உனக்கும் வாழ்வு வரும்..!
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 5, 2024
பார்வையிட்டோர்: 3,193
அது ஒரு ரெண்டுங்கெட்டான் ஊர். கிராமமுமல்ல..! நகரமுமல்ல. அந்த ஊரில் இருந்தது அந்த பாங்க். பாங்க் திறந்ததும் அடித்துப் பிடித்து இடுப்பு வேட்டியை இறுக்கிப் பிடித்தபடி ஒரு அறுபது வயது முதியவர் உள்ளே வந்தார். வந்ததும் கவுண்ட்டரில் வரிசையாய் உட்கார்ந்திருந்த ஒரு பெரியவரிடம் போய் நின்றார். அவருக்கு தொட்டடுத்த இடத்தில் இருந்தது மானேஜர் காபின்.
கவுண்ட்டரின் உள்ளே இருந்தவரைக் குனிந்து பார்த்து,
‘ஏனுங்க, பணமெடுக்கோணுங்க… அந்த ஃபார்ம் ஒண்ணு கொடுங்க’ என்றார்.
உள்ளே இருந்த பாங்க் ஸ்டாப் அந்தப்பெரியவரை நிமிர்ந்து பார்த்து, தன் சோடா புட்டிக் கண்ணாடியை ஆட்காட்டி விரலால் மேலே தூக்கி விட்டுக் கொண்டு எதிரில் சுவரில் புறாக்கூடு மாதிரி மாட்டியிருந்த மரக் கூண்டைக் காட்டி,
‘அதுக்குள்ள இருக்கற மஞ்சக் கலர் ஃபார்மை கிழிக்காம எடுத்துட்டு வா!’ என்றார். அத்தோடு நிக்காமல்.
‘கார்டில்லையா?’ என்றார் எகத்தாளமாக.
‘அது தபாலாபீசுலதானுங்க இருக்கும்’ என்றார் இந்தப் பெரியவர்.
‘எக்த்தாளமாக்கும்.?! பணமெடுக்கற ஏடி எம் கார்டு எங்கேன்னு கேட்டேன்’ என்றார் பாங்க் பெரியவர்.
‘அது ஊட்ல இருக்குதுங்க..!’ என்றதும். பாங்க்கார பெரியவர்…
‘நீயும் ஊட்டல்யே இருந்துக்க வேண்டியதானே?’ என்றார். பணமெடுக்க வந்த பெரியவர் மரக் கூண்டை நோக்கி நகர, நடந்த எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த மானேஜர் பாங்க் ஸ்டாப்பை உள்ளே அழைத்து உட்காரச் சொல்லிவிட்டு,
‘சார், நாம கஸ்டமர்ட்ட கனிவா மரியாதையா நடந்துக்கணும். வந்தவர் வயசுல உங்கள மாதிரியே பெரியவர். நீங்க பேசெனதெல்லாம் கேட்டுட்டுத்தான் உங்களைக் கூப்பிடறேன். நீங்க இந்த பிராஞ்சுக்கு புதுசு!. வந்தவர் வேறு யாருமில்லை. எங்க அப்பாதான். அது உங்களுக்குத் தெரியாது! பரவாயில்லை! நான் இங்கே மானேஜர்னு அவருக்குத் தெரியும். என்னையோ மத்தவங்ககிட்டயோ அவர் என் பதவியைச் சொல்லி, எந்தச் சலுகையும் எதிர் பார்க்கலை!. தான் படிக்காதவங்கறதுனால வித்டிராவல் பார்ம்னுகூடச் சொல்லத் தெரியாம பணமெடுக்கற பாரம்னார்.
ஒண்ணு தெரிஞ்சுக்குக்க!, உங்களுக்கும் அவர் மாதிரி வயசாகி வாழும் வாழ்வு வரும்!. நம் எதிர்காலம் சிரமமில்லாம கழியணும்னா பெரியவங்க யாரா இருந்தாலும் அவங்களை மரியாதையா நடத்துங்க!’ என்று சொல்லி, சீட்டு அவரை அனுப்ப, வேர்த்து விறுத்து வந்து அமர்ந்தார் பாங்க் ஸ்டாப்.