எது நிஜம்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 17, 2025
பார்வையிட்டோர்: 272 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மூன்று நாட்களாய் மழை. பத்து நிமிஷம் அடித்து பத்து நிமிஷம் காயும் மழையில்லை. பிசுபிசுவென ஓயாது நச்சரிக்கும் தூறல். வெளியிலும் போக விடாது, உள்ளேயும் இருக்க விடாது இம்சை. வாசலுக்கும் உள்ளுக்குமாய் பின்னால் கையைக் கட்டிக்கொண்டு அலைந்தேன். ஊஹூம் ஒரு ‘கேஸ்’ கூட வருவதாய்த் தெரியவில்லை. இத்தனை மழைக்கு இதென்ன ஒரு ஜலதோஷ ஜூரம் கூடவாயில்லை? அலுப்புத் தட்டிற்று. மறுபடியும் வாசலில் வந்து எட்டிப் பார்த்தேன். என் பெயர் பொறித்த மரப்பலகையிலிருந்து இறங்கிய கசண்டாய் மழை ஜலம் மூக்கின் மேல் சொட்டிற்று.என் பெயரே பாதிக்குமேல் அழிந்துபோயிருந்தது. போர்டை மாற்ற இன்னும் கைவரவில்லை. வந்தவர்களிடம் சொல்லிக்கொள்ளலாம். ‘இதென்ன ஸார் நாடறிந்த பார்ப்பானுக்குப் பூணூல் எதற்கு ?” ஆனால், விஷயம் என்னவோ வேறு. 

அதற்கென்ன பண்ணுகிறது ? சம்சாரியென்றால் எல்லாவற்றையும்தான் கணக்குப் பண்ண வேண்டியிருக் கிறது. ஒரு சமயம் போலவே இருக்கிறதா? பாரு எதற் கெடுத்தாலும் சொல்கிறாள்: “இரண்டு தம்பிடியுடன் ஒரு தம்பிடி சேர்த்தால்தானே அரையணா ஆகும் ? வெறு மெனே இரண்டு தம்பிடியை மாத்திரம் நிறுத்தி வைத்துப் பாருங்களேன். அதற்கு அரையணா மதிப்பு உண்டா?” 

இதோ இப்போத்தான், இரண்டு நிமிஷத்துக்கு முன்னால் கூட சண்டை: அறையில் அதன் ஆவி இன்னும் கலையவில்லை. 

“தரித்திரம் பிடித்த மனசு உனக்கு”

“ஆஹா, தாராளப் பிரபுவைத்தான் பார்த்துண்டே யிருக்கேனே. நாளுக்கு நாள் கண்ணுக்கெதிரே. சிபிச் சக்ரவர்த்தியை! இருக்கிறதையெல்லாம், கடனாயும் தானமாயும் கொடுத்துவிட்டு ஏராளமாய், “ஹோ லட்சுமணா!” என்று நிக்கிறதை!” 

“பாரு, நீ ‘லா’ பாயிண்டெல்லாம் ஷோக்காய்ப் பிடிக்கிறாய். உங்கப்பா உன்னைப் பேசாமல் வக்கீலுக்குப் படிக்கப் போட்டிருக்கலாம்.” 

“ரொம்ப சரி போங்கோ! நீங்கள் டாக்டருக்குப் படித்திருக்கிறமாதிரிதான்!” 

எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. 

“என்னைக் கோபப்படுத்த வேண்டுமென ரொம்பவும் சிரமப்படுகிறாய். ஆனால் எனக்கே இப்போது கோபம் கூட வருவதில்லை. கோபம் வருகிற இடத்தில் சிரிப்புத் தான் வருகிறது. எது நிஜம், கோபமா ? சிரிப்பா? இல்லை எனக்கு சொரணையற்று விட்டதா?” 

விரித்த துணிமேல் கால் கட்டை விரலைச் சப்பியபடி தூங்கிவிட்ட குழந்தையைப் பார்த்தபடி, அவள் யோசனையாய் நின்றாள். 

“என்னைக் கேட்டால்?” 

நான் தொண்டையைக் கனைத்துக் கொண்டு கௌரவத்தை மீட்க முயன்றேன். “எனக்கு இப்பொழுது ஒரு எண்ணம் தோன்றிற்று.” 

“உங்களுக்கு ஒண்ணுதானே! எனக்கு ஒன்பதாயிரம் தோணிண்டேயிருக்கு.” 

“பேச்சில் மடக்குகிறது அப்புறம் இருக்கட்டும் எனக்குத் தோன்றியத்தைச் சொல்கிறேன். ஒரு பத்து வருஷங்களுக்கு முன்னால் என்னிடம் நீ இப்படிப் பேசித் தான் இருக்க முடியுமா?”

குழந்தைமேல் தாழ்ந்த அவள் பார்வை மெதுவாய் உயர்ந்து என்னைச் சிந்தித்தது. 

“பத்து வருஷங்களுக்கு முன்னால் நான் இப்படி இல்லை-” 

“ஓஹ்ஹோ !” 

நகைப் பெட்டியைக் கெட்டியாய் அமுக்கிப் பிடித்துக் கொள்வதுபோல் அவள் கைகள் ஒன்றன்மேல் ஒன்று இறுகிப் பொத்திக் கொண்டன. 

“பத்து வருஷங்களில் நான் இப்படி ஆனேன்.* இரண்டு சொட்டுக்கள் விழியோரங்களில் புறப்பட்டு மன மிலாது கன்னங்களில் வழிந்து மோவாயிலிருந்து உதிர்ந் தன. எனக்கு மூச்சுத் திணறிற்று. 

அவள் சரேலென சமையலறைக்குள் போய்விட்டாள். 

நான் வாசலறைக்குப் போய், மேஜைமேல் கையைக் கோர்த்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டேன். 

என்னையுமறியாமல் என்னிலிருந்து ஒரு பெருத்த மூச்சு தேம்பிப் பிரிந்தது, அதன் அசதியை உணர்கையில் எனக்கே ஆச்சர்யமாயிருந்தது. மிகப் பழைமையான மூச்சு. வெகு நாட்களினடியில் புதைந்திருந்து இப்போதுதான் விடுதலையடைந்த மூச்சு. நாம் பிறக்கு முன்னரே நம் உயிர், வாழ்வில் விடப்போகும் மூச்சுக்களை எண்ணி நம் உடலில் அடைத்து வைத்திருந்தால், பின் தங்கிவிட்ட இந்த மூச்சின் இடம் எங்கிருந்திருக்கும் ? அது போனதும் எனக்கே கொஞ்ச நேரம் உடல் லேசாய்க் காற்றில் மிதப்பதுபோல் இருந்தது. 

“பிங்! பிங்!” 

குழாய் வழி காற்று ஊதும் சப்தம். பாரு அடுப்பில் நெருப்பை எழுப்புகிறாள். திடீரென அவள் மேல் எனக்கு மனம் பரிதபிக்கிறது. பாரு! உன்மேல் குற்றமில்லை; நீ எழுப்பித்தான் பார்க்கிறாய் ஆனால் குழந்தாய், நீ ஊதும் இடத்தில் சாம்பல் பூத்து மாத்திரம் போகவில்லை; நீர்த்தே போய்விட்டது. நீ என்ன செய்ய முடியும்? பாரு ! நீ சொன்னது நிஜம் உனக்கு நான் வணங்குகிறேன் பத்து வருடங்களுக்கு முன் நீ இப்படி இல்லை. 

ஆனால், பத்து வருடங்களுள் எவ்வளவு நேர்ந்துவிடு கின்றன? பிள்ளைப் பேறுகள். வைத்தியன் வீட்டில்தான் வியாதி. குழந்தைகள் பெரியவர்களின் பிடுங்கல், ஆசா பாசங்கள் எல்லாம்தான். மடு மேடாகிவிடுகிறது மேடு மடுவாகி விடுகிறது. இறக்கைகள் முளைத்து மூலைக்கு மூலை பட்சிகள் பிய்த்துக் கொள்கின்றன. கூடு கலைந்து விடுகிறது. பொட்டலம் அவிழ்ந்து விடுகிறது. 

ஆசையே இல்லை என்று சொன்னவர்களுக்கு ஆசை ஏற்படுகிறது.ஏற்பட்ட ஆசை நிறைவேறுகிறது; நிறை வேறின ஆசை துராசையாக மாறுகிறது. அப்புறம் கோணி, குதிர், பூமி, ஆகாசம் எதுவுமே போதவில்லை. நான் மாத்திரம் ஏணிபோல், சார்த்திய இடத்திலேயே இருக்கிறேன். 

“போஸ்ட்!” 

கடிதத்தைப் பிரிப்பதற்கு முன்னால் முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்தேன். ஒன்றும் நம்பிக்கையாயில்லை. கடன் கொடுத்த பணத்தைத் திருப்பித் தருவோனோ டாக்டர் பில்லைத் தீர்ப்பவனோ எவன்? பிரித்தேன்.. பாச்சா எழுதி இருக்கிறான்; “யார் எழுதி இருக்கா?” என்று கேட்டுக் கொண்டே பாரு வந்தாள். 

‘அண்ணாவுக்கும் மன்னிக்கும் அநேக நமஸ்காரம். நெடுநாட்களாக எழுதாததற்கு மன்னிக்கவேணும். வியாபார அலுவலில் வாயில் ஈ புகுந்தது கூடத் தெரிய வில்லை. நிற்க: நான் நம் வீட்டை இடித்துக் கட்டிக் கொண்டிருக்கிறேன். கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் ஒரு சிக்கல்: சின்ன விஷயம் தான் என்னவோ ஏதோ என்று திகில் அடையாதே. இஞ்சினீயர் போட்ட பிளானில் உன் பாகத்துக்கு விழுந் திருக்கும் அறையும், கூடமும் தடங்கலாய் நிற்கின்றன. உன் சம்மதத்தைப் பற்றி எனக்குத் துளிக்கூட சந்தேகம் பண்ணிவிட் கிடையாது. ஆகையால் இடிக்க ஏற்பாடு டேன். இடித்து மேலே கட்டடமும் எழும்பிக் கொண்டிருக் கிறது. ஆனால் செல்லாவின் பிடுங்கல்தான் தாங்க முடிய வில்லை. அண்ணாவுக்கு எழுதினேளோ எழுதினேளோ? என்று தூங்கவிடமாட்டேன் என்கிறாள். அதனால் அண்ணா உனக்கு எழுதிவிட்டேன். கிரஹப்ரவேசம் முகூர்த்தம் குறித்ததும் தெரியப்படுத்துகிறேன். நீயும் மன்னியும் அவசியம் வரணும்; ஏமாற்றக் கூடாது-‘ 

“இதென்னடிம்மா பகல் கொள்ளையாயிருக்கே! இந்த அக்ரமத்தைக் கேப்பாரில்லையா?”

பாதியிலேயே பாரு இரு கைகளாலும் வாயைப் பொத்திக் கொண்டாள். விழிகள் வளையங்களாயின. 

“இரு இன்னும் இருக்கிறது ஒரு பின் குறிப்பு:- ‘அண்ணா நீ குறைப்பட்டுக் கொள்ளாதே. கிரயமாய் ஏதாவது வேணுமானாலும் – பிறகு உன் இஷ்டம். உன் கஷ்டம் நமக்கு எதுக்கு என்கிறாள் செல்லா.” 

“கையெழுத்து என்ன செல்லாவா? செல்லா சொற்படி யாச்சாவா? அடிக்கிறதையும் அடிச்சுட்டு உங்கள் தம்பி யும் என் ஓர்ப்படியும் நம்மைச் சிரிக்கச் சொல்றாளா ? நீங்களும் இப்போத்தான் சொன்னேள், கோபம் வருகிற இடத்தில் சிரிப்பு வரதுன்னு”. 

அவள் இடிக்கையில் எனக்கு மறுபடியும் சிரிப்புத்தான் வந்தது.ஆனால் காதிலும் மூக்கிலும் ஆவி பறந்தது. 

“என்ன செய்யப்போறேள்? ஏதோ சாமி தரிசனத் துக்கோ குழந்தைகளுக்கு முடியிறக்கவோ போனால் பொங்கித் தின்ன நமக்குன்னு நாலடி இருக்குமேன்னு யார்த்தேன்.” 

“அதுக்கென்ன தம்பி வீட்டிலேயிறங்கினால் ஆகாதா? சத்திரம் மாதிரி வீடு பெரிதாயிருக்காதா? என்ன அப்படிப் பார்க்கிறாய்?” 

“நீங்களென்ன இப்படியேதான் இருக்கப் போறேளா கடைசி வரைக்கும்?” 

“ஏன், எப்படி இருக்கிறேன்?” 

“உங்கள் மனசுக்குள்ளே நீங்கள் பெரிய ரிஷி என்று எண்ணமா?”

“ஐந்து குழந்தைகளைப் பெற்று வைத்துக்கொண்டு நான் ரிஷி என்றால் யார் ஒப்புக் கொள்வார்கள்?” 

“உங்களுக்கு அந்தப் பொறுப்பு இருக்கோ?” 

எனக்குக் கோபம் வந்துவிட்டது. “நீ வாத்தியார் மாதிரி என்னை நிறுத்தி வைத்துக் கேட்கிறது நன்றா யில்லை. என்னை என்ன பண்ணச் சொல்கிறாய்? அவன் என் தம்பி.” 

“யார் இல்லேன்னா?” பாருவுக்கு சீற்றம் தாங்க முடியவில்லை. கைகளை முஷ்டித்து மேஜைமேல் ஊன்றிக் கொண்டாள். “அவர் தம்பிதான். நீங்கள் அண்ணா அண்ணாவிலும் அண்ணா. முத்தண்ணா…”விடுவிடென்று உள்ளே சென்றாள். 

எனக்கு மஞ்சள் பித்தமாய் நெஞ்சுதான் கசந்தது. இருந்தும் நான் என்ன செய்ய முடியும்? பாச்சாவோடு சிண்டைப் பிடித்துக் கொள்வதா? அவன் பிச்சையை வாங்கிக் கொள்வதா மறுப்பதா? இருந்தும் அவன் என் பாகத்திற்கு விழுந்து என்னைக் கேட்காமலே அழித்து விட்ட அறையை நினைக்கையில் எனக்குக் கண்கள் இருண்டன. என் அறையில்லை; என்னுடையது என்று நான் எதையும் கொண்டாடியதில்லை.அது அப்பா அறை. அப்பா வாசற்படி தாண்டி பேச்சுக்கோ பொருளுக்கோ போகமாட்டார். கோவிலுக்குப் போகும் நேரமும், சாப் பாட்டு நேரமும் போக. பாக்கி நேரம் ஜன்னலுக்குப் பக்கத்தில் போட்ட பலகைமேல் உட்கார்ந்து ஏதாவது படித்துக்கொண்டோ எழுதிக் கொண்டோ யிருப்பார். இரவு அங்குதான் படுப்பார். அப்பாவுக்கு எல்லா மருந்துக்கும் ஒரே மருந்துதான். அவர் இடுப்பில் நீமிண்டிக் கொண்டிருக்கும் வெள்ளி விபூதி சம்புடந்தான். “போடா ராமு. உன் ஊசிகளையும் புட்டிகளையும் தூக்கிக் குப்பையில் போடு. இந்தா, ஒரு சிம்டாவை எடுத்து அன்னத்தில் தூவி சாப்பிட்டால், எல்லாம் பறந் தோடிப் போகும்-” 

அப்பா அந்த அறையில், அந்த விசுப் பலகையின் மேல் தான் உயிர் நீத்தார். மருந்து மாயம் பார்க்கவில்லை. பார்க்க நேரம்கூட இல்லை. இரவு எட்டு இருக்கும்; நான் கூடத்தில் அம்பிப் பாப்பாவோடு விளையாடிக் கொண்டிருந்தேன். அது விளக்கைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது. 

“ராமா! ராமா!!” என்று அப்பா கூப்பிட்டார். “என்னப்பா?” கூடத்திலிருந்தே கூவினேன். எனக்குக் குழந்தையுடன் விளையாடும் சுவாரஸ்யம். என் மூக்கையும் வாயையும் அதன் வயிற்றில் புதைத்துக்கொண்டு தேய்த் ததும் கிளுகிளுவென சிரிப்பு மத்தாப்பு கொட்டிற்று. 

“ராமா சுருக்கவா!” அப்பாவின் குரல் கணீ ரென்றது. “என்னப்பா?” என்று கேட்டுக்கொண்டே ஓடினேன், யார் தாய், யார் கன்று? 

“ராமா ! என்னை மெதுவாய் படுக்கவை. எனக்குக் கால் விழுந்துவிட்டது. இன்னும் கொஞ்ச நாழியில் போய் விடுவேன்-” 

“என்னப்பா? என்னப்பா சொல்றேள்??’ என் பதறினேன். என்னதான் நான் வைத்யனானாலும், என்ன தான் சாவு பழக்கமானாலும், நான் என் அப்பாவுக்கு மகன்தானே! 

“ஒண்ணுமில்லை ராமா, கவலைப்படாதே ஊஹூம்,தலைகாணி வைக்காதே – தலையைக் கீழே போடு” 

“அப்பா! அப்பா!!-” 

“உஷ்-இப்போ அழக்கூடாது. அப்புறம் அப்புறம், எனக்கென்னடா குறைச்சல்? ராமா ராமா என்று என் பிள்ளை பேரைச் சொல்கையில் ராமதாரகத்தைச் சொல்லிக்கொண்டே போகிறேன். அந்த ராமாயணத்தை என் கையில் வை. ராமா, நீ நல்லவன்; உலகத்தில் எப்படிப் பிழைக்கப் போகிறாய் என்று உன்னைப் பற்றித் தான் கவலை. ஆனால் அதற்கு நான்தான் என்ன செய்யமுடியும்? நான் என்ன சதமா? யார்தான் சதம்? உன் அம்மா கூப்பிடுகிறாள் போகிறேன். ராமா ராமா-” 

அந்த இடந்தான் என் பாகத்துக்கு விழுந்து என் தம்பி யழித்துவிட்ட என் அப்பாவின் அறை. என்னுடையது என்று எதையும் நான் கொண்டாடியதில்லை. அந்த விசுப்பலகையாவது இருக்கிறதோ அல்ல செல்லா அதையும் பிளந்து வென்னீரடுப்பில் சொருகி விட்டாளோ யார் கண்டது. யார் என்னத்தைச் செய்ய முடியும் எப்பவுமேதான் யார் என்னத்தைச் செய்ய முடிகிறது ? நியாயத்தை விதிக்க நான் மனுவா அல்ல மனுசொன்ன படிதான் எல்லாம் நடக்கிறதா? அவரவர்களுக்கு அவரவர் நியாயம். அதன்படி ஒரு பொது நிதி. அங்கு என் தம்பி வீட்டையழித்துக் கட்டி வாடகைக்கு விடப் போகிறான். அவனுக்கு ஏற்கெனவே மூன்று வீடுகள் இருக்கின்றன. இங்கு நான் இன்றைய பொழுது எனக்கு குடும்ப ஜீவனத்துக்கு ஒரு நோயாளியாவது வரமாட் டானா என்று காத்துக் கொண்டிருக்கிறேன். 

ரேழியில் ஒரு நிழல் தட்டிற்று. என்னப்பா என் பிரார்த்தனை உன் காதுக்கு எட்டிவிட்டதா? 

“டாக்டர் இருக்காரா?” 

“வாங்கோ வாங்கோ உட்காருங்கோ. என்னய்யா, மழை நின்று வரக்கூடாதா? ஒரே தொப்பலாய் இருக்கிறீர்களே!” 

வந்த ஆள் நாய்க்குட்டி போல் உடம்பை உதறிக் கொண்டான். என் முகத்தில் ஜலத் துளிகள் தெறித்தன. முகத்தைத் துடைத்துக் கொண்டேன். வந்தவனுடன் உடனே சண்டை போட முடியுமா? ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று வந்திருக்கிற பேரம். நினைத்துப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது. 

“டாக்டர்! நீங்கள் ரொம்பவும் கெட்டிக்காரர் என்று சொல்கிறார்கள்.” 

“எனக்கு வெட்கமாயிருக்கிறதே” என்றேன். அம் மாதிரி ஒருவரும் சொன்னதாய் நான் கேட்டதில்லை, இருந்தாலும் சொல்பவனை ஏன் தடுக்கணும்? 

“டாக்டர், நீங்கள் ரொம்ப நல்லவர் என்று கேள்விப்படுகிறேன்-” 

என் உற்சாகம் விழுந்தது. 

“டாக்டர், நீங்கள் ரொம்ப நல்லவர்” 

“டாக்டர், நீங்கள் பொருள் படுத்த மாட்டீர் என்று எனக்குத் தெரியும்-” 

“டாக்டரய்யா, உங்க கொளந்தை குட்டி நல்லா யிருக்கணும்.” 

“சரிதான் போ, வேலையைப் பாரய்யா !” என்று வெளியில் அனுப்ப எனக்குத் தைரியமிருக்கிறதோ? எதனால் நான் உருப்படவில்லை என்று எனக்கே தெரியும். 

அவன் கையைப் பிடித்தேன். தூக்கி வாரிப் போட்டது. நாடி தேரைபோல் தாவிக் குதித்தது. இவனுக்கு உள் ஜன்னியல்லவா கண்டிருக்கிறது! ஒருவர் துணையுமில்லாமல் எப்படி வந்தான்? தப்பி வந்தானா? அட ஈசுவரா வழியில் போவோர் பொறுப்பெல்லாம் என் தலையிலா? அவசர அவசரமாய் அவன் ஈர உடையை மாற்றி என் ஆடையில் உடுத்துப் படுக்க வைத்து மோவாய்க்கட்டைவரையிழுத்துப் போர்த் தினேன். சிவப்புக் கம்பளியிலிருந்து கழுத்துவரை வெட்டினாற்போல் தலை மாத்திரம் எட்டிப் பார்த்தது. இப்போதுதான் ஆள் முகத்தை சற்று அவகாசமாய்க் கவனித்தேன். அவன் முகம் வெறியில் களை கட்டி யிருந்தது. குழந்தைகள் கதையில் ஏன், கோட்டான்கள் கதையிலும்தான்- தலையை வெட்டியெறிந்த பிறகு தலை மாத்திரம் பேசிற்று என்கிற மாதிரி சிவப்புக் கம்பளியினடியிலிருந்து அவன் தலைமாத்திரம் பேசிற்று. 

பெயர் விலாசம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். “சரி என்ன உடம்பு?” 

“டாக்டர், நான் சொல்லப் போவதை நீங்கள் நம்புவீர்களா?” 

“சொல்லுங்கள்—” 

“நான் என் கண்ணால் கண்டேன்-” 

“நீ உன் கண்களை நம்பாதே” என்று நான் சொல்ல வில்லை. கண்கள் வேறு காண்பது வேறு; கண்டதை நம்புவது வேறு; இவை எல்லாவற்றையும் தாண்டி; ஆம்-பாரு, பாச்சா, குழந்தைகள், செல்லா. வீடு, அப்பா, வந்திருக்கும் நோயாளி, அவன் நோய், எல்லா வற்றையும் தாண்டிய உண்மை இருக்கிறதே அதுவேறு, இதெல்லாம் வந்தவனிடம் ஏதுக்கு? 

வெறுமெனே “சொல்லுங்கள்” என்றேன். 

“டாக்டர்,வேலைபோய் மூன்று மாதங்கள் ஆச்சு, இன்னும் விடியவில்லை. வீட்டு வாடகை, பால்காரன், மளிகைக் கடை,எங்கேயும் பாக்கி ” 

நான் கையமர்த்தினேன். அதற்கெல்லாம் மருந்து எனக்குக் கூட அகப்படவில்லை. நீங்கள் போக வேண்டிய இடம், கோவில். ஜோஸ்யன் Employment Exchange-‘” 

“டாக்டர், கொஞ்சம் பொறுங்கள். நான் யாரிடம் தான் சொல்லிக்கொள்வது? கைக் குழந்தைக்கு வயிற்றில் கட்டி. ராப்பகலாய் ‘வராட் வராட்டெனக் கத்திப் பிறரையும் தூங்கவிடுவதில்லை. 

“எதிர் வீட்டுக்காரன் நாய் வளர்க்கிறான். அந்தப் பெருமையில் நாயை கேட்டில் கட்டிப் போட்டிருக் கிறான். போவோர் வருவோர் மேல் அது பாய்கிற தினுசையும் குரைக்கிற தினுசையும் பார்த்தால், எந்த நிமிஷம் சங்கிலியை அறுத்துக் கொள்ளுமோ, தெருவில் விளையாடும் என் குழந்தைகளுக்கு என்ன நேர்ந்து விடுமோ எனக் கதி கலங்குகிறது. இன்று காலை என் நிலையைப் பற்றித் திடீரென என்னவோ யோசனை வந்து விட்டது. புழுங்கிக் கொண்டு வாசல் ஜன்னலில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். 

“பால்காரன் பசுவை ஓட்டிக் கொண்டு எதிர் வீட்டு லாந்தர் கம்பத்தில் கட்டினான். மார் உயரம் பசு.வெள்ளை வெளேரென்று. அதை பார்க்க என்றுமே எனக்குப் பிடிக்கும். ஆனால் ஏனோ மூன்று நாளாய்ப் பசுவைக் கட்டிக் கறக்கக் கொண்டு வரவில்லை. அவன் மாத்திரம் பால் குவளையோடு வந்தான். இப்போது அவன் தோளில் அணை கயிறு தொங்கிற்று. ஆனாலும் கன்று வரவில்லை. இரண்டு மூங்கில் சிம்புகள் வைத்துக் கட்டிய ஒரு தோல் பையை அக்குளில் இடுக்கிக் கொண்டு வந்தான். அதன் சந்துகளிலிருந்து வைக்கோல் எட்டிப் பார்த்தது. அதை இரண்டு மூன்று தடவை மாட்டு மடியில் முட்டிக் கம்பத்தில் சாய்த்துவிட்டு மாட்டைக் கறக்க ஆரம்பித்தான். 

“அந்தத் தோலை அடையாளம் கண்டு கொண்ட அதிர்ச்சியில் வயிறு பகீரென்றது. பட்டணத்தில் கன்றுத் தோல்கள் சகஜமான காக்ஷிதான். ஆனால் அதை அப்படிப் பார்த்ததும் எனக்குத் திக்கென்றாகிவிட்டது. சில சமயங்களில் அற்ப விஷயஙகள் கூட ஜரிப்பதில்லை. மூன்று நாட்களுக்கு முன் மொழு மொழு வென்று முழு உயிரோடிருந்த கன்று. 

குவளையுள் பால் பீறல்கள் ‘கிண் கிண்’ என்றன மார்பில் செம்மட்டியால் அடிப்பது போலிருந்தது. அந்தச் சப்தம் எனக்கு எப்பவுமே பிடிப்பதில்லை. அதில் எப்ப வுமே ஒரு பொய்மையிருப்பதாய் என் துணிபு. அது பால்காரனின் நாணயத்தை விளம்பரப்படுத்தும் சப்தம். அத்துடன் அது பொய் விளம்பரம் – 

‘அண்ணா நீ குறைபட்டுக் கொள்ளாதே. கிரயம் வேணுமானாலும்-பிறகு உன் இஷ்டம். உன் கஷ்டம் நமக்கு எதுக்கு என்கிறாள் செல்லா. 

“திடீெரென்று எதிர் வீட்டு நாய் உறுமிக் கொண்டு தோல் மேல் பாய்ந்தது. சங்கிலி கணகணத்தது. தோல் கம்பத்திலிருந்து சரிந்து நாயின் காலடியில் வீழ்ந்தது. இன்னொரு தாவு தாவி- சங்கிலியை மாட்டிக் கோர்த் திருந்த தாழ்ப்பாளுடன் கதவே பெயர்ந்துவிடும் போல் கிடுகிடுத்தது- முன் கால்களால் சுரண்டிப் பிராண்டி இன்னும் கிட்ட இழுத்துக் கொண்டது. அதற்குள் அதற்கு அவசரம் தாங்கவில்லை. 

“தோலின் தொடைப் பக்கம் கிழித்துக் கடிக்க ஆரம்பித்தது. காது வரை அதன் உதடுகள் மடிந்து கடைவாய்ப் பற்கள் வெளிறிட்டன. பிடித்தக் கடியை விடாது. தலையை உதறிக் கொண்டு பற்களினிடை யிலிருந்து உறுமுகையில் அதன் கண்கள் வெறியில் மங்கிப் பளபளத்தன.” 

இந்த ஆளுக்குக் கதை சொல்லும் வன்மையுடன் அவன் ஜூர வேகமும் சேர்ந்தோ ஏனோ அவன் சொல்லில் வசியமிருந்தது. அவன் விவரிக்கும் காக்ஷி கண்முன் படிப்படியாய் எழுகையில் அதனுள் என்னையும் இழுத்துக் கொண்டிருந்தான். என்னையறியாமல் அதில் என் இழைகளும் பாய ஆரம்பித்தன. 

குவளையுள் பால் உயர்ந்து கொண்டே நுரை மேல் பால் பீறல்கள் மெத்து மெத்தென வீழ்ந்தன. தோல் கன்றிலிருந்து வைக்கோல் பிரிகள் பிய்ந்து தரையில் சிந்தின. பசுவின் கண்களிலிருந்து தாரைகள் பெருகி வழிந்தன. 

கன்றுக்குட்டியின் முகத் தோலில் என் முகம் பொருந்தினாற் போல் இருந்தது. பசு முகத்தில் அப்பா முகத்தைக் கண்டேன். அப்பாவின் கண்களிலிலிருந்து மௌனமான கண்ணீர் தாரை தாரையாய் வழிந்தது. அப்பாவுக்கு ஏற்கெனவே கண்ணில் கோளாறும் உண்டு. 

“ராமா” என்று அப்பா என்னைக் கூப்பிடும் போதே அவர் குரல் அப்படி நெகிழும். அவருக்கு என் மேல் எப்பவுமே பாசம் கொஞ்சம் கூடத்தான். எனக்கும் அப்பா மேல் அப்படித்தான். 

“ராமா, எனக்கு சொத்து இல்லை. என் செல்வங்கள் எல்லாம் என் குழந்தைகள்தான். எதுவோ என்னால் முடிந்தது உங்கள் தலையில் கடன், பொறுப்பு என்று சுமத்தாமம் போய்விட்டால் அதுவேதான் இந்த ஜென்மத்தில் என்னால் முடிந்த மகத்தான காரியம். 

அப்பா கிராமத்தில் பள்ளிக்கூட வாத்தியார். சின்ன வயதில், முன்னுக்கு வரவேண்டிய சமயத்தில் நோய் வாய்ப்பட்டு சறுகி விட்டார். அவர் நோயால் படும் வேதனையைக் கண்டு நான் சபதம் பண்ணிக் கொண்ட விளைவாய்த்தான் டாக்டருக்குப் படித்தேன். அதனால் என்ன. படித்து முதலில் தேறிவிட்டால் மாத்திரம் போதுமா அதிருஷ்டம் வேண்டாமா? அம்பாளின் அருள் வேண்டாமா?” 

எனக்கு நேர் எதிரிடை பாச்சா. வகுப்புக்கு வகுப்பு பல்டி, வாத்தியார் பிள்ளை மக்கு என்ற வசனத்தைக் காப்பாற்றக் கங்கணம் கட்டிக் கொண்டாயாடா என்று அப்பா நொந்து கொள்வார். பரிக்ஷை வேளைக்குப் பட்டை பட்டையாய் விபூதி இட்டுக் கொண்டு பயபக்தி யாய் வேஷ்டி மேல் இடுப்பில் துண்டை முடிந்து கொண்டுகோவிலுக்குப் போய் தூணுக்குத் தூண் சுற்றி வருவான். 

பிரபோஜனம்? 

பாச்சாவுக்கு வீட்டுப் பொம்மனாட்குகளிடம் நல்ல பேர். உலக விவாரம் ரொம்பவும் தெரிந்தவன் என்று. அவன் போய் வாங்கிவரும் சாமான்கள் எப்பவுமே தரத் திலும் அளவிலும் உயர்ந்து விலையும் குறைந்திருக்கும். 

ஒரு தடவை என் அத்தை என்னை அடுப்பில் குழம்பு காயறது என்று அவசரமாய் உப்பு வாங்க அனுப்பினாள். 

அத்தை எப்பவுமே கொஞ்சம் கோபக்காரி. அவளைக் கண்டால் எனக்குக் கொஞ்சம் பயந்தான். 

அத்தை பெண் பாரு; அம்மா வரத்தைத் தான் வாங்கிக் கொண்டிருக்கிறாள். 

அந்த நாளிலிருந்தே நான் புத்தகப் புழு. படித்துக் கொண்டே தெருவில் நெருப்புக் கோழி போல் வளைந்து வளைந்து நடந்து சென்றேன். அதன் ஆபத்தைப் பற்றி அப்பா எத்தனையோ முறை எச்சரிக்கை பண்ணி அடித்துமிருக்கிறார்; ஆனால் சமயத்தில் எனக்கு மறந்து விடும். 

“உப்புக் கேக்கறையே ஏனம் கொண்டு வந்திருக்கையா?” என்று கடைக்காரன் கேட்டான். நான் திரு திருவென விழித்தேன். மறந்து விட்டேன். அப்போ தான் நினைவு வந்தது. நான் கடைக்கு எடுத்துப் போக அடுக்கை அத்தை அடுப்பின் அவசரத்தில், விசப் பலகை மேல் ‘ணக்’ என்று வைத்து விட்டுப் போன சப்தம். 

“பிடிசாமி மடியை, தொலையாத பேரம் பண்ண வந்தூட்டே !” என்று கடைக்காரன் எரிச்சலுடன் கத்தி னான். அவனுக்கு பேர நெருக்கடி. பேசாமல் மடியில் வாங்கிக் கட்டிக் கொண்டேன். போகிற வழியெல்லாம் படித்துக் கொண்டே சென்றேன். அத்தை வாசலில் கோபத்துடன் காத்திருந்தாள். “ஒரு காரியத்துக்கு அனுப்பிச்சால் எத்தனை நாழி?எங்கேடா உப்பு?” 

மடியை அவிழ்த்துக் கொட்டினேன். நாது உப்புக் கற்களும், ஒரு வற்றல் மிளகாய்க் காம்ம் கீழே விழுந்தன. திரு திருவென விழித்தேன். செல்லவும் வேண்டுமா? மடியை சரியாய்க் கட்டவில்லை. திரும்பி வந்த வழியெல்லாம் கதை சுவாரஸ்யம். 

அத்தை ஓவென இரைந்தாள். “ஒரு உப்புவாங்கத் துப்பு இல்லை. உலகத்தில் நீ எப்படித்தான் பிழைக்கப் போறாயோ? உனக்கு என் பெண்ணை வேறே கொடுக் கணும்னு இருக்கேன்-” 

விஷயங்களில் அவ்வளவு பெருமை வாய்ந்தவன் நான். அப்பாகூட அடிக்கடி சொல்வார். “ராமா முழிச்சுக்கோடா கண்ணைத் திறந்து சுற்று முற்றும் பார்.” 

அப்பா சொற்படி விழித்துக் கொண்டு சுற்றுமுற்றும் பார்க்கிறேன். 

நிலக் குத்தகைக்காரன் ஊரெல்லாம் பொன்னாய் விளைந்தாலும் மாசூலை நாலு வருஷமாய் அளக்க வில்லை ஆனால் அவர் வாசல் வழியாய் செல்ல நேர்ந் தால் திண்ணையிலிருந்து அவசர அவசரமாய் எழுந்து கும்பிடு பலம். 

”நாளைக்குக் கொடுக்கிறேன் சார்” என்று கை மாற் றாய்க் கடன் வாங்கிப் போனவர் நாலு மாதங்களாயும் அதைப் பற்றி மாத்திரம் பேசமாட்டேன் என்கிறார். எனக்குப் பேச்செடுக்க லஜ்ஜையாயிருக்கிறது. நாளடை வில் பயமாயிருக்கிறது. அவர் மற்றதெல்லாம் அடித்துப் பேசுகிறார். என்னுடன் ஒண்டிக் குடித்தனம் இருப்பவர் “என்னதானிருந்தாலும் ஸார் நீங்கள் ரொம்ப soft. அதான் வழியில் போகிறவன் வரவன் எல்லாம் தலையில் கல்லரைத்து விட்டுப் போகிறான்கள்” என்கிறார். 

ஆனால் அவர் எனக்கு இரண்டு மாத வாடகை பாக்கி. 

அப்பா இறந்து போன இரண்டு மாதங்களுக்கெல் லாம் பாச்சா ஒருநாள் என்னிடம் வந்தான். 

“அண்ணா, எனக்கோ சுட்டுப் போட்டாலும் படிப்பு வரவில்லை. நான் எங்கேயாவது வெளியூரைப் பார்க்கப் பிழைக்கப் போகிறேன். எனக்கு ஒரு முன்னூறு ரூபாய் இருந்தால் கொடேன். 

“இப்போ இல்லையேடாப்பா” என்றேன். நிஜமாகவே அந்த சமயத்தில் குடும்பத்தில் நெருக்கடி. 

“என்னண்ணா கிண்டல் பண்றே ? மன்னி நேற்றைக்குக் கூடப் பெட்டியைத் திறந்து வைத்துக் கொண்டு, கற்றை கற்றையாய் நோட்டை எண்ணிக் கொண்டிருந்தாளே! 

எனக்கு வியப்பாயிருந்தது. அவளிடம் ஏது ? “பாரு பாரூ!”. சிவந்த முகத்துடன் பாரு வந்தாள்.”ஆமாம் ஒரு நூறு ரூபாய் வைத்திருக்கிறேன். வருஷக்கணக்காய், ஈ, தேன் கூட்டற மாதிரி, எங்கம்மா அப்பா கார்த்தி, சங்கராந்திக்கெல்லாம் கொடுத்தது, நீங்கள் நவராத்திரி தீபாவளிக்குக் கொடுத்தது, நம் குழந்தைகளைப் பார்க்க வந்தவா கொடுத்ததெல்லாம் மிச்சம் பிடித்து, நமக்குத் தான் ஒரு அந்த அவசரத்துக்கு உதவும். ஏன். எனக்கே கைவளையல் எல்லாம் தேஞ்சு போச்சு. கூடக் கொஞ்சம் பொன்னை வாங்கிப் போட்டு-” 

“பாரு, பாச்சாவிடம் அந்தப் பணத்தைக் கொடுத்து விடு.” 

பாருவின் பார்வை என்னை எரித்தது. 

‘பாரு, பணம் என்றைக்கும் வரும். உன்னை வழியில் போகிறவனுக்குத் தானம் பண்ணச் சொல்லவில்லை, என் தம்பிக்குத்தான் கொடுக்கச் சொல்கிறேன்-கொடு, கொடு-” 

“அது என் பணம்.” 

அடேயப்பா இந்தப் பாருவின் ‘லாபாயிண்ட்’ இருக்கிறதே! பாரு என்றுமே பேச்சில் அடங்கியதில்லை. பாவம்! நியாயத்தைப் பேசிப் பேசியே, வீட்டில் வாயாடிப் பட்டம் வாங்கி விட்டாள். 

“உன் பணமாயிருந்தால் என்ன, நீ இந்த வீட்டுப் பெண்தானே! நான் சொல்கிறேன் நீ கொடு” என்றேன். 

பாருவின் கண்களில் கனல் கண்ணீராய்த் தளும் யிற்று. விர்ரென்று வெளியே சென்று, ஒரு நிமிஷத்திற் கெல்லாம் ஒரு ஓலைப் பெட்டியை வீசியெறிந்துவிட்டு ஓடினாள். அது என் காலடியில் வீழ்ந்தது. குனிந்து எடுத்துக் கொண்டேன். எனக்குக் கோபம் வரவில்லை. ஏன் எனக்கு இப்படி சுரணையில்லாமல் போய்விட்டது? இனி என்னையும் நாய்குட்டியைப் பார்ப்பதுபோல் காதைப் பிடித்துத் தூக்கித்தான் பார்க்க வேணுமோ? 

“இந்தா பாச்சா வெச்சுக்கோ.” 

“அண்ணா, மன்னி மனம் கஷ்டப்படுகிறாள்” 

“பாச்சா உன் மன்னி நல்லவள். அவள் சிரமப்பட்டு சேர்த்தது. ஆகையால் இது நல்ல பணம்; நன்கு விளையும்; எடுத்துக் கொள்.” 

பாச்சா இரவு வண்டி ஏறினான். அவனை வழியனுப்பி விட்டுத் திரும்புகையில் ஏதோ யோசனையில் சட்டென நடுவழியில் திகைப்பூண்டு மிதித்தாற் போல் நின்றேன். 

திடீரென்று எனக்கு ஒரு பழைய நினைவு வந்தது. சிறு வயதில் நானும் என் தம்பியும் இரவில் ஒரே கோரைப் பாயில் படுத்து உருண்டது. எங்கள் இருவருக்கும் ஒரே போர்வைதான். இதைத் தலைமேல் இழுத்துப் போர்த்திக் கொண்டு அந்த உள் இருட்டில் விளையாடுவோம். பாதி ராத்திரியில் எனக்கு விழிப்பு வரும்போதெல்லாம் பாச்சா வுக்குக் குளிருமே என்று போர்வையை இழுத்து இழுத்து அவன்மேல் மூடுவேன். அவன் அதை உதறி உதறித் தள்ளிவிட்டு தூக்கத்தில் தடாலென வயிற்றில் காலைப் போடுவான். 

அப்படியிருந்து விட்டு எங்கள் வழி இப்பொழுது ஏன் தனித்தனியாய்ப் பிரிந்து போயிற்று? இம்மாதிரி கேள்வி களுக்கெல்லாம் சரியான பதில் கிடைக்குமோ? 

வாசற்படி ஏறுகையிலேயே பாருவின் அழுகுரல் கேட்டது. எனக்கு அடிவயிற்றைச் சுரீலென்றது. குழந் தைகள் என்னவோ ஏதோ? பதறி எதிர்க்குரல் கொடுத்து கொண்டே உள்ளே ஓடினேன். பாரு எதிரே ஓடி வந்தாள். 

“வளையலைக் காணோமே!”

“எங்கே வைத்தாய்?” 

“பெட்டிக்குள்ளேதானே பத்திரமா வெச்சிருந்தேன்! டைப்ரேட்டர் ரிப்பன் டப்பாக்குள் போட்டு வெச்சிருந் தேனே! தேஞ்சு, கையிலிருக்கக்கூட லாயக்கில்லாமல் இற்றுப் போயிடுத்து. நேற்று தான் நினைச்சுண்டிருந்தேன் உங்களிடம் சொல்லி என்னிடமிருந்த நூறு ரூபாயை உங்களிடம் கொடுத்து, இன்னும் கொஞ்சம் பொன்னை வாங்கி சேர்த்துப் போட்டு-” 

என் நெஞ்சுள் எலி பிராண்டிற்று. ஆனால் அதை ஒப்புக் கொள்ளாமல்: 

“நீ பெட்டியைத் திறந்து போட்டுவிட்டுப் போனால் யார் என்ன பண்ணுகிறது?” என்றேன். 

“யார்? என்னையா சொல்கிறீர்கள்? ஏன், உங்கள் மாதிரி நினைச்சுண்டேளா?” பாரு சுபாவம் எனக்குத் தெரியாதா? குழந்தைகளுக்கு வாங்கும் சாக்லேட், பிஸ் கோத்து, தலைக்கு வைத்துப் பின்னும் உல்லன் நூல், துணிக்குப்போடும் சோப்புக்கட்டி முதற் கொண்டு உள்ளே வைத்துக் கொண்டு விடுவாள். சமாளித்துப் பார்த்தேன். 

“சாவியை எங்கே வைத்தாயோ?” 

பாருவின் கண்களில் பொறிபறந்தன. தாலிச்சரட்டை இழுத்து என் முன் நீட்டினாள். அதில் சாவிக் கொத்துத் தொங்கிற்று. அவளுக்கு அப்புறம் பேச்சு எழவில்லை. கரகரவென என்னைக் கையைப் பிடித்திழுத்துக் கொண்டு போய் அறை விளக்கைப் போட்டாள். 

எலி வால்போல் வளைந்த ஒரு குடைக்கம்பிப் பூட்டு சந்திலிருந்து தொங்கிற்று. என் கண்ணெதிரில் ஒரு கேள்வி சிறகடித்து மறைந்தது. பாச்சா இப்போ எங்கி ருப்பான்? ஜோலார்ப்பேட்டை தாண்டியிருப்பானா? 

ஒரு ஐந்தாறு வருடங்களுக்கும் பாச்சா இருக்கும் பொறிகூடத் தெரியவில்லை. இதற்குள் என் நிலைமை ஒன்றும் மாறிவிடவில்லை.நான் மூலையில் சார்த்தின ஏணியாய்த்தானிருக்கிறேன்: 

ஒருநாள் வாசலறையில் வழக்கம்போல் உட்கார்ந்து கொண்டிருந்தேன். பாரு முரளியை இடுப்பில் வைத்துக் கொண்டு வழக்கம் போல ஏதோ உபதேசம் பண்ணிக் கொண்டிருந்தாள். 

ஒரு டாக்ஸி டீ’க்காய் வாசலில் வந்து நின்றது. அதிலிருந்து பாச்சா ‘ஜம்’மென்று இறங்கினான். பின்னாலேயே ஒரு ஸ்திரீயும் இறங்கினாள். 

“என்னண்ணா, சௌக்கியமா? செல்லா, நமஸ்காரம் பண்ணு. இதாண்டி என் அண்ணா, மன்னி!” 

“இருங்கோ — இருங்கோ உள்ளே வராதேங்கோ..” பாரு அவசர அவசரமாய் உள்ளே போய் ஆரத்தி கரைத்து வந்து சுற்றிக் கொட்டினாள். 

நான் பாருவை ஓரக்கண்ணால் கவனித்துக்கொண்டே நின்றேன். அவள் முகத்திலிருந்து திடீரென பத்து வருடங்கள் உதிர்ந்திருந்தன. பாரு இவ்வளவு அழகாவாயிருக்கிறாள்! எனக்கெப்படி இதுவரை தெரியாமல் போயிற்று? உள்ளூரச் சிரிப்பாய்க்கூட இருந்தது. பாவம், தனக்கு ஓரகத்தி வந்த சந்தோஷத்தில், கண்டு கொடுத்த பணத்தையும், காணாமற் போன நகையையும் மறந்து விட்டாள். பாச்சா நமஸ்காரம் பண்ணினாள். ஆனால் செல்லா பண்ணவில்லை என்பதைக்கூட அவள் கவனிக்க வில்லை. 

அப்பொழுதுதான் முதன்முதலாய் சந்தித்துக்கொண்ட இருவருக்கும் மூச்சு விடாமல் நாள் கணக்காய்ப் பேச என்ன இருக்குமோ? வந்தவள் தன் பெட்டியைத் திறந்து உடவைகளையும், நகைகளையும் கடைபரத்திக் காண்பிப் பதும் மூத்தவள் அதைத் தொட்டுத் தொட்டுப் பார்ப்பதும், பேசுவதும் சிரிப்பதுமாய் நேரம் போதவில்லை. நாலு நாட்களுக்கு சம்பிரமமாய்ச் சாப்பாடு, சிற்றுண்டி, செலவைச் சமப்படுத்த இத்தனைக்கும் பின்னால் சுட்ட அப்பளமும் வெற்று ரஸமும் பின்னால் அல்லவா இருக் கிறது! ஐந்தாம் நாள் முன்பின் சொல்லவேயில்லை. திடீ ரென ஒரு டாக்ஸி ‘டீ’க்காய் வாசலில் டீ க்காய் வாசலில் வந்து நின்றது. “போயிட்டு வரோம் அண்ணா ! மன்னி !!” 

தெரு முனையில் திரும்பிய பிறகுகூட, அது தன் பின்னால் விட்டுச் சென்ற புழுதித் தோகையைப் பார்த்துக் கொண்டு பாருவும் நானும் மௌனமாய் நின்றோம். முரளி குறுநடை நடந்து வந்து அம்மாவின் காலைக் கட்டிக் கொண்டான். 

“குட்டிப்பா, குட்டி சித்தி எங்கேம்மா? எனக்குப் பப்பூட்டு வாங்கித் தரேன்னாளே!” பாரு குழந்தையை எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டாள். “பப்பூட்டு வாங்கிண்டு வரத்தாண்டா ரெண்டு பேரும் போயிருக்கா!” அவள் விழிகள் நிறைவதைக் கண்டேன். முகத்தைத் திருப்பிக் கொண்டு விடுவிடென உள்ளே சென்றாள். 

பாருவின் முகம்கூட என் மனக் கண்ணில் நான் காணும் பசுவின் முகத்தில் திடீரெனப் பொருந்துகிறது. ஒருவேளை உலகத்தின் துயரத்திற்கெல்லாம் ஒரே முகம்தானா? பத்து வருடங்களுக்கு முன்னால் பாரு இப்படியா இருந்தாள்? துள்ளி விளையாடும் கன்றாய் வந்தாள். அவள் அகமுடையான் டாக்டருக்குப் படிக்கிறான் என்ற பெருமையில் என்னென்ன ஆசை வைத்திருந்தாளோ! ஆனால் அவள் கண்டது என்ன ? குடும்ப வாழ்க்கையில் ஈடுகொடுத்து, குழந்தைகள் விளைந்து விளைந்து, வயிறு சரிந்து கூந்தல் கொட்டி, அழகு அழிந்து. கடுகடுத்து துயரந்தாங்கும் பசுவாய் மாறிவிட்டாள். சில சமயங்களில் கஷ்டம் தாங்காமல் சிலும்பி சீறிப் பார்க்கிறாள், பசு மிரள்வதுபோல். அதனால் சுமையிறங்கிவிடுமா? இன் னும் அதிகமாய்த்தான் அழுத்துகிறது. 

ஆமாம் இந்த நிலைகளுக்கு விமோசனமேயில்லையா? அடித்தால் நோகிறதே என்று வலி பொறுக்காமல் அழுதால் இந்த உலகத்திற்கு அனியாயமாய்ப்படுகிறது. அதைவிடத் தப்பு, அது பண்பு குறைவு. எனக்கு என் சுமைபோல் வந்திருப்பவனுக்கு அவன் சுமை. வந்திருப் பவன் விவரித்துக் கொண்டிருக்கும் காட்சி என் முன் எழு கிறது. கன்றுத் தோல்கூட செத்தும் அவதியுறும் பொரு ளாய்த்தான் தெரிகிறது. நாயின் வெறியில்கூட நிறைவு பெறாத ஒரு சோகம்தான் தெரிகிறது. இவைகளில் எதன் சோகம் அதிகம்? நாயா, கன்றா,தோலா, மெளனமாய்க் கண்ணீர் வடிக்கும் பசுவா? 

இச் சோகங்களைத் தாண்டி, பாற் பீறல்கள், குவளை யுள் எழும்பிக் கொண்டிருக்கும் நுரைமேல் மெத்து மெத் தென வீழ்கின்றன. இந்த சுகத்தின் தன்மை என்ன? அதையும் தாண்டி, இந்த சோகத்திற்கும் சுகத்திற்கும் காரணனாய் இரண்டையும் பால்காரன் கறந்து கொண் டிருக்கிறான். அவனுடைய சூட்சுமம்தான் என்ன? சோகத்திலிருந்து சுகத்தைக் கறக்கிறானா? சுகத்தினால் சோகத்தைப் பெருக்குகிறானா? அல்லது இரண்டுமே அவனுக்கு அக்கறையில்லையோ ? பால்காரன்தான் உண்மையோ? 

என் யோசனைகள் முரட்டுத்தனமாய்க் கலைந்தன. என் தோள்களை யாரோ பலமாய்க் குலுக்கிக் கொண்டிருந்தார்கள். நான் விழித்துக்கொண்டேன். வந்திருந் தவன் படுக்கையிலிருந்து தாவி எழுந்து என்மேல் பாய்ந்து என்னைக் கட்டிக்கொண்டிருந்தான். அவன் கறுப்பு விழிகள் வெள்ளை விழிகளில் சுழன்றன. 

“அப்போது டாக்டர், திடீரென்று அந்தக் கன்றுத் தோல் தாவிக் குதித்து எழுந்தது. இதை நான் என் கண்ணால் கண்டேன். அது பின்னங் கால்களால் விட்ட உதையில் நாய் ஊளையிட்டுக்கொண்டு கீழே உருண்டது. கன்றின் தொடையிலிருந்து ரத்தம் கொட்டிற்று. 

“அரே! ரே !! ரே !!! ரே !!!!* பால்காரன் மூஞ்சி யைப் பார்க்கணுமே! குவளையைக் கீழே வைத்துவிட்டுத் திரும்பினான். வாங்கின உதையில் அம்மாடி என்று அப்படியே அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு குப்புற விழுந்தான். தோலின் வாயிலிருந்து வந்த குரல் கன்றின் குரலாயில்லை. அந்த அமானுஷ்யமான வீறலில் ரத்தம் சில்லிட்டது. உயிர் பிரியும் குரலும் உயிர் பெறும் குரலும் ஒன்றுதானா? கொம்புக் கால்கள் மேல் தத்தித் தத்தி இருமுறை தன்னைத்தானே சுற்றி வந்து, தோல் பொத் தெனக் கீழே விழுந்தது. 

“பால் குவளை உருண்டது. தோலின் தொடையி லிருந்து ரத்தமாய்க் கொட்டிற்று. குவளையிலிருந்து கிளம்பிய பால் பெருக்கோடு கலந்தது. நான் கீழே விழுந்து விட்டேன். அப்புறம் எனக்கு நினைவில்லை.” 

“டாக்டர், டாக்டர், நான் கண்டது நிஜமா?” 

அவன் அனல் மூச்சு என் முகத்தை எரித்தது. அவன் காந்தம் என்னுள்ளும் பாய்கையில் எனக்குத் தலை கிர்ர்”ரிட்டது. வெள்ளம் என்னை அடித்துக்கொண்டு போய்விடும் போலிருந்தது. மண்டையை இருகைகளாலும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். 

என் வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள் எனக்கே புதியவையாயிருந்தன. 

“இல்லை என்று எப்படிச் சொல்வது?”

– கங்கா (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1962, ஐந்திணைப் பதிப்பகம், சென்னை.

லா.ச.ரா லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *