இசையின் எதிரொலிகள்
கதையாசிரியர்: முத்தமிழ்ப்பித்தன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: May 19, 2026
பார்வையிட்டோர்: 104

நேற்றுக் காலை முதல் எனக்குள் ஒரே குழப்பம். கடந்த பத்து நாட்களாக இந்தக் குழப்பம் என்னுள் குடியிருந்துகொண்டு என்னைப் படாதபாடு படுத்திக் கொண்டிருக்கின்றது. நானும் எங்கள் பகுதியில் குடியிருக்கும் பலரையும் விசாரித்துப் பார்த்துவிட்டேன். ஆனாலும் தெளிவு இன்னும் ஏற்படவில்லை. கேட்பவர்கள் எல்லாம் குழப்பத்தைத் தீர்ப்பதற்குப் பதிலாக, குழப்பத்தை இன்னும் அதிகப்படுத்தவே செய்தார்கள்.
அதன் பிறகு, நான் எவரையும் கேட்கவில்லை. நாமே இக்குழப்பத்திற்கான தீர்வை எப்படியாவது கண்டுபிடித்தே தீர்வது என கங்கணம் கட்டிக் கொண்டேன்.
எங்கள் வீடு இருக்கும் மாரியம்மன் கோவில், ரயிலடி தெருவின் தென்பகுதி கடைக்கோடியில், புதிதாக ஒரு தனி வீடு கட்டப்பட்டுள்ளது. அந்த வீடு அப்படி ஒன்றும் பெரிய வீடாகத் தெரியவில்லை. அதன் அளவு சுமார் ஆறு அல்லது ஏழு சதுரம்தான் இருக்கும்.
வீட்டின் முன்புறமும் பின்புறமும் காலியிடம் உள்ளது. முன் பகுதியில் ஒரு இளம் வேப்ப மரம் உள்ளது. அதற்கு நான்கு வயதுதான் இருக்கும். அதன் அருகே, சில பூச்செடிகளும், ஓமவள்ளி, திருநீற்றுப்பச்சிலை, துளசி, கற்றாழை, நித்திய கல்யாணி, சிறு குறிஞ்சாண் போன்ற சில மூலிகைச் செடிகளும் இருக்கின்றன.
அந்த வீட்டிற்கு எதிர்ப்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் வீடுகள் எதுவும் இல்லை. வீட்டின் தென்புறமும் எந்த வீடும் இல்லை. வீடு கிழக்குப் பார்த்த அழகான வீடு. எங்கள் தெருவில் கடைக்கோடியில், சேர்ந்தார்போல நான்கு வீடுகள் உள்ளன. அந்த நான்கு வீடுகளைத் தாண்டி சில காலி மனைகள் உள்ளன. அவற்றைத் தாண்டி அந்தப் புதிய வீடு தனியாகவே இருக்கின்றது.
அந்த வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள காலி மனையில் சில மாமரங்கள் மட்டும் உள்ளன. வீட்டில் தனி நபரோ, குடும்பமோ குடியிருப்பதாகத் தெரியவில்லை. அந்தவீடு பல நாட்களாகப் பூட்டியே கிடக்கின்றது.
கடந்த பத்து நாட்களுக்கு முன்பு, நான் இந்தப் பகுதிக்கு வந்தபோதுதான் இந்த வீடு என் கண்ணில் பட்டது. கண்ணில் பட்டது மட்டுமல்ல காதிலும் கேட்க ஆரம்பித்தது. ஆம் நான் அந்த வீட்டைப் பார்த்த நாளிலிருந்து இந்த வீட்டின் உள்ளிருந்து பாட்டுகள் கேட்டுக் கொண்டே இருக்கின்றது. ஆளில்லாத, பூட்டிக் கிடக்கும் அந்த வீட்டிலிருந்து பாட்டுக்கள் மட்டும் எப்படி? இதுதான் எனது பல நாள் குழப்பம்.
இந்தத் தெருவில் உள்ளவர்கள் சிலரிடம் இது பற்றிக் கேட்டேன். அவர்கள் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். இந்தத் தெருவில் எனக்கு நண்பர்கள் பலர் இருக்கின்றார்கள். ஆசிரியர் துரையரசன், பாடகர் மகேந்திரன், மரவாடி கணேசமூர்த்தி, ஜோதிடர் சிகாமணி எனப் பலரிடமும் கேட்டுவிட்டேன்.
“இது உங்களின் மனப் பிராந்திதான். ஆளில்லாத வீட்டில், பாட்டு எப்படி கேட்கும்?” என்பது போலச் சொல்லி என்னை ஒரு பைத்தியத்தைப் பார்ப்பது போலப் பார்த்தார்கள். கடந்த ஒரு வாரமாக நான் அவர்களைப் பார்த்தாலே, எனக்குள் எரிச்சல் ஏகமாய் வந்து தொலைக்கிறது.
நான் ராணுவத்திலிருந்து ஒன்றரை மாத விடுப்பில், ஊருக்கு வந்தபோதுதான் முதன் முதலில், இந்த வீட்டைப் பார்த்தேன். நான் பார்த்த நாளில் இருந்து இன்று வரை வீட்டின் உள்ளே இருந்து விதவிதமாகப் பாடல்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றது. ஆனால் பாட்டுக்கள் அத்தனையும் கேட்பதற்கு மிக மிக அற்புதமாக இருக்கின்றன.
அந்த வீட்டின் உரிமையாளர், மிகச் சிறந்த இசை ரசிகராகத்தான் இருக்க முடியும். அப்படிப்பட்ட அருமையான இசைப் பிரியரை கண்டிப்பாகப் பார்ப்பதற்கு மனம் தவியாய்த் தவித்தபடி இருக்கின்றது. இந்த வீடு யாருடையது? அவர் பெயர் என்ன? அவர் எங்கே இருக்கின்றார்? என்ற விவரங்கள் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை என்கிற போது என் மனம் இது பற்றி தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தது.
ஒருவேளை இப்படி இருக்குமோ? இவர் வீட்டில் இருக்கும்போது, திடீரென்று மின்தடை ஏற்பட்டு இருக்கலாம். அடுத்து. இவர் வெளியூர் பயணம் மேற்கொண்டு இருக்கலாம். பாட்டுப் பெட்டியை அணைக்காமல் மறந்து போனதனால் மின்தடை நீங்கிய பிறகு, பாட்டுப் பெட்டி தொடர்ந்து பாடிக்கொண்டிருக்கலாம். ஆனாலும் குழப்பம் இன்னும் நீடித்தபடியே இருக்கின்றது. நான் யோசித்தேன். இந்த வீட்டைப்பற்றிய மர்மம் வெளிப்பட ஒரே வழிதான் இருக்கிறது. நான் இங்கேயே பக்கத்தில் இருக்கும் இந்த மாந்தோப்பில் இருந்து கொண்டு பகல்பொழுது முழுவதும் தங்கியிருந்து, இந்த வீட்டைக் கண்காணித்துப் பார்த்தால் மட்டுமே இதன் உண்மை நிலையை உணர முடியும் என எனக்குப் பட்டது.
மறுநாள் முதல் அந்த மாந்தோப்பு எனது பகல் நேர இருப்பிடமானது. அங்கே ஒரு மடக்குக் கட்டில், படிக்கச் சில புதினங்கள், குடிதண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு கண்ணாடிப் போத்தல், ஒரு சிறிய டப்பாவில் இடை உணவாக கொஞ்சம் வறுத்த நிலக்கடலை என மாந்தோப்பு ஒரு ரம்யமான இடமாக மாற்றம் பெற்றது.
நான் கடந்த ஏழு ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றேன். தற்போது நான் டேராடூனில் இருக்கின்றேன். ஒன்றரை மாத ஆண்டு விடுப்பில் நான் இப்போது ஊருக்கு வந்துள்ளேன். அதனால் எனக்கு இப்போது வீட்டில் வேறு பொறுப்பான பணிகள் எதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
நான் மாந்தோப்பிற்கு வந்த முதல் நாள் எவரும் அந்தப் புது வீட்டிற்கு வரவில்லை. அப்போது அந்தப் புது வீட்டில், டி. எம். சௌந்தரராஜன் மனம் உருகி முருகனை உயரப் பிடித்து, உச்சஸ்தாயியில் உருகி உருகிப் பாடிக்கொண்டிருந்தார்.
“மண்ணானாலும் திருச்செந் தூரில்” தொடங்கி, “அழகென்ற சொல்லுக்கு முருகனை” இணையாக்கியும் “கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்” எனக் கசிந்துருகியும் கலக்கிக் கொண்டிருந்தார். தமிழ்க் கடவுளிடம் சவுந்தர்ராஜனுக்கு அப்படி ஒரு பற்றுதல். எந்த மதத்தினர் கேட்டாலும் உருகிப் போய் விடக்கூடிய லயிப்பு அவரது குரலில் மட்டுமல்ல, அவரது பாவனைகளிலும் பரவிக் கிடக்கும். கேட்பவரை பரவசப்படுத்தும். இப்போது என்னையும் அவர் உளமாற உருக வைத்துக் கொண்டிருக்கின்றார்.
நான் அந்த வீட்டின் இசையமுத்தைப் பருகிக் கொண்டே மாமர நிழலில் இதமான தென்றலின் அரவணைப்பில் தென்கட்சி யின் “இன்று ஒரு தகவலில்” இணைந்திருந்தேன்.
“சோளகர் தொட்டில்” அருகே இருந்தது. “சோளகர் தொட்டில்” ஒரு தரமான அற்புதமான புதினம். ஆனால் அதைப் படிக்க ஆரம்பித்தால் அதிலேயே மூழ்கிப் போய் வெளியில் என்ன நடக்கிறது என்பதை எல்லாம் நம்மால் கணிக்க முடியாமல் போய்விடும் என்பதனால் இப்போதைக்கு நான் அதனைத் தொடவில்லை. இன்று ஒரு தகவலை இடை இடையிடையே நிறுத்திவிட்டுப் படிப்பது அப்படி ஒன்றும் சிரமமானதாக எனக்குத் தெரியவில்லை.
இசை எனக்கு ஓரளவு பிடிக்கும். என்றாலும் அப்பா அளவிற்கு நான் இசைப் பிரியன் அல்லன். அவரது சேகரிப்புகள், ஒளிநாடாக்கள் வடிவில் 500க்கும் மேற்பட்டவை அவர் நினைவாக, அவை இன்றும் என்னிடம் உள்ளன. ஆனால் அவற்றையெல்லாம் நான் பயன்படுத்த முடியாத நிலையில், அவை பழுதடைந்தும், பலவீனமடைந்தும் உள்ளன.
அப்பா அந்த ஒளிநாடாக்களில் உள்ள வற்றை காலை மற்றும் இரவு நேரங்களில் கேட்டு ரசிப்பார். அவரது சேகரிப்பில் கர்நாடக இசை, வாய்ப்பாட்டு, வாத்திய இசை, மேற்கத்திய இசை, திருமந்திரம் போன்ற தமிழிசை, தமிழ்த் திரை இசை, நாட்டுப்புற இசை, பிற மொழிகளின் திரைப்பட இசை என பல்கிப் பெருகி இருக்கும்.
“ஒளிநாடாக்கள் வாங்குவதற்கு செலவிட்ட தொகைக்கு, அவர் சில வீடுகளைக் கூட வாங்கிப் போட்டு இருக்கலாம்” என அடிக்கடி அம்மா அவரை சீண்டிப் பார்ப்பார். அம்மாவின் சீண்டல்கள், கிண்டல்கள் ஒருபோதும் அப்பாவை பாதித்ததாக எனக்குத் தெரியவில்லை.
அப்பா, அவர் இறப்பதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு, தெற்கு வீதியில் உள்ள ரேடியோ பேலஸில் வாங்கிய ஒரு புதிய டிவிடி இசைப் பெட்டி, இன்னும் நல்ல நிலையில் இருக்கின்றது. ஆனால் அப்பா அதனை அதிகம் பயன்படுத்த வில்லை. அதில் காலை நேரத்தில் ஓர் அரை மணி நேரம், “கந்த சஷ்டி கவசம்” ஓடும். அது அம்மாவின் விருப்பம். நான் அதனை அதிகம் பயன்படுத்தியது இல்லை. ஆனால் இனி அதனை அதிகம் பயன்படுத்த மனம் ஆசைப்படுகிறது.
மதியம் அந்த வீட்டில் எம். எஸ். சுப்புலட்சுமியின் கணீர் என்ற குரல் இசையோடு இணைந்து எனது இதயத்தை வருடிக்கொண்டிருந்தது. நான் இடையிடையே சாப்பிடுவதற்கு மட்டும் வீட்டிற்குச் சென்று வந்தேன். மாலையில் கே.பி. சுந்தராம்பாள் ஞானப் பழத்தைப் பிழிந்து, பிழிந்து, ரசனையோடு தந்து கொண்டிருந்தார். நான் உருகிப் போனேன். மனம் லேசாகி உடல் பஞ்சாகி நான் காற்றில் கரைந்து போனவன் ஆனேன். எங்கோ மிதப்பது போல் நான் நடைமாறிப் போனேன். எடை கூடிப் போனேன். ஆனாலும் அப்பா அளவிற்கு நான் இன்னும் மாறவில்லை என்பது புரிகிறது. அப்பாவிற்கு இசை மூச்சுக்காற்றைப் போல முதன்மையாகவும், முக்கியமானதாகவும் இருந்தது. அப்பாவின் தனி அறையில், 500க்கும் மேற்பட்ட இசைநாடாக்கள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை நான் பலமுறை பார்த்திருக்கின்றேன்.
அவரது மேற்கத்திய இசை சேகரிப்பில் மைக்கேல் ஜாக்சன், மடோனா, விட்டினி அவுஸ்டன், எல்டன் ஜான், டேவிட் பவ்வி, ஸ்டெவி வொண்டர், லயனல் ரிச்சி, டோட்டோ, பான் ஜோவி போன்றவர்களின் பாடல்களும், லெட் இட் பி, அபே ரோடு, இமேஜின், டார்க் சைட் ஆப் தி மூன், ஹோட்டல் கலிபோர்னியா, ரூம்மர்ஸ், அபா தி ஆல்பம், அக்குவா, போனி எம், பீட் போன்ற பாடல் தொகுப்புகளும், இருந்தன.
ஹிந்தி திரைப்படப் பாடகர்கள் வரிசையில் கிஷோர்குமார், முகமது ரஃபி, ஆஷா போன்ஸ்லே, லதா மங்கேஷ்கர் போன்ற பாடகர்களின் பாடல்களும் ஹிந்தி பாப் இசைப் பாடகர்கள் வரிசையில் அலிசா, குமார்சானு, ஹரிஹரன், கே கே, சோனு நிகம், பால்குனிபதக், ஹரி ஜித் சிங், அட்நன்சாமி, டெலர் மேன்டி, ஹர்பஜன் மான், லக்கி அலி, குரு ரந்தவா, சினேகா பண்டல் போன்றவர்களின் பாப் இசைப் பாடல்களும் ஏராளமாய் இடம் பெற்றிருந்தன.
வாத்திய இசையில் குன்னக்குடி வைத்தியநாதன், லால்குடி ஜெயராமன், ஏ. கன்னியாகுமாரி, என். விஜயலட்சுமி, அனுராதா ஸ்ரீதர் போன்றவர்களின் வயலின், சீனிவாசன், குமரேஷ், கமலேஷ் ஆகியோரின் மண்டலின் இசை, காருக்குறிச்சி அருணாச்சலம், சேஷம்பட்டி சிவலிங்கம், சேக் சின்ன மௌலானா, டி.ஜி. முருகவேல் போன்றவர்களின் நாதஸ்வர இசை, ஏ. கே. சி. நடராஜன், சப்தகிரி, டி.வி. சுப்பிரமணியசுவரர் போன்றவர்களின் கிளாரினெட் இசை, குடமல்லூர் ஜனார்த்தன், ரமணி, எஃப். எம். மேஷோ போன்றவர்களின் புல்லாங்குழல், காயத்ரி, ராஜேஷ் வைத்தியா, ஏ. பத்மாவதி, ரேவதி கிருஷ்ணா போன்றவர்களின் வீணை என நிறைய இசைத் தொகுப்புகள் இடம்பெற்று இருந்தன. இன்னும் இளையராஜாவின் ‘ஹவ் டு நேம் இட்’, திருவாசகம், ஜாகிர் ஹுசைனின் பலவகை இசை தொகுப்புகள், யண்ணி, கிட்டரோ போன்றவர்களின் வித்தியாசமான இசை தொகுப்புகளும், எம். எஸ். விஸ்வநாதன், தேவா, இளையராஜா, ஏ. ஆர். ரகுமான் போன்றவர்களின் திரை இசைப் பாடல்களும் இடம் பிடித்திருந்தன.
கர்நாடக இசை வாய்ப்பாட்டுப் பிரிவில் எம். எஸ். சுப்புலட்சுமி, டி. கே. பட்டம்மாள், செம்மங்குடி சீனிவாஸ ஐயர், உன்னிகிருஷ்ணன், பாம்பே ஜெயஸ்ரீ, சுதா ரகுநாதன், சௌமியா, மகாநதி ஷோபனா என ஏராளமாய் இசைத் தொகுப்புகள் இருந்தன. அடுத்து விநாயக் ராமின் கடம், கத்திரி கோபால்நாத்தின் சாக்சா போன், ரேஷ்மா பண்டிட் தபேலா, மேடி அம்மினியனின் கிட்டார் , சைனீஸ் கிட்டார், ஸ்பானிஷ் கிட்டார் , யூரி ஜோஸ்னின் டிஸ்கோ, பித்துவின் பூம்பூம், அமிதாப்பச்சன், தர்மேந்திரா, அக்சய்குமார், சாருக்கான், சல்மான்கான், ஆமீர், அஜய் தேவ்கன், மிதுன் சக்கரவர்த்தி ஆகியோரின் இந்திப் படப் பாடல்களும் அவற்றில் இருந்தன. இணையதள வசதி இல்லாத அந்தநாட்களில், அப்பா இவற்றையெல்லாம் எப்படி சேகரித்தார் என்பது எனக்கு அளவு கடந்த ஆச்சரியத்தை அளிக்கின்றது.
எனக்கு இசையில் அவ்வளவாக நாட்டம் இல்லாததால் பல வகை இசைப் படைப்பாளிகளின் பெயர்களை என்னால் முழுமையாகச் சொல்லத் தெரியவில்லை. நிறைய இசை விற்பனர்களை நான் சொல்ல முடியவில்லை. எல்லாம் எனக்கு மறந்து போய்விட்டது. ஆனால் இப்போது அப்பாவைப் போல் நானும் இசையை முழுமையாக ரசித்து மகிழ வேண்டும் என மனம் துடிக்கின்றது. அப்பா எந்த வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும் அவரது அறையில் எப்போதும் இசை ஒலித்துக் கொண்டே இருக்கும்.
மறுநாள் நான் மாந்தோப்பில் இருந்தபடி இன்று ஒரு தகவலில் மூழ்கியிருந்த போது, மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் வந்தான். என்னைப் பார்த்தான். அவனுக்கு அப்போது தண்ணீர் தாகம் இருந்தது. அவன் தயங்கித் தயங்கி எனது தண்ணீர் போத்தலைப் பார்த்துக் கொண்டே இருந்தான். உடனே தண்ணீர் போத்தலை எடுத்து அவனிடம் நீட்டி, “இந்தா தம்பி தண்ணிய குடிச்சுக்க ,”என்றேன். அவன் ஆசையோடு ஆனந்தமாக மூன்று மடக்கு தண்ணீரை குடித்துவிட்டு எனக்கு கொஞ்சம் மீதி வைத்தான். அவனிடம்,” இந்த வீடு யாருடையது?” என்று கேட்டேன்.
“அதெல்லாம் எனக்குத் தெரியாதுண்ணே. இந்த வீட்டை பத்து மாசத்துக்கு முன்னாடி கட்ட ஆரம்பிச்சாங்க. கிடு கிடுன்னு கட்டினாங்க. ஒரு மாசத்துக்கு முன்னாடி வீட்டு வேலை எல்லாம் முடிஞ்சு போச்சு ஆனால் வீட்ல யாரும் இன்னும் குடி வரல. இது மட்டும் தான் எனக்குத் தெரியும். மத்தபடி வேற எதுவும் தெரியாது அண்ணே,” என்று சொல்லிவிட்டு அந்தச் சிறுவன் அவ்விடத்தை விட்டு உடனே அகன்றான்.
அடுத்த நாள் நான் இன்று ஒரு தகவலை முடித்துவிட்டு சோளகர் தொட்டிலை வாசிக்க ஆரம்பித்தேன்.
அன்று காலைமுதல் மதியம் வரையும் மாலை நேரத்திலும் நாள் முழுவதும் எல்லாம் ஹிந்தி பட பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. அவற்றில் பாபி, ஆராதனா, சங்கம், சோலே, சோடி சி பாத், குர்பானி, ஏக் துஜே கேலியே, சிட்சோர், தரம்வீர், கம் கிசிசே கம் நகின், டிஸ்கோ டான்சர், மேரா நாம் ஜோக்கர், அமர் அக்பர் ஆண்டனி என ஏராளமான அற்புதமான இந்திப் படப் பாடல்கள் மனதை மயக்கும் விதமாக இருந்தன. நான் காலையில் சென்றபோது குர்பானி படத்திலிருந்து பாகிஸ்தான் பாடகி நசியாஹாசன் பாடிய “ஆப் சைசா கோயி “என்ற பாடல் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. இவற்றையெல்லாம் நான் கேட்டு ரசித்துக்கொண்டிருந்தேன்.
அப்பா இந்த மாதிரியான இந்தித் திரைப்படப் பாடல்களை அப்படி ரசித்தபடி கேட்பார். நான் அவரிடம்,” போயும் போயும் இந்திப் பாட்டைக் கேட்டுக்கிட்டு இருக்கீங்களே! ஏதாவது புரியுதா ?”என்று கேட்பேன். உடனே அவர்” டேய் இசைக்கு மொழி ஒரு தடையில்லடா. இசைய ரசிக்கிறதுக்கு மொழி தெரியணும்கிற அவசியமில்லை. காதும் மனசும் நல்லா இருந்தா போதும்,” என்று ஒரு தினசாக அவரது பதில் இருக்கும். . அப்போதெல்லாம் அந்தப் பாடல்கள் எல்லாம் ஏதோ கடாமுடா சத்தமாகத்தான் எனக்குப் புரிந்தது. அதே பாடல்கள். அதே நான். ஆனால் இன்று கேட்பதற்கு மிக அருமையாக இருக்கிறது. ஏன்? எல்லாம் மனசு தான்.
மறுநாள் காலை பதினோரு மணி அளவில் ஒரு ஆடு மேய்க்கும் சிறுமி என் அருகில் வந்தாள். அவளது பார்வையிலும் பேச்சிலும் துடுக்கத்தனமும் மிடுக்குத்தனமும் இணைந்து இருந்தன. நான் அவளிடம் பெயரைக் கேட்டேன். அவள் தனது பெயரைச் சொல்லாமல்,” முதல்ல நீங்க உங்க பேரச் சொல்லுங்க? நான் என் பெயரைச் சொல்றேன்.” என்றாள். இது ஏதோ பண்டமாற்று வித்தை போல எனக்குப் பட்டது. ஆனாலும் அவள் நல்ல கெட்டிக்காரச் சிறுமி என்பதும் எனக்குப் புரிந்தது. நான் என் பெயரைச் சொன்னேன். அவள் உடனே “என் பேரு சாந்தகுமாரி. நான் அஞ்சாப்பு படிக்கிறேன். எனக்குக் களக்குடிதான் சொந்த ஊரு. நான் இங்க நாலு மாங்கொத்து ஒடிச்சிட்டுப் போலாம்னு வந்தேன். எனக்கு மரம் ஏறத் தெரியாது. மாமா நீங்க கொஞ்சம் ஒடிச்சுத் தரீங்களா ?”என்று பணிவுடன் கேட்டாள். எனது அக்கா மகள் செல்லக்கண்ணுவைப் போலவே அந்தச் சிறுமி இருந்தாள். மனம் லேசாகியது.
நான் உடுத்தியிருந்த அடர் சாம்பல் நிற வண்ண வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டேன். மரத்தில் ஏறப்போனேன். உடனே சாந்தகுமாரி, சாந்தமாகவும் பாந்தமாகவும் என்னைப் பார்த்து வார்த்தைகளை வடியவிட்டாள். “மாமா, பார்த்து நிதானமா ஏறுங்க,” என்று வீட்டைத் தாங்கும் உத்திரத்தைப் போல என்னை அவள் பத்திரப்படுத்தினாள். நான் மரத்தில் ஏறி மாங்கொத்துகளை அவள் கேட்டபடி ஒடித்துப்போட்ட பின் மரத்திலிருந்து கீழே இறங்கியபடி அவளிடம் கேட்டேன்,” சரிமா, மாங்கொத்து எதுக்கு? வீட்ல என்ன விசேஷம்?” என்று கேட்டேன். உடனே அவள் என்னைப் பார்த்து புன்னகைத்தபடியே,” மாமா எங்க தாத்தாவுக்கு நாளைக்கு தெவசம். அதுக்கு நாலு மாங்கொத்து வேணும். நான் ஆடுகள மேய்க்க ஓட்டிட்டு வரும்போது அம்மாச்சி எங்கிட்ட மாங்கொத்து எங்காச்சும் இருந்தால் பார்த்து நாலு கொத்து ஒடிச்சிட்டு வான்னு சொல்லுச்சு அதான்,” என்றாள்.
துரு துருவென்று மாநிறத்தில் மாந்தளிர் போல அழகாக இருந்த அவளிடம், நான் பக்கத்தில் இருந்த புது வீட்டைப் பற்றிக் கேட்டேன்.
“ ஓ ..அதுவா. அந்த வீடு எங்க சொந்தக்காரர் வீடுதான் மாமா. அவர் பெயர் ராமலிங்கம். அவங்க நாஞ்சிக்கோட்டை சாலையில் சாப்பாட்டுக்கடை வச்சிருக்காங்க. அவரு காலையில ஆறு மணிக்குக் கடைக்குப் போவாரு. திரும்ப ராத்திரி பத்து மணிக்குதான் வருவாரு,” என்றாள்.
“சரிமா. ஆள் இல்லாத வீட்டில பாட்டு பொழுதனிக்கும் கேட்டுக்கிட்டே இருக்கு. அதான் என்னன்னு புரியல,” என்று நான் அச்சிறுமியைப் பார்த்துக் கேட்டேன். அப்போதுதான் அச்சிறுமியும் அந்த வீட்டிலிருந்து பாட்டுக்கள் ஒலிப்பதை கவனிக்க ஆரம்பித்தாள். திகைத்தபடி அவள் என்னைப் பார்த்தாள். “ஆமா.. பூட்டி இருக்கிற வீட்ல பாட்டு கேக்குதே! என்னன்னு புரியலையே ? சரி மாமா, நான் அவங்களோட அலைபேசி எண்ணைத் தர்றேன். நீங்க நேர்லயோ அல்லது அலைபேசியிலையோ பேசிக்குங்க,” என்று சொல்லிவிட்டு மனதின் உள்ளிருந்து படபடவென்று அந்த வீட்டுக்காரரின் அலைபேசி எண்ணை எனக்குத் தந்தாள். அடுத்து அவள் முகத்தில் ஒரு மின்னல் புன்னகை வந்து விட்டு மறைந்தது.
“மாமா உங்களுக்குச் சேதி தெரியுமா? எங்க அக்காதான் அந்த மாமாவக் கல்யாணம் கட்டிக்கப் போறாங்க. சரி மாமா எனக்கு நேரம் ஆகுது. நான் வரேன்,” என்று சொல்லிவிட்டு அச்சிறுமி வேகமாக ஆடுகளை நோக்கி மாங்கொத்துகளோடு நகர்ந்தாள். சிறுமியின் வெகுளித்தனமும் துடுக்குத்தனமும் என்னை வெகுவாகக் கவர்ந்தது,
நான் ராமலிங்கம் என்ற 22 வயது இளைஞனை முதன் முதலாக அவரது புது வீட்டில் அன்று இரவு 8:30 மணி அளவில் சந்தித்தேன். அந்த இளைஞர் நேரடியாக என்னிடம் பேச ஆரம்பித்தார். “ஐயா உங்களப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும். நீங்க துரைசாமி வாத்தியார் வீட்டுக்குப் பக்கத்துலதானே குடியிருக்கீங்க? நீங்க ராணுவத்தில் பணிபுரிங்க. சரி விடுங்க. உங்க சந்தேகத்துக்கான பதிலை முதல்ல சொல்லிடறேன். அப்புறமா மத்த விஷயத்தைப் பத்தி பேசிக்கலாம். இப்படிச் சொல்லிவிட்டு பக்கத்தில் இருந்த கண்ணாடிப் போத்தலில் இருந்து தண்ணீரை நாலு மடக்கு குடித்தார். பின் பேச்சை அவரே தொடர்ந்தார்,
“ஐயா நான் வீட்டைக் கட்டி முடித்த பிறகு பத்து நாள் கழிச்சு இங்க வந்து தங்கினேன். இது காடு மாதிரி இருந்த இடமானதுனால பாம்புகளும் எலிகளும் அதிகமா இருந்துச்சு. இதுக்கு என்ன பண்ணலாம்னு யோசிச்சப்ப தான் நண்பர் வடுவூர் கிருஷ்ணசாமி எனக்கு ஒரு யோசனையைச் சொன்னாரு. அந்த யோசனைதான் இந்த பாட்டுச் சத்தம்.” இப்படிச் சொல்லிவிட்டு அந்த இளைஞர் என்னைப் பார்த்தார்.
நான் அவரிடம் ஒரு கேள்வியைக் கேட்டேன். “உங்களுக்கு பாட்டுன்னா ரொம்ப புடிக்குமா தம்பி? நீங்க வச்சிருக்கிற பாடல்கள் எல்லாம் அற்புதமான பாடல்களாய் இருக்கு.” என்று நான் சொல்ல அவர் என்னைப் பார்த்து ஒரு மெல்லிய புன்னகையை சிந்தியபடி தொடர்ந்தார்.
“ ஐயா அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாதுங்க. எனக்கு இந்த வீட்ல பாம்பு பழுதுங்க வராம பாத்துக்கணும். அதனால இப்படிப் பாட்ட போட்டுக்கிட்டே இருந்தா அந்த சத்தத்தைக் கேட்டுட்டு பாம்பு பழுதெல்லாம் வீட்டுப் பக்கம் வராதுங்க. அதனால இப்படி ஒரு ஏற்பாடு. மத்தபடி இந்த ஒலித்தட்டுகள்ல என்னென்ன பாட்டுகள் இருக்கு? யார் யாரு பாடுனாங்க? எந்தெந்த படம் ? இதெல்லாம் எனக்கு எதுவுமே தெரியாதுங்க ஐயா. சுருக்கமாகச் சொல்லணும்னா எனக்கு பாட்டுன்னா அவ்வளவா பிடிக்காதுன்னுதான் சொல்லுவேன். “ இப்படிப்பட்ட பதில் என்னை திகைப்படைய வைத்தது.
“சரி தம்பி இவ்வளவு அற்புதமான பாட்டுத் தட்டுகள நீங்க எங்க போய் வாங்கினீங்க? சொல்லுங்க? இந்த மாதிரி பாட்டுகளை எல்லாம் நான் எப்போதும் கேட்டுக்கிட்டே இருக்கணும் போலத் தோணுது “என்றேன்.
“நான் எங்க வாங்கினேன். என்னோட சினேகிதன் ஒருத்தன் மதுரையில இருக்கான். அவன் ஒரு இசைத்தட்டுக் கடை வச்சிருந்தான். அவனுக்கு திடீர்னு பெங்களூர்ல ஒரு நல்ல சம்பளத்தில வேலை கிடைக்கவும் கடைய மூடிட்டு பெங்களூரு போயிட்டான். நான் ஒரு நாள் என் சினேகிதனோட அலைபேசியில் பேசும்போது விஷயத்தச் சொன்னான். நான் உடனே மதுரைக்குப் போயி சிநேகிதனோட இசைத்தட்டுக்கடையில இருந்து மூணு அட்டைப்பெட்டிகள் நிறைய இசைத் தட்டுகள எடுத்து வந்தேன். அவ்வளவுதான் என்னால கொண்டு வர முடிஞ்சது. அதுக்கு மேல பேருந்துல எடுத்துட்டு வர்றது கஷ்டம்தானே? அதுல இருந்துதான் பாட்டைத் தினமும் போட்டுக்கிட்டு இருக்கேன்..”
“சரி தம்பி இந்தப் பாட்டு எல்லாம் பகல்பொழுது முழுசும் ஓடிக்கிட்டே இருக்கே, பொட்டி சீக்கிரம் வீணாப் போயிடாதா?” என்றேன்.
“ஐயா அதெல்லாம் வீணாப் போகாது. வீட்டுல மொத்தம் மூணு பாட்டுப் பொட்டிங்க இருக்குது. ஒன்னு மட்டும் நான் வாங்கினது. மத்த ரெண்டும் என்னோட நண்பன் கொடுத்தது. ஒவ்வொன்னும் மூணு மணி நேரம் ஓடும். அதுக்கப்புறம் அது நின்னுடும். அடுத்தது ஓட ஆரம்பிக்கும். இதுக்கு நமக்குத் தேவை ஒரு தனிச் செறிவட்டையும் ,ஒரு அலைபேசியும்தான். இந்த தொழில்நுட்பத்தையும் என்னோட சினேகிதன்தான் நேரா இங்க வந்து அவனே செஞ்சு கொடுத்துட்டுப் போனான். “
நான் பிரமித்தபடி இருக்க, ஒரு நீண்ட பெருமூச்சு என்னிடமிருந்து மெல்ல வெளியேறிப் போனது.
மறுநாள் நான் ராமலிங்கம் வீட்டிற்குச் சென்றேன். ராமலிங்கம் வீட்டில்தான் இருந்தார். அன்று நாஞ்சிக்கோட்டை சாலை முழுவதும் கடையடைப்பு என்பதால் அன்று அவர் வீட்டிலேயே இருந்தார். நான் வீட்டிற்குள் சென்றேன். இசைத் தட்டுக்கள் மூன்று அட்டைபெட்டிகளில் நிரம்பி இருந்தன. அட்டைப்பெட்டிகள் பிதுங்கியும் கொஞ்சம் ஒதுங்கியும் இருந்தன.
நான் ஒரு பெட்டியில் உள்ள இசைத்தட்டுகளை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் பறவை முனியம்மா நாட்டுப்புறப் பாடல்கள், புஷ்பவனம் குப்புசாமி பாடல்கள், விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் பாடல்கள், கொல்லங்குடி கருப்பாயி, அந்தோணி, பழனி பாடல்கள் என நாட்டுப்புறப் பாடல்கள் ஒருபுறம் இருந்தன.
இன்னொரு புறம் சிவாஜியின் கீதங்கள், எம்ஜிஆரின் இனிய பாடல்கள், ஜெமினி, ஜெய்சங்கர், சிவக்குமார், கார்த்திக், முத்துராமன், முரளி, சத்யராஜ், சரத்குமார் விஜயகாந்த், ரஜினி, கமல், விக்ரம், விஜய், அஜித் பாடல்கள், எஸ் பி பாலசுப்ரமணியம், பானுமதி, ஜமுனா ராணி, ஜிக்கி ,ஏ எம் ராஜா, எம் எஸ் ராஜேஸ்வரி, எம் கே டி பாகவதர் பாடல்கள், சுசீலா, ஜானகி, சித்ரா, சுவர்ணலதா, வாணி ஜெயராம், பி லீலா, எல் ஆர் ஈஸ்வரி, பி பி ஸ்ரீனிவாஸ், எம் எல் வசந்தகுமாரி, ஏசுதாஸ், டி ஆர் மகாலிங்கம் ,சி எஸ் கிருஷ்ணன் ,என் எஸ் கிருஷ்ணன், ஏபி சந்திரபாபு, கண்டசாலா, ஜி எஸ் ஜெயராமன் இப்படி ஏராளமாய் பாடல் தட்டுகள் குவிந்து கிடந்தன.
நான் மேலோட்டமாகத்தான் பார்த்தேன். இன்னும் உள்ளே விதவிதமாய் இசைத்தட்டுக்கள் கிடந்தன. அவற்றையெல்லாம் ஒவ்வொன்றாக பார்ப்பதற்கு இப்போது எனக்கு நேரமில்லை.
நான் அடுத்த பெட்டியைப் பிரித்தேன். அதில் மேற்கத்திய இசைத் தொகுப்புகள் மரியாக்கரே, சாய்னா ட்வெயின், சக்கீரா, கிறிஸ்டினா அகல்ரியா, செலினா டியன், பியான்ஸ் இவற்றோடு ஹரிஹரனின் கலோணியில் கசின்ஸ், அலிசாவின் ‘மேட் இன் இந்தியா,டெய்லர் மெஹந்தியின் ராப் ராப் என பட்டியல் நீண்டு கொண்டிருந்தது.
ஹர்பஜன்மான், பிபு கிஷோர், குமார் சானு, சோனு நிகம், ஜாஸி, வசுந்தரா, சுபா முட்கள், மங்கள் சிங் , தலாத் அஜீஸ் போன்ற இந்தி பாடகர்களின் இசைத்தட்டுக்களும் என் கண்ணில் பட்டது. பாட்டு பட்டியல் அலெக்சாண்டரின் படையெடுப்பைபோல மிக விரிந்து, எனக்குள் வியப்பை விரிவுபடுத்திக் கொண்டிருந்தது.
“ஐயா, நீங்க ஒரு ஐம்பது தட்டுகளை மட்டும் வச்சிட்டு, மீதி எல்லாத்தையும் எடுத்துட்டுப்போங்க,” என்று ராமலிங்கம் சொன்னாலும், நான் இரண்டு அட்டைப்பெட்டிகளை மட்டும் எடுத்து எனது வாகனத்தில் வைத்துக்கொண்டேன். ராமலிங்கத்திடம் பிரியா விடைபெற்றுக்கொண்டு எனது வீட்டிற்குப் புறப்பட்டேன்.
இனி நான் அப்பாவைப் போல் இசைப்பிரியராய் மாறி இசையை எப்போதும் ரசிக்கப் போகிறேன். மனம் சந்தோசத்தில் சதிராட்டம் போட ஆரம்பித்தது. ஆனாலும் அடிமனதில் ஓர் உறுத்தல் என்னை உற்றுப் பார்த்தபடி இருந்தது. அந்த மூன்றாவது பெட்டியையும் பிரித்துப் பார்த்துவிட்டு அதுல பாதியையாவது எடுத்துட்டு வந்திருக்கலாம். ஆமாம் வந்..திருக்…கலாம்….. ம்.. ம்ம்.
குறிப்பு: இக்கதை எனது “இசையின் எதிரொலிகள்” எனும் சிறுகதைத் தொகுப்பு நூலில் உள்ள 11 கதைகளில் நான் தங்களுக்கு அனுப்பும் 7ஆவது சிறுகதை. இந்த நூல் கடந்த 2025 ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியிடப்பட்டது.
![]() |
எழுத்தாளர் பற்றிய குறிப்புகள்: பெயர்: கா. ஆசைத்தம்பி,M.A.,M.Sc.,M.Ed.,M.Phil., புனைப்பெயர்: முத்தமிழ்ப் பித்தன் இதுவரை வெளியிட்டுள்ள நூல்கள்: 1. English for Indian Pupils (2003) 2.மாண்புமிகு மாணவர்கள் (2019) (தொகுப்பு நூல்) 3.எண்பதுக்கு எண்பது (2022) (தொகுப்பு நூல்) 4.இசையின் எதிரொலிகள் சிறுகதைகள்(2025) இதுவரை (15.12.25) மின் இதழ்களில் வெளி வந்துள்ள எனது சிறுகதைகள்: 1. மாமோய் (மயிர்) 2. கருப்பு நிறத்தில் ஒரு மின்னல் (மயிர்) 3. ஆலமரத்தடியில் ஒரு அழகி (மயிர்) 4.…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்…!
வளர்கவி
May 19, 2026
அடுத்த வீட்டு அன்பர்
கோமதி ஸ்வாமிநாதன்
May 19, 2026
