நோன்பு
கதையாசிரியர்: ஜே.எம்.சாலி
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: July 29, 2026
பார்வையிட்டோர்: 26
(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘ஆயிஷா என்ன பண்ணியிருக்கா பாத்தியா?’
அம்மா சினந்து வெடித்துக் கொண்டிருந்ததைக் கேட்டுவிட்டு வெளியே எட்டிப் பார்த்தான் ரசாக்.
‘என்ன பண்ணியிருக்கிறாள்?’
அவன் கேட்கவில்லை. அம்மாவின் முகம் சிவந்திருக்கிறது. அவமதிப்புக்கு ஆளான மாதிரி நினைக்கிறாள் என்பது புரிகிறது.
“நாம அனுப்பி வச்சதைத் திருப்பி அனுப்பியிருக்கா, பயத்தியா? எம்புட்டு ராங்கி யிருக்கும் இவளுக்கு?” — தாயின் ஆத்திரம் தணிந்தபாடில்லை.
ஆயிஷாவுக்கு அனுப்பப்பட்டிருந்த சாப்பாட்டை அவள் திருப்பியனுப்பியிருக்கிறாள்; அவ்வளவுதான்.
சாப்பாட்டு அடுக்கைப் பார்த்தபடி, “அந்தப் பொண்ணு எதுக்காகத் திருப்பி அனுப்பியிருக்கு?” என்று முணுமுணுப்பாகக் கேட்டான்.
“சாக்குப்போக்குக்கு ஒண்ணும் குறைச்ச இல்லே… நோம்பு வச்சிருக்காளாம்!”
”நோன்பா? இப்ப எதுக்கு…?”
“அவளைத்தான் கேக்கணும். அடக்க ஒடுக்கமானவளா யிருப்பான்னு நெனைச்சேன். அகங்காரம் பிடிச்சவ… பிரியத் தோட அனுப்பி வைச்ச சோத்தை முகத்திலே அடிக்கிற மாதிரி திருப்பிவுட்டுருக்காளே. ஒரு தராதரம் தெரிய வேணாம்……?”
ஆத்திரம் தீராமல் அம்மா பேசிக் கொண்டேயிருக்கிறாள். ஆற்றாமையோடு அறைக்கு வந்தான் ரசாக்.
இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க, முருங்கைப் போத்து மாதிரி ஒல்லியான மாநிறமுள்ள ஆயிஷா என்ற பெண் தன் வீட்டுக்கு வரப் போக இருக்கிறாள் என்பது போன வாரம்தான் ரசாக்குக்குத் தெரியும். பிற்பகல் நேரம் முகம் கழுவிக் கொள்வதற்காக வீட்டின் பின் சுட்டுக்குச் சென்ற போது, கூடத்தில் சற்றே சரிந்த முக்காட்டுடன் ஒரு கோரைத் தடுக்கில் அந்தப் பெண் உட்கார்ந்திருக்க, எதிரில் அமர்ந்து அரபுப் பாடம் கேட்டுக் கொண்டிருந்தாள் ரசாக்கின் தங்கை மகள் ஜரீனா.
தன்னுடைய காலடியோசை கேட்டதும் அவள் நிமிர்ந்ததைக் கவனித்தான். இருவரின் பார்வையும் குத்திட்டு நிற்க, ஜரீனா ஒன்றும் புரியாமல் ஆயிஷாவை வெறித்துப் பார்க்க, ரசாக் வந்த வழியே திரும்பினான். ரொம்பவும் சாந்தமான அவளுடைய பார்வை அவனைப் பின்தொடர்ந்தது.
அந்தப் பெண் யார்? நிச்சயம் உள்ளூர் பெண் அல்ல. அவனுக்குத் தெரிந்து அந்த வயதில் ‘ஓதிக் கொடுக்கும்’ பெண் யாரும் ஊரில் இல்லை. தான் வெளிநாட்டிலிருந்த பல வருஷங்களில் ஆயிஷா இங்கே வந்திருக்க வேண்டும். வாழ்க்கைப்பட்டவளைப் போல் வாளிப்பாகத் தோன்றவில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக ஓதிக் கொடுத்துக் கொண்டிருக்கலாம்.
பேச்சுவாக்கில் கேட்பது போல் அம்மாவைக் கேட்டான்: “நம்ம ஜரீனாவுக்கு ஓதிக் குடுக்க ஆள் அமர்த்தியிருக்கிறீங்களா அம்மா?”
“ஆமா ரசாக்கு… அந்தப் பொண்ணு ஆயிஷா இருக்கே….”
“அசலூர் பொண்ணா?” என்றான்.
‘ஆமாம்’ என்ற தலையசைப்புடன் ஆரம்பித்துவிட்டாள் தாய்,
“வந்து வருஷம் ஒண்ணாச்சு. பொண்ணுங்க மதரசாவுலே ஓதிக் குடுக்குது. அத்தோட ஒழிஞ்ச நேரத்துலே நம்பளை மாதிரி யாராச்சும் ஓதிக் குடுக்கக் கூப்புட்டா வூட்டுக்கு வந்துட்டுப் போவுது. கொஞ்ச நாளா இங்கே வரப்போக இருக்கு. வார்த்தையை ஊமைப் பொண்ணாட்டம் ரொம்ப சாது. எண்ணி எண்ணிப் பேசும்!”
சரியான படப்பிடிப்புதான் என்று தீர்மானித்துக் கொண்டவன், மேலும் விவரம் கோரும் பாவனையில் அம்மாவைப் பார்த்தான்.
“ஒரு நாள் துருவித்துருவிக் கேட்டதிலே அந்தப் பொண்ணோட கஷ்ட நஷ்டம் தெரிஞ்சுது. அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஆயிஷாவுக்குப் பரிசம் போட்டு கல்யாணம் நிச்சயம் செய்தாங்களாம், சொந்தத்திலேயே மாப்பிள்ளை. ஆனா, நிச்சயம் பண்ணின கல்யாணம் நடக்காம போச்சாம்.”
அம்மா பேச்சை நிறுத்தியிருந்த ஒரு நிமிஷ நேரம் ராக்கின் மனம் என்ன பாடுபட்டுவிட்டது!
”ஏன்? என்ன ஆச்சாம்? அந்த மாப்பிள்ளைக்கு ஏதாச்சும் ஆபத்தா?” என்றான் படபடப்புடன்.
“இல்லே. பெரும் பணத்தை கைக் கூலியா குடுத்து நகை, நட்டு, சீதனம் ஏராளமா தர்றதா சொன்ன இடத்திலே அந்தப் பையன் கல்யாணத்தை முடிச்சிட்டானாம். ஆயிஷாவும், அவளைப் பெத்தவங்களும் அவமானத்திலே நொறுங்கிப் போயிட்டாங்களாம். அன்னிலேருந்து இந்தப் பொண்ணுக்கு ஒண்ணும் நடக்கலே. பெத்தவங்க போனதும் ஓதிக் குடுத்து வயித்தைக் களுவிக்கிட்டிருக்கு.”
ஆயிஷாவுக்காக ரசாக் இரங்கினான். அம்மாவும் கூட அநுதாபத்துடன்தான் பேசினாள்.
அந்த அநுதாபமும் பரிவும் இன்றைக்குப் போன இடம் தெரியவில்லை. ஆயிஷாவின் மீது இத்தனை சீற்றமா? நிலைமையைப் பார்த்தால் ‘இனிமேல் ஆயிஷா இந்த வீட்டு வாசலை மிதிக்கக் கூடாது’ என்று அம்மா தடை உத்தரவு போட்டு விடுவாளோ! சும்மா இருந்த பள்ளி வாசல் நகராவைத் தட்டி ஊரைக் கூட்டின மாதிரி ஒரு பிரச்னை உருவாகிவிட்டது.
ஆயிஷா ஏன் இப்படி நடந்துகொள்ள வேண்டும்? விதிக்கப்பட்ட ஒரு மாத காலம் நோன்பிருப்பது நியதி. அல்லாத சமயத்திலும் அவள் நோன்பிருக்கிறாள் என்றால்……?
குழம்பிக் கொண்டிருந்தான். அது தேவையற்ற குழப்பமென்று புறக்கணித்துவிடவும் முடியவில்லை.
சொல்லி வைத்த மாதிரி இரண்டு மூன்று நாட்களாக ஆயிஷா வீட்டுக்கு வரவேயில்லை.
அம்மா நடவடிக்கை எடுத்திருக்கிறாள் போலிருக்கிறது என்று ரசாக் நினைத்தான். தங்கை மகள் ஜரினாவை அழைத்து விசாரித்தான். சொல்லத் தெரியவில்லை. சொல்லியனுப்புகிற சமயத்தில் வந்தால் போதும் என்று ஆயிஷாவுக்குத் தகவல் போயிருப்பது தெரிய வந்தது. ஆக, அவள் என்றைக்கு வருவாளோ தெரியாது.
ஆயிஷாவை நினைத்தபடி இருக்கிறது மனம் ஏன்? அவள் மீது ஆசையா, காதலா? இல்லை, அப்படி நினைக்க முடியவில்லை. அடிக்கடி அவள் நோன்பிருக்கிறாளாமே, ஏன்? அதை நோன்பு என்று சொல்வதா, இல்லை ‘பட்டினி’ என்பதா?
ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் போதும். தெரிந்துகொண்டு விட்டால் தெளிவும் நிம்மதியும் ஏற்படும் போல் இருந்தது. அது முடிகிற காரியமா?
வீடு வெறிச்சென்றிருக்கிறது. அநேகமாக இப்படிப் பல நேரங்கள் அம்மாவும் தங்கையும் அடிக்கடி வெளியே கிளம்பிப் போய் விடுகிறார்கள். பெண் பார்க்கும் படலம். பக்கத்து ஊர்களில் வலை போட்டுப் பார்க்கிறார்கள். இதுவரை பல பெண்களைப் பார்த்தாயிற்று. வலிய வருகிற இடங்கள் ஏராளம். ரசாக் பயணத்திலிருந்து வந்து ஒரு மாதம் ஆகப் போகிறது. வந்த மறுநாளேகூட கல்யாணத்தை முடித்திருக்க முடியும். இல்லை. பெரிய பேரம் சம்பந்தப்பட்டிருக்கிறதே! பாஸ் போர்ட் வைத்திருக்கும் மாப்பிள்ளை அவன்…
பெரிய விலை உண்டு. அதற்காகத்தான் இத்தனை நாளாய் வலை. நேற்றுவரை முடிவாகவில்லை. இன்றைக்கு ஒரு தீர்மானத்துக்கு வந்து விடலாம் என்று தாயும் தங்கையும் பேசிக் கொண்டிருந்தார்கள். அதற்காகவே கார் அமர்த்திக் கொண்டு பெண் பார்க்கப் போயிருக்கிறார்கள், அவனை மட்டும் வீட்டில் உட்கார வைத்துவிட்டு!
நெற்றிப் பொட்டை அழுத்தியபடி ரசாக் சிந்தனை வசப்பட்டிருந்தபோது வாசலில் நடமாட்ட அரவம் கேட்டது. தொடர்ந்து, ‘ஜரீனா!’ என்ற மெல்லிய அழைப்புக் குரல். யார்?
ரசாக் அறையிலிருந்து வெளியே வந்தான்.
சுவாதீனமாக உள்ளே வந்துவிட்டுப் பதில் சொலல யாரும் இல்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டவள் போல் அந்தப் பெண் திரும்பிச் செல்ல எத்தனித்தாள். ஆயிஷாவே தான்!
ஒரு சித்திரத்தின் மொத்த உருவையும் பார்ப்பது போல், ரசாக் ஆயிஷாவைப் பார்த்தான்.
நொடியில் அவள் திரும்பிப் போய் விடுவாளோ என்ற துடிப்பு. எப்படி நிறுத்தி வைப்பது எனும் பரபரப்பு.
“கொஞ்சம் இருங்க..!” – எப்படியோ வார்த்தை வந்து விட்டது.
ஆயிஷா திடுக்கிட்டு நின்றாள்.
“ஜரீனா. உள்ளே… யாராச்சும்…”
ஆயிஷாவின் குரல் இடறியது.
“இல்லே, யாரும் இல்லே.”
“அப்ப நான் வர்றேன். நான் வந்துட்டுப்போனதாக…” அவள் பார்வை தரையில்தான் இருந்தது.
“உங்ககிட்டே ஒண்ணு கேக்கணும்…” என்றான்.
விவரம் கேட்கும் விதத்தில் ஆயிஷா சற்றே நிமிர்ந்து பார்த்தாள். நெருக்கு நேர் பார்வை ஒரு நிமிஷம் கலந்தது.
“அம்மாவுக்கு உங்க மேலே கோபம்” என்றான்.
“இருக்கும்!”
“அன்னிக்கு சாப்பாட்டைத் திருப்பி அனுப்பினது…”
“காரணம் சொல்லியனுப்பினேன்”
“பொருத்தமா இல்லையே!”
”நோன்பு வச்சவங்க விருந்துச் சோறு சாப்பிடவா முடியும்?”
“காலம் இல்லாத காலத்திவே நோன்பு வைக்கிறதுக்குக் காரணம்?”
“அது எனக்குப் பழக்கம்…”
“எதுக்காக?”
“உங்களுக்குத் தெரிஞ்சிருக்கலாம்”
“இல்லை, தெரியாது”
“ஒழுக்கமுள்ள ஒரு பெண்ணாக நான் இருக்கணும் கிறத்துக்காக.”
ஒன்றும் புரியாமல் நெற்றியைச் சுருக்கிக் கொண்டான். “அதுக்கும். இதுக்கும் என்ன சம்பந்தம்?” என்றான்.
ஆயிஷா நிமிர்ந்தாள்.
“வழியில்லாதவங்களுக்கு இது ஒரு வழி. ஆமாம். கல்யாணம் பண்ணிக்க வசதி இல்லாத வறியவங்க இச்சையைக் கட்டுப்படுத்திக்கிட்டு ஒழுக்கமா வாழறத்துக்கு, கற்பைக் காப்பாத்திக்கிறத்துக்கு நோன்பு வைக்கிறதுதான் வழின்னு குர்-ஆன்லே ஆண்டவன் சொல்லியிருக்கான்”
அவள் தணிவாகத்தான் சொன்னாள். தணலைத் தன்மேல் வாரிக் கொட்டியது போல் இருந்தது அவனுக்கு.
பேச நா எழவில்லை. மெல்ல தலையெடுத்துப் பார்த்தான். இருபத்தைந்து வயதில் இளைத்துக் களைத்துப் பற்றுக் கோடில்லாத தனிக் கொடியாக நின்று கொண்டிருக்கிறாள் ஆயிஷா. நோன்புதான் இவளுக்குக் காவலாம், கற்புக்குக் கவசமாம். கன்னி கழியாமல் தன்னை வதைத்துக் கொண்டு நோன்பிருக்கும் இவளைப் போல் எத்தனை ஆயிஷாக்கள்…!
அவள் நோன்பிருப்பது கற்பைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மட்டுமல்ல, கல் நெஞ்சம் படைத்தவர்களின் கண்களைத் திறக்கவும்தான்.
ரசாக்கின் கண்கள் இப்பொழுது நுங்காக உடைந்து திந்தன.
உள்ளுக்குள் ஓர் ஒத்திகை நடந்தது.
ஒரு தீர்மானத்திற்கு வந்தவனாக, ‘ஆயிஷா…!’ என்ற முனகலுடன், ஆவலோடு எதிரே பார்த்தான்.
அவள் அங்கு இல்லை. ஆனாலும் என்ன?
– 1980, ஆனந்த விகடன்.
– சாயல் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: மே 1983, தமிழ் மன்றம். கல்ஹின்னை, கண்டி.
![]() |
ஜே.எம்.சாலி (பிறப்பு: ஏப்ரல் 10 1939), சிங்கப்பூர் தமிழ் இஸ்லாமிய எழுத்தாளர். எரவாஞ்சேரியில் பிறந்த இவர் தற்போது யசும் தெருவில் வசித்துவருகின்றார்.2015ம் ஆண்டின் சிறந்த தென்கிழக்கு ஆசிய இலக்கிய விருது பெற்றவரும், சிங்கப்பூர் தொலைக்காட்சி செய்தி ஆசிரியரும், பன்னூலாசிரியரும், பத்திரிகையாளரும், பல்வேறு இதழ்களில் சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகளை எழுதியவரும், இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழகத்தின் வெளிநாட்டுத் தொடர்பாளருமாவார். எழுதிய நூல்கள் கனாக் கண்டேன் தோழி விலங்கு அலைகள் பேசுகின்றன தமிழகத்துத் தர்க்காக்கள்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
பாரத்தை சுமப்பது சுகமா! பாரமாக இருப்பது சுகமா!
உரு.வளவன்
July 29, 2026
நீ என் மகனல்ல
என்.ஸ்ரீதரன்
July 29, 2026
பூசைக்குள் வரும் பூக்கள்
காரை ஆடலரசன்
July 29, 2026
