வேலி தாண்டிய காதல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: May 16, 2026
பார்வையிட்டோர்: 46 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

மாரி ஒரு விவசாயி. தினமும் காலை ஆறு மணிக்கு எழுந்து, மாடு ஆடுகளை அழைத்துக்கொண்டு தன் நிலத்திற்கு செல்வான். வேலைகளை முடித்துவிட்டு, மாலையில் அவைகளை ஓட்டிக்கொண்டு வீடு திரும்புவது அவன் வழக்கம்.

பக்கத்து கிராமத்துப் பெண் மலர். அங்குள்ள ஏரிக்கு துணி துவைக்க வருவாள்.

ஒருநாள் மாரியின் ஒரு ஆடு வழி தவறிப் போய்விட்டது. தேடி அலைந்துகொண்டிருந்தான். மலரின் கையில் அந்த ஆடு அகப்பட, தேடி

வந்த மாரியின் கையில் ஒப்படைத்தாள். ஆட்டை ஓட்டிக்கொண்டு மனசை அவளிடமே விட்டுவிட்டு வந்தான்.

ஒருமுறை வேலை விஷயமாக வெளியூர் சென்றான். திரும்பி வரும்போது அவளுக்காக வளையல் வாங்கி வந்தான். மறுநாள் ஏரியில் அவளைச் சந்தித்துக் கொடுத்துவிடலாம் என்று மனதிற்குள் ஆயிரம் முறை ஒத்திகை பார்த்தான். ஆனால் நேரில் மலர் என்ற மூன்று எழுத்தில் ‘ம’ என்று சொல்லக்கூட வாய் வரவில்லை.

பிறகு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவளுக்கு முன் போய் நின்றான்.

“என்ன வேணும்?” என்று கேட்டாள் மலர்.

பையில் இருந்து வளையலை எடுத்து அவள் கையில் கொடுத்தான்.

“என்ன இது?” என்றாள்.

“வளையல்” என்றான்.

“அது எனக்குத் தெரியாதா?” என்று சிரித்தாள் மலர். “நீதானே கேட்ட ‘இது என்னன்னு’? அதான் சொன்னேன்.”

“அது சரி, இப்படியெல்லாம் கூட நீ பேசுவியா?” என்று கேட்டாள்.

“என்னப் பாத்தா ஊமை மாதிரி இருக்கா?” என்றான்.

“உன் ஆட்டை மட்டும் நான் அன்னைக்கு தூக்கலன்னா, நீ எனக்கு வளையல் வாங்கிக் குடுத்திருக்க மாட்டேல்ல?” என்றாள் மலர்.

“அடிப்பாவி! நீயா இந்த வேலை பாத்த?”

“ஆமா. பின்ன நீயா வந்து பேசுவன்னு நானும் எவ்ளோ மாசம் காத்திருக்கிறது? அதான் தூக்கிட்டேன்” என்றாள்.

“அடி கள்ளி…”

“ஆமாடா கள்ளிதான்” என அவனை இடித்துவிட்டுச் சென்றாள்.

இப்படி இவர்களின் காதல் ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்க, இந்த கிராமத்துத் தலைவருக்கும் அந்த கிராமத்துத் தலைவருக்கும் இடையில் தகராறு வந்தது.

“உன் ஊருக்குள் என் ஊர் மக்கள் வரக்கூடாது. என் ஊருக்குள் உன் ஊர் மக்கள் வரக்கூடாது. ஏரித் தண்ணியையும் பயன்படுத்தக் கூடாது” என்று உத்தரவு போட்டார்கள்.

மலர் இங்கும் மாரி அங்கும் மாட்டிக்கொள்ள, என்ன செய்வதென்று தெரியாமல் இருவரும் தவித்தனர்.

அதற்குள் மலருக்குக் கல்யாணம் ஏற்பாடு செய்துவிட்டதாக மாரிக்குத் தகவல் வந்தது.

அம்மாவிடம் சொன்னான். “மாரி, வேலியத் தாண்டுனா பிரச்சனை ஆகும். வேணாம்டா” என்றாள் அம்மா.

“அவள என்னால விட முடியாதுமா. என்ன ஆனாலும் இன்னைக்கு நான் அவளப் பாத்துப் பேசணும்” என்று சொல்லிவிட்டு, இரவோடு இரவாக வேலியைத் தாண்டிக் குதித்தான்.

அவளின் வீட்டை அடைந்து, ஜன்னல் வழியே ஒரு சிறு கல்லை அவள் மேல் போட்டான். அவள் எழுந்தாள். அவனைக் கண்டு அதிர்ந்தாள்.

“டேய்! நீ ஏன்டா இங்க வந்த? ஊர்க்காரங்க பாத்தா பிரச்சனை ஆயிடும். போ” என்றாள்.

“நீ வெளிய வா முதல்ல” என்றான்.

இருவரும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த மரத்தின் கீழ் நின்று பேசினர்.

“என்னடி, அப்படியே விட்டுட்டுப் போயிடலாம்னு நினைச்சியா?” என்றான்.

“லூசாடா நீ? நீ என் உயிர். உன்னை விட்டா நான் செத்துருவேன். இப்போதான் வீட்டுல பேசியிருக்காங்க. நான் பேசிப் பாக்குறேன். ஏத்துக்கலைன்னா ஓடி வந்துருவேன்” என்றாள்.

அவளை இறுகக் கட்டிப்பிடித்துக்கொண்டான்.

அப்போது ஊரில் ஒருவன் இவர்களைப் பார்த்துவிட்டான். “அந்த கிராமத்தைச் சேர்ந்தவன் நம்ம ஊருக்கு வந்துட்டான்! வாங்கடா!” என்று கத்த, அனைவரும் ஓடி வந்தனர். மாரியை அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

மலர் கத்திக் கதறியும் யாரும் கேட்கவில்லை. இரண்டு ஊர்த் தலைவர்களும் வந்து சேர்ந்தனர். ஏன் வந்தான் என்று விசாரித்தனர். மாரி, மலரை விரும்புவதைச் சொன்னான்.

“முன்னாடி மாதிரி இல்ல இப்போ, தான் மாறிருச்சு! ஒழுங்கா அவள மறந்துடு” என்றான் மலரின் ஊர்த் தலைவன்.

ரத்தம் வழிய நின்ற மாரி நிமிர்ந்தான். “உங்களுக்குள்ள பிரச்சனைன்னா நாங்க ரெண்டு ஊரு மக்களும் என்ன தப்பு பண்ணோம்? உங்க அரசியலை ஏன் எங்க மேலயும், இந்த மண்ணு மேலயும் பயன்படுத்துறீங்க? நீங்க ஒண்ணா இருந்தா நாங்களும் இருக்கணும். நீங்க அடிச்சுக்கிட்டா நாங்களும் அடிச்சுக்கணும். நீங்க நல்லாத்தான் இருப்பீங்க. உங்களால நாங்கதான் ரெண்டு பட்டுக் கிடக்கிறோம். எப்பதான் இந்தப் பழக்கத்தை விடுவீங்க?” என்று கேட்டான்.

அந்த ஒரு கேள்வியில் ஊரே மௌனமானது. தலைவர்கள் தலைகுனிந்தார்கள்.

அன்று கம்பி வேலி அறுந்தது. மலரின் கழுத்தில் தாலி ஏறியது. இரண்டு கிராமமும் சேரவில்லை. இரண்டு மனசு சேர்ந்தது.

வரைபடத்தில் இருந்த கோட்டை அழிக்க முடியவில்லை. ஆனால் மாரியும் மலரும் சேர்ந்து ஒரு புது தேசம் படைத்தார்கள். அதன் பெயர் காதல்.

அந்த ஆறு மட்டும் எல்லை பார்க்காமல், சத்தமில்லாமல் ஓடிக்கொண்டே இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *