கண்ணிலே நீரெதற்கு….?!
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 23, 2024
பார்வையிட்டோர்: 10,031
தோள்களில் தன் பேத்தியைப் போட்டுக் கொண்டு தாலாட்டுப் பாடியபடியே நடந்தார் தாத்தா நரசிம்மன்.
முண்டா பனியனின் பட்டைச் சந்துவழியே சுடச்சுடப் பேத்தியின் கண்ணீர் முதுகு நனைக்க, பேத்தியின் முகந்திருப்பிக் கருணையோடு கேட்டார்…
‘ஏண்டா குட்டி அழறே ? தாத்தாவுக்கு உன்னைச் சுமப்பது கஷ்டமா இருக்கும்னு நெனைக்கிறயா?!
இல்லை என்று மறுத்துத் தலையாட்டியது குழந்தை.
அதன் உடம்பு ரெருப்பாய்க் கொதிக்கவே ஜொரமடிக்குதாடா? எனறார் கருணை ததும்ப…!
அப்போதும் குழத்தை மறுத்தே தலையாட்டிவிட்டு மறுபடியும் தோள்களில் தலை கவிழ்த்தது!
மீண்டும் கண்ணீர் முதுகு நனைக்க…
அப்பறம் ஏண்டா அழறே? என்றார் தாத்தா அன்பாக…!
ஜிரத்தில்தவித்த குழந்தை தலை நிமிர்த்திச் சொல்லியது,
‘நீ ரொம்ப மெலிஞ்சுட்டே தாத்தா…! உன் தோள்பட்டை எலும்பு குத்துது…! முன்னமாதிரி சாஃப்டா இல்லே! படுக்க முடியலை! குத்துது!’ என்றது…!
இப்போது தாத்தா கண்களில் கண்ணீர்!