கறைபட்ட இலை




(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு காலத்தில் ஓர் இலை, அணில் கிள்ளி விழுந்தது; ஆலிலை.
விழுந்து, கீழே வளர்ந்திருந்த முட்புதரில் சிக்குண்டது. வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து, பனியில் விறைத்து, காற்றில் குளிர்ந்தது.
கொஞ்ச காலம்.
ஆலமரத்தடியில் ஒரு வாய்க்கால். எங்கேயோ, எப் போதோ பிறந்து, பாம்பைப்போல் நெளிந்து எங்கெங்கோ சென்று கடைசியில் எங்கேயோ மறைந்தது.
ஒரு நாள் ஒருத்தி அங்கே வந்தாள். பறைச்சி. (அந்த நாள் அப்படிச் சொல்லும் நாள்தான்) தலையில் ஒரு சோற்று மூட்டை. வயலில் கவலையடிக்கும் தன் புருஷ னுக்குக் கஞ்சி கொண்டு போகிறாள்.
வாய்க்காலில் தண்ணீர் குளு குளுவென்று ஓடிற்று. வெய்யில் வெந்தது.
அவள் உடல் வியர்த்தது.
புடவையை அவிழ்த்து, கரையோரமாய்ச் சோற்று மூட்டையுடன் வைத்துவிட்டு, ஜலத்தில் இறங்கினாள்.
அவள் குளிக்கையில் எதிர்க்கரையில் ஒருவன் வந்தான். இளவல். அவனுடைய எண்ணெய் வறண்ட செம்பட்டை மயிரில் வெயில் விழுகையில் தங்கமோதிரக் குவியலாய் தலை மாறியது.
வாய் வெற்றிலைச் சிவப்பு. கன்னத்திலும் உதட்டிலும், அவன் தாயின் பால் இன்னமும் வழிந்தது.
அவன் கண்கள்…அவை எதையோ தேடி அலைந்தன. கனவுகள் உலவும் கண்கள். பஞ்சவடி, பிருந்தாவனம், மானஸாதீரம். ஆம் அவன் ஒரு கவிஞன். (அல்ல பைத்தியம்) இடையில் எழுத்தாணி. அவன் பாட்ட னுடையது….எங்கேயோபார்த்தபடி என்னவோ யோசனை பண்ணியபடி வருகையில், திடீரென்று அவளைக் கண் டான்.சட்டென நின்றான்.அவனை ஒரு புதர் மறைத்தது. அதனால் அவள் அவனைப் பார்க்கவில்லை. அவள் உடல், உள்ளம் எல்லாம், வெள்ளத்தின் வசம் திளைத்தது. புனலின் குளிர்ச்சி உடலில் ஊறும் களி வெறியில், தண்ணீரைக் கையால் அடித்துத் திவலைத்திரை எழுப்பி, அதன் பின் மறைந்து, கட கட கக்கடவென சிரித்து அப்படியே ஜலத்தில் மல்லாந்தாள்.
அவள் மயிர் அவிழ்ந்து, தோகை விரிந்து, பிறகு கனத்து அமிழ்ந்தது. கைகளை விரித்து, கால்களைச் சேர்த்து, சிலுவைபோல் மிதந்தாள். வெயிலின் வெப்பம் கண்கள் கூசி இமைக்கத் தவித்தன. வாய் சிரித்தது. உடல் கரும் பளிங்கென ஒளிவீசிற்று.
அவன் அவளிடம் லயித்தான். இடையில் சொருகிய எழுத்தாணி அவனே யறியாது கையில் ஏறியது.
ஓலை ? இல்லை. ஆனால், அதோ முட்களிடையில் ஓர் ஆலிலை…சட்டென அதையெடுத்து, அங்கேயே மண்டியிட்டுத் தொடைமீது வைத்து, எழுத ஆரம்பித் தான். தன் உள்ளத்தில் எழுந்த உணர்ச்சிகளை உருவாக்க முயன்றான்.
அவன் கவிஞன். (அல்ல பைத்தியம்) அவன் கண்கள், கனவு காணும் கண்கள். அக்கனவுகளில், அக்கடும் வெயிலே, நள்ளிரவின் வெண்ணிலவாய் மாறிவிடும்; இவ் வெயிலில் வேகும் வயல்களே, அந்நிலவில் குளிக்கும் நந்தவனமாகி விடும்; பாசியும் ஊசலும் படர்ந்த இவ் வாய்க்கால், தாமரையும் ரோஜாவும் மலிந்து கந்தர்வர் குளிக்கும் அற்புத ஓடையாகும். அப்பொழுது, அவன் கற்பனையின் எழுச்சியில் அப்பறைச்சி என்ன ஆவாள்?
கற்பக வனத்துப் பொய்கையில் அப்ஸரஸ் விளையாடு வதைக் கண்டானா? அல்ல, நள்ளிரவின் வெண்ணிலவில் கண்ணனை எதிர்பார்த்து வேளைக்கு முன்னரே வந்து, யமுனையில் காத்திருக்கும் முதல் ஜலக்ரீடியைக் கண்டானா? அல்ல க்ரீடை முடிந்து, அவரவர் வீட்டுக்கு விரைந்த பிறகும் ஆனந்த மூர்ச்சையில் இன்னமும் ஜலத்தில் லயித்துக் கிடக்கும் கடைசி கோபிகையா?
அல்ல : பஞ்சவடியில் சூர்ப்பனகையின் சாயை விழு முன்னர், பம்பையில் ஸீதாபிராட்டி அனுபவித்த ஆனந்தாம் ருதத்தின் ஒரு நிமிஷப் பிரத்யக்ஷமா?
அல்ல: ஆண்டவன் ஆதி மண்ணில் பிசைந்த முதற் பெண்மையா?
‘பசுபதியையே மணாளனாய்க் கொள்வேன்’ என்று இமவான் மகள் இயற்றும் கடுந்தவத்தில் குளிக்கச் சென்ற விடத்தில். கடவுளை நினைந்து, தன்னை மறந்து, யோக நித்திரையில் ஆதிபரை ஆழ்ந்த புனிதமா?
அல்ல, திலோத்தமையைத் தழுவ, சுந்தோபசுந்தர் இட்ட சண்டையையொத்து, ஒரு பெண்ணைக் குறித்து வெப்பமும் அப்புவும் இடும் போட்டியா?
கண்டது என்னவோ? கண்டதையெல்லாம் எழுத முயன்றான்.
அவரவர் லயிப்பில் அவரவர். அவனுக்கு அவன் எழுத்தில்; அவளுக்கு அவள் குளிப்பில். இன்னமும் அவள் அவனைப் பார்க்கவில்லை. இருவரும் மற்றோர் ஆள் அவ்விடம் வருவதை பார்க்கவில்லை.
அவனுக்கோ, கவலையேற்றத்தினின்று இறங்கிய களைப்பு. பசி வயிற்றை எலியாய்ப் பிராண்டிற்று. கஞ்சியெடுத்துவான்னு சேரிக்கு அனுப்பின பொம்புள்ளே இன்னமும் வந்து சேரல்லே; என்ன திமிர் பார்த்தியா? அவன் பொம்புள்ளே சோற்று மூட்டையைக் கரையில் வைத்துவிட்டு, வாய்க்காலில்’ குளிப்பதைக் கண்டான். அவளைத் திட்டத் திறந்த வாய் மூடாமல் அப்படியே தொங்கிற்று, கரையில் உட்கார்ந்துகொண்டு அவளைப் பார்த்து இளித்துக் கொண்டிருக்கும் வெறியனையும் கண்டுவிட்டான்.
“அஞ்சு ரூவாயும், அரை பீப்பா கள்ளும், ஒரு சேவலும் வரிசையாக் கொடுத்து, தொட்டுத் தாலி கட்டி குடும்பம் நடத்தலாமின்னு கூட்டி வந்தேன் இவளை ! எத்தினி நாளா, இந்த மாதிரி கட்டினவனுக்குச் சொந் தத்தை விலைக்கு வெளிலே காட்டி தொழில் நடத்திட் டிருக்கா? தேவடியா !…. குடிசைக்குப் போய்க் கூழைக் கொண்டு வாடின்னா இப்படி காலையுமில்லே,மாலையு மில்லே, கால் காசுக்குத் துரோகமா பண்றே- ஆமா, பிறத்தியான் பொம்புள்ளே மானத்தை இப்படிக் கால் காசுக்கு அனுபவிக்கிற இந்தப் பட்டிமவன் யாரு?- பார்த்தா, பார்ப்பானாட்டம் இருக்கான்! ஆமா நான் பறையன்தான்; ஆனால், என்ன? அவன் செங்கல் கட்டி வாழ்ந்தா எனக்கு மாத்திரம் ஒரு குடிசையிலே குடி குடும்பமில்லே? கௌரவமில்லே? நான் புருசனல்ல ?
அவனுக்கு மண்டை திகுதிகுவென எரிந்தது காதண்டை ‘ஜோ’ வென்று சமுத்திரம் இரைந்தது. சரேலென்று பின்னால் வந்து, கவியின் எழுத்தாணியைப் பிடுங்கி அவன் மயிறைப் பிடித்துத் தலையை நிமிர்த்தி, விலாவில் ஓங்கிக் குத்தினான். ஒரே குத்துத்தான். எல்லாம் சொற்பத்திலும் சொற்ப நேரம்தான். (சொல்லத் தான் இந்நேரம்) எண்ணத்தின் நேரம்கூட இல்லை. எண்ணம் நேராய் மாறிய செயல் நேரம்.
அவன் வந்தான், கண்டான், நினைத்தான், கொன்றான்.
ஆலிலை, கவியின் கரத்தினின்றும் நழுவியது. அது ஜலத்தில் விழுமுன்னர், அவனது ரத்தத்தில் ஒரு துளி யைத் தாங்கிக்கொண்டது. அவ்வுதிரத் துளி,தண்ணீரில், இலைப் படகில் மிதக்கையில், வெயிலின் ஒளியில் பவழ மாய் மின்னிற்று
வாய்க்காலில் குளித்துக் கொண்டிருக்கும் ஸ்திரி தன்னை நோக்கி மிதந்து வந்த அந்த இலையைக் கையிலெடுத்துப் பார்த்தாள். அவளுக்கு வியப்பாயிருந்தது. ஏதோ நாலு கிறுக்கு: அது நடுவே ஒரு துளிச் சிவப்பு!-
அது காலனின் கையெழுத்து. அதன்மேல் அவன் வைத்த முத்திரையென்று அவள் எப்படிக் கண்டாள் ?
“தேவடியா! திருட்டுத் தேவடியா!!- பறத்தேவடியா!” கரையின் அத்தனை உயரத்திலிருந்து அவன் குதித்ததும் தண்ணீர் பெரும் சுவர்களாய் எழும்பி இடிந்து விழுந்தது.
அந்த எழுத்தாணி அவள் மார்பிலே அழுந்துகையில் அவளுக்கு வீறிட நேரமில்லை. ஆணியின் வேகம் அவ் வேகம். அது சென்ற பாதையும், அவ்வளவு சொகுசு- காலன் அவளைத் தழுவலில் அவ்வளவு ஆசை.
அவள் கை வீசிய வீச்சில், ஆலிலை, எதிர்க் கரைமேல் விழுந்தது. இச்சமயம் அதன் கனமும் இரட்டை ஆகிய விட்டது. ஒரு துளி ஆண் இரத்தம், ஒரு துளி பெண் இரத்தம் ஒன்றையொட்டி யொன்று.
அவளைக் கொன்ற பிறகுதான், பறையனுக்கு மூளைக் கொதிப்பு தணிந்தது. உணர்வு வந்ததும் உதறல் கண்டது. விழுந்தடித்துக்கொண்டு ஆணியைக் கீழே எறிந்துவிட்டு ஓடினான்.
அப்புறம் என்னென்னவோ நடந்தது- வாய்க்காலில் குளியாடும் சவத்தைப்பற்றியும், கரையில் கிடந்த சவத் தைப்பற்றியும், சோற்று மூட்டையின்மேல் விழுந்திருந்த எழுத்தாணியைப் பற்றியும்-
அதெல்லாம்பற்றி நமக்கென்ன ?
இது இலையின் கதை.
அதுவும் இனிக் கொஞ்சம்தான்.
வெயிலில் காய்ந்து, காற்றில் அலைந்து, எங்கெங்கோ சென்று அது கடைசியில், அடுப்புக்குச் செத்தை பெருக்கும் ஒருத்தியின் துடைப்பத்தில் சிக்குண்டது.
“எந்தக் கட்டையிலே போவானோ புகையிலை மென்னு துப்பிட்டிருக்கான் இல்லாட்டி, இலை தைக்கலாம் — இருந்தாலும் பரவாயில்லை ; பெரிய இலை காஞ்ச இலை, நல்லா எரியும்!”-
அவள் நினைத்ததும் சரிதான்,
நன்றாகத்தான் எரிந்தது.
– கங்கா (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1962, ஐந்திணைப் பதிப்பகம், சென்னை.
![]() |
லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி…மேலும் படிக்க... |