மனைவியின் காதலன்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 16, 2026
பார்வையிட்டோர்: 67 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அஷோக் சார்…. உங்களைத் தேடிக்கிட்டு ஒருத்தர் வந்திருக்கார். ரிசப்ஷன்ல ஒக்காந்திருக்கார். போய் பாருங்க…” டெஸ்பாட்ச் சிவகாமி சொல்லிவிட்டுப்போனதும் அவன் பேனாவை மூடிவிட்டு எழுந்து நகர்ந்தான். 

சோபாவின் மூலையோடு மூலையாக அவன் உட்கார்ந்திருந்தான். மிக ஒல்லியான உருவம். உடம்போடு சம்பந்தமே இல்லாமல் காற்றில் ஆடும் எலும்புக்கூடுக்கு மாட்டப்பட்டிருந்தது மாதிரி ஒரு காட்டன் ஷர்ட். கண்கள் எங்கோ அடி ஆழத்தில் இருந்தன. 

யாரிவன்… எதற்காக வந்திருக்கிறான்?

“யெஸ்… நான்தான் அஷோக்… நீங்க..?” என்றான் எதிரில் போய் நின்று. 

வெற்றுச் சுவரில் மேய்ந்துகொண்டிருந்த அவன் பார்வை, வலையில் சிக்கிய மாதிரி சடாரென்று நின்றது. 

“நான் சபாபதி…” என்றான். மூச்சிரைத்தது. சிரிப்பதற்கு முயற்சி செய்தபோது சதையே இல்லாத முகத்தில் பற்களின் சைஸ் அளவுக்கு அதிகமாகத் தெரிந்தது. 

பெயர் சட்டென்று எதையும் நினைவு படுத்தவில்லை. ஆனால், பரிச்சயமான பெயராகவும் இருந்தது. அஷோக் குழம்பினான். 

“கோயம்புத்தூர் எனக்குச் சொந்த ஊர் ஜோதியும் நானும் பழகின ஊர்.. என்னைப் பத்தி ஜோதி கண்டிப்பா சொல்லியிருப்பா உங்ககிட்ட… கரெக்டா?” அவன் மெல்லிய குரலில் மிக மெதுவாகப் பேசினான். 

ஞாபகம் வந்து விட்டது. 

சபாபதி! அவனா… ஜோதி கல்யாணமான முதல் வாரத்திலேயே எல்லாவற்றையும் சொன்னாள். இவள் பி.ஏ. முதல் வருடம் படிக்கும்போது எம்.ஏ. முதல் வருடம் படிக்கும் சபாபதி இவளையே அடிக்கடி கவனித்தது, சுற்றிச் சுற்றி வந்தது, ஒரு நாள் கவியரங்கத்தில் எதிரில் உட்கார்ந்து இருந்த இவளைப் பார்த்து கவிதையை மழையாகப் பொழிந்தது, அடுத்த நாள் அவன் நீட்டிய காதல் கடிதத்தை இயல்பாக இவள் வாங்கிக்கொண்டது, ஒரு வருடம் ஒவ்வொரு ஞாயிறும் காந்தி பார்க்கில் சந்தித்துக் காதலை வளர்த்துக்கொண்டது, அடுத்த வருட ஆரம்பத்திலேயே அவன் திடீரென்று படிப்பை நிறுத்தியது, சொல்லாமல் கொள்ளாமல் ஊரைவிட்டே மறைந்தது, அதிர்ச்சியிலிருந்து விடுபட்டு மெள்ள தேறியது, வீட்டில் பார்த்து நிச்சயித்த அஷோக்கை பிடித்துப் போனது, உயிர்பிரியும் கடைசி நொடி வரை நேர்மையான மனைவியாக வாழ்வது என்பது மட்டுமே ஒரே லட்சியம் என்று கண்ணீருடன் சத்தியம் செய்தது… எல்லாமே சொன்னாள். சொன்ன மாதிரியே நடந்தும் காட்டினாள். என்ன ஒரு அற்புத தவம் செய்திருக்கிறேன் இப்படியொருத்தியை மனைவியாகப் பெற என்று தினம் ஒரு தடவையாவது அவனை நினைக்க வைத்திருக்கிறாள். 

சாதாரண மனிதர்களிடம் அவ்வளவாகக் காணமுடியாத அவ்வளவு குணங்களையும் கூடவே வாழுகிற ஒருத்தியிடம் கண்டபோது… அவன் பிரமிப்பின் உச்சத்துக்கே போனான். உணர்ச்சிவசப்படாமல், எதையும் சரியான கோணத்தில் எடுத்துக் கொள்ளக்கூடிய முதிர்ச்சியான மனநிலை கொண்டவள் என்பது புரிந்த மாத்திரத்தில்… மோனாவைப் பற்றிச் சொல்லிவிட்டான். 

மோனா! நண்பனின் தங்கை. வடநாட்டுக் குடும்பம். மெழுகுச்சிலை மாதிரி தகதகவென்று சிரித்த முகத்துடன் இருந்த தேவதையிடம் மனதைப் பறிகொடுத்ததை, கொஞ்சம் கொஞ்சமாக அவளும் இளகி, அவன் மேல் மையல்கொண்டதை, மிகக் கடுமையான எதிர்ப்பு இருபக்கமும் கொழுந்துவிட்டு எரிந்ததை, எதிர்நோக்க தைரியமில்லாமல் இரண்டு வருடக் காதலைக் காவுகொடுத்ததை முகமெல்லாம் ஜிவுஜிவுக்க அவன் சொல்லி முடித்தபோது, ஜோதி ஜில்லென்று ரோஸ் மில்க் ஒரு டம்ளர் கொண்டு வந்து நீட்டி மனதையும் நெஞ்சையும் குளுமைப்படுத்தினாள். 

“ஜோதி… நல்… நல்லா இருக்காளா..?” – சபாபதி மிருதுவாகக் கேட்டான். 

“ம்… நல்லா இருக்கா… இப்போ நீங்க எதுக்காக வந்திருக்கீங்க?” என்றான் அவன் சுற்றிலும் ஒரு தடவை பார்த்தவாறு. 

“சொல்றேன்… அதுக்கு முன்னால் இதெல்லாம் ஒரு தடவை…” – அவன் ஃபைலைப் பிரித்து நீட்டினான். 

“என்னது…?” அஷோக் மேலோட்டமாகப் பார்த்தான். 

இதய நோயாளியா அவன்? ஒரு தடவை பைபாஸ் சர்ஜரி… பேஸ் மேக்கர் பொருத்தப்பட்டது… காலில் நடந்த ஆபரேஷன் கோளாறு… 

“செகண்ட் இயர் படிக்கும்போது தான் சாதாரண நெஞ்சுவலி பயங்கரமாச்சு… மிஞ்சிப்போனா பதினஞ்சு வருஷங்கள் தாக்குப்பிடிக்கலாம்னு டாக்டர்கள் சொன்னதால ஜோதியை விட்டு ஓடினேன்… இப்போ ரெண்டு மாசமா புதுப் பிரச்னை… ரெண்டு கிட்னியும் பழுதாயிடுச்சு… ரொம்ப ஓரத்துக்கு வந்துட்டோம்னு புரிஞ்சுடுச்சு… ஒரே ஒரு ஆசை… ஜோதியைப் பாக்கணும்… மன்னிப்புக் கேக்கணும்னெல்லாம்… வேணாம்… பேராசை வேணாம்… தள்ளி நின்னு ஒரே ஒரு தடவை பாத்துட்டுப் போயிடறேன் சார்… ப்ளீஸ்…” – அவன் தொண்டையில் கபம் கட்டியிருப்பது கர்புர் என்கிற சத்தத்தில் தெரிந்தது. 

என்ன சொல்கிறான் இவன்? ஜோதியைப் பார்க்க வேண்டுமா? சாகும் தருணத்திலா? அழகான ராகம் மாதிரி சிரித்த முகத்துடன் வளைய வந்து தினம் ஒரு புதுச்சமையல், தினம் ஒரு ஹேர்ஸ்டைல், தினம் ஒரு ஜோக் என்று வண்ணங்களை வாரியிறைக்கும் வானவில்லாக இருக்கும் அவள் முன்னால் போய் இவன் நின்றால்… பழைய நினைவுகளை வேண்டுமென்றே குத்திக்கிளறியது போலிருக்காதா? தேவையா இதெல்லாம்? பஞ்சால் துடைத்த மாதிரி தெளிவாக இருக்கும் அவள், இவன் வருகைக்குப் பின் குழம்பிய மழைக்கால குட்டையாகிவிடுவாள். வண்டாகக் குடையத்தொடங்கும் வலியிலிருந்து மீள முடியாமல்… நடைமுறை வாழ்க்கையிலும் ஒட்டமுடியாமல்… கடைசியில் தான்தான் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவோம்! 

நோ.. நோ… தினசரி சொர்க்கத்தை எந்த மடையனாவது தினசரி நரகமாக மாற்றிக்கொள்வானா? 

“ராத்திரி பதினோரு மணிக்கு ட்ரெயின்… கோழிக்கோட்டுல என் சிஸ்டர் இருக்கா… கடைசி நாட்களை அங்க கழிக்கலாம்னு இருக்கேன்… ஒரு ஏழு மணிக்கு ஜோதியை சென்ட்ரல் ஸ்டேஷனுக்கோ, இல்லே ஏதாவது ஒரு இடம் – நீங்க சொல்றபடிதான் கூட்டிக்கிட்டு வரமுடியுமா? ப்ளீஸ்…” என்று கெஞ்சினான் சபாபதி. 

“வரம்பு மீறிப்போறேனா..? தப்புதான் சார்… ஏதோ உங்க முகத்தைப் பார்த்தா அப்படி கேட்கணும்னு தோணிச்சு… சொல்லுங்க சார்… ப்ளீஸ்…” 

“எத்தனை மணிக்கு?” 

“ஏழு… ஏழேகால்…” 

“எட்டாம் நம்பர் ப்ளாட்ஃபார்ம்ல நிக்கலாமா?” 

“நெஜமாவா சார்..?” 

சபாபதியின் முகத்தில் தெரிந்த பிரகாசம் நோயின் கொடுமையையும் மீறி அழகாக்கிக் காட்டியது. அவன் கைகூப்பிய படி எழுந்தான். மெள்ள சுவரைப் பிடித்தபடி நடந்தான். 

கண்ணைவிட்டு அவன் மறைகிற வரை காத்திருந்துவிட்டு அஷோக் எழுந்து உள்ளே வந்தான். 

வண்டிச் சாவி, டிபன் காரியர், பேனா எடுத்துக்கொண்டு கிளம்பியபோது ஆபீஸ் மானேஜர் எதிரில் வந்தார். 

“என்னப்பா… பர்மிஷனா..? என்ன மனைவிகூட சினிமாவா?” என்று சிரித்தார். 

“ஆமா சார்…” 

“வாசல்லயே நாலு முழம் பத்து ரூபாய்னு வந்தாச்சுப்பா மல்லிப்பூ… வாங்கிட்டுப் போ…” 

“சரி, சார்…” 

நாலு முழம் பூவும் கால் கிலோ பால்கோவாவும் வாங்கிக்கொண்டான். 

ஜி.ஹெச். வழியாக ரவுண்ட் அடித்துக் கிளம்பியபோது சபாபதியின் நினைவு வந்தது. சாகிற சமயத்தில் நல்ல ஆசை… வாழ்கிற வீட்டில் கல்லெறிந்து பார்க்கிற ஆசை… போகிற நேரம் வந்தால் போய்ச் சேர வேண்டியது தானே? 

எதற்காக பழைய நினைவுகளைப் புதுப்பிக்கிற வேலை? 

தேவி காம்ப்ளெக்ஸில் நுழைந்தான். சாயங்கால ஷோவுக்குக் கிடைத்த படத்துக்கு டிக்கெட் வாங்கிக் கொண்டான். திரும்பி வரும் போது மதுராவில் பாம்பே மீல்ஸ் சாப்பிடவேண்டும் என்று நினைத்தபடி வீட்டுக்கு வந்தபோது, வண்டிச் சத்தம் கேட்டு ஜோதி ஓடிவந்தாள். 

“ஸ்வீட் சஸ்பென்ஸ் ஒண்ணு வெச்சிருக்கேன் ஒங்களுக்கு…தெரியுமா?” என்றாள் புன்னகையுடன், அடிக்குரலில். 

“தெரியுமே..” என்றபடி ஸ்டாண்ட் போட்டான்.

“எப்படி..? எப்படி..?” 

“ஜவ்வரிசி வடை… பன்னீர் போண்டா… இப்படி ஏதாவது பண்ணியிருப்பே…?” 

“இல்லையே…” 

“பின்னே?” என்றான் பொட்டலங்களை நீட்டியபடி. 

“மோனா வந்திருக்கா…” 

என்னது…அவன் நெஞ்சம் நின்றுவிட்டுத் துடித்தது. 

“சர்ப்ரைஸா இருக்கில்லே..? எனக்கும்தான்… காலிங்பெல் அடிச்சதும் போய் பாத்தா… இவ நிக்கறா…நான்தான் போட்டோல பாத்திருக்கேனே.. இந்தப் பக்கமா ஏதோ செமினார்க்காக வந்தாளாம்… அட்ரஸ் கைல இருந்ததாம்… ஒரு விசிட் அடிக்கலாம்னு வந்துட்டாளாம்… போகணும் போகணும்னு மூணு மணில இருந்து பறந்துக்கிட்டிருக்கா… அவர் வரட்டும்… நாலு வார்த்தை பேசிட்டுப் போகலாம்னு கட்டாயப் படுத்தி உக்கார வெச்சிருக்கேன்… க்விக்… க்விக்…” – ஜோதி தேன்சிட்டுப் போல உள்ளே ஓடி உடனே திரும்பி வந்து, “ஸோ பியூட்டிஃபுல்… பேச்சும் அழகு… ஆளும் அழகு… பாவம் நீங்க… லைஃப்ல பெரிய இழப்பு உங்களுக்கு…” என்று கிசுகிசுத்துவிட்டு ஓடினாள். 

அவன் சட்டையில் தொப்பென்று எதுவோ விழுந்தது.

வேப்பமரக்கிளையிலிருந்து காகம் ஒன்று அசிங்கம் செய்துவிட்டுப் பறந்தது.

– 27.2.2000, ஆனந்த விகடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *