ஒரு கோடை விடுமுறை

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 12, 2026
பார்வையிட்டோர்: 2,636 

(1981ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7

அத்தியாயம் – 5

எல்லோரும் வாய் பேசாது இருந்தார்கள். மகாதேவன் நல்ல வெறியில் கத்திக்கொண்டிருந்தான். கௌரி மூலையில் நின்று கொண்டிருந்தாள். கணவனுடன் கதைத்து எந்தப் பிரயோசனமும் இல்லை என்னிடம் எதையும் சொல்லாதீர்கள் என்பது போல் இருந்தது அவள் தோற்றம். சபேசனும் பானுமதியும் மேல் மாடியில்.

பரமநாதனும் மரியனும் ஆளுக்கொரு பக்கம் உட்கார்ந்திருந்தார்கள்.

“கோவிய மாப்பிள்ளைக்குப் பெண்கொடுக்கவோ இவ்வளவு பொய் சொல்லிக் கூட்டிக் கொண்டுவந்தீர் பானுமதியை?”‘ நேரடியாகப் பரமநாதனிடம் கேட்டான். பரமநாதன் பொங்கும் ஆத்திரத்தைக் காட்டாமல் பல்லைக் கடித்துக் கொண்டிருந்தான்.

இப்படிக் கேவலமாக நடப்பான் என்று தெரிந்திருந்தால் உள்ளுக்கு விட்டிருக்க மாட்டேன்.

பானுமதிக்கும் சபேசனுக்கும் பதிவுத் திருமணம் நடத்த இருப்பதை யார் சொல்லியிருப்பார்கள் என்று தெரியும். பானுமதி கௌரிக்குச் சொல்லியிருப்பாள்.

கௌரிக்குத் தெரிந்திருக்காது கணவன் இப்படித் துள் ளுவான் என்று. ஏன் லண்டனில் இருந்து கொண்டு இப்படி ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டை பிடிக்கவேண்டும் பனுமதியின் ‘கல்யாணத்துக்கு” வரச் சொல்லியிருப்பாள்.

கெளரியின் நிலை பார்க்கப் பாவமாக இருந்தது. ஒரு சொட்டு உரிமையும் இல்லாத சேவகன் போல் மூலையில் நின்று தன் கணவனின் வெறி மொழிகளைக் கேட்டுக் கொண்டிருந்தாள். எவ்வளவு விலை கொடுத்து வாங்கியவன் இப்படியா என் தங்கையை நடத்துவது?

பரமநாதனுக்கு, அடுத்த கணம் என்ன நடந்தது என்று தெரியவில்லை; மகாதேவன் கன்னங்கள் பழுத்தன. கௌரி அலறத் தொடங்கினாள் தமையன் புருஷனை அடிப்பதைப் பார்த்து. மரியன் பாய்ந்தடித்துக் கொண்டு கணவனை விலக்கினாள். குழந்தை மீரா மேலே ஓடிப்போனாள் பயத்தில். சபேசன் பானுமதி எல்லோரும் ஓடிவந்தனர்.

மகாதேவன் உடைந்த மூக்கால் ஓடும் இரத்தத்தைத் துடைத்தபடி பயங்கரமாய் பரமநாதனைப் பார்த்தான்.

“நீர் அங்கே போய் அவன் தமக்கையுடன் ஆடியது போதாது என்று இங்கே வேற சண்டித்தனமோ?”

முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் சொன்னபடியால் மரியனுக்கு விளங்கியது மகாதேவன் என்ன சொல்கிறான் என்று.

பம்பலப்பிட்டிக் கடற்கரையில் கருமிருட்டில் யாரும் காணமாட்டார்கள் என்று நினைத்து அவளுடன் கதைக்கப் போனதை எத்தனை பேர் கண்டிருப்பார்கள்? எத்தனை கேவலமாக மதிப்பிடுகிறார்கள்?

மகாதேவனின் குற்றச்சாட்டு பரமநாதளை மிருகமாக்க முதல் மரியன் சொன்னாள் “கெட் அவுட்”.

மகாதேவன் உறுமினான். துப்பாக்கி கையில் இருந்தால் எல்லோரையும் சுட்டுத் தள்ளியிருப்பான் என்று தெரிந்தது.

வெளியில் விடாத மழை. மின்னலும் இடியும் வேறு. இல்லை என்றால் இவர்கள் போட்ட சத்தத்தில் குத்துவேன், கொல்லுவேன் என்ற கூக்குரலுக்கு யாரும் பொலிசுக்குப் போன் பண்ணியிருப்பார்கள். மகாதேவன் மழையில் நனைந்து, சேற்றில் மிதித்து, பூமரங்களை ஒடித்துத் தள்ளா டித் தடுமாறிப் போய்க் கொண்டிருந்தான்.

“ஒரு தங்கைக்குக் கோவிய மாப்பிள்ளை,மற்றத் தங்கச்சிக்கு ஒரு பள்ளனைப் பறையனைப்பார்.’ கார் பத்தாயிரம் கோணத்தில் திரும்பிப் போனது.

கௌரி கணவனைப் பின் தொடராமல் பயத்துடன் ஒட்டிப் போய் இருந்தாள்.

மரியனுக்கு இந்த நாடகம் புதினமாக இருந்தது.

கணவனிடம் கேட்கும் நிலையில் இல்லை. கணவன் அவளுக்குச் சொல்லும் நிலையிலும் இல்லை.

பதிவுத் திருமணத்துக்குப் போக பானுமதியும் சபேசனும் வெளிக்கிட்டிருந்தார்கள். கௌரியைக் கேட்டான் விருப்பமென்றால் வரச்சொல்லி. கண்களைத் துடைத்துக் கொண்டு தங்கையுடன் போய்க் காரில் ஏறினாள்.

எல்லோரும் காரில் ஏறிய பின் மரியன் வருவாளா என்று பார்த்தான். வரும்பாடாயில்லை. மீராவை அனுப்பினான் தாயை கூட்டிக் கொண்டு வரச் சொல்லி.

“அம்மாவுக்குத் தலையிடியாம்.” குழந்தை சொல்லி விட்டு ‘ஆன்று’களின் மடியில் ஏறிக் கொண்டது.

பானுமதிக்குக் கண்களில் நீர் வழிந்தது. தாய்க்குச் சமமாய் இருந்து கல்யாணம் நடத்த வேண்டிய மைத்துனி நடந்து கொள்ளும் விதம் மனதை நோகப் பண்ணியது.

கார்த்திகா அனுப்பியிருந்த சேலையை அணிந்திருந்தாள். கண்ணீர் முத்துக்கள் அதில் தோய்ந்தன.

கொஞ்ச நேரம் இருந்து பார்த்துவிட்டு பெருமூச்சுடன் காரை ஸ்ரார்ட் பண்ணினான்.

கொஞ்சம் நஞ்சம் மறைத்து வைத்த ரகசியமும் வெளியாகி விட்டது. இனி என்ன மறைக்க இருக்கிறது. அவர்கள் குழந்தைகள் இல்லை எதையும் தெரியாமல் இருக்கிறார்கள் என்று கணிப்பிட.

றெஜிஸ்ரார்ஸ் ஒவ்வீஸ் போகும்வரை ஒருவரும் அதிகம் கதைக்கவில்லை. கௌரியும் பரமநாதனும் சாட்சிகளாகக் கையெழுத்து வைக்க சபேசனும் பானுமதியும் கல்யாணப் பதிவு செய்து கொண்டார்கள். சகோதரிகள் இருவரும் அழுது கொண்டார்கள். இருவருக்கும் வேறு வேறு விதமான யோசனைகள் மனதில் ஓடியிருக்கலாம்.

ஆறுமாதப் பிள்னைத்தாச்சியாக மரியனைத் தான் கல்யாணப் பதிவு செய்தது ஞாபகம் வந்தது. மீராவை அணைத்தான் பாசத்துடன்.

மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது.

திருமணப் பதிவு முடிய சென்ரல் லண்டனுக்குக் கூட டிக் கொண்டு போனான் தம்பதிகளை விருந்து கொடுக்க.

விலையுயர்ந்த கிரேக்க ரெஸ்ரோரண்ட்”புது மணப்” பெண்ணின் நாணம் எதுவுமின்றி பானுமதி இருந்ததைப் பகிடி பண்ணினான் தமயன்.

பெரியக்காவுக்கு எழுதச் சொன்னாள் கௌரி, கல்யாணம் நடந்த விடயம் பற்றி. “ஏன் நீயும் உனது கணவருடன் சேர்ந்து வசைபாடியிருக்கலாமே?” கௌரியைச் சீண்டினான் சபேசன். “லண்டனில் எனக்கென்று இவள் ஒருத்தி தானே இருக்கப்போகிறாள். அவளின் கல்யாணத்துக்கு நான் வராவிட்டால் அவள் கதைக்கவும் மாட்டாளே?” கௌரி கல்யாணம் முடித்துப் போகும் தம்பதிகள் முன்னால் மூக்கை நீட்டிக் கொண்டிருக்கத் தயாரில்லை என்பது தெரிந்தது சம்பாஷணையில்.

தனது கல்யாணப் பரிசாக அவர்களின் ‘தேனிலவு’ ஹொட்டேலைத் தன் செலவில் ‘புக்’ பண்ணியிருந்தான் பரமநாதன். சாப்பாடு முடிய அது பற்றிச் சொன்னான்.

பானுமதியிடம் அது பற்றி எப்போதோ ரகசியமாய்ச் சொல்லிய படியால் ஹொட்டேலில் தங்கத் தேவையான உடுப்புக்களும் சாமானும் எடுத்துக் கார் டிக்கியில் வைத்திருந்தாள்.

சபேசனுக்குத் தன் எதிர்பாராத திகைப்பை எப்படிக் காட்டிக் கொள்வது என்று தெரியவில்லை.

இன்றைக்கு இந்த நாள் அடிபிடியில் தொடங்கி எதிர்பாராத விருந்துடன் தொடர்ந்து திருமண அன்பளிப்பாகத் ‘தேனிலவு’ கழிக்க ஹொட்டேலாம்!

“மூன்று நாளைக்கு புக் பண்ணியிருக்கிறேன்” என்றான் பரமநாதன். தெகிவளைக் கடற்கரையில் சண்டை பிடித்த போது இப்படி எல்லாம் நடப்பான் என்று எதிர் பார்த்தானா? தங்கை பானுமதிக்காகவா அல்லது…

பரமநாதனை அவன் ஒன்றும் கேட்கவில்லை.

பானுமதியையும் சபேசனையும் ‘கென்ட்’ பக்கத்தில் உள்ள ஹொட்டேல் ஒன்றில் கொண்டுவந்து விட்டுவிட்டுத் திரும்பும் போது இரவு பத்து மணிக்கு மேல் ஆகி விட்டது. கௌரியைக் கூட்டிக் கொண்டு விட விம்பிள்டனுக்குப் போய்க் கொண்டிருந்தான்.

“உனக்கு வீட்டுக்குப் போகப் பயமென்றால் என்னுடன் வரலாம் கௌரி”. தமயன் இப்படிச் சொன்னது அவளுக்குப் பிடிக்கவில்லை.

“அண்ணா உலகம் எப்படித்தான் மாறிவிட்டாலும் இலங்கையில் எங்களை இப்படித்தான் வாழவேண்டும் என்று பழக்கி வைத்திருக்கிறார்கள். எந்தத் துன்பத்தையும் தாங்கப் பழக்கி வைத்திருக்கிறார்கள். கணவர் ஒரு தரம் பேசி விட்டால் வீட்டைவிட்டு ஓடுவது அழகல்ல. பிரச்சினைகளைக் கண்டு பின்வாங்கிவிடப் போவதில்லை. அவர் கோபம் எத் தனை நாளுக்கு நிற்கும்?” கௌரி ஒரு தமிழ்ப் பெண் என்பதை ஞாபகமூட்டினாள்.

பரமநாதனுக்குத் தெரியும் மரியனைக் குத்திக் காட்டிப் பேசுகிறாள் என்று. மரியன் தன்னைத் தன் தங்கச்சிகளுக்கு முன்னால் அவமானம் செய்தது தாங்கமுடியாத ஆத்திரத்தைத் தந்தது.

விம்பிள்டனுக்குப் போகும்போது நடுச்சாமம் இருக்கும். வீடு இருண்டு கிடந்தது. பரமநாதன் மணியடித்தான். கதவு திறக்கவில்லை. கௌரி கைப்பையைத் தடவி திறப்பை எடுத்தாள். இருவரும் தட்டுத்தடுமாறி மேலே போய்க் கதவைத் திறக்க மகாதேவன் வெறியில் படுத்துக்கிடப்பது தெரிந்தது.

கெளரி பதறிப் போய் மகாதேவனின் முகத்தைத் தண்ணீரால் கழுவினாள். அவன் அரைகுறையாய் விழித்து பரமநாதனைக் கண்டதும் பிதற்றத் தொடங்கினான். கௌரிக்கும் கோபம் வந்தது. “இன்னும் இந்த மனிதன் வெறியில் சுத்துவதற்கு காது கொடுக்கிறீர்களே” என்று கடிந்து கொண்டாள். “இவன் உனது உடம்பில் கை வைத்தால்…” பரமநாதன் வெடித்தான்.

“அண்ணா உங்களுக்கும் அவருக்குமிடையில் ஏதும் தகராறு இருந்தால் தனிப்பட்ட விதத்தில் தீர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் தயவு செய்து எங்கள் குடும்ப விடயத்தில் தலையிடாதீர்கள்.”

பரமநாதனுக்கு ஆச்சரியமில்லை கௌரி சொன்னது.

எல்லாம் உங்கள் தலைவிதி என்றுதானே யோசிக்கப் பழக்கி இருக்கிறார்கள்.

பெருமூச்சுடன் மாடிப் படியால் இறங்கி வரும்போது மகாதேவனின் கூப்பாடு கேட்டது.

“எந்த நாயும் என்ர வீட்டுக்கு வரத்தேவையில்லை இறப்புக்கும் வேண்டாம் பிறப்புக்கும் வேண்டாம்.”

ஒரு நிமிட நேரம் தன் அருமை மைத்துனரின் பொன் மொழிகளைக் கேட்டு விட்டுக் கதவைச் சாத்திவிட்டுப் போனான்.

காரில் குழந்தை மீரா நல்ல நித்திரை. இப்போதே நடுச்சாமத்துக்கு மேல், வீட்டில் மரியன் காத்துக் கொண்டிருப்பாள் என்று நினைத்ததும், “நன்றாகக் காத்திருக்கட் டும்” என்று வாய்விட்டுக் சொல்லிக் கொண்டான்.

அவளைச் சொல்லி என்ன? மேலை நாட்டு நாகரீகமே அது. எப்பொழுது ஒரு சாட்டு வருகிறது இன்னொரு கல்யாணத்துக்கு ஆயத்தம் செய்ய என்றிருக்கிறார்கள். அந்தப் பண்பாட்டில் வளர்ந்தவளை வேறு எப்படி எதிர்பார்க்க முடியும். இவ்வளவு காலமும் நிறம் வேறுபட்டது தவிர பெரும்பாலும் ஒரேவிதமான கொள்கைகள், பழக்க வழக்கங்கள் என்பன இருவருக்கும் இருந்தன.

அவன் ஒரு நாளும் கோபித்தும் கொள்ளவில்லை வெள்ளைக்காரச் சாப்பாட்டைப் பற்றி, அவள் ஓருநாளும் முணு முணுத்ததில்லை இலங்கைச் சாப்பாட்டைப் பற்றி.

சாப்பாடு மட்டுமா? இசை, நடனம், டெலிவிஷன் நிகழ்ச்சி என்பன கூட இருவரும் நன்றாய் இருந்து ரசித்த காலம் எங்கே போய்விட்டது?

இப்போது அவன் கீழ் மாடியில் இருந்தால் அவள் மேல் மாடியில் இருக்கிறாள், அவன் எங்கேயும் போவோமா என்று கேட்டால் எப்போதும் ஒரு நொண்டிச் சாட்டிருக்கிறது சொல்லித் தப்ப. அவ்வளவு தூரம் கசந்து விட்டேனா அவளுக்கு?

ஏனோ தானோ என்று குடும்பம் நடத்தத்தான் வேண்டுமா? மீரா எத்தனைகாலம் குழந்தையாய் இருக்கப் போகிறாள்? ஒருகாலத்தில் அவளுக்குத் தெரியத்தான் போகிறது. அப்போது என்ன நினைப்பாள் எங்கள் செயற்கைத் திருமணத்தைப் பற்றி?

தனக்காகத் தகப்பன் தாயைக் கல்யாணம் செய்தார் என்று தெரியவந்தால் என்னில் பரிதாபப் படுவாளா?

அவன் சிந்தனைகள் அவனுக்கு எரிச்சலையுண்டாக்கின. யார் பரிவும் எனக்கு வேண்டாம். எனக்கு ஏன் யாரும் பரிதாபம் காட்ட வேண்டும்? உலகத்தில் எத்தனையோ பேர் பரிதாபமான சீவியம் நடத்துகிறார்கள். எனக்கப்படி என்ன நடந்து விட்டது?

வாழ்க்கையில் கார்த்திகா, கால் ஊனமான சத்தியமூர்த்தி, மனம் பேதலித்துப் போய் இருக்கும் சத்தியமூர்த்தியின் தாய், இவர்கள் எல்லாம் பரிதாபத்துக்குரியவர்கள் இல்லை என்றால் யார் பரிதாபத்துக்குரியவர்கள்?

என் போன்றவர்களுக்கு வாழ்க்கையில் எல்லாம் இருந்தும் ஏதோ இல்லை என்று நினைப்பதில் சந்தோசம் அடைகிறோம். அப்படி நினைப்பதில் ஒரு இனம் தெரியாத திருப்தியா? இல்லாமையின் முழு அர்த்தமும் தெரியாதவாகளா நாங்கள்?

லண்டன் தூங்கிப் போய் விட்டது கிட்டத் தட்ட. வச்ஸ்ஹோல் பாலத்தால் வரும்போது எலிஸபெத்தின் ஞாபகம் வந்தது. ப்ளீட் ஸ்ரீட் ஒரு நேரமும் தூங்காது, தன் அறையில் ஏதும் செய்தி டைப் பண்ணிக் கொண்டிருப்பாள்.

கதவைத் தட்டலாமா?

நேரம் அவன் யோசனைக்குத் தடைப்பட்டது. அன்றய நாள் முழுக்க ஏற்பட்ட களைப்பில் தலைசுற்றிக் கொண்டு வந்தது.

லண்டன் தெருக்கள் சில குடிகாரர்களையும், ஸ்கிள் ஹெட்சுகளையும், தவிர யாருமில்லாமல் வெளிச்சென்று கிடந்தது. இலையுதிர் காலம் என்ற படியால் மரங்கள் திரௌபதைகளாய், சேலையற்று நின்றன.

அவனுக்கு இலையுதிர் காலம் பிடிக்காது. உலகமெல்லாம் சோக மயமாக இருப்பது போல் தோன்றும்.தெருக்கள் இலையும் குழையுமாய், கட்டிடங்கள் இருட்டடித்து, வானம் எந்த நேரமும் கறுத்து இலையுதிர் காலம் அவனுக்குச் சோகமாய்த்தான் தோன்றும்.

குழந்தை மீரா ஒரு துக்கமுமின்றி பின்னால் நித்திரை.

மத்திய லண்டனின் நெருக்கங்கள் தாண்டி கார் வுட்கிறீன் பக்கம் போய்க் கொண்டிருந்தது.

வீடு இருளாய்த் தெரிந்தது. மரியன் எப்போதும் முன் ஹோல் லைட்டைப் போட்டு வைப்பது வழக்கம், ஆனால் இன்று உலகமே இருண்டு கிடப்பது போல் இருந்தது.

குழந்தையைத் தூக்கிக் கொண்டு இருட்டில் தடவிக் கொண்டு போய்க் கதவைத் திறந்து முன்ஹோல் கதவைத் திறக்க வீடு வெறுமையாய்க் கிடப்பது பளிச்சென்று தெரிந்தது.

ஏதோ பொருட்கள் இல்லாதது போன்ற உணர்ச்சி. மீராவை செற்றியில் கிடத்தி விட்டு விழுந்தடித்துக் கொண்டு மேலே போனான்.

மத்தியானம் மகாதேவன் நடத்திய நாடகத்தில் மரியன் குழம்பிப் போய் இருந்தது தெரியும். மகாதேவன் கார்த்திகாவைப் பற்றிச் சொல்லியது மரியனுக்கு விளங்காமல் விட்டிருக்காது. கணவன் இலங்கையால் வந்த நாளிலிருந்து ஏன் இப்படி மாறிப்போய் இருக்கிறான் என்பது இன்று பரிபூரணமாகத் தெரிந்திருக்கும்.

அவன் எண்ணம் எல்லாத் திசையிலும் தறிகெட்டோட ஒடிப்போய் படுக்கையறையைத் திறந்தான்.

வெறுமை!

அழகிய நீலக் கட்டில் விரிப்பில் ஸ்டைலாக ஒரு கடிதம் கிடந்தது. அவன் மனதில் ஈரம் வற்றிய உணர்ச்சி. நீலக் கடலில் ஒரு சிறு படகு மிதப்பது போல் இருந்தது அந்தக் கடிதம் கிடந்த விதம். மரியனே அப்படிச் சிறிய துண்டாய்க் கிடப்பது போல் பட்டது.

கடிதத்தை எடுத்துக் கொண்டு கீழே வந்தான். குழந்தையின் முகம் நிர்மலமாக இருந்தது. உலகத்தில் நடக்கும் நாடகங்கள் ஒன்றும் தெரியாமல்.

ஏதோ மனதில் பிசைய கடிதத்தையுடைத்தான். மரியன் தான் ஏன் வீட்டை விட்டுப் போனேன் என்பதை விளக்க அந்தக் கடிதம் எழுதியிருந்தாள். எப்போதோ தான் கணவனிடம் சொல்லியிருந்தாள் தான் பேர்மிங்காம் போகப் போவதாக.

இன்னும் வேலை பற்றிய முடிவு வரவில்லை. ஆனால் இனியும் தான் வெறும் பெயருக்காக ஒன்றாய் வாழமுடியவில்லையாம்.

தன் கணவனுக்கு ஏதோ நடந்து விட்டது. யாரோ தன் கணவனின் மனத்தை மாற்றி விட்டார்கள் என்ற தன் சந்தேகத்தை இன்று மகாதேவன் தீர்த்து விட்டானாம்.

அது உண்மையாக இருக்கவில்லையோ என்பதைப் பற்றித் தான் யோசித்துக் கவலைப்படப் போவதில்லையாம்.

வெறும் சம்பிரதாயங்களுக்காகத் தாங்கள் தம்பதிகளாய்ச் சீவிக்க வேண்டும் என்ற நியதி தனக்கில்லையாம். குடும்பச் சண்டையில் இழுபறி பட்டு குழந்தையின் வாழ்க்கை பாழாகக் கூடாதாம். தனக்குத் தெரியுமாம் உலகத்தில் எதை இழந்தாலும் பரமநாதன் குழந்தை மீராவை இழக்கத் தயாரில்லை என்று. எனவே தன்னிடம் மீரா விடுதலைகளில் மட்டும் வர பரமநாதன் அனுமதி கொடுத்தால் போதுமாம். ஆனால் தான் வேண்டிய நேரம் மீராவை வந்து பார்க்க உரிமையிருக்கிறது என்பதைப் பரமநாதன் மறக்கக் கூடாதாம். உடமைகள்? தனக்குத் தேவையான எல்லாவற்றையும் தான் எடுத்துக் கொண்டதை அவன் பிழையாக எடுக்க மாட்டான் என்று தான் நினைக்கிறாளாம், ஏன் சொல்லாமல் கொள்ளாமல்போகிறாள் என்றால் தான் யாரிடமும் பிரியாவிடை பெறும் மனோநிலையில் இல்லையாம். ‘ஸ்பெசலி’ மீராவிடம் தான் எப்படிச் சொல்வதாம். போய் வருகிறேன் என்று.

கடைசியாக, கிறுக்கலாக Good – bye my husband என்று முடித்திருந்தாள். கொஞ்ச நஞ்சம் இருந்த நம்பிக்கையும் போய் விட்டது.

அவன் கொஞ்ச நேரம். அப்படியே சிலையாக இருந்தான். ஒரு மாத விடுமுறையில் இலங்கைக்குப் போக முதல் இருந்த தங்கள் உறவை நினைத்துக் கொண்டான். எவ்வளவு நெருக்கம்? எவ்வளவு அன்பு!

இதெல்லாம் ஒரு பிரச்சினைக்கு முன் இப்படியாக வேண்டுமா? பைத்தியம் பிடிக்குமாப்போல் இருந்தது.

இன்று சபேசனின் கல்யாணத்தையிட்டுக் கார்த்திகா சந்தோசப் படுவாள் என்று மனதில் சந்தோசம் அடைய, தன் வாழ்க்கை…?

அவனுக்கு உடனே இலங்கைக்குப் போக வேண்டும் போல இருந்தது. இலங்கையில் நின்றபோது ஒவ்வொரு தரம் பிரச்சினைக்கும் தன் இனிய குடும்பத்திடம் ஒடி வர வேண்டும் என்று நினைத்த தன் பேதமையை நினைத்தான்.

தன் எதிர்காலம் எப்படியிருக்கப் போகிறது?

குழந்தை மீராவுக்கு எப்படி விளங்கப் படுத்தப் போகிறான்? என்ன சொன்னாலும் சரியாக விளங்கிக் கொள்ள மாட்டாள் இப்போது?

வீட்டின் வெறுமை அவனுக்குப் பைத்தியத்தை உண்டாக்கும் போல் இருந்தது. யாருடனாவது கதைக்காவிட்டால் தலை வெடிக்கும் போல் இருந்தது. கல்யாணம் பிளவு பட்டபோது வெடிக்காத தலை எப்போது வெடித்தால் என்ன?

விசரள் போல் எலிசபெத்தின் நம்பரை டையல் பண்ணினான். இரவு இரண்டு மணி!

அவள் அரைகுறை நித்திரையில் ‘ஹலோ’ சொல்வது கேட்டது. எரிச்சலும் தூக்கமும் குரலில் தொனித்தன.

“ஹாலோ எலிசபெத்!” அவன் குரலை ஏலுமான மட்டும் சாதாரணமாக வைத்திருக்கத் தெண்டித்தாள். அவள் கத்தினாள், “இந்த நடுச் சாமத்தில் என்ன வேண்டும்?’ ஆச்சரியமில்லை கோபம் வருவது. “உம்மைப் பார்க்க வேண்டும்”. அவன் சாதாரணமாகச் சொன்னான். அடுத்த பக்கத்தில் டெலிபேன் பட் என்று வைத்தது கேட்டது.

அத்தியாயம் – 6

ஹீத்ரோ விமான நிலையம் பனியில் மூழ்கிப் போய்க் கிடக்கிறது. புகார் மறைத்த விமானங்கள் கனவுகளில் வரும் பொம்மைகள் போல் தெரிந்தும் தெரியாமலும் தென்படுகின்றன.

பனி கொட்டி விமானங்கள் மேலெழும்ப முடியாமல் வழிகளை அடைத்து விட்டது. சில மணித்தியாலங்கள் எடுக்கலாம் நிலைமை சீரடைய என்று அறிவித்திருந்தார்கள்.

எலிஸபெத் கம்பளிக் கோர்ட்டுக்குள் பதுங்கியபடி சுருண்டு போய் உட்கார்ந்திருந்தாள்.

பரமநாதன் எலிஸபெத் முன் உட்கார்ந்திருந்தான். அவள் போன வருடம் வெளிக்கிட்டதுபோல் இந்த வருடம் இந்தியாவுக்கு போக வெளிக்கிட்டு விட்டாள்.

உலகத்துப் பெண்களின் வாழ்க்கை முறையை அறிந்து எழுதப் புறப்பட்டு விட்டாள். ஏன் இந்தியாவிலும் இன்னும் பல முன்னேறாத நாடுகளிலும் பெண்களின் வாழ்க்கை முறை இப்படிப் பரிதாபகரமாக இருக்கிறது என்று நேரடியாகப் பார்த்து எழுதப் போகிறாளாம்.

என்ன ‘பரிதாபத்தை’க் கண்டு விட்டாள் என்று அலுத்துக் கொள்கிறான் பரமநாதன்.

எங்கள் நாட்டுப் பெண்கள் பரிதாபத்திற்குரியவர்களாக இருப்பதிற்தான் ஒருவித திருப்தியடைகிறார்கள் என்று சொல்ல வேண்டும் போல இருந்தது.

தங்கை கௌரியின் ஞாபகமும் மகாதேவன் அவளை நடத்தும் விதமும் மனத்தில் நிழலாடியது. பானுமதி சபேசனைக் கல்யாணம் செய்த குற்றத்திற்காக இவர்களுடன் ஒரு தொடர்பும் வைத்திருக்கக் கூடாது என்று சொலலி விட்டானாம்.

இவளும் கல் என்றாலும் கணவன், புல் என்றாலும் புருஷன் என்று கண்ணகி விரதம் பிடிக்கப்போகிறாளாம்.

பானுமதிக்குத் துக்கம், தன்னால் கௌரிக்குப் பேச்சு விழுகிறதென்று. “என்ன யோசிக்கிறீர்கள்” என்று கேட்டாள் லிஸா. இப்போதெல்லாம் இவன் இருந்தாற்போல் ‘ஏதோ’ உலகத்துக்குப் போய் விடுகிறான்.

மனம் விட்டுக் கதைக்கப் பயப்படுகிறான் என்பது தெரிந்தது.

அது அவன் பலவினம். ஒரு சில சந்தர்ப்பங்களில் அவன் குழந்தைத் தனமாக நடந்து கொள்வதாகத் தான் தெரிகிறது அவளுக்கு.

கடந்த சில கிழமைகளாக அவன் மனைவி விட்டுப் போன நாளிலிருந்து அவளின் உறவும் துணையும் அவனுக்கு இன்றியமையாததாகப் படுகின்றது. ஆனால் அதே வேளையில் அவன் டெலிபோன் பண்ணும் நேரமெல்லாம் ஓடிப் போக அவள் வேலை இடம் கொடுக்கவில்லை.

Fleet Street பேப்பர்க் கப்பெனி ஒன்றில் வேலை செய்கிறாள். வேலைக்குப் போனது தொடக்கம் பின்னேரம் ஐந்து மணிக்கு அண்டர்க் கிரவுண்டுக்கு ஓடும் வரைக்கும் அவசரத்தில் ஓடிக் கொண்டிருக்கும் உலகத்தின் ஆரவாரங்களை மறந்து போய் எழுத்துடன் ஒன்றி விடுகிறாள்.

அவனின் டெலிபோன் பெரும்பாலும் “இன்று பின்னேரம் சந்திப்பாயா” என்பதாகத் தான் இருக்கும்.

ஒக்ஸ்போர்ட் றெஸ்ரோறண்ட் ஒன்றில் சாப்பிட்டு விட்டு கால்போன போக்கில் நடந்து சிலவேளை மைல்க் கணக்கான தூரத்துக்கப்பால் போய் அண்டர்க் கிரவுண்ட் ரெயின் எடுத்து கார் விட்ட இடத்துக்குத் திரும்பி வரும் வரை கதைத்துக் கொண்டே போவார்கள்.

அவன் பேச்சுக்கள் விரக்தியாய் இருக்கும். சொஞ்சம் ‘வைன்’ போய் இருந்தால் கார்த்திகா பற்றிப் பேச்சு வரும். அவள் அவன் மனம் திறந்து அலட்டத் தொடங்கும் நேரத்தில் மௌனமாகி விடுகிறாள்.

காதலி கார்த்திகாவின் இடத்திலோ அல்லது ஓடிப் போன மனைவி மரியனின் இடத்திலோ தன்னை வைத்து நிரப்ப அவன் ஏதும் யோசனை வைத்திருந்தால் அது நடை முறைச் சாத்தியம் இல்லை எனச் சொல்லாமல் சொல்லிவிடுகிறாள்.

நீண்ட சம்பாஷனைகளுக்குப் பின் சிலவேளை அவனுடன் வீட்டுக்கு வருகிறாள். பல சந்தர்ப்பங்களில் அவனுடன். ‘ஏதோ ஒரு விதத்தில்’ இரவைக் கழிக்க இல்லை என்பது இருவருக்கும் விளங்கும்.

அவன் அந்த அளவுக்குக் குறுகிய விதத்தில் அவள் உறவைப் ‘பாவித்து’ முடிக்கத் தயாரில்லை. அவள் உறவு மிக இனிமையானது. ஒரு கிழமைத் துன்பமெல்லாம் ஒரு வெள்ளிக்கிழமை அவளுடன் கழித்தால் மறந்து போய் விடுகிறது.

ஏதும் ஒழிவு மறைவின்றிச் சொல்லியழ யாரோ இருக்கிறார்கள் என்ற இதமான உணர்ச்சியே அவள் வரவைச் சந்தோசத்துடன் எதிர்பார்க்கப் பண்ணும்.

ஆனாலும் சில வேளைகளில் எந்தக் கட்டுப்பாடுகளையும் மீறி அவளின் துணை தனக்குத் தேவை என்பதை மறைமுகமாகச் சொல்லி விடுகிறான்.

அன்று பின்னேரம் ‘ஸாரிங்குறோஸின்’ பின் பக்கம் தேம்ஸ் நதிக்கரை றோட்டால் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

தூரத்தில்… ‘வாட்டலூ’ பாலம் தெரிந்தது.

லண்டனுக்கு வந்து முதல் நத்தார்த் ‘திருவிழாவின்’ போது மரியனை அந்தப் பாலத்தில் அழைத்துப் போனது ஞாபகம் வந்தது. நினைவுகள் கசந்தன.

பத்து வருடங்களுக்கு முன் எவை நிரந்தரம். சுகமானவை என்று கணக்கிட்டு உறவுகளை வளர்த்துக் கொண்டானோ அவை எல்லாம் இன்று இறந்து போன காலத்தின் மிச்சசொச்சங்களாய் இருதயத்தைக் குடைவதாக இருந்தன.

அதைப்பற்றிப் பேசும் போது – மரியனையும் தன்னையும் பற்றி ஞாபகப் படுத்தும்போது இவள் சொன்னாள், ”இன்னொருதரம் அப்படியான மயக்கங்களில் ஊறிப்போய் இன்னொரு உறவைத் தேட மாட்டீர்கள் என்று என்ன நிச்சயம்?”

அவன் தர்ம சங்கடப் படுகிறான் அவளின் நேரடியான கேள்விகளால். அவனுக்குத் தெரியும் அவள் தன்னை உணர்ந்து விட்டாள் என்று.

“என்னைக் கல்யாணம் முடிப்பாயா என்று நீங்கள் கேட்டாலும் ஆச்சரியம் இல்லை” என்கிறாள் திடீரென்று.

உண்மை. அவன் மறுக்க முடியாத உண்மை.

அவன் அவளிடம் கேட்கத்தான் இருந்தான் ஒரு காலத்தில் சந்தர்ப்பம் சரியாய் வந்தால். ஆனால் அவள் அந்த உறவுகளுக்குள் தன்னைப் பிளைத்துக் கொள்ளத் தயாராய் இல்லை என்பதைச் சொல்லாமல் சொல்லி விட்டாள்.

“உலகத்தில் எத்தனையோ பெண்கள் கல்யாணம் செய்து பிள்ளை குட்டி கண்டு குடும்பத்தோடு சீவிப்பதுதான் பிறந்ததன் கடமை என்று நினைக்கிறார்கள். நான் அப்படி நினைக்க வில்லை. வெறும் கட்டாயங்களுக்காக ஒரு பொறுப்பைச் சுமக்க, என்னை நான் நிர்ப்பந்தம் செய்து கொள்ளத் தயாராயில்லை. காதலித்து கல்யாணம் செய்து குழந்தைகள் காணுவதை விடப் பிரயோசனமாக வேறு ஏதோ கூடச் செய்யலாம். அப்படி ஒரு குடும்ப வாழ்க்கைக்கு நான் தயாராகும் வரை சுதந்திரமாகத் திரியப் போகிறேன்.”

இவள் இப்படிச் சொல்ல அவன் வாயடைத்துப் போகிறான். சில வேளைகளில் தனிமையான இரவுகளில் இவளை ரஷ்யாவில் ரூறிஸ்ட் ஹொட்டேல் வாசலில் கண்டவுடன் உண்டான மனக் கிளர்ச்சி ஞாபகம் வருகிறது.

அந்த எலிஸபெத்தும் இப்போது ஓரளவு இவனைப் புரிந்து கொண்ட எலிஸபெத்தும் வேறு விதமான பெண்களாகத் தெரிகிறார்கள்.

இவளின் உறவு இல்லாமற் போகப் போகிறது என்பது அவனால் தாங்க முடியாததாக இருக்கிறது.

அதற்காக அவளைப் பிடித்து வைக்க முடியாது என்றும் தெரிகிறது.

“வீட்டையும் காரையும் வைத்துக் கொண்டு அந்த வசதிகளை அனுபவிக்க ஒரு வீட்டு நிர்வாகியைத் தேடுகிறீர்களா” என்றாள் ஒரு நாள்.

இவன் அப்படி ஒன்றும் சொல்லவில்லை. லிஸா விரும்பினால் தன் வீட்டில் வந்து இருக்கலாம் என்று சொன்னான். பானுமதியும் சபேசனும் வேறு இடம் பார்த்துக் கொண்டு திரிந்தார்கள்.

லிஸாவுக்கு அவன் அப்படி ‘அப்பட்டமான’ அழைப்புக் கொடுத்தது பிடிக்கவில்லை. “லண்டனில் காதலர்கள் கிடைப்பது சுகம். சினேகிதர்கள் கிடைப்பது மிகக் கடினம். ஒன்றாய் இருந்தால் எங்கள் ‘சினேகிதம்’ கெட்டுவிடும்” என்றாள்.

அவன் திடுக்கிட்டு விட்டான். அவள் தன்னில் இருந்து அறுபட்டுப் போகத் துடிக்கிறாள் என்று தெரிந்தது.

Don’t love me! என்று சொல்லாமல் சொல்கிறாள்.

காரணம் தன் வாழ்க்கை எல்லாம் புரிந்து கொண்டதாக இருக்குமோ?

அல்லது இவன் தன்னைக் கார்த்திகாவாகவும் மரியனாகவும் பாவிக்கப் பார்க்கிறான் என்ற எரிச்சலாக இருக்கலாம். அவனுக்கு விளங்கவில்லை.

இருந்தாலும் என்ன? அவள் போகப் போகிறாள். அவனை விட்டு ஓடப் போகிறாள். அவனால் பிடித்து நிறுத்த முடியாது. சுதந்திரமாக வாழ்ந்து அலுத்த பின் ஒரு நாள் திரும்பி வரலாம்.

அவள் அடுத்த நிமிடம் என்ன செய்வாள் என்று தெரியாது. கல்யாணம் முடிப்போம் என்று கையைப் பிடித்து அழைத்தாலும் ஆச்சரியமில்லை.

அன்று கிட்டத்தட்ட அரை நாள் ஹீத்ரோ எயார் போட்டில் கழிந்தது.

கடைசியாகப் பின்னேரம் மூன்று மணிக்கு விமானம் புறப்படத் தொடங்குவதாக அறிவிப்பில் சொன்னார்கள். அவள் கம்பளிக் கையுறைகளைப் போட்டுக் கொண்டு எழுந்தாள், இருவரும் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை.

இவன் அவளைப் பார்த்தான்.

இனி எங்கே காணுவது? முடியுமட்டும் அவளைத் தன் நினைவில் பதித்துக் கொள்ளும் துடிப்பு அவன் பார்வையில் இருந்திருக்க வேண்டும்.

அந்தப் பார்வையின் தாபத்தைத் தாங்க முடியாமல் ஓடி வந்து இறுகப் பிடித்துக்கொண்டாள்.

இவன் தோளில் முகம் பதித்து அழுதாள், அவன் எதிர் பார்க்கவில்லை, கார்த்திகாவும் பம்பலப்பிட்டிக் கடற்கரையும் ஞாபகம் வந்தன.

மரியனும் வார்டர் லூ பாலமும் ஞாபகம் வந்தன. இவள் அந்த இருவரையும் விட வித்தியாசமானவள் என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டான். இருவரும் துடிப்பது மறைக்க முடியாதிருந்தது.

“உங்கள் பிரச்சினைகளுக்கு மற்றவர்களிடம் உதவிக்குப் போகாதீர்கள். உங்கள் அளவில் தீர்த்துக் கொள்ளப் பாருங்கள்”. அவள் அப்படித்தான் சொன்னதாக ஞாபகம் இவளைப் பிரிந்தபோது.

மற்றவர்கள்?

எல்லோரும் மற்றவர்களா?

மீரா தகப்பனைக் கட்டிக் கொண்டு சொன்னாள் “அம்மா இனி வராவிட்டால் என்ன, நான் உன்னைப் பார்த்துக் கொள்கிறேன்.”

அருமை மகளை அணைத்துக் கொண்டான். இவள் மட்டும் லிஸா சொன்னது போல் மற்றவர்களாகாமல் எத்தனை வருடம் இருக்கப்போகிறாள்?

இன்னும் பதினைந்து வருடங்களில் யாரோ ஒருத்தனுடன் வந்து இவன்தான் என் எதிர்காலக் கணவன் என்று எல்லா இங்கிலிஸ் பெட்டைகளையும் போலச் சொல்லப் போகிறாள், இன்னும் பதினைந்து வருடங்கள்!

எப்படி வளரப் போகிறாள்?

கார்த்திகா போல் தனக்குரியவனாக இருக்க வேண்டிய வற்றைப் பறிகொடுத்து விட்டு விதியில் பழியைப் போட்டு விட்டு அழுவாளா? லிஸா போல் எதையும் இணைத்துக் கொள்ளாமல் எதிலும் ஓட்டிக்கொள்ளாமல் வேதாந்தி போல் ஒடித் திரியப் போகிறாளா?

மரியன் திரும்பி வரவில்லை. குழந்தையை மட்டும் வாரக் கடைசியில் இவன் கூட்டிக் கொண்டு போய் பேர்மிங்காமில் விட்டான்.

இருவரும் ஒரு கொஞ்சக் காலத்துக்கு முன் வரை கணவன் மனைவியாய் இருந்தவர்கள் இப்போது யாரோ போல் ஹலோவும் குட்மோர்ணிங், குட் ஈவினிங் சொல்வதும் வேடிக்கையாக இருந்தது.

ஒரு நாள் தன்னுடன் இருந்த இளைஞனை இவர் எனது ‘நண்பர்’ என்று அறிமுகம் செய்து வைத்தாள்.

இன்னும் சட்டப்படி தன் மனைவியாக இருப்பவள் என்னென்று நண்பர் ஒருவரை வைத்திருக்க முடியும் என்று அவன் யோசிப்பது யதார்த்தமாக இருக்கவில்லை.

கொஞ்ச நாளுக்கு முன்தான் லிஸாவிடம் கிட்டத்தட்ட I love you liz என்று சொல்லத் துடித்தான். அதைத் தன் மனைவி மட்டும் இவனுக்குச் சொன்னால் ஏன் கோபம் வர வேண்டும் என்று தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொண்டான்.

இருவர் பகுதி வழக்கறிஞர்களிடமிருந்தும் விவாகரத்துக்கான விபரங்கள் வந்திருந்தன.

தாங்கள் ஒன்றாக வாழ்ந்து விட்டு யாரிடமோ உதவிக்குப் போய் ‘பிரிந்து’ கொள்வதை நினைக்க ஒரு விதத்தில் வேடிக்கையாக இருந்தது.

என்ன இருக்கிறது விவாகரத்தில் சொல்லி சண்டை பிடிக்க?

மரியனின் வழக்கறிஞர்படி உள்ள ஸ்ரேற்மென்ரில் இவன் சரியான கணவனாக இருக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மனைவி வீட்டில் காத்திருக்க கணவன் நீண்ட இரவுகளை வெளியில் கழிப்பது மேல் நாட்டுச் சட்டப்படி பெரிய குற்றம். மனைவியை அவமானம் செய்வதுபோல்.

மரியன் இவனை விவாகரத்துச் செய்யப் போகும் காரணங்களில் அதுவும் ஒன்று.

இவனுக்குச் சிரிப்பு வந்தது.

நீண்ட பின்னேரங்களில் தேம்ஸ் நதிக் கரைகளில் லிஸாவுடன் நடந்து தன் பழைய காதலியைப் பற்றி, அதனால் தன் மனத்தில் உண்டான துயர்களைப் பற்றி ஒப்பாரி வைத்தேன் என்று மரியனுக்குச் சொன்னால், எப்படி இருக்கும்?

என்ன சொல்லியும் யாரைத் திருப்திப் படுத்தியும் என்ன நடக்கப் போகிறது?

விவாகரத்தின்படி குழந்தை மீரா மரியனுடன் விடுதலை நாட்களைக் கழிக்க வேண்டும் எனப்பட்டது. குழந்தையை போர்டிங் ஸ்கூலில் சேர்க்கும் வேலையில் ஈடுபட்டான்.

பானுமதியும் சபேசனும் புது இடம் தேடிக்கொண்டு திரிந்தார்கள்.

சபேசன் லண்டனில் உள்ள மாணவர் இயக்கங்களுடன் சேர்ந்து திரிவதாகக் கேள்விப்பட்டான் பரமநாதன்.

பானுமதி அதுபற்றித் தமயனிடம் சொன்னாள். புது வருடத்தை ஓட்டி லண்டனில் நடைபெறும் போகும் தமிழர் கலை விழாவில் நாடகம் ஒன்று தயாரிப்பதாகப் பானுமதி சொன்னாள்.

படிக்க என்று வந்து இப்படியான காரியங்களில் ஈடுபட்டுப் படிப்பைக் குழப்பிக் குடும்பத்தைக் கவலைக்குள்ளாக்கும் எத்தனையோ வாலிபர்களைத் தெரியும் அவனுக்கு. இங்கு இருக்கும் சில படித்த மனிதர்கள் தங்கள் செல்வாக்கைப் பாவித்து மாணவர்களை இப்படி இயக்கங்களில் சேர்ப்பதும் தெரியும்.

பானுமதி அதுபற்றி சபேசனிடம் கதைக்கச் சொன்னாள்.

என்ன கதைப்பது?

இளமையின் துடிப்பில் இவன் ஏதோ முட்டாள்தனமாகச் செய்து கொண்டிருக்கிறான் என்று கதைக்க வெளிக்கிட்டால் இருவருக்கும் ‘அடிபிடி’ தான் வரும்.

இவர்களையும் சொல்லி என்ன பிழை?

இதுவரை இலங்கையில் தமிழர் பிரச்சினைக்கு எங்கள் தமிழர்கள் என்ன செய்து விட்டார்கள்?

சத்தியாக்கிரகத்தின் மூலம் – முத்திரை விற்பதன் மூலம், கவிதை எழுதுவதன் மூலம் ஒரு தேசியப் பிரச்சினையைத் தீர்க்க வெளிக்கிட்ட எங்கள் தலைவர்கள் என்ற முதலாளித்துவ மூளைகளிடம், இவர்களுக்கு வெறுப்பு இருப்பதில் என்ன ஆச்சரியம்.

அவர்களை விட்டால் இடதுசாரிகள் – சத்தியநாதன் போன்றவர்கள்தான் என்ன செய்து விட்டார்கள்?

சத்தியமூர்த்தி போன்றோர் வழிபடும் அல்லது வழிபட்ட இடதுசாரித் தலைவர்கள் தெற்கில் ஒன்றும் வடக்கில் ஒன்றுமாகத் திருகுதாளக் கதை போட்டவர்கள் தானே? சுதந்திரம் கிடைத்து இத்தனை வருடமாகியும் தேசிய ஒற்றுமைக்கு என்ன செய்து விட்டார்கள்?

இரண்டு இனக்கலவரத்தைக் கண்டு – தமிழர்களின் அடிப்படை – மனித உரிமைகளும் பறிபோனதுதானே மிச்சம்? சிங்களவர்களும் தமிழர்களும் இனி ஒரு நாளும் ஒன்றாய் இருக்க முடியாது என்று இருக்கும் போதும் இன்றும் தேசிய ஒற்றுமை பேசும் இடதுசாரிகளை என்ன வென்று நம்புவார்கள் தமிழர்கள்?

உலகமெல்லாம் ஒடுக்கு முறைக்கு எதிராக முற்போக்கு சக்திகள் ஆர்ப்பரித்து எழும்போது இந்த இடதுசாரிகள் மட்டும் ஏன் திட்டம் போட்டு ஒரு இனத்தை அழிக்கும் ஏகாதிபத்திய மனப்பான்மை கொண்ட அரசாங்கத் திட்டங்களை எதிர்க்காமல், இருக்க முடியும்?

பரமநாதன், சபேசன் போன்ற இளைஞர்களின் துடிப்பை உணராமல் இல்லை.

அவர்களின் துடிப்பு இனி இழக்க ஒன்றுமில்லை என்று எல்லாம் இழந்த ஒரு ஒதுக்கப்பட்ட இனத்தின் துடிப்பு.

யாராலோ தூண்டி விடப்பட்டதல்ல. உண்மைகளையும் சத்தியத்தையும் நம்பிய போராட்டம். அடிப்படை மனித உரிமைகளுக்குப் போராடும் ஒரு தன்மான யுத்தம். வாழ்க்கைக்குத் தேவையான சத்திய யுத்தம்.

பிரச்சினைகள் – சுரண்டல்கள் வர்க்க ரீதியாக – இன ரீதி யாக – தேசிய ரீதியாக இருக்கலாம். இந்தக் கொடுமைகளுக்குக் குரல் எழுப்பாதவன் என்னவென்று முற்போக்குக் கொள்கைகளை நம்புவனாக இருக்க முடியும்?

சத்தியமூர்த்தியின் கடிதங்கள் இப்படியான யோசனை களைத்தான் உண்டாக்குகின்றன. சத்தியமூர்த்தி போன்ற இடதுசாரிகள் வெறும் போலிப் புரட்சிவாதிகள் என்று சபேசன் சத்தம் போடுவது பிழையில்லை என்று தெரிகிறது.

சத்தியமூர்த்தி கார்த்திகாவை அடிக்கடி சந்தித்தாகவும் எழுதியிருந்தான். அதுவும் பிடிக்கவில்லை சபேசனுக்கு. இந்த முற்போக்குவாதிகள் சும்மா இருக்கும் பெண்களுக்கு ‘பேர்’ எடுத்துக் கொடுக்க வேண்டாம் என்றான் சபேசன்.

– தொடரும்…

– ஒரு கோடை விடுமுறை (நாவல்), முதற் பதிப்பு: ஐப்பசி 1981, அலை வெளியீடு, யாழ்ப்பாணம்.

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம் (எம்.ஏ) திரைப்படத்துறையில் பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் எழுத்துக்கள்: 7 நாவல்கள், 6 சிறுகதைத் தொகுப்புக்கள், 2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *