முதலாவது அத்தியாயம் நிறைவு பெறுகிறது
கதையாசிரியர்: கே.ஆர்.டேவிட்
கதைத்தொகுப்பு:
குடும்பம் 
கதைப்பதிவு: June 24, 2026
பார்வையிட்டோர்: 134
(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இந்த முதியோர் இல்லத்தின் இரண்டாவது மாடியிலுள்ள ஏழாவது இலக்க அறையிலேதான் பிரேமகாந்தன் தங்கியுள்ளார். பிரேமகாந்தனும் முதியவர்தான். ஆனால், தஞ்சமின்றி இங்கு தங்கவந்தவரல்ல.
பிரேமகாந்தன் ஓர் ஆய்வாளராகவே இங்கு வந்துள்ளார். ‘ஆதரவற்ற முதியவர்களும், அவர்களது மனநிலைகளும்’ இதுதான் பிரேமகாந்தன் தனது ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட தலைப்பு. பார்வையாளனாக நின்று விசாரணைகள் மூலமும், கிடைக்கின்ற தரவுகள் மூலமும் தனது ஆய்வை நிறைவு செய்து கொள்ளப் பிரேமகாந்தன் விரும்பவில்லை. அங்கு வாழும் முதியவர்களோடு பங்காளனாக நின்று யதார்த்த பூர்வமாகத் தனது ஆய்வை மேற்கொள்ள வேண்டுமென்பதற்காகவே இங்கு வந்து தங்கியுள்ளார்.
பிரேமகாந்தனும் பல்கலைக்கழக மாணவனாக இருந்து பல ஆய்வுகளை மேற்கொண்டு பட்டம் பெற்று பெரும் பதவி வகித்து ஓய்வுபெற்றவர்.
பிரேமகாந்தன் இங்கு வந்து மூன்று கிழமைகளாகின்றன. இங்குள்ள ஒரு முதியவர் செலுத்துகின்ற தொகையை பிரேமகாந்தனும் செலுத்தவேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே பிரேமகாந்தன் இங்கு அனுமதிக்கப்பட்டார். பிரேமகாந்தன் இங்கு வந்து தங்கியுள்ளதன் நோக்கத்தை இம்முதியோர் இல்லத்தின் நிர்வாக இயக்குநரான வரதராஜமூர்த்தி மட்டுமே தெரிந்து வைத்திருந்தார்.
ஆய்வு முயற்சிக்காகவே தான் வந்து தங்கியுள்ளதை இங்குள்ள முதியவர்கள் தெரிந்துகொண்டால் அவர்களது வாக்குமூலங்களில் போலித்தன்மை கலக்க வாய்ப்புண்டு என்பதை பிரேமகாந்தன் உணர்ந்திருந்தார்.
முதியவர்களின் வாழ்வியலை ஒரு ஆய்வுக்குட்படுத்தி அதைப் பதிவாக்க வேண்டுமென்பதில் பிரேமகாந்தனைப் போல வரதராஜமூர்த்தியும் பெரும் அக்கறையுள்ளவராகவே இருந்தார்.
வரதராஜமூர்த்தியும் ஒரு பட்டதாரி. அரசாங்கத்தில் பொறுப்பான பதவி வகித்து ஓய்வுபெற்றவர். கடந்த பத்து வருடங்களாக இந்த முதியோர் இல்லத்தை நிர்வகித்து வருகிறார்.
இம்முதியோர் இல்லம் இரண்டு மாடிகளைக் கொண்டது. அறைகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அறையிலும் ஐந்து முதியவர்கள் தங்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பிரேமகாந்தனின் அறையில் அவரோடு யோகநாதன், உதயகுமார், சத்தியநாதன், தர்மகீர்த்தி ஆகிய நால்வரும் தங்கியிருந்தனர். ஐந்துபேரும் மிகவும் ஐக்கியமாகவே இருந்தனர்.
பிரேமகாந்தன் …
யதார்த்தபூர்வமான பகிடிகளை விளங்கிக் கொள்வதோடு, யதார்த்தபூர்வமான பகிடிகள் விடுவதிலும் வல்லவர்.
குண்டூசிக்கூர்மை போன்ற கண்கள் ஒட்டுத்தாள் போன்ற பார்வை..
அலுவலகச் சட்டதிட்டங்களில் கைதேர்ந்தவர். சட்டத்தையும் கூறி பக்கத்தையும் கூறுவார். கண்டிப்பான அதிகாரியெனப் பெயர் எடுத்தவர்.
“உனது கன்னத்தில் ஒருவன் அடித்தால் அவனுக்கு உனது மறுகன்னத்தையும் திருப்பிக்காட்டு” என்ற யேசுநாதரின் போக்கிலுள்ள பிடிமானம் அவருக்கு…
இன்றைய அதிகாரமிக்க சமூகச் சுழிக்குள்… துணிச்சலாக எதிர்நீச்சல் போட்டு… ‘பவுல்’ அடித்தவர்கள் வெட்கப்படும்படியாக பல ‘கோல்களை இறக்கிக் காட்டிய வல்லமை மிக்கவர்…
பிரேமகாந்தனின் இந்த ஆய்வுமுயற்சிக்கு ஆய்வுமுயற்சிக்கு வரதராஜமூர்த்தி பெருந்துணையாக நின்று ஆலோசனைகளையும் தரவுகளையும் வழங்கத் தயாராக இருந்தார்.
நீண்டுபோயிருக்கும் காலி வீதியில் கடற்கரைப் பக்கமாகச் செல்லும் குறுக்கு றோட்டின் எல்லையை அண்மித்து இந்த முதியோர் இல்லம் அமைந்துள்ளது. கடற்காற்று. ஓங்கி வளர்ந்து நிற்கும் மலைவேம்புகளின் நிழலிலுள்ள குளிர்மை, இனம் பிரிக்கப்பட்டு ஒழுங்காக நாட்டப்பட்டிருக்கும் குரோட்டன் செடிகளின் அழகு தினசரி சுத்திகரிப்பதால் ஏற்பட்டிருக்கும் புனிதம். கட்டுப்பாடான நிர்வாகம்…
அந்த முதியோர் இல்லத்தினுள் காலடி வைக்கும்போது எங்களை அறியாமலேயே எங்களுக்குள் ஏதோ ஒருவித மதிப்புணர்வு ஜனிக்கும்.
ஏனென்றால் முதுமையும் அதைத் தொடர்ந்து வருகின்ற மரணமும்… முதுமைக்கும் மரணத்துக்கும் இடையேயுள்ள ஒரு தங்குமடந்தான் இந்த ‘முதியோர் இல்லம்’ என்பதும் சகலராலும் உணரப்பட்டதொரு உண்மையாகும்!
ஒவ்வொரு மனிதனுமே தனது முதுமைக்காலம் பற்றிக் கற்பனை செய்கின்றான். தான் பிறந்த வீடு… தனது குடும்ப உறவுகள்… பிள்ளைகள்… பேரப்பிள்ளைகள்… பூட்டப்பிள்ளைகள்… அவர்களின் பராமரிப்பு… ஆதரவு… அரவணைப்பு…
அவனது கற்பனைகள் கனவாகும்போது அவன்… முதியோர் இல்லம் என்ற தங்குமடத்தின் கதவுகளைத் திறக்கின்றான்! மன அவலத்தோடு மரணத்தின் பிடிக்குள் சிக்குகிறான்.
இன்னும் சிலர்… சிலரல்ல.. பலர் என்றுதான் கூறவேண்டும். வீதியோரங்களே தங்குமடங்களாகி… தசை உலர்ந்து… எலும்புந்தோலுமான தங்களின் நடுங்குகின்ற கைகளால் பிச்சை கேட்கின்றனர்… இவர்களின் மரணங்கள்… இவர்களின் இரைப்பையின் வெறுமையால் ஏற்படுகின்ற குடல் வலிப்பு என்ற வடிவில் அவர்களை அறியாமலேயே நிகழ்ந்து விடுகின்றது…!
இப்படிப் பலதரப்பட்ட முதியவர்களின் மனப் பொக்கணைகளுக்குள் நிறைந்திருக்கும் அரூபிகளான மன உணர்வுகளைக் கண்டறிவதென்பது இலகுவானதல்ல…
கண்டறிந்து பதிவாக்கமுடியும் என்ற தன்னம்பிக்கையோடுதான் பிரேமகாந்தன் வந்திருக்கிறார்.
தனது ஆய்வு முயற்சி…
தாமரைக்குளத்தில் சுழியோடி தாமரைக்கிழங்கு பிடுங்கும் முயற்சியல்ல… ஆழ்கடலில் குதித்து முத்துக்குளிக்கும் முயற்சி என்பதும் பிரேமகாந்தனுக்கு நன்கு தெரியும்…
இந்த முதியோர் இல்லத்தின் நிர்வாக இயக்குநரான வரதராஜமூர்த்தி மிகவும் அமைதியானவர் மட்டுமல்ல மிகவும் ஆழமான சிந்தனையுள்ளவர். ‘பிறகு பார்க்கலாம்’ என்று எந்த வேலையையும் அவர் தள்ளிவைப்பதில்லை.
அரச அலுவலகங்களில் மேசைகள் மீது கோவைகள் குவிந்து கிடப்பதுபோல்.. அவரது மேசையில் என்றுமே கோவைகள் குவிந்து கிடப்பதில்லை. பகலில் அனைத்து வேலைகளையும் முடித்துவிடுவார்.
பிற்பகல் ஆறு மணிக்குப் பிறகு வரதராஜமூர்த்தி தனது அலுவலகத்தில் ஓய்வாகவே இருப்பார். இப்போதெல்லாம் வரதராஜுமூர்த்தியுடன் பிரேமகாந்தன் சேர்ந்து கொள்வார்.
இப்போது ஆறு மணியிருக்கும். பிரேமகாந்தனும், வரதராஜமூர்த்தியும் சேர்ந்திருக்கின்றனர்.
முதியோர் இல்லத்திற்கு முன்னால் ஏறத்தாழ மூன்று பரப்பு விஸ்தீரணமுள்ள நீள்சதுரப் புற்றரை அமைந்துள்ளது. இந்தப் புற்றரையின் நடுவில் வட்ட வடிவிலான சீமெந்துக் கட்டிடம் ஒன்றும் அமைந்துள்ளது. மிகவும் திட்டமிடப்பட்டு கட்டப்பட்டுள்ள இந்த முதியோர் இல்லத்திற்கு முன்னால் இந்த வட்டவடிவிலான கட்டிடமும் ஏதோவொரு நோக்கத்துடனேயே கட்டப்பட்டிருக்க வேண்டும்!
இந்தக் கட்டிடத்தின் மீதுதான் வரதராஜமூர்த்தியும், பிரேமகாந்தனும் கட்டிடத்தின் விளிம்பில் கால்களைத் தொங்கப் போட்டபடி அமர்ந்திருக்கின்றனர்.
தலையைச் சிறிது இடப்பக்கம் திருப்பி மதிலுக்கு மேலால் கடற்கரையைப் பார்த்தால்… தாழை மரங்களின் மறைப்பில் இளசுகளின் ‘வம்பு கல்ந்த’ அன்புப் பரிமாற்றங்கள் கண்ணில்படும். சரியென்றோ – பிழையென்றோ விபரிக்க முடியாததொரு உணர்வு மனதில் ஏற்படும்.
‘கல்லெறிதூர’ இடைவெளியில் முதுமையின் அவலங்களும்… இளமையின் கோலங்களும்…
“மூர்த்தி ஐயா… என்ன கடுமையாக யோசிக்கிறியள்…” வரதராஜமூர்த்தியை பிரேமகாந்தன் ‘மூர்த்தி ஐயா வென்று கௌரவமாகத்தான் அழைப்பார். பதிலுக்கு பிரேமகாந்தனை மூர்த்தி ஐயா ‘மிஸ்டர் காந்தன்’ என்று கெளரவப்படுத்திக் கொள்வார்.
“இருபத்திநாலு மணிநேரமும்… முதியவர்களோடை பழகி… அவர்களைப் பற்றியே சிந்திச்சு… மனம் மரத்துப் போச்சு…” மூர்த்தி ஐயா கடற்கரையைப் பார்த்தபடியே கூறுகின்றார்.
“இந்த முதுமைக் காலத்தைப்பற்றி உங்கள் மனதிலுள்ள அபிப்பிராயத்தைச் சொல்லமுடியுமா…” பிரேமகாந்தன் தூண்டில் ஊசியில் நாக்கிளிப்புழுவைக் குத்தி எறிகின்றார்.
சில விநாடிகள் மௌனமாக இருந்த வரதராஜமூர்த்தி கண்ணாடியைக் கழற்றி அதன் கண்ணாடிகளைக் கைக்குட்டையால் துடைத்து… கண்ணாடியை மீண்டும் போட்டுக்கொண்டு பேச ஆரம்பிக்கிறார். அவரது பார்வைக் கோடுகள் கடற்கரையிலிருந்து விடுபட்டு வான்பரப்பில் நீண்டு போயிருக்கின்றன.
“முதுமையும்… மரணமும்…” மனிதர்களுக்கு மட்டுமல்ல… இந்த மண்ணிலுள்ள சகல ஜீவராசிகளுக்குமுள்ள பொதுவான நியமம்….
தாய்க்குரங்கு… தன் குட்டிக்குரங்கைத் தன் மார்போடு அணைத்தபடி கிளைகளில் தாவுவதைப் பார்த்திருக்கிறோம். அதேவேளை, வயோதிபக் குரங்கொன்றை அதன் பிள்ளைக் குரங்கு அணைத்து வைத்திருந்ததைப் பார்த்ததாக இதுவரை யாரும் கூறவில்லை.
கடற்காற்றில் அல்லற்பட்டு நெற்றிப்பரப்பை மறைக்கும் கம்பி போன்ற தனது தலைமயிரை கைவிரல்களால் கோதி சரிசெய்தவாறு வரதராஜமூர்த்தியின் பேச்சுக்களை அவதானிக்கின்றார் பிரேமகாந்தன்.
வரதராஜமூர்த்தி தொடர்கிறார் …
“அதேபோல… குஞ்சுக்குருவிக்குத் தாய்க்குருவி உணவூட்டுவதை பார்த்திருக்கிறோம். அதேவேளை, வயோதிபக் குருவிக்கு பிள்ளைக்குருவி உணவூட்டியதைப் பார்த்ததாக இதுவரை எந்தப் பதிவுகளும் இல்லை.”
வரதராஜமூர்த்தியின் நீர்மட்டம் வைத்தது போன்ற நிதானமான பேச்சில் அதிர்ந்துபோன பிரேமகாந்தன் மௌனமாக இருக்கின்றார்.
இவர்கள் இருக்கும் இடத்திலிருந்து சிறிது தூரத்தில் மதிற்கரையோடு நின்ற செவ்விளனிமரத்தில் பழுத்திருந்த ஓலையொன்று நிலத்தில் குத்தி விழுந்து முறிகின்றது.
வரதராஜமூர்த்தி தொடர்கின்றார்…
“துவரம்பருப்பிடித்து மாவாக்கி சீனியும் கலந்து களிக்கிண்டி குழந்தையை இடுப்பில் வைத்து, பாட்டுப்பாடி, கதைகள் கூறி குழந்தைக்குக் களியை ஊட்டுகின்ற பெற்றோரை நிறையவே பார்த்திருக்கின்றோம். எனக்கும் உங்களுக்கும் கூட அந்த அனுபவங்கள் இருக்கலாம்.
அதேவேளை, பெற்று வளர்த்த பெற்றோருக்கு அவர்களது முதுமைக்காலத்தில் அவர்களை அரவணைத்து உணவூட்டிய ஒரு பிள்ளையைப் பார்த்திருக்கிறோமா. மிகவும் அரிதாகத்தான் காணக்கூடியதாகவுள்ளது. மொத்தத்தில், முதுமை என்பது வெறுப்புக்குரியதா என்றொரு கேள்வி பிறக்கின்றது.” தனது பேச்சை நிறுத்திய வரதராஜமூர்த்தி தனது கண்ணாடியை மீண்டும் கழற்றி தனது வலதுகையின் விரல்களால் கண் குழிகள் இரண்டையும் தடவுகிறார்.
வரதராஜீமூர்த்தி பேச்சைத் தொடர்கிறார்…
“முதுமையும் மரணமும் வெல்ல முடியாத நியதிகள். இளமைக்கும் முதுமைக்கும் இடைப்பட்ட காலத்தில் ஒரு மனிதன் தனக்காகவும் தனது குடும்பத்தின் உறவுகளுக்காகவும் தினசரி போராடுகிறான். அந்தப் போராட்டத்தினுள் அவனையறியாமலேயே சில கற்பனைகள் உருவாகுகின்றன.
தனது குடும்பம் என்ற விளைநிலத்தில் தன்னால் விளைவிக்கப்பட்ட குடும்ப உறவுகள் தனது வயோதிபக் காலத்தில் தன்னை அரவணைக்குமென நம்புகிறான். இந்த நம்பிக்கை… ‘பிரதியுபகாரம்’ என்ற பொதுவான நன்றிப் பண்பிலிருந்து வேறுபட்டு ஆத்மார்த்த நம்பிக்கையாகவே வளர்கின்றது.
‘ஆத்மார்த்த நம்பிக்கை’ என்பது ஒரு மனிதன் பெறுகின்ற அனுபவங்களுக்கூடாக… அவனது மனத்தளத்தில் விதைக்கப்பட்டு அவனது ஆத்மாவில் படியும் மன எண்ணக் கருக்களின் நிரந்தரப் படிமங்களாகும்.
அந்த ஆத்மார்த்த நம்பிக்கைகள் தோல்விகளை அணுகும்போது அந்த ஆத்மார்த்த நம்பிக்கைகளை ஜீரணிக்க முடியாமல் ஆத்மா அவலப்படுகின்றது. முதுமைக்காலம் திசை தெரியாமல் தத்தளித்து ஏதோவொரு முடிவை நாடுகின்றது. அந்த முடிவுகளில் ஒன்றுதான் இந்த முதியோர் இல்லம். அதிலும் பொருளாதார வசதியுள்ளவர்களால்தான் இதுபோன்ற வசதியான முதியோர் இல்லங்களில் அனுமதி பெறமுடியும்.
குடும்ப உறவுகளின் அரவணைப்புக் கிடைக்காத – பொருளாதார வசதியற்ற வயோதிபர்களைத்தான் வீதியோரங்களில் தினசரி காண்கிறோம்.
வரதராஜமூர்த்தி இதுவரையில் முதியோர் இல்லத்தில் தான் கண்ட அனுபவங்களைத் தொகுத்து அர்த்தபுஷ்டியான நீண்டதொரு உரையைக் கூறி முடிக்கின்றார். பிரேமகாந்தன் மனம் சகலதையும் பதிவு செய்து கொள்கின்றது.
சிந்தனைச் சுழிக்குள் சிக்கிக்கொண்ட பிரேமகாந்தன் அன்றிரவு தனது அறைக்கு வந்துசேர பத்துமணிக்கு மேலாகி விட்டது. இவரது கட்டிலுக்குப் பக்கத்துக் கட்டில்காரனான யோகநாதனை விட ஏனைய மூவரும் தூங்கிவிட்டனர்.
யோகநாதன் ஒரு புகைப்படமொன்றைக் கண்வெட்டாமல் பார்த்தபடி கட்டிலில் அமர்ந்திருந்தார்.
“என்ன யோகர் ஐயா… ஆற்றை போட்டோ பிரேமகாந்தன் யோகநாதனை ‘யோகர் ஐயா’ என்றே அழைப்பார்.
“என்ரை குடும்பப்படம்”
“நானும் பார்க்கலாமா?”
“பாருங்கோ…” யோகநாதன் இப்படிக் கூறியதும் பிரேமகாந்தன் யோகநாதனுக்கருகே வந்து குனிந்து புகைப்படத்தைப் பார்க்கிறார்.
“இவள்தான் என்ரை பெண்டாட்டி… அவள் உயிரோடை இருந்திருந்தால் இண்டைக்கு எனக்கு இந்த முதியோர் இல்ல வாழ்க்கை ஏற்பட்டிருக்காது. அடுத்தது நான்… எங்களுக்கு நடுவிலை நிற்பவன்தான் என்ரை மகன் சாகித்தியன்.
என்ரை பெண்டாட்டி இந்த உலகத்திலை இல்லை… என்ரை மகன் சாகித்தியன் இந்த மண்ணிலை இல்லை… நான் பிறந்த மண்ணிலை இல்லை” யோகநாதன் பெருமூச்சுடன் கூறுகின்றார்.
“யோகர் ஐயா… கடவுள் நல்லவர்களைத்தான் சோதிப்பார். ஆனால், கைவிடமாட்டார். கவலைப்படாதையுங்கோ… சாகித்தியன் கட்டாயம் வருவான், உங்களோடை இருப்பான்” பிரேமகாந்தன் யோகநாதனுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறுகின்றார்.
“மகன் வாறதும் என்னோடை இருப்பான் எண்டெதெல்லாம் கோழிக்குஞ்சுக்குப் பால் குடுத்த கதையெண்டு எனக்குத் தெரியும். எனக்கு என்ரை குடும்பம் எவ்வளவு முக்கியமோ… அதுபோலை சாகித்தியனுக்கு அவன்ரை குடும்பம் முக்கியம்.. அவனை வந்து என்னோடை இருக்கச் சொல்லி நான் கேட்கப் போறதுமில்லை… நான் கேட்டாலும் அவன் வரப்போறதும் இல்லை. நான் வாற தை மாதத்தோடை யாழ்ப்பாணம் போறதெண்டு முடிவு செய்திட்டன்” யோகநாதன் திட்டவட்டமாகக் கூறுகிறார்.
“என்ன யோகர் ஐயா சொல்லுறியள். யாழ்ப்பாணம் போகலாம். அங்கை போய் தனிய என்ன செய்வியள். வயோதிப காலத்திலை துணை இல்லாமல் வாழமுடியுமா? இந்த முதியோர் இல்லத்திலை உங்களுக்கு என்ன குறையிருக்கு. நேரத்துக்குச் சாப்பிட்டிட்டு நிம்மதியாய் தூங்கவேண்டியது தானே”
“நீங்கள் சொல்றது சரி. இஞ்சை எனக்கு எல்லா வசதியளும் இருக்கு. ஆனால், நிம்மதி இல்லை. யாழ்ப்பாணத்தில் எனக்கு எந்த ஆதரவும் இருக்காது. ஆனால், நிம்மதி இருக்கும். நான் ஒருநாள் எண்டாலும் என்ரை தாய் மண்ணிலை நிம்மதியாய் இருந்திட்டு சாகிறதுதான் எனக்கு விருப்பம்” யோகநாதனின் வார்த்தைகள் பிரேமகாந்தனின் செவிப்பறைகளில் மோதித் தெறிக்கின்றன. யோகநாதன் இப்படிப் பேசுவாரென பிரேமகாந்தன் எதிர்பார்க்கவில்லை. ஆச்சரியத்தோடு யோகநாதனை பிரேமகாந்தன் பார்க்கிறார்.
“என்ன பாக்கிறியள். படுக்கிறதுக்குக் கட்டிலும், கடற்காற்றும், நேரத்துக்குச் சாப்பாடும் மனதுக்குத் திருப்தியாக இருக்கும். எனக்குள்ளை ஒரு ஆத்மா இருக்கு. அது எந்த நேரமும் துடிச்சுக்கொண்டிருக்கு. நான் எப்ப என்ரை தாய் மண்ணிலை காலடி வைக்கிறேனோ அண்டைக்குத்தான் என்ரை ஆத்மாவின்ரை துடிப்படங்கும்.
பிரேமகாந்தனால் பேசமுடியவில்லை மௌனமாக நிற்கிறார். தசை வற்றி, எலும்புந்தோலுமாகிவிட்ட யோகநாதனின் கைகள் நடுங்குகின்றன. குரல்வளையின் அடியிலுள்ள சிறு குழியை மூடியிருக்கும் வௌவால் செட்டை போன்ற தோல். அதுவும் துடிக்கின்றது.
“நான் வாழ்ந்த வீட்டைப்பற்றி உங்களுக்குத் தெரியுமா? அது என்ரை பூட்டன் கட்டின வீடு. என்ரை பாட்டன் பிறந்தது, என்ரை தகப்பனார் பிறந்தது, நான் பிறந்தது, என்ரை மகன் பிறந்தது எல்லாமே அந்த வீட்டிலதான்.
அந்த வீடு எங்கடை பரம்பரையின்ரை ‘கருப்பை’ அந்த மண் எங்கடை ‘தாய் மண்’.
இதெல்லாம் என்னத்துக்கு… நாங்களெல்லாம் ‘அ’ எழுதப் பழகினதும் அந்தத் தாய் மண்ணிலைதான். அந்த மண்ணை மறக்கமுடியுமா?”
கழுத்து வெட்டப்பட்ட ஆட்டின் குரல்வளை நரம்பிலிருந்து விட்டுவிட்டு இரத்தம் கொப்பளிப்பதுபோல் யோகநாதனின் வாயிலிருந்து வார்த்தைகள் கொப்பளிக்கின்றன. பிரேமகாந்தன் வாயடைத்து நிற்கிறார்.
“ஐயா பிரேமகாந்தன், மனிசனுக்கு இரண்டு வகையான திருப்திகள் இருக்கு. ஒன்று மனத் திருப்தி, இன்னொன்று ஆத்ம திருப்தி.
இந்தக் கட்டிலும், சாப்பாடும், கடற்காற்றும் ‘மனத் திருப்தி’யைத்தான் ஏற்படுத்துமே தவிர ஆத்ம திருப்தியை ஏற்படுத்தாது. என்ரை தாய் மண்ணிலை என்ரை வீட்டிலை அந்தக் கிணத்திலை தண்ணி அள்ளி சளசளவெண்டு குளிச்சிட்டு இரண்டு முறடு தண்ணியும் குடிச்சிட்டு ஒரு நாலுமுழத்தை விரிச்சு என்ரை வீட்டு விறாந்தையிலை படுக்கிறதிலைதான் எனக்கு ‘ஆத்ம திருப்தி இருக்கு.
நான் என்ரை தாய் மண்ணிலைதான் சாகவேணும். நான் என்ரை தாய்மண்ணிலைதான் எரிஞ்சு சாம்பலாக வேணும்” யோகநாதனின் குரல்வளை வறண்டு சொற்கள் வறுக்கப்பட்டு வார்த்தைகள் தட்டுத்தடுமாறி வெளிவருகின்றன. யோகநாதனால் தொடர்ந்து பேசமுடியவில்லை. கண்களைத் துடைத்தபடி படுத்துக் கொள்கிறார்.
மின்சார பல்புகளை அணைத்துவிட்டு பிரேமகாந்தனும் படுக்கின்றார்.
“நான் என்ரை தாய் மண்ணிலைதான் சாகவேணும். நான் என்ரை தாய் மண்ணிலைதான் எரிஞ்சு சாம்பலாக வேணும்” யோகநாதனின் பேச்சுக்கள் பிரேமகாந்தனின் இதயத்தில் மட்டுமல்ல அந்த அறை முழுவதும் எதிரொலிக்கிறது.
யோகநாதன் யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரிப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். ஒரு விஞ்ஞான ஆசிரியர். விஞ்ஞான பாடங்களில் குறிப்பாக பௌதீகவியல் பாடத்தில் துறைபோனவர். சாவகச்சேரிப் பிரதேசத்தில் ‘பிஸிக்ஸ் யோகர்’ என்று பேசப்படுமளவிற்குப் பிரபலமானவர்.
யோகநாதனின் ஒரே வாரிசான சாகித்தியன் ஏ.எல் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். யோகநாதன் தன்னிடமிருந்த விஞ்ஞான பாடத் திறமைகளை சாகித்தியனுக்கு சிறுகச் சிறுக ஊட்டினார். சாகித்தியன் ஏ.எல் பரீட்சையில் கணிதப் பிரிவில் மாவட்டத்தில் முதல்தர மாணவனாகச் சித்தியடைந்தான். யோகநாதன் பூரித்துப் போனார்.
தனது ஒரேமகன் கணிதப் பகுதியில் துறைபோக வேண்டும் என்ற தனது ஆவலில் யோகநாதன் சாகித்தியனை மேற்படிப்புக்காக லண்டனுக்கு அனுப்பினார்.
சாகித்தியன் படித்தான், பட்டம் பெற்றான். லண்டனிலேயே அவனுக்குப் பதவியும் கிடைத்தது. ஒரு வெள்ளைக்காரப் பெண்ணும் கிடைத்தாள். வனிதை என்ற ஒரு பெண்குழந்தைக்குத் தந்தையானான். இரவல் தாய் நாட்டில் அவனது வாழ்க்கை வேர் படர்ந்தது.
லண்டனுக்குச் சென்ற சாகித்தியன் வந்து போய் பத்து வருடங்களின்பின் அவனது தாய் காலமானபோது வந்திருந்தான். அப்போது யோகநாதனைத் தன்னோடு லண்டனுக்கு வரும்படி வற்புறுத்தினான். யோகநாதன் லண்டனுக்குச் செல்ல மறுத்துவிட்டார்.
“என்ரை தாய்மண்ணை விட்டிட்டு என்னால் வரமுடியாது” என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
அதன்பின்பு மிகவும் கஷ்டப்பட்டு யோகநாதனை அழைத்து வந்து இந்த முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு சாகித்தியன் லண்டனுக்குச் சென்றுவிட்டான்.
ஏழு வருடங்கள் உருண்டோடிவிட்டன. யோகநாதன் முதியோர் இல்லத்திலேயே தங்கியிருக்கின்றார்.
யோகநாதனிலிருந்தே தனது ஆய்வை மேற்கொள்ள முடிவு செய்த பிரேமகாந்தன் தினசரி யோகநாதனுடன் கலந்துரையாடுவார்.
பிரேமகாந்தன் மிகவும் நிதானமானவர். தான் மேற்கொள்ளவிருக்கும் ஆய்வு…
தாமரைக்குளத்துக்குள் சுழியோடி தாமரைக்கிழங்கு பிடுங்கும் முயற்சியல்ல.. ஆழ்கடலில் முத்துக்குளிக்கும் முயற்சிக்கு ஒப்பானதென்பதை உணர்ந்து வைத்திருந்தார்.
“என்ரை தாய் மண்ணிலை என்ரை வீட்டிலை அந்தக் கிணத்திலை தண்ணி அள்ளி சளசளவெண்டு குளிச்சிட்டு இரண்டு முறடு தண்ணியும் குடிச்சிட்டு ஒரு நாலுமுழத்தை விரிச்சு என்ரை வீட்டு விறாந்தையிலை படுக்கிறதிலைதான் எனக்கு ஆத்ம திருப்தி இருக்கு” என்று அன்றொருநாள் இரவு யோகநாதன் கூறிய வாக்கியங்கள் கருவண்டு போல இன்னமும் பிரேமகாந்தனின் இதயத் தளத்தைப் பிறாண்டிக் கொண்டிருந்தன.
சில தினங்கள் சென்றிருக்கும். ஒருநாள் இரவு நாலுமணியளவில் யோகநாதன் மிகவும் அவலப்பட்டார். அவரது மூக்கினால் இரத்தக் குழம்பு வடிந்து மயங்கிய நிலையில் முதியோர் இல்ல நிர்வாகத்தினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சாகித்தியனுக்குச் செய்தி அனுப்பப்பட்டு மூன்றாவது நாள் சாகித்தியன் வந்து சேர்ந்தான்.
சாகித்தியன் வந்த விமானம் இலங்கை எல்லைக்குள் வந்திருக்கும். சாகித்தியனைப் பார்க்காமலேயே யோகநாதன் இறந்துவிட்டார்.
சாகித்தியன் கட்டுநாயக்கா விமானநிலையத்திலிருந்து நேரடியாக முதியோர் இல்லத்திற்கு வந்தான். யோகநாதனின் மரணச் செய்தியை வரதராஜமூர்த்தி பவ்வியமாகத் தெரிவித்தார். சாகித்தியன் வரதராஜமூர்த்தியின் அலுவலகத்துள் இருந்த கதறி அழுதான்.
“அம்மாவையும் பிணமாகத்தான் பார்த்தன். அப்பாவையும் பிணமாகத்தான் பார்க்கப் போறன்” இப்படித்தான் சாகித்தியன் கூறி அழுதான்.
வரதராஜமூர்த்தி இங்கிதம் புரிந்தவர். சாகித்தியனை அழவிட்டு ஓய்ந்தபின்னர் தனது கதையை ஆரம்பித்தார்.
“தம்பி உங்கடை அப்பா யோகநாதன் ஏழு வருடங்களாக இந்த முதியோர் இல்லத்திலை இருந்திருக்கின்றார். அவர் என்னைச் சந்திக்கும்போதெல்லாம் தான் பிறந்த மண்ணிலைதான் சாகவேணும் பிறந்த மண்ணிலைதான் எரிஞ்சு சாம்பலாகவேணுமெண்டு கூறியிருக்கிறார். சாகிறதுக்குச் சில தினங்களுக்கு முன்பும் அதே விஷயத்தைப் பற்றிக் குறிப்பிட்டுக் கதைத்துள்ளார். பிறந்த மண்ணிலைதான் சாகவேணும் எண்ட அவற்றை ஆசை நிறைவேறாமல் போச்சுது. பிறந்த மண்ணிலைதான் எரிஞ்சு சாம்பலாக வேணுமெண்ட இரண்டாவது ஆசையும் இருக்கு. அதைப்பற்றி நீங்கள்தான் முடிவு செய்ய வேணும்” வரதராஜமூர்த்தி யோகநாதனின் மண் பற்றுப்பற்றி விபரித்தார். பிரேமகாந்தனும் உடனிருந்ார்.
யோகநாதனின் மண்பற்றுப்பற்றி விபரங்களை வரதராஜமூர்த்தி சாகித்தியனிடம் கூறும்போது சாகித்தியன் தலையைக் குனிந்தபடி வரதராஜமூர்த்தியின் விளக்கங்களைக் கேட்டுக்கொண்டிருந்தான். சில விநாடிகள் சாகித்தியன் மௌனமாக இருந்தான். அவனது சிந்தனைத் திரிகைக்குள் யோகநாதனின் மண்பற்றுப் பற்றிய கருத்துக்கள் அரைபடுவதை அவனது முகம் காட்டியது.
சில விநாடிகள் சென்றிருக்கும். தனது லோங்ஸ் பொக்கற்றுக்குள்ளிருந்த கைக்குட்டையை எடுத்து தனது கண்ணாடியின் இரண்டு பக்கங்களையும் துடைத்து துப்புரவாக்கி மீண்டும் கண்ணாடியை அணிந்துகொண்டு வரதராஜமூர்த்தியைப் பார்த்தான். மிகவும் ஆழமான பார்வை. அவனது உதடுகளில் ஊமைச் சிரிப்பொன்று ஊர்ந்து மறைந்தது.
வரதராஜமூர்த்தி நிர்வாக இயக்குநர் என்ற பதவிக்குள் மனிதத்தோடு மிகவும் அமைதியாக சாகித்தியனைப் பார்த்தார்.
பிரேமகாந்தனின் மனத்தளத்தில் அவரது ஆய்வு பற்றிய குறிப்புக்கள் வளர்ந்து பக்கங்கள் நிறைந்து கொண்டிருந்தன.
‘ஆதரவற்ற முதியவர்களும் அவர்களது மனநிலைகளும் இதுதான் அவரது ஆய்வின் தலைப்பு.
வரதராஜமூர்த்தியின் அலுவலகத்திற்கு முன்னால் அங்கு தங்கியிருக்கும் ஆதரவற்ற முதியவர்கள் மெளனமாக நிற்கின்றனர். நிற்கமுடியாதவர்கள் அந்தச் சீமெந்து நிலத்தில் குந்தியமர்ந்திருக்கின்றனர். இருமல், பொருமல், நெஞ்சு நிறைந்த சளியின் கீச்சொலிகள்…
“சேர், அப்பாவின்ர கடைசிக் கடமைகளுக்கு ஒழுங்கு செய்யுங்கோ…” சாகித்தியன் முடிந்த முடிவாகக் கூறிவிட்டு தகப்பனின் உடலைப் பார்க்கப் புறப்படுகின்றான்.
பிரேமகாந்தனும் அங்கு குழுமி நின்ற முதியவர்களும் திகைத்துப் போய் நிற்கின்றனர். அங்கு குழுமிநின்ற முதியவர்களின் ஏக்கப் பெருமூச்சில் அந்த மண்டபமே சூடேறிப் போயிருக்கிறது!
“என்ன மூர்த்தி ஐயா! தன்னைப் பெத்தவரின்ரை கடைசி ஆசை எண்டதைக்கூட யோசிக்காமல் சாகித்தியன் இப்படிச் செய்து போட்டான். ஜீரணிக்க முடியாமல் இருக்கு” பிரேமகாந்தன் கேட்கிறார். வார்த்தைகள் உலர்ந்து குறண்டி பிரசவிக்கின்றன:
வரதராஜமூர்த்தி சர்வசாதாரணமாகச் சிரிக்கிறார்.
“என்ன மூர்த்தி ஐயா சிரிக்கிறியள்” பிரேமகாந்தன் கேட்கிறார்.
“சிரிக்காமல் என்ன செய்யிறது. இந்த மண்ணிலை பிறந்து, இந்த மண்ணிலை வேரூன்றி, இந்த மண்ணைச் சுவாசித்து, இந்த மண்ணிலை வளர்ந்தவர் யோகநாதன். அவருக்கு மண்பற்று நிச்சயமாக இருக்கும். ஆனால் சாகித்தியன் இலங்கை மண்ணில் பிறந்தாலும் அவன் வளர்ந்ததும் வளமானதும் லண்டன் மண்ணிலைதான். அவனால் நமது மண்ணின் மண்வாசனையைப் புரிந்து கொள்ள முடியாது…
அனுபவக் குறைபாடுகள்தான் முரண்நிலைகளின் விளைநிலம். அவனைப் பொறுத்து அவன் எடுத்த முடிவு சரியானது” வரதராஜமூர்த்தி மிகவும் நிதானமாகக் கூறுகின்றார்.
எல்லோரும் மெளனமாக நிற்கின்றனர். மின் விசிறியின் மந்தமான கீச்சொலி மட்டும் அந்த மண்டபத்தில் கேட்கின்றது.
சில விநாடிகள் மௌனமாக இருந்த வரதராஜமூர்த்தி மீண்டும் பேச ஆரம்பிக்கின்றார்…
“இன்று நடந்த சம்பவத்தில் யோகநாதனும் சாகித்தியனும் மட்டுந்தான் பங்காளிகளல்ல. நாமனைவருமே பங்காளிகள் தான்.
வெளிநாட்டு வாழ்க்கை மோகம், வெளிநாட்டு கல்வி மோகம், வெளிநாட்டுப் பொருளாதார மோகம், வெளிநாட்டு நாகரிக மோகம்.
வெளிநாட்டு மோகம் என்ற துப்பட்டாவுக்குள் நமது வாழ்க்கையைப் புதைத்துக் கொள்வதில் முனைப்பாக இருக்கின்றோமே தவிர, நாம் நமது சுயங்களை இழந்து நிர்வாண வாழ்க்கைக்குள் புதைந்துகொண்டிருக்கின்றோம் என்பதை யாருமே உணர்வதில்லை.
அடுத்தடுத்த நமது தலைமுறைகளில் …
‘தொப்புள் கொடி’, உறவுக்கோ ‘தாலிக்கொடி’ உறவுக்கோ, ‘தேசியக்கொடி’ உறவுக்கோ மதிப்பிருக்காது.
கட்டுக்கோப்பான ஒரு வாழ்க்கை முறையிலிருந்து இயந்திரமயமான ஒரு வாழ்க்கை முறை நோக்கி வழி நடத்தப்படுகிறோம் என்பதுதான் உண்மை நிலை” வரதராஜுமூர்த்தி மிகவும் வேதனையோடு கூறிமுடிக்கின்றார்.
மண்டபத்துள்…
துயரமும், சிந்தனையும் கலந்ததொரு அமைதி.
அந்த அமைதிக்குள்…
பிரேமகாந்தனின் மனப்பரப்பில்… ‘ஆதரவற்ற முதியவர்களும் அவர்களது மனநிலைகளும்’ என்ற அவரது ஆய்வின் முதலாவது அத்தியாயம் நிறைவு பெறுகின்றது.
– ஆகஸ்ட் 2009, ஞானம்.
– தகவம் பரிசுக்கதைகள் – தொகுதி 3, பரிசுபெற்ற சிறுகதைகளின் தொகுப்பு, முதலாம் பதிப்பு: மார்ச் 2016, தமிழ்க் கதைஞர் வட்டம் (தகவம்), கொழும்பு.
![]() |
கே.ஆர்.டேவிட் யாழ்ப்பாணம், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். 1971 ஆம் ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்றுப் பின்னர் சாவகச்சேரி வலய உதவிக் கல்விப்பணிப்பாளராக உயர்வு பெற்றார். கடமையின் நிமித்தமாக 1971 இல் நுவரேலியா சென்றிருந்த இவர், அங்குள்ள மக்களின் அவலங்களால் ஆதங்கப்பட்டு அதனை எழுத்துருவாக 'வரலாறு அவளைத் தோற்றுவிட்டது' என்னும் நாவலைப் படைத்தார். இவர் சிரித்திரன் இதழில் தொடராக எழுதிய 'பாலைவனப் பயணிகள்' என்னும் குறுநாவல் மீரா…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
வசந்தம் வந்து போய்விட்டது
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
June 29, 2026
சூடா இருக்க வேண்டிய மனசு
கல்பனா ராஜகோபால்
June 29, 2026
அகந்தை வெறி!
மா.சித்திவினாயகம்
June 26, 2026
