கன்ஸர்வேடிவ் – ஒரு பக்க கதை





‘இந்த அல்ட்ரா மாடர்ன் பெண் யாரு?’ அலுவலகத்தில் தன் முன் மிடுக்காக நின்றவளைப் பார்த்துக் குழம்பினான் சத்யம்.
“சார்.. ஐம் ரேணுகா….” என்று ஆன் செய்த ‘டாப்’பை அவனிடம் கொடுத்தாள்.
கல்யாணத்தரகர் வாட்ஸ்ஸப்பிய அதே புகைப்படம்.
சத்யம் மேலும் குழம்பினான்.
“உங்க விருப்பப்படி பட்டுச்சேலை, க்ளோஸ்டு ஜாக்கெட், பின்னிய கூந்தல், மல்லிகைச்சரம், தோடு, மூக்குத்தி, வளையல்னு. போட்டோஷாப் செய்த என் போட்டோதான்..”
சத்யம் அதிர்ந்தான்.
“மிஸ்டர் சத்யம்.. பெண்பார்க்க வரும்போது இந்த போட்டோஷாப் பெண்ணா நான் மாறணுமாம்..அம்மாவோட விருப்பம்.”
“…”
“‘ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம்’கறதை என்னால ஒத்துக்க முடியாது..உண்மையா, ட்ரான்ஸ்பரன்டா இருக்கணும்கறதுதான் என்னோட பாலிசி.”
“…”
உங்கம்மாவின் பழமைவாதம் ஓகே. இன்டலெக்சுவலான நீங்க; புடவை,பின்னல், பூ பொட்டு..பெண்பார்த்தல்….னு..”
“…”
“கல்யாணத்துக்குப் பிறகு வேஷம் கலைத்து மனசை உடைக்காம, முன்பே உங்ககிட்ட உண்மையைச் சொல்லிட்டேன்..எனி வே, சாரிஃபார் த டிஸ்டர்பன்ஸ்… ஆபீசுக்கு நேரமாச்சு நான் கிளம்பறேன்..”
“ஒன்மினிட் ப்ளீஸ்…” என்ற சத்யத்திற்குக் கட்டுப்பட்டாள் ரேணுகா..
“ஹலோ..அம்மா..”
“…”
“பெண் பார்க்கிற ஃபார்மாலிட்டி தேவையில்லைனு ரேணுகா வீட்ல சொல்லி, கல்யாண ஏற்பாடுகளை தொடங்கச் சொல்லிடுங்கம்மா”
“…”
சத்யத்தின் முடிவால் புதுமைப்பெண் கன்ஸர்வேடிவ் ஆனாள். ரேணுவின் தலை வெட்கத்தில் குனிய கால் கட்டைவிரல் தரையில் கோலமிட்டது.
– 2022 ஏப்ரல் 16-30 கதிர்ஸ்