கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 30, 2022
பார்வையிட்டோர்: 12,212 
 
 

“இதென்ன வீடா சினிமா தியேட்டரா..??”

நந்தினியின் எதிர்பாராத தாக்குதலில் மூவரும் நடுங்கினார்கள். குற்ற உணர்வோடு தலை குனிந்து கொண்டார்கள்.

“என்னதான் மனசுல நெனச்சிக்கிட்டிருக்கீங்க.. நீங்க செய்யிறது உங்களுக்கே நல்லாருக்கா..”

வால்யூமைக் குறைத்தார்கள்.

“எதிர்த்த வீட்டு கோபு சார் மாதிரி டிவியே கூடாதுன்னு கண்டிப்பா இருந்திருக்கணும். அவர் அப்பிடி ஸட்ரிக்டா இருக்கறதுனாலதான்..அவங்க வீட்டு குழந்தைங்க ஆன்லைன் வகுப்புகளை நாள்பூரா உருப்படியா அட்டண்ட் பண்ண முடியுது..”

உண்மை சுட்டது. ‘எப்படிச் சமாளிப்பது’ என யோசித்தார்கள்.

இது ஒரு நாள் கோபம் அல்ல கரோனா தொடங்கிய நாள் முதல் அடக்கி வைக்கப்பட்ட கோபம்.

புகைந்து புகைந்து கத்தினாள் நந்தினி..

“கார்த்தால விடிஞ்ச உடனே ஆரம்பிச்சா ராத்திரி பன்னெண்டு மணி வரைக்கும்..ஒண்ணு மாத்தி ஒண்ணு ஓடிக்கிட்டே இருக்கு.. டீக்கடையில போடறமாதிரி ஃபுல் வால்யூம் வெச்சி..ஒரே இரைச்சல்.. கேட்க ஆளில்லேன்னு நினைச்சிட்டீங்க போலிருக்கு. அப்பாவரட்டும் இண்ணிக்கு இதுக்கு ஒரு முடிவு கட்டறேன்.. அட்லீஸ்ட் ஸ்கூல் திறக்கறவரைக்குமாவது கேபிள் டிவிய கட் பண்ணச் சொன்னாதான் சரியா வரும்.

இதற்கு மேலும் பொறுமை இல்லை அவர்களுக்கு.

‘நந்தினி சொன்னதைச் செய்யக்கூடியவள்…சரண்டர் ஆகி விடவேண்டும்’ என்று முடிவு செய்தார்கள்..

“அப்படி ஏதும் செஞ்சிடாதே. உனக்கு ஸ்கூல் திறக்கிற வரைக்கும் நீ படிக்கற ஆன்லைன் க்ளாஸுக்கு இடைஞ்சல் இல்லாம சீரியல் எல்லாம் பார்த்துக்கறோம்.. எங்களுக்கு ஒரே ஒரு வாய்ப்பு தரக்கூடாதா” என்று கெஞ்சினார்கள் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் நந்தினியிடம் அவளின் அம்மாவும் தாத்தா பாட்டியும்.

ஜூனியர்-தேஜ் இயற்பெயர்: வரதராஜன் அ புனைப்பெயர்: ஜூனியர் தேஜ் ரத்த வகை: O Positive பிறந்த தேதி: 04.06.1962 குடும்பம்: மனைவி, மகன், மருமகள் பணி: உதவித் தலைமை ஆசிரியர் (பணி ஓய்வு ஓய்வு பெற்று இப்போது பணி நீட்டிப்பில். 31 மே 2023 ல் ஓய்வு) கல்வித் தகுதி: MA(English).,M.Sc (Counseling Psychology)., B.Ed., CLIS., முதல் ஜோக்: ஜூனியர் விகடன் 1980 களில், சரியான தேதி இல்லை முதல்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *