அடுத்த வீட்டு அன்பர்
கதையாசிரியர்: கோமதி ஸ்வாமிநாதன்
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: May 19, 2026
பார்வையிட்டோர்: 121
(1952ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு சமயம் எனக்கு வெகு அவசரமாக ஒரு ஐம்பது ரூபாய் தேவையாக இருந்தது. எங்கெல்லாமோ முயற்சி செய்து பார்த்தும் பலனில்லை.
“அடுத்த வீட்டுக்காரரைக் கேட்டுப் பாருங்களேன்!!” என்றாள் என் மனைவி லக்ஷ்மி.
“அவர் யாரென்று கூட எனக்குத் தெரியாதே! மேலும் அவர்கள் பணம் அதிகமாகப் புழங்குகிறவர்களாகத் தெரியவில்லையே? முதல் முதலாக அவர்களிடம் கடனுக்குப் போய் நின்றால் நன்றயிருக்குமா?” என்றேன் நான்.
“வாயுள்ள பிள்ளைதான் இந்தக் காலத்தில் பிழைக்கும். நேராக அடுத்த வீட்டுக்காரரிடம் போய், உங்களை அறிமுகப் படுத்திக்கொண்டு கொஞ்சம் ஊர் வம்பை அளந்து வீட்டு, பேச்சோடு பேச்சாகக் கடனையும் கேட்டு வாங்கிக் கொண்டு வாருங்கள். இன்று ஞாயிற்றுக்கிழமை தானே!” என்று உற்சாகப்படுத்தினாள்.
அவள் யோசனையை நான் ஒப்புக் கொண்ட போதிலும், எனக்கென்னவோ அடுத்த வீட்டுக்காரரைப்பற்றி அவ்வளவு நம்பிக்கை ஏற்படவில்லை.
இருந்தாலும் கேட்டுப் பார்த்துவிடுவது என்று எண்ணி, அன்று பகல் இரண்டு மணிக்கு மெதுவாக அடுத்த வீட்டு வாசற்படி ஏறினேன். திண்ணையில் ஒருவரும் இல்லை. வாசற் கதவு முக்காலே அரைக்கால் வாசி சாத்தப்பட்டிருந்தது. உள்ளே கூடத்திலிருந்து பேச்சுச் சத்தம் வந்து கொண்டிருந்தது. கூப்பிடலாம் என்று எண்ணி நான் தொண்டையைச் சரிப்படுத்திக் கொண்ட போது உள்ளே இருந்து வந்த பேச்சு மிகவும் தெளிவாக என் காதுகளில் விழ ஆரம்பித்தது. நான் அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டேன்.
“இதோ பார், கையிலே ஜாஸ்தியில்லை. இருபத்தையாயிரம்தான் இருக்கு. இதிலே பாங்குக்குப் பன்னிரண்டாயிரம் கட்டியாக வேண்டும்” இது அங்கிருந்த பெரியவரில் குரல்.
“பேஷாக பாங்குக்குக் கட்டி விடுங்கள். உங்களுக்குத்தான் இன்னும் எட்டாயிரம் வரவேண்டியிருக்கிறதே!” இது சின்னவரின் பதில்.
“அப்படிக் கட்ட முடியாது. கைவசம் நிறைய வைத்துக்கொள்ள வேண்டும்.”
“அப்படியானால் அந்த ‘பிளாட்டை’ விற்று விடுவதுதானே?”
“அவசரப் படக்கூடாது; கூட இன்னும் மூவாயிரம் கிடைக்கலாம்.”
“சரி, இந்தாருங்கள் நான் கொடுக்க வேண்டிய பதினையாயிரம்!”
நான் மெய் மறந்து நின்றுவிட்டேன். ஆட்கள் பலே கைகள் போலிருக்கிறது! சர்வ சாதாரணமாக ஆயிரக்கணக்கான ரூபாய்களில் புரளுபவர்கள் போலிருக்கிறது. அதுதான் அசடுமாதிரி இருக்கிறார்கள்! முப்பதினாயிரம் ரூபாய். மூச்சுவிடும் நேரத்திற்குள் புரளுகிறதென்றால் அவர்கள் சாமானிய மனிதர்களாக இருக்க முடியுமா? ‘அவர்கள் வியாபார விஷயமாகப் பேசும்போது தொந்தரவு செய்யக் கூடாது, விஷயம் கெட்டுவிடும். அவர்கள் பேச்சு நின்றவுடன் நாம் உள்ளே போகலாம்’ என்று தீர்மானித்துத் தயாராக நின்றேன்.
அதே வினாடியில், நிர்மலமான ஆகாயத்தில் கோடை இடி இடிப்பதுபோல் அந்த வீட்டுக்கார அம்மாளின் பேச்சுக் குரல் கேட்டது.
“நன்றாகத்தானிருக்கு!” என்று ஆரம்பித்தாள். “சரி, வைர நெக்லேஸ் ஏதாவது தனக்கு உடனே வேண்டுமென்று சொல்லப் போகிறளோ?” என்று நினைத்தேன்.
“பேஷ், சின்னக் குழந்தைகள் போல் நன்றாக இந்த ‘டிரேட்’ விளையாட்டு விளையாட உட்கார்ந்தீர்கள்! அந்த அட்டையையும் காய்களையும் இப்படிக் கொண்டு வாருங்கள்! ஆயிரமாம்! ஐயாயிரமாம்! முதலில் எங்கேயாவது போய்ப் பத்து ரூபாய் கைமாத்து வாங்கிக்கொண்டு வாருங்கள். வீட்டிலே கடுகிலிருந்து காப்பிப்பொடி வரை வாங்கியாக வேண்டும்!” என்றாள் அழுத்தம் திருத்தமாக.
என் தலை சுற்றியது. இருந்தாலும் ஒரு வழியாய்ச் சமாளித்துக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். கதவையும் தாழ்ப்பாள் போட்டேன். ஒருவேளை அவர் என்னிடமே கைமாற்றுக்கு வந்து நின்றால் நான் என்ன செய்வது?
– 1952, கல்கி.
தொடர்புள்ள சிறுகதைகள்
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்…!
வளர்கவி
May 19, 2026
இசையின் எதிரொலிகள்
முத்தமிழ்ப்பித்தன்
May 19, 2026