அழைப்பில் அலாதி ஆனந்தம்





நினைத்தே பார்க்கவில்லை. இப்படிச் சொல்வார் என்று.
கல்யாணத்துக்குத்தான் அழைக்க வந்தார். ஆனால் சம்பிரதாய அழைப்பாக இல்லாமல் ஒரு சரித்திரப் பதிவாக இருந்தது அவர் அழைத்த விதம்.
என்வீட்டிற்கு வந்தவர் ‘ கல்யாணத்துக்குக் கண்டிப்பா குடும்பத்தோட வந்திடணும்., குறிப்பா உங்க அம்மாவையும் கூட்டிக்கிட்டுத்தான் வரணும்’ என்றார் உண்மை அன்போடு.
‘அம்மா எதுக்குங்க? அவங்களுக்கு எண்பது வயதாச்சு முடியாதே!’என்றேன்.

‘என்ன அப்படிச் சொல்றீங்க?! நாளை நமக்கும் வயசாகாதா என்ன? வயதில் மூத்தவங்க வாழ்த்தே தனிதான்! கிடைக்க என் குடும்பத்துக்கு கொடுத்து வச்சிருக்கணும்!
உங்களுக்குச் சிரமம்னா… வேணா ‘கேஃப்’ புக் பண்ணி அனுப்பி வைக்கிறேன்!’ என்று சொல்லி நெகிழ்ந்தார்.
ஆயிரம் ரூபாய் மொய் வந்தால் கிடைக்காத ஆனந்தம் அம்மாவை அழைத்து வரச் சொல்லி அவர் பத்திரிக்கை வைத்ததில் எனக்குக் கிடைத்தது.
சொன்னபடி அழைத்துப் போனேன். அம்மாவை அவரே வந்து கைத் தாங்கலாக அழைத்துப் போய் முன் வரிசையில் உட்கார வைத்தும், மாங்கல்யத்தை கொடுத்து வாழ்த்தச் சொல்லி வாங்கீட்டதும், பந்திவரை பவ்யமாய் போலி இல்லாமல் இருந்து உபசரித்ததும் அந்த இளம் தம்பதியினருக்கு அவர் கற்றுத் தந்த கலாச்சாரப் பதிவாய் அமைந்தது.
எவ்வளவு சொல்லியும் மொய்கவரை திருப்பித்தந்து எங்களை அனுப்பிவிட்டார்.
நிஜங்கள் இன்னமும் உலகில் நடமாடத்தான் செய்கின்றன. நாம்தான் உலகை ஒழுங்காய் புரிந்து கொள்வதில்லை. காரணம்…
அழைப்பிதழே இப்போ தெல்லாம் வாட்ஸிப்பில்தானே வருகிறது?!
வாட்ஸிப்பால் வடுக்கள் பதிகின்றன. நேரில் அழைப்பதே நேசத்தை மெய்ப்பிக்கிறது.