எனக்கெனவே… நீ… கிடைத்தாய்!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 19, 2026
பார்வையிட்டோர்: 468 
வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்

(2011ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9

அத்தியாயம் – 4

ஓயாமல் அழுத வானத்தைப் பார்த்து டமடம வென.. இரக்கமற்று கைகொட்டி சிரித்தன இடிகள். உறக்கம் வராமல் புத்தகம் படித்துக் கொண்டிருந்த வித்யாவுக்கு போரடிக்கவே.. மூடி வைத்து விட்டு எழுந்தாள். அறையின் ஜன்னல் காற்றுக்கு நடனமாட.. இழுத்து கொக்கிப் போட்டு மூடியவள்… ஏதோ தோன்றியவளாய் ஹாலுக்கு வந்தாள்.

பழங்காலத்து வீடு. கைவிட்டுப் போகாமல் இன்னும் பாசமாய் அவர்களுடனே இருக்கிறது. சினிமாவில் நடிக்கும் பழங்கால வீடுகளைப் போன்றே.. பெரிய வராந்தா.. நடுவில் வானம் பார்த்த முற்றம்.. சிறுவயதில் இதுபோன்ற மழைகாலத்தில் அவளும், பாஸ்கரும், காகித கப்பல் விட்டு விளையாடியது நினைவிற்கு வந்தது.

சமையலறை, பூஜையறை, குளியலறை தவிர்த்து மூன்று படுக்கை அறைகள் உண்டு. அம்மா, அப்பாவுக்கொன்றும், வித்யாவுக்கு ஒன்றும், பாஸ்கருக்கு ஒன்றுமாய் இருந்தன. பாஸ்கர் இப்போது இங்கில்லை என்றாலும்.. அவன் வரும்போது இங்குதானே தங்குவான்? என்று சிந்துவிற்கு மறுதலிக்கப்பட்டது.

குளிரில் உடல் சிணுங்க.. இன்னும் போர்வைக்குள் குறுக்கிக் கொண்டு வராந்தாவின் ஒரு ஓரத்தில் பாய்மீது பாவிக்கிடந்தாள் சிந்து. மெல்ல அவளருகே அமர்ந்தாள் வித்யா!

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அவளின் முகம் இரவு விளக்கொளியில் பேரழகாய் தெரிந்தது.

அவளை இரக்கத்தோடும், நன்றியோடும் பார்த்தாள் குழந்தை முகம் கன்னத்தோரம் நெளித்த முடிக்கற்றையை மென்மையாக ஒதுக்கிவிட்டாள்.

சொந்த வீட்டிலேயே ஒதுக்கப்பட்டிருக்கும் பரிதாபம் ஏன்? வித்யாவிற்கு கசப்புடன் பழையவைகள் மேலெழுந்தன.

விஸ்வநாதன் அந்த ஊரிலேயே செல்வாக்கு மிக்க தொழிலதிபர், பஞ் சாலையும், பேப்பர் மில்லும், ரைஸ் மில்லுமாய் கொடிகட்டிப் பறந்த வர். தொழிலில் ஏகமாய் போட்டிகள் இருந்தாலும் மிக எளிதாய் கையாண்டு வெற்றிக் கனி பறிப்பவர்.

தெய்வபக்தியும், அதைவிட அதிகமாய் ஜோதிட பக்தியும் மிகுந்தி ருந்தது. வீட்டில் தண்ணீர் குடத்தில் எவ்வளவு தண்ணீர் பிடிக்க வேண் டும் என்பதைக் கூட ஜோதிடரிடம் கேட்டுதான் செய்கிறாரோ என்கிற அளவிற்கு பித்துப்பிடித்தவர்.

மனைவியாய் கமலி வந்தபிறகு மகாலட்சுமி அவர் வீட்டின் படியேறி அமர்ந்தாள். பாஸ்கர் பிறந்தபோது.. புதிதாய் தொழில்களை ஆரம்பித்தார். நான்கைந்து வருடம் கழித்து வித்யா பிறந்தபோது செல்வாக்கில் ஸ்திரமாய் இருந்தார். தங்கமும், வைரமும் பீரோவுக்குள் அமர இடமின்றி திமிறின.

மூன்றாவதாக கமலி உண்டானபோது பாஸ்கருக்கு எட்டுவயது. வித்யாவுக்கு ஐந்து வயது.

விழுப்புரத்தில் நூறு ஏக்கர் விலைக்கு வருவதை பார்ப்பதற்காக காரில் சென்றபோது… எதிரே வந்த வேன் மோதி. கார் உருண்டு, புரண்டு நின்றது. நல்லவேளை.. உயிருக்குச் சேதமில்லை. ஆனால் காலிலும், கையிலும் விஸ்வநாதனுக்கு நல்ல அடி. டிரைவருக்கு தலையில் அடி!

காயத்துக்கு சிகிச்சை எடுத்துக் கொண்ட மறுநிமிடமே தன் ஆஸ்தான ஜோதிடரை தேடிச் சென்றார்.

‘உன் மனைவி,… கரு உருவான நேரம் சரியல்லை. அது பிறந்தால்.. உன் செல்வம் மட்டுமல்ல… நீயும் மண்ணாகிப்போவாய்., அதன் முதல் அடிதான் விபத்து’ என பயமுறுத்த… கமலியிடம் எல்லாவற்றையும் சொல்கிறார். கருகலைப்பு மாத்திரை வாங்கித்தருகிறார். மனமில்லாவிட்டாலும்…. கணவன் முக்கியமாயிற்றே என்று உட்கொள்கிறாள். கரு அசையவில்லை. காரமாய் கோழிக்குழம்பு செய்து சாப்பிடுகிறாள். கலையவில்லை. மூன்று மாதம் முடிந்த நிலையில் அபார்ஷனும் பண்ண முடியாத சூழல். அடிவயிற்றில் கனமும், நெஞ்சில் பயமுமாய் கமலி சுமக்க.. விஸ்வநாதனுக்கு முகம் தெரியாத குழந்தை மீது ஏகமாய் வெறுப்பு. உயிர் பயம்.. அவரை தொழிலில் கவனச்சிதைவை உண்டாக்க.. தோல்விகள் எட்டிப்பார்க்க ஆரம்பித்தன. ஒன்பது மாதங்கள் முடிந்த நிலையில், இன்ஷ்யூர் செய்யப்படாத அத்தனை தொழிற்சாலைகளும் எதிரிகளால் ஒரே நேரத்தில் தீக்கிரையாக்கப்பட்டன. ஒரே நாளில் அடிமட்டத்தில் இருந்த நகைகளும் தொழில்களுக்காக வங்கியில் வாங்கப்பட்ட கடன்கள் ஏப்பம் விட்டன.

விஸ்வநாதன் இடிந்துப் போய்விட்டார். பிரசவ நாளுக்கு முன்பே வலி ஏற்பட்டு குழந்தையை பெற்றெடுத்தாள் கமலி.

விஸ்வநாதன் அதன் முகம் காண பிடிக்காமல்.. ஹாஸ்பிட்டல் பக்கமே வரவில்லை. கமலி அதற்காக வருத்தப்படவில்லை. அவளுக்கே கூட அந்த குழந்தைமீது எந்தவித ஈர்ப்பும் ஏற்படவில்லை. அதைவிடக் கொடுமை.. தாய்ப்பாலே சுரக்கவில்லை என்பதுதான்.

பாட்டில் பால்தான் அதைக்கூட கமலியின் தாய் காமாட்சி புகட்டியதுதான்!

வீட்டிற்கு வந்தப் பிறகும் கூட விஸ்வநாதனின் மனசு மாறவில்லை. கணவனின் தாடியும், கவலையும் கமலியின் கொஞ்ச நஞ்ச தாய்ப்பாசத்தையும் கரைத்தே விட்டன. குழந்தை அழும்போதெல்லாம்.. தீக்கிரையான சொத்துக்களே நினைவுக்கு வந்தன.

ஒருநாள்.. கமலி குளித்துக் கொண்டிருக்க. காமாட்சி கடைக்குச் சென்றிருக்க.. தூளியில் படுத்திருந்த குழந்தை பசிக்காக வீறிட்டு அழ… சுற்று தூரத்தில் சேரில் அமர்ந்து பின்னந்தலையில் இருகைகளைக் கோர்த்து கண், மூடி சோகத்தில் ஆழ்ந்திருந்த விஸ்வநாதன்… அதை கண்டுக் கொள்ளவேயில்லை.

காமாட்சி வந்துபார்த்தபோது.. குழந்தை கண்கள் செருகி. வலிப்பு வந்திருந்தது. கதறிக் கொண்டு, குழந்தையை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினாள்.

டாக்டர் அவளைத் திட்டியபடி சிகிச்சையளித்துக் காப்பாற்றினார். வீடு திரும்பிய காமாட்சி மருமகனிடம் கோபமாய் கேட்டாள். “உங்களுக்கு மனசாட்சியே இல்லியா மாப்பிளே? குழந்தை வலிப்பு வரவரைக்கும் அழுதிட்டிருக்கு. அதைத் தூக்கணும்னு கூடவாத் தோணலை?”

”சனியன்.. சாகட்டும்னுதான் தூக்கலே! மறுபடி எதுக்கு இங்க கொண்டு வந்தீங்க? அதை எங்கனாச்சும் ஆறு குளம்னு வீசிட்டு வாங்க… என் உயிராவது மிஞ்சட்டும்.”

கமலி அதைக்கேட்டு விசும்பியது கணவனுக்காகவா, குழந்தைக்காகவா என்று காமாட்சிக்கு விளங்கவில்லை. ஒரு முடிவுக்கு வந்தாள்.

“பாசத்துக்கும்.பாலுக்கும் வழியில்லாத இந்த வீட்ல என் பேத்தி இருக்க வேணாம்… அவளை வளர்க்கிற அளவுக்கு என் உடம்புல தெம்பு மிச்சமிருக்கு. நான் வளர்த்துக்கிறேன்.” என்று அன்று தன் வீட்டிற்கு தூக்கி வந்தாள் காமாட்சி.

காமாட்சிக்கு கமலி தவிர முகுந்தன் என்ற மகனும் உண்டு. மகன், மருமகள் தீபா, குழந்தைகள் பிருந்தா, வினிதா என்று கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். அவர்களுடன் சிந்துவும் சங்கமம் ஆனாள்.

சிந்து பிறக்கும் போது சற்றே நிறம் மட்டம். காமாட்சி பேத்திக்கு கஸ்தூரி மஞ்சள், ரோஜா இதழ்கள், பச்சைப்பயிறு என கலந்து குளிப்பாட்டி ஜொலிக்க வைத்தாள்.

முகுந்தனும், தீபாவும் கூட அவளைக் கொண்டாடி வளர்த்தனர். ஆனாலும் பெற்றோர் அரவணைப்பின்றி ஏக்கத்துடன் வளர்ந்தாள் சிந்து.

அத்தியாயம் – 5

காமாட்சி மருமகள் வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் சிந்துவை உடன் அழைத்துச் செல்ல தவறுவதில்லை. விஸ்வநாதனின் முகம் அவளைப் பார்த்தாலே கடுப்பாகும். கமலியோ ரெண்டுங்கெட்டவளாய் தவிப்பாள். தவிர்த்தாள். பாஸ்கரும், வித்யாவும் ஜாலியாய் கேரம் விளையாடுவதை ஏழு வயது சிந்து தயக்கத்துடன் தள்ளி நின்று பார்ப்பாள்.

“ஏய் எப்படியிருக்கே? எங்க கூட விளையாட வாயேன். ” என்று தோழமையாய் தான் அவளிடம் பேசமுடிந்ததே தவிர தங்கை என ஒட்ட முடியவில்லை.

சிந்துவுக்கோ அண்ணாவின் மடியில் அமர வேண்டும். அக்காவின் மடியில் படுத்துக் கொள்ள வேண்டும். அவர்களுடன் கண்ணாமூச்சி ஆட வேண்டும் என்று கொள்ளை ஆசை!

காமாட்சி ஏதாவது சாக்கு போக்கு சொல்லி சிந்துவை அங்கே விட்டு விட்டு இருட்டும் நேரத்திற்கு தான் வருவாள்.

ஆனால் சிந்துவுக்கு தான் தர்ம சங்கடமாக இருக்கும். விஸ்வநாதன் தன் பக்கத்தில் பாஸ்கர், வித்யாவை அமர வைத்து ஒன்றாக உணவருந்தி தான் பழக்கம். கமலி கணவருக்கு பயந்து சிந்துவை சமையல் கட்டிலேயே அமர வைத்து தட்டில் சாப்பாடு வைத்து “இங்கேயே சாப்பிடு! ஏதாச்சும் வேணுமின்னாகூப்பிடு சரியா?” என்று விருந்துக்கு வந்த உறவினரின் பெண் போல… உபசரிப்பாள்.

எட்டி எட்டி அவர்களை பார்த்துக் கொண்டே சாப்பிடுவதிலும் கூட அந்த சின்னப் பெண்ணிற்கு ஒரு வித திருப்தி ஏற்பட்டதென்னவோ உண்மை!

அன்றைக்குப் பார்த்து தான் விஸ்வநாதனும் தன் இரண்டு குழந்தை கள் மீதும் அதிகப்படியாய் அன்பை கொட்டுவார்கள். கை நிறைய திண் பண்டங்கள் வாங்கி வந்து சிந்துவின் எதிரிலேயே மற்ற இருவருக்கும் தருவார்.

பாஸ்கர் தான் சிரிப்பான்.

”என்ன டாடி நீங்க? நான் என்ன சின்னக் குழந்தையா? இப்பவும் காராசேவு, மிக்ஸர் வாங்கி வந்து தர்றீங்க?” என்றான் கரகர குரலில் பத்தாவது படித்துக் கொண்டிருந்த பாஸ்கர்.

“எத்தனை வயசானா என்ன? நீங்க ரெண்டு பேரும் என் செல்லக் குட்டிங்க தான்! ” என்ற படி சிந்துவை பார்த்து முறைக்க… தூணின் பின்னால் உடலை மறைத்துக் கொள்வாள்.

அப்பா அங்கிருந்து நகர்ந்த பின் பாஸ்கர் அவளை அழைப்பான்.

“ஏய் பாப்பா இங்கே வாயேன்!”

வந்தாள்.

“சாப்பிடறியா?”

“வேணாண்ணா… அப்பா திட்டப் போறார்!” என்று எச்சரிப்பாள் வித்யா.

சிந்து வேண்டாமென தலையாட்டி மவுனமானாள்.

அங்கு நடக்கும் விஷயங்கள் கமலியை உறுத்தவே செய்யும். ஆனாலும் அவள் கரம் பற்றி மடியில் அமர்த்தி கன்னத்தை வருட… ஏதோ தயக்கம் தடுத்தது.

இப்படியே நாட்கள் நகர… சிந்து பெரிய மனுஷியான போது மூன்றாம் மனுஷி போல் தான் கமலியால் சென்று வர முடிந்தது. அப்போதும் விஸ்வநாதன் செல்லவில்லை.

முகுந்தன் நல்லவன் தான். அரசாங்க உத்யோகம் பார்ப்பவன். ஆனாலும் சமய சந்தர்ப்பம் பொல்லாததாயிற்றே. நாக்கு திடீரென்று தேவையில்லா வார்த்தையை கொட்டுமே! யாராலும் பேத்திக்கு ஒரு பேச்சு வந்துடக்கூடாதென்பதில் உறுதியாய் இருந்த காமாட்சி. அவளின் தேவைகளுக்காக உழைத்தாள்.

காமாட்சிக்கு அருமையான கைமணம். சமையலில் ராணி! காலை, மாலை வேளைகளில் எல்லா வகை பலகாரமும் செய்து விற்பாள். அந்த வருமானம் தான் பேத்தியை இளவரசி போல் வளர்க்க உதவியது படிக்க வைத்தது.

முகுந்தனும் அம்மாவின் குணம் புரிந்து நடந்து கொண்டான்.

‘இவங்களும் உன் பேரப்பிள்ளைங்க தானே? அதுங்களுக்கு இதெல்லாம் வாங்கித் தரணும்னு தோணாதா?’ என்று சங்கடமாய் கேட்டு, அம்மாவின் உழைப்பை அதிகப்படுத்தியதில்லை. மாறாக, அவனும் தன் குழந்தைகளுக்கு எதை வாங்கினாலும் சிந்துவிற்கும் சேர்த்து வாங்குவான்.

சிந்து, பிருந்தா, வினிதாவுடன் விளையாடுவாள். பாட்டியுடன் இருந்த நேரம் அதிகம். பாட்டி சமைப்பதை வேடிக்கை பார்ப்பது தான் பிடித்த பொழுதுபோக்கு. அவள் முந்தானை வாசத்திலே உறங்கி தான் பழக்கம். அப்படிப்பட்ட உறவுச்சங்கிலி ஒருநாள் உடைந்தது.

ஒவ்வொரு மனித உயிரும் இலையின் நுனியில் ஒட்டிக் கொண்டி ருக்கும் பனித்துளி போல் தான். எப்போது உதிரும் என்று சொல்ல முடியாது.

அப்படித்தான் காமாட்சியும் ஒருநாள் உறக்கத்திலேயே இந்த உலகை விட்டுப் போயிருந்தாள்.

சிந்துவிற்கு ஒன்றுமே புரியவில்லை, அந்த பதினைந்து வயதில் உலகம் ஒரு பெரிய அரக்கனாக பயமுறுத்தியது. இனி யார் எனக்காக என்ற கேள்வி அந்த பெண்ணை சுழன்றடித்து சுருட்டிப் போட்டது.

விஸ்வநாதன், கமலி, பாஸ்கர், வித்யா எல்லோரும் வந்தார்கள். சிந்து அழுதழுது களைத்து கரைந்துப் போனாள். அவளுக்கு ஆறுதல் சொல்லத்தான் யாருமில்லை. காரியம் முடிந்தது.

கமலியும், விஸ்வநாதனும் புறப்பட்டனர். தீபா வியப்புடன் அவர்களைப் பார்த்தாள்.

“அண்ணி”

“சொல்லு தீபா. ”

“என்னண்ணி நீங்க பாட்டுக்கு கிளம்பிப் போறீங்க?”

“வீட்ல வேலையிருக்கு தீபா. இல்லேன்னா இன்னும் நாலைஞ்சு நாள் இருந்துட்டுப் போவேன்.”

“நான் அதைக் கேக்கலை அண்ணி. இவளை இங்கேயே விட்டுட்டுப் போறீங்க?”

கமலி திடுக்கிட்டு கணவனைப் பார்க்க, விஸ்வநாதனின் முகம் மாறியது.

“ஆமாங்கக்கா! அம்மா இருந்தவரைக்கும் சரி. அவங்களே போய் சேர்ந்துட்டாங்க.” முகுந்தனிடமிருந்து தயக்கமாய் வெளிப்பட்டன வார்த்தைகள்.

சிந்து கமலியின் அருகில் வந்து நடுங்கும் விரல்களால் அவள் கைகளைப் பற்றினாள்.

“வந்திடறேன்மா.” சிந்து அழுதபடி கேட்க… கமலியும் அழுதாள். “இதிலே யோசிக்க என்னயிருக்கு? அது உங்க பிள்ளை! உங்க கூட இருக்கிறது தானே நியாயம்? ஏதோ காமாட்சியால முடிஞ்சது. பதினைஞ்சு வருஷமா தாங்கிப் பிடிச்சு வளர்த்திருக்கா. முகுந்தனுக்கும் ரெண்டு பொட்டப்புள்ளைங்க இருக்கே? உங்க பாரத்தை அவன் தோள்ல வைக்கிறது நியாயமில்லையே?” ஊரார் ஆளாளுக்குப் பேச…

விஸ்வநாதன் சினத்துடன் மனைவியைப் பார்த்து தலையாட்டுகிறார்.

‘சனியனை கூட்டிட்டு வா.’ என்பது போல.

அத்தியாயம் – 6

இதுவரை அவள் உணர்ந்திராத உணர்வு அது! பாட்டி இறந்தது பெரிய துக்கம் தான்! ஆனால் வறண்டிருந்த தொண்டைக்குள் அமுதம் இறங்கினால் எப்படி யிருக்கும்? இனி எப்போதுமே அம்மா, அப்பாவுடன் இருக்கலாம். அம்மாமுகம் பார்க்க மாட்டோமா? என பாட்டி அழைத்துச் செல்லும் நாட்களுக்காக இனி ஏங்கி காத்திருக்க தேவையில்லை.

சிந்து உற்சாகமாயிருந்தாள்.

விஸ்வநாதனுக்குத் தான் ரத்தக் கொதிப்பு அதிகமாயிற்று. தனிமையில் பேசுவது வாடிக்கையானது. அதுவும் கோபமாக…

கமலி ‘இவள் வந்திருக்க வேண்டாமோ?’ என கவலைப்பட்டாள். பாஸ்கர் எம்.பி.பி.எஸ். படித்துக் கொண்டிருக்க வித்யா பி.பி.ஏ. பைனல் இயர்.

வந்த அன்று சிந்து தவித்தாள்.

பாட்டியிருந்த வரை அவளை கட்டிப் பிடித்து படுத்து தான் பழக்கம். தனியே படுத்ததில்லை. தனிமை என்றால் பயம். யாருடன் படுப்பது?

அவள் தயங்கி நிற்க… சூழ்நிலை புரிந்தவளாய் வித்யா அவள் கைப் பற்றி அழைத்து தன்னருகே படுக்க வைத்துக் கொண்டாள்.

காலை நேர பரபரப்பு… கமலி சத்தம் போட்டபடி சமைத்துக் கொண் டிருப்பது, அப்பா சேரில் அமர்ந்தபடி காபிக்காக அதிகாரம் செய்வது, உடம்பில் நீர்த்திவலைகள் அப்பியிருக்க, இடுப்பில் கட்டிய டவலுடன் ஈரத்தலையை கைகளால் உதறியபடி வேகமாய் நகர்ந்த அண்ணனின் பர பரப்பு, பெயருக்கு எதையோ சாப்பாட்டு “லஞ்ச் பாக்ஸ் எங்கேம்மா?” என்று அம்மாவை அவசரப்படுத்தி பேகை மாட்டிக் கொண்டு ஓடிய வித்யா… என பாடப்புத்தகத்தில் பிடித்த உறவுகள் உருவங்களாக நடமாட ‘இது என் குடும்பம்’ என்று புதிதாய் அவர்களை ரசித்தாள்.

எப்போதும் சிந்துவிற்கு பாட்டி தான் தலைவாரி பின்னலிடுவாள். சீப்பும் கையுமாக கமலியின் முன் வந்து நின்றாள்.

“அம்மா”

‘என்ன?’ கணவருக்கு தோசை வார்த்துக் கொண்டிருந்தவள் கேட்டாள்.

“நேரமாச்சு ஸ்கூலுக்குப் போகணும்”

“அதுக்கென்ன?”

“ஜடை போட்டு விடும்மா”

“என்ன பண்ணிட்டிருக்கேன் நான்? அதோ அவர்சாப்பிடறதுக்காக ரெடியா இருக்கார். இதோ தோசை போட்டிட்டிருக்கேன். இப்ப வந்து இதைப் போடு அதைப் போடுன்னுகிட்டு? இத்தனை வயசாகுது. நீயே போட்டுக்க மாட்டியா?”

“தீபா அத்தை தான் பின்னிவிடுவாங்க.”

“நல்லா வளர்த்திருக்காங்க. வித்யால்லாம் அவளே தான் அவ வேலையெல்லாம் பார்த்துப்பா! நீயும் பழகிக்க இன்னைலேர்ந்தே.” அம்மாஅப்படி பேசியது கூட வருத்தமில்லை. ஆனால் பக்கத்து வீட்டு பெண்ணிடம் பேசுவது போன்ற தொனிதான் சிந்துவை வருத்தப்படுத்தியது.

காமாசோமாவென்று கோணல்மானலாய் வகிடெடுத்து பின்ன லிட்டு பள்ளிக்கு சென்ற போது…

முதல் வகுப்பு ஆரம்பித்துவிட்டிருந்து.

சிந்து… கிரவுண்டில் வெயிலில் முதல் வகுப்பு முடியும் வரை நிற்க வைக்கப்பட்டாள்.

சிந்து தன்னிலை.புரிந்து கொண்டாள். அவள் அந்த வீட்டின் வேண்டாத விருந்தாளி.

அம்மாவை எதற்காகவும் அவள் தொந்தரவு செய்வதில்லை. வீட் டிற்கு வந்ததும் பலமுறை பின்னலிட்டு மடித்துக் கட்ட பழகினாள். தன் துணிமணிகளை தானே துவைத்துக் கொண்டாள். மற்றவர்களின் துணிகளை கமலி தான் துவைப்பாள்.

சிந்து செய்வதை ஏனோ தடுக்கவில்லை.

தனக்கு வேண்டியதை பசியிருப்பினும் அளவாய் போட்டு சாப்பிட்டாள்.

எதற்காகவும் திட்டுவது தப்பில்லை. ஆனால் அந்நியமாய் திட்டுவதை தான் மனசு ஏற்க மறுத்தது.

ஒருநாளும் அம்மா தன்னிடம் வித்யாவிடம் பேசுவது போன்றோ, சிரிப்பது போன்றோ இல்லாதது வலித்தது.

ஒரு விடுமுறை நாளில் அம்மாவிடம் கேட்டே விட்டாள். துணிகளைமொட்டை மாடியில் உலர்த்திக் கொண்டிருந்தாள் கமலி.

“அம்மா”

திரும்பியவள் சலனமின்றி ”என்ன” என்றாள்.

“அப்பாவுக்கு ஏம்மா என்னைப் பிடிக்கலே?”

கொடியில் துணியைப போடப்போன கைகள் இறங்கின. சில கணங்கள் கழித்து, “தெரியாது ” என்றாள்.

“அப்ப உனக்கு தெரிஞ்சிருக்கணுமேம்மா என்னை உனக்கு ஏன் பிடிக்கலே?”

இந்த கேள்வியை சத்தியமாய் கமலி எதிர்பார்க்கவில்லை. மகளின் முகத்தை ஏறிட்டாள்.

அழகான வட்ட முகத்தில் அலைபாய்ந்த ஏக்கத்தை காண என்னவோ செய்தது.

தன்னை சுதாரித்துக் கொண்டு மறுபடி உலர்த்த ஆரம்பித்தாள்.

“ஏம்மா?” என்றாள் மறுபடி சிந்து.

நிதானமாய் சொன்னாள்.

“இதுக்கு என்கிட்ட பதிலில்லே!”

“…?”

“இதோ பார் இந்த மாதிரியெல்லாம் பேசி என்னை தொந்தரவு பண் ணிட்டிருக்காதே? அவர் காதிலே விழுந்தா ஹாஸ்டல்ல எங்கேயாச்சும் சேர்த்து விட்ருவார். பார்த்து நடந்துக்க!”

குரலில் இருந்த கடுமை. அவளை மிரள வைத்தது. அம்மாவின் மேல் புதிதாய் பயம் உண்டானது.

அந்த வீட்டில் வித்யா மட்டுமே அவளிடம் சகஜமாக பழகுகிறாள். பள்ளியில் நடந்த விஷயங்களை அவளிடம் பகிர்ந்து கொள்வாள். சிந்துவின் குரல் அந்த வீட்டில் அப்போது மட்டுமே ஒலிக்கும்.

பாஸ்கர் ஸ்பெஷல் கிளாஸ், நண்பர்கள் வீடு என்று தாமதமாகத் தான் வீடு திரும்புவான். ஆனால் படிப்பில் கெட்டி. அப்பாவிடமும், அம்மாவிடமும் பேசுகிற அளவுக்கு வித்யாவிடம் கூடப் பேசுவதில்லை. அவன் ஒரு டைப். சிந்துவைப் பார்த்தால் சினேகமாய் புன்னகைப்பான். எப்போதாவது ‘ஹாய் ஹலோ’ அவ்வளவுதான்.

எம்.பி.பி.எஸ்.ஸை வெற்றிகரமாய் முடித்து விட்டு எம்.எஸ். படிக்க ஆசைப்பட்டு அப்பாவின் முன் வந்து நின்ற பாஸ்கரை… பயத்துடன் பார்த்தாள் கமலி.

ஏற்கனவே பூர்வீக சொத்தை விற்று தான் அவனை டாக்டருக்கு படிக்க வைத்தார் விஸ்வநாதன்.

இப்போது…?

அவள் பயந்தபடியே வாக்குறுதி கொடுத்தார் விஸ்வநாதன்.

”படிப்பா எவ்ளோ வேணும்னாலும் படி! காவேரிப்பாக்கம் நிலத்தை வித்துட்டாப் போச்சு”

திக்கென்றானது கமலிக்கு!

இருப்பதோ அந்த அஞ்சு ஏக்கர் நிலம் மட்டும் தான்! அதை வித்யாவின் திருமணத்திற்கென நம்பியிருந்தாள்.

அதை இவன் படிப்புக்கு விற்று விட்டால்… வித்யாவுக்கு? தனிமையில் கணவனிடம் கேட்டாள்.

– தொடரும்…

– எனக்கெனவே… நீ… கிடைத்தாய்! (நாவல்), தேவியின் கண்மணி, ஏப்ரல்-15, 2011.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *