கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம் த்ரில்லர்
கதைப்பதிவு: December 5, 2024
பார்வையிட்டோர்: 12,789 
 
 

(1958ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9

4. பொன்னம்பலத்தின் காதல் கிழவனுக்கு அம்பலம்!

தமயந்தி, சகலகலாவல்லியாக இருந்தாள். குதிரைச் சவாரியிலிருந்து பூப்பந்தாட்டம் வரை, எல்லாவற்றிலும் அவளுக்கு திறமை இருந்தது. சதாசர்வ காலமும், செல்வராஜ் அவளோடு சுற்றிக் கொண்டு இருந்தான். 

ஒரு நாள் பொன்னம்பலமும் பவானியும் வானப்பிரகாசம் ஹோட்டலுக்குச் சென்றார்கள். அப்பொழுது, இருவரும் தமயந்தியைப் பார்த்தார்கள். தமயந்தி அழகாக இருக்கிறாளென்று பவானி நினைத்தாள். ஆனால், தமயந்தியைப் போன்ற பெண்களை தனக்குப் பிடிக்காதென்று கூறினான் பொன்னம்பலம். 

“யாரைப் போன்றவர்களை உனக்குப் பிடிக்கும்?” என்று தோட்டத்தின் வழியாக நடந்து சென்று கொண்டு இருக்கும் பொழுது கேட்டாள் பவானி. பொன்னம்பலம், அவளது கரத்தைப் பற்றி இலேசாக அழுத்தினான். பவானி சட்டென்று தன் கையை விடுவித்துக் கொண்டாள். 

“ராஜாபகதூர் இந்தப் பக்கம் நின்று கொண்டு இருப்பார்” என்று சுருக்கமாகக் கூறினாள் பவானி. 

உண்மையில், ராஜாபகதூர் சிறிது தூரத்தில் நின்று கொண்டு இருந்தார். தன்னை நோக்கி, அவர்கள் இருவரும் நடந்து வருவதை அவர் கவனித்தாரே தவிர வேறு எதையும் கவனிக்கவில்லை…….. 

அதன் பிறகு, சில தினங்கள் வரை எந்த விசேஷமும் நடக்கவில்லை. 

ராஜாபகதூர் புதிதாக ஓர் ஆராய்ச்சி நூல் எழுத ஆரம்பித்தார். பகல் நேரம் பூராவும் அவர் அந்த நூல் எழுதுவதில் ஈடுபட்டு இருந்ததாலும் இரவில் அளவு கடந்த அழற்சியினாலும் அவர் உறங்கப்போய் விடுவதாலும், சில தினங்கள் வரை பொன்னம்பலத்தின் கண்களில் அவர் படவேயில்லை. 

செல்வராஜைப் பொறுத்த வரையில், அவனுடைய பொழுது வானப்பிரகாசம் ஹோட்டலில் தமயந்தியோடு ரொம்ப உற்சாகமாகக் கழிந்து கொண்டு இருந்தது. 

ஒரு நாளிரவு, ராஜாபகதூர் வீட்டில் எல்லோரும் சீக்கிரமாகவே படுக்கைக்குச் சென்றுவிட்டனர். இரவு பதினோரு மணிக்கு செல்வராஜ் வீட்டிற்கு திரும்பி வந்தான். அவன் வருகைக்காக எதிர்பார்த்து ஒரு வேலைக்காரன் தான் காத்துக் கொண்டு இருந்தான். செல்வராஜ் தன் அறைக்குச் சென்று அரைமணி நேரம் வரையில் தன் அறை விளக்கை எரித்துக் கொண்டு இருந்தான். தோட்டத்தின் ஒரு மூலையிலே பதுங்கிக் கொண்டு இருந்த கிழவன், அந்த விளக்கு அணையட்டுமென்று வெகு நேரம் வரை பொறுமையாகக் காத்துக் கொண்டு இருந்தான். கடைசியாக அந்த விளக்கு அணைக்கப்பட்டது. அதன் பிறகு, அரைமணி நேரம் வரையில் இருட்டிலேயே பதுங்கிக் கொண்டு இருந்தான் அந்த தாடிக்காரக் கிழவன். பிறகு மெள்ள மெள்ள இருளில் மறைந்தபடி வீட்டை நோக்கி நடந்தான் அந்தக் கிழவன். 

வீட்டை நெருங்கியதும், தனது வயதுக்கு மீறிய சாகஸத்துடன் ஒரு ஜன்னலைப் பிடித்து தாவி மேலே ஏறினான். அவனது வாயிலே ஒரு மூட்டையைக் கவ்விக் கொண்டு இருந்தான். ஜன்னலில் ஏறியவுடன் மற்றொரு கம்பியைப் பிடித்தபடி மிகவும் அபாயகரமான சூழ்நிலையிலே மாடிக்குத்தாவி ஏறினான். அங்கு சென்ற பிறகு, மாடியில் இறங்குவது அவனுக்கு அவ்வளவு கஷ்டமாக இருக்கவில்லை. 

மேல் தளத்தில் இறங்கியதும் மெதுவாக நின்று கவனித்தான். ஏதோ சத்தம் கேட்டது. சட்டென்று ஒரு மூலையில் பதுங்கிக் கொண்டான். எதிர்ப்பக்கம் இருந்த ஒரு அறைக்கதவு மெதுவாகத் திறந்தது. பொன்னம்பலம் தலையை வெளியே நீட்டி, மேல் மாடிப்படிக்கட்டு இருந்த பக்கத்தைக் கவனித்தான். எங்கும் ஒரே இருளாக இருந்தது. கிழவன் இருந்தபக்கம் பொன்னம்பலம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. பிறகு அவன் தன் அறைக்குள் தலையை இழுத்துக் கொண்டு கதவை மெதுவாக சாத்தினான். கிழவன், தனது தாடியை உருவிவிட்டபடி கொஞ்ச நேரம் காத்திருந்தான். 

கிழவன் தன் மறைவிடத்திலிருந்து, கிளம்பலாம் என்று அவன் நினைத்த பொழுது மீண்டும் ஏதோ சத்தம் கேட்டது. யாரோ, மேல் மாடிப் படிக்கட்டிருந்த திக்கிலிருந்து அவன் இருந்த இடத்தை நோக்கி நடந்து வருவது தெரிந்தது. அந்த உருவம் அருகே நெருங்கியதும் அது ஒரு பெண்மணி என்று புரிந்து கொண்டான் கிழவன். ராணி பவானி தான் வந்து கொண்டு இருந்தாள். அவளுடைய ஆடை அலங்காரம் அமர்க்களமாக இருந்தது. கிழவன் இருந்த இடத்தை அவள் தாண்டிச் செல்லும் பொழுது, மனோகரமான நறுமணம் வீசியது…… 

பொன்னம்பலத்தின் அறை வாசலையடைந்ததும், ராணிபவானி அங்கே நின்று, தான் வந்த வழியே திரும்பிப் பார்த்தாள். பிறகு பொன்னம்பலத்தின் அறைக் கதவை மெதுவாகத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள். அறைக்குள், இருவரும் மிக மெல்லிய குரலில் ஏதோ பேசியது கிழவன் காதில் விழுந்தது. தானிருந்த இடத்திலேயே அசையாமல் இருந்தான் கிழவன். அறைக் கதவு சாத்தப்பட்டு உட்புறம் தாளிடப்படும் சத்தமும் கேட்டது. பிறகு கிழவன், தனது மறைவிடத்தை விட்டு மெதுவாகக் கிளம்பி, தன் கண்ணெதிரே நடந்த பயங்கரமான துரோகச் செயலைப்பற்றி சிறிதும் சிந்திக்காதவனாக இருளுக்குள் நடந்தான். 

5. பத்தினியும் அக்கினிப் பரீட்சையும்!

தாண்டவராயன் என்ற தொழிலாளி தான் முதன் முதலாக அந்த வீட்டில் கிளம்பிய தீயைக் கவனித்ததாய் கூறினான்! ராஜாபகதூர் தில்லையம்பலத்தின் வீடு தீப்பற்றி எரிந்து கொண்டு இருந்தது! போலீஸார் அந்த இடத்திற்கு வருவதற்கு பத்து நிமிஷங்களுக்கு முன்பே நீலகண்டன் அங்கு வந்து சேர்ந்தார் தாண்டவராயனின் கூச்சலைக் கேட்டு தான் அவர் வேகமாக அங்கு ஓடிவந்தார். 

தீப்பிடித்த விவரம் தெரியாமல் ராஜாபகதூரின் வீட்டில் எல்லோரும் உறங்கிக் கொண்டு இருந்தனர். பரபரப்புடன் அங்கு ஓடிய நீலகண்டன், அந்தப் பங்களாவின் கதவை பலமாகத் தட்டி கூச்சலிட்டார். கீழ்தளத்தில் படுத்திருந்த செல்வராஜ் சட்டென்று எழுந்து கதவைத் திறந்தான். 

“மேல் தளத்தில் புகை வந்து கொண்டு இருக்கும் இடம் எனக்கு தெரியும். அங்கு செல்லலாம்” என்று கூறியபடி பரபரப்புடன் மாடிப் படிக்கட்டுகளை இரண்டே தாவில் ஏறி தாண்டியபடி மேல் நோக்கி சென்றார் நீலகண்டன். 

இதற்குள், ராஜாபகதூர் தில்லையம்பலமும் விழித்துக்கொண்டு தன் அறையிலிருந்து வெளியே வந்து விட்டார். ஒரு வேலைக்காரனும் அங்கு நின்று கொண்டு இருந்தான். 

“அந்த அறையில் யார் இருக்கிறார்கள்? அடடே; பொன்னம்பலம் அல்லவா?” என்று பதறிக்கொண்டு கேட்ட ராஜாபகதூர், “செல்வராஜ்! ஓடு, பவானியைப் போய் எழுப்பி விடு!” என்றார். 

இதற்குள், நீலகண்டன், தாளிடப்பட்டிருந்த பொன்னம்பலத்தின் அறைக் கதவை தகர்த்து உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தார். அங்கிருந்து, பயங்கரமாக புகை வெளியே வீசியது. 

“எல்லோரும் இங்கேயே இருங்கள்!” என்று பரபரப்புடன் கூறிய நீலகண்டன், “நான் உள்ளே நுழைந்ததும் இந்த அறைக் கதவை சாத்திக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால், தீ எங்கு பார்த்தாலும் பரவிவிடும்” என்று கூறியபடி அறைக்குள் பாய்ந்தார். 

அறை முழுவதும், கண்களைக் குருடாக்கும்படி புகை சூழ்ந்திருந்தது. நீலகண்டத்தின் கால்களில் ஏதோ தட்டுப்பட்டது. சட்டென்று குனிந்து தடவிப்பார்த்தார். அது ஒரு மனித உருவம்! வேகமாக அந்த உடலை உலுக்கி தூக்கி நிறுத்தினார். 

கீழே மயங்கிக்கிடந்த பொன்னம்பலத்திற்கு பாதிப் பிரக்ஞை இருந்தது. அவனை தன் இரு கைகளிலும் தூக்கியபடி வெளியே செல்ல திரும்பினார் நீலகண்டன். அப்பொழுது, பொன்னம்பலம் லேசாக முணுமுணுத்தான். 

“அவர்களிடம் சொல்லவேண்டாம்……அவள் என் அறையில் இருக்கிறாள்.” 

வானப்பிரகாசம் ஹோட்டல் முதலாளியான நீலகண்டன், உலகம் தெரிந்த பேர்வழி. அவருக்கு சில சமுதாய ஒழுக்க முறைகளில் அவ்வளவு நம்பிக்கை இருந்ததாகச் சொல்ல முடியாது. பொன்னம்பலத்தை அவர் வெளியே தூக்கி வந்த பொழுது அவர் வாய் அடைத்துப் போயிருந்தது. 

பொன்னம்பலத்தை தரையில் கிடத்திய நீலகண்டன் “இவனை சீக்கிரம் வெளியே தூக்கிச் செல்லுங்கள்” என்று கரகரத்த குரலில் கூறினார். 

அரை மயக்கமாய் கீழே கிடந்த பொன்னம் பலத்தருகே குனிந்து, ராஜாபகதூர் தில்லையம்பலம் கவலையோடு, “உன் அறையில் வேறு ஒன்றுமில்லையே, பொன்னம்பலம்? உன்னுடைய நாய் அங்கே இருக்கிறதா?…..இல்லை; நான் தான் அதை கீழ்தளத்தில், சமையற்கட்டருகே கட்டி வைக்கும்படி கூறிவிட்டேன்” என்றார். 

“அந்த அறையில் ஒன்றுமில்லை” என்று பதட்டத்துடன் முணு முணுத்த பொன்னம்பலம், ‘ஒன்றுமேயில்லை! என்னை சீக்கிரம் அப்பால் தூக்கிச் செல்லுங்கள்” என்றான். 

இந்த சமயத்தில், மேல்மாடி அறைக்கு பவானியை எழுப்பச் சென்ற செல்வராஜ் வேகமாக ஓடிவந்தான். “பவானியை அவளுடைய அறையில் காணோம்; ஒருக்கால், அவள் எழுந்து கீழ்தளத்திற்கு ஓடியிருக்கலாம், அல்லது பங்களாவிற்கு வெளியேயே ஓடியிருக்கலாம்!” என்றான். 

ராஜாபகதூர் படபடப்போடு, “எல்லோரும் கீழ்தளத்திற்கு செல்லுங்கள். நீங்களும் வாருங்கள், நீலகண்டன்; இந்த தளத்தில் வேறுயாருமில்லை!” என்றார். 

இதைக் கூறிவிட்டு, நீலகண்டன் தன்னைப் பின்பற்றி வருகிறாரென்று எண்ணி வேகமாக முன்னால் நடந்தார் ராஜாபகதூர். மற்றவர்கள் அவரைப் பின் தொடர்ந்தார்கள். அவர்கள் சிறிது தூரம் செல்லும் வரை காத்திருந்த நீலகண்டன் சட்டென்று திரும்பி, சிறுத்தையைப் போல் பொன்னம்பலத்தின் அறைக்குள் மறுபடி பாய்ந்தார். 

ரொம்பவும் காலம் தாழ்த்தி விட்டாரா? அவரால் வெளியே காத்துக்கொண்டு இருக்கவே முடியாமலல் இருந்தது, இருந்த போதிலும் ராஜாபகதூர் அங்கு இருக்கும் பொழுது அவரால் எதுவும் செய்வதற்கு இயலாமல் இருந்தது. பவானி நல்லவளாக இருந்தாலும், கெட்டவளாக இருந்தாலும் அவளை தீயில் வெந்து சாகும்படி விடுவதற்கு அவர் தயாராக இல்லை…… 

அறைக்குள் மயக்கமாகக் கிடந்த பவானியை, மெதுவாகத் தூக்கி வந்து, வெளிப்புறமிருந்த ஜன்னலருகே படுக்க வைத்தார். அங்கிருந்து அவர் படிக்கட்டுப் பக்கம் திரும்பியபொழுது, ராஜாபகதூர் பரபரப்புடன் ஓடி வருவது தெரிந்தது. 

“சீக்கிரம் வாருங்கள், நீலகண்டன்! இங்கு யாருமில்லை! என்று பதறினார் ராஜாபகதூர். 

அந்த சமயம், அவரது பார்வை பவானி கிடந்த பக்கம் சென்றது. குண்டடி பட்டவர் போல், பிரமைதட்டிப் போய் ஒரு விநாடி மௌனமாக நின்றார். 

“இது–இது யார்?” 

அவருடைய குரல் விசித்திரமாக இருந்தது. வெகுதூரம் கண்மூடித்தனமான வேகத்தில் ஓடிவந்தவர் போல் அவருக்கு மூச்சு வாங்கியது. 

“இவளை எங்கே பார்த்தீர்கள்?” என்று நிதானமாகக் கேட்டார் ராஜாபகதூர். 

“இந்த வராந்தாவின் கோடியிலே ஜன்னலருகே கிடந்தாள்.” என்று நிதானமாகக் கூறினார் நீலகண்டன். 

ஒரு விநாடி மௌனம் நிலவியது. 

“நான் இவளைப் பார்க்கவில்லையே” 

“நான் பார்த்தேன்” என்று கடுமையாகக் கூறிய நீலகண்டன், “அவள் அறையிலிருந்து புறப்பட்டு திகிலுடன் ஓடிவந்த பொழுது, திசைமாறிப்போய் அங்கு விழுந்து கிடந்திருக்க வேண்டும்!” என்றார். 

இந்த சமயத்தில் செல்வராஜ் பரபரப்போடு அங்கு ஓடிவந்து, “ஆண்டவனே–பவானி! இவளை எங்கே பார்த்தீர்கள்?” என்று கேட்டான். 

“அவளை எங்கே பார்த்தாலென்ன?” என்று சீறி விழுந்த நீலகண்டன், “இவளை சீக்கிரம் தூக்கிச் செல்லுங்கள்! தீ வெகு வேகமாகப் பரவுகிறது! என்றார். 

பவானியை தூக்கியபடி எல்லோரும் பரபரப்போடு கீழ்தளத்திற்கு ஓடினார்கள். அங்கிருந்து வெளித் தோட்டத்தை அடைந்தார்கள். 

தாம்பரம் வாசிகள் எல்லோரும், அந்த வீடுபற்றி எரிவதை வேடிக்கை பார்த்தபடி கதிகலங்கிப்போய் வெளியே நின்று கொண்டு இருந்தார்கள். வேலைக் காரர்களும், மற்றும் சிலரும் வீட்டுக்குள் நுழைந்து, கையில் கிடைத்த சாமான்களை எல்லாம் பத்திரமாக வெளியே கொண்டு வந்து சேர்த்துக் கொண்டு இருந்தனர். 

“ராணிசாகிப்பை வானப்பிரகாசம் ஹோட்டலுக்கு தூக்கிப்போய் விடலாம். அங்கு, ஒரே ஒரு பெண் தான் தங்கியிருக்கிறாள். வேறு கூட்டமில்லை” என்றார் நீலகண்டன். 

ராஜாபகதூர் தலையாட்டினார். 

எல்லோரும், பவானியை ஒரு காரில் தூக்கி வைத்து வானப்பிரகாசம் ஹோட்டலுக்குக் கொண்டு சென்றனர். அவர்கள் தோட்டத்து கேட்டை தாண்டும்பொழுது அங்கு வாட்டசாட்டமான அந்த சிலோன்காரன் நின்று கொண்டு இருப்பதைக் கவனித்தான் செல்வராஜ். அவன் தான் வட இந்தியா முழுவதும் அவர்களைப் பின் தொடர்ந்து வந்தவன். 

“பொன்னம்பலம் எங்கே?” என்று திடீரென்று கேட்டார் ராஜாபகதூர். அவர் குரல் கடுமையாக இருந்தது. 

“அவனையும் வானப்பிரகாசம் ஹோட்டலுக்குத் தூக்கிச் சென்றிருப்பதாக ஒரு வேலைக்காரன் கூறினான்!” என்றார் நீலகண்டன். 

வானப்பிரகாசம் ஹோட்டலை அடைந்த சமயத்தில், பவானிக்கு மூர்ச்சை தெளிந்துவிட்டது. நீலகண்டன் குஞ்சம்மாளை சத்தம் போட்டு கூப்பிட்டார். 

“அவள் தீப்பிடித்த இடத்தில் நின்று கொண்டு இருக்கிறாள்.” 

“அவள் அங்கு தான் இருப்பாள்!” என்று ஆத்திரமாகக் கூறிய நீலகண்டன், “அவர்கள் புத்தியே அப்படிப்பட்டது தான். நடுச்சாமத்தில் எங்காவது புதை குழி வெட்டும் சத்தம் கேட்டால் அதை வேடிக்கைப் பார்க்கச் சென்று விடுவார்கள்!” என்று சீறினார். 

செல்வராஜும், நீலகண்டனும் ராஜாபகதூர் வீட்டுப்பக்கம் நடந்து சென்றார்கள். பத்து நிமிஷத்தில், ராஜாபகதூரும் அவர்களோடு வந்து சேர்ந்து கொண்டார். பல தலைமுறைகளாக கம்பீரமாக தலை நிமிர்ந்து நின்ற அந்தக் கட்டிடம் நிர்மூலமாகி தரைமட்டமாவதை மௌனமாக நின்று கவனித்துக் கொண்டு இருந்தார் ராஜாபகதூர். தீயணைக்கும் வேலை அவ்வளவு வெற்றிகரமாக நடைபெறவில்லை. தீ மிகப் பயங்கரமாகப் பரவிக்கொண்டு இருந்தது. 

பொழுது நன்றாக விடிந்ததும், அவர்கள் மூவரும் வானப்பிரகாசம் ஹோட்டலுக்கு திரும்பி வந்தார்கள். சென்ற மூன்று மணி நேரமாக ராஜாபகதூர் வாய் திறந்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை என்பதை கவனித்தான் செல்வராஜ். 

வீடு எரிந்து நிர்மூலமாகி விட்டதை எண்ணித்தான் தன் மைத்துனர் வேதனையோடு இருக்கிறார் என்று நினைத்தான் செல்வராஜ். 

புதுவீடு எழுப்பிவிடலாம் என்று அவருக்கு ஆறுதல் கூறினான். ராஜாபகதூர் தில்லையம்பலம் வேதனையோடு சிரித்தார். 

“சில விஷயங்கள் நிர்மூலமாகிவிட்டால், புதிதாக நிர்மாணித்து சரிக்கட்டி விடலாம். ஆனால் சில விஷயங்கள் நிர்மூலமாகிவிட்டால். நாம் எதுவுமே செய்ய முடியாது!” என்றார். 

இதைக் கேட்டதும், செல்வராஜின் மனம் சோர்வடைந்தது. தன் மனதில் தோன்றிய அதே விபரீத சம்பவம், ராஜாபகதூர் மனதிலும் வேறூன்றி இருப்பதை புரிந்து கொண்டான். 

6. பொன்னம்பலத்தின் ஆசைகள்! 

தமயந்தியைப் பொறுத்த வரையில், அவளுடைய குண விசேஷமே விசித்திரமாக இருந்தது. தான் நினைத்தபடியே செய்வதும், தன் இஷ்டப்படி நடப்பதும், அவளுடைய உடலோடு பிறந்த பண்பாக இருந்தது. 

ஒருநாள் பழகுவதற்குள், செல்வராஜின் பேச்சிற்கு எதிர்ப்பேச்சு பேசுவதும், அவன் முடிவுகளில் குறை கண்டு பிடிப்பதும் அவளுக்கு வழக்கமாகி விட்டது. 

செல்வராஜ் பார்வைக்கு ரொம்ப அழகாக இருப்பான். வயது கோளாறு காரணமாக, உலகத்திலுள்ள பெண்கள் எல்லாம் அவன் சொன்னபடி நடக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டு இருந்தான். ஏதாவது ஒரு காரியத்திற்கு வருவதாக சொல்லியிருந்தால் குறிப்பிட்ட காலம் தவறி தாமதமாக வருவது அவன் வழக்கம். 

அன்றைய தினம், தமயந்தியோடு குதிரைச் சவாரி செய்ய வருவதாகக் கூறியிருந்தான். ஆனால், குறிப்பிட்ட நேரத்திற்கு கால்மணி நேரம் கழித்து தான் அவன் தயாராகி வந்தான். அப்படி வந்து பார்த்தபொழுது, கால்மணி நேரத்திற்கு முன்பே தமயந்தி புறப்பட்டு சென்று விட்டது தெரிந்தது. ஆத்திரமாக வேறொரு குதிரை மீது ஏறிக்கொண்டு வெகுவேகமாக அவள் சென்ற திக்கின் பக்கம் சென்றான். 

செல்வராஜை சந்தித்ததும் தமயந்தி கோபித்துக் கொண்டாள். கால தாமதத்திற்கு மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டான் செல்வராஜ். 

பிறகு, முதல் நாளிரவு ஏற்பட்ட தீ விபத்தைப் பற்றி அவளிடம் பேசினான். 

“அப்பொழுது நான் ஹோட்டலில் நன்றாக தூங்கினேன்” என்றாள் தமயந்தி. 

“நீலகண்டன் உன்னை எழுப்பியிருக்க வேண்டுமே,” என்று செல்வராஜ் ஆரம்பித்தான். 

“உளறாதீர்கள்! தீப்பற்றி எரியும் வீட்டை நான் எதற்காக வேடிக்கைப் பார்க்க வேண்டும்? குஞ்சம்மாள், எல்லாவற்றையும் விளக்கமாகக் கூறினாள். அந்த தீ விபத்து, உங்கள் சகோதரியை ரொம்ப பயங்கரமாக பாதித்திருக்கிறது போலிருக்கிறது!” என்று ஒரு தினுசாகக் கூறினாள் தமயந்தி. 

சட்டென்று அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்த செல்வராஜ், சற்றுக் கடுமையாகவே, “எங்கள் எல்லோரையும் தான் அந்த தீ விபத்து பாதித்தது. அதிர்ஷ்டவசமாக நீலகண்டன் கதவைத் தட்டியதும் நான் உடனே விழித்துக் கொண்டேன்!” என்று கூறிக் கொண்டே வந்தவன் சட்டென்று, “நீ எவ்வளவு காலம் இங்கு தங்கியிருக்கப் போகிறாய்?” என்று கேட்டான். 

“சில வாரங்கள்!” 

“எதற்காக நீ இங்கு வந்தாய்?” என்று கேட்டான் செல்வராஜ். 

“உங்களைப் பார்க்க வேண்டுமென்ற ஆசையால்!” என்று கிண்டலாகக் கூறினாள் தமயந்தி. 

“உண்மையாகக் கேட்கிறேன்; எதற்காக வந்தாய்?” என்று மீண்டும் கேட்டான் செல்வராஜ். 

“ஏனென்றால், எனக்கு நீலகண்டனைப் பிடிக்கும். அது ஒரு காரணம். அதோடு, மற்றொரு காரணம், சென்னையிலுள்ள எங்கள் குடும்ப வக்கீல், அந்தப் பழிகாரன், ‘பள்ளிக்கூடத்திற்குப் போ’ என்று கூறினால் நான் போயாக வேண்டும். ‘உன்னுடைய விடுமுறை காலத்தில் கொஞ்சநாள் வானப்பிரகாசம் ஹோட்டலில் தங்கு’ என்று கூறினால் உடனே நான் இங்கு வந்து தங்கியாக வேண்டும்!……என்னுடைய வாழ்க்கை சரிதத்தை நான் உங்களுக்குச் சொல்லவில்லையா?” என்று கூறிவிட்டு சளசளவென்று பேச ஆரம்பித்தாள். 

குதிரை சவாரிசெய்த நேரம் முழுவதும் தமயந்தி தான் பேசிக் கொண்டு வந்தாள். பிறகு வானப்பிரகாசம் ஹோட்டலுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்த பொழுது, தமயந்தி சட்டென்று, அந்த வழுக்கைத் தலை இளைஞன் யார்? இன்று காலை என் மீது ஒரு ரோஜாபுஷ்பத்தை வீசி எறிந்தான்” என்றாள். 

“பொன்னம்பலமா!” என்று வியப்போடு கேட்டான் செல்வராஜ். 

‘ஆம்’ என்ற பாவனையில் தலையசைத்தாள் தமயந்தி. 

“ஏன், அவனை உனக்குப் பிடிக்கவில்லையா?” 

“என்னவோ, அவனைக் கண்டாலே எனக்குப் பிடிக்கவில்லை. அவன் என் மீது ரோஜா புஷ்பத்தை வீசி எறிந்ததும், நான் ஆத்திரமாக அதை அவன் மீதே வீசி எறிந்தேன். ஆனால், அதை அவன் எப்படி நினைத்தானோ? அவனை எனக்குப் பிடிக்கவில்லை. உங்களுக்குப் பிடிக்கிறதா?” 

செல்வராஜ் அதற்கு எந்தவித பதிலும் சொல்லாமல் மௌனமாக இருந்தான். 

“அவன் பார்ப்பதற்கு அழகாகத் தான் இருக்கிறான்; இல்லையா, செல்வராஜ்.–ம்…….அந்தக் கிழவனை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவன் நேற்றிரவு நடமாடியதாக குஞ்சம்மாள் சொன்னாள். என்னை என்றாவது ஒருநாள் குகைப்பக்கம் அழைத்துச் செல்வீர்களா? அந்த குகைகளை எல்லாம் நான் பார்க்க வேண்டும். அந்தக் கிழவனையும் சந்திக்க வேண்டுமென்று, எனக்கு ஒரே ஆசையாக இருக்கிறது, அவன் வெறிபிடித்தவன் என்று எல்லோரும் சொல்லுகிறார்கள். ஒரு மனிதனை, அவன் சம்மட்டியால் அடித்தே கொன்று விட்டானாம். ஆனால் நீங்கள் என் அருகிலிருக்கும் பொழுது அவன் என்னை கொலை செய்யமாட்டான்!” என்று உற்சாகமாகப் பேசினாள் தமயந்தி. 

“உனக்கு எல்லாமே விளையாட்டுத்தானா ?” என்று எரிச்சலாகக் கேட்டான் செல்வராஜ். 

தமயந்தி சிரித்தாள். 

பிறகு, அவள் பேச்சு நீலகண்டனைப் பற்றி திரும்பியது. தான் சிறு பெண்ணாக இருந்த பொழுது அந்த வக்கீலின் ஆபீஸில் நீலகண்டனைப் பார்த்திருப்பதாகவும், நீலகண்டன் தன் சித்தப்பாவுக்கு ரொம்ப வேண்டியவர் என்றும் கூறினாள். ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் நீலகண்டன், தவறாமல் தனக்கு பிறந்த தின வெகுமதி அனுப்பி வருவதாகவும் கூறினாள். தனக்கு மூன்று வயதாக இருக்கும் பொழுதே காலமாகிவிட்ட தன் சித்தப்பாவுக்கு, நீலகண்டன் ரொம்பவும் கடமைப்பட்டு இருக்கிறார் என்று தமயந்தி நினைத்தாள். சித்தப்பாவின் முகமே அவளுக்கு இப்பொழுது ஞாபகம் இல்லை. 

அடிக்கடி விடுமுறை காலத்தில், தான் நீலகண்டனை சந்திப்பது உண்டென்றும், நீலகண்டன் முரட்டுக் குணம் படைத்தவர் என்றாலும் தன்னிடம் அன்பாக இருப்பதாகவும் நன்றியறிதலோடு கூறினாள். 

“அவருக்கு பொன்னம்பலத்தைப் பிடிக்கவில்லை என்றே நினைக்கிறேன்” என்று தமயந்தி கூறியதும் செல்வராஜுக்கு ஒரே ஆச்சரியமாயிருந்தது, அவர்கள் இருவரும் எப்பொழுது சந்தித்துக் கொண்டார்கள் என்று செல்வராஜுக்கு தெரியாது! 

“பொதுவாக பொன்னம்பலத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம் நீலகண்டனின் முகம் கடுகடுப்பாக மாறிவிடுகிறது. என் மீது அவன் ரோஜா புஷ்பத்தை வீசி எறிந்தது தெரிந்தால் அவன் எலும்பைத் தூளாக்கிவிடுவார்!” என்று கூறிக்கொண்டே சிரித்தாள். 

அவர்கள் உள்ளே வந்தபோது, பொன்னம்பலம் வெளி வராந்தாவில் நின்று கொண்டு இருந்தான். வழக்கம்போல், அவனுடைய ஆடை அலங்காரம் பிரமாதமாக இருந்தது. 

“குதிரைச் சவாரி போய்விட்டு வருகிறீர்களா?” என்று அவசியமில்லாத ஒரு கேள்வி கேட்டான் பொன்னம்பலம். 

‘ஆம்’ என்ற பாவனையில் தலையாட்டினான் செல்வராஜ். 

பொன்னம்பலம் ஜோராக தமயந்தி அருகே சென்று “காலையில் உன்னைச் சந்தித்தேனல்லவா?” என்று புன்னகையுடன் கேட்டான். 

தமயந்தி அவனையே ஒரு விசித்திரப் புன்னகையோடு பார்த்துக்கொண்டு இருந்தாள். பிறகு நிதானமான குரலில், “நீங்கள் சாப்பாட்டுக்கூடத்தில் தானே சாப்பிடுவீர்கள்?” என்று கேட்டாள். 

“ஆமாம்” என்று அவசரமாகக் கூறினான் பொன்னம்பலம். 

“அப்படியானால் ஒரு நாளைக்கு மூன்று தரம் என்னைப் பார்ப்பீர்கள்!” என்று கூறி விட்டு ‘சரசார’வென்று உள்ளே சென்றாள். 

பார்வையைவிட்டு மறையும் வரை அவளையே வெறிக்கப் பார்த்துக் கொண்டு இருந்தான் பொன்னம்பலம். 

“அவள் யார்?” என்று கேட்ட பொன்னம்பலம், பிறகு, “நீ ராஜாபகதூரைப் பார்த்தாயா? நேற்றிரவு எனக்கு என்ன நேர்ந்தது? இன்று படுக்கையிலிருந்து விழித்தெழும் வரை என்ன நடந்ததென்றே எனக்கு நினைவில்லை. எனக்கு நீலகண்டன் கொடுத்திருக்கும் அறை ரொம்பவும் வசதிக் குறைவானது. நான் அதை மாற்றிக்கொள்ளப் போகிறேன்–” என்று ஏதோ சொல்லிக் கொண்டு இருக்கும்போதே, செல்வராஜ் அந்த இடத்தை விட்டுக் கிளம்பி தோட்டத்துப் பக்கம் போய்விட்டான். 

இம்மாதிரி அவமதிப்புகள் எல்லாம், பொன்னம்பலத்திற்கு ஒரு பெரிய விஷயம் இல்லை. அலட்சியமாகப் புன்னகை பூத்தபடி அங்கு போடப்பட்டு இருந்த ஹோட்டல் மேஜை அருகே சென்றான். அந்த மேஜையின் மீது, ஒரு பெரிய “பதிவுப்புத்தகம்” இருந்தது. அந்தப் பதிவுப் புத்தகத்தில் தான், ஹோட்டலுக்கு வந்து தங்குபவர்களின் பெயர் விலாசங்கள் பதிந்து வைக்கப்பட்டு இருக்கும். அந்தப் பதிவுப் புத்தகத்தை எடுத்து புரட்டிப் பார்த்துக் கொண்டு இருந்தான் பொன்னம்பலம். 

அந்தச் சமயத்தில், நீலகண்டன் அங்கு வந்தார். அவரைப் பார்த்த பொன்னம்பலம், “அந்த அழகிய யுவதி யார்?” என்று கேட்டான். 

நீலகண்டன் ஒரு விநாடி அவனை வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டு இருந்தார். பிறகு, “பொன்னம்பலம்! நேற்று உனக்குக் கொடுக்கப்பட்டிருந்த அறை வசதிக் குறைவானது என்று நினைக்கிறேன். உன்னை மூன்றாம் நம்பர் அறைக்கு மாற்றுகிறேன்” என்றார். 

“அந்த அழகி யார்?” என்று விடாமல் கேட்ட பொன்னம்பலம் “அவளுடைய உறவினர்கள் யாராவது இங்கு இருக்கிறார்களா? அவளுடைய பெயர் தமயந்தி என்றும், ஏர்க்காடு கான்வென்டிலிருந்து இங்கு வந்திருக்கிறாள் என்றும் ரிஜிஸ்டரில் குறிக்கப்பட்டு இருக்கிறதே!” என்றான். 

“தமயந்தி இங்கே தங்கியிருக்கிறாள்; ஆம்!” 

“அவள் யார்?” 

“அவள் வழக்கமாக இங்கு வருபவள்! கௌரவமானவள்!” என்றார் நீலகண்டன். அவர் குரலில் தொனித்த ஏதோ ஒன்று, பொன்னம்பலத்தை மேலே பேசவிடாது தடுத்தது. இருந்த போதிலும், அவன் விடாமல், “அவளுடைய உறவினர்கள் இங்கு யாராவது இருக்கிறார்களா?” என்று கேட்டான். 

நீலகண்டன் தன் முழங்கையை மேஜையில் ஊன்றி சாய்ந்தபடி பொன்னம்பலத்தின் முகத்தையே பார்த்துக் கொண்டு, “எனக்குத் தெரிந்தவரை அவளுக்கு உறவினர் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை!’ என்று கச்சிதமாகக் கூறிவிட்டு, “அவளுடைய சித்தப்பாவை எனக்குப் பல வருஷங்களாகத் தெரியும். அவள் சொத்தைப் பரிபாலிக்கும் வக்கீல்களையும் நான் அறிவேன். வருஷா வருஷம், தனது விடுமுறைக் காலத்தில் ஒரு பகுதியை அவள் இங்கு கழிக்க வருவாள். இவற்றைத் தவிர உனக்கு ஏதாவது தேவையான தகவல்கள் இருக்கிறதா?” என்று விஷமத்தனமாகக் கேட்டார் நீலகண்டன். 

பொன்னம்பலம் அந்த அவமதிப்பையும் சட்டைசெய்யாமல், “அவளை எனக்கு அறிமுகம் செய்து வைப்பீர்களா?” என்று கேட்டான். 

“இதற்கு முன்பேயே, நீ அறிமுகமாகி விட்டாய் என்று நினைக்கிறேன்” என்று நிதானமாகக் கூறிய நீலகண்டன், “என்னுடைய செடியிலிருந்த ரோஜாப் புஷ்பம் ஒன்று கீழே கிடந்தது. ஓட்டலில் தங்க வருபவர்கள், ரோஜாப் புஷ்பத்தைப் பறிக்கக் கூடாதென்று நாங்கள் நோட்டீஸ் எழுதிப்போடுவதில்லை. ஏனென்றால், இங்கு வந்து தங்குபவர்கள் மரியாதை தெரிந்த புத்திசாலிகளாகவே இருப்பார்கள்!” என்றார். 

அவர் முரட்டுத்தனமாகப் பேசியதைக்கூட பொன்னம்பலம் பொருட்படுத்தவில்லை. வாழ்க்கையிலே, இம்மாதிரி பல அவமதிப்புகளுக்கு அவன் ஆளாகி இருக்கிறான்! 

“எவ்வளவு காலமாக நீர் இந்த ஓட்டலை நடத்துகிறீர்?” என்று கேட்டான் பொன்னம்பலம். 

“இங்கு இரண்டு வருஷம் ஒன்பது மாதங்களாக இருக்கிறேன். உனக்கு அவசியமாகத் தேவைப்பட்டால், எந்தந் தேதியில் குடிவந்தேன் என்றும் பார்த்துச் சொல்லுகிறேன். இந்தக் கட்டடத்தை நாற்பதாயிரத்து அறுநூறு ரூபாய்க்கு வாங்கினேன். இதைச் சீர் செய்யவும், ஆசனங்கள் முதலியன தருவித்துப் போடவும் ஐம்பதாயிர ரூபாய் செலவழித்தேன். எனக்கு எவ்வளவு லாபம் வருகிறதென்று சரியாக என்னால் இப்பொழுது சொல்ல முடியாவிட்டாலும் எனது கணக்குப் பிள்ளையிடம் கூறி உனக்குச் சொல்லச் சொல்லுகிறேன். இவற்றைத் தவிர உனக்கு ஏதாவது தேவையான தகவல்கள் இருக்கிறதா?” என்று கூறி நிறுத்தினார் நீலகண்டன். 

பொன்னம்பலம் அலட்சியமாக “இச்” கொட்டியபடி, “இங்கு வந்து தங்கும் வாடிக்கைக்காரர்களிடம் நீர் நடந்து கொள்ளும் முறை அவ்வளவு சுமுகமாக இல்லையே! மரியாதையாக எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று நான் உமக்கு கற்றுக்கொடுக்க வேண்டுமென்று நினைக்கிறேன்!” என்றான். 

நீலகண்டன் மீண்டும் அவனை வைத்த விழி வாங்காது பார்த்தபடி”நீ இலங்கையில் பெரிய பணக்காரன் என்று சொல்லுகிறார்கள். உன்னைப் போன்ற ஒரு வாடிக்கைக்காரனை இழப்பதற்கு நான் விரும்பவில்லை. இருந்தாலும், இழக்க வேண்டித்தான் நேரும் போலிருக்கிறது!” என்று கூறிவிட்டு, மேஜை மீதிருந்த மணியை அடித்தார். உடனே அவருடைய சிப்பந்தியான ராமையா அங்கு வந்து சேர்ந்தான். 

“பொன்னம்பலத்திற்கு அவருடைய புது அறையைக் காண்பி. அவருக்குத் தேவையானது எதுவாக இருந்தாலும் ஏற்பாடு செய்து கொடு. அவர் விரும்பிக் கேட்டால், அங்குள்ள சாமான்களையும் மாற்றிக் கொடு. பொன்னம்பலம் வசதியாகத் தங்கியிருப்பதற்கு தேவையான எல்லா ஏற்பாட்டையும், நாம் அவருக்குச் செய்து தர வேண்டும்!” 

நீலகண்டன் விரும்பினால், ஒருவனை எந்த அளவுக்கு வேண்டுமானாலும் புண்படுத்துவார். அது, ராஜாபகதூர் தில்லையம்பலத்திற்குக் கூடத் தெரியும். இருந்த போதிலும், அப்படிப்பட்ட மனிதர், அன்றையத்தினம், உயிருக்கும் துணிந்து, நெருப்புக்குள் புகுந்து புறப்பட்டதை ராஜாபகதூரால் மறக்க முடியவில்லை. 

உள்ளபடியே “வானப்பிரகாசம்” ஓட்டல், ராஜாபகதூருக்கு எவ்வளவோ சௌகரியமாகத்தான் இருந்தது. அவர் மனதை வருத்திக் கொண்டு இருந்த அந்தக் கவலைகள் மாத்திரம் இல்லாதிருந்தால், அந்த ஓட்டல் வாழ்க்கையை ரொம்பவும் ரசித்திருப்பார். 

அந்தக் கட்டடம் ஒரு பழங்காலக் கட்டடம். மாடியின் நான்குப் பக்கமும், தாழ்வாரங்களும், நடுவிலே நீண்ட வராந்தாவும், இரு பக்கங்களிலும் வரிசையாக அறைகளும் கட்டப்பட்டிருந்தன. நான்கு புறங்களிலுமிருந்த தாழ்வாரங்களில் இருந்து நேராகத் தோட்டத்துக்கு இறங்கிச் செல்ல மரப்படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டு இருந்தன. 

பொன்னம்பலம் அந்தத் தாழ்வாரங்களின் வழியாக ஒருமுறை சுற்றி வந்து பார்த்துக் கொண்டான். தாழ்வாரத்தில் இருந்தபடி, கம்பியில்லா ஜன்னலின் மூலமாக எல்லா அறைக்குள்ளும் நுழைய முடியும். இவற்றையெல்லாம், ரொம்ப உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டான் பொன்னம்பலம். 

ராணி பவானியின் அறை ஜன்னலுக்கு முரட்டுத் திரைச்சீலைகள் போடப்பட்டிருந்தன. ராஜாபகதூரின் அறைச் சன்னல் விரியத் திறந்து கிடந்தது. அந்த வழியாகச் செல்லும் போது, அறைக்குள் ஒருவருமில்லை என்று கவனித்துக் கொண்டான் பொன்னம்பலம். செல்வராஜின் அறை அந்தக் கோடியிலே இருந்தது. அது பெரியத் தொல்லை என்று நினைத்தான் பொன்னம்பலம். ஏனென்றால், செல்வராஜ் ஒரு சிறு சத்தம் கேட்டாலும் விழித்துக் கொள்வான். அதோடு, ரொம்பவும் அபாயகரமானவன்! இது பொன்னம்பலத்திற்கு நன்றாகத் தெரியும். 

தோட்டத்தில் இருந்தபடியே, யாரும் சுலபமாக மாடி அறைக்கு வந்துவிட முடியும். இதை யோசித்து, அந்த வழியை முள் கம்பி வைத்து அடைப்பதற்கு நீலகண்டன் முன்பே ஏற்பாடு செய்திருந்தார். அது பொன்னம்பலத்துக்குத் தெரியாது. இருந்த போதிலும், அந்தத் திட்டம் இன்னும் நிறைவேற்றப்படாமலேயே இருந்தது. 

அந்த ஹோட்டலில், ஒரு அழகிய பருவ மங்கையும் வேலை பார்த்து வந்தாள். பருவமங்கைகளாக இருக்கும் வேலைக்காரிகளுக்கு எப்பொழுதுமே பொன்னம்பலத்திடம் ஒரு கவர்ச்சி ஏற்படுவது வழக்கம்! அவளோடு வெகுநேரம் பேசி, கிழவன் அட்சயலிங்கத்தைப் பற்றிய கதையைத் தெரிந்து கொண்டான். பொதுவாக இம்மாதிரி வதந்திகளில் அவனுக்குச் சிரத்தை கிடையாது. இருந்த போதிலும், அன்று மாலை தாம்பரம் காட்டுக்குள் சென்று ஒரு மலை உச்சியில் ஏறி நின்றபடி சுற்றிலும் ஒரு முறை பார்த்துக் கொண்டான். 

“வானப்பிரகாச” ஹோட்டல் கட்டடத்தைப் பார்த்தபோது பொன்னம்பலத்திற்கு ஏனோ ஒரு வித மனச் சோர்வு தட்டியது. இம்மாதிரி மனச்சோர்வு தட்டும் போதெல்லாம் அதற்கான காரணத்தை ஆராய்ந்து பார்ப்பது அவனது வழக்கம் அன்றைய தினமும் அவன் அம்மாதிரி ஆராய்ந்து பார்த்தபோது, தன் மனதில் ஏற்பட்ட மனச் சோர்வுக்கு என்ன காரணமென்று புரிந்து கொண்டான். அவனை அறியாமல் கொழும்பிலே தன்னால் கைவிடப்பட்டிருந்த பெண்ணின் நினைவு அவன் மனதிலே புகுந்திருந்தது…..அந்த எண்ணம் ஏற்பட்டதும், தனக்குத் தானே வரண்ட சிரிப்பொன்று சிரித்துக் கொண்டு, அவளைப் பற்றிய எண்ணத்தை தன் மனதிலிருந்து போக்கினான். அந்த அனுபவம், ரொம்பவும் சங்கடமானது. அநியாயமாக, அவன் தலையில் பழி விழுந்தது. அவள் எந்தக் காலத்திலும் புத்திசாலித் தனமாக நடந்து கொண்டதில்லை. அவள் ஒரு அழகி தான்; அதனால் தான், இந்தத் தகராறு ஏற்பட்டது அவள் அவனிடம் உயிராகத்தான் இருந்தாள். ஆனால் நிமிஷத்திற்கு நிமிஷம் கண்ணீர் சிந்துவாள். அதை நினைத்தாலே, அவனுக்கு இப்போதும் வெறுப்பாக இருந்தது……. 

…அம்மாதிரி ஒரு நிகழ்ச்சி நடக்குமென்று பொன்னம்பலம் எதிர்பார்க்கவே இல்லை. ஒரு பிரபல ஹோட்டலில் விருந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்த போது அந்தப் பெண்மணி திடீரென்று பயங்கரமாக வீரிட்டு அலறி, அவனை எச்சில் கையால் அடித்து விட்டாள். அந்த நிகழ்ச்சி, பொன்னம்பலத்திற்கு ஒரு சங்கடமான நிலைமையை ஏற்படுத்தி விட்டது. எல்லோரும், விஷயம் என்னவென்று விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதில், வேறு சில பெண்மணிகளின் பெயரும் இழுக்கப்பட்டது. அந்தச் சூழ்நிலையில், கொழும்பு நகரத்தை விட்டு அவசரமாகக் கிளம்பிவிடுவது தான் புத்திசாலித்தனமென்று அவனுக்குத் தோன்றியது. 

அந்த வீரசாகஸ அனுபவமும் அவனுக்கு ஒருவிதத்தில் அனுகூலமாகவே முடிந்தது. அந்தப் பெண்ணோடு விவாகரத்து செய்து கொண்டு, அந்தக் கல்யாணத்தின் மூலம் கிடைத்த ஏராளமான பணத்தை மூட்டைக்கட்டிக் கொண்டு கிளம்பினான் பொன்னம்பலம். தன் பெண் சந்தோஷமாக வாழப் போகிறாள் என்று நினைத்து அந்தப் பெண்ணின் தந்தை அவ்வளவு பணத்தை வாரி வழங்கியிருந்தார்… 

தன்னுடைய சிந்தனையிலிருந்து விடுபட்ட பொன்னம்பலம் மெதுவாக ஹோட்டல் வானப் பிரகாசத்தை நோக்கி நடந்து வந்து கொண்ட்உ இருந்தான். எதிரே, அன்று பகல் முழுதும் அவன் யாரைப் பற்றி எண்ணிக் கொண்டு இருந்தானோ, அதே தமயந்தி வந்து கொண்டு இருந்தாள். அவளைக் கண்டதும், சிறிது வேகமாக நடக்க ஆரம்பித்தான். 

தமயந்தியும் அவனைப் புறக்கணித்துவிட்டு செல்லவேண்டுமென்று நினைக்கவில்லை….அவன் அருகே வந்ததும் அவள் நின்றாள். 

“இன்று பிற்பகல் பூராவும் உன்னைச் சந்திப்பதற்குத் தான் துடித்துக் கொண்டு இருந்தேன்!” என்று கூறிய பொன்னம்பலம், “நீ எங்கே செல்லுகிறாய்?” என்று கேட்டான். 

தமயந்தி அவனையே சிறிது நேரம் உற்றுப் பார்த்தாள். “எங்கே போகிறேனென்பது, இனிமேல் நடக்கும் விஷயத்தைப் பொறுத்திருக்கிறது! நான் தாம்பரம் காட்டுக்குள் செல்லலாமென்று தான் புறப்பட்டு வந்தேன். என்னோடு துணையாக நீங்களும் வருவதாகச் சொன்னால் நான் உங்களைத் தடுக்க முடியாது. அதனால் இப்பொழுது ஓட்டலுக்குத் திரும்பிப் போகத்தான் தீர்மானித்து இருக்கிறேன்!” என்றாள். 

“ரொம்ப மோசமாகத் தாக்குகிறாயே!’ என்று புன்னகையுடன் கூறினான் பொன்னம்பலம். 

“நீங்கள் அதைப் புரிந்து கொள்ளுவீர்கள் என்று தான் எதிர் பார்த்தேன்” என்று கூறிவிட்டு மேலே நடந்தாள் தமயந்தி. 

தமயந்தியின் பேச்சு, பொன்னம்பலத்தின் உள்ளத்திலே, ஒரு கிளு கிளுப்பை ஏற்படுத்தியது. அவனுக்கு அவளிடம் ஏற்பட்டிருந்த சிரத்தை தீவிரமாயிற்று. பெண்கள் அவனிடம் அம்மாதிரி நடந்து கொண்டு, அவனைச் சிறுமைப்படுத்தியது இல்லை… அவள் போவதையே வெகு நேரம்வரை பார்த்தபடி நின்று கொண்டு இருந்தான். பிறகு, ஓட்டலை நோக்கி நடந்தான். அவன் மனம் ஆழ்ந்த சிந்தனையில் லயித்திருந்தது. 

அன்று பகல் முழுவதும், அவன் பவானியைப் பார்க்கவில்லை. மத்தியானம் சாப்பாட்டுக்கு வந்தபோது தான் அவளை ஒரு தடவை பார்த்தான். அப்பொழுது, அவள் அளவு கடந்து சஞ்சலத்தில் ஆழ்ந்திருப்பதாகத் தெரிந்தது. அப்போது அவளிடம் பேச அவனுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. 

அன்று இரவு எட்டரை மணிக்கு பொன்னம்பலம் சாப்பாட்டுக் கூடத்திற்குச் சென்றபோது, செல்வராஜ் ஒரு மேஜை அருகே உட்கார்ந்து சாப்பாட்டுக்கு காத்துக் கொண்டு இருந்தான். அவன் அழைக்காத போதிலும், அந்த மேஜை அருகே மற்றொரு நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தான் பொன்னம்பலம். 

“வெளியே ஹாலில் பெட்டி படுக்கை வைக்கப்பட்டு இருக்கிறது; யார் புதிதாக வந்திருக்கிறார்கள்?” என்று கேட்டான் பொன்னம்பலம். 

“அதை நீலகண்டத்திடமே கேள்” என்று நறுக்குத் தெறித்தாற் போல் கூறினான் செல்வராஜ். 

அன்று அவனும் சிறிது கடுகடுப்பாகவே இருந்தான். ஏனென்றால் எட்டு மணிக்கு தமயந்தியோடு விருந்து சாப்பிட வருவதாகக் கூறி ஏற்பாடு செய்திருந்தான், ஆனால், எட்டரை மணிக்குத் தான் விருந்து சாப்பிட வந்தான். ஆனால் தமயந்தி எட்டு மணிக்கே தன் சாப்பாட்டை முடித்துக் கொண்டு அறைக்குப் போய்விட்டாள் என்று கேள்விப்பட்டான்; அதனால் தான் அவன் குணாதிசயமும் ரொம்பவும் மாறி இருந்தது. 

பொன்னம்பலத்திற்கு சாப்பாட்டில் மனமே செல்லவில்லை. 

அன்று இரவு அவன் படுக்கைக்குச் செல்லும் போது, மணி பதினொன்றாகிவிட்டது. அரைமணி நேரம் வரை படுக்கையில் படுத்தபடி எதையோ படித்துக்கொண்டு இருந்தான். பிறகு விளக்கை அணைத்து விட்டு அறையை ஒட்டியிருந்த தாழ்வாரத்தின் பக்கம் சத்தமில்லாமல் சென்றான். தாழ்வாரத்தில் யாரும் காணப்படவில்லை. நேராக பவானியின் அறைப் பக்கம் சென்றான். அறை ஜன்னல் கதவுகள் சாத்தப்பட்டிருந்தன. உள்ளே ஏதாவது சத்தம் கேட்கிறதா என்று கவனித்தான். எந்தவித சத்தமும் இல்லை. மெதுவாக ஜன்னல் கதவைத் தட்டினான். உள்ளிருந்து, பதில் சமிக்ஞை எதுவும் கிடைக்கவில்லை. அந்தச் சமயத்தில் செல்வராஜின் அறைக்குள் யாரோ நடமாடும் சத்தம் கேட்டது. வேகமாகத் திரும்பி வந்து தன் அறைக்குள் நுழைந்து கொண்டான். 

ஒருக்கால் பவானியே அவனைத் தேடிக் கொண்டு வரக்கூடும் என்ற எண்ணமும் அவனுக்கு எழுந்தது. கதவைத் தாளிடாமல் வைத்துவிட்டு, படுக்கையில் போய்ப் படுத்துக் கொண்டான். 

அவன் கொஞ்ச நேரம் தான் தூங்கி இருப்பான்; திடீரென்று அவனுக்கு விழிப்பு ஏற்பட்டது. திறந்திருந்த அறைக் கதவு வழியாக வெகு வேகமாய் குளிர் காற்று வீசிக் கொண்டு இருந்தது. ஆத்திரத்தோடு முனகியபடி படுக்கையை விட்டு எழுந்து கதவைச் சாத்தி தாளிட்டுவிட்டு, படுக்கையில் போய்ப் படுத்துக் கொண்டான். சில விநாடிகளுக்கெல்லாம் அயர்ந்து தூங்கிவிட்டான். 

இரவு மணி மூன்று அடித்த போது, ஒரு மங்கலான உருவம் தோட்டத்துப் பக்கமிருந்த மரப் படிக்கட்டுகளின் வழியாக ஏறி தாழ்வாரத்தை அடைந்தது. சத்தமில்லாமல் தாழ்வாரத்தில் நடந்து வந்த அந்த உருவம் பொன்னம்பலத்தின் அறையை நெருங்கியதும், வாசற்கதவுப் பக்கம் நின்றது. பிறகு மெதுவாக அந்தக் கதவைத் தள்ளிப் பார்த்தது. 

அந்த சத்தத்தைக் கேட்டு விழித்துக் கொண்ட செல்வராஜ், தன் அறைக் கதவைத் திறந்து கொண்டு தாழ்வாரத்துக்கு வந்தான். அப்போது, ஏதோ ஒரு உருவம் தோட்டத்துப் படிக்கட்டுகளில் இறங்குவது தெரிந்தது, 

“யார் அது?” என்று கடுமையாகக் கேட்டான் செல்வராஜ், அந்த உருவம் திரும்பிப் பார்த்தது. 

பரந்த தாடியுடன் காட்சியளித்த அந்த குறுகிய உருவத்தை ஒரு விநாடிதான் செல்வராஜால் பார்க்க முடிந்தது. வெகு வேகமாக அந்தப் படிக்கட்டுப் பக்கம் ஓடினான். 

அவன் படிக்கட்டை அடைவதற்குள், அந்தக் கிழவன் மாயமாய் மறைந்துவிட்டான்!

– தொடரும்…

– நீலகண்டன் ஹோட்டல் (துப்பறியும் நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1958, பிரேமா பிரசுரம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *