ஒட்டாத உறவுகள்




தன் மகனுக்கு ஏதாவது வேலைக்கு ஏற்பாடு செய்ய தூரத்து சொந்தக்காரனும் நல்ல நண்பனுமான இராமசாமியை தேடி வந்திருந்தார் பார்த்தசாரதி.
இராமசாமி ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். பார்த்தசாரதியின் பையனுக்கு படிப்பு நன்கு வந்தும் வசதி இல்லாத காரணத்தால்; எப்படியோ தட்டு தடுமாறி டிப்ளமோ வரை வரை படிக்க வைத்து விட்டார். அவனுக்குத்தான் ஏதாவது ஒரு வேலை ஏற்பாடு செய்து தர படாத பாடு படுகிறார். ஒன்றும் நடக்க மாட்டேனெங்கிறது. இப்பொழுது கூட இராமசாமி சொல்லித்தான் இங்கு வந்திருக்கிறார். யாரோ பெரிய மனிதராம், இராமசாமிக்கு உறவுக்கார்ராம், தன்னுடைய மகள் கல்யாணத்துக்கு பத்திரிக்கை வைக்க வருகிறேன், வீட்டில் இரு என்று சொல்லியிருக்கிறார். இவருக்கு உடனே வருகிறவர் வசதியானவர், தொழிற்சாலைகள் வைத்திருப்பவர், நம்ம பார்த்தசாரதியை அறிமுகப்படுத்தி வச்சா அவன் பையனுக்கு உபயோகமாயிருக்குமே, என்று நினைத்தவர் போன் செய்து வர்சொல்லி விட்டார்.

இராமசாமியின் உறவினர் கார் இராமசாமி வீட்டு முன் நிற்பதற்கே சிரமப்பட்டது. அந்த தெருவுக்குள்லேயே வர முடியாமல் ரோட்டு ஓரத்திலேயே நிறுத்தப்பட்டு இறங்கி வந்ததற்கே அவருக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. என்ன இராமசாமி எப்படி இருக்கறே? கல்யாண பத்திரிக்கையை நீட்டினார். முதலில் அவரை உட்காருங்க, அவரை உட்கார வைக்க முயற்சித்தர் இராமசாமி. இல்லை இராமசாமி நான் கிளம்பறேன், இன்னும் இரண்டு மூணு வீட்டுக்கு பத்திரிக்கை வைக்கணும். இருங்க ஒரு காப்பியாவது..இழுத்தார்.. அதெல்லாம் வேண்டாம், உன் குடும்பத்தோட வந்திடணும். சொல்லி கிளம்ப எத்தனித்தவரை.. இவரு பேர் பார்த்தசாரதி நமக்கு உறவுதான், அவர் பையனுக்கு வேலை விஷயமா பாக்கணும்னு ..மெல்ல இழுத்தவர், நாந்தான் நீங்க பத்திரிக்கை கொடுக்க வருவீங்க, அப்ப கேட்டு பாக்கரேன்னு வர சொன்னேன்.
இவர் நம்ம உறவா? கொஞ்சம் யோசிப்பது போல முகத்தை வைத்துக்கொண்டவர்.. உங்கம்மா பேரு பாவையம்மா. ஓ மீண்டும் யோசித்தவர், யாரு சேலத்துப்பக்கம், பாலுசாமியோட பொண்ணு பேரு பாவையம்மான்னு சொல்வாங்க, அவங்க…இழுத்தார்
அவர் எனக்கு தாத்தாவாகனும், பாவையம்மா எங்கம்மா. பார்த்தசாரதியின் குரலில் கொஞ்சம் பெருமை வழிந்த்து, காரணம் பெரிய பணக்கார்ர் தன்னுடைய அம்மாவை விசாரிக்கிறாரே? அப்ப இவர் நமக்கு நெருங்கின சொந்தம் ஆகுது. உங்கம்மாவோட தங்கச்சி எனக்கு அத்தை முறை ஆகணும்..சொல்லிக்கொண்டே இருந்தவர் அடடா நேரமாகுது, பரவாயில்லை, இந்தாங்க, உங்களுக்கும் கல்யாண பத்திரிக்கை. என் பொண்ணோட கல்யாணத்தை குமரன் மஹால்ல வச்சிருக்கேன், கண்டிப்பா குடும்பத்தோட வந்துடணும், சொல்லிக்கொண்டே வர்றேன் இராமசாமி கையசைத்து விடைபெற்று சென்றார்.
அவர் போய் அரை மணி நேரம் கழித்துத்தான் அவர் தன் பையனை பற்றி விசாரிக்கவேயில்லை என்று தெரிந்தது. பரவாயில்லை, பார்த்தா, கல்யாணத்தன்னிக்கு பையனை கூட்டிட்டு வந்துடு, அங்க்கேயே பாத்து பேசிடுவோம், வர்ற புதங்கிழமைதான, கவலைப்படாம போய்ட்டு வா..பார்த்தசாரதி கவலையுடன் வீடு திரும்பினார்.
பார்த்தசாரதி மறக்காமல் தன் பையனை இந்த கல்யாணத்துக்கு அழைத்தார். பையன் அங்கேயெல்லாம் நான் வரலைப்பா. அவங்க பெரிய ஆளுங்க, நம்மளை எல்லாம் மனுசனா கூட மதிக்கமாட்டாங்க.
பார்த்தசாரதிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ஏண்டா அவ்வளவு பெரிய மனுசன் என் அம்மாவை பத்தி அவ்வளவு விசாரிச்சாரு, எங்க சித்தி கூட வருக்கு அத்தை முறை ஆகணுமாம், உன்னையும் கட்டாயம் கல்யாணத்துக்கு கூட்டி வர சொன்னார் (அவர் அப்படி சொல்லவேயில்லை) போய்ட்டுத்தான் வாயேண்டா அம்மாவும் தன் பங்குக்கு சொன்னாள்.
கடைசியில் அப்பாவின் தொந்தரவிற்கு பயந்து அவருடன் கிளம்பினான். பார்த்தசாரதி, இராமசாமியின் வீட்டுக்கு போய் அவரையும் அழைத்துக்கொண்டு அவர் மனைவியும் கல்யாணத்துக்கு வரவில்லை என்று சொல்லி விட்டார்கள்.
இவர்கள் ஆட்டோவில் போய் இறங்கியதும் அங்கு கார்கள் நிற்பதற்கு ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்த செக்யூரிட்டி வேகமாக வந்து இங்க பாருங்க..ஆட்டோவெல்லாம் இப்படி முன்னாடி நிறுத்தாதீங்க, அந்த பக்கம் கொண்டு போய் நிறுத்துங்க, ஆட்டோ டிரைவர் சட்டென கோப்பட்டு சும்மா இருப்பா நான் ஒண்ணும் நீங்க நடத்துற கல்யாணத்துக்கு வந்து நிக்கலை,சும்மா விரட்டுறயே, இந்தா கஸ்டமரை இறக்கிட்டு போயிடறேன். அவனின் கோபம் இவர்களை கொஞ்சம் சங்கடப்படுத்தியது.
ஆட்டோவை விட்டு இறங்கியவர்கள் அங்கு நின்றிருந்த கார்களை பார்த்தவுடன் அடேயப்பா எத்தனை வகையான கார்கள், இந்த இடத்துல ஆட்டோ வந்தா நல்லாவா இருக்கும், மனதுக்குள் நினைத்துக்கொண்டாலும் வெளியே சொல்லவில்லை. பையந்தான் முகத்தை சுழித்துக்கொண்டு, இங்கேயெல்லாம் மரியாதை கிடைக்காதப்பா, சொன்ன கேளு, இப்ப கூட நேரமாகலை, அப்படியே வெளியே திரும்பி போயிடலாம். பேசாம வாடா இவ்வ் வேறே, முணங்கினாலும், பார்த்தசாரதியின் மனமும் அவன் சொன்னது உண்மைதானே என்று சொன்னது.
இவர்கள் உள்ளே நுழையும்போதே கை கூப்பி நின்றிருந்தவர்களின் பளபளப்பு இவர்கள் போட்டிருந்த சாதா வெள்ளை வேட்டிகளை சோதா வேட்டிகளாக காட்டியது. கொஞ்சம் கூச்சத்துடனேயே இவர்கள் மூவரும் வணக்கம் சொல்லி உள்ளே நுழைந்தார்கள். இராமசாமி மட்டும் அங்கும் இங்கும் பத்திரிக்கை கொடுத்தவரை தேடினார். பாவம் அவருக்கு பார்த்தசாரதியின் மகனை அவரிடம் அறிமுகப்படுத்தி,விடவேண்டும் என்ற ஒரே ஆவல்.
ஆ..அதோ வேகமாக வருகிறார். இவர் வேகமாக ஓடி அவருக்கு வணக்கம் சொல்ல அவர் “இராமசாமி சாபிட்டீங்களா, போய் சாப்பிடுங்க“ சொல்லிக்கொண்டே அவரை தாண்டி பறந்து சென்றார். பார்த்தசாரதியின் பையன் முறைத்தான். பாத்தியாப்பா, நாம் என்னமோ சாப்பாட்டுக்கு வந்த மாதிரி சொல்லிட்டு போறாரு.
அதற்கப்புறம் அவர்களுக்கு அந்த கல்யாண கூட்ட்த்தில் உட்கார்ந்திருந்தது மிகுந்த கஷ்டமாய் இருந்தது. உறவுதான் என்று சொன்னாலும் இவர்கள் இருவரும் தெரிந்தவர்கள் என்று ஒருவர் கூட கண்ணில் படவில்லை. ஒரே பட்டுச்சேலைகளும் நகை பெட்டகங்களுமாய் பெண்கள் நடந்து கொண்டிருக்க, ஆடவர்கள் விலையுயர்ந்த செண்டுக்ளை பூசிக்கொண்டு, வித விதமான ஆடைகளில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருக்க இவர்கள் மூவரும் திரு திருவென விழித்தபடி அமர்ந்திருந்தனர்.
யாராவது தெரிந்தாவர்கள் கண்ணுக்கு படுவார்களா என்று தேடிப்பார்த்த இராமசாமி சலித்துப்போய், சரி பந்திக்கு போகலாமா? கேட்க பார்த்தசாரதியின் பையன் வேண்டாம் அங்கிள் பேசாம போயிடலாம், நானும் அதைத்தான் நினைச்சேன், நீ சொல்லிட்டே, இராமசாமி இருவரையும் எழுப்பி வெளியே கூட்டி வந்தார். வெளியே வந்த பின்னால்தான் அவர்களுக்கு நிம்மதியாய் மூச்சு விட முடிந்தது. அப்பாடா என்றிருக்க, பார்த்தசாரதி ஆட்டோ பிடிக்கலாமா? இராமசாமி அதெல்லாம் வேண்டாம் வா பொடி நடையாய் நடக்கலாம், எனக்கு தெரிஞ்ச கம்பெனி பக்கத்துல ஓண்ணு இருக்கு அங்க போய் இவனுக்கு வாய்ப்பு இருக்கான்னு விசாரிக்கலாம், என்று உண்மையான் அக்கறையோடு சொல்லிக்கொண்டு நடந்தார்.