கங்கா




(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வண்டியை எதிர்பார்த்து ரயிலடியில் காத்திருந்தேன். சம்பளம் பத்திரமா என்று ஒருமுறை உள் பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டேன்.
வீட்டுக்குப் போகவேண்டுமென்றில்லை. இதற்குள் அவள் முசுடு முகத்தில் விழிக்கவேண்டாம்; வெடுக்கு வெடுக்கென ஆளைப்பிடுங்கும் வார்த்தைகளுக்கு இப்பவே போய் ஈடு கொடுக்க வேண்டாம். ஆகையால் ரயிலடியில் அவ்வப்போது வரும் வண்டிகளையும், அவைகளிலிருந்து இறங்குவோரையும் ஏறுவோரையும் பார்த்த வண்ணம் உட்கார்ந்திருந்தேன்.இம்மாதிரி நானும் எத்தனை முறை ஏறி இருப்பேன்! வீட்டிலிருந்து கிளம்புகையில் வெற் றிலையை மடிக்கக்கூட நேரமில்லாது வெறுமனே வாயில் சுருட்டிப் போட்டுக் கொண்டு ஆபீசில் மாடாய் உழைத்து விட்டு, மாடாய் வார்த்தைகளையும் வாங்கிக் கட்டிக் கொண்டு, இதே வண்டியில் வீடு திரும்பினால் அங்கும் நிம்மதியில்லை. குழந்தைகள் தொந்தரவும் அவள் சிடு சிடுப்பும்! ஆரம்பத்தில் நாங்கள் இப்படியாயிருந்தோம்? அவளும் இப்படியாயிருந்தாள்?
எனக்கு ஒன்றுமே பிடிக்கவில்லை. ரயிலடியிலேயே உட்கார்ந்து பொருமிக் கொண்டிருந்தேன்.
ஒரு வண்டி வந்தது ஜனங்களைக் கொட்டிவிட்டு ஜனங்களை வாரிக்கொண்டு சென்றது. மாலை வெய்யில் பொன்னாய் மாறிற்று. தென்றல் தவழ்ந்தது.
நினைத்துக்கொண்டேன் : எங்களுக்குக் கலியாணம் ஆகுமுன் நான் ரயிலேறி என் தாயாருடன் இவளைப் பெண் பார்க்கச் சென்றதை. அப்போது அப்பிரயாணம் அலுப்பாவா இருந்தது? இடமிலாது இரவெல்லாம் நின்று கொண்டே போனேன். ஆனால் புஷ்பக விமானத்தில் போய்க் கொண்டிருந்ததாகத்தான் தியானம்.
அதிலிருந்து இதுவரை நான் செய்த ரயில் பிரயா ணங்கள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தன. நினைவுகள் பின்னோக்கிப் பாய்ந்தன. தகப்பனாருக்கு உடம்பு சரியில்லை எனத் தந்தி வந்ததும் அலறியடித்துக்கொண்டு ஓடியது; காலேஜ் நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து திருவனந்தபுரம் போய் ‘ஜாலியாய்’ச் சுற்றியது…
அடுத்தபடி காலேஜ் படிக்க ஊரிலிருந்து பட்டணத் துக்கு வண்டியேறுகிறேன். அந்தக் குட்டி ஸ்டேஷன் இரும்புக் கிராதிகளுக்கருகில் என் தகப்பனார், சிறு கூன் விழுந்த நலிந்த உடம்புடன் நின்றுகொண்டு, வண்டி நகருகையில் அன்புகனிந்த முகத்துடன் என்னை ஆசீர் வதிக்கும் பாவனையில் கையைத் தூக்கிக் காண்பிக்கிறார். உணர்ச்சி மிக்கால் தொண்டை அடைத்தது.இப்போது போல் இருக்கிறது. பிறகு, அதற்கும் முன்னால், நான் பள்ளிக்கல்வி முடிந்ததும் விடுமுறைக்குக் கள்ளிக்கோட்டை யில் வேலையாயிருந்த என் மாமன் வீட்டுக்குச் சென்றது.
அந்த ரயில் ஞாபகம் வந்ததும் “கங்கா ” எனும் நாமம் உள்ளத்தின் அடிவாரத்தினின்று ஜ்வலித்துக் கொண்டே எழுந்து திகிரிபோல் சுழன்றுகொண்டே வந்து மார்பில் மோதியது. அதிர்ச்சி தாங்காமல் பெஞ்சியின் மேல் அப்படியே சாய்ந்தேன். கங்கா! கங்கா !!
நாக்கு சுழன்று சுழன்று வாயை நிறைத்தது. சப்தம் உள் நிறைந்து மேலும் வழிந்தது. என்னுள் வெள்ளம் புரண்டது.
எப்போது பார்த்த கங்கா! இப்போது எங்கிருக்கிறாளோ? மறுபடியும் அவளைக் காண்பேனா? என் கங்காவைப் போய்த் தேடினால்தான் என்ன? எங்குதான் அவள் இருப்பாள் ?
இரவு படைத்த ஒற்றை விழிபோல ரயில் பாதையில் ஒரு பெரும் விளக்கு இடையிலிருக்கும் தூரத்தை விழுங்கிக் கொண்டே ஸ்டேஷனை நெருங்கிக் கொண்டிருந்தது. கைக்கடியாரத்தைப் பார்த்தேன். அந்த வேளைக்கு அப்படி வருவது மங்களூர் மெயில்தான். இதில் ஏறினால் கள்ளிக் கோட்டையை அடையலாம். அவ்வளவுதான், நான் எல்லாம் மறந்தேன். வீட்டுக்குப் போகவேண்டுமென்பதை மறந்தேன் மனைவி மக்களை மறந்தேன். நானே என் நினைவில் இல்லை. என் நினைவு விருப்பமாகி கண நேரத்தில் தீர்மானமாய் ஓங்கி, அடக்கமுடியாத ஆவேச மாகி நானும் அதுவானேன். அவசர அவசரமாய் ‘புக்கிங் ஆபீசுக்கு ஓடி கள்ளிக்கோட்டைக்கு ஒரு டிக்கட் வாங்கி வண்டியும் ஏறிவிட்டேன்.
ரயில் ஆனந்தமாய் தண்டவாளத்தில் தாளமிட்டு என் கள்ளிக்கோட்டைக்குப் பாய்ந்து சென்றது. நான் கங்காவின் நினைவுகளை பின்பற்றியவனாய் என்னின் இதுவரை வாழ்க்கையினின்று தப்பியோடிக் கொண்டிருந் தேன். திடீரென்று தளைகளை யறுத்துக் கொண்ட விடுதலையின் வெறியில் என்ன காரியம் செய்துகொண்டி ருந்தேன், அதன் விளைவுகள், அனர்த்தங்கள் எம்மாதிரி, இப்பவும் பின்னும் யார்யாரை எப்படி எப்படித் தாக்கும் எனும் நிச்சயமான உணர்வோ, கவலையோ இல்லாமல் நான்பாட்டுக்கு ரயிலில் போய்க் கொண்டிருந்தேன்.
கங்கா!-
ஜன்னலுக்கு வெளியே, ரயிலுடன் ஓடிக்கொண்டே என்முன் அவள் உருவம் எழுந்தது. வெள்ளைப்பாவாடை; அதன் மேல் பச்சைத் தாவணியின்கீழ் அவள் போட்டுக் கொண்டிருந்த சிவப்புரவிக்கையின் முடிச்சுக்கும் பாவாடை முடிச்சுக்கும் இடையில், அடிவயிறு உள்வாங்கி, மேடேறி பனி வெள்ளையாய்த் தெரிந்தது. வலையல்கள் குலுங்கும் கைகளை வீசிக்கொண்டு சிரித்தவண்ணம் அவள் தட்டா மாலை சுற்றிக் கொண்டிருந்தாள். பின்னால் பின்னல் தடியாய், டம்பங் கூத்தாடி சாட்டைபோல் சுழன்றது.
கங்கா வெறுங் கங்காவாயில்லை. கள்ளங்கபடும் கவலையுமற்ற அவளுடைய பருவத்தின் சின்னமாய் விளங் கினாள் அவளை முதலாய்ச் சந்திக்கையில் வயது பதின் மூன்று பதினான்கு இருக்குமா ?
கங்கா வீட்டில்தான் என் மாமா குடித்தனமிருந்தார். கங்காவின் அப்பா பெரிய சம்சாரி. பெரிய பணக்காரர். மர வியாபாரம். முதல் தாரத்திற்கு நான்கு குழந்தைகள். இரண்டாவதற்கு மூன்று. அவருடைய மனைவி இப்போது தன் ஐந்தாவது குழந்தையை சீராட்டிக்கொண்டிருந்தாள். இன்னமும் அவருக்கே இளம் வயதுதான். வீடு சத்திரம் தான். எப்பவும் சந்தடி; ஒரு வேளையில் ஒரு இடத்தில் ஒரு பந்தி டிபன் பண்ணும்; அதே சமயம் இன்னொரு மூலையில் இன்னொரு ‘ஜமா’ வுக்குச் சாப்பாட்டுக் கடை நடக்கும். இன்னும் சிலருக்குப் பொழுது விடிந்தும்கூட இருக்காது.
வீட்டில் கூட்டம் பெருத்தமையால் தாக்கல் மோக்கல் இலாது நடக்கும் காரியங்களை எட்ட இருந்து கவனிக் கையில் வேடிக்கையாயிருக்கும். கங்கா இரண்டாந்தாரத் துக் குழந்தை. ஆனால் தாயில்லாக் குழந்தை என்று கேட் டாலே சம்பிரதாய முறையில் எழும் அனுதாபம் எவ்வளவு பொய், காரணமற்றது என்று இங்குதான் கண்டேன். எல்லாக் குழந்தைகளுக்கும் சித்திமேல் உயிர்.கங்காவின் ஒன்று விட்ட சகோதரர்கள் முதலிருவருக்குக் கலியாணம் ஆகி குழந்தைகள்கூட இருந்தன.வீட்டுக்கு வந்த நாட்டுப் பெண்களும் மாமியாரும் சமவயது. சித்திக்கு எப்பவும் சிரித்த முகம், அவள் வீட்டிற்கு வந்த பிறகுதான் அவள் கணவருக்கு திடீரென்று அதிர்ஷ்டம் பெருகினதாகக் கேள்வி.
கங்காவும் அவள் வீட்டுச் சின்னக்குழந்தைகளும் அனேகமாக நாங்கள் குடித்தனம் இருந்த பகுதியில்தான் வாசமாயிருப்பார்கள். என் மாமிக்கு அவர்கள் இங்கே வந்து அடிக்கும் கூத்து பிடிப்பதில்லை. அவளுக்கு வைத்த சாமான் வைத்த இடத்தில் இருக்கவேண்டும். ஒன்றும் உடையக்கூடாது. சிந்தக்கூடாது, ஆகையால், இவர்கள் அமளி அவளுக்கு ஒப்புமா? “சரி சரி கங்கா வந்துவிட் டாளா பட்டாளத்தைக் கூட்டிண்டு?” என்று காரமாகவே அவள் காது படும்படி அலுத்துக் கொள்வாள் ஆனால் கங்காவா இதுக்கெல்லாம் மசிவாள்?
கிழக்கத்திச் சீமையிலிருந்து மாமாவாத்துக்கு ஒரு பையன் வந்திருக்கானே, அவன் பேச்சு பாவனை எல்லாம் கவனித்து அவனைக் கேலி பண்ணவேண்டாமா? பேச்சுக்குப் பேச்சு வார்த்தைக்கு வார்த்தை ஏதேனும் கோளாறு கண்டுபிடித்துக் கையைக் கொட்டிச் சிரித்த வண்ணமிருப்பாள்.சில சமயங்களில் ஒரே வார்த்தையின் ப்ரயோக வேறுபாட்டை நான் அறியாது உபயோகித்து, அர்த்த விபரீதம் ஏற்படுகையில் அவள் கொம்மாளத்திற்கு கங்கு கரையே கிடையாது. எனக்கோ என் பயனற்ற கோபத்தில், சங்கடத்தில், முகம் சிவக்கும். நான் வேதனைப் படப்பட அவள் இரக்கமற்றுச் சீண்டிக் கொண்டேயிருப்பாள்.
சுபாவமாகவே, அவளுக்குப் பொய்லஜ்ஜை, வெட்கம் இவையெல்லாம் கிடையாது. நான் சங்கோஜி என்று அவள் கண்டு கொண்டதும் என்னை வலுவில் பேச்சுக்கு இழுத்துக் கழுத்தையறுப்பதில் அலாதி ஆனந்தம் கண் டாள். அவளைக் கண்டாலே நான் ஓடி ஒளிய ஆரம்பித்தேன்.
ஒரு நாள், சுவாமி படங்களைத் தட்டி மாட்டவேண்டு மென்று மாமிக்குத் தோன்றிவிட்டது. மாமிக்கே சாமான் களை ஒழித்துப் பெருக்குவதிலும் புதுப்புது முறையில் அடுக்கி வைப்பதிலும் ஒரு ஆசை. படங்களைக் கழற்று வதும் மாட்டுவதுமாய் மருமானையும் கங்காவையும் அதிகாரம் பண்ணிக் கொண்டிருந்தாள். ஆனால் இம் மாதிரிக் காரியங்களில் எனக்கு மனம் செல்வதில்லை. இருந்தாலும் மாமியிடம் உள்ளூற பயம். அவள் கண்டிப் பான பேர்வழி ஆகையால் செய்யும் காரியத்தில் மனமில் லாது கையையும் காலையும் ஆட்டிக் கொண்டிருந்தேன். “டேய் அதை யெடேன்.” முக்காலி மேல் ஏறி நின்று கொண்டு மாமி கீழே கையை நீட்டி எதையோ காட்டினாள்.
“எதை?”
“அதான் ‘கங்கையை’ என்றதை “கங்காவை” என்று மனதில் வாங்கிக்கொண்டு விட்டேன். ‘கங்காவையா?’ என்று குழறினேன். உடனேயே என் தவறு எனக்குத் தெரிந்துவிட்டது. ஆனால் அதற்குள் என்னுள் ஏதோ நேர்ந்துவிட்டது. கத்தியுடன் கத்தி சந்தித்துப் பொறி பிறந்தது போல் என்னுள் ஏதோ நேர்ந்துவிட்டது.
“கங்கா!-” ஜாலரோடு ஜாலர் மோதினாற் போல் அவள் நாமம் ‘ஜல்’ என்று புது நாதத்துடன் செவியின் ஜீவாவை உதைத்துக் கொண்டு கிளம்பிற்று. கட்டிய வெள்ளி மணிகளின் கிணிகிணியுடன் என்னுள் ஒரு சிற்பக் கதவு மெதுவாய் ஆடி அசைந்துகொண்டு திறந்தது. கால் கட்டை விரல்வரை உடல் ‘ஜிவ்’ விட்டது.
என்னுள் நேர்ந்ததை என் கண்களில் அவள் கண்டு கொண்டாள். கன்னங்களில் சிவப்பு படர்ந்தது. கண்களின் மேலிமைகள் மெதுவாய்த் தாழ்ந்தன. அவள் பார்வை குனிந்தது. முதன் முதலாய் கங்கா என்முன் வெட்கிப் போனாள். கங்கா என் தேவி 1
“மண்டு! அந்த ஸ்தாலியை எடுன்னேனே!” மாமியிடம் அதை எடுத்துக் கொடுத்துவிட்டு, கங்கா சிட்டாய்ப் பறந்தாள்.
ஏதோ சட்டை போல் என் பையல் பருவம் என்னின்று அன்று கழன்றது. ஒன்றுமே புரியாத ஒரு புதுப் பருவத்தில் புகுந்து கொண்டிருந்தேன்.
அன்று முதல் கங்கா என்னைத் துன்புறுத்துவதை விட்டாள். அல்லது அவள் சீண்டல் முன்போல் என்னை உறுத்தவில்லையோ ? என் புதுப் பார்வை அவளுடைய ஒவ்வொரு செயலிலும் பேச்சிலும் அங்க அசைவிலும் கவிதை கண்டது. அவளிடமிருந்து எனக்குக் கனிவாய் ஒரு வார்த்தை வரின் அதில் கனவின் அழகு மிளிர்ந்து என்னையும் கனவாக்கியது.
ஒருநாள் மாலை நான் வெளியில் உலாவச் சென்று கால் போன வழி நடந்து வழிதப்பிப் போய் மீண்டும் வழிகண்டு வீடு திரும்பும் வேளை வெகு நேரமாகிவிட்டது. கங்கா வாசலில் நின்று கொண்டிருந்தாள். என்னைக் கண்டதும் முகத்தின் படலம் விலகியது.
“எங்கே போயிருந்தாய்? அடேயப்பா – இந்தக் கிழக்கத்திக்காராளுக்கே என்ன துணிச்சல்! நாங்கள் எல்லாம் எவ்வளவு கவலைப்பட்டுண்டிருக்கோம் தெரி யுமா? நான் இப்போ அப்பாவிடம் சொல்லி உன்னைத் தேட ஆள் விடறதாயிருந்தேனாக்கும்”.
என்னுள் ஒரு சிட்டுக்குருவி படபடவென்று அடித்துக் கொண்டது. அதன் சுறுசுறுப்புத் தாங்குவதற்குப் பயமா விருந்தது.”நிஜமாவா?” என்றேன், அர்த்தமில்லாமல்.
“இதில் பொய் என்னவாம்?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே சென்றாள். அவ்வார்த்தைகளிலேயே ஜன்மத்தின் பரிசை அடைந்து விட்டதாய்த் தோன்றிய என் புதுவிழிப்பு எனக்குப் புரியவில்லையே ! புரியாமலும் என்னதான் யோசனை பண்ணுகிறேன்? தெரியாது. உள்ளே போகாமல் நின்றவிடத்திலேயே வெகுநேரம் நின்று கொண்டிருந்தேன்.
கங்காவின் தகப்பனாருக்கு என்னை ரொம்பவும் பிடித்து விட்டது. அவருக்கு என்னைவிட நாலு வயது மூத்தவனாய் ஒரு பையன் – கங்காவுடன் பிறந்தவன்- எஸ்.எஸ்.எல்.ஸி. பரிக்ஷையை மூன்றாம் முறை படை யெடுத்திருந்தான்.
திடீரென்று கங்காவின் தகப்பனார் இடுப்பில் ஒரு முண்டைக் கட்டிக்கொண்டு கிளம்பிவிடுவார். “வா, வா வெள்ளம் அடிக்கலாம்” என்று என் கையைப் பிடித்துக் கரகரவென்று இழுத்துக்கொண்டு வெந்நீருள்ளுக்குப் போவார். வென்னீருள்ளில் ஒரு பெரிய டாங்க் உண்டு கிணற்று ஜலத்தை அதில் நிரப்ப கைப் ‘பம்ப்’ அடித்தாக வேண்டும். முதலில் நாலு அடி அடித்துக் காண்பித்து விட்டுப் பிறகு என்னை அடிக்கச் சொல்வார், நான் மொண மொணப்பேன். “சரிதாண்டா சின்னப் பையலா யிருந்துண்டு இதுக்குச் சோம்பறாய் ! அடிக்க அடிக்க தேகத்துக்கு நல்ல பலமாக்கும் !” என்று அவருடைய மலையான உச்சரிப்பில் இழுத்து இழுத்துப் பேசி அதிகாரம் பண்ணிவிட்டுப் போய்விடுவார். அந்த ராக்ஷஸ ‘டாங்’கில் ஜலம் கட்டுவதற்குள் தோள்விட்டுப் போகும், முன்பின் பழக்கமிருந்தால்தானே! நான் ஓசைப்படாமல் நழுவத் தயாராய்க் கொண்டிருக்கையில், கங்கா ஓசைப்படாமல் அடிமேல் அடியெடுத்து வைத்து, சிரித்தவண்ணம் வருவாள்.
“நான் அடிக்கிறேன்!*
“ஒண்ணும் வேண்டாம்.
“உன்னால் முடியாது. முன்பின் பழக்கமில்லை யல்லவா?’
“பரவாயில்லை”-என்று ஆத்திரத்துடன் ‘பம்பை’க் கறப்பேன்,
“அப்படியடிச்சால் சீக்கிரமே களைச்சுப் போவாய் கேட்டையா?”
“நீ இங்கே விட்டுப் போ!” எரிந்து விழுவேன். அவள் சிரித்துக்கொண்டே நகருவாள். இனி நான் ஓடிப்போனால் என் ஆண்மைக்குப் பங்கம். இனி இந்தக் கைகள் இரண் டும் என்னுடையனவல்ல. வலிக்கிறதா? வலிக்கட்டும் நன்றாக வலிக்கட்டும்! கழன்றே போகட்டும். அப்புறம் மடியில் கிடத்திக்கொண்டு அழலாம். இப்போதைக்கு. இருக்கிறவரை கங்கா எதிரே மானம் போகாமல் அடி.
நான் தன்னிரக்கத்தில் தவித்துக்கொண்டிருக்கையிலே டாங்கிலிருந்து ஜலம் வழிந்து தலைமேல் கொட்டும். ஏற்கெனவே உடல் வேர்வையில் நாய்க்குட்டிபோல் தலையை உதறிக்கொண்டு கிளம்புவேன்.
வாசற்படியில் கங்கா சிரித்துக்கொண்டே டம்ளரும் கையுமாய்க் காத்திருப்பாள். ‘இந்தா!’
“எனக்கு ஒண்ணும் வேண்டாம்-!”
‘நான் என் கைப்படப் போட்டேனாக்கும் காப்பி! சாப்பிடமாட்டையா?” திடீரென்று என்னை மாவுப் பொம்மையாய் ஆக்கிவிட முடிகிறது அவளால், பதில் பேசாமல் டம்ளரை வாங்கிக் கொள்வேன்.
“அடேயப்பா, இந்தக் கிழக்கத்திக்காராளுக்குத் தான்என்ன தேஷீயம்! ஐயோ! சொட்டச் சொட்ட நிக்கிறாயே! இதோ டவல் கொண்டுவரேன்…” என்று உள்ளே ஓடுவாள்.
நான் குச்சு நாய் மாதிரி காத்திருப்பேன்.
நான் ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தேன். மாமா எதிரே மேஜையில் ஆபீஸ் வேலை செய்து கொண்டிருந்தார்.
காளியாய் அழுது கொண்டிருக்கும் தன் மன்னியின் கைக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்து கங்கா ஊஞ்சலில் உட்கார்ந்தாள். குழந்தையை சமாதானப் படுத்துவதற்காக ஊஞ்சலை ஆட்டினாள்.
சற்று நேரம் கழித்து, மாமா மூக்குக் கண்ணாடியைச் சற்றுத் தாழ்த்தி, அதன் பின்னிருந்து எட்டிப் பார்த்துக் கொண்டு, “பேஷ் ! இதுதான் நன்றாயிருக்கிறது ! பேஷ்!” என்றார்.
“என்னது?” என்றாள்.
“எனக்கு லாலி ஒன்று தெரியும். முதலடி மறந்து போச்சு! இரு இரு வந்தூட்டேன்” என்று மாமா கூரை யைப் பார்த்துக் கொண்டே கையைச்சொடுக்கினார்.
“போங்கோ மாமா! நான் கலியாணமே பண்ணிக்கப் போறதில்லே!”
“பின் என்ன பண்ணப் போகிறாய் ? காளன் ஓலன் இளவன் அவியல் எல்லாம் பண்ணி யாருக்கு போடுவாய்?”
“நான் டாக்டருக்குப் படிக்கப் போறேன்.”
“ஐய!” மாமா கிண்டலாக மார்பில் அடித்துக்கொண்டார். “நீ பள்ளிக்கூடம் போற ஒழுங்குக்கும் படிக்கிற லக்ஷணத்துக்கும்!”
கங்காவுக்கு முகம் கோவைப் பழமாய்ச் சிவந்து விட்டது. கோபக் கண்ணீர் துளும்பிற்று. கங்கா எல்லா பாடங்களிலும் ஒற்றை லக்க மார்க்கு. கணக்கில் பெரிய இட்டா. ஆத்திரத்துடன் குழந்தையை இரண்டு அறை அறைந்து ஊஞ்சலை இன்னமும் வீசி ஆட்டினாள். ஊஞ்சல் குறுக்கு நெடுக்குமாய் ஆடியது. மாமாவுக்கு தன் சொத்தில் கவலை வந்துவிட்டது.
“ஊஞ்சல் ஜாக்கிரதை! சுவத்திலே இடிக்கிறது!”
சடக்கென்று கங்கா ஊஞ்சலை நிறுத்தின வேகம் என்னை முன்னுக்குத் தள்ளிற்று. இருவரும் மண்டையில் இடித்துக் கொண்டோம். கங்கா குழந்தையை எடுத்துக் கொண்டு வேகமாய் அங்கிருந்து சென்றாள். அவள் கோபமும் அவளுக்கு அழகாய்த் தானிருந்தது. எனக்கு மாமா மேல் கோபம் கோபமாய் வந்தது.
ஆனால் கங்காவுக்குப் படிக்க வணங்குவதில்லை. பாட்டு வாத்தியாரும் படிப்பு வாத்தியாரும் மாறி மாறி வந்து போவார்கள். ஆனால் அவை இரண்டைத் தவிர பாக்கி எது சொன்னாலும் கங்கா செய்யத் தயார்.
அவள் காரியம் செய்வதும் விபரீதமாய்த்தானிருக் கும். திடீரென்று நினைத்துக் கொள்வாள். பற்றுப்பாத்தி ரங்கள் இன்னும் வேண்டாத சாமான்கள் அத்தனையும் போட்டுக் கொண்டு தேய்ப்பதற்கு முற்றத்தில் குந்திட்டு உட்கார்ந்து விடுவாள். வேலைக்காரி ஒத்தாசைக்கு வந்தா லும் அவளைச் சீறித் தடுத்துவிடுவாள். ஆனால் பாதி தேய்த்துக் கொண்டிருக்கையிலேயே சலிப்பு வந்துவிடும். “இந்தாடி நாராயணி!என்னத்தைப் பார்த்துண்டிருக்காய்? சம்பளம் வாங்கறாயே?” என்று வேலைக்காரிமேல் எரிந்து விழுந்து சாமான்களை அவளிடம் வீசியெறிவாள்.நாரா யணி சிரித்துக்கொண்டே வருவாள். இன்றைய பழக்கமா நேற்றையப் பழக்கமா அவளுக்கு! கங்காவை கைக் குழந்தையாவே அவளுக்குத் தெரியுமே! அவள் சொல்லு வாள், சிரித்துக் கொண்டே “கங்கம்மை குடித்தனம் பண்ற போதேய்! வேடிக்கையாத் தானிருக்கும். சாதம் பாதி அரியாயிருக்கும், ரஸம் காயாத புளிவெள்ளம். வேகாத உப்பேரி. இதுதான் இவள் புருஷன் ஊணுகழிக்கணும்; சமையல் வேகு முன்னையே கங்கம்மை அவசரத்தில் வெந்திடுவாள்!”
ஒருநாள் கொட்டுகிற மழையில் சாக்கடையை அலம்பு கிறேன் என்று கங்கா துடைப்பத்தை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள். சொட்டச் சொட்ட நனைந்தது போதா தென்று நடு முற்றத்தில் ஒரு டம்ளரை வைத்து, அதில் மழைத்துளிகள் விழுந்து நிரம்பியதும், அந்த ஜலத்தையும் குடித்துவிட்டாள். அன்றிரவே ஜுரம் வந்துவிட்டது.
மூன்று நாட்கள் கங்கா கண்ணிலேயே படவில்லை. எசமானைக் காணாத நாய்க்குட்டிபோல் நான் வீட்டைச் சுற்றிச் சுற்றியலைந்தேன். அவள் உடம்பு பற்றி மற்றவர் களிடம் விசாரிக்கவும் லஜ்ஜை: என் கிலேசமும் எனக்குப் புரியாத ஊமையடி. ஆனால் அவள் வீட்டாரும் அவளைப் பற்றி ஒன்றும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவர்கள் பாட்டுக்கு சிரித்துக்கொண்டும், கொம்மாளம் அடித்துக்கொண்டும் தின்றுகொண்டும் சண்டை போட்டுக் காண்டும் அவரவர் ஜோலியில் சர்வசாதாரணமாய் ஈடுபட்டிருந்தனர்.
நான் வாசற்புறத்தில் நின்றுகொண்டு அங்கிருந்த பூச்செடிகளைப் பார்த்துக் குருட்டு யோசனை பண்ணிக் கொண்டிருந்தேன்.
எனக்கு ஒரு சிறு தலைவலி ஏற்பட்டால்கூட அம்மா வும் அப்பாவும் நிமிஷத்திற்கு நிமிஷம் தொட்டுப் பார்ப் பார்கள் நோயாளிக்குக் குணமாகும் வரை வீட்டிலேயே திண்பண்டங்கள் புழங்காது.சமையல்கூட எல்லோருக்கும் கட்டுப்பாடாய் இருக்கும். தன்னைப் பட்டினி போட்டு மற்றவர்கள் தின்கிறார்களே என்று நான் நினைக்கக் கூடாது எனும் பரிவு,ஆனால் இங்கோ, ஒருவருக்கும் தன் தீனியில் சௌகரியத்தில் ஒரு இம்மி குறைந்ததாய்த் தெரியவில்லை. என்னதான் இருந்தாலும் கங்கா தாயில் லாக் குழந்தைதானே!
“ஓய்-!”-கைதட்டல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். “இந்தப் பக்கம் நோக்கட்டும் -”
மாடியிலிருந்து கங்கா சிரித்தாள். முகம் சுண்டி யிருந்தது; மயிர் பரட்டையாய்க் காற்றில் அலைந்தது.
“என்ன பண்ணறாய் ? கண்ணிலேயே காணவில் லையே, மேலே வாயேன் ! நான் தலையை அசைத் தேன். மேலே போக இஷ்டம்தான். ஆனால் இந்தப் பாழா போற லஜ்ஜை !
அவள் கையில் பச்சையாய் ஏதோ தெரிந்தது. “கையில் என்னது?” என்றேன். கையை நீட்டினாள் மாங்காய்!
“உனக்கு வேணுமா?’
வேண்டாமென்று தலையை ஆட்டினேன். அவள் மாங்காயைக் கவ்விக் கடித்துத் தின்ன ஆரம்பித்தாள். இப்போ புரிந்தது. கங்காவின் உடம்பைப் பற்றி அவள் வீட்டிலேயே யாருக்கும் கவலைப்பட்டுக் கட்டுப்படி ஆகாது கங்கா சூரியனின்று கழன்று தப்பி பூமிக்கு ஓடிவந்துவிட்ட பொற்கதிர். பொறுப்பற்ற பொற்கதிர்தான். ஆனாலும் அவள் கவர்ச்சியே அவள் பொறுப்பற்ற தன்மையில்தான்.
எஸ்.எஸ்.எல்.ஸி. பரீக்ஷை முடிவுகள் பிரத்யேகமாய்க் கிடைக்க ஆரம்பித்துவிட்டன. நான் “பாஸ்” எல்லா பாடங்களிலுமே நல்ல மார்க்கு வாங்கியிருந்தேன். மாமா வீட்டில் எல்லோருக்கும் சர்க்கரை வழங்கினார். கண்ணாடி தட்டிலிருந்து கங்கா அள்ளி அள்ளி இரண்டுவாய் போட்டுக் கொண்டாள். அதைப் பற்றி எனக்குள்ளேயே நான் தனி அர்த்தம் பண்ணிக்கொண்டு எனக்கே ஆனந்தப்பட்டுக் கொண்டேன்.
ஆனால் அவள் அண்ணன் பரீக்ஷையில் மறுபடியும் ‘டக்’ அடித்துவிட்டான். அவள் தகப்பனார் வீடு அதிர இரைந்தார். உடனோடொத்தவனைப் பார்த்துக்கோடா -உன்னைவிட நாலு வயசு மட்டு. அவன் கிளாஸ் ஏறிண்டே போகட்டும்.நீ படிப்படியா ‘ஓம் நாராயணாய நம:வுக்குப் போயிண்டேயிரு என்று என்னை ஒப்பிட்டு அவனைக் கடிந்துகொண்டது பையனுக்குப் பொறுக்க வில்லை.
அன்று மாலை வாசற்புறத்தில் காம்பவுண்டிற்குள் இசை கேடாய் ஒரு மூலையில் அவனிடம் தனியாய் மாட்டிக் கொண்டுவிட்டேன். வலுச்சண்டைக்கிழுத்து என்னை ஓங்கி ஒரு அறை அறைந்தான். அந்தத் தடிய னுக்குச் சரியாய் என்னால் நிற்க முடியுமா? அடிவேகம் என்னைப் பின்னுக்குத் தள்ளிக்கொண்டே போய் சுவரில் மோதிக்கொண்டேன். முழங்கையில் அடி.
கூவிக்கொண்டே ஓடிவந்து கங்கா அண்ணனை வாயில் வந்தபடி வைத்தாள். அவன் ஏளனமாய்ச் சிரித்துக் கொண்டே காளைமாட்டு நடை போட்டுப் போய்விட் டான். நான் முக்கிமுனகிக்கொண்டே எழுந்தேன். முழங்கையில் நெருப்பை வைத்துக் கட்டினாற்போல் இருந்தது.
“ஐயையோ!” கங்கா என் கையைப் பிடித்தாள். முழங் கையில் ரத்தம் வழிந்தது. சதை அறுந்து தொங்கிற்று.
“போ!” என்று அவள் கையை உதறினேன். எனக்கு அழுகை வந்துவிட்டது. அடியின் வலி ஒரு பக்கம்; அதை விட நான் உதைப்பட்டதை அவள் பார்த்து விட்டாளே எனும் அவமானம் இன்னொரு பக்கம் இப்பொழுது நான் அழுவதையும் பார்க்கிறாளே என்று நினைக்கையிலேயே அழுகை இன்னும் உடைப்பெடுத்துக் கொண்டு வந்தது.
கங்கா ஓடிப் போய், கையில் தேங்காயெண்ணெய் சீசாவுடனும்,பஞ்சும் துணிக் கிழிசலுடனும் திரும்பி ஓடி வந்தாள். நான் சொல்லச் சொல்ல, நான் சொல்வதை சட்டை செய்யாமல் என் அருகே மண்டியிட்டு உட்கார்ந்து கொண்டு பஞ்சை எண்ணெயில் தேய்த்து புண்ணில் அப்பினாள். வாய் ஓயாமல் அண்ணனை வசைபாடிக் கொண்டிருந்தது. “சவண்டிக் கொத்தனை அப்பாவிடம் சொல்லி நன்னா சாடச் சொல்றேன்!”
அவள் கவனம் முழுவதும் அண்ணனைத் திட்டுவதி லும் காயத்தைக் கட்டுவதிலும் ஊன்றியதால், கன்னத்தில் வழியும் கண்ணீரைத் துடைக்கக்கூட மறந்து நான் அவளைக் கவனிப்பதை அவள் கவனிக்கவில்லை. அப் புருவங்கள் தாம் என்ன சீராய் வளைந்திருக்கின்றன! மூக்குத்தான் என்ன எடுப்பு! அந்தக் கண்கள்தான் எப்படி பேசுகின்றன! பெண்ணென்று ஆண்டவன் படைத்து விட்டால் அது எவ்வளவு சின்னக் குழந்தையானாலும், சமயத்தில் அதற்கு நூத்துக்கிழத்தின் தாய்மை எங்கிருந்து தான் திடீரென்று ஏற்படுகிறதோ?
கனலாய்க் கொதித்த கண்ணீர் திடீரென என் கன்னத்தில் பன்னீராய்க் குளிர்ந்தது.
காற்று சில்லென மோதியது. ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தேன். நீண்டதோர் பாலத்தின் மேல் ரயில் வெகு வேகமாய்ப் போய்க்கொண்டிருந்தது. அடியில் ஜலம் அகண்டமாய் விரிந்தது. எனக்கு ஒரு எண்ணம் தோன் றிற்று. திடீரென்று இங்கு ரயில் கவிழ்ந்துவிட்டால் ! அடிக்கடி பத்திரிகைகளில் இப்போது, இதைத்தானே படிக்கிறோம்! அப்படியே கவிழ்ந்தாலும் அடியில் அதி பாதாளத்தில் மினுமினுக்கும் ஜலத்தில் நான் வீழ்ந்து கொண்டிருக்கையிலேயே ‘கங்கா!’ எனும் நாமம்தான் என் வாயின் கடைசி ஓசையாயிருக்கும் என்று நினைக்கையிலேயே அந்நினைப்பே மனதிற்கு ஒரு ஆறுதலா யிருந்தது.
ரயில் ஏன் இன்னும் கவிழ ஆரம்பிக்கவில்லை?
ஆனால் அது என்னைச் சட்டை செய்யாமல் பத்திரமாய், வேகமாய்ப் போய்க் கொண்டிருந்தது.
கங்காவிற்குத் திடீரென்று கலியாணம் கூடிவிட்டது. இவையெல்லாம் எப்படி நேருகிறதென்று எனக்குத் தெரிய வில்லை. என் அக்காவிற்காக என் அப்பா ஜாதகக் கட்டைத் தூக்கிக்கொண்டு ஊர் ஊராய் வருஷக்கணக்கில் அலைந்தது எனக்கு இன்னும் மறக்கவில்லை. ஆனால் கங்காவிற்கோ திடீரென்று முன்பின் அறிக்கையில்லாமற் கூடி, முகூர்த்தம் கூடக் குறித்தாகிவிட்டது.
பையன் பெண்ணைப் பார்க்க வரும்போது எனக்குப் பொறுக்கமுடியும் என்று தோன்றவில்லை. நான் அந்த வேளைக்கு வீட்டைவிட்டுப் போய்விட்டேன். ஆனால் சில நாட்கள் கழித்து நான் அவனைப் பார்க்க நேர்ந்தது. கங்காவின் தகப்பனார் பெருமிதத்தோடு அவனை வீட்டிற்கு மறுபடியும் ஏதோ சாக்கில் அழைத்து வந்திருந்தார்.
‘இவர் தான் புது மாப்பிள்ளை!’ என்று மாமாவுக்கு அறிமுகப்படுத்தினார். அவனைப் பார்த்ததும் அவனிட மிருக்கும் குறைகள் தாம் எனக்குத் தலைகாட்டி நின்றன. பையன் பி.ஏ. பரிக்ஷை மூன்றாம் பாகத்தில் ‘பல்டி’: தலையைச் சாய்த்துக்கொண்டு, லேசான காக்கைப் பார்வை. உச்சந்தலையில் இப்பவே சின்ன சொட்டை. அதை மறைக்க ரொம்பவும் பாடுபட்டிருந்தான். கால் கட்டைவிரல் நகம் ஒன்று சொத்தை.
இருந்தால் என்ன ? ஒரே பிள்ளை. தகப்பனார் உத்தி யோகம் பண்ணி கிம்பளமாய்க் கொள்ளையடித்தது தவிர பூர்வீக சொத்து வேறே நிறைய. இன்னமும் அத்தை வழியிலும் தாய் வழியிலும் வேறு வர ஏராளமாய் காத்துக் கொண்டிருந்தது. சொந்தமாய் கார். கேட்கணுமா?
ஆனால் இது எல்லாவற்றையும் விட அக்கிரமம் கங்கா திடீரென்று மாறிப் போனதுதான். என்னை அடியோடு மறந்துவிட்டாள். சாப்பாடு வேளை. படுக்கை வேளை போக பாக்கிப் பொழுதெல்லாம் குடியிருக்கிற மாமாவாத்திலே குடியிருப்பவளுக்கு இப்போது ‘ஏன்’ என்று கேட்க நேரம் இல்லை.
மருதாணியிலையை வரவழைத்து, அதைக் கொய்து அரைத்து இட்டுக் கொள்ளவும், புடவை வாங்கவும் நகை வாங்கவும் பெரியவர்களுடன் கடைகளுக்குப் போகவும், கடையிலிருந்து வந்தபின் வாங்கிவந்த சாமான் களைப் பற்றிச் சண்டை போடவும், விதவிதமாய் அலங் காரம் பண்ணிக்கொண்டு சினேகிதிகள் வீட்டிற்குப் போய் வரத்தான் சரியாயிருந்தது. இவளுடைய அட்டகாசத்துக்கு ஒத்தாசையாக இடையிடையே பிள்ளை வீட்டாரின் கார் வந்து வந்து வாசலில் நிற்கும். அவள் குஷியாய்க் காலத்தைக் கழித்து வந்தாள். ஆனால் நானோ முதுகைத் தடவிக் கொடுத்துக்கொண்டே யிருந்துவிட்டுத் திடீரென்று சமுத்திரத்தில் வீசியெறியப்பட்ட குச்சு நாயின் பயங்கர நிலையை அடைந்து விட்டேன். எப்படி நீந்திக் கரை சேர்வாயோ அது உன்பாடு.
ஆனால் கங்கா என் சொத்தா? அவளிடம் நான் என்ன எதிர்பார்த்தேன்? எதை அவளிடம் எதிர்பார்க்க எனக்கு என்ன நியாயம் அல்ல உரிமை உண்டு? என்று கேள்விகள் தாமே எழுந்தன. ஆயினும் அவைகளுக்குப் பதிலோ சமாதானமோ தெரியாததால் என் வேதனை அதிகரித்தது. சாப்பாடு வேண்டியில்லை. இருப்புக் கொள்ளவில்லை. ஒருவரும் இல்லாத சமயத்தில் கண்ணில் ஜலம்கூடத் தளும்பிற்று.
‘கடவுளே என்னை எப்படியாயினும் இந்தக் கஷ்டத் திலிருந்து விடுவி!’-எனக் குழந்தைபோல் வேண்டுவேன்: ஆனால் பக்த பராதீனனாகிய அவனே நேரில் பிரசன்ன மாகி “எந்தக் கஷ்டம்?” என்று கேட்டால் அவனுக்கு விவரித்துச் சொல்ல என்னிடம் என்ன பதில் இருக்கிறது?
முகூர்த்தத்திற்கு இன்னும் ஒரு வாரம் இருந்தது.
ஒரு மாலை நான் எங்கள் விடுதியில் இருட்டில் உட்கார்ந்தபடி என்னுள் என்னைச் சுற்றி இடிந்த என் உலகைப் பார்த்து யோசனை பண்ணிக்கொண்டிருந்தேன். பொழுது நன்கு சாய்ந்துவிட்டது. கையெழுத்து மறைந்து கொண்டிருந்தது.
இடையில் குடத்தைத் தாங்கி,புன்னகை புரிந்தபடி கங்கா என் முன்னே நின்றாள்.
“கிணற்றடிக்கு வரையா துணைக்கு?”
அவளுக்குப் பதில் சொல்ல எனக்குத் தோன்ற வில்லை. அவள் அழகைக் கண்களால் ஆசையாய்ப் பருகினேன். ஆனால் பருகப்பருக தாபம் அதிகரித்தது. இவள் குரூபி ஆகிவிடக் கூடாதா? என்று பயங்கரமாய் ஒரு ஆசை, மனதில் தட்டிற்று. என் எண்ணம் பாபமானாலும் அம்மாதிரி அவளுக்கு நேரும் சாபமே எனக்கு ஆறுதல் தரும் வரமாயும் கூடும்.
“என்ன, காது கேக்கலையா?”
“நான் எதுக்கு ?” என்றேன், புழுக்கத்துடன்.
“இந்த நாட்டிலே கள்ளர் பயம். இந்த மாதிரி வேளை யிலேதான் கொல்லைப்புறத்திலே ஒளிஞ்சுண்டிருப்பான். யாராவது ஜலத்துக்கு வந்தால் கன்னத்திலே அறைஞ்சு கழுத்திலேயிருக்கிறதை அறுத்துண்டு ஓட்டம் பிடிப்பான்-“
“அந்தக் கள்ளன் என்னை மாத்திரம் அறைய மாட்டானா?” என்றேன்.
“நீ ஆம்பளை சிங்கமில்லையா?”
வாய்பேசாது அவளைப் பின் தொடர்ந்தேன். அவள் என்னை ஒரு கருவியாய் உபயோகப்படுத்துகிறாள் என்ற ஆத்திரம் ஒரு பக்கம் பொங்கிற்று. ஆனால் என்னை அவள் நாடும் சந்தர்ப்பத்தை விலக்க மனதில் வலிமையில்லை.
ஏதோ ஒரு மெட்டை முனகிக் கொண்டே, கங்கா கிணற்றிலிருந்து ஜலம் இழுக்க ஆரம்பித்தாள். நான் முன்பு பார்த்ததற்கு இப்போது வளர்ந்திருந்தாள். எனக்கு ஒரு பிரமை. ஒரு மகத்தான சம்பவத்திற்குத்தான் காரணி எனும் எக்களிப்பே உடலிற்கு ஒரு வாளிப்பையும் நடை யுடை பாவனைகளில் ஒரு புது மலர்ச்சியையும் தந்ததோ? ஜலமிழுக்கையில் பின்னல் பிடரியினின்று சரிந்து கிணற்றுள் தொங்கிற்று.
என்னால் பொறுக்க முடியவில்லை. ஒரு பிரம்மாண்ட மான முயற்சியில் என்னில் இருக்கும் தைரியம் அத்தனை யும் வருவித்துக் கொண்டேன்.
“கங்கா!” அவளுக்குக் காது கேட்கவில்லை. இன்னும் சற்று கெட்டியாய், “கங்கா!” என்று கூப்பிட்டேன்.
“ஓவ்!-” என்றாள் முயற்சியுடன், ஜலத்தை இழுத்துக் கொண்டே.
‘கங்கா!’ என்றேன் மறுபடியும். ஆனால் அதற்கு மேல் ஓடவில்லை. என்மேல் ஆயிரம் நட்டுவாக்களிகள் ஊர்ந்தன, “கங்கா!”
திரும்பி. ஆச்சரியத்துடன் என்னை நோக்கினாள். அந்தப் பார்வையிலேயே என் தைரியம் அத்தனையும் கரைந்து போயிற்று. என்ன முனகினேன் என்று எனக்கே காது கேட்கவில்லை.
கங்கா, கிணற்றின் பிடிச்சுவரினின்று குடத்தை இடுப்பில் ஏற்றிக் கொண்டாள். சிரித்துக்கொண்டே, “கங்கா, யமுனா, பாகீரதி, நர்மதா, சரஸ்வதி!” என்று பாட்டாய் பாடிக் கொண்டே இடுப்பை ஒடித்து ஒடித்து நடந்து வீட்டுள் சென்றாள்.
‘கிர்’ரென்றது. தலையை கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டு அங்கேயே உட்கார்ந்துவிட்டேன். பாக்கு மரங் களிலும் தென்னங் கன்றுகளிலிருந்தும் பறவைகள் ‘கர் கர்’ எனச் சத்தமிட்டு கேலி செய்தன. மரங்களின் பின்னா லிருந்து இரண்டு நக்ஷத்திரங்கள் ‘என்ன சமாசாரம்? என எட்டிப் பார்த்து ஏளனமாய்க் கண்ணைச் சிமிட்டின.
ஆனால் இந்த அவஸ்தையை நான் இதற்கு மேலும் படுவது தருமத்திற்கே சகிக்கவில்லை. காலேஜில் சேரும் விஷயமாய் உடனே புறப்படும்படி மறுநாள் அப்பாவிட மிருந்து தந்தி வந்தது. நான் அன்று சாயந்திரமே கிளம்பும்படி ஆயிற்று.
வாசலில் வண்டி வந்து நின்றதும் என்னை வழியனுப்ப அத்தனை பேரும் கூடினர். கங்கா சிரித்துக் கொண்டே வர வருஷமும் வரணும் கேட்டையா? நான் இங்கேதான் இருப்பேன்,’ என்றாள். அவளைக் கண்ணெடுத்துப் பார்க்கத் தைரியமிலாது கவிழ்ந்த தலையுடன் டொங்கா வில் ஏறினேன். இனி இப்பக்கம் எப்பவோ? இப்போது கூட இவ்வண்டியும் இன்னும் சற்று நேரம் கழித்து ரயில் சக்கரங்களின் ஒவ்வொரு உருளலும் என்னை கங்காவிட மிருந்து எட்ட எட்டக் கொண்டு போகிறது என்பதை எண்ணுகையிலேயே துக்கத்தையும் மீறிய ஒரு திகிலில் வயிறு பகீர், பகீர் …இது என் வாழ்க்கையில் ஒரு இடை வேளை, என்பதை மனம் லேசில் ஒப்ப மறுத்தது.
நான் நினைத்ததற்கு சரியாக, திரும்பிய சில மாதங் களுக்கெல்லாம் மாமாவிற்கு மாற்றலாகிவிட்டது.நான் கள்ளிக்கோட்டைக்கு மறுபடியும் போவதற்கு ஒரு சாக்கும் ஒழிந்தது. அப்புறம் குடும்பத்திலும் என்னென்னவோ நேர்ந்தன. எல்லாமே நினைத்தபடியே நேருகிறதா?
ஆனால் இப்போது அப்படியல்ல. இப்போது ரயில் முன்னேறும் ஒவ்வொரு அடியும் என்னைக் கங்கா விடமோ அல்லது அவளைக் கண்டு பிடிப்பதற்கான தகவல்களை விசாரிக்கும் இடத்திற்கோ கிட்ட எடுத்துச் செல்கிறது. அன்றுபோல் இப்போது நான் கிணற்றடியில் முயங்கி நிற்கமாட்டேன். கங்காவிடம்சொல்ல வேண்டுவது என்னவென்று எனக்கு இப்போது தெரியும். நான் என்ன சொல்ல வந்தேன் என்பதையும் அவள் இப்போது அறிந் திருப்பாள். எனக்கு வாழ்க்கை சலித்துப் போனதுபோல் அவளுக்கும் கசந்து போயிருக்கும். அவளையும் அவள் குணங்களின் நிரடலான அழகுகளையும் ரஸிக்க அவள் கணவன் எப்படி லாயக்காவான்? எங்களிருவருக்கும் எங்களைத் தவிர இனி கதியில்லை.
ஆனால் கங்கா இறந்திருந்தால்-?
முதுகுத் தண்டு சில்லிட்டது. ஏற்கெனவே பேச்சு வாக்கில் சொல்லியிருக்கிறாள். அவர்கள் கூட்டமே அல்பாயுசு. ஒரு அக்கா பிரசவத்தில் இறந்துவிட்டாளாம். ஒரு அண்ணன் ‘டி.பி. யில் போய்விட்டான்.
குழம்பிய மனத்துடன் ஸ்டேஷனில் இறங்கினேன். ஊரில் மாறுதல் காணோம். வண்டியை வைத்துக்கொண்டு நேரே அவள் வீட்டுக்குச் சென்றேன். கங்காவின் தகப்ப னாரின் பேரைச் சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தேன்.
வேற்று முகங்கள் தென்பட்டன. ஆனால் ஊஞ்சலில் ஒரு ஆள் வெற்றிலைப் பெட்டியை எதிரே வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். பழகிய முகமாயிருந்தது. கவனித்ததில் கங்காவின் அண்ணன்; என்னை அன்று உதைத்தவன்.
என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பிறகு பேர் பேராய் விசாரித்தேன். கங்காவின் தகப்பனார் காலமாயாச்சு. சித்தி அவருக்கு முன்னாலேயே தவறிவிட்டாளாம். வீட்டில் எதற்கோ தேஷியம் கிணற்றில் விழுந்தூட்டாள். சொத்து எல்லாம் பங்காச்சு. கூட்டுக் குடித்தனம் போது நிறைய இருந்த ஆஸ்தி பங்கானதும் துளியாப் போச்சு. வீட்டிலே இப்போது தனித் தனியாய்ப் பத்து சமையல், வியாபாரம் ரொம்ப மந்தம். வருமானம் போதவில்லை. “உங்கள் ஆபீஸில் ஏதாவது எனக்குத் தகுந்த பணியுண்டோ? என்று கேட்டான். “கங்கா சௌக்கியமா?” என் தொண்டை தழுதழுத்தது. ‘யார் கண்டா?’ பகீரென்றது. “புக்ககத்தில்தானே யிருக்கிறாள்?” என் கேள்வியின் அர்த்தமே எனக்குத் தெரியவில்லை.
“இல்லாமல் என்ன? அவள் இப்போ ரொம்ப ராங்கிக் காரி ஆயிட்டா. நாலைந்து வருஷங்களுக்கு முன்னே ‘குடும்பம் கஷ்டப்படறது உன் ஆம்படையான்கிட்டேருந்து ஒரு இரண்டாயிரம் பணம் கடன் வாங்கிக் கொடு’ன்னு எழுதிக் கேட்டேன். அதற்கு பதிலும் காணோம். அப்புறம் எங்கேயாவது ஒட்டிண்டுடுமோன்னு வேறு கடலாசும் கிடையாது. இந்தக் குடும்பத்தில்தான் பிறந்தாள் என்கிறதையே மறந்தூட்டா உடன் பிறந்தது எல்லாம் எப்படி இருக்கு பார்த்தாயோன்னோ?” அவனை சமாதானப் படுத்தி, அவள் விலாசத்தை விசாரித்தேன். கடைசியாத் தெரிஞ்ச விலாசம் கொயமுத்தூரில் அவள் புருஷன் ‘வெக்கல்’ பண்ணிண்டிருந்தான் என்று தெருப் பெயரைச் சொன்னான்.
அன்றிரவே கொயமுத்தூருக்குப் பயணமானேன்.
ஆனால் அங்கு குறித்த விலாசத்தில் அவர்கள் கிடைக்கவில்லை. அக்கம் பக்கம் விசாரித்ததில், வருமானம் மந்தம் என்று பக்கத்திலிருந்த கிராமத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்னால்தான் மூட்டை முடிச்சுடன் போய் விட்டார்கள் எனத் தெரிந்தது.
கங்கா எட்டப் போகப் போக, என் ஊக்கம் இன்னமும் தீவிரம் அடைந்தது. கங்கா என் சங்கல்பம்; இனி அகப்பட்டு விடுவாள்.
நான் கிராமத்தை யடைந்தபோது ஊர் ஓசையடங்கி விட்டது. ஒரு வீட்டுத் திண்ணையில் காலை அப்பொழுது தான் நீட்டின ஒரு கிழவரை கங்காவின் கணவன் பேரைச் சொல்லி விசாரித்தேன். அவர் நான் தேடிவந்த வீட்டை உட்கார்ந்த இடத்திலிருந்தே சுட்டிக் காட்டினார்.
நெஞ்சில் இதயம் கழைக் கொடியாய் ஆட, அந்த வீட்டுப் படி ஏறினேன். வாசற்கதவு திறந்துதான் இருந்தது. எனினும் உள்ளே வெகுதூரம் வரை இருட்டாய்த் தானிருந்தது. அப்பால் எங்கோ ஒரு ‘மினுக் மினுக்’.
இது என் மகத்தான நிமிஷம். விரல் கணுவால் கதவைத் தட்டினேன்.
“யாரது?” என்றது ஒரு ஆண் குரல் அதிகாரத்துடன்
“பரதேசி” என்றேன். மார் படபடத்தது. ஏன்.. அப்படிச் சொன்னேன்?
“கங்கா! யாரோ பிச்சைக்காரன் வந்திருக்கான் ஒரு பிடி சாதம் போடு.”
தூக்கக் கலக்கத்தில் ஒரு குரல் முனகிற்று!
“சரிதான்; உங்களுக்கென்ன? எழுந்திருக்கச் சொன்னவா என் பாவம் கொண்டவான்னு எனக்கிருக்கு.”
“என்னடீது ? பரதேசின்னு ஒரு ஆள் வந்திருக்கான்– மூலையிலிருக்கிற பழையதைப் பிழிஞ்சுப் போட இவ்வளவு சோம்பினால்? புதிதாய் சமைச்சாப் போடப் போகிறாய்?”
முக்கி முனகிக்கொண்டு அவள் எழுந்திருக்கும் அரவம் கேட்டது. சற்று நேரத்திற்கெல்லாம் நான் உள்ளே இருட்டில் கண்ட பொறி என்னை நெருங்கத் தொடங்கிற்று. என்னுள் சிற்பக் கதவுகளில் கட்டிய வெள்ளி மணிகள் ஒரேயடியாய் அலறின.
இருளிலிருந்து பிரிந்து ஒரு கையில் தட்டும் ஒரு கையில் விளக்குமாய் ஒரு உருவம் உள்வாசல்களைக் கடந்து தெரு வாசலை நோக்கி வந்துகொண்டிருந்தது. ஆட்டுக்கல் நடந்து வருவது போல் அதுவே ஒரு வியாதி ஏகமாய் ஊதிப்போன சரீரம். ஜலத்தில் கப்பல் புரளுவது போல் ஒவ்வொரு அடிக்கும் பக்கவாட்டில் சாய்ந்தது. கிட்ட நெருங்க நெருங்க கதுப்பாடும் கன்னங்களுக்குமேல் சீயக்காய் விரையைப் பதித்தாற்போன்று கண்கள் இடுங்கிப் போயிருந்தன. அவளுக்கு நடப்பதே பிரயாசை யாயிருந்ததால் புஸ் புஸ் என்று ரோடு என்ஜின் மாதிரி மூச்சு ஊதிற்று.
என் எதிரில் வந்து நின்றாள். என்னுள் ஏதோ மளமள வெனச் சரிந்தது.
“என்னடா ஏனம் கொண்டு வந்திருக்கையா?”
“கங்காவா?” என்றேன்.
“ஆமா…” என்று ஞாபக மறதியாய் சொல்லிவிட்டு உடனே ஆத்திரத்தோடே, “பார்த்தேளா இந்த அக்கிரமத்தை…”
“என்னடி! என்னடி !!-” உள்ளே இருந்து அவள் புருஷன் ஓடிவரும் சப்தம் நெருங்கிற்று.
“இந்தக் கட்டையிலே போறவனுக்கு பிச்சை வாங்கறதுக்கு முன்னாலே என் பேரைத் தெரிஞ்சுக் கணுமாம்…”
ஆனால் நான் அவளுடைய பாக்கிப் பேச்சுக்கு அங்கில்லை. ஓட்டமாய் ஓடினேன். வெகுதூரம் ஓடினேன். இருட்டில் எங்கோ தடுக்கிக் குப்புற விழுந்தேன். விழுந்த இடத்தில் விழுந்தபடி விக்கி விக்கி அழுதேன். அழுது கொண்டேயிருந்தேன்.
எனக்கு நினைவு வந்தபோது ரயில்வே போர்ட்டர் என்னைத் தோளைப் பிடித்துக் குலுக்கிக் கொண்டிருந்தான். “என்ன சாமி தூங்கிட்டீங்க? தூக்கத்தில் அளுவறீங்களே! எழுந்திருங்க எளுந்திருங்க, லாஸ்ட் வண்டி வருது!”
கண்ணைக் கசக்கி விழித்து என்னைச் சுற்றி நோக்கினேன். வண்டி வந்து நின்றது. அவன் கையில் ஒற்றை ரூபாய் நோட்டு ஒன்றைத் திணித்துவிட்டு வண்டியில் ஏறினேன்.
“என்னாத்துக்குங்க இது?”
“என்னை மீட்டுக் கொடுத்ததற்கு” என்று கூவினேன்.
கதவைத் தட்டினேன். கவலை தோய்ந்த முகத்துடன் என் மனைவி கதவைத் திறந்தாள். என்னைக் கண்டு விட்டதும் மறுபடியும் முகம் கடுகடுத்தது. திட்டிக் கொண்டே இலையைப் போட்டாள். திட்டிக்கொண்டே பரிமாறினாள். சாப்பிடும் நேரம் பூரா திட்டிக்கொண்டேயிருந்தாள். அவள் திட்டத் திட்ட இன்று அலாதி இன்மாயிருந்தது.
சாப்பிட்டு எழுந்ததும் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை எழுப்பிக் கொஞ்சினேன். என்னைத் திட்டிக் கொண்டே எச்சில் இலையை எடுத்து வாசலில் எறிந்து விட்டு, திட்டிக் கொண்டே திரும்பி வந்தாள். அப்புறம் என்னால் அடக்க முடியவில்லை.
“சாலா இங்கே வா?” வந்தாள். கையைப் பிடித்தேன்.
“திட்டு, திட்டு. என்னை இன்னும் திட்டு” என்றேன். அவள் பயந்து போய் சற்றுப் பின் வாங்கினாள். அதைக் காண்கையில் பள்ளிக்கூடச் சிறுவன் போல் எனக்குச் சிரிப்பு பீறிட்டது.
“சாலா. நீ என்னைத் திட்டத் திட்ட எனக்கு நீ நிஜமாகிக் கொண்டு வருகிறாய். எப்பொழுது நிஜமா கிறாயோ அப்பொழுது நீதான் நிச்சயம். எப்போ நிச்சயமோ நீதான் என் தைரியம்.”
“சரிதான் கையை விடுங்கோ. யாருக்குப் புரிகிறது உங்கள் சிக்கப் பேச்சும், சிங்காரப் பேச்சும் ? கையை விட்டுட்டுக் கையை அலம்புங்கோ எச்சில்.. கையை விடுங்கோன்னா!”
– கங்கா (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1962, ஐந்திணைப் பதிப்பகம், சென்னை.
![]() |
லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி…மேலும் படிக்க... |