ஒரு முத்தம்




(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரவு ஒரு கனாக் கண்டேன். கனவில் உருவில்லை, ஆளில்லை… அங்கும் இருள்தான். இருளில் ஒரு முத்தம் என் வாய்மேல் பதிந்தது. கனவே அவ்வளவுதான். கனவு கண்டு கலையக்கூட நேரமில்லை. அதனால் நனவா என்று நினைத்தால் அதனினும் அசட்டுத்தனம் இல்லை.
நனவாயிருக்கலாகாதா? வெட்கம் கெட்ட அசட்டு ஏக்கம். எப்படியிருக்க முடியும்? யாராயிருக்கலாம்? நினைக்கக்கூட வழியில்லை. பிரம்மச்சாரிக் கட்டை ஹாஸ்டல் வாசம் சகவாசங்கள் ஏற்கெனவே மட்டும் அதிலும் அந்த சைடு கிடையாது. சங்கோசம். ஆனால் முத்தம் தந்தவளை (ஏன் எப்பவுமே அவள்?) மனம் உருக் கூட்டப் பார்க்கிறது முடியாத காரியம். தெரிகிறது. ஆனாலும் – You fool! கனவுதானா எனச் சந்தேகிக்கும்படி முத்தத்தின் அழுத்தமான பதிவு, அதரங்களில் கசிந்த ஈரம், அதே சமயத்தில் அந்தக் கதகதப்பான மெத்து – உடல் சிலிர்க்கிறது. துவேதான் என்னை எழுப்பிவிட்டதோ என்னவோ?
காலை விழிப்பிலேயே (விழிப்பா, விழிப்பிலா? ஒரு அனுஸ்வரத்தில் ராகமே மாறும்போல பொருள் நயம் விளிம்பில் நலுங்குகிறது) ஒரு அழகுதான். கண் வைத்ததும் சித்திரம் உயிர்க்கின்றது. இமைச் சிமிழ்கள், இதழ்கள் விரிவது போலும் மெ…து…வா…ய்த் திறக்கின்றன.
உடனேயே கண்ணுக்குப் பட்ட காக்ஷியுடன் ஸ்மரணை கலக்கும் ஜாதுவில் இன்றைய ஓவியம் உருக்கூட, அவ்வப் போது அதன் சாயங்கள் தோயத் தலைப்படுகின்றன.
இதழ்களில் தோய்ந்த கனவின் சாயத்தின் ஈரம் படுக்கை யிலிருந்து எழுந்திருக்க மனம் இல்லை.
ஜன்னலுக்கு வெளியே, விழிக்கு மெத்தடமாய்த் துல்லிய நீலத்தில் வான் மிதக்கிறது. நீலத்தில் தொடங்கி நேரம் ஏற ஏற வானத்தில் ஹோலி. மஞ்சள், ஊதா, சிவப்பு என் கெட்ட சாயங்கள். அவைகளிலிருந்து கடுகு தக்காளி வெங்காயம், மஜந்தா ரோஸ், குங்குமம், ஆரஞ்ச் என மறு சாயங்கள் மேலும் மேலும் கொப்புளித்த வண்ணம் ஒரே வர்ண ரகளை இன்று சூர்ய ரதப் புறப்பாடு அமர்க்களம் போல்.
நெஞ்சு துளும்புகிறது;
முத்தம் தந்த சௌந்தர்யலகரி
அம்மா தந்த முத்தம் நினைவின் அலைகளில் ஏழுகின்றது எப்பவோ தோன்றி ஆழத்தில் எங்கேயோ புதைந்து இன்று மேலெழ அதன் வேளை.
இரண்டு குழந்தைகளுக்குத் தாயாயும், அம்மா அவளும் எங்களுடன் ஒரு குழந்தை. தொட்டதற்கெல்லாம் சிரிப் பாள். பால் பொங்கினால் – அதற்கு அன்று அப்படிச்
சிரித்தாள். அதில் சிரிக்க என்ன இருக்கிறது என்று எனக்கு இன்னும் புரியவில்லை. காரியம் தலைக்குமேல் கிடக்கும் போட்டது போட்டபடி. எங்களோடு விளையாட வந்து விடுவாள். தாயக்கட்டான், புளியங்கொட்டை பல்லாங் குழி, கண்ணாமூச்சி, விடுகதை, கதை சொல்லல்…
‘ஆமாம்,காரியம் என்னிக்கு இல்லை? செஞ்சாலும் ஓயப் போறதில்லை. இந்த சந்தோஷம் கிடைக்குமா?’
ஒருநாள். அந்த நாள் அம்மா முத்தம் தந்த நாள்.
தற்செயலில் என் இடது மணிக்கட்டில் வலதுவிரல் நுனிப்பட்டு – ஆச்சரியமாயிருந்தது. அப்படியே கையைக் காதண்டை கொண்டுபோய் ஒட்டுக் கேட்டேன். காதுக்குத் தெரியல்லே. ஆனால், விரலடியில்
”அம்மா! அம்மா!’ கை உள்ளே என்னவோ ‘டக் டக் ..”
அம்மா சிரித்தபடி, முன்றானையில் கையைத் துடைத் துக்கொண்டே வந்தாள். பிரிகள் கலைந்து சற்றுப் பரட்டை யாகிவிட்ட அவளது நெற்றி மயிர் மாலை மஞ்சள் வெயில் பட்டுப் பொன்னாய்ச் சுடர் விட்டது.
என் கையைப் பிடித்துப் பார்த்துவிட்டு ‘அதுக்கு நாடின்னுபேர்.’
‘அப்படீன்னா?”
உயிர் துடிப்புன்னு அர்த்தம்’.
‘அப்படீன்னா? நாடி அடிச்சுண்டு இருக்கும்வரை உயிர் இருக்குன்னு அர்த்தம்.’
‘அடிக்காட்டி?’
உதட்டைப் பிதுக்கிச் சிரித்தாள்.
“உன் கையைக் கொண்டா, பாக்கறேன்!”
அவள் மணிக்கட்டில் என் விரல் நுனியை வெச்சுப் பார்த்தேன்.
“எனக்கு ஒண்ணும் கேக்கலியே.’
“உனக்குப் பார்க்கத் தெரியல்லே” அவளே பார்த்துக் கொண்டாள். முகம் மாறிற்று. மறுபடியும் பார்த்துக் கொண்டாள். இந்த முறை நேரமாக.
“அப்பா வராளா பாரு” அப்பா வரல்ல. ஆனால், வர நேரம்தான்.
அப்பா ஆபீசிலிருந்து வந்தார். அப்புறம் டாக்டர் வந்தார். எங்களை விரட்டிட்டா.
அப்பா, டாக்டரை வாசல்வரை கொண்டுபோய் விட்டு விட்டு வந்தார்.
மத்யான சாதம் மிச்சம் கொஞ்சம் இருந்ததை அப்பா தான் பரிமாறினார். எங்களுக்குப் பசிச்சுது. கடையிலிருந்து ரொட்டி அண்ணாதான் வாங்கிண்டு வந்தான். இரண்டு துண்டுகூடப் பிடுங்கிண்டான். அம்மா ரூமிலிருந்தே வரல்லே.நாங்கள் அங்கே போகக்கூடாதுன்னு அப்பா உத்தரவு போட்டுட்டார். அப்பா நல்லவர்தான். ஆனால், சொன்னால் சொன்னதுதான்.
அம்மா தூங்கினான்னு நினைக்கிறேன். அப்பா வெளி யிலே வந்து கூடத்துலே சாமிப் படங்களைப் பார்த்துண்டு நின்னுண்டிருந்தார், பின்னாலே கை கட்டிண்டு.
பக்கத்து ரூமிலே எங்களுக்குப் படுக்கை. அண்ணா சக்கையா தூங்கினான். நான் படுக்கையில் பிரண்டுண்டிருந் தேன். கால் தூக்கம், அரைத் தூக்கம் கன்னத்தில் ஒரு ரோஜாப்பூ அழுந்தினாப்போல மெத்துனு…
“அம்மா! அம்மா!” கழுத்தை இறுக்கிக் கட்டிண்டேன். தாலி தொங்கி, மூக்கு குறுகுறு – ‘ உஷ்’- தன்னை மெது வாய் விடுவித்துக் கொண்டாள்.
‘சமத்தாயிரு.’
போயிட்டா.
அதுவும் கனவு மாதிரிதான் இருந்தது. ஆனால், கனவு இல்லை.
விடிஞ்சதுமே ஊரிலேருந்து பாட்டி, தாத்தா வெயி லானப்புறம் அம்மாவின் அம்மா, அண்ணா- இவாள்லாம் எப்படி வந்தா? ஏன் வந்தா திடீர்னு …
யார் வந்து என்ன?
ஒருவேளை நாடி விளையாட்டு விளையாடாமல் இருந்தா, அம்மா இருந்திருப்பாளோ?
ஆனால், அம்மா தந்த முத்தம்-
என்னிடம் பத்திரமாயிருக்கு.
பழங்கணக்கு ஓயாத கணக்கு அசை போடப் போட அதிகரிக்கும் கணக்கு.
மனமில்லாமல் படுக்கையை விட்டு எழுகிறேன். ஞாயிறுக்கு மறுநாள் திங்கள் எப்பவுமே ஆபீஸ் நுகத்தடிக்குக் கழுத்தைக் கொடுக்க மனமில்லா கசக்கும் நாள்.
திடீர்ப் பொடியில் சோம்பேறிக் காபி கலக்கிறேன். பிடிக்கவில்லை. குடிக்காமலும் முடியவில்லை. வீட்டுக் காபி வீட்டுச் சோறுக்கு நினைப்பு எடுத்து அடக்கமுடியாவிட் டால் இரண்டு மாதங்கள், மூணு மாதங்களுக்கு ஒருமுறை அண்ணா வீட்டுக்கு. மன்னி சமையல் மிகவும் நன்றா யிருக்கும்.
நேற்று இரவு ரயிலடிக்குப் போயிருந்தேன் மன்னி குழந்தைகள், அண்ணாவை வழியனுப்ப கடைசி நேரத்தில் அண்ணா பயணத்துக்குக் கொசிராய் ஒட்டிக்கொண்டான் ரயிலடியிலேயே ஒரு லீவு மனு எழுதி தன் ஆபீசில் சேர்த்து விடும்படி என்னிடம் கொடுத்துவிட்டான். *மன்னி தீபாவளிக்குப் பிறந்தகம் போகிறாள். நானும் கூடப்போய் விட்டால் எனக்குத் தீபாவளி செலவு மிச்சம் பாரு. மாப்பிள்ளை பழசானாலும் மாமனார் சும்மா விட்டுவிடு வாரா?” என்று மன்னி எதிரேயே சொல்கிறான்.தவிர மச்சினிகள் குறுகுறு என்று என்னைக் கண் அடிக்கிறான்.
அவனுக்குள் மிக்க சாமர்த்தியமாகவும் வேடிக்கையாக வும் பேசுவதாக எண்ணம். அண்ணாவின் றாபணாக்கள்’ சரிப்படாமல்தான் அவனுக்குக் கலியாணமான சுருக்கிலேயே நான் ஹாஸ்டலில் இடம் பார்த்துவிட்டேன்.
அப்பாவும் தடுக்கவில்லை.
இப்போதெல்லாம் அப்பா எதற்குமே ஆக்ஷேபம் தெரி விப்பதில்லை. இல்லை, தன் அபிப்பிராயமே தெரிவிப்பதில்லை.
எனக்குத் தோன்றுகிறது நாளடைவில் அவர்க அவரிடம் எங்களுக்கிருந்த அத்து’ மட்டும் இருத்திக் கொண்டு மற்றபடி எங்கள் இடத்துக்கே விட்டுவிட்டார். அதனாலேயே எங்களுக்கு அவரிடம் அச்சம் அதிகரித்தது.
அண்ணாவுக்குக் கலியாணமான சில நாட்களுக்கெல் லாம் அப்பா எங்களைத் தன் அறைக்குக் கூப்பிட்டார்.
மன்னியையும் சேர்த்துத்தான்
“Look here, Boys, உங்கள் தாயார் போன பின்னர் உங்களுக்கு மாற்றாந்தாய்க் கொடுமை நேர்ந்ததென்று உங்கள் வாயிலும், பிறர் வாயிலும் பட வேண்டாம் என்றே நான் மறுமணம் செய்துகொள்ளவில்லை. நானே சமைத்துப் போட்டு, நானே உங்களை வளர்த்தேன். நான் செய்தது சரியா அல்லது சரியாக உங்களை வளர்த்தேனா என்று இப்போது ஆராய்வதில் அர்த்தமில்லை. நீங்கள் இரு வருமே ஊன்றிக் கொண்டாகிவிட்டது. உங்கள் பொறுப்பு கள் உங்களுடையது. என்னைக் கேட்காத ஆலோசனை களை, புத்திமதிகளை நான் வழங்கமாட்டேன். இதைச் சொல்லவே அழைத்தேன். நீங்கள் போகலாம்”.
நெடுநாளைக்குப் பிறகு நான் அப்பாவிடம் கேட்டது நீண்ட பேச்சுதான். சினிமா டயலாக்’ என்று கிசுகிசுத்து அண்ணா தோளையிடித்தான். ஆனால், எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஏதோ துக்கமாயிருந்தது.
இதற்கு இரண்டு வாரங்களுக்குப் பின் அப்பாவைக் காணவில்லை. மிரண்டு போனோம், தானே பறக்கத் தூக்கியெறிந்த பரிகளைப் போல.
மன்னி ஆருடம் பார்த்தாள். “மாமனார் உயிரோடு தானிருக்கிறார். நன்றாயிருக்கிறார். இன்னும் இரண்டே வாரத்தில் தானே வந்து சேர்ந்துவிடுவார்!”
ஆச்சு. நிகில் பிறந்து ஐந்து வருடங்களுக்குப் பின் முகேஷுக்கு இப்போ மூணு நடக்கிறது.
அப்பாவும் இன்னும் வரப்போகிறார்; அப்பா இனிமேல் வரமாட்டார்.
அம்மாவின் மறைவுக்குப் பின்னரே. கண்ணெதிரே எங்களுக்குத் தெரியாமலே அப்பா படிப்படியாக மாறி விட்டார். அம்மா போனது அவருக்கு ஊமை அடி.
இப்படிக் காணாமல் போக, அம்மா போனவுடனேயே ட்டம் போட்டு ஒதுங்கிவிட்டார் என்றே நினைக்கிறேன்.
ஆகவே, சின்ன வயதிலேயே எங்களுக்கு – எனக்கு அம்மா இல்லை.அப்பா இருந்தும் இல்லை.
வண்டி புறப்படும் வரை நான் வெளியே நின்றபடி உள்ளே அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில், இருந்தாற் போல் இருந்து முன்பின் சம்பந்தமில்லாமல் மன்னி:
“அம்பி, எப்போத்தான் கலியாணம் பண்ணிக்கப் போறேள்? வயசாயிண்டு வரல்லியா? உங்களுக்கா இல்லா விட்டாலும் எனக்காவேணும் பண்ணிக்கோங்களேன்”.
“ஏன், உனக்குப் புதுப் புடவை வருமேன்னு பார்க்கறியா – “அண்ணா.
“அம்பி, எனக்கு இப்படித் தனியாகக் குடித்தனம் பண்ணி அலுத்துப்போச்சு. ரெண்டுபேரும் ஒண்ணாயிருப் போம். இன்னும் சத்தே பெரிய வீடா நானே பார்க்கறேன். பிரிய நேர்ந்தால் நீங்கள் அண்ணன் தம்பியால் நேரணுமே அன்று, நாங்கள் ஓரகத்திகள் ஒற்றுமைக்கு நான் உத்தர வாதம்.”
உள்ளூரச் சிரிப்பு வந்தது. இதோ அண்ணா ‘றாபணா’ பண்ணுகிறான்.
“நீ மனப்பால் குடிச்சுண்டேயிரு. அவனுக்குப் பெரி யோர்களால் நிச்சயிக்கப்பட்ட வரன் தேவைப்படவில்லை காதல் பண்ணி முடிந்தால் பரீக்ஷையும் வைத்துத் தேர்ந் தெடுக்கப் போறான். மேனாட்டில் கலியாணத்துக்கு முன் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதற்காகச் சேர்ந்துகூடக் கொஞ்சகாலம் வாழ்கிறார்களாம். என்ன அம்பி, அப்படித் தானே?”
எரிச்சலாய் வருகிறது. என்ன பண்ண முடிகிறது?
“ஆமாம். உன்னைப் போல் அதிர்ஷ்டம் எல்லாருக்கும் வாய்க்குமா” என்றேன்.
மன்னி குறுக்கிட்டு, “அம்பி, அப்படியெல்லாம் சொல்லா தேங்கோ. நான் சொல்றேன். உங்களுக்கு அதிர்ஷ்டம் காத்திண்டிருக்கு. ஊரில் எங்கள் வீட்டுக்கெதிரேயே ஒரு பெண் உங்களுக்காகவே வளர்றா. படிப்பு சுமார்தான். ஆஹா, ஓஹோன்னு செய்யமுடியாது. பெண்ணுக்கு அப்பா, அம்மா இல்லை. அண்ணன் தான் செய்யணும். அவன் உத்யோகம் சுமார்தான். வீட்டுக்காரியம் மாங்குமாங்குனு செய்வாள். என் சமையலை நீங்கள் மெச்சிக்கறேள். அவள் கைப் பக்குவத்துக்கு என்ன சொல்லப்போறேளோ? மருந்து வெச்சமாதிரி பின்னாலேயே கத்துவேள். பார்க்கவும் லக்ஷணம். வெள்ளிக்கிழமை எண்ணெய் தேச்சுண்டால் ஒரு பாடு. கூந்தலைக் கட்டையால் அடிச்சுத்தான் கசக்கணும். அத்தனை அடர்த்தி, அத்தனை நீளம். அவளைப் பண் ணிண்டேள், ஒரு பெண்ணுக்கு வாழ்வு கொடுத்த புண்ணியமும் கட்டிப்பேள்.”
நல்லவேளை…வண்டி நகர ஆரம்பித்துவிட்டது. நான் வண்டியோடு கூடவே கொஞ்சதூரம் ஓடவில்லை. பின்தங்கி விட்டேன்.
இன்று, ஆபீசில் என் ‘ஸீட்’ சேவிங்க்ஸ் பாங்க் லெட் ஜர்கள்.
கொஞ்சநாட்களாக எனக்கு நிரந்தரமான இடமில்லை. இந்தக் கிளைக்குப் புதிதாக மாறி வந்திருக்கிறேன். எங்கெங்கே ஆள் துண்டு விழுகிறதோ அங்கே நான் முட்டுக் கொடுக்க வேண்டும்.
இன்று என் பாக்யம்’ ரோஸலின் மார்வாவுக்குப் பக்கத்து ‘சீட்’
“ஆஹ்ஹா! நீங்களா? ஸோ, என்னை என் ஆபத்துக் களிலிருந்து மீட்க, The hero has come!”
“உங்களுடைய ஆபத்துக்கள் என்னவோ?”
“இந்த லெட்ஜர்ஸ்தான்!”….அந்தக் கட்டைப் புத்தகங் களை கைவீசிக் காட்டிச் சிரித்தாள்.
“இதுங்களைவிட ஆபத்துங்க வேணுமா என்ன?”
ஓ…ரோஸலின் மார்வா வேலையில் படுமோசம். ஆனால், ‘படா’ சாமர்த்தியசாலி. இப்படித்தான் ‘ஜாலக்’ காய்ப் பேசி. தன் வேலையைப் பிறத்தியார் தலையில் போட்டுத் தன் காரியத்தைச் சாதித்துக்கொள்வாள் தகுடு தத்தக்காரி.
ஆனால், நான் மசிவதாயில்லை. ஏற்கெனவே மோச LDIT GUT லெட்ஜர்’களை என் பங்குக்குப் போட்டிருக்கிறது. தவிர இன்று எனக்கு மூட் அவுட்.’
“என்ன பேச்சே காணோம்? The ‘Strong Silent’ man eh?”
“நான் குனிந்து என் வேலையில் முனைந்தேன்.ஆனால் ஓடவில்லை. பக்கங்களுக்கும் என் பார்வைக்கும் குறுக்கே ஏதேதோ நினைவு முகங்கள் மிதந்தன. பேச்சுக்கள் உட் செவியில் ஒலித்தன.
‘ஒரு பெண்ணுக்கு வாழ்வு கொடுத்த புண்ணியத்தைக் கட்டிப்பே’.
“ஹும், நன்றாயிருக்கிறதே மன்னி, உங்கள் பேச்சு. புண்ணியம் சம்பாதிக்கக் கட்டிக்கணுமா? அப்படித்தான் கலியாணங்களெல்லாம் நடக்கின்றனவா?”
“எண்ணெய் தேய்ச்சுண்டால் ஒரு பாடு கூந்தலைக் கட்டையால் அடிச்சுத்தான் கசக்கணும்”.
அம்பி சார், முளிச்சுக்கோங்க!”-யாரோ தோளைத் தட்டினார் (யார், அவள்தான்).
நிமிர்ந்தேன். காதளவு முரட்டு மீசை, மேட்டு விழிகள். ராணுவச் சீருடையில் புன்னகை புரிந்தார். உரமான, ஒழுக்கமான பல் வரிசை.
“Day-Dreaming, young man?”
“Quite natural. You know, He is a bachelor.”
(எனக்காகப் பரிந்து பேசுகிறாளாம்.)
கஸ்டமர் வாய்விட்டுச் சிரித்தார். “understandable”
அவர் போன பின்னர்:
‘என்ன, முறைச்சுப் பார்க்கறீங்க?’
“….”
“பேசமாட்டீங்க… ஆனால், பார்ப்பீங்க இல்லையா?” புன்னகை புரிந்தாள்.
அவள் உதடுகளின்மேல் என் பார்வை உரைந்தது. கீழுதடு சற்று தடிப்பு. ஆனாலும் சித்திரம் தீட்டினாற் போல் வாய். செக்கச் செவேல் பூ.
(இதுவாயிருக்குமா Absurd, Idiot!)
அவள் கண்கள் கவலை கொண்டன. “என்ன லிப்ஸ்டிக் அளிஞ்சுட்டுதா?” பையை எடுத்து அதில் பதித்த கண்ணாடியில் முகத்தைப் பார்த்துக்கொண்டாள்.
“நிமிசத்துலே பயமுறுத்திட்டீங்களே! You naughty Man!”
இனி இப்படியே பொழுதைப் போக்கிவிடுவாள். தெரிந்துவிட்டது.
தீபாவளி ஸ்வீட்ஸ் பெட்டிகள் இரண்டு மூன்று வந்தன.
“அம்பி ஒண்டிக்கட்டை… இத்தினியும் வெச்சுக்கிட்டு என்ன செய்யப் போறீங்க?”
“You are welcome” அவளிடம் கொடுத்தேன்.
“அதுக்காக ஒண்ணுகூட வெச்சுக்கலியா? ஒண்ணு வெச்சுக்குங்க.”
“எனக்குத் தேவையில்லை. ஆமா, நீங்க என்ன செய்யப் போறீங்க? உங்கள் பங்கு வேறே இருக்கு?”
“வேண்டியவங்களுக்குக் கொடுப்பேன். நல்ல பேர் கட்டிப்பேன். வாங்கிக்க மனுசாளாயில்லே?” சட்டென முகம் சிடுத்துப் பெட்டிகளை என் பக்கம் தள்ளினாள். “இல்லே, வித்துடுவேன்.”
சமாதானம் பண்ணி பெட்டிகளை அவளிடம் திணித்தேன்.
சாதாரணமாக ஒரு மனோதத்துவக் கோட்பாடு: கனவு என்பதை அடி ப்ரக்ஞையில் புதைந்து கிடக்கும் அந்தரங்க ஆசாபங்கங்கள், ஏக்கங்கள் தங்களை நிறைவேற்றிக் கொள்ளும் வடிகால் என்று. அப்படியானால் கனவில் (யார்?) தந்த முத்தம் எதன் அடையாளம்?
இத்தனைபேர் என்னைச் சுற்றிலும் இருக்கிறார்கள். கஸ்டமர்கள் நெரிகிறார்கள். வங்கிக்கு வெளியே ரோடில் வாகனங்கள் பறக்கின்றன. ஆனால், நெஞ்சில் வெறிச் சோடி நிற்கிறேன்.
என்னைத் தனியென்று எந்த நியாயத்தில் சொல்லிக் கொள்ள முடியும், சமுதாயத்தின் நடுவிலேயே இருந்து கொண்டு? என் இஷ்டப்படி இருக்கத்தானே ஹாஸ்டலுக்கும் வந்தேன்?
ஆனால் அண்ணா, மன்னி, குழந்தைகளைப் பார்க்கும் போது குடும்பத்தின் அடைக்கலத்துக்குத் திரும்பிவிடலாமா என் று மனம் அடித்துக்கொள்கிறது. எட்டு வருடங்களாகத் தனி அறை, ஓட்டல் சாப்பாடு, வயிற்றுப் புண்ணுக்கு மாத்திரை…
மன்னி, தனிக்குடித்தனம் அலுத்துவிட்டதென்கிறாள், குடும்பம் பெருகிய பின்னும்…
தனிமை – அப்பா, உங்களுக்கு அலுக்கவில்லையா? அலுத்திருந்தால் திரும்பி வந்திருப்பீர்களே!
வெளியூரிலிருந்து வந்தவர்கள் பார்த்தமாதிரி இன்னும் பேசுகிறார்கள்.
“உன் தகப்பனார் ரிஷிகேசில் இருக்கிறார்.முக்கியமாக உன்னை ரொம்ப விசாரிச்சார்.”
அம்பி. என்னன்னு சொல்வேன், மதுரை கோவில் வாசலில் பரதேசிக் கோலத்தில் பிச்சையெடுத்துண்டிருக் கார். என்னைப் பார்த்துத் தலையைத் திருப்பிக்கொண் டார். எனக்கும் அப்படித்தானிருந்தது. இப்படியிருக்க அவருக்கென்ன தலையெழுத்தா? ஏன் அப்படியிருக்கார்?’
சொல்பவர்க்கென்ன?
“இமயமலைச்சாரலில் ஒரு பனிக் குகையில், அவதூத ராகப் பார்த்தேன்.”
முன்னால் இந்த ஆசாமி, இமயமலைச் சாரலில் பனிக் குகைக்குப் போக என்ன நிமித்தம்?
யார் கேட்பது?
ஆனால் அப்பா, நீங்கள் வரமாட்டீர்கள். ஏனெனில் நீங்கள் சுயநலக்காரர்.
நேரம் நகர்ந்தது. குறுகிய சீசாவுள் மணலின் மெது மெதுச் சரிவு.
டிபன் ரூமில், என் டிபன் டப்பாவைத் திறந்ததுமே புளிப்பு வாடை என்னையே பின்வாங்கச் செய்தது.
“என்ன ப்ரதர், தயிர்சாதமா… கள்ளுலே பிசைஞ்சு கொடுத்தாங்களா?”
அவசரமாய் டப்பியை மூடினேன்.
“Leave him alone!” இவளுக்கு என்மேல் ஏன் இவ்வளவு பரிவு தானம்?
“ஹாஸ்டலில் என்ன கட்டிக்கொடுத்தாங்களோ அதைத்தானே கொண்டார முடியும்! எங்கே எந்திருச் சிட்டீங்க? உக்காருங்க. எங்கேயும் போவேணாம். இன்னிக்கு நீங்க நம்ம கெஸ்ட். நான் டிபன் காரியர்லே கொணந்திருக்கேன். காரியர் சாப்பாடு எப்பவும் மிஞ்ச மிஞ்சத்தான் – ஏன் தயங்கறீங்க… இன்னிக்கு விஜ்தான். முள்ளங்கி சாம்ப்ரா உருளைக்கிழங்கு புட்டு. ப்ளீஸ், எனக்காக… சத்தியமா நீங்க நினைக்கறது இல்லே – எங்க ளுக்கும் பாவ புண்ணியம், வெள்ளிக்கிழமை உண்டு.”
பேசிக்கொண்டே இலையைப் பாதியாகக் கிழித்துப்பரி மாறிவிட்டாள்.
சாதத்தின்மேல், அவள் விட்ட சாம்பார், சாதத்துள் பரவலாக இறங்கியதைப் பார்க்க நன்றாய்த்தானிருந்தது. ஒரு கவளம் போட்டுக்கொண்டேன். உம்ம் – Not bad, not at all bad.
“எப்படி இருக்குது… பார்ப்பார வீட்டுச் சமையலாட்டம் இருக்கா? ரெண்டு தலைமுறைக்கு முன்னாலே கன்வர்ட் ஆவறதுக்கு முன்னாலே நாங்க அய்யமாரு”.
அப்பவே நாக்கில் ‘சுருக்.
பிடுங்கி எடுத்தேன்… வெள்ளை வெளேரென்று பொடி முள். அதன் பிரதிபலிப்பாய் எண்ணம் உள் ஊறினதும் உடனே எழுந்த குமட்டலைத் தாங்கமுடியாமல் பாத் ரூமுக்கு ஓடினேன். எல்லோரும் என்னைத் திரும்பிப் பார்த் தனர். அவள் சிரிப்பு துரத்திற்று. திரும்பிப் பார்த்தேன். மேல் வரிசையில் இரண்டு தெற்றிப் பற்கள் தெரிந்தன
இன்று இவள் என்னைச் சாப்பிடுவதாகத் தீர்மானம் பண்ணிவிட்டாள்.
“What a funny man you are!”
மௌனமாய்ச் சற்று நேரம் நடந்தோம். அவள் வீடு என் வழியில் இல்லை. ஆனால், ‘ஷாப்பிங்’ செய்யணுமாம். ‘நாளைக்கு தீபாவளியில்லே?”
“உங்களுக்கும் தீபாவளிக்கும் என்ன சம்பந்தம் மிஸ் மார்வா?”
“நான் மிஸ் இல்லை.”
“சரி, மிஸஸ் மார்வா… ”
“நான் மிஸஸ்ஸுமில்லை.”
இதென்ன புதிர்? என்னத்தை விளக்கம் கேட்பது?
பெருமூச்செறிந்தாள்.
“தனிமை பயங்கரம் மிஸ்டர் அம்பி.”
என்ன சொல்வது தெரியவில்லை.
“மிஸ்டர் மார்வா சிங்கப்பூர் போய் வருசம் பத்தாச்சு.”
‘ஏன்?’
நகைத்தாள். “சம்பாரிக்கத்தான். உங்களவங்ககூடத் தான் போவல்லியா… துபாய், குவாயிட், மஸ்கட்”.
“போறாங்க. மூணு வருடங்களுக்கு ஒருமுறை தாய், தகப்பன், பெண்டாட்டி பிள்ளைங்களைப் பார்க்க வராங்க.”
“இவர் வரல்லே. கடிதாசுகூடக் கிடையாது.”
“நான் இப்படிக் கேக்கறேன்னு நினைக்காதீங்க மிஸஸ் மார்வா… ஆள் உயிரோடு இருக்காரா இல்லையா?”
“எல்லாம் கல்லுகுண்டாட்டம் இருக்கான்”. வார்த்தைகளைத் துப்பினாள்.
நான் மேலே கேட்க விரும்பவில்லை. மேலே கேட்கத் தேவையில்லை.
“அம்பீ. வீட்டுக்கு வாங்களேன். காபி சாப்பிட்டுப் போலாம். நான் காபி நல்லா செய்வேன், பிராமின்ஸ் மாதிரியே.”
“சாம்பார் சேஞ்ச மாதிரியா? Sorry, என் பஸ் வந்துது. வரேன்.”
எனக்கு பஸ் இல்லை. நான் நடைதான். ஆனால், ஏறி விட்டேன். எனக்குப் பயமாயிருந்தது. இவள் என்னைச் சாப்பிடுவதாகத் தீர்மானித்துவிட்டாள்.
அடுத்த நிறுத்தத்தில் இறங்கி நடந்தேன். கால் போன வழி. இந்தப்பக்கம் வந்ததாக ஞாபகம் இல்லை. இடம் புதிதாக இருந்தது. ஒரு சந்தில் திரும்பியதும்,இடமே வெடுக்கெனத் தனியாகத் துண்டிக்கப்பட்டாற்போல் சந்தடி யும் இரைச்சலும் சட்டென அடங்கி,ஏன் நிசப்தமே குடி கொண்ட ஒரு குறுஞ்சாலை பிறந்து வளர்ந்தது. மந்திரக் கோல் மஹிமை போலும், புயல் நடுவே அமைதி. சாலை நடுவே ஒழுங்கான இடைவெளிகளில் மரங்கள். இரு பக்கங் களிலும் மதில்களின் பின்னால் தோட்டங்கள், தோப்புக்கள் நடுவே தெரிந்தும் தெரியாததுமாய்ச் சின்னதும் பெரிது மாய்ப் பங்களாக்கள், காட்டேஜ்கள் பதுங்கின. போஷ் ஏரியா போலும், இல்லை, பூராவே தனியார் சொத்தோ? வரலாமோ கூடாதோ? ஏதோ சைகையால்தான் இங்கு இழுக்கப்பட்டிருக்கிறேன். காலைக் கனவு தொடர்கிறதா? நப்பாசை.
அட, கல் பெஞ்ச் வேறேயா? அமர்கிறேன். அந்திக் காற்று சாமரம் ஆடி நெற்றி முத்தை ஒற்றுகிறது.
முத்தத்தின் மூச்சு.
என்ன சங்கடம்… இந்த முத்தம் நெஞ்சு முள்ளில் மாட் டிக்கொண்டு மாயமான் காட்டுகிறது; என்னைத் தன் பின் விளிக்கிறது. இங்கேதான் எங்கோ மாவும் தென்னையும் சூழ்ந்து இந்த சிலந்திக் கூட்டினுள் சிறையிருக்கிறாள்.
‘என் ராஜகுமாரா! வா! வா!’
No, no. இது இந்தச் சமயத்தின் சொக்குப்பொடி. தெரிகிறது.
ஆனால், தொண்டையை அடைக்கிறது.
அந்தரத்தில் பூமி தன் அச்சில் யுகாந்த காலமாய்ச் சுழலும் தனிமையை உணர்ந்த திரண்ட சோகம். அதன் அத்தனை ஜீவராசிகளுக்கும் பங்காகும்போது நேரும் வேதனையின் ரூபிணிதான் என் இளவரசி. கனவில் என் உதட்டில் பதிந்த முத்தம் அவள் அனுப்பிய சேதி. சோதியின் மர்மம் என் இதய நரம்பைச் சுண்டும் சோகஸுகாநாதத்தின் விண்விண்ணில் தத்தளிக்கிறேன்.
பெஞ்சின்மேல் தாழ்ந்த பூவரச இலைகளினூடே ஒரு நக்ஷத்ரம் என்னைச் சிந்திக்கிறது.
இருகைகளையும் அதை நோக்கி நீட்டுகிறேன். நீ என் எண்ணத்தின் ப்ரதிஷ்டாவந்தி,வா! என்முன் பிரத்யக்ஷமாகு!”
இலைகள் சலசலத்தன. அந்த சலனத்தின் நக்ஷத்ரத் துள் அவள் கலைந்தாள்.
ஒற்றைப் பக்ஷி வானில் தன் ஜோடியைத் தேடிக் கொண்டே எட்ட மறைந்தது.
ஊஹும். அந்தத் தருணம் என் தோளைத் தொட்டு விட்டுப் போய்விட்டது. இனி வராது.
மறுபடியும் வெட்டோ வெறிச்சுத்தான். அங்கு, இங்கு, எங்கும் இனி அதுதான்.
எழுந்து நடக்கிறேன். கால் வந்த வழி.
ஒரு திருப்பத்தில் நெடுஞ்சாலையின் போக்குவரத்து இரைச்சல், ரொட்டி அடுப்பு அனல்போல் முகத்தில் மோதுகிறது.
கடைகண்ணிகள் வாஹனங்கள், ஜன நடமாட்டம் இரவைப் பகலாக்கிவிட்டது.
நாளைக்குத் தீபாவளி.
ஜவுளிக் கடைகளில் இன்னும் கூட்டம் வழிகின்றது.
பக்ஷணக் கடைகளில் கூட்டம் நெரிகின்றது.
பட்டாசுக் கடைகளில் – சொல்லவே வேண்டாம்.
எங்கும் தீபாவளி! பேரம் அதன் கடைசி நேரத்தின் சுறு சுறுப்பில் பிதுங்குகிறது.
வீட்டு வாசல்களில் விஷ்ணு சக்கரங்கள், அதிர்வெடிகள், ஊசிப்பட்டாசு சரங்கள், அவுட் வாணங்கள்: தெரு வெல்லாம் புகை, கந்தக நாற்றம், கலியாண கோலம்.
ஆனால், நான் மட்டும் ‘வெறிச்’
நடக்கிறேன்.
நட, நட, நட
பூமியின் விளிம்பு வரை தொடுவானம் எட்டும்வரை
காலம் முடியும்வரை
நடந்து முடியும்வரை
நடந்து கொண்டேயிரு.
No use. விடிமோக்ஷமே கிடையாது.
இன்று வருவாளா?
முத்தம் தருவாளா?
தன்னைக் காண்பித்துக்கொள்வாளா?
எனக்குப் பைத்தியம் பிடித்துக்கொண்டிருக்கிறதா?
இருப்புக் கொள்ளவில்லை.
அறைக்கு வெளியே மொட்டை மாடிக்கு வருகிறேன்.
வானம் இருண்டிருக்கிறது.
அங்குமிங்குமாய்த் தெரியும் ஒன்றிரண்டு நக்ஷத்ரங்களும் மூழ்கிக்கொண்டிருக்கின்றன.
“என்னைக் காப்பாற்று!”
‘அம்மா! இல்லை.’
இரண்டு சொட்டுக்கள் என் முகத்தில் விழுகின்றன. என் கைப்பிடிக்க என்று வருவான் எனக் காத்திருக்கும் கன்னியின் கண்ணீர்த் துளி.
‘பளிச்’ சென நெஞ்சில் வெளிச்சம் ஏற்றிக்கொண்டது.
உள்ளே போய் ஒரு பேப்பரை எடுத்துக் கடிதம் எழுதினேன்.
வரிகள் வளர வளர கனம் லேசாயிற்று.
“மன்னிக்கு.
நான் சம்மதம். எனக்காகக் காத்திருக்க வேண்டாம். நீங்கள் என்ன சொன்னாலும், எது செய்தாலும் சரி, ஆனால் சுருக்க சுருக்க; வழி இப்பத்தான் தெரிந்தது. தெரிந்துகொண்டே இருக்கிறது.
– இந்தியா டுடே
– என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு… (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1992, வானதி பதிப்பகம், சென்னை.
![]() |
லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி…மேலும் படிக்க... |