உறுப்புகளைத் தேடி…
கதையாசிரியர்: காரை ஆடலரசன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: June 17, 2026
பார்வையிட்டோர்: 203
(2022ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15
அத்தியாயம் – 10

கார் திருநெல்வேலியை நோக்கி பயணப்பட்டது.
மூங்கில் காடு – வேணுவனம் பெயரில் இருந்த இடம்… நெல்காத்த நாதர் திருப்பெயரால் நெல்வேலி ஆகி திருநெல்வேலியானது.
திருநெல்வேலி பாண்டியனின் இரண்டாவது தலை நகரம். நெல்லையப்பர் காந்திமதி ஆலயம் ஆசியாவிலேயே மிகப் பெரிய சிவாலயம்.
திருவாரூர் தேர் ஆசியாவிலேயே முதல் பெரிய தேர். ஸ்ரீவில்லிபுத்தூர் தேர் தமிழகத்தின் இரண்டாவது பெரிய தேர். நெல்லையப்பர் தேர் தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேர்.
இன்றைக்கு… மணப்பாறை – முறுக்கு. பழனி – பஞ்சாமிர்தம். திண்டுக்கல் – பூட்டு என்பது போல் திருநெல்வேலி என்றால் இருட்டுக்கடை அல்வா. ! அப்பா ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு சிறப்புகள் ?! ஹரிசுக்கு நினைக்கவே இனித்தது.
ஹரிசுக்குக்குத் தெய்வ நம்பிக்கை இல்லை என்றாலும் நெல்லையப்பர் காந்திமதி ஆலயம் பார்க்கலாமா..? தோன்றியது.
அம்மா அப்பாவுடன் பார்த்தாச்சு. அம்மா ஆசிரியை என்பதால் எந்த ஊர், எந்த கோவில் சென்றாலும் பிள்ளைகள் தெரிந்து கொள்ளட்டும் என்று அதன் அருமை பெருமைகளைச் சொல்லத் தவறுவதில்லை.
இன்றைக்கு எத்தனை அம்மா அப்பாக்கள் இப்படி இருக்கிறார்கள்..? குழந்தைகளின் கையில் ஒரு கைப்பேசியைக் கொடுத்துவிட்டு இவர்கள் ஆளுக்கொரு கைபேசிகள் பார்க்கிறார்கள்.
கெட்டவைப் பார்க்காதே! பேசாதே!! கேட்காதே!!! என்கிற குரங்கு பொம்மைகள் வரிசையில் நான்காவதாக கைபேசியுடன் குரங்கு.!
திருநெல்வேலியில் உள்ள காந்தி நகர் மூன்றாவது குறுக்குத் தெருவில் உள்ள 22 ஆம் எண் உள்ள வீட்டின் முன் ஹரிஸ் காரை நிறுத்தினான்.
காரை விட்டு இறங்கி சென்றான்.
வாசலில் ஏசுநாதர் இருந்தார். கதவு சாத்தி இருந்தது. தரையில் தூசு படிந்து சுவரில் ஒட்டடை தொங்கி வெகு நாட்களாகப் பூட்டப்பட்டது போல் தெரிந்தது.
குழம்பியவனாக சுற்றும் முற்றும் பார்த்தான்.
எதிரில் இரண்டு வீடு தள்ளி வாயிலில் அமர்ந்திருந்து பெரியசாமி முதியவர் இவனைக் கவனித்து…
“என்ன தம்பி பார்க்குறீங்க..?” கேட்டார்.
‘ வீ… வீடு..?” – இழுத்தான்.
“யாருமில்லே..” அவரும் எழாமல் அங்கிருந்தபடியே பதில் சொன்னான்.
“எ… எங்கே…?”
“கிட்ட வாங்க சொல்றேன்..” அழைத்தார்.
சென்றான்.
“நல்லா வாழ்ந்த குடும்பம். அப்பன் பிள்ளை மேலே போய்ட்டாங்க. அம்மா…வீட்டை விற்பனைக்குப் போட்டுட்டு அடுத்தத் தெருவுல ஒண்டு குடித்தனம் நடத்துது.”
அதிர்வாய்ப் பார்த்தான்.
“உட்காரு சொல்றேன்.”
படிக்கட்டில் அவர் அருகில் அமர்ந்தான்.
“இது நாலு வருசத்துக்கு முந்தி நடந்த கதை. இம்மானுவேலுக்கு இறைச்சிக்கடை வியாபாரம். பையன் ஆண்ட்ருஸ் உதவி. நல்ல வருமானத்துலதான் இந்த வீடு கட்டி வாழ்ந்தாங்க. இடையில் கொஞ்சம் நொடிப்பு.
வீட்டுக்கார அம்மா ஒரு எஸ்.ஐ வீட்டுக்கு சமையல் வேலைக்குப் போனாங்க. இவங்க துரதிஷ்டம்… அங்கே நாலு பவுன் நெக்லஸ் ஒன்னு காணாமல் போச்சு. சந்தேகத்தில் இந்தம்மாவை ஏட்டு ஸ்டேசனுக்குக் கொண்டு போய் வெளுத்திருக்கார். அப்புறம் அவுங்களை விட்டுட்டு அப்பன் புள்ளையை இழுத்துக்கிட்டுப் போய்… ‘ எங்கேடா வைச்சிருக்கீங்கன்னு?’ ராத்திரி முழுக்க வெளுத்திருக்காங்க. படாத இடத்துல பட்டு ரெண்டு பேருமே போய்ட்டாங்க. அடிச்ச போலீஸ், எஸ்.ஐ எல்லாம் இப்போ கம்பி எண்ணுறாங்க. எண்ணி என்ன பிரயோசனம்..? ஒத்தக் காரியம் எத்தனை பேர் வாழ்க்கையைக் கெடுத்து நாசமாக்கிடுச்சு..?!” சொல்லி பெருமூச்சு விட்டார்.
ஹரிசுக்கு மனசு கனத்தது.
“அ… அந்த… நகை..?” இழுத்தான்.
“அது கிடைச்சுது. வீட்டுக்காரப் பொம்பளை வைச்ச இடத்தை மறந்து தேடி சந்தேகப்பட்டு…அமளி துமளியில் அது ஒரு பக்கம் இருந்து கிடைச்சுது.” என்றார். குரலில் வெறுப்பும் சலிப்பும் வெளிப்பட்டது.
ஹரிஸ் மனம் கனக்க பேசாமல் இருந்தான்.
“நீங்க…. அந்த வீட்டு சொந்தமா…?” பெரியசாமி கேட்டார்.
“இ..இல்லே…”
“வீடு வாங்கனுமா..? பார்க்கனுமா…?”
“கரோலினைப் பார்க்கனும்…”
“பையன் நண்பரா..?”
“கரோலின் எங்கே இருக்காங்க..?”
“அடுத்தத் தெருவுல. இப்படிப் போய் வலப்பக்கம் திரும்பினா…குட்டி குட்டியாய் நாலு வீடு ஒரே காலனியாய் இருக்கும். முதல் வீடு.”
“நன்றி ஐயா வர்றேன்.” சொல்லி எழுந்து வந்து காரில் ஏறினான்.
பெரியவர் சொன்ன அடையாளத்தில் நிறுத்தினான்.
பத்துக்குப் பத்து ரயில் ஓடு போடப்பட்ட கூரை.
முதல் வீட்டு வாசலில் குருத்தோலை சிலுவை ரொம்ப பழசாகத் தொங்கியது.
இரட்டைக் கதவில் ஒற்றைக் கதவு திறந்திருந்தது.
உள்ளே கையில் புதிய ஏற்பாட்டை 50 வயது கரோலின் கண்ணாடி போட்டு படித்துக் கொண்டிருந்தாள்.
“அம்மா…!” கதவு தட்டி கவனத்தைக் திருப்பினான்.
“யாரு..?”
“நான் உங்களைப் பார்க்க வந்திருக்கேன்.”
புதிய குரல். எழுந்து புத்தகத்துடன் வாசலுக்கு வந்தாள்.
ஒல்லி உடல். நரைத்தத் தலை. வெள்ளை ஜாக்கெட், வாயில் புடவை. கழுத்தில் சுருவம்.
ஏறிட்டுப் பார்த்து…
“என்னையா பார்க்கா வந்திருக்கீங்க..?” கேட்டாள்.
“ஆமா…”
“உள்ளே வாங்க…”
சென்றான்.
நாற்காலியில் அமர்ந்தான். அவள் கட்டிலில் அமர்ந்தான்.
என்ன பேசுவதென்று தெரியாமல்… நேரடியாக…
“நீங்க மாற்றுக் கல்லீரல் பொறுத்தின ஆள்..” நேரடியாக விசயத்திற்கு வந்தான்.
அவள் துணுக்குற….
மொத்த விபரத்தையும் சொன்னான். கரோலின் கண்களில் சட்டென்று கண்ணீர் புறப்பட்டு வழிந்தது.
“என்னம்மா..?” ஹரிஸ் பதறினான்.
“என் புள்ள மாதிரி இருக்கே. அண்ணன் கல்லீரல் கொடுத்ததுமில்லாமல் என்னைப் பார்த்து விசாரிக்க வேற வந்திருக்கே.! அதையே மறந்திருந்தேன். இப்போ சொல்லி நினைவூட்டி இருக்கே.“ தழுதழுத்தாள்.
“நீங்க என் அம்மாகூட பேசுறீங்களா.?” என்றான்.
“வேணாம்ப்பா. நானும் மகனை இழந்திருக்கேன். அவுங்களும் இழந்திருக்காங்க. என் பிள்ளையே என் வயித்துல வந்து இருந்து காபந்து பண்றாப்போல இருக்கு. அதுவே போதும்.” என்றாள்.
“அம்மா ஏதாவது உதவி..?”
“வேணாம்ப்பா. அரசாங்கம் என் வாழ்க்கைக்காக கொஞ்சம் தொகை டெபாசிட் பண்ணி இருக்கு. வீட்டு வாடகையும் வயிறும் அதில் ஓடிக்கிட்டிருக்கு. வீட்டை வித்து கடனை அடைச்சுடுவேன் நிம்மதி” என்றாள்.
ஹரிஸ் செல்பி எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.
அத்தியாயம் – 11
ஹரிஸ் திருநெல்வேலியிலேயே அறை எடுத்துத் தங்கி அம்மாவிடம் விபரம் சொல்லி விட்டு படுக்கையில் புரண்டான்.
‘நுரையீரல்…. மூச்சுக் காற்று புகுந்து புறப்பட்டு வரும் இடம். இது எப்படி பாதிப்பு…?
நமக்குத் தெரிந்து புகை பகை.!! நிக்கோடின் நச்சு…உள்ளே புகுந்து பரவி, படிந்து, அரித்து, பாதிப்பை ஏற்படுத்தி செயலிழப்பு. அது மட்டும்தானா..?!
இன்னும் எவ்வளவோ காரணங்கள். மருத்துவரைக் கேட்டால் அதற்கு ஆயிரத்தெட்டு காரணங்கள் கூறுவார்கள். இதையே மாற்று செய்யும் அளவிற்குப் பாதிப்பு என்றால்…?’ ஹரிஸ் அதற்கு மேல் யோசிக்கத் தேவை இல்லை! என்று முற்றுப்புள்ளி வைத்து விட்டு உறங்கினான்.
காலை 9.00 மணிக்கு ஸ்ரீவில்லிப்புத்தூரை நோக்கி பயணம்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் அருமையான ஊர். ஆண்டாள் அவதரித்த பூமி.
பால்கோவாவிற்குப் பெயர் போன ஊர்.
கோபுரம் தமிழக அரசின் முத்திரை !! தமிழகத்தில் எந்த ஒரு கோவில் கோபுரத்திற்கு இல்லாத சிறப்பு.
ஊருக்குள் நுழையும்போதே….
‘கைது செய்! கைது செய்! பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியரைக் கைது செய்!’ சுவரொட்டிகள் எங்கும் காணப்பட்டன.
வெளியே பயிரை மேய்கிறது. ஒழுக்கம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களே இப்படி என்றால் சமுதாயம் எப்படி சரியாய் இருக்கும்?!
யார் மீது குற்றம்..?
நினைக்கவே நெஞ்சு பதறும் அளவிற்கு பாதகர்கள் குழந்தைகளைக்கூட விட்டு வைப்பதில்லை என்பது கொடுமையிலும் கொடுமை.
குழந்தைகள், குமரிகள், மூத்தவள், முதியவள் என்று வயது வித்தியாசம் பாராமல் கண் மூடும் அளவிற்கு காமம் என்ன அவ்வளவு கொடியது, வக்கிரமானதா…?! – நினைக்க திகைப்பு வந்தது.
இல்லை… போதை போன்றவைகள் மறைத்து மிருகமாக்குகிறது.
கைபேசி காலம். நாகரீக மாற்றம். ! எதைக் குறை, குற்றம் சொல்ல..?
காலம் மாறிவிட்டது. பத்தாம், எட்டாம் வகுப்பு மாணவனை ஆசிரியை இழுத்துக் கொண்டு தலைமறைவாகிறாள்..!
உடலளவில் பெண் பிள்ளைகள் அளவிற்கு ஆண் பிள்ளைகளுக்குப் பாதிப்பு இல்லை என்பதால் விசயங்கள் வெளிப்பாடு குறைவாக இருக்கிறது.
பெண்களும் மாறிவிட்டார்கள்.
ஆண் விபச்சாரம் ஆரம்பித்து விட்டது. பெண்…! நினைக்க குலைநடுங்குகிறது.
ஹரிஸ் தான் தேடி வந்த முகவரி முன் காரை நிறுத்தி இறங்கினான்.
வீடு சாத்தி இருந்தது. வீட்டு வாசலில் வேட்டி, சட்டையில் 40 வயது மனிதர் அமர்ந்திருந்தார்.
ஹாரிஸ் அவரைப் பார்த்தான்.
“சார்! இது இந்து வீடா…” கேட்டான்.
அமர்ந்திருந்த அவர் இவனை ஒருமாதிரியாகப் பார்த்தார். குழப்பமாக ஏறிட்டார்.
ஹரிசுக்கு.. தான் கேட்ட கேள்வியும். அதற்கு அவர் புரிந்து கொண்ட விதமும் புரிந்தது.
“சார்! இந்து தகப்பன் பெயர் தங்கசாமி. இந்த வீடுதானே…?” விபரமாகக் கேட்டான்.
“தங்கசாமி நான்தான்.”
“இந்து…?”
“பார்க்க முடியாது!”
” எ… ஏன்…?”
“நீங்க பத்திரிகை நிருபரா..?”
“இ…இல்லே..”
“மீடியாவா…?”
“இல்லே..”
யார் நீங்க…? “
‘என்ன பதில் சொல்ல..?’ – தடுமாறி…
“இந்துக்கு மாற்று நுரையீரல் கொடுத்தவர் தம்பி நான்…” என்றான்.
தங்கசாமி இதை எதிர்பார்க்கவில்லை.
கொஞ்சமாய்த் துணுக்குற்றார்.
“புரியல…” பார்த்தார்.
“சார்! மதுரை மருத்துவமனையில் அவளுக்கு ஆபரேசன் நடந்திருக்கு.” என்றான்.
அவர் முகம் தெளிந்தது.
“தம்பி! உள்ளே வாங்க” எழுந்து கதவு திறந்து உள்ளே சென்றார்..
ஹரிசும் அவனைத் தொடர்ந்தான்.
“உட்காருங்க…”
அமர்ந்தார்கள்.
வீடு வெறிச்சென்றிந்தது. உள்ளே யாருமில்லை.
தங்கசாமி தானாகவேப் பேச்சைத் தொடங்கினார்.
“நுரையீரல் பாதிப்பால் இந்து ரொம்ப கஷ்டப்பட்டாள். அப்பப்ப வலி வரும். பக்கத்துல உள்ள டாக்டர்கிட்ட போனா மருந்து மாத்திரை எழுதி கொடுப்பார். குழந்தை நாலு நாட்களுக்கு நல்லா இருப்பாள். அப்புறம் துடிப்பாள்.
இது தொடர் கதை ஆன பிறகுதான்…அந்த டாக்டருக்கே சந்தேகம் வந்து நீங்க இது சம்பந்தமா இந்த டாக்டரைப் பாருங்கன்னு வேறொருத்தர்கிட்ட அனுப்பினார். அவர்தான் பரிசோதனை எல்லாம் பண்ணி, நுரையீரல் பாதிப்பு! பத்து நாட்களில் இவளுக்கு நுரையீரல் மாற்றம் செய்யலைன்னா உயிருக்கு ஆபத்து. உத்திரவாதம் இல்லே ன்னு பெத்தவங்க தலையில் இடியை இறக்கினார். துடியாய்த் துடிச்சுப் போனோம்.
பொட்டப்புள்ள! குழந்தை! சிறு வயசு! சிகெரெட்டு, தண்ணி கெட்டப்பழக்கத்துக்கு வழியே இல்லையே…! எப்படி பாதிப்புன்னு கேட்டேன். அது இந்தக் கால உணவு அப்படி. இன்னைக்கு அரிசி, பருப்பு, காய்கறி, இறைச்சின்னு எதைத்தொட்டாலும் விஷம். அதனால் வரலாம். இப்போ நமக்கு அது பிரச்சனை இல்லே. பொண்ணு உயிரைக் காபந்து பண்ணணும்ன்னா நுரையீரல் மாற்று உடன் செய்யனும். சொன்னார்.
நான் சாதாரண மாத சம்பளக்காரன். அவ்வளவு பெரும் பணத்துக்கு எங்கே போவேன்…?! அப்புறம் நண்பர்கள் யோசனையின் பேரில் முகநூலில் செய்திகள் வெளியிட்டு…நல்ல உள்ளங்கள் உதவியால் என் ஒத்தக் குழந்தை உசுரைக் காபந்து பண்ணினோம். இன்னைக்கு….” தங்கசாமி திடீரென்று பொங்கி குலுங்கி அழுதார்.
“ஏன்… என்னாச்சு..” ஹரிஸ் விபரம் புரியாமல் பார்த்தான்.
“சுமாரா படிப்பாள். டியூசனுக்கு அனுப்பினேன். அந்த படுபாவி என் பொண்ணை…” வாயைப் பொத்திக் கொண்டு அழுதார்.
‘ஓ..! அந்த பாதிக்கப்பட்ட மாணவி இவள்தானா..?!!’ ஹரிஷ் உறைந்தான்.
மெல்ல மீண்டு… “என்ன படிக்கிறா….?” கேட்டான்.
“பட்டப்படிப்பு…”
“இப்போ இந்து எங்கே இருக்கிறா..?”
“வயிறு சுத்தம் பண்ணி மருத்துவமனையில்… இருக்கா”
கேட்கவே கஷ்டமாக இருந்தது.
“மனைவி துணைக்கு இருக்காள். விசயம் வெளியில தெரிந்து இந்த மீடியாக்காரங்க, அரசியல் காட்சிகளெல்லாம் என் பொண்ணு சேதியை நாறடிச்சு அவள் எதிர்காலத்தையே கேள்வி குறி ஆக்கிட்டாங்க தம்பி”. குலுக்கினார்.
“அ… அழாதீங்க சார்….” என்றான் ஹரிஸ்.
“உறுப்பு பிச்சை போட்ட நீங்க பார்க்க வந்திருக்கீங்க. ஆனா பாடம் சொல்லிக் கொடுக்கிறவன்..? கைது பண்ணியாச்சு. ஆனாலும் கசையடிக்கனும் தம்பி. இதுக்கெல்லாம் வழக்கு, கோர்ட், நீதி விசாரணை எல்லாம் கூடாது. கண்டதும் சுடனும். கசையடிக்கனும். இல்லே… சவூதி, துபாய் மாதிரி ‘அதை வெட்டனும். மக்கள் முன் தூக்குல தொங்க வைக்கனும்…” பாதிக்கப்பட்ட மனிதர் புலம்பினார்.
“….”
“பட்டதெல்லாம் போதும். குழந்தை மனசு மேலும் மேலும் பாதிக்கக் கூடாதுன்னுதான் நான் பத்திரிகை, மீடியாவெல்லாம் அனுமதிக்கிறதில்லே.” நிறுத்தினார்.
“நான் இந்துவைப் பார்க்க கொஞ்சம் அனுமதிங்க சார். அவளைப் பார்த்தால் என் அண்ணனைப் பார்க்கிறது போல் இருக்கும். அதனால்தான் விலாசம் தேடி வந்தேன்.” கெஞ்சலாக சொன்னான்.
தங்கசாமி முகத்தில் யோசனை உணர்வுகள் தோன்றியது.
“விபரத்தை இந்துவிடம் சொல்லி என்னை அண்ணான்னே அறிமுகப்படுத்துங்க. அவளுக்கும் ஒரு தெம்பு திடம் வரும்!” சொன்னான்ஹரிஸ்.
தங்கசாமி முகத்தில் தெளிவு பிறந்தது.
“வாங்க தம்பி” எழுந்தார்.
மருத்துவமனைக் கட்டிலில் இந்து என்ற இளம்பெண் கழுத்துவரை போர்வை போர்த்தி நீண்டு படுத்திருந்தாள்.
நல்ல உறக்கம்.
“இப்போதான் தூங்கறா…” என்று கணவனிடம் சொன்ன வள்ளி தயக்கமாய் ஹரிசைப் பார்த்தாள்.
தங்கசாமி. அவளைத் தனியே அழைத்து ஹரீசைப் பற்றிய விபரம் சொன்னார்..
அதன் பிறகுதான் வள்ளிக்கு இவன் மீது மதிப்பு மரியாதை வந்து…இவனை நன்றியுடன் பார்த்தாள். கையெடுத்துக் கும்பிட்டாள்.
“இந்துவை எழுப்பவேண்டாம்” என்ற ஹரிஸ் அம்மா, அப்பாவுடன் அவளை அப்படியே செல்பி எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
அதே சூட்டில் கோவையை நோக்கி பயணமானான்.
அத்தியாயம் – 12
கோவை என்ற கொங்குநாடு.!! வளமான பூமி. வளப்பமான நாடு. மலைகளின் மாநகரம். தமிழகத்தின் தொழில் நகரம்.
கோவன் என்னும் இருளர் தலைவன் பெயரால் கோவன்புத்தூர் என்பது கோயம்புத்தூராக மருவியது. கோசலர்கள் ஆண்டதாலும் கோசல்புத்தூர் கோயம்புத்தூர் ஆனது.
கோணியம்மன் கோவிலை மையமாக வைத்து நகர அமைப்பு ஏற்பட்டது. 1877ல் டவுன்ஹால் மணிக்கூண்டு கட்டப்பட்டது. கரிகாலன் காலத்தில் பேரூர் கோவில் கட்டப்பட்டது. ஹரிசுக்குள் படித்தவைகளெல்லாம் மனதில் ஓடியது.
மருதமலையில் பத்து ஏக்கர் பரப்பளவின் நடுவில் உள்ள பெரிய பணக்காரத் தோரணையில் இருந்த பங்களா முன் ஹரிஸ் தன் ஹூண்டாய் க்ரீட்டா காரை நிறுத்தினான்.
வாசல் கேட் முகப்பே அந்நியர்கள் யாரும் எளிதில் நுழைய முடியாது என்பதைச் சொல்லாமல் சொல்லி மிரட்டியது.
இந்த இடத்தில் அண்ணன் வினயன் இதயம் இருக்கிறது. எப்படி செல்ல..? மனம் கலவரமானது
சுற்றும் முற்றும் பார்த்தான்.
கோவை நாயகனே.. வருக !! கொங்கு தமிழனே. வருக ! ! எதிர்கால முதல்வனே.. வருக ! வருக !! – சுவரொட்டிகள் நிறைய கண்களில் பட்டன.
‘எங்கிருக்கிறான் கோவை நாயகன், கொங்கு தமிழன்..? பணம் படைத்தவன் எல்லாம் தங்கள் மனம் போன போக்கில் வாசங்களை அச்சிட்டு சுயவிளம்பரம் செய்து பீத்திக் கொள்கிறார்கள்! ஏன்..?’ நினைப்புடன் கேட் அருகில் சென்றான்.
கேட்டைத் திறக்காமலேயே உள்ளே இருந்து பார்த்த காவலாளி…
“யாரைப் பார்க்கனும்..?” கேட்டான்.
“நாகராசன்!”
“ஐயா இங்கே இல்லே..”
“எங்கே..?”
“சென்னையில் இருக்கார்”
“எப்போ திரும்புவார்..?”
“தெரியாது..”
“எப்படிப் பார்க்க…?”
“சென்னைக்குப் போனால் பார்க்கலாம்..?”
“அங்கே எங்கே…?”
“அடையார் அமைச்சர் பங்களாவில்”
“அமைச்சரா..?!” துணுக்குற்றான்.
“எ…என்ன அமைச்சர்…?” பயத்தில் மென்று விழுங்கி வார்த்தைகள் வந்தன. பொதுப்பணித்துறை!
‘சாதாரண பணக்காரர்களைப் பார்ப்பதென்றாலே குதிரைக் கொம்பு. சிரமம்! அமைச்சரை…அதுவும் ஒரு சாதாரண மனிதன் சத்தியமாகப் பார்க்க முடியாது!’ திரும்பினான்.
அதுவும் இவர் சாதாரண அமைச்சர் இல்லை. பெரும்புள்ளி! இரண்டு மருத்துவக்கல்லூரி, நான்கு பொறியியல் கல்லூரி…என கல்லூரிகள் வகையில் ஆறு. கொடநாட்டில் கொஞ்சம் தேயிலைத் தோட்டம். வெளிநாடுகளில் முதலீடு, பணம். தலைக்குள் பாரம் ஏறி கிறுகிறுத்தது.
இவர் பாலியல் விசயத்திலும் கொஞ்சம் கசமுசா. ஆசை நாயகியாய் ஒரு நடிகை!
இப்படி ஒரு அசாதாரணப்பட்டவ ஆளை எப்படி சாவகாசமாக முடியும், சந்திக்க முடியும், பேசமுடியும்..?!
கோட்டைக்குச் சென்றாலும் பார்க்கவிடமாட்டார்கள். வசிக்கும் பங்களா வாசலில் நின்றாலும் பார்க்க முடியாது. ஆனாலும் பார்க்க வேண்டும்! எப்படி…? ஹரிஸ் காரில் ஏறினான்.
முடியாது என்று முணகி எதையும் முயற்சி செய்யாமல் முடங்காதே. முயற்சி செய் முடியாததில்லை! இது அம்மாவின் வேத வாய்ப்பாடு. இவனுக்கும் அதுதான் தாரக மந்திரம்.
காரை ஓட்டியபடியே மனசுக்குள் சிந்தனை வலை விரித்தான்.
அமைச்சர்கள் எல்லோரும் தன் வீட்டு வாசலில் புகார் மனுக்கள் வாங்குவார்கள். மக்கள் வரிசையில் நின்று. அமைச்சர் அருகில் வரும்போது .’நான் உங்களைத் தனியே சந்திக்க விரும்புகிறேன்!’ என்று குசுகுசுப்பாகவும், சொல்ல முடியாது, சத்தமாகவும் சொல்ல முடியாது.
ஆனால் அப்படி என்று எழுதி கவரில் மனுவாக வைத்துக் கொண்டு நிற்கலாம். கொடுக்கலாம்.
‘கவனிக்கிறேன்! பார்க்கிறேன்! நடவடிக்கை எடுக்கிறேன்!’ என்று கூறி அவர் வாங்கி அருகில் வருபவரிடம் கொடுப்பார் அதுதான் வழக்கு, நடப்பே தவிர…
உடன் படித்துப் பார்த்து…”வா!” என்று அழைத்துச் செல்லும் உடனடி தீர்வு இல்லை. அது வீண்.!
அப்படி நிற்பதைவிட.. தனக்குத் தெரிந்தவர், அமைச்சருக்கு வேண்டியப்பட்டவர், எப்போதும் உடன் இருப்பவரிடம் விசயத்தைச் சொல்லி காத்திருந்தால் பலன் உண்டு.
நமக்கு அப்படி வேண்டியப்பட்டவர் யாரும் கிடையாது. ஏன்… அரசியல்வாதிகளுக்கும் நமக்கும் வெகு தூரம். மருந்துக்குக்கூட உறவினர்களில் அரசியல்வாதிகள் யாரும் கிடையாது. அப்படி இருக்கும்போது எவரை வைத்து சந்திக்க முடியும்…?
இன்னொரு வழி செய்தியாளர்கள், நிருபர், மீடியாக்காரர்களில் ஒருவர் பழக்கமாக இருந்தால் அவர்கள் வழியே அருகில் செல்ல, பார்க்க, பேச வாய்ப்பு உண்டு.
அந்த வழியிலும் யாராவது இருக்கிறார்களா..? மூளைக்குள் தேடினான்.
“டேய் யப்பா! யார், எங்கே இருக்கிறாய்..? உதவு…?” கூவினான்.
இருந்தால்தானே செவிமடுக்க, உதவ..?! சிந்தனை நாலாப்பக்கமும் சுழன்றது.
அப்படியே சென்று ஹரிஸ் கார் அடையாரிலுள்ள அமைச்சர் நாகராசன் பங்களா முன் நின்றது. வீட்டின் முன் பாதுகாப்பு காவலர்கள் ஐந்தாறு ஆள்கள் கண்ணில் பட்டார்கள்.
இப்போது உள்ள அமைச்சர், மந்திரிகளுக்கெல்லாம் எதற்கு இவ்வளவு பாதுகாப்புகள்..?
50, 60 களில்.. நாடு சுதந்திரம் அடைந்த சூடு, தணிந்தும், தணியாமலிருந்த காலக்கட்டம். அப்போது போராட்டத்தில் நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் போராட்டங்களில் குதித்து…அமைச்சர், மந்திரிகளான தன்னிகரில்லா தலைவர், மனிதர்களுக்கெல்லாம் உள்ளேயும் எதிரேயும் எதிரிகள் இருந்தார்கள். அவர்கள் விருப்பப்படவில்லை என்றாலும் பாதுகாப்பு தேவையாக இருந்தது. வலிந்து கொடுக்கப்பட்டது. மக்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
இப்போது உள்ள அரசியல்வாதிகளெல்லாம் மக்களுக்காக உழைப்பவர்கள் இல்லை. அவர்களை முன்னேற்ற அரசியலுக்கோ, ஆட்சிக்கோ வருவதில்லை. மாறாக தன்னை உயர்த்திக் கொள்ள வருகிறார்கள். தான் சிறைக்குச் செல்வதையும் பற்றி கவலைப்படாமல் கோடி கோடியாய்க் கொள்ளையடிக்க வருகிறார்கள். இவர்களுக்கு எதற்குப் பாதுகாப்பு..?
மக்கள் வரிப் பணத்தைக் கூசாமல் கொள்ளையடி.! பயப்படாமல் அகப்பட்டதைச் சுருட்டு..! என்பதற்கா பாதுகாப்பு..?!
இது சொந்தக்காசில் சூனியம். ! மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனாலும் அநியாயம் நடக்கிறது. மக்கள் தன் ஓட்டு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய ஒரே காரணத்திற்காக சகிக்க முடியாததைச் சகித்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இந்த நிலை எப்போது மாறும்..?
காலம் கை மீறி போய்விட்டது. பிணம்தின்னி கழுகுகள் பெருத்து விட்டது. உலகம் அழிந்து… மக்கள் மறு ஜென்மம் எடுத்தால் மட்டுமே மாறும்.
இந்த பாதுகாப்பு அதிகாரி, காவலாளிகளிடம் சென்று…
“அமைச்சரை நான் இன்ன விசயத்திற்காகப் பார்க்க விரும்புகிறேன்!” என்றால்
“சரி உள்ளே போ!” விடுவார்களா..?
“வெளியே போ!” தள்ளுவார்கள்.
ஒருவேளை மனசு வந்து… “சரி. போகலாம்!” என்று நிறுத்தி ….
“ஐயா! தங்களை இன்னார், இதற்காகப் பார்க்க வந்திருக்கிறார். அனுப்பலாமா..?” என்று உத்தரவு கேட்டால்..அமைச்சர் ‘என்ன! உடனே அனுப்பு!’ என்றா சொல்வார்?!
“எவனையும் உள்ளே விடாதே!” சொல்வார். காரணம்…? தனக்கு எதிரி எப்படி வருவானோ..எந்த ரூபத்தில் வருவானோ..? உயிர் பயம்.
பின் எப்படிப் பார்க்க..? சந்திக்க…?
பார்க்கவே முடியாதா..?! காரைக் கிளப்பினான்.
– தொடரும்…
![]() |
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
கலையாத வேடம்
எஸ்.மதுரகவி
June 17, 2026
சங்கர்லால் வந்துவிட்டார்!
தமிழ்வாணன்
June 17, 2026
மகாசூன்யச் சுழல்
வேங்கடேஷ் புருஷோத்தம்
June 17, 2026
