எனக்கெனவே… நீ… கிடைத்தாய்!
கதையாசிரியர்: ஆர்.மணிமாலா
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: தேவி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: August 22, 2026
பார்வையிட்டோர்: 250
(2011ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12
அத்தியாயம் – 7

“என்னை என்ன… அவ்வளவு பொறுப்பில்லா தவன்னா நினைச்சே? பாஸ்கர் எனக்கு ஒரு கண்ணுன்னா… வித்யா எனக்கு இன்னொரு கண். அவ பிறந்தப்பவே அவளுக்கு பிக்ஸட்ல பணம் போட்டுட்டேன். அவ கல்யாணத்தப்ப பத்து லட்சம் கிடைக்கும்!” என்றார் விஸ்வநாதன், மனைவியைப் பெருமிதமாய் பார்த்தபடி.
“நிஜமாவா சொல்றீங்க?”
“ஆமா கமலி! சஸ்பென்சா இருக்கட்டுமேன்னு சொல்லாம மறைச்சேன்”.
“கேக்க சந்தோஷமாத்தான் இருக்கு. ஆனா பாஸ்கர் படிப்புக்காக நிறைய செலவு பண்ணிட்டோம். படிச்சது போதாதா? காவேரிப்பாக்கம் நிலம் வேற எதுக்காவது உபயோகப்படும். இப்ப அதை விக்கணுமா?”
“என்ன பேசறே? பாஸ்கர் நம்ம குலவாரிசு. அவனுக்கு செய்யாம? என் புள்ளை பெரிய டாக்டராகி சம்பாதிச்சு. நாம இழந்ததையெல்லாம் மீட்டுத் தருவான். பார்த்துட்டேயிரு.”
அதற்கு மேலும் விளக்கி சிந்துவையும் கரைசேர்க்கணுமே என்று சொல்ல பயந்து வாயை மூடிக் கொண்டாள் கமலி.
நிலத்தை விற்று மகனை மேற்படிப்பு படிக்க வைத்தார். ஆனால் பாஸ்கர் படிப்பு மட்டுமா படித்தான்? சாமுத்ரிகாவிடம் காதல் பாடத்தையும் தான்!
சாமுத்ரிகா… மதுரையில் ஆளும்கட்சி எம்.எல்.ஏ.வான மாரிமுத்துவின் ஒரே மகள்! அரசியல்வாதிகளுக்கே உரிய இலக்கணத்துடன் நேர்வழி தவிர்த்து, பல வகையிலும் பணம் சம்பாதித்தவர், சாமுத்ரிகாவும் பாஸ்கரும் ஒரே வகுப்பில் படித்தவர்கள்.
மாரிமுத்து மகள் மீது அதீத பாசம் கொண்டவர். அதனால் அவள் காதலை எதிர்க்கவில்லை. பையன் டாக்டர் என்பதும் ஒரு காரணம். அவர் போட்ட ஒரே கண்டிஷன் பாஸ்கர் வீட்டோடு மாப்பிள்ளையாக வேண்டும் என்பது தான். பாஸ்கருக்கு மறுப்பில்லை.
ஆனால் படிப்பு முடிந்ததும் காதல், கல்யாணம் என்று வந்து நின்ற செல்ல மகனைப் பார்த்து மனசு ஏமாற்றத்தால் வெம்பியதை விஸ்வநாதன் மறைத்தார். மகனை ஆசீர்வதித்தார். தடபுடலாய் கல்யாணம் நடந்தது.
மாரிமுத்து மகளுக்கும், மருமகனுக்கும் மதுரையில் விலைக்கு வந்த பழைய தனியார் ஹாஸ்பிடலை புதுப்பித்து சீதனமாய் தந்தார்.
தொழிலும் அங்கேயே அமைந்து விட பாஸ்கர் சென்னை வருவதே அரிதானது.
வித்யாவும் கல்லூரி படிப்பை முடித்து விட்டாள். வரன்கள் வாசலேறி கதவைத் தட்டின. கொஞ்சகாலமாவது ஆபீசிற்கு போய் பணிபுரிந்து சம்பாதிக்க ஆசைப்பட்டாள் வித்யா. வீட்டில் மறுக்கவில்லை. அவள் படிப் பிற்கு உடனே வேலை கிடைத்தது. அதுவும் நல்ல சம்பளத்தில்.
அவள் சம்பாத்தியத்தை பெற்றவர்கள் வீட்டிற்கு பயன்படுத்திக் கொள்ள மறுத்து, கட்டாயப்படுத்தி வித்யாவின் வங்கிக் கணக்கில் சேமிக்க வைத்தனர்.
பிளஸ்டூ முடித்திருந்த சிந்துவை அந்த வீட்டில் மேற்கொண்டு படிக்கவைக்க யாரும் நினைக்கவில்லை. தவிரவும் மற்ற இரண்டு பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி கவலைப்பட்டவர்கள் அவளை கணக்கிலேயே சேர்த்துக் கொள்ளாதது உறைத்தது.
சிந்துவிற்கும் தன் எதிர்காலம் குறித்து பயமும், அக்கறையும், ஆசையும் இருந்தது.
பாட்டியைப் போல் தன்னைத் தாங்கி அன்பு செலுத்தும் ஒரு ஆண்மகன் அவளுக்கு கணவனாக வாய்க்க வேண்டும். நான்கைந்து குழந்தைகளைப் பெற்று தனக்கு வாய்க்காத தாய், தந்தை பாசத்தை கொட்டி வளர்க்க வேண்டும் என்ற கனவு அவளுள் ஆழமாய் பதிந்திருந்தது.
ஆனால் தன் ஒவ்வொரு அத்தியாவசிய செலவிற்கும் கூட நாள் கணக்கில் தயங்கி பயந்து வெளிப்படுத்தி ஒரு உணர்ச்சியுமின்றி தரப்படும் பணம் பிச்சை பெறுவதைப் போலிருந்தது.
அதனால் யோசித்து தன் முடிவை அம்மாவிடம் சொன்னாள். “நான் ஏதாவது ஒரு சுயதொழில் பண்ணட்டுமாம்மா?”
“என்னவாவது பண்ணிக்க “
“அ… அப்பா ஒண்ணும் சொல்லமாட்டாரே?”
“அப்பாவா? அவர் என்ன சொல்லப் போறார்? அதுவும் உன் விஷயத்தில்? நீ என்ன வேணும்னாலும் பண்ணு.” என்று உரிமையற்ற வார்த்தைகளால் மனதை கிழித்தாள்.
“சரிம்மா”
பாட்டி வீட்டில் இருந்த போது அவளுக்கு உடல் படுத்தும் போதெல்லாம் சிந்து சமையலில் உதவியதுண்டு. அதே கைப்பக்குவம் அவளிடம் இருந்தது.
மகளிர் சுய உதவிக்குழுவில் சேர்ந்தாள். அங்கு அளித்த பயிற்சியும், அறிவுரைகளும் அவளின் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்தது. சுய உதவிக்குழு மூலம் வங்கிக் கடன் பெற்று சமையல் பாத்திரங்களை வாங்கி கிராமத்து சுவை மணக்க, அத்தனை வகை உணவுகளையும் சமைத்து சுய உதவிக்குழு தலைவர் மூலம் கலெக்டர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள உழவர்சந்தையில் அனுமதி பெற்று விற்றாள். வியாபாரம் படிப்படியாக உயர்ந்து பிக்கப் ஆனது.
அதில் கிடைத்த வருமானத்தை சேமித்து, அம்மா கையில் தந்த போது கமலி வாங்க மறுத்தாள்.
ஆனால் விஸ்வநாதனோ “எதுக்கு வேணாங்கிறே? இருக்க எடம் குடுத்து சோறு போடலே? சும்மாவா? வாங்கிக்க” என்று அதட்டினார்.
சிந்து தன் வருமானத்தை சந்தோஷமாகத்தான் கொடுத்தாள். ஆனால் அதைப் பெற்றுக் கொண்ட காரணம் அவளை இன்னும் அந்நியப்படுத்தியது.
சிந்து தன் வருத்தங்களை குழிதோண்டி உள்ளத்தில் புதைத்துக் கொண்டாளொழிய முகத்தில் படர விட்டதில்லை.
ஆரம்பத்தில் வீட்டிலேயே அவள் ஒருத்தியாகவே சமைத்தாள். “இதென்ன சமையல்கட்டை கசகசன்னு ஆக்கறே? வீட்டு மளிகை சாமான்ல கைய வைக்கிறியா என்ன?” கமலி முகம் சுளித்தாள்.
“ஐய்யய்யோ மளிகை சாமான் எதையும் எடுக்கலைம்மா. நான்தான் தினமும் மணி அண்ணாச்சி கடையில வாங்கிடறேனே?”
“கொல்லைப்புறத்துல சமைக்கக் கூடாதா?”
சிந்து தயவாய் அம்மாவை ஏறிட்டாள்.
“இப்ப தாம்மா கஸ்டமர்ங்க அதிகமாக வர ஆரம்பிச்சிருக்காங்க. கலெக்டர் ஆபீஸ்ல வேலை செய்யறவங்க நிறைய பேர் சாப்பிட வர்றாங்க. பலகாரம் சுவையா இருந்தா மட்டும் போதாது. சமைக்கிற இடம் சுத்தமா இருக்கணும்னு எதிர்பார்ப்பாங்க.”
“அதுக்கு என் வீட்டு சமையல்கட்டு தான் கிடைச்சுதா?”
“சுத்தம் பண்ணிடறேன்மா.”
இப்படி தினம் தினம் அந்த வீட்டில் அல்லாடி எதுவும் கிடைக்கா விட்டாலும் என்றாவது ஒருநாள் பாசமாய் ஒருவார்த்தை பேசிடமாட்டார்களா என்ன? என்று காத்திருந்தாள் சிந்து.
வித்யா பழையவைகளிலிருந்து மீண்டு தங்கையை பார்த்தாள். சலனமற்ற முகம். பாதி மலர்ந்த அல்லி மலரைப் போன்ற அழகு. எவ்வளவு அன்பு என் மீது? நானும் சென்று விட்டால் இந்த வீட்டில் இவளிடம் பேசக்கூட ஓர் ஆள் இல்லை.
நிஜம் சுட்டது.
அத்தியாயம் – 8
“அடடே வாங்க… வாங்க தம்பி!”
காரிலிருந்து நண்பனுடன் இறங்கிய தேவாவை பஞ்சாயத்து தலைவர் பாசமாய் வரவேற்றார்.
“பாஞ்சாலி இங்கே வா யார் வந்திருக்காங்கன்னு பாரேன் உக்காருப்பா… தம்பி, நீயும் உக்காரு…”
தேவாவும், திவாகரும் சோபாவில் அமர்ந்தனர். உள்ளிருந்து வந்த பாஞ்சாலி அவர்களை வியப்பும், மகிழ்ச்சியுமாய் பார்த்தாள்.
“அட தேவா தம்பி உங்க பேரு திவாகர் தானே?”
“சரியா சொல்லிட்டீங்க ஆன்ட்டி! பரவாயில்லையே என் பேரைக் கூட சரியா ஞாபகம் வச்சு சொல்லிட்டீங்க?”
“போன வாரம் தானே வந்து போனீங்க. எதுக்கு ஆன்ட்டி, கீன்ட் டின்னு நான் அம்புட்டுப் படிக்காதவ. அக்கான்னு கூப்பிடு. இல்லே அத்தைன்னு கூப்பிடு. என்ன சாப்பிடறீங்க?”
“சாப்பிடறீகளான்னு கேக்கறது என்ன நாகரீகம்? சாப்பிடக் கொண்டு வா.” பஞ்சாயத்து தலைவர் விரட்ட…
பாஞ்சாலி தலையாட்டியபடி உள்ளே செல்ல…
“அக்கா ஒண்ணும் வேணாம். தண்ணி மட்டும் போதும் அக்கா. கேட்டது தானே சரி! நாங்க வரும்போதே காமாட்சி ஹோட்டல்ல சாப்பிட்டு தான் வந்தோம்.” என்றான் தேவா.
“என்ன தம்பி அந்த ருசி உங்களையே சுத்தி வருதா?” பலமாய் சிரித்தார் பஞ்சாயத்து.
“அதையேன் கேக்கறீங்க சார் ஊரை விட்டு கிளம்பும் போதே சாப்பாட்டு ஞாபகம் தான்”.
தேவா மென்மையாக புன்னகைத்தான்.
“இவன் அதிகமாப் பேசறான். அப்படியில்லே சார்! நம்ம வாழ்க்கையில நம்மளைக் கடந்து போகிற நல்ல விஷயங்களை மறக்க முடியாதுல்லியா? அதுப்போல தான் இதுவும். அப்புறம் அப்பா போன் பண்ணினாரா சார்?”
“நேத்தே பண்ணிட்டார். விபரமும் சொன்னார். படம் எடுக்க நான் அனுமதி குடுத்தாலே போதும். நீங்க ரெண்டு பேரும் எங்க வீட்டுலேயே தங்கலாமே. எதுக்கு கெஸ்ட் ஹவுஸ்ல? அதுவும் காட்டுக்கு கிட்டக்கயே இருக்கு.”
“இல்ல சார் டிஸ்கஷன் அதுஇதுன்னு லேட் நைட் தூங்குவோம். நைட்டெல்லாம் லைட் போட்டுக்கிட்டு, பேசிக்கிட்டு, கண்டிப்பா டிஸ்டர்ப்பா இருக்கும். எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.”
“இந்தாங்க எடுத்துக்குங்க.”
பாஞ்சாலி நீட்டிய தட்டில் தண்ணீரும், சுடச்சுட இஞ்சி டீயும் இருந்தது.
“தாங்க்ஸ்க்கா” திவாகர் பாசமழை பொழிந்தான்.
“யூனிட் ஆட்கள் வந்திறங்க…” தேவா பரபரத்தான்.
“என்ன திவா… ஸ்ருதி இன்னும் வரலை?”
“அதான் எனக்கும் புரியலை. அட்வான்ஸ் வாங்கறப்பவே ஊர் அட்ரஸ், தேதி எல்லாம் விபரமாய் விளக்கி சொல்லி எழுதிக் குடுத்திட்டு தான் வந்தேன்”.
“போனைப்போடு.”
திவாகர் செல்போனில் நம்பரைப் போட்டான்.
ரிங் போனது எடுக்கவில்லை.
திரும்பத் திரும்ப முயற்சித்தும் ‘எடுப்பேனா பார்’ என்று அலறியது எதிர்முனை.
டென்ஷனான தேவா யூனிட் ஆள் ஒருவரிடமிருந்து போனை வாங்கி ஸ்ருதி நம்பரைப் போட்டான்.
உடனே அட்டென்ட் பண்ணினாள் ஸ்ருதி.
“ஹலோ ஸ்ருதி ஹியர்”
“மேடம் நான் தேவா!”
“ஓ…” சங்கடமாய் வந்தது வார்த்தை.
“என்ன மேடம் இது? ஏன் எங்க கால் அட்டென்ட் பண்ண மாட்டேங்கறீங்க?”
“அதெல்லாமில்ல நான் போனை வச்சுட்டு பால்கனிலே”
“எப்ப வர்றீங்க, உங்களுக்காக எல்லாரும் வெய்ட்டிங்” என்றான் இடைமறித்து.
“இல்ல தேவா சார் அம்மா இதை வேணாங்கறாங்க. அட்வான்ஸை திருப்பிக்குடுத்துடறேன்.”
“வாட்”
“குழந்தைக்கு பால் குடுக்கிற மாதிரி விளம்பரப் படத்துல நடிச்சா என் இமேஜ் போய்டும். சான்ஸ் போய்டும். கடைசியில சீரியல்ல நடிக்கக் கூட சான்ஸ் வராதுன்னு பீல் பண்றாங்க.”
“ஏங்க இது எவ்ளோ மரியாதைக்குரிய விஷயம்? ஒரு பெண், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கிற மாதிரி நடிக்கிறது புண்ணியம்ங்க.”
“ஸாரி தேவா. எனக்கு புண்ணியம் மட்டுமே போதாது. கல்லாகட்டணும். அக்ரிமெண்ட்தான் போடலியே… ஆளை அனுப்பி அட்வான்ஸை வாங்கிக்குங்க!” திமிராய் பேசி கட் பண்ணினாள்.
தேவா சோர்ந்துப் போனான்.
பஞ்சாயத்துத் தலைவர் அவனையே வருத்தத்துடன் பார்த்தார். “இப்படியாகிப் போச்சே தம்பி.. இப்ப என்ன பண்ணப் போறீங்க?”
“புரியல சார்.. ஷுட்டிங் கேன்சலானா… ஒரு நாளைக்கு எவ்ளோ நஷ்டமாகும்னு அந்தப் பொண்ணுக்கும் தெரியும். இன்னும் ரெண்டு நாளைக்குள்ள ஷுட்டிங் முடிச்சாகணும். எனக்கு பணம் நஷ்டமாகற்தைப் பத்திக்கூட கவலையில்லே. ஒத்துக்கிட்ட வேலையை முடிச்சுக் குடுக்கறது தான் கலைஞனுக்கு அழகு!”
“வேற நடிகைய கேட்டுப்பாருங்க!”
”முயற்சிப் பண்ணிட்டு தான் இருக்கேன். விதவிதமா பட்டுப்புட வையும், நகையும் மாட்டிக்கிட்டு விளம்பரப் படத்துல நடிக்கறதுக்குன்னா.. யோசிக்காம சரின்னுடு வாங்க.. ஒரு சமூக நோக்கோட இதை ஒத்துக்க மாட்டேங்கிறாங்க சார்!”
“ஏம்ப்பா… தெரியாம தான் கேக்கறேன். ஒரு நடிகை குழந்தைக்கு பால் குடுக்கற மாதிரி நடிச்சாதான் மக்கள் மனசுல பதியுமா என்ன? சாதாரணப் பொண்ணுங்க நடிச்சா என்ன?”
பஞ்சாயத்து அப்படிக் கேட்டதும் வாயைப் பிளந்தான் தேவா. “எக்ஸலண்ட் சார்.. ஆனா, அப்படி யாரும்.. அதுவும் சாதாரணப் பொண்ணுங்க…”
“இல்ல தேவா. சார் சொல்றது தான் சரி! ஒரு நடிகைய அந்த இடத்துல காண்பிச்சா… கவர்ச்சிக் கண்ணோட தான் பார்ப்பாங்க. சாதாரண பொண்ணுதான் உணர்வு ரீதியா ரீச் ஆகும். ஆனா, அவங்கள் லாம் அவ்ளோ தைரியமா நடிச்சிட மாட்டாங்க. அந்தப் பொண்ணோட முகத்தை சில் அவுட்ல காட்டிடலாம். ” என்றான் திவாகர்.
“வெரிகுட்ஐடியா.. ஆனா யார்கிட்டேப் போய்…”
“கவலைப்படாதே தம்பி.. இன்னைக்கு பஞ்சாயத்து ஆபீஸ்ல மகளிர் சுய உதவிக்குழு மீட்டிங் இருக்கு. அங்கே கேட்டுப் பார்க்கலாம். ஆனா, ஒரு கண்டிஷன் யார் நடிக்க முன் வந்தாலும், அவங்க பேரு வெளிய தெரியக்கூடாது.. முகமும் தெரியக்கூடாது. குடும்பத்துல பிரச்சனை வந்துடக்கூடாது.”
“சத்தியமா… சார்!”
அத்தியாயம் – 9
தேவாவும், திவாகரும் அவர்கள் அறையில் கவலை தோய்ந்த முகங்களுடன் அமர்ந்திருக்கின்றனர்.
“சே… இன்னும் பத்து நாள்ல தாய்ப்பால் வாரம் கொண்டாடப்போறாங்க. அதுக்குள்ளே என்னால இதை முடிச்சுக்குடுக்க முடியுமா திவா?”
“புரியலேடா.. அந்த மகளிர் சுய உதவிக்குழுவுல.. நாம இப்படின்னு கேட்டதும் கல்லெறியாத குறையா பொம்பளைங்க திட்டினாங்க. பஞ்சாயத்து பேச்சை… அந்தளவு நம்பியிருக்க வேண்டாமோன்னுத் தோணுது!”
“அவர் என்னடாப் பண்ணுவார்? அவருக்குத் தெரிஞ்ச அளவுக்கு நமக்கு ஹெல்ப் பண்ணினார்.”
அந்த நேரத்தில்.. காலிங்பெல் சிணுங்கியது.
இருவரும்….கழற்றிப் போட்டிருந்த சட்டையை எடுத்து அணிந்தனர்.
“யாருடா…?”
“பஞ்சாயத்தா இருக்கும்.. கதவைத்திற..!”
தேவா கதவைத் திறக்க…
வாசலில் நின்றிருந்த பெண்ணைப் பார்த்து ஆச்சர்யமானான். ‘இவள்.. இவள்.. அந்த காமாட்சி ஓட்டலில்..’
“வணக்கம் சார்!” என்ற அவளின் குரல் மேற்கொண்டு யோசிக்க விடாமல் தடுத்தது.
“வா.. வாங்க…”
உள்ளே வந்து அமர்ந்தாள்.
”சார்.. என் பேர் சிந்து! நேத்து நீங்க மகளிர் சுய உதவிக்குழுவுல பேசினதைக் கேட்டேன்.. அதான் வந்தேன்!”
தேவாவும், திவாகரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
“எனக்கு அதுல நடிக்க விருப்பம்!”
“….?”
“ஆனா, இது எங்க வீட்டுக்குக்கூட தெரியக்கூடாது.”
“கண்டிப்பாங்க.. ரொம்ப தாங்க்ஸ்ங்க..” தேவா நெகிழ்ந்துப் போனான்.
“எப்பஷுட்டிங்.. எவ்வளவுநேரத்துல முடிச்சிடுவீங்க?”
“நாளைக்கு பதினொரு மணிக்கு.. இங்கேயே ஷுட்டிங்., அரைமணிநேரம் போதும் நீங்கன்னு.. யார் பார்த்தாலும் தெரியாது…”
“உங்களை நம்பறேன்.. வர்றேன்!”
சென்றுவிட்டாள்.
“தேவா.. என்னடாயிது ஆச்சர்யமாயிருக்கு! அங்கே இருந்த சப்ளை பிகரெல்லாம் கண்டமேனிக்கு திட்டிச்சுங்க… ஆனா, இப்படி ஒரு அழகானப் பொண்ணு தேடி வந்து சம்மதிச்சிட்டுப் போகுது. பஞ்சாயத்து… பஞ்சாயத்து தான். ஆமா, இந்தப் பொண்ணை எங்கேயோ பார்த்திருக் கேனே…?”
“நானும் தான்!” என்றான் இன்னமும் பிரம்மிப்பு அகலாமல்! மறுநாள்..ஆர்ப்பாட்டமின்றி ஒரு சிலரை மட்டுமே துணைக்கு வைத்துக் கொண்டு சிந்துவை ஷுட் பண்ணினான். அதிசயமாய் வாடகைக் குழந்தையும் ஒத்துழைத்தது.
ஷுட்டிங் முடிந்ததும். அவளிடம் ஒரு கவரை நீட்டினான் தேவா. சிந்து புருவம் முடிச்சுப்போட அவனை பார்த்தாள்.
“என்னது?”
“நீங்க நடிச்சதுக்காக சின்ன அன்பளிப்பு!”
“ஸாரிங்க. நான் பணத்துக்காக போஸ் குடுக்க வரலை, தாய்ப்பாலோட சுவை என்னன்னேத் தெரியாம வளர்ந்தவ நான்! அதனோட அருமை கிடைக்காத எனக்குத்தான்! அதோட மதிப்பு ரொம்பவேத் தெரி யும். ஒரு திருப்திக்காக தான் இங்கே வந்தேன். வர்றேங்க…” நடந்தாள்.
“ஒரு நிமிஷம்ங்க!” தேவா அழைத்தான்.
“…?!”
“என்னோட இத்தனை வருஷ கேரியர்ல உங்களை மாதிரி யாரையும் நான் சந்திச்சதில்லை. இங்கே எல்லாமே பணம் தான்! பணத்துக்காக தான் எல்லாமே! இப்ப நீங்க சொன்ன வார்த்தை.. ஏன் எதுக்காகன்னு தெரியலே. ஆனா, ஆத்ம திருப்திக்காக.. சினிமாவை சார்ந்திராத பொண்ணு, இப்படிப்பட்ட சீன்ல நடிக்கறது சாதாரண விஷயமில்லை மேடம்! உங்களை மனசார பாராட்டணும்னு தோணுது. நன்றிங்க!”
சிந்து இதழ் பிரியாமல் புன்னகைத்து அவன் பாராட்டை ஏற்றுக் கொண்டாள்.
“என் பேரு தேவா! டாக்குமெண்டரி விளம்பரப்படம். குறும்படம்னு எடுக்கிறேன். சினிமாப்படம் எடுக்கணும்னு ஆசையில்லே. சர்வதேச திரைப்படத்துல என் குறும்படம் பரிசு வாங்கணும். அது என் ஆசை. மத்தபடி எங்க குடும்பத் தொழில் செய்துட்டிருக்கேன்.
“நல்லது!”
“இது என் விசிட்டிங் கார்டு”
அவன் தந்ததை வாங்கிக் கொண்டாள்.
“டி.வி.யில வர்ற ஹார்லிக்ஸ், மிக்ஸி, இன்சூரன்ஸ்… இதெல்லாம் நான் எடுத்த விளம்பரப் படங்கள் தான்!” என்று ஒரு பெரிய பட்டியலையேச் சொன்னான்.
சிந்து தலையாட்டிப் புறப்பட்டாள்.
அவள் சென்ற பின் திவாகர் அவனை வாட்டி எடுத்து விட்டான்.
“என்ன மச்சான். அவகிட்ட ஓவரா சீன் போடறே?”
“நான் எங்கடா சீன் போட்டேன்? உண்மையை தானே சொன்னேன்?”
“அவகிட்டே உன்னோட ரெஸ்யூம் சொல்ல வேண்டிய அவசியமென்ன? எத்தனையோ நடிகைகளோட நாம் வேலை பார்த்திருக்கோம். வேலையத்தவிர, அதிகபட்சமா நீ யார்கிட்டயும் ஒரு வார்த்தை கூட பேசினதில்லையே!”
“ரொம்ப ஆராய்ச்சிப் பண்ணாதே! ஆகற வேலையப்பாரு!” உதடுக்குள் சிரிப்பை மென்று அதட்டலாய் சொன்னான் தேவா.
“ம்ஹும்..உன் முகமே ஒரு மாதிரி பூவா மாறிப் போயிருக்குடா…” திவாவும் விடவில்லை.
“அடிங்.. ” சோபாவில் அவனைத் தள்ளி அவன் மேல் அமர்ந்து வலிக்காமல் குத்தினான்.
பஞ்சாயத்து அவனை ஆச்சர்யமாய் பார்த்தார்.
“என்னதம்பி,. திடீர்னு அந்தப் பொண்ணைப் பத்தி விசாரிக்கிறே?”
“சாருக்கு அந்த ஓட்டல் சாப்பாடு ரொம்ப பிடிச்சுப் போச்சாம்.. அதான் அந்த ஓட்டலையே விலைக்கு வாங்கிடலாம்னு…”
“ப்ச் திவா.. சும்மாயிரு! இல்லே சார். உங்க கிட்ட சொல்றதுக் கென்ன? வீட்ல பொண்ணு பார்த்துட்டு இருக்காங்க. இந்தப் பொண்ணு என் மனசுக்கு நிறைவா இருக்காங்க…”
“சரிப்பா.. இவங்க உங்க ஆளு இல்லையே! உங்கப்பா…”
“அவரை என்னால வழிக்கு கொண்டு வர முடியும். இந்தப் பொண்ணு வீட்ல எல்லாம் சரியா நடந்தா…”
“அங்க தானே இடிக்குது?”
– தொடரும்…
– எனக்கெனவே… நீ… கிடைத்தாய்! (நாவல்), தேவியின் கண்மணி, ஏப்ரல்-15, 2011.
தொடர்புள்ள சிறுகதைகள்
மயக்கமா? கலக்கமா?
வளர்கவி
August 22, 2026
விட்டில் பூச்சிகள்
சிவசங்கரி குருநாதன்
August 22, 2026
பாசத்தின் நிழலில்!
கல்பனா ராஜகோபால்
August 22, 2026