன்ஸ்டாகிராமிலும் பகிர்ந்து கொள்ளும் புகைப்படப் பதிவுகளையும், அவனது நண்பர்களின் கணக்குகளையும் சமூக வலைத்தளங்களின் மூலம் தீவிரமாகத் தேடினேன். இறுதியாக, கோலாலம்பூரில் உள்ள அவன் இருக்கும் ஒரு பழைய புத்தகக் கடையின் முகவரியைக் கண்டுபிடித்துவிட்டேன்.
அடுத்த இரண்டு நாட்களும் எனக்கு யுகங்கள் போல நகர்ந்தன. அவனது பிறந்தநாள் அன்று காலை, என் இதயத் துடிப்பு வழக்கத்தை விட வேகமாக இருந்தது. அழகான ஒரு சிவப்பு நிறச் சேலை உடுத்திக்கொண்டு, அவனுக்குப் பிடித்தமான ஒரு நாவலைப் பரிசாக வாங்கிக்கொண்டு, அந்த முகவரியைத் தேடிப் புறப்பட்டேன்.
நகரத்தின் பரபரப்பான ஒரு சந்தின் ஓரத்தில் வீற்றிருந்தது அந்தப் புத்தகக் கடை. கடையின் பெயர்ப்பலகையைப் பார்த்தபோது எனக்குள் ஒரு கணம் அதிர்ச்சி ஏற்பட்டது.
‘அர்ஜுன் எவ்வளவு பெரிய லட்சாதிபதியாக இருந்தாலும், இப்படிப்பட்ட ஒரு சிறிய கடையையா இன்னும் பராமரிக்கிறான்?’
என் மனதில் சந்தேகமும் குழப்பமும் ஒருசேரக் கலந்தன. இருப்பினும், இவ்வளவு தூரம் வந்த பிறகு அவனைச் சந்திக்காமல் திரும்புவதில்லை என்று முடிவு செய்து, கடையின் ஒரு மூலையில் இருந்த புத்தக அடுக்குக்கு பின்னால் மறைந்து நின்று பொறுமையோடு காத்திருந்தேன்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, கடையின் உள்பக்க அறையிலிருந்து ஒரு சத்தம் கேட்டது. நான் ஆவலோடு அந்தப் பக்கமாகத் திரும்பினேன். அங்கே… அங்கே நான் கண்ட காட்சி என் காலடி நிலத்தைச் சரிப்பது போல் இருந்தது. என் கையில் இருந்த புத்தகப் பரிசு கீழே விழுந்தது.
அர்ஜுன் நடந்து வந்து கொண்டிருந்தான். ஆனால், அவனது வலது கால் முட்டிக்குக் கீழே இல்லை. அதற்குப் பதிலாக ஒரு செயற்கைக் கால் பொருத்தப்பட்டிருந்தது. ஊன்றுகோலின் உதவியோடு அவன் மெதுவாக நடந்து வருவதைப் பார்த்த கணத்தில், என் உடம்பில் இருந்த இரத்தம் அனைத்தும் உறைந்து போவது போல் உணர்ந்தேன். அதிர்ச்சியில் என் வாய் மூடிக்கொண்டது வார்த்தைகள் தொண்டையிலேயே சிக்கிக்கொண்டன.
அந்தத் தருணத்தில் என் மனதில் விவரிக்க முடியாத கோபமும், எல்லையற்ற ஏமாற்றமும் மட்டுமே மேலோங்கின. இத்தனை நாட்களாக அவன் ஏன் என்னைச் சந்திக்க மறுத்தான், ஏன் தன் சுயவிவரங்களை மறைத்தான் என்பதற்கான விடை இப்போது என் கண் முன்னே நின்றது. என்னை நோக்கித் திரும்பிய அர்ஜுன், அங்கே அதிர்ச்சியோடு நின்று கொண்டிருந்த என்னைப் பார்த்ததும் திகைத்துப் போனான். அவனது முகம் வெளிறிப் போனது. சூழ்ந்திருந்த மௌனத்தைக் கலைத்து அவனே பேசத் தொடங்கினான்.
“மீரா… நீ இப்படித் திடீர்னு வருவேனு நான் எதிர்பார்க்கல. நீ இப்ப எப்படி உணருறனு எனக்குப் புரியுது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கொடிய கார் விபத்தில் நான் ஒரு காலை இழந்துட்டேன். ஒருவேளை, இந்த உண்மையை நான் ஆரம்பத்திலேயே உன்னிடம் சொல்லியிருந்தால், நீ கண்டிப்பா இத்தனை நாள் என்னோட பழகியிருக்க மாட்டே… இப்போ உனக்கு உண்மை தெரிஞ்சிருச்சு, கண்டிப்பா இனிமே என்னிடம் நீ பேச விரும்ப மாட்டாய்னு தெரியும்.. கடைசியா நான் இதை உன்கிட்ட சொல்லணும்.. எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு மீரா. ஐ லவ் யூ மீரா..,”
என்று அர்ஜுன் குற்ற உணர்ச்சியோடு தன் காதலை என்னிடம் வெளிப்படுத்தினான்.
அவனது வார்த்தைகள் என் கோபத்தைக் குறைக்கவில்லை, மாறாக இன்னும் கோபத்தைத் தூண்டின.
“அர்ஜுன்! நாம் இத்தனை நாள் பழகியும் நீ என்னை இவ்வளவுதான் புரிந்து வைத்திருக்கிறாயா? நீ என்னிடம் சொல்லாமல் மறைத்தது எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை… நீ நினைப்பது போல் இது சாதாரணமான விஷயமும் இல்லை. நாம் இருவரும் காதலிக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். நாளை நாம் ஒன்றாக வெளியே சென்றால், இந்தச் சமூகம் நம்மை எப்படிப் பார்க்கும்? அவர்கள் உன்னை ஒரு பரிதாபத்தோடு, கருணையோடுதான் பார்ப்பார்கள். அந்தப் பார்வையை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது!”
என்று என் மனதில் இருந்த பயத்தையும் சமூகக் கவலையையும் கொட்டித் தீர்த்தேன்.
என் வார்த்தைகள் அவனது இதயத்தை ஆழமாகக் காயப்படுத்தியதை அவனது சுருங்கிய கண்கள் காட்டின. அவன் நிமிர்ந்து என்னை நேராகப் பார்த்து, மிகவும் நிதானமாக, ஆனால் கனத்த குரலில் ஒரே ஒரு வார்த்தையைக் கூறினான்.
“மீரா, உனக்கு என் மீது இருப்பது காதலாக இருந்தால், என்னுடன் இரு. ஆனால், அது வெறும் கருணையாகவோ, பரிதாபமாகவோ இருந்தால்… தயவுசெய்து நீ என்னுடன் இருக்க வேண்டாம்.”
அந்த வார்த்தைகள் என் கன்னத்தில் பளார் என்று அறைந்தது போல் இருந்தன. அவனது சுயமரியாதையும், அவன் என்னிடம் எதிர்பார்த்த அன்பின் தூய்மையும் அந்த ஒற்றை வாக்கியத்தில் வெளிப்பட்டன. எனக்குள் எழுந்த குற்ற உணர்ச்சியாலும் குழப்பத்தாலும் என் கண்கள் தாரை தாரையாக அழத் தொடங்கின. என்னால் அதற்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை.
“எனக்கு… எனக்கு இன்னும் கொஞ்சம் நேரம் வேண்டும் அர்ஜுன்,”
என்று தழுதழுத்த குரலில் கூறிவிட்டு, அவனது பதிலுக்குக் கூடக் காத்திராமல் அங்கிருந்து வேகமாக ஓடிவந்துவிட்டேன்.
அடுத்த சில நாட்கள் எனக்குள் ஒரு பெரிய போர்க்களமாக இருந்தன. நான் ஆழமாக யோசிக்கத் தொடங்கினேன். கடந்த ஐந்து மாதங்களாக நான் பழகியது அவனது உடலோடா அல்லது அவனது தூய்மையான உள்ளத்தோடா? அவனது அன்பான பேச்சும், என்னை வழிநடத்திய அவனது அறிவும், எனக்குள் ஏற்படுத்திய அந்தப் பரவசமும் போலியானவையா? அவனுடைய உடலின் ஒரு குறை, இத்தனை நாட்கள் நாங்கள் வளர்த்தெடுத்த அந்த உன்னதமான உணர்வை விடப் பெரியதாகிவிடுமா?
இரவில் என்னால் தூங்க முடியவில்லை. கண்களை மூடினாலே அவனின் முகம் என் கண் முன் வந்து நின்றது. அவனின் குரலைக் கேட்காமல் இருக்க முடியவில்லை. அவனைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். சில நாட்கள் அவன் இல்லாமல் என்னால் வாழவே முடியாது என்பதை உணர்ந்தேன். அர்ஜுனின் மீது எனக்கு இருப்பது வெறும் தற்காலிகக் கருணையோ பரிதாபமோ அல்ல, அது அவனது ஆன்மாவை நேசித்த உண்மையான காதல் என்பதையும் தெளிவாகப் புரிந்துகொண்டேன்!
தெளிவான மனதோடு, சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அதே புத்தகக் கடைக்குச் சென்று அர்ஜுனைச் சந்தித்தேன்.
அர்ஜுன் தன் மேசையில் அமர்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தான். என் நிழல் கண்டதும் நிமிர்ந்து பார்த்தான். நான் மெதுவாக அவனருகில் சென்று, அவனது கைகளைப் பற்றிக் கொண்டேன். இந்த முறை என் கண்களில் பயமோ, கோபமோ இல்லை; ஒரு தெளிவு இருந்தது.
“அர்ஜுன், அன்று நான் அப்படிப் பேசியதற்கு என்னை மன்னித்துவிடு. அன்று ஒரு கால் இல்லாத நிலையை மட்டும்தான் நான் பார்த்தேன். ஆனால், அதைவிடப் பல மடங்கு உயர்ந்து நிற்கும் உங்கள் நல்ல மனதையும், நேர்மையையும், என் மீதான உங்கள் ஆழமான அன்பையும் மட்டும்தான் இப்போது என் கண்கள் பார்க்கின்றன. ஒரு மனிதனின் மதிப்பு அவனுடைய உடலில் இல்லை; அவனுடைய உள்ளத்தில்தான் இருக்கிறது.”
நான் அவனது கண்களை நேராகப் பார்த்துத் தொடர்ந்தேன்:
“புறத் தோற்றத்தை வைத்து மதிப்பிடும் இந்தச் சமூகத்திற்காக என் காதலை நான் விட்டுத்தர மாட்டேன். நான் உன்னை வெறும் கருணையால் அல்ல, என் தூய்மையான காதலால் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். இறுதிவரை உன்னோடு பயணிக்க விரும்புகிறேன்.”
என் வார்த்தைகளைக் கேட்ட அர்ஜுனின் கண்களில் இருந்து மெதுவாகக் கண்ணீர் துளிர்த்தது. ஆனால், அந்தப் பழைய கண்ணீரில் இருந்த வேதனையோ, குற்ற உணர்ச்சியோ இப்போது அவனிடம் இல்லை; அதற்குப் பதிலாக, ஒரு நீண்ட போராட்டத்திற்குப் பின் கிடைத்த நிம்மதியும், எல்லையற்ற மகிழ்ச்சியும் மட்டுமே அவனது புன்னகையில் நிறைந்திருந்தன.
அன்று முதல் நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் ஆழமாகப் புரிந்துகொண்டு, எங்களின் வாழ்க்கைப் பயணத்தை இணைந்து தொடங்க முடிவு செய்தோம்.
தொடர்புள்ள சிறுகதைகள்
மாயவலை
ஆலமர் செல்வன்
July 5, 2026
காதலின் உயிர் மீட்டல்…
இளையவேணி கிருஷ்ணா
July 5, 2026
இது ஒரு விவகாரமான கதை
நாகரத்தினம் கிருஷ்ணா
June 29, 2026