ஒரு கோடை விடுமுறை

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 9, 2026
பார்வையிட்டோர்: 2,718 

(1981ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரண்டாம் பாகம் – அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6

அத்தியாயம் – 3

கொலிஜ் அட்மிஷன்’ எடுக்கப் படாத பாடு படவேண்டியிருந்தது. ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன்னேயே வெளி நாட்டு மாணவர்கள் ‘அப்ளை’ பண்ணி விடுவார்கள்.

கல்லூரிகளில் கடைசிவரைக்கும் அட்மிஷன் இல்லை என்று கை விரித்து விட்டார்கள். லண்டனில் அட்மிஷன் எடுக்க முடியாவிட்டால் வெளியில் எடுக்க வேண்டும்.

இரண்டரைக் கோடி பேருக்கு வேலையில்லை இங்கிலாந்தில் இந்த லட்சணத்தில் பானுமதிக்கு ஏதும் ‘பார்ட்ரைம்’ வேலை எடுப்பது எத்தனை கஷ்டம் என்று தெரியும்.

அத்துடன் சபேசன் பார்ட் ரைம் வேலை செய்யாமல் படிப்பதென்பது கனவிலும் நடக்காத காரியம். அவனுக்கு லண்டனில் அட்மிஷன் கிடைத்தால் தவிர பார்ட் ரைம் வேலை கிடைப்பது கஷ்டம்.

ஆவணி மாதம் முடியப் போகிறது. இன்னும் அட்மி ஷன் இல்லை. அட்மிஷன் வராவிட்டால் சபேசனைக் கூப்பிட முடியாது.

இலங்கையில் திருமதி பண்டாரநாயக்காவை இனி அரசாங்கம் திருமதியின் எலெக்ஸன் கேட்காமல் பண்ண ஆட்சியில் நடந்த ஊழல்களை விசாரிப்பதாகச் செய்தி வந்தது. அத்துடன் யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கிறது என்பது ஒரு நாளும் சரியாகத் தெரியாது.

கார்த்திகாவின் கடிதங்கள் கொழும்பில் இருந்து வருவதால் கொழும்பில் என்ன நடக்கிறது என்று தெரியும். சபேசன் தன் அரசியல் விடயம் பற்றி அதிகம் தமக்கையிடம் சொல்ல மாட்டான். அதனால் அதிகம் அவனுக்குத் தெரியாது. சத்தியமூர்த்தியிடமிருந்து அதிக கடிதம் வரவில்லை. இலங்கையில் நடந்த வேலை நிறுத்தம் பற்றி எழுதியிருந்தான். எத்தனை ஆயிரம் பேர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டார்கள் வேலை நிறுத்தம் செய்த குற்றத்துக்காக என்பதைப் படித்தபோது நம்ப முடியாமல் இருந்தது.

தொழிற்சங்க ஆக்கத்துக் காரணமாய் இருந்த தலைவர்கள் எங்கே? முதுகுடையும் தொழிலாளி எதிர்த்துப் பேசினால் தண்டனை வேலையை பறிப்பதா? பரமநாதனால் நம்ப முடியவில்லை இலங்கையில் இப்படி நடக்கிறது என்பதை.

“என்ன நடந்து விட்டது எங்கள் தலைவர்களுக்கும் என்று கேட்காதே. நீ சொன்னது போல் ஒக்ஸ் போட்டிலிருந்தும் கேம்பிறிட் ஜிலிருந்தும் இறக்குமதி செய்த சோசலிசம் இங்கு இறந்து விட்டது. தங்கள் சுயநலத்துக்காகத் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டங்களுக்கு வலிமையும் ஒத்துழைப்பும் கொடுக்காத தலைவர்களால் இலங்கையில் சோசலிசம் செத்துக் கொண்டிருக்கிறது. சிங்களப் பகுதிகளில் மட்டுமல்ல தமிழ்த் தொழிலாளத் தலைவர்களும் தங்கள் கடமையை சரியாகச் செய்கிறார்கள் இல்லை.”

சத்தியமூர்த்தியின் கடிதம் பரமநாதனை வேதனைப் படுத்தியது.

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் கொடுமையைப் பற்றி எழுதியிருந்தான் சத்தியமூர்த்தி. தான் கார்த்திகா வீட்டுக்குப் போனதாகவும் சபேசனுடன் கதைத்தாகவும் இலங்கையில் இருந்தால் எப்போதோ ஒருநாள் தன் தலை போகும் என்று சபேசன் உணர்ந்து விட்டான் என்றும் எழுதியிருந்தான் சத்தியமூர்த்தி.

பானுமதி சத்தியமூர்த்தியின் கடிதத்தைக் கண்டு அழத் தொடங்கி விட்டாள்.

“அவருக்கு என்ன நடக்கிறதோ'” என விம்மத் தொடங்கி விட்டாள். கொஞ்ச நாட்களாக பரமநாதனுடன் சரியாகக் கதைக்கவில்லை மரியன். அத்துடன் பானுமதியின் விம்மல் இன்னும் எரிச்சலை யுண்டாக்கியிருக்க வேண்டும்.

பத்து வருடம் இல்லாதிருந்த எல்லாக் குடும்பப் பொறுப் பும் தன் கணவனின் தலையில் விழுந்ததாற்தான் தன்னிலும் எரிந்து விழுகிறான் என்று மனத்தைத் தேற்றிக் கொண்டாள் மரியன்.

எப்படித்தான் இருந்தாலும் தன்னை இப்படி அற்பம் போல் நடத்தியதை அவளால் மன்னிக்க முடியவில்லை.

பானுமதியின் கல்யாணம் முடிந்து அவள் சபேசனுடன் போனவுடன் கணவன் தன் பாட்டுக்குத் தன்னிடம் மன்னிப்புக் கேட்பான் என்று நினைத்தாள்.

எப்போது சபேசன் வருவான் என்று பானுமதி மட்டுமல்லாது மரியனும் யோசித்தாள்.

படாத பாடு பட்டு லண்டன் கல்லூரி ஒன்றில் இடம் எடுத்திருந்தான் பரமநாதன்.

பானுமதிக்காகவா?

அட்மிஷன் கடிதம் கிடைக்கும்போது கார்த்திகாவின் முகம் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தான். கண் கலங்கக் கடிதம் படித்திருப்பாள். நம்பிக்கை அவள் முகத்தில் ரேகையாய் நெளிந்தோடியிருக்கும்.

தன் மூன்று தங்கைகளுக்கும் ஒரு விடிவு காலம் கெதியில் வரும் என்று பிரார்த்திப்பாள். அவனுக்கு?

தூரத்தில் தேம்ஸ் நதியில் ஆயிரக் கணக்கான படகுகள் மிதந்து கொண்டிருந்தன. ‘சமர்க்’ காலம் முடிந்து இலையுதிர்காலம் தொடங்கி விட்டது. தேம்ஸ் நதிக்கரை நிர்வாணமான மரங்களால் அணைக்கப்பட்டிருந்தது. தன் பத்தாம் மாடிக் கட்டிடக் காரியாலத்திலிருந்து வெறியில் பார்த்தான்.

காரியாலயத்தில் ஒருவரும் இல்லை. அவசரமான றிப்போட் எழுதுவதற்காக அவன் இருக்கிறான்.

பிரமாண்டமான கட்டிடம் அதைச் சுற்றியுள்ள இடம் பூதாகாரமாய்த் தெரிகிறது.

பத்து மாடிகளுக்குக் கீழ் லண்டன் உயிரோடு உலவும் இவ்விடம் ஒரு சந்தடியுமில்லை. வெறும் அமைதி.

பிந்தி வருவேன் என்று மரியனுக்குச் சொல்லவும் இல்லை. தேவையில்லாத விடயங்களுக்கெல்லாம் சந்தேகப் படுகிறாள். இப்போது தன்னை மதித்து நடக்கவில்லை என்று மூஞ்சியை நீட்டப் போகிறாள். எழுதிய றிப்போட்டை அவ சரமாக முடித்து விட்டுக் கீழே வந்தான். லிப்டில் கூட வேறு யாரும் இல்லை. நீண்ட வராந்தாக்கள் நிராதரவாய்க் கிடந்தன.

கார் கொண்டு வரவில்லை.சேர்விசுக்கு விட்டு வீட்டான். அண்டக் கிரவுண்டுக்குப் போவதற்காக இறங்கியவன்
“ஹலோ” குரலில் திடுக்கிட்டான்.

***

விக்டோரியா ஸ்ரேசனில் அவசரத்தில் மூடிக் கொண்டிருக்கும் மக்களின் மத்தியில் அவள் நின்றாள். கடைசியாக அரை குறை வெறியில் தெகிவளையில் கண்ட எலிஸபெத் லண்டனில் விக்டோரியா ஸ்ரேசனில் தன் மூக்குக் கண்ணாடியைத் துடைத்துக் கொண்டு நிற்கிறாள்.

தன் சந்தோஷத்தை எப்படி மறைப்பது என்று தெரிய வில்லை அவனுக்கு. “ஹலோ எலிஸபெத்” என்றான்.

“லிஸா என்று கூப்பிடலாம் என்று எத்தனைதரம் சொல்வது?” அவள் முணுமுணுத்தாள்.

அவளைக் கண்டதும் எவ்வளவோ சொல்ல வேண்டும் போல் இருந்தது. மரியனைப் பற்றி, கார்த்திகாவைப் பற்றி, பானுமதியைப் பற்றி, சபேசனைப் பற்றி. கௌரி, மகாதேவன்…

“லிஸா அவசரமாக எங்கேயாவது போகிறாயா?” அவன் குரலில் இருந்த உற்சாகம் அவளை ஆச்சரியப் படவைத்திருக்க வேண்டும். ஏற இறங்கப் பார்த்தாள். இல்லை என்பதுபோல் தலையாட்டிக் கொண்டு “நான் ஒன்றும் குடித்திருக்கவில்லை” என்றான் சிரித்துக்கொண்டு. “லண்டனிலும் நியூயோர்க்கிலும் மனிதர்கள் பழகும்விதம் அவர்கள் குடித்திருக்கிறார்களோ நிதானமாய் இருக்கிறார்களோ என்பதை மட்டுப்படுத்த முடி யாமல் இருக்கிறது.”

இருவரும் சிரித்தார்கள்.

இருவருக்கும் தெரியும் என்ன கருத்தில் அவள் சம்பா ஷணை அமைந்திருந்தது என்று.

உலகம் எதையும் நிதானமாகப் பார்க்க, நினைக்க சிந்திக்க மறுப்பதாற்தான் இவ்வளவு பிரச்சினையா?

“நியூயோர்க் எப்படி” என்றான். இருவரும் வெஸ்ட் மினிஸ்டர் நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள்.

“நியுயோர்க் எப்படி என்றால்” அவன் அவள் கேள்விக் குறியுடன் பார்த்தாள்.

“இருக்கிறது, எலெக்ஷன் கொண்டாட்டத்தில், எல் றீகன்தான் பிரஸிடென்டாக லோரும் சொல்கிறார்கள் வருவார் என்று, ஒரு விதத்தில் இப்படி முட்டாள்த்தனமான காரியம் செய்வது தவிர்க்க முடியாத பிழையாக இருக் கார்ட்டரில் கலாம் அமெரிக்க மக்களைப் பொறுத்தவரை. உள்ள நம்பிக்கை கடந்த நாலு வருடத்தில் தவிடு பொடி யாகி விட்டது. அதற்கு எதிராக யார் எலெக்ஷன் கேட்டா லும் வோட் போடும் நிலையில் இருக்கிறது சாதாரண சனங் களின் மனநிலை. Any body but Carter என்றுதான் பெரும் பாலானவர்கள் சொன்னார்கள். யார் வந்தாலும் என்ன என்ன சொல்லி விட்டு வோட் எடுத்தாலும் என்ன? வைற் ஹவுசுக்கு வரும் வரைதான் வாய். பின்னர் உண்மையான அதிகாரம் காங்கிரஸ்காரரில் தான் இருக்கிறது. பயப்படாதீர்கள் றொனால்ட் றீகன் பட்டினை அமத்தி மூன்றாம் உலக யுத்தம் கட்டாயம் வரும். அக்ஸிடென்டா யாரோ பட்டனை அமத்துவதால் வரும். போன வருடம் இரண்டு மூன்று தரம் அக்ஸிடென்டாக அபாய ஒலி கேட்டது. இனி ஒலி கேட்காது உலகம் சுக்கு நூறாக உடையலாம்.”

எலிஸபெத் பேசிக்கொண்டே வந்தாள்.

இருண்ட இரவில் வெஸ்ட்மினிஸ்டர் அபேயும், பக்கத்தில் பாராளுமன்றமும் இவள் சத்தியத்தில் பயந்து போய் நிற்பது போல் சலனமற்றுத் தெரிந்தன.

கோடிக்கணக்கான வெளிச்சங்கள் – ஆயிரக்கணக்கான கார்கள் வித விதமான படகுகள் தேம்ஸ் நதியில்.

இருவரும் நடந்து கொண்டிருந்தார்கள் வெஸ்ட் மினிஸ்டர் பாலத்தில்.

“எங்கே கூட்டிக் கொண்டு போகிறீர்கள்?” கோட்டுப் பைகளில் கைகளை விட்டுக் கொண்டு கேட்டாள்.

திரும்பிப் பார்த்தவனுக்கு அவள் நின்ற விதம் இனிமையான நினைவுகளை ஞாபகப் படுத்தியது.

தேம்ஸ் நதியின் பின்னணியில் அவளின் இளமையான தோற்றம் ஒருகாலத்தில் கார்த்திகாவுடன் பேராதனைப் பூங்காவில் தொங்கு பாலத்தில் செல்லம் பண்ணிப் போனதை ஞாபகமூட்டியது.

அடுத்த கணம் லண்டன் யூனிவர்சிற்றியும் மரியனும் அவர்களின் காதல் நாட்களையும் ஞாபகமூட்டின.

அவன் தன்னை அப்படிப் பார்ப்பது தர்ம சங்கடத்தையும் வெட்கத்தையும் உண்டாக்கியிருக்க வேண்டும்.

“காதலிகளும் மனைவிகளும் இல்லாத உலகத்திற்கு கூட்டிக் கொண்டு போகிறேன்.” பாலத்தில் சாய்ந்து நின்று கொண்டு சொன்னான். அவள் கொஞ்ச நேரம் பதில் சொல்லவில்லை. “பசி வயிற்றைப் பிடுங்குகிறது.” அவள் வயிற்றைத் தடவினாள். ”விக்டோரியாவிலிருந்து இதுவரை எத்தனை மைல்? அவள் திரும்பிப் பார்த்து வந்த வழியை அளவிட்டாள்.

“இரண்டு மைல்கள்”. அவன் சாதாரணமாகப் பதில் சொன்னான். “இனியும் நடக்கச் சொன்னால் இருந்து விடுவேன் இந்தப் பாலத்தில்.” அவள் செல்லம் பண்ணினாள்.

அவன் ரக்ஸியை மறிக்க இருவரும் ஏறிக் கொண்டார்கள். “எங்கே வூட் கிறீனுக்கா கூட்டிக் கொண்டு போகிறீர்கள்?” அவளின் களங்கமற்ற கேள்வி அவன் மனத்தைச் சுண்டியது.

இவள் இப்படிக் களங்கமில்லாமல் பழகுகுறாள் ஏன் மரியன் இப்படிச் சந்தேகிக்கிறாள்?

கூட்டிக் கொண்டு போய் அறிமுகம் செய்யலாமா? பானுமதிக்கு முன்னால் நாடகம் நடக்காது என்று என்ன நிச்சயம்?

பானுமதி என்ன நினைப்பாள் என்னைப் பற்றி?

கார்த்திகா, மரியன், எலிஸபெத், இன்னும் எத்தனை பேர் என்று நினைக்க மாட்டாளா?

நான் காசினோவா என்று என் தங்கையும் குடும்பம் நினைக்க வேண்டுமா?

ரக்ஸி பிக்கடெலிப் பக்கம் ஓடிக் கொண்டிருந்தது.

இந்தியன் றெஸ்ரோறன்ரில் இறங்கிக் கொண்டார்கள்.

“ஏன் உங்கள் வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போகவில்லை?” எலிசபெத் வியப்புடன் கேட்டாள்.

மறுமொழி சொல்லாமல், பக்கத்தில் வந்து நின்ற வெயிட்டரிடம் பிரெஞ் வைனுக்கு ஓடர் பண்ணி விட்டு அவளைப் பார்த்தான். இவளுக்கு எப்போதாவது ஒரு நாள் சொல்லித்தானே தீரவேண்டும்?

“எலிஸபெத்…” அவன் தயங்கினான்.

“லீஸா என்று கூப்பிடுங்கள்.” அவள் குத்திக் காட்டி னாள். ”சரி, லீஸா என்று கூப்பிடுகிறேன்.” அவன் இன்னும் மெளனமாய் இருந்தான்.

வெயிட்டர் கொண்டு வந்த வைற் பிரெஞ் வைன் கொதிக்கும் மனத்திற்கு இதமான குளிராக இருந்தது. “லீஸா என் மனைவிக்கும் எனக்கும் உறவு சரியில்லை”. அவன் ஏனோ லீஸாவின் பெயரைத் தன் குடும்ப சிக்கலில் புகுத்த மறுத்தான்.

“சொறி பரமநாதன்.” அவள் குரல் பரிதாபமாக ஒலித்தது.

“தயவு செய்து யாரும் எனக்காகப் பரிதாபப் பட வேண்டாம். Dont feel sorry for me.” குரல் உயர்ந்திருந்தது.

விக்டோரியா ஸ்ரேசனில் தான் முன்னால் நிற்பதைக் கூடப் பொருட் படுத்தாமல் அவன் ஏதோ யோசனையில் வந்ததை நினைத்துப் பார்த்தாள்.

ரஷ்யன் விமானத்தில் நிதானமும், கவர்ச்சியுமாய் இருந்தவன இந்த சோர்ந்த மனிதன்?

“நான் ஏதும் உதவி செய்யலாமா?” அவள் கேட்டாள். அவள் முகம் வாடியிருந்தது. பசியாலா, அவனின் துக்கக் கதையாலா தெரியவில்லை.

“எனக்கேதும் உதவியா?” அவன் வைன் கிளாசை மூக்கில் தேய்த்துக் கொண்டு அவளை வினோதமாகப் பார்த்தான்.

அவளுக்குத் தெரியும் அவன் என்ன கேட்பான் என்று. கார்த்திகாவுக்கு என்ன நடந்தது என்று கேள்விப்பட்ட போது தெஹிவளைக் கடற்கரையில் துடித்து அழுது. Please be my friend என்று கெஞ்சியது ஞாபகம் வந்தது.

சினேகிதம்!

எந்த அடிப்படையில்?

எப்படித்தான் மானஸீகமாகத் தொடங்கினாலும் அது எங்கே போய் முடியும்?

சிக்கலான சினேகிதங்களுக்குள் தன்னை அவள் சிறைப் படுத்த விரும்பவில்லை. அது அவளின் சித்தாந்தமும் இல்லை. பரமநாதன் நினைக்கும் சாதாரண சினேகிதம் என்ற வார்த்தையின் கருத்து கட்டிலில் போய் முடிவதை அவள் வெறுத்தாள்.

“நான் கட்டுரைகள் எழுதுவதை விட்டு விட்டு இப் போது பேப்பரில் வேலை செய்யத் தொடங்கி விட்டேன்”

விளக்கொளியில் அவள் உணவு விடுதியின் மெல்லிய இமை பவுத்திரமான ஓவியம் ஒன்றை ஞாபகப் படுத்தியது.

அவள் என்ன சொல்கிறாள் என்றும் தெரியும்.

“She doesn’t want to be his casual sex object” அவன் மனத்துக்குள் சொல்லிக் கொண்டான்.

அவள் முட்டாள் இல்லை. அவன் துடிப்பு, வேதனைகள், பிரச்சினைகளுக்கு அவள் என்னென்ன விதத்தில் ”உதவி” செய்ய வேண்டும் என்று தெரியும், மரியனுடன் சினேகிதமாகி அவர்களை ஒன்றுபடுத்தலாமா என்பதுதான் அவள் யோசனை.

மரியனின் கோபத்தின் உண்மையான காரணம் எலிஸ்பெத்துக்குத் தெரிந்தால்…

“Full time வேலையா?” அவன் ‘தாண்டோரிச் சிக்கனை’ எடுத்துக் கோப்பையில் வைத்துக் கொண்டு சொன்னான்.

“இல்லை Free lance journalist.” ஏதோ விதத்தில் தெரிந்தது பரமநாதனுக்கு லிஸாவின் முகபாவமும் யோசனைகளும் மாறிக் கொண்டு போகின்றன என்று.

தன்னையும் தன் குடும்பத்தையும் பற்றிக் கதைத்து அவளுக்குத் தர்மசங்கடம் கொடுக்காமல் வேறு ஏதும் கதைக்க விரும்பினான்.

“சபேசன் வருகிறான் கெதியில்.”

அவன் எதிர்பாராத விதமாக அறிவித்தது அவளுக்கு யாரைப்பற்றிக் கதைக்கிறான் என்பதை யோசிக்க வைத்தது.

“ஞாபகமிருக்கிறதா தெகிவளைக் கடற்கரையில் என்னுடன் இலங்கை அரசியலைப் பற்றிச் சண்டை போட்ட இளைஞன் ”

அவன் சபேசனின் ஞாபகத்தை அவள் மனத்தில் கொண்டு வர முயற்சித்தான்.

“ஓ யெஸ், நீங்கள் எல்லாம் சந்தர்ப்பவாதிகள், தன்னல வாதிகள், அதுதான் தப்பினோம் பிழைத்தோம் என்று அயல் நாடுகளுக்கு ஓடிவிடடீர்கள் என்று சண்டை போட்டாரே அவரா?” விஸாவுக்கு ஞாபகம் வந்தது சபேசன் யாரென்று. பரமநாதனை ஒரு போத்தல் வொட்கா குடிக்கப் பண்ணியவன்.

அவனுக்கு இவனின் உதவியா?

அவள் விளங்காமல் பரமநாதனைப் பார்த்தாள்.

“தானும் தன்னலவாதியாக வெளி நாட்டுக்குப் போகப் போகிறாரா?” குத்தலுடன் கேட்டாள். தான் தான் சபேசன் என்கிற மாதிரி இருந்தது அவள் குரல்.

“லிஸா நானும் இலங்கையில் இருந்தால் சபேசன் மாதிரித்தான் நினைப்பேன், நடப்பேன். உலகத்தில் எந்த சரித்திரமும் இல்லை எந்தக் கொடுமையையும் எதிர்க்காமல் விட்டதாய். இலங்கையில் தமிழர் நிலை உமக்கு முழுக்க விளங்காது. சபேசன் போன்றவர்களின் போராட்டம் அவர்களை அடக்கும் அரசாங்கத்தை மட்டும் எதிர்ப்பதாக நான் நினைக்கவில்லை. தமிழ் மக்களை இவ்வளவு தூரம் தவறுதலான வழியில் நடத்திச் சென்ற தலைவர்கள். கண்டும் காணாத மாதிரி, தமிழர் பிரச்சினை ஒரு இனத்தின் பாரிய பிரச்சினை என்பதைக் காட்டிக் கொள்ளாத இடதுசாரிகள் என்பவர்களுக்கு எதிராகவும் தான் என்பது என் அபிப்பிராயம் ஆனால், அவர்களின் இளமையுணர்ச்சி தவறுதலாக வழி நடத்தப்படுவதையோ, தவறுதலான முறையில் தனிப்பட்ட பயங்கரவாதங்களில் ஈடுபடுவதையோ நான் விரும்ப வில்லை. உலகத்தின் எந்த மூலைக்கு ஓடினாலும் ஒரு நாளைக்குத் தமிழர் இலங்கைக்குத் திரும்பித்தான் போக வேண்டும். இருக்குமிடத்தைப் பாதுகாக்க, பேசும் மொழியைப் பாதுகாக்க சபேசன் போன்ற இளைஞர்கள் போராடுகிறார்கள். அவர்களின் போராட்டம் பல விதத்திலும் நசுக்கப்படுகிறது. தங்கள் பட்டம், பதவி, காட்டிக் கொடுக்கும் துரோகத்தனம் என்பன நிறைந்த வசதியான மனிதர்களின் கொடுமை ஒருபக்கம்.

கிணற்றுத் தவளைகளாய் இருந்து கொண்டு ஒரு பாரிய இனத்தின் பிரச்சினையை அவர்கள் திட்டமிட்டு நசுக்கம் படுவதை எதிர்க்க பலமற்று அதற்காகப் போராடுபவர்ளையும் இனவாதிகள் என்று பெயரிட்டுத் தங்களை சோசலிசக் குஞ்சுகளாய்ப் பிரகடனப் படுத்தும் இடது சாரிகளின் வசைமாரி ஒரு பக்கம், அரசாங்கத்துக்குக் கூலிக்கு மாரடிக்கும் பத்திரிகையாளர் ஒரு பக்கம். இ வை எல்லாவற்றிற்கும் எதிர்த்துப் போராடுவது சிறிய காரியமல்ல.

பரமநாதன் இலங்கைப் பிரச்சினையைப் பற்றி இவ்வளவு தூரம் தெளிவாகப் பேசியது இதுதான் முதற் தடவை. இப்போது தெரிந்தது ஏன் தன் தங்கையின் காதலன் சபேசன் ஆபத்தில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க உதவி செய்கிறான் என்று.

அத்தியாயம் – 4

லிஸாவுடன் கதைத்து விட்டு வர நடுச்சாமம் ஆகிவிட்டது.

மரியன் வீட்டில் இல்லை!

பானுமதி சொன்னாள் சினேகிதியுடன் “வெஸ்ட் எண்ட்”டுக்குப் படம் பார்க்கப் போனதாக. மரியன் தான் காலையில் வேலைக்கு வெளிக்கிட முதல் இது பற்றி ஒரு வார்த்தையும் சொல்லவில்லை.தன் அனுமதியும் கேட்கவில்லை.

தான் கேட்டா இவ்வளவு நேரமும் லிஸாவுடன் இருந்து விட்டு வருகிறான்?

இருவரும் ஒருவருக்கொருவர் சொல்லிக் சொள்ளாமல் நீண்ட பாதைகளிற் திரும்பிப் போவதாகத் தெரிந்தது.

பானுமதியின் முகம் சந்தோசமாக இருந்தது.

சபேசனிடமிருந்து தந்தி வந்திருந்தது. நாளைக்குப் பிளேன் எடுக்கிறானாம்.

தங்கையின் முகத்தைப் பார்க்க அவன் துன்பம் எல்லாம் எங்கேயோ பறந்தது. பண்டாரநாயக்கா விமான நிலையத்தில் தம்பியை ஏற்றிவிட வரும்போது கார்த்திகாவின் முகமும், இப்படி மலருமா?

கார்த்திகாவுக்காக இதெல்லாம் செய்கிறேன் என்ற நினைவு வந்தவுடன் மரியன் வீட்டில் இல்லை என்பது பெரிதாகத் தெரியவில்லை.

“நாளைக்கு லீவு எடுக்கிறேன். உங்கள் இருவருக்கும் ஏதும் மலிவான இடம் பார்க்க வேண்டும்”. தமையன் சொல்வதை வெட்கத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாள் பானுமதி.

ஆனாலும் தாய்க்குத் தெரியாமல்.சபேசனின் குடும்பத்துக்குத் தரியாமல் தங்களுக்குக் கல்யாணம் ஆவது சரி யில்லாத காரியமாகப் பட்டது பானுமதிக்கு.

தங்கையின் முகம் பல யோசனைகளைத் தாங்கித் தவிப்பதைப் பார்த்தான் பரமநாதன்.

“பானுமதி, சபேசன் வீட்டில் யாருக்குத் தெரிய வேண் டுமோ அவர்களுக்குத் தெரியும் என்ன நடக்கிறது என்று”

பானுமதி தமயனைப் பார்த்தபடி பதில் சொல்லாமல் நின்றாள். என்ன கேள்வி கேட்பது என்ன மறுமொழி சொல்வது என்று தரியவில்லை.

ஆனால் அவன் வருவது அவளின் மனத்தில் என்ன மாதிரியான சந்தோஷத்தையுண்டாக்கி இருக்கிறது என்று முகத்தில் தெரிந்தது.

அன்று இரவு மரியன் வீட்டுக்கு வரும்போது இரவு இரண்டு மணியாகி விட்டது.

அவன் புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தான்.

இவ்களவு நாளும் நடந்து கொண்ட விதத்துக்கு அவ ளிடம் மன்னிப்புக் கேட்க விரும்பினான்.

அதனால் அவள் இவ்வளவு நேரமும் வெளியில் நின்று விட்டு வந்ததைப் பற்றி எதுவும் கேட்கவில்லை.

மரியன் கணவன் நித்திரையின்றி இருப்பதைப் பற்றி ஒரு துளியும் கவலைப் படாமல் தன் பாட்டுக்கு உடுப்பு மாத்திக் கொண்டிருந்தாள். அவள் அப்படி அலட்சியம் பண்ணியது அவனுக்குத் தூக்கி எறிந்து நடத்தியது போல் இருந்தது

”மரியன்” என்றான் தன் குரலில் கோபத்தைக் காட்டாமல். அவள் மெல்லிய நைட்றெசுக்குள் தன்னைப் புதைத்துக் கொண்டிருந்தாள்.

இலங்கையால் வந்து இத்தனை மாதமும் அவர்கள் சரியாகத் தம்பதிகளாய் இருக்கவில்லை என்பது நினைவுக்கு வந்தது. ஒரு கட்டிலில் பல மாதங்கள் அன்னியர்கள் போல் படுத்தது அவர்களா?

ஒரு காலத்தில் ஒரு நிமிடமும் பிரியாமல் திரிந்த காதற் பறவைகளா இவர்கள்? இவ்வளவு தூரம் கல்யாணச் சீவியம் பிளவு பட்டுப் போய் விட்டதா?

“மரியன்!” அவன் திரும்பவும் கூப்பிட்டான். அவள் திரும்பிப் பார்த்தாள். மெலிந்திருக்கிறாள் போலத் தெரிந்தது. முகம் சோகமாகத் தெரிந்தது.

என்ன வேண்டும் என்பது போல் இவனைப் பார்த்தாள்.

அவன் சொல்ல வேண்டியவை தொண்டையில் நொண்டித்தனம் காட்டி விட்டது.

அவள் இவனின் பார்வையின் தர்ம சங்கடத்தைப் புரிந்து கொண்டு முகத்தைத் திருப்பிப் கொண்டாள். கட்டிலின் அடுத்த பக்கத்தால் வந்து கம்பளிக்குள் புகுந்து கொண்டாள். தன் உறவை, தங்கள் தாம்பத்தியத்தைப் புதைத்துக் கொள்வதாக இருந்தது அவள் நடந்து கொண்ட விதம்.

அவள் லைட்டை ஓவ் பண்ணி விட்டுத் திரும்பிப் படுத்தாள்.

”நான் கொஞ்சம் கதைக்கலாமா?” அவனுக்கு எரிச்சலாக இருந்தது அப்படி அவளிடம் கெஞ்சுவது.

அவள் மௌனமாய் இருந்தாள். இருட்டில் அவள் முகத்தைப் பார்க்க முடியவில்லை,

“நான் இவ்வளவு காலமும் நடந்து கொண்ட விதத்துக்கு மன்னிப்புக் கேட்கிறேன்.”

அவன் தனக்குத் தானே சொல்வதுபோல் சொல்லிக் கொண்டான். அவள் ஒன்றுமே பேசவில்லை.

எதுவும் பேச இல்லை என்று அவள் நினைக்கிறாளா? அவளின் உதாசீனம் அவனுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது.

பொருளற்ற சில பொறாமை யுணர்ச்சிகளால் தன் குடும்ப வாழ்க்கையை அவள் குலைப்பதை அவன் அனுமதிக்கத் தயாராயில்லை. இருளின் அமைதியில் அவன் மனம் என்னவெல்லாமோ எண்ணியது.

மீராவுக்கு ஏழு வயது. இனியும் குழந்தையில்லை. தாயும் தகப்பனும் சரியாகக் கதைத்துக் கொள்ளாமல் இருப்பதை மீரா உணர அதிக நாள் எடுக்காது, பானுமதி விரைவில் போய் விடுவாள். அதன் பின் தாய் – தகப்பனின் உறவு எப்படி இருக்கிறது என்பதை மீரா உணர்ந்து வேதனைப்பட முதல் என்னென்ன சேதங்கள் நடந்ததோ அதையெல்லாம் சீர்ப்படுத்த நினைத்தான்.

மீராவுக்காகத்தானே திருமணமே செய்து கொண்டான்?

“மரியன்,எத்தனை நாளைக்கு அந்நியர்கள்போல் நடப்பதாக யோசனை?’ அவனின் கேள்விக்கு எந்தவிதமான அசைவும் இல்லை.

அவனுக்கு ஆத்திரம் வந்தது. எழும்பி லைட்டைப் போட்டான். அவள் அழுது கொண்டிருப்பது தெரிந்தது. அவள் முகத்தைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

“மரியன்! மரியன்!” அவன் மனைவியை அணைத்துக் கொண்டான். அவள் அவன் பிடியை உதறிவிட்டுக் குப்புறப்படுத்து அழுதாள்.

“என்னவும் கதைக்க இருந்தால் தயவுசெய்து கதையும்.”

அவன் குரலையுயர்த்திக் கத்த அவள் எழும்பியிருந்தாள். கன்னங்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது.

“நான் அந்நியர் போல் நடக்கவில்லை. நீங்கள்தான் நடத்துகிறீர்கள்”. அவள் குற்றம் சாட்டினாள்.

“மரியன், இலங்கைக்குப் போய் வந்த நாளிலிருந்து எத்தனையோ பிரச்சினை, உமக்குத் தெரியும் எத்தனை கரைச்சல்கள் என்று”.  அவன் குரலில் அவளைச் சமாதானப் படுத்தும் யோசனை.

அவள் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

“நீங்கள் இலங்கைக்குப் போய் வந்த நாளிலிருந்து சாதாரணமாய் இல்லை.” அவள் குற்றம் சாட்டவில்லை. உண்மையைச் சொன்னாள்.

இவளுக்கு என்னவென்று சொல்வது? இனி என் மனம் ஒரு நாளும் சாதாரணமாக இருக்காது என்று.

இவளுக்கு எப்படிச் சொல்வது லண்டனில் பத்து வருடங்களாக மறந்து போன, மறந்து போனதாக நினைத்துக் கொண்ட எத்தனையோ மனிதர்கள் – மனிதர்களா? ஒரே ஒரு மனிதப்பிறவி கார்த்திகா என் மனதில் எந்த நேரமும் தோன்றி என் மனதைக் குடைகிறாள் என்று சொல்லவா? என் மனதில் இனி நிம்மதி வராது என்பதையும் சொன்னால் விளங்கிக் கொள்ளப் போகிறாயா?

:என்னில் உண்மையான அன்பில்லாமல் மீராவுக்காகத் தானே கல்யாணம் செய்தீர்கள்”. அவள் குறுக்கு விசாரனை செய்தாள்.

அன்பை எத்தனை விதத்திலும் அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம். ஆனால் உண்மையில் மீராவுக்காகத்தான் கல்யாணம் செய்து கொண்டான் என்றாலும் மரியனில் ஒரு சொட்டும் அன்பில்லாமலா செய்தான்?

“மரியன் என்னெல்லாம் நடந்ததோ அதை எல்லாம் மறந்து விடு. தயவு செய்து பழையபடி வாழப் பார்ப்போம்.” அவன் கெஞ்சினான்.

அவள் திரும்பிப் பார்த்தாள். ஏதோ முக்கிய விடயம் சொல்ல நினைக்கிறாள் போல் இருந்தது.

“நான் பேர்மிங்காம் போகிறேன் கெதியில்.” அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள். அவள் பிறந்த ஊர் பேர்மிங்காம்.

“எதற்காக?” தன் அதிர்ச்சியைக் காட்டிக் கொள்ளவில்லை, “தாய் தகப்பனைப் பார்க்க போகிறாயா?”

“இவ்வளவு காலமும் என் படிப்பையும் பட்டத்தையும் குடும்பப் பொறுப்புகளுக்காகச் சுருட்டி வைத்தேன். மீரா குழந்தையில்லை. முழுநேரப் படிப்புத் தொடங்கப் போகிறேன். இனியும் நான் வீட்டில் இருக்க வேண்டும் என என்ன இருக்கிறது. ஆசிரியை வேலைக்கு எழுதிப் போட்டேன். பேர்மிங்காமில் கிடைத்திருக்கிறது. விரைவில் போகிறேன்.” அமைதியாகச் சொன்னாள். அவன் திடுக்கிட்டு சிலைபோல் இருந்தான்.

தனக்கும் அவளுக்குமுள்ள உறவு இப்படி பிளவு பட்டுப் போகும் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை. அவளுக்குத் தெரியும் அவன் லண்டனை விட்டுப் போக முடியாதென்று; உயர்ந்த வேலை அவனுக்கு லண்டன் கெமிக்கல் கொம்பனி ஒன்றில்.

பேர்மிங்காமில் போய் இருக்கப் போகிறாளாம்!

“மரியன், மீராவின் கெதி என்ன?” அவன் பதறினான்.

“உங்களுக்கு நல்ல வருமானம் வருகிறது. பிரைவேட் ஸ்கூலில் விடலாம். நான் ஒன்றும் உங்களிடம் ஒரு சதமும் கேட்கவில்லை”.

எல்லாம் திட்டம் போட்டுச் செய்கிறாயா?

விவாகரத்துக் கேட்கிறாயா?

தனியாகப் போய் இருக்கிறேன் என்றால் கருத்தென்ன?

இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் போய் உலகத்துக்காகத் தம்பதிகளாய்ச் சீவிப்பது அவனுக்குச் சரிவராது. அவன் கைநிறைய உழைக்கிறான்.

அவன் மனைவியின் உழைப்பு அவனுக்கு வேண்டாம்.

அவனுக்குத் தேவையானது களைத்து வீட்டுக்கு வரும் போது அன்பான மனைவியும் அருமை மகளின் சிரிப்பும்.

அவனுக்கு அலறவேண்டும்போல் இருந்தது. அவனுக்குத் தெரியும் கொஞ்சக் காலமாய் ‘மூடி’யாய் இருக்கிறான் என்று. பிரச்சினைகள் தவிர்க்க முடியாமல் இருந்தன.

அதற்காக குடும்பத்தையே பிரித்துக் கொண்டு போவதா?

அன்று இரவு நீண்ட இரவாக முடிந்தது நித்திரை யின்றி. காலையில் எழும்பி மரியனின் முகத்தைக் கூடப் பார்க்கவில்லை. அவனுக்குத் தெரியும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்று.

பானுமதி அதிகாலையிலேயே எழுந்து விட்டாள். தமயன் சொன்னான் அறை தேடப் போகவேண்டும் என்று.

அவனுக்கு அது அவசரமாகத் தெரியவில்லை. மரியன் வீட்டை விட்டுப் போகிறாளாம், ஏன் பானுமதியும் சபேசனும் தன்னுடன் இருக்கக்கூடாது.

பானுமதியின் உழைப்பில் சபேசன் படிக்க வேண்டும். கொலிஜ் பீஸ் எக்கச்சக்கம். இந்த லட்சணத்தில் அவன் உழைத்துப் படித்து மிச்சம் பிடித்து வீட்டுக்கு அனுப்பி தமக்கைகளை எப்படிக் கரை ஏத்துவது?

யாழ்ப்பாணத்தில் மாப்பிள்ளைகளின் விலை சரியாக ஏறி விட்டதாம். வேலை கிடைக்காத தமிழ் இளைஞர்கள் வெளி நாட்டுக்குப் போய் உழைத்து பணம் சேர்ப்பதால் மாப் பிள்ளைமாரின் விலையும் உயர்ந்து விட்டதாம்.

என்ன கேவலம்!

தன்னைத் தானே விற்றுக்கொள்வது! வாழ்க்கை முழுக்க ஒரு பெண்ணுக்கு உழைத்துக் கொடுப்பது உண்மைதான். ஆனால் ஒரு பெண் வாழ்க்கை முழுக்க ஒரு ஆணுக்கு உழைத்துக் கொடுப்பதற்கு என்ன விலை?

தன் உடலைக் கொடுத்து, தன் உழைப்பைக் கொடுத்து ஒரு மனிதனுடன் வாழ ஒரு  பெண் ஆணை வாங்க வேண்டுமா?

கேவலமான தமிழர்கள்! தமிழ் ஆண்கள், தமிழ் இளைஞர்கள்.ரோமன் காலத்தில் பெண்கள் அடிமைகளை விலை கொடுத்து வாங்குவார்களாம் தங்கள் ‘எல்லாத்’ தேவைகளையும் பூர்த்தி செய்ய.

அந்தப் பண்டைக்கால ரோமன் பெண்களுக்கும் தற்போதைய படித்த நாகரீகமான தமிழ்ப் பெண்களுக்கும் என்ன வித்தியாசம்.

இருவரும் வாங்குகிறார்கள், தங்கள் எல்லாத் தேவைகளுக்கும்.

இந்தச் சீதனக் கொடுமையை எதிர்க்க ஏன் எங்கள் படித்த பெண்கள் முன் வருகிறார்கள் இல்லை? ஏன் தமிழ்ப் பெண்கள் எல்லோரும் பானுமதி மாதிரி இருக்கவில்லை.

பரமநாதன் வேலைக்குப் போகும்போது யோசித்துக் கொண்டு போனான்.

“சத்தியமூர்த்தி தொழிலாள விவசாயிகளின் உரிமைக்கும் வெற்றிக்கும் பாடுபடுகிறானாம். சபேசன் தமிழ் இனத்தின் உரிமைக்கும் வெற்றிக்கும் பாடுபடுகிறானாம்.

இவர்கள் எல்லாம் முதலில் எதிர்த்துப் போராட வேண்டியது சீதனக் கொடுமையை, பெண் அடிமைத் தனத்தை. பெண்கள் உரிமைக்கும் போராடத் தயங்குபவன் என்ன இலட்சியவாதி? முற்போக்காளர் எதை எல்லாமோ தூக்கிப் பிடிக்கிறார்கள் ஏன் ஒரு ஆண் தான் ஒரு ‘ஆண்’ என்பதற்காகத் தனக்கு விலைபேசி ஏழைப் பெண்களைக் கொள்ளையடிப்பதை எதிர்க்கக் கூடாது? பானுமதியை ஹீத்ரோவுக்குக் கூட்டிக்கொண்டு போகும்போது கேட்டான் பரமநாதன்.

தூரத்தில் பல தரப்பட்ட விமானங்கள் ஏறி இறங்கிக் கொண்டிருந்தன. குழந்தை மீரா ஆவலுடன் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்.

மரியன் வரவில்லை. தனக்கு வேலையிருப்பதாக பானுமதிக்கு சொன்னாள்.

பானுமதிக்குத் தெரியும் தமயனுக்கும் மரியனுக்கும் உறவு சரியில்லை என்று. ஆனால் அதைப் பற்றிக் கேட்க விரும்பவில்லை. மரியன் அடிக்கடி வெளியில் போவதும் பானுமதிக்கும் சபேசனுக்கும் வேறு அறை எடுக்கத் தேவையில்லை தற்போதைக்கு என்று பரமநாதன் சொன்னதும் அவளுக்கும் பல யோசனைகளைக் கொடுத்தன.

தமயனைத் தனிமையில் காணும்போது கேட்கலாமா என்று நினைத்தாள்.

இப்போது சபேசனைக் கூப்பிட வரும்போது மரியன் வராதது ஒரு விதத்தில் சரியாக இருந்தது, தான் நினைத்ததைக் கேட்கலாம் என்று நினைத்தாள்.

அவன் சீதனக் கொடுமையை எதிர்த்துக் கதைத்துக் கொண்டிருந்தான்.

“அண்ணா பத்து வருடம் லண்டனில் இருந்து விட்டுக் கதைப்பது சுகம், இலங்கையில் இருந்தால் நீங்களும் சீதனம் கேட்டுத்தான் இருப்பீர்கள்”. குறும்புடன் சொன்னாள் பானுமதி.

தங்கையைத் திரும்பிப் பார்த்தான்.

இலங்கையில் இருந்தால் நானும் என்னை விற்றுக் கொண்டிருப்பேனா? இவளுக்குத் தெரியாதா கார்த்திகாவையும் என்னையும் பற்றி அல்லது என்னை எடைபோடக் கேட்கிறாளா?

ரேமினல் 3க்குக் கார் போய்க் கொண்டிருந்தது.

தங்கையின் கேள்வி மனத்தைக் குடைந்து கொண்டிருந்தது. லண்டனுக்கு வந்து மறந்த நான், இலங்கையில் இருந்திருந்தாலும் எப்படியோ மாறித்தான் போய் இருப்பேன் என்று நினைக்கிறாள்.

அப்படித்தான் கார்த்திகாவும் நினைத்திருப்பாள்?

யார் மறுமொழி சொல்வது? ஒருவரும் சொல்லி விளங்கப்படுத்த முடியாத வேதனையுடன் சபேசனைக் கூப்பிட கஸ்ரம்ஸ் பக்கம் போனான்.

விமானம் வந்து இறங்கி மூன்று மணித்தியாலமாகியும் சபேசன் வெளியில் வரவில்லை. கறுப்பர்களைப் கண்டால் நாயோ பேயோ மாதிரி நடத்தும் இ ங்கிலிஸ்காரர் யார் தயவிலோ படிக்க வரும் சபேசனிடம் என்னென்ன கேள்விகள் கேட்பார்கள் என்று யார் கண்டார்கள்? பானுமதியின் முகத்தில் பொறுமையில்லை. தேவையான பத்திரங்களுடன் வராததால் அல்லது கஸ்ரம்ஸ் ஒவ்வீஸ்காரருக்குத் திருதிதராத முறையில் நடந்து கொண்டதால் எத்தனையோ பேர் திருப்பியனுப்பப் பட்டதைத் தமையன் சொல்லி இருந்தான். நேரம் போகப் போக அவள் கண்களில் நீர் முட்டிக் கொண்டு வந்தது.

கடை சியாக விமான நிலைய அறிவிப்பாளர் பரமநாதனை உடனடியாகத் தொடர்பு கொள்ளச் சொல்லி அறிவித்தார். பானுமதி என்னவாய் இருக்கும் என்று பதறி விட் டாள்.

“பயப்படாதே ஏதும் பத்திரங்கள், சேர்ட்டிபிக்கற் செக் பண்ணுவார்கள்” என்று சொல்லி விட்டுப் போனான். இன்னும் இரண்டு மணிநேரங்கள் பானுமதி துடித்திருக்க சபேசன் பரமநாதனுடன் வந்து சேர்ந்தான்.

சோர்ந்து, தளர்ந்து, நொந்துபோய் வரும் சபேசனைக் கண்டதும் பானுமதி தன் கண்ணீரைக் கட்டுப் படுத்திக் கொண்டாள். இதெல்லாம் கனவு போல் இருந்தது அவனுக்கு.

இன்னும் கல்யாணம் ஆகவில்லை. ஆகியபின் இருக்கிறது எத்தனை கஷ்டம் வரும், எத்தனை கஷ்டத்தை யுண்டாக்கப் போகிறார்கள் எரிச்சலும் பொறாமையும் பிடித்தவர்கள் என்று, இப்போதே அழுது சபேசனையும் வேதனைப் படுத்த விரும்பவில்லை அவள்.

கடந்த மூன்று மாதங்களாக அவள் பட்ட யோசனைகள் இப்போது சபேசனைக் கண்டவுடன் கண்ணீராக வழிந் தோடியது. இருவருக்கும் நம்ப முடியவில்லை. லண்டனில் ஒன்றாய் வாழப்போகிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் அவர்களை ஒன்றாய்ச் சேர காலங்கள் சமுதாயம் விட்டிருக்காது: பானுமதியின் தாய் தமக்கை விட்டிருக்க மாட்டார்கள்.

இங்கு? தமையனின் ஒத்துழைப்பில் ஒன்றாகிவிட்டார்கள். சபேசனின் பெட்டிகள் பிரயாணச் சாமான்களைக் கொண்டு வந்து வைத்தார்கள். பானுமதி வீட்டாருக்குத் தெரியாது சபேசன் லண்டனுக்கு வந்தது. பானுமதி வீட்டில் இருந்து ஒன்றும் வந்திருக்காது; கையில் ஒன்றிரண்டு ட்ரவலிங் பைகளுடன் வந்து சேர்ந்தான். பானுமதியிடம் அக்கா தந்ததாகக கொடுத்தான். என்னவென்று கேட்டாள் எனக்குத் தெரியாது என்றான்.

காரில் வந்து இருந்தபோது உடைத்துப் பார்த்தாள்,

கூறைச்சேலை! பானுமதி அழத் தொடங்கி விட்டாள்.

பாவம் கார்த்திகா என்றாள். இன்னொரு பார்ஸலை பரமநாதனிடம் கொடுத்தான். கார்த்திகா கொடுத்ததாகச் சொல்லவில்லை. வார்த்தைகளால் விளங்கப்படுத்தத் தேவையில்லை. பரமநாதன் உடைத்துப் பார்த்தான். திருக்குறள் புத்தகம்!

– தொடரும்…

– ஒரு கோடை விடுமுறை (நாவல்), முதற் பதிப்பு: ஐப்பசி 1981, அலை வெளியீடு, யாழ்ப்பாணம்.

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம் (எம்.ஏ) திரைப்படத்துறையில் பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் எழுத்துக்கள்: 7 நாவல்கள், 6 சிறுகதைத் தொகுப்புக்கள், 2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *