விண்ணில் ஒரு மணல் வீடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 7, 2026
பார்வையிட்டோர்: 2,281 
வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்

(1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்” கம்பராமாயணத்திற்கு ஹரிணி தன் வகுப்பு மாணவிகளுக்கு விளக்கம் கூறிக் கொண்டிருந்தாள். “இருவரும் தம்வசம் இழந்து மனத்தால் கட்டுண்டு விட்டனர். இராமன் பேரில் ஏற்பட்ட காதலால் இவரே எனக்கு மணாளனாக வரவேண்டும் என்று சீதை மனத்திற்குள் கூறிக் கொண்டாள்.”

“மிஸ்…. எனக்கு ஒரு சந்தேகம்” மாயாவிற்குப் பாடத்தின் நடுவில் ஏதாவது பேசாவிட்டால் தலையே வெடித்துவிடும்.

‘என்ன…?’ என்பதுபோல் முகத்தைச் சுளித்துக் கொண்ட ஹரிணியைப் பார்த்து, “சீதைக்குச் சுயம்வரம் தானே நடந்தது. அப்படியிருக்க சீதை எப்படி இராமனை நினைக்கலாம். ஒருகால் இராமன் வில் ஒடிக்காது போயிருந்தால் சீதையின் திருமணம் எப்படி நடந்திருக்கும்?” என்றாள் மாயா.

“என்னவாகியிருக்கும்…? என்ன நடந்திரக்கும்?” ஹரிணிக்கு மெய்சிலிர்த்தது. அவளால் பதில் சொல்ல முடியவில்லை.

கம்பராமாயணத்துடனேயே ஐக்கியமாகிவிட்ட மாணவிகள் மாயாவின் கேள்வியால் சாட்டையடிபட்ட குதிரையைப் போல் சிலிர்த்துக் கொண்டனர்.

“ஹௌ… பென்டாஸ்டிக் கொஸ்ட்டின்! மாயா நீ சரியான கேள்விதான் கேட்டாய்… மிஸ்… மாயா சொல்வது போல் இராமனாலும் வில்லை ஒடிக்க முடியாவிட்டால் சீதை என்ன செய்திருப்பாள்?’ வகுப்பில் ஒரே கூச்சல்.

தன்னைச் சுதாரித்துக் கொண்ட ஹரிணி “ஸைலன்ஸ்… ப்ளீஸ்… கேர்ள்ஸ் நாம இங்கே கம்பராமாயணப் பாடலைப் பற்றிப் படிக்கத்தான் வந்திருக்கிறோமே தவிர, பட்டிமன்றமோ விவாதமோ செய்ய வரவில்லை. அதனால் சீதையைப் பற்றிய ஆராய்ச்சியை விட்டுவிடலாம்… என்ன?” என்றாள்.

சாஸ்திரிகள் வீட்டுப் பெண்ணான மைதிலி “மிஸ்… சீதை என்ன செய்திருப்பாள் என்று நான சொல்கிறேன் மிஸ்.. சீதையானவள் லோக மாதாவான அம்பிகையிடம் ‘என் மனத்தில் நிறைந்த அவரையன்றி நான் யாருக்கும் மாலை சூடமாட்டேன். நீ தான் அவருக்கும் எனக்கும் நல்லபடியாகத் திருமணத்தை முடித்து வைக்க வேண்டும். அவர் கையால் மட்டுமே அந்தச் சிவதனுசு, நாண் ஏற வேண்டும் என்று அம்பிகையைப் பூஜித்திருப்பாள்” என்றாள்.

“சீதையே மஹாலட்சுமியின் அவதாரம் என்கிறார்கள் அவள் அம்பிக்கையைத் துதித்திருப்பாளா?” மற்ற மாணவிகள் மைதிலியின் பதிலை ஏற்காமல் கூச்சலிட்டனர்.

“ஸைலன்ஸ்… ஸைலன்ஸ் பிளீஸ்” என்ற ஹரிணி மேசையைத் தட்டுவதற்கும் அன்றைய வகுப்பு முடிவதற்கும் சரியாக இருந்தது. ‘அப்பாடி இவர்கள் கேள்விக் கணைகளிலிருந்து விடுதலை கிடைத்ததே’ என்று மனத்திற்குள் கூறிக்கொண்டே ஹரிணி அறையிலிருந்து வெளியேறினாள்.

2

மாலையில் வீடு வந்த ஹரிணி, வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, மறுநாளைக்கு வேண்டிய பாடங்களைப் படிக்க ஆரம்பித்தாள். புத்தகத்தைப் பிரித்ததுமே கம்பராமாயணப் பாடல் தான் கண்களில் பட்டது. காலையில் வகுப்பில் நடந்த நிகழ்ச்சிகள் தெரிந்தன. தனக்குத்தானே வாய்விட்டுச் சிரித்தாள். ஹரிணியின் சிரிப்புச் சத்தத்தைக் கேட்ட அவள் தந்தை ”என்னம்மா… உனக்கு நீயே சிரித்துக் கொள்கிறாய். உன் மாணவிகள்… டெஸ்ட் நோட்டில் வேடிக்கையாக ஏதாவது எழுதியிருக்கிறார்களா?’ அவர், தான் இருந்த இடத்திலிருந்து கேட்டார். அவருக்கு நீண்ட நாட்களாக ஒரு கால் விளங்காமல் போனதிலிருந்து அந்தக் கூடமே கதியென்று கட்டிலோடு கட்டிலாக இருப்பவர். மாணவிகளின் டெஸ்ட் நோட்டைத் திருத்தும் பொழுது, வேடிக்கையாக இருக்கும் சில பதில்களை ஹரிணி அப்பாவிற்குப படித்தக் காண்பிப்பாள். இருவருமே வாய்விட்டு வயிறு குலுங்கச் சிரிப்பார்கள். அதேபோல் அவர் இன்றும் கேட்டார்.

ஹரிணி சுயநினைவு பெற்று ”அப்பா… இன்று மாணவிகளின் பதிலைப் படிக்கப் போவதில்லை. ஆனால் ஒரு மாணவி கேட்ட கேள்வியை நினத்துத்தான் அப்படிச் சிரித்தேன்” என்றாள்.

“அப்படியா…! இந்தக் காலக் குழந்தைகளுக்கக் கேள்வி கேட்பதே ஒரு ஹாபி ஆகிவிட்டது… ஊம்… சரி சொல்லு… எதைப்பற்றி என்ன கேட்டாள்?'”

‘இராமன் சிவதனுசை முறிக்காவிட்டால் சீதையின் கதி என்னவாயிருக்கும்?’ என்று மாயா கேட்டதையும், அதைத் தொடர்ந்து மற்றப் பெண்களின் விவாதத்தையும் விளக்கினாள் ஹரிணி. “என்னப்பா ஆகியிருக்கும்… சீதையும் என்னைப் போல் தானே இருந்திருப்பாள்! அப்படியானால் இராமாயணம் என்ற காவியமே இருந்திருக்காது இல்லையா அப்பா…” என்றாள் பெருமூச்சுடன்.

அவரிடமிருந்து பதிலேதும் இல்லை. தன் மகளின் மனம் எப்படி வெம்பித் துடிக்கிறது என்பதைக் கண்டு மௌனமாகக் கண்ணீர் விட்டார். பிறகு இருவருமே ஒன்றும் பேசாமல் படுத்தனர். இருவருக்குமே தூக்கம் வரவில்லை. இருவரின் நினைவுகளும் இருபது (20) வருடங்கள் பின்நோக்கிச் சென்றன. இன்று நடந்தது போல் அவை எவ்வளவு பசுமையாக அவர்களின் நினைவில் இருக்கின்றன.

3

ஹரிணிக்கு எப்பொழுதுமே இராமாயணத்தில் பற்று அதிகம். தன் தாய்மொழியில் கம்பராமாயணம் இருப்பதால்,’ அதனுடனேயே ஒன்றித்துவிடுவாள். கல்லூரியிலும் தமிழையே முதல் பாடமாக எடுத்துக்கொண்டு தமிழைக் காதலித்தாள். கவிதைப் போட்டிகளிலும், பல இராமாய ணப் பட்டிமன்றங்களிலும் கலந்து கொண்டு முதற்பரிசுகள் பல பெற்றாள். அதுவும் இராமாயணத்தில் ‘சீதா பரிணயம்’ ஹரிணியை மிகவும் கவர்ந்த பாடமாகும். ஒரே சொல், ஒரே அம்பு, ஒரே மனைவி என்ற ‘ஒன்று’ எண்ணிற்கு இராமனால் ஏற்பட்ட மதிப்பைப் போற்றினாள். அதேபோல் சீதைக்கு இராமன்பால் உள்ள நம்பிக்கை மெய் மறக்கச் செய்யும். இருந்தால் சீதையைப் போல் இருக்க வேண்டும். எவன் முதன் முதலில் என்னைப் பெண் பார்க்க வருகிறானோ, அவனைத்தான் நான் மணக்க வேண்டும். வேறொருவனை…சே… நினைக்கவே அசிங்கமாக உள்ளது. ஹரிணியின் மனத்தில் அழுத்தமான உறுதி ஏற்பட்டது.

ஹரிணி கல்லூரிப் படிப்பை முடிக்கும் தருவாயில் அவளுடைய அப்பா ஜாதகக் கட்டைக் யிைல் எடுத்தார். ஹரிணி உறுதியாகச் சொல்லிவிட்டாள். “அப்பா… உங்களுக்குத் திருப்தியாக இருந்தால் மட்டுமே எனக்குப் போதும். அதோடு என் கொள்கைக்கு ஒத்துப்போகக் கூடியவராகத் தேடுங்கள். நான் என் எண்ணத்தில் மிகவும் உறுதியாகவே இருக்கிறேன்,’ என்றாள்.

“என்னம்மா ஹரிணி… நான் உன்னுடைய எண்ணத்திற்கு என்றாவது மறுப்புத் தெரிவித்திருக்கிறேனா! தாயில்லாப் பெண்ணாக உன்னைக் கலங்கவிடுவேனா! உம்… சொல்லு… நீ எதில் உறுதியாக இருக்கிறாய்?”

”அப்பா… வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒரு கொள்கையுடன், குறிக்கோளுடன் இருக்க வேண்டுமென்று பலமுறை சொல்லியிருக்கிறீர்களே. என்னுடைய குறிக்கோள்… என்னை யார் முதலில் பெண் பார்க்கிறாரோ… அவரைத்தான் மணப்பேன். மீண்டும் ஒருவர்… அதன்பின் மற்றவர் என்று தொடர்கதையாக நீளும் பெண் பார்க்கும் படலத்தை நான் வெறுக்கிறேன். பல வகை வண்டகள் என்னைப் பார்ப்பதை என்னால் பொறுக்க முடியாது. அதனால் பிள்ளை வீட்டாரிடம் கண்டிப்பாகச் சொல்லிவிடுங்கள் ‘உங்கள் வீட்டிலிருந்து எத்தனைப் பேர் வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் பெண்ணை வந்து பாருங்கள். உங்களுக்குத் திருப்தி ஏற்பட்ட பிறகு, அதாவது மகனின் டேஸ்ட் முழுவதும் தெரிந்து கொண்ட பிறகு மகனை நம் வீட்டிற்கு அனுப்பச் சொல்லுங்கள். அப்படியே என் எண்ணத்தையும்… அதாவது முதலில் வந்து பார்ப்பவனைத்தான் என் மகள் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறுகிறாள்’ என்று என் உறுதியையும் சொல்லுங்கள்” என்று நீண்ட பிரசங்கமே செய்து முடித்தாள்.

பெற்றவருக்கு ஒரு கணம் மெய் சிலிர்த்தது. “ஓ… ஹரிணி… நீ ஒரு வார்த்தை சொன்னாலும் நன்றே சொன்னாய்… மிகவும் சரியாகச் சொன்னாய். உன்னைப் பார்க்கும் எந்தப் பையனும் பெண் பிடிக்கவில்லை என்று சொல்லமாட்டான். மேலும் சற்று வசதியோடு இருக்கும் எனக்கும் சீர் செய்வதில் கஷ்டம் ஒன்றும் இருக்காது. கல்யாணம் நின்று போவதெல்லாம் சீர்வரிசையில் தானே அந்த விஷயத்தில் நாம் சற்றுத் தாராளமாகவே இருந்துவிட்டால் போகிறது. உன்னுடைய உறுதியான கொள்கைக்கு ஏற்ற மாப்பிள்ளையே கிடைப்பான்” என்று சொல்லிவிட்டுக் கல்யாணத் தரகரைத் தேடிப் புறப்பட்டார்.

சல்லடையால் பலபேரைச் சலித்துவிட்டுக் கடைசியில் பி.இ.(B.E)படித்த யஞ்ஞராமனை இருபத்தைந்து வயதேயுள்ள இளைஞனைக் கண்டுபிடித்தார். ஹரிணியின் கொள்கைகளைப் பிள்ளை வீட்டாரிடம் கூறினார். அவர்களுக்கும் ஹரிணியின் வாதம் சரியென்றே தோன்றியது. யஞ்ஞராமனின் பெற்றோரும். மிகவும் முக்கியமான அவன் சுற்றத்தார்களும் ஹரிணியைப் பெண் பார்க்க வந்தார்கள். ஹரிணியின் பேச்சு, வேலை, பழகும் விதம் பிறகு அவர்களின் அந்தஸ்து எல்லாமே யஞ்ஞராமனின் பெற்றோருக்குப் பிடித்தன. கடைசியில் யஞ்ஞராமன் ஹரிணியைப் பார்க்க வந்தான்.

சுமார் அரைமணி நேரம் யஞ்ஞராமன், ஹரிணியிடம் பல விஷயங்களைப் பேசினான். கடைசியாக “மிஸ்… ஹரிணி… உங்களுடைய வாதம்… அதாவது முதன் முதலில் பெண் பார்ப்பவனேயே தான் திருமணம் செய்து கொள்வேன் என்றீர்களாமே! உங்கள் வாதம்..அதாவது முடிவு எப்படிச் சரியாகும்?” என்றான் யஞ்ஞராமன்.

”சார்… வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிக்கோள் இருக்கும். சிலர் படித்து வியாபாரம் செய்ய நினைப்பார்கள். சிலர் இசைத்துறையில் மேன்மையடைய வேண்டுமென்று ஒரே நினைவாகச் சாதகம் செய்வார்கள். சிலர் நாட்டுக்காகவே உழைப்பதை மட்டுமே உயிர் மூச்சாகக் கொண்டிருப்பார்கள். அதேபோல் நானும் ஒரே ஒருவரை மட்டுமே பெண் பார்க்க அனுமதிப்பேன். இல்லையேல் கன்னியாகவே இருப்பேன் என்று உறுதியாய் இருப்பது எப்படித் தவறாகும். ஒவ்வொருவர் பெண் பார்க்க வரும்பொழுதும் இவர்தான் என் கணவரா? இவரோடுதான் கனவுகளை நினைவாக்கி வாழப் போகிறோமோ! என்று பலமுறை கற்பனை வாழ்க்கை வாழ்வதை வெறுக்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஒரு குறிக்கோள் உண்டு. அப்படி இல்லாவிட்டால் ஒரு காந்தியோ, ஒரு தெரேஸாவோ, ஓர் ஈ.வே.ராவோ இன்னும் இவர்கள் போன்று போற்றப்பட வேண்டியவர்களோ தோன்றி இருக்க முடியாது சார். அவர்கள் கொள்கையில் உறுதியாக இருந்ததால் தான் நாம் அவர்களை இன்றும் மறக்காமல் இருக்கிறோம். என் பெயர் சரித்திரத்தில் இடம் பெற வேண்டம் என்று இப்படிச் சொல்லவில்லை. என் மன உறுதியில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது” சற்று உரக்கவே பேசினாள் ஹரிணி. ஆக்கரோஷத்துடன், தன் மனத்தில் உள்ளதை வெளிப் படுத்தியதால் முகம் சிவந்து, வியர்வை குளியல் ஆடி நனைந்திருந்திருந்தாள்.

“பெண்களுக்கு மனத்தில் ஒன்றும் உறுதி கிடையாது… மிஸ் ஹரிணி, நீங்கள் உறுதியாக இருந்தாலும், உங்கள் அப்பா கொஞ்சகாலம் உங்களை உங்கள் போக்கில் விட்டுவிட்டு மீண்டும் வரன் தேடக் கிளம்பிவிடுவார். எப்படியிருந்தாலும் பெண் என்பவள் பல வண்டகள் பார்த்த மலர்தான். வண்டுகள் தேன் உள்ள மலரைத் தேடிக்கொண்ட தான் இருக்கும்” என்றான் யஞ்ஞராமன் சிரித்துக் கொண்டே.

“நீங்கள் சொல்றது சரிதான் சார். நீங்கள் ஒன்று கேள்விப் பட்டிருக்கிறீர்களா? மாம்பழத்து வண்டு என்று மலருக்கு மலர் தாவிக் கொண்டே இருந்த ஒரு வண்டு ஒரு மாமலரில் உட்காருவதற்கும், அந்த மலர் மூடிக் கொள்வதற்கும் சரியாக இருந்தது. அந்த மலரை விட்டு வெளியே வரமுடியாமல் அந்த வண்டின் வாழ்வும் அதிலேயே முடிந்தது. பிறகு அந்த வண்டால் மற்ற மலர்களுக்குத் துன்பம் ஏற்படாமல் இருந்தது” என்றாள் ஹரிணி. ‘ஓ…கே…. உங்கள் வாதம் உங்களுக்குச் சரி… எனக்குப் பொருந்தாது’ என்று யஞ்ஞராமன் கூறிவிட்டுச் சென்றான்.

போனவன் போனவன்தான் ஹரிணியின் அப்பா பிள்ளையின் வீட்டிற்கு நடையாய் நடந்தார். யஞ்ஞராமன் திருமணத்திற்குப் பிடி கொடுக்காமல் பேசினான். கடைசியில், “நான் மேல்படிப்புப் படிக்க ஜப்பானுக்குச் செல்ல வேண்டும், அந்தச் செலவை ஏற்றுக் கொள்ள முடியுமானால் மேற்கொண்டு பேசுங்கள்” என்றான்.

தன் பிள்ளை பொய் சொல்கிறான் என்பதைப் பெற்ற வர்கள் புரிந்து கொண்டனர். இந்த வாதத்தைப் பெற்றவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. “வேண்டாம் யஞ்ஞராமா… பெண்ணை ஏமாற்றதெ. அவளுடைய நியாயமான கோரிக்கைக்கு உடன்பட்டுத்தானே பெண் பார்க்கப் போனாய். நாங்கள் அவளைப் பற்றி முழுவதும் சொல்லி உனக்கு ஏற்றவள் என்று தானே அங்கு அனுப்பினோம். நீ இப்படி மாற்றிப் பேசுவது கொஞ்சமும் நன்றாக இல்லை” என்று சத்தம் போட்டார்கள்.

“என்ன… அப்பா… அந்தப் பெண்ணிற்கு என்னை விட்டால் வேறு மாப்பிள்ளை கிடைக்க மாட்டானா என்ன! ஏதோ சிறு வயசு! கொள்கை… உறுதி என்று ஏதோ பேசிக் கொண்டிருக்கிறாள்… கொஞ்ச நாளில் சரியாகிவிடும்” என்று பேசிக் கொண்டே வெளியேறினான் – யஞ்ஞராமன்.

”சார்…. என் பெண்ணிற்கு வேறு மாப்பிள்ளை கிடைப்பான். ஆனால் அவளோ சீதையாகத்தான் வாழ்வேன் என்கிறாள்… தன் உயிர் மூச்சாக நினைக்கும் யஞ்ஞராமனைத் தவிர வேறொருவனை… நினைக்கவே… அருவருப்படைகிறாளே. நான் என்ன செய்வேன்…சார்?” ஹரிணியின் அப்பா, தான் வயது வந்த ஆண் என்பதையும் மறந்து குலுங்கி குலுங்கி அழுதார். யஞ்ஞராமனின் பெற்றோருக்கு மிகவும் சங்கடமாகிவிட்டது.

”சார்… வருத்தப்படாதீர்கள்” யஞ்ஞராமனின் அப்பா அவர் தோள் மீது கை வைத்து சமாதானம் செய்தார். “எங்களை மன்னித்துவிடுங்கள் சார். இப்படி ஒரு பிள்ளையைப் பெற்றதற்கு நாங்கள்தான் தலைகுனிய வேண்டும் சார்… எப்படியாவது ஹரிணியின் மனத்தை மாற்றி அவளுக்கு வேறு நல்ல வரனாகப் பாருங்கள். எங்களுக்குத் தான் ஹரிணி மருமகளாக வரக் கொடுத்து வைக்கவில்லை. இளம் வயதும், இள ரத்ததும் அவனை அப்படி ஆட்டிப் படைக்கிறது. வாக்குச் சுத்தம் இல்லாத இந்த இராமன் ஹரிணிக்குத் தேவை இல்லை. அவளுக்கு என்ன குறைச்சல்? குழந்தை ஒரு சத்புருஷனை அடைந்து அமோகமாய் இருப்பாள்” என்றார்.

4

அசோகவனத்தில் சீதை எப்படி இராமனை நினைத்து இருந்தாளோ அதேபோல் ஹரிணியும் இருபது வருடங்களாக இருக்கிறாள். நடுவில் பலமுறை ஹரிணியைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி அவள் அப்பா வாதாடி இருக்கிறார். ஹரிணியின் தீட்சயமான பார்வையைக் கண்டு, அவரே நடுங்கிவிடுவார். மேற்கொண்டு அவளிடம் பேச முடியாமல் அவர் மனதிற்குள் குலைந்து போவா. ஹரிணி ஆசிரியை பயிற்சி பெற்று இப்போது மேல் வகுப்பிற்குத் தமிழ் ஆசிரியையாக இருக்கிறாள்.

5

ஒருநாள் ஹரிணியும் அவள் அப்பாவும் அருகில் உள்ள கோவிலுக்குச் சைக்கிள் ரிக்ஷாவில் சென்றனர். அங்குச் சீதா கல்யாணம் கதா காலட்சேபம் நடந்து கொண்டிருந்தது. அங்கே தற்செயலாக யஞ்ஞராமனைக் கண்டார்கள். அதேசமயம் யஞ்ஞராமனும் அவர்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். ‘அண்ணலும் நோக்கினான். அவளும் நோக்கினாள்’ என்று நான்கு வரிகளின் பொருளைப் பற்றி விரிவாகச் சொல்லிக் கொண்டிருந்தார் கதா காலட்சேபம் செய்தவர். அன்று காலட்சேபம் முடிந்ததும் ஹரிணியும், அவள் அப்பாவும் மெதுவாக நிதானமாக வெளியேறி மீண்டும் சைக்கிள் ரிக்ஷாவில் வீட்டை அடைந்தனர். யஞ்ஞராமனும் தன் சைக்கிளில் அவர்களைப் பின் தொடர்ந்தான். ஹரிணி பூட்டைத் திறந்துவிட்டு, அப்பாவைக் கைத்தாங்கலாக உள்ளே அழைத்துச் சென்றாள். அவர்களைத் தொடர்ந்து யஞ்ஞராமனும் உள்ளே சென்றான்.

”சார்… நீங்கள் வழி தவறி வந்துவிட்டீர்கள் என்று எண்ணுகிறேன். ஊருக்குப் புதுசா? இடத்தைச் சொல்லுங்கள். ரிக்ஷாக்காரனைக் கொண்டு விடச் சொல்கிறேன்” என்றார் ஹரிணியின் தந்தை.

“இல்லை… சார்…. நான் வந்து உங்களைப் பார்த்துப் பேசத்தான் உள்ளே வந்தேன். நான் யஞ்ஞராமன் சார்.”

“ஹும்… நீ… நீங்கள் எந்த ராமனாக இருந்தால் என்ன? என்னிடம் உங்களுக்கு என்ன பேச்சு வேண்டியிருக்கிறது?” அவர் சொல்லிக் கொண்டு இருக்கும்பொழுதே, யஞ்ஞராமன் ஹாலில் உள்ள நாற்காலியில் உட்கார்ந்தான். ஹரிணி ஒன்றும் பேசாமல் உள்ளே சென்றுவிட்டாள்.

”சார்… ஹரிணி.. இன்னமும் அப்படியேதான் இருக்கிறார்களா?”

“என்னப்பா…! கிண்டல் செய்கிறாயா…? ஹரிணி எப்படியிருப்பாள் என்று நீ எதிர் பார்க்கிறாய்?” உள்ளக் குமுறலை எங்கே வெளியிட்டுவிடுவோமோ என்று நினைத்து முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

”சார்… நிஜமாகவே ஹரிணி தன் குறிக்கோளில் மிகவும் உறுதியாகவே நிற்கிறா….மிகவும் உயர்ந்து இருக்கிறா”

“என் மகளைப் பற்றி எனக்குத் தெரியும்… தயவு செய்து வெளியே போகிறீர்களா? கதவு இன்னமும் திறந்துதான் இருக்கிறது” என்றார் ஹரிணியின் அப்பா.

“போகிறேன் சார்… அன்று இனம் தெரியாத இளம் வயதில் கண்டபடி மனம் போன போக்கில் இருந்த என்னை எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றிருந்த என்னை, நீங்கள் வெளியே போ என்று சொல்வது மிகவும் சரிதான். இருந்தாலும் நான் தற்சமயம் எப்படி இருக்கிறேன் என்பதைச் சொல்லிவிடுகிறேன்.”

“நீ… எப்படியிருந்தால் எனக்கென்னப்பா? என் ஹரிணி அனிச்ச மலராக வாடிவிட்டாளே! அனிச்சமலரோ முகந்தால் தான் வாடும். ஆனால் என் ஹரிணியோ… உன் பார்வை பட்டே வாடிவிட்டாளே… நீ எங்கிருந்தாலும் நன்னாயிருப்பா… உன் நிழல்கூட இந்த வீட்டில் படுவதை நாங்கள் விரும்பவில்லை. தயவு செய்து சீக்கிரமாக வெளியே போ…! என் பொறுமையைச் சோதிக்காதே” அவருடைய வார்த்தைகள் நெருப்புத் துண்டமாகத் தெறித்து விழுந்தன.

”சார்… உங்கள் கோபம் மிகமிக நியாயமானதுதான். என்னைப்பற்றிச் சொல்லாமல் நான் நகரமாட்டேன். அன்று உங்களை உதாசீனப்படுத்திவிட்டு வெளியேறிய என்னை, மீண்டும் தங்கள் குடும்பத்தில் ஒருவனாக ஏற்றுக் கொள்ளாமல் வீதியிலேயே நிறுத்திவிட்டார்கள் என் பெற்றோர்கள். என்னைத் தங்களுடன் இருக்க அனுமதிக்கவில்லை. கைநிறையச் சம்பாதிக்கும் திமிரில் நானும் வெளியேறினேன். உடனே தரங்கெட்ட நண்பர்கள், என்னை அடைந்தனர். எனக்குப் புகலிடம் கொடுத்தனர். அந்த நண்பர்களின் தங்கைபோல் இருந்த ஒருத்தியின் வலையில் நான் வசமாக மாட்டிக் கொண்டேன். மாம்பழத்து வண்டாக அந்த மலரில் விழுந்து கிடந்தேன். உங்கள் மகள் அன்றே சொன்னார்கள். மாம்பழத்து வண்டின் நிலைமைப் பற்றி, கடைசியில் எங்கள் இருவருக்கும் பிறந்த குழந்தையை அதுவும் இரு கண்களும் பிறவியிலேயே பார்வையை இழந்த பெண் குழந்தையை, என்னிடத்தில் விட்டுவிட்டு ஊரைவிட்டே ஓடிவிட்டாள் அவள். அந்த எட்டு (8) வயதுக் குழந்தையுடன் போராட்டத்துடன் நான் இன்று வாழ்ந்து வருகிறேன். பெண்கள் என்றால் கிள்ளுக்கீரைகள் என்றும், அவர்களுக்கென எந்தக் குறிக்கோளும் கொள்கையும் இருக்கக் கூடாது என்றும் வாழ்ந்த எனக்குச் சரியான சாட்டையடி கிடைத்துள்ளது. இப்பொழுது என் மகள் ஓர் எல்லைக்குள் தான் ஒருவரின் தயவும் இல்லாமல் வாழ முடியும், நடமாட முடியும். அவளைப் பார்த்துக் கண்ணீர் வடித்து, அவளுக்காகவே நான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். உங்கள் மகளைப் பார்த்து நீங்கள் எப்படித் துடித்திருப்பீர்கள் என்பதை நன்றாகவே உணர்ந்துவிட்டேன்… சார்… ஹரிணி போல் பத்துப் பெண்கள் இருந்தால் போதும், என் போன்ற தான்தோன்றிப் பசங்களுக்கு நல்ல பாடமாகும். அதனால் யார் ஒருவன் பெண் பார்க்கச் சென்றாலும், “நண்பனே! முதலில் பார்க்கும் பெண்ணையே மறுக்காமல் மணந்து கொள்” என்று அறிவுரை கூறுகிறேன். ஆமாம்… என்னால் அறிவுரை கூறமட்டும் தான் முடியும். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பார்களே… அதுபோலத்தான். விண்ணிலே மணல் வீடு கட்டிப்பார்க்க ஆசைப்பட்டு ஓய்ந்து விட்டேன். நான் வருகிறேன். சார்… இல்லை… இல்லை… நான் போகிறேன் சார்” என்று சொல்லி யஞ்ஞராமன் கிளம்பினான்.

(1982-ஆம் ஆண்டு)

– விண்ணில் ஒரு மணல் வீடு (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: பிப்ரவரி 2011, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *