அந்த நட்சத்திர அந்தஸ்து பெற்ற விடுதி அறை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 19, 2026
பார்வையிட்டோர்: 58 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

அந்த அற்புதமான உள் அலங்காரம் கொண்ட ஐந்து நட்சத்திர விடுதி அறையானது ஒரு அதீத அமைதியின் பிடியில் சிக்கி தவிக்கிறதா என்று பார்த்தால் அந்த அறை அப்படி இல்லை அது அந்த மனிதர்கள் இல்லாத தனிமையை ரசித்து சுவர்களும்,கதவுகளும், சன்னல்களும், மௌன மொழியில் பேசி சத்தம் இல்லாமல் சிரிக்கிறது…

சற்று முன் சில பெரிய அதிகாரத்தில் உள்ள மனிதர்கள் பேசி சென்ற ரகசியத்தை தனக்குள்
புதைத்துக் கொண்டு தங்களுக்குள் அவர்கள் பேசிய விஷயங்களை தீவிரமாக ஆராய்ந்து அவர்கள் முகத்திரையின் லட்சணத்தை பேசி கேலி செய்து பின்பு கடுமையான கண்டனங்கள் நிறைவேற்றியது… அது பேசி சென்ற அந்த மனிதர்கள் கண்களில் படாமல் அந்த அறையில் உள்ள சுவர்களில் ஒன்றில் இரகசியமாக வைத்துக் கொண்டது…

என்றோவொரு நாள் அல்ல பல சமயங்களில் பல கதைகள் அங்கே வேறு வேறு முகத் திரை போட்டு கொண்டு வித விதமான குணாதிசயம் கொண்ட மனிதர்கள் மணிக்கணக்கில் பேசி விட்டு மறக்காமல் வெளியே செல்லும் போது தமது இன்னொரு முகமூடியை போட்டுக் கொண்டு எதுவும் நடக்காதது போல செல்வதை அந்த அறை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கிடந்த நாட்கள் மிகவும் அதிகம்…

இதோ இன்று ஒருவன் அந்த விடுதி அறையை இன்ச் இன்சாக நோட்டமிட்டபடியே தோதாக ஒரு இடத்தில் எதையோ செருகி விட்டு மீண்டும் ஒரு முறை அது சரியாக பொருத்தி இருக்கிறதா என்று பார்த்து விட்டு தனது அலைபேசியில் யாரையோ அழைத்து கிசுகிசுப்பாக சங்கேத மொழியில் வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பி விட்டு அந்த செய்தியை எதிர் முனையில் பார்த்து விட்டதை உறுதி செய்து விட்டு சிறிது நேரத்தில் அந்த தகவலை அழித்து விட்டு வெளியே சென்று விட்டான்…

அநேகமாக அவன் அந்த ஐந்து நட்சத்திர விடுதி பணியாளராக தான் இருப்பான் என்று அந்த அறை யூகித்து உணர்ந்துக் கொண்டது…

இப்போது அந்த அறைக்கு சுவாரஸ்யம் தொற்றிக் கொண்டது… இப்போது நாம் மட்டும் தனியாக இல்லை.. தன்னோடு இன்னொரு வஸ்து இருக்கிறது… இப்பொழுது பேசப் பட போகும் விஷயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக தான் இருக்க வேண்டும் என்று மனதிற்குள் கணக்கு போட்டுக் கொண்டு அந்த நேரத்திற்காக மிகவும் ஆவலாக காத்திருந்தது…

இது வரை இந்த அறையில் பேசிய அதிகார மிக்கவர்கள் பேச்சு எங்கேயும் கசிந்தது இல்லை.. தற்போது வரை அது தான் அந்த அறையின் தனித்துவம் என்று பலரும் அது காது பட பேசி சிலாகித்த போதெல்லாம் அந்த அறைக்கு கோபம் கோபமாக வந்தது.. ஆனால் இன்று அப்படி இல்லை..இதோ அவன் ரகசியமாக வைத்த அந்த வஸ்து காட்டிக் கொடுத்து விடும் என்று கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தது..

எப்படியோ அதிகாரமிக்கவர்களின் மோசமான முகத்திரை கிழிந்து தொங்க போகிறது என்று என்றும் இல்லாத பெரும் மகிழ்ச்சியை சத்தம் இல்லாமல் தனக்குள் புதைத்துக் கொண்டு காத்திருந்தது…

இப்போது யாரோவொருவர் கதவை திறக்கும் சத்தம் கேட்டு காதை கூர்மையாக்கியது…

அங்கே சில அந்த நட்சத்திர அந்தஸ்து பெற்ற விடுதி பணியாளர்கள் தனக்குள் பேசிக் கொள்வதை கேட்டு அதிர்ந்தது… அது அந்த அதிகார மிக்கவர்கள் அந்த அறையில் தங்கவில்லையாம்… சில பல அவசர பணி நிமித்தம் காரணமாக வேறொரு கீழ் தளத்தில் உள்ள அறையில் பத்து நிமிடங்கள் மட்டுமே சந்திக்க நினைத்த நபர்களை பார்த்து பேசி விட்டு செல்ல போகிறார்களாம்…

இப்போது அந்த அறைக்கு கொஞ்சம் எரிச்சலும் கோபமும் வந்ததுடன் தலை சுற்றி மயக்கமே வந்து விட்டது..

அங்கே அந்த மனிதன் செருகி வைத்த வஸ்துவின் நிலையை நினைத்து பரிதாபப்பட்டது…

அந்த பணியாளர்கள் இத்தனை அலங்காரங்களும் வீணாகி விட்டதே என்று புலம்பிக் கொண்டே வெளியே சென்றார்கள்…

அப்போது அந்த வஸ்துவை வைத்த மனிதன் சிறிது நேரத்தில் வந்து அதை எடுத்துக் கொண்டு வெளியே பரிதாபமாக செல்வதை இப்போது அந்த அறை வேடிக்கை பார்த்தது மிகவும் பாவமாக…

ஆனால் இது நமது அறைக்கு துரதிருஷ்ட முத்திரை குத்தி விடுவார்களே என்று கூடுதல் கவலை அதற்கு வந்தது…

அதுசரி இது நாள் வரை இங்கே நடந்த பேரங்களை எப்படியேனும் வெளிப்படுத்த வேறொரு வாய்ப்பு வராமலா போகும் விடு என்று அங்கிருந்த சன்னல் அருகில் தொங்கிய திரைசீலை காற்றில் அசைந்து ஆறுதல் படுத்தியது அந்த அறையை… அந்த அறையும் சரிதான் என்று சன்னல் சொன்ன தேறுதல் மொழியில் அமைதியடைந்தது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *