கடவுள் தந்த வரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 18, 2025
பார்வையிட்டோர்: 5,871 
 
 

(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“பத்மா எல்லாப் பொருட்களையும் ஒதுக்கி வைத்து வீட்டு டி.வியிலிருந்து பேட்டி எடுக்க வருபவர்களை வரவேற்க தயாராகிக் கொண்டிருந்தார், இன்றைய இந்தியாவின் பிரபல பரத நாட்டியக் கலைஞர், மிகவும் நன்றாகப் பாடக்கூடியவர். 

திரைப்படங்களில் கூட நடித்தும் பினனணி குரலில் பாடி யும் இருக்கிறார். 

பேட்டிகள் என்பது அவருக்கு அலுத்துப் போய்விட்ட சமாசாரம். இருந்தாலும் தன்னுடைய இமேஜைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு தன்னைப் பற்றி தனி அபிப்பிராயம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர். 

கொஞ்ச நேரத்தில் டி.வி. கேமிரா சகிதம் நிருபர்கள் வந்துவிட எல்லோரையும் அமரச் சொல்லி விட்டு நீங்கள் கோணம் பார்த்து எப்படி அமர்ந்து எங்கே அமர்ந்து பேசினால் டி.வி.யில் அழகாக வரும் என்று பாருங்கள், நான் சாப்பிடுவதற்கு கூல்டிரிங்ஸ் கொண்டு வருகிறேன் என்றார்.

நீங்கள் ஒரு வேலைக்காரப் பெண்மணி வைத்துக் கொள்ள கூடாதா? என்று நிருபர் கேட்டார்.

ஸாரி சார், போன முறையும் இதே கேள்வியைத் தான் கேட்டீர்கள், என் வீட்டில் எல்லாமே என் கைப்பட செய்தால் தான் எனக்குப் பிடிக்கும் என்றவாறு உள்ளே சென்று குளிர்பானம் எடுத்து வந்து எல்லோருக்கும் கொடுத்தார். 

‘சரி மேடம் நீங்கள் சோபாவின் அந்த ஓரத்தில் அமருங்கள். எங்கள் பாலு இந்த பக்கத்தின் கடைசியில் அமரட்டும்? என்று கேமிரா மேன் சொல்ல சிறிது நேரத்தில் பேட்டி ஆரம்பித்தது. 

எல்லோருடைய பேட்டிகளும் ஒரே மாதிரியாக இருப்பதால் கொஞ்சம் வித்தியாசமாக கேட்கலாம் என்று எண்ணுகிறேன். ஒன்றும் தவறாக நினைக்க மாட்டீர்களே என்றான் பாலு. 

குண்டக்க மண்டக்க கேட்காமல் தெளிவாக இருந்தால் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லத் தயாராக இருக்கிறேன்.

நீங்கள் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை?

அந்தக் கேள்வியை எதிர்பாராத பத்மா கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டுமா? என்று கேட்டார் கொஞ்சம் திகைப்புடன்.

விருப்பம் இருந்தால்… ஆமாம். குமாரி பத்மாவதி குணசேகரனுக்கு வயசு என்ன இருக்கும். 

நாற்பதைத் தாண்டிக் கொண்டிருக்கிறேன். பெண்களின் வயதை சரியாகத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவர்கள் பிறந்த ஆஸ்பத்திரியில் போய் பிறந்த தேதி தான் தேட வேண்டும் போலிருக்கிறது என்று சிரித்த பாலுவுடன் சேர்ந்து சிரித்த பத்மா, அப்படியெல்லாம் ஒன்று மில்லை எனக்கு நாற்பத்தி நான்கு வயதாகிறது என்றார். 

பாலு திரும்பிப் பார்க்க கேளுங்கள் என்றார் பத்மா.

பரத நாட்டியத்தின் பேரொளி என்று பட்டம் வாங்கிய மேதையே. நீங்கள் இன்றும் என் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. 

என்ன? என்று தெரியாதது போலக் கேட்டார் பத்மா.

நீங்கள் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று நிருபர் பாலு கேட்ட போது அவர்களிடையே மனத்திரையில் அந்தக் காட்சி விரிந்தது.

பாலன், நான் கடைசியாகக் கேட்கிறேன் உங்கள் பதில் என்ன? 

எத்தனை முறை நீ என்னைக் கேட்டாலும் உனக்கு சொல்லப் போகின்ற பதில் இது தான் பத்மா. 

அது முடியாத காரியம். 

அப்படியென்றால் நாம் பிரிந்து விடுவது தான் நல்லது.

பாலன் உருகி உருகி என்னைக் காதலித்தீர்களே, அது எல்லாம் போலிதானா? 

உன்னை விட்டுப் பிரிந்து போனாலும் நான் உன்னைக் காதலித்துக் கொண்டே இருப்பேன் பத்மா. 

பின் என்னை மணந்து கொள்ள மட்டும் ஏன் இத்தனை கண்டிசன் போடுகிறீர்கள். 

இது கண்டிசன் என்று தப்பாக கணக்கிடுகிறாய் பத்மா. நான் காதலிக்கும் பெண் என் மனைவியின் அழகை நான் மட்டும் தான் ரசிக்க வேண்டும். திருமணமான பிறகும் உன் நடனத்தை நாக்கைத் தொங்கப் போட்டு பார்ப்பவர்கள் உன் உடல் அழகை இரசிப்பாதை நான் காணவிரும்பவில்லை. 

இது தப்பான அபிப்பிராயம் பாலன், பரதம் என்பது ஒரு கலை, உடலை ரசிக்க வருவதற்கு இது ஒன்றும் காபரே டான்ஸ் அல்ல. நான் திருமணத்திற்கு பிறகும் நடனம் ஆடினால் கலையை ரசிக்கும் ரசிகர்கள் தான் வருவார்களே தவிர நீங்கள் நினைக்கிற விசிலடிக்கும் கூட்டம் பரத நாட்டியம் பார்க்க வராது. ரெக்கார்ட் டானஸ் பார்க்கத் தான் போகும். 

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இப்போது பத்மாவதி குணிசேகரனாக இருக்கும் நான உங்கள் மனைவியான பிறகு பத்மாவதி பாலனாகி விடுவேன், அதனால் உங்களுக்குத் தானே பெருமை. 

பொருமைகளை எல்லாம் மூட்டையில் கட்டித் தூக்கிய போடு. நன்றாக ஞாபகம் வைத்துக் கொள் பத்மா, நான் வேண்டுமா? இல்லை பரதம் வேண்டுமா? என்று முடிவு எடுத்து விடேன். 

இரண்டு கண்களில் வலது கண் வேண்டுமா இல்லை இடது கண் வேண்டுமா என்று கேட்டால் எனக்கு இரண்டு கண்களுமே வேண்டும் என்று தான் சொல்வேன் பாலன்.

இது விதண்டாவாதம் பத்மா.

நானா விதண்டா வாதம் செய்கிறேன். சரி நான் பரத நாட்டிய மாடியதால் தான் நாம் சந்திக்க முடிந்த தென்பதாவது புரிகிறதா? 

முடிவாகச் சொல்கிறேன் பத்மா, என்னைத் துணைவனாக்கிக் கொள்ள விரும்பினால் உன் காற்சலங்கைகளை முட்டைக் கட்டி மூலையில் வைத்து விடுவது தான் நல்லது. 

கொஞ்சம் கொஞ்சமாக பாலனை விட்டு பரதத்திலே வெறிபிடித்தவளாக முன்னேறி எத்தனையோ அவார்டுகள் வாங்கி எத்தனையோ பட்டங்கள் பெற்று, பல நாடுகள் போய் நிகழ்ச்சிகள் நடத்தி ஜனாதிபதியிடமே அவார்டு வாங்கிவிட்ட நிலையில் பாலனை நினைவு படுத்திய நிருபரை கூர்ந்து பார்த்தாள் பத்மா. 

மேடம் உங்களுக்கு விருப்பமில்லை என்றால் பதில் சொல்ல வேண்டாம். நான் வேறு கேள்விகள் கேட்கிறேன் என்றான் நிருபர் பாலு. 

இவனிடம் நான் காதலில் தோல்வியுற்றவன், பரதத்திற்கு பதிலாக என் காதலை இழந்தவள் என்று கத்தலாமா என்று யோசித்தவள் ஒரு நிமிடம் தன்னை நிலைப்படுத்திக கொண்டு கல்யாணத்தில் எனக்கு நாட்டமில்லாமல் போனது தான் காரணம். திருமணம். என்ற கூட்டுக்குள் நான் முடங்கிப் போயிருந்தால் கணவன் குழந்தைகள் என்று என் வட்டமே சுருங்கிப் போயிருக்கும். 

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம் போல கணவன் அமைவதெல்லாம் கூட என்று ஆரம்பித்த நிருபரிடம் இது கூட எனக்குக் கடவுள் தந்த வரம் தானே, நான் திருமணம் முடித்திருந்தால் இன்று பேர் புகழ் பெற்று டி.வி. நிகழ்ச்சிக்கு உங்கள் முன்னால் அமர்ந்திருக்க முடியுமா? 

இனியும்‘வாழ்வில் உங்களுக்கு ஒரு நல்ல துணை கிடைத்தால் மணந்து கொள்வீர்களா? 

கொஞ்ச நேரம் யோசித்தவள் தன்னுடைய இமேஜை பாதிக்கக் கூடாத பதிலாக சிந்தித்து கண்டிப்பாக மணந்து கொள்வேன். பாருங்கள் மக்களிடம் திருமணம் என்பது செக்ஸிற்காகவும் குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்காகவும் தான் என்ற அபிப்பிராயம் உள்ளது. 

இருமனம் இணைவதே திருமணம். இரண்டு மனங்கள் ஒன்று பட்டு சேர்ந்து வாழ்க்கைப் படகை ஓட்டிச் செல்வது தான் திருமணம். நல்ல துணை கிடைத்தால் கண்டிப்பாக மணந்து கொள்வேன் என்று சொல்ல நிருபர் வரிசையாகக் கேட்டுக் கொண்டிருக்க இனிதாக பேட்டி முடிந்து டி.வி, காமிராகாரர் வெளியே கிளம்பி விட நிருபர் பாலு பத்மா என்னைத் தெரிகிறதா? என்று கேட்டான். 

நன்றாகத் தெரிகிறது பாலன். ஆனால் நாம் இருவரும் இரு துருவங்களுக்கு சென்று விட்டவர்கள். 

பேட்டிக்காக நான சில விஷயங்களைச் சொன்னாலும் இனி என் வாழ்வில் திருமணம் என்பதற்கே இடமில்லை. நீங்கள் போகலாம் என்றாள் கண்களைத் துடைத்துக் கொண்டு.

– தின பூமி

GeorgeChandran பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *