உறுப்புகளைத் தேடி…
கதையாசிரியர்: காரை ஆடலரசன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: June 14, 2026
பார்வையிட்டோர்: 139
(2022ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12
அத்தியாயம் – 7

“தம்பி உட்காருங்க…” என்றார்.
பரிதாபமாக இருந்த மர நாற்காலியில் அமர்ந்தான்.
அவரும் அப்படி ஒரு நாற்காலியில் அமர்ந்தார்.
” தம்பி சாயா…?” உபசரிப்பின் பொருட்டு மெல்ல சொன்னார்.
“வேணாம் சார்…”
“பரவாயில்லே குடிங்க. இது பீவி மனைவி. அவள் மும்தாஜ் மகள்.” இருவரையும் அறிமுகப்படுத்தினார்.
பீவி நடந்து அடுப்படிக்குள் சென்றாள். மகளும் அவளுடன் சென்றாள்.
“மும்தாஜ் இங்கே இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரியில் கடைசி ஆண்டு படிக்கிறாள்.”
ஹரிஸ் கண்களைச் சுழலவிட்டான்.
“ஷாகுல் எங்கே…?” – கேட்டான்.
“சொல்றேன்! நீங்க எதுக்காக அவனைத் தேடி வந்திருக்கீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா..?” ஏறிட்டார்.
“அவர் கண்ணு விசயமா நான் அவரைப் பார்க்கனும்..”
“புரியலை..?!”
“தம்பி சாயா குடிங்க.” பீவி பீங்கான் கோப்பையை ஆவி பறக்க நீட்டினாள்.
என்ன டீ தூளோ..! மணமே குணமாய் இருந்தது.
வாங்கி அருந்தினான்.
தாயும் மகளும் மறைந்து உட்கார இடம் இல்லை என்பதால் ஒரு ஓரம் ஒதுங்கி அமர்ந்தார்கள்.
“உங்க மகன் ஷாகுலுக்குப் பத்து வருசத்துக்கு முன் கண் ஆபரேஷன் நடந்ததுன்னு நினைக்கிறேன்…?”
“ஆமாம். மாற்றுக் கண் பொறுத்தினாங்க…”
“அந்தக் கண் என் அண்ணன் கண்!” சொல்லி விபரம் சொன்னான்.
கணவன், மனைவி, மகள் மூவரும் வெகு நேரம் உறைந்து அமர்ந்திருந்தார்கள்.
“இது உங்க சொந்த வீடா..?” – அவர்களைக் கலைத்தான்.
“ஆமா…” முகமது ஆரிபு தலையசைத்தார்.
“ஷாகுலுக்குக் கண் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய காரணம்…?” ஹரிஸ் அவரைப் பார்த்தான்.
“எங்களுக்குக் கோரைப்பாய் நெய்து விக்கிற தொழில். அது சம்பந்தமா வயலில் கோரை அறுக்கும்போது அது கருவிழியில் குத்தி பழுதாய்ப் போய் பார்வைப் போயிடுச்சு.. உங்க தானத்தாலும், டாக்டர் உபயத்தாலும், அரசு மருத்துவக் காப்பீடு தயவாலும் கண் வந்துடுச்சு.” சொன்னார்.
“இப்போ ஷாகுல் பார்வை பிரச்சனை இல்லாமல் நல்லா இருக்காரா..?”
“பா… பார்வை பிரச்சனை இல்லே. ஆனா ஆள்தான் சரி இல்லே…” முகமது ஆரிபு குரல் கம்மியது.
“ஏன்..? என்னாச்சு..?”
“சி…சிறையில் இருக்கான்…” துக்கம் தொண்டையை அடைத்தது.
“எந்த சிறையில்?”
“வேலூர்”
“ஏன்…??…”
“ஏழைகளை முன்னேற்றுகிறோம், அவர்கள் வருவாய் பெருக்க வழி வகுக்கிறோம்ன்னு சொல்லி சொல்லியே ஆட்சிக்கு வரும் அரசியல்வாதிகள் எல்லாம் மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளையடித்து கொழுத்துப் போறாங்க தம்பி. அவர்கள் கொள்ளையடித்ததை நிமிர்த்த வரி மேல் வரி விதித்து மக்களை நிமிர முடியாமல் சாகடிக்கிறாங்க.. இந்தக் கொடுமையைப் பார்த்து பையன் பாதை மாறிட்டான்.” என்றார்.
“என்ன தீவிரவாதியாய் மாறிட்டாரா..?” என்றான்.
“இல்லே. ஏழ்மையின் கொடுமை. திருடனாய் மாறிட்டான்!”
“என்ன சார் சொல்றீங்க..?” திடுக்கிட்டான்.
“இந்த வீட்டை முன்னேத்தறேன். தங்கைக்கு நல்ல இடத்துல நிக்காஹ் முடிக்கிறேன்னு அப்படி ஆகிட்டான். எங்களுக்கு விபரம் தெரியாது. ஆளைக் கைது செய்து அழைத்து செல்லும்போதுதான் சேதி தெரியும்.”
“நாலு வருசத்துக்கு முன் நடந்த நகைக்கடைக கொள்ளையில் இவனும் கூட்டாம். ஏழு வருசம் சிறை. தீர்ப்பாகிடுச்சு. வருசம் ஒண்ணாகிடுச்சு.”
கடை சுவற்றைக் குடைந்து ஓட்டைப் போட்டு நகைகள் கொள்ளை! அப்போதைய தொலைக்காட்சி செய்திகள். இவன் கண் முன் வந்து போனது.
“கொள்ளைக் கும்பல் சுவத்துல ஓட்டைப் போட்டு விபரம் புரியாத இவனைத்தான் முகத்துல குரங்கு குல்லாய் போட்டு உள்ளே அனுப்பி உள்ளே இருக்கிற கண்காணிப்பு கேமராவை எல்லாம் மறைக்கச் சொல்லி இருக்கு. இவன் ஒன்னை விட்டுட்டான். ஒட்டு மொத்தப் பயல்களும் அடித்த நகை பணத்தைக் கொஞ்சம்கூட அனுபவிக்காமல் அப்படியே மாட்டிக்கிட்டானுங்க. கம்பி எண்ணுறானுங்க.”
“…”
“ஷாகுல் வெளியே வந்தாலும் ஆபத்து. உயிருக்கு உத்திரவாதமில்லே!” பெருமூச்சு விட்டார்.
“என்ன சார் சொல்றீங்க..?!” திடுக்கிட்டான்.
“இவனாலத்தான் மொத்த பேரும் மாட்டிக்கிட்டான்னு வெளியே இருக்கிற அவனுங்களைச் சார்ந்த ரௌடிக் கும்பல் கர்வம் கட்டி அலையுது. போட்டுத் தள்ளிடுவாங்க…” கலங்கினார்.
‘என்ன சொல்ல..?’ ஹரிஸ் மௌனமாக இருந்தான்.
“பையனைக் குருடாகவே விட்டிருக்கலாம். கண் கொடுத்து காப்பாத்தினது தப்பாய் போச்சு!” விம்மினார்.
கேட்க கஷ்டமாக இருந்தது.
“அழாதீங்க வாப்பா” என்றாள் மும்தாஜ் .
“அவனுக்கு உன்னை நல்ல இடத்துல நிக்காஹ் முடிக்க ஆசை. பெரிய பணக்காரனாகனும்ன்னு கனவு. அதான் சேராத இடத்தில் சேர்ந்து சிறையில் இருக்கான். விடுதலையாகியும் பிரயோஜமில்லையே…” அழுதார்.
“அழாதீங்க சார். காலம் நிறைய இருக்கு. அப்படியெல்லாம் எதுவும் நடக்காது. ஷாகுல் சிறையிலிருந்து நல்லவனாய்த் திரும்பி வருவார்.” ஹரிஸ் அவரை தேற்றினான்.
“நல்லவனாய் வந்தாலும் அவன் நினைச்சது நடக்காது தம்பி. பெரிய பெரிய பணக்காரன், அரசியல்வாதிகள்தான் கொலை, கொள்ளை, பெண் சமாச்சாரம், லஞ்சம், சொத்துக் குவிப்புன்னு எத்தனை முறை சிறைக்குப் போய் திரும்பினாலும் தன்னைப் பணத்தால் மொழுகிட்டு மான அவமானமில்லாமல் பளபளப்பாய்த் திரிவானுங்க. அவனுங்களுக்கும் பலபேர்கள் பல்லிளிப்பனுங்க, வெட்கம் கேட்ட சங்கிகள் வாழ்க கோஷம் போடுவானுங்க. கால் பிடிப்பானுங்க. சாதாரண ஒருத்தன் ஒருதடவை சிறைக்குப் போனாலே சமுதாயம் அவனைக் குற்றவாளியாய்த்தான் பார்க்கும். போலீசும் அவனை சும்மா விடாது எங்கே குற்றம் நடந்தாலும் இவனை அள்ளிப்போகும்!” என்றார்.
‘ஆள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்!’ நினைக்க வருத்தமாக இருந்தது.
பெற்ற மகன் வருத்தம் வராமல் என்ன செய்யும்…?
“விடுங்க ஐயா” சொன்னான்.
பெரியவர் ஆசுவாசப்பட்டார்.
“ஐயா! ஷாகுலை நான் சிறையில் பார்க்கலாமா..?” கேட்டான்.
“இதுக்காக நீங்க வேலூருக்கெல்லாம் போய் சிரமப்படவேணாம். இதோ சுவரில் தொங்கறான் பார்த்துக்கோங்க” காட்டினார்.
‘இறைவனிடம் கை ஏந்துங்கள்!’ என்கிற பாணியில் 25 இளைஞன் மார்பளவு படத்தில் இருந்தான்.
“இங்கே வந்ததுக்கு அடையாளமாய் இந்த போட்டோ முன்னிலையில் நாம எல்லாரும் ஒரு செல்பி எடுத்துக்கலாம்! அம்மாவிடம் காட்டனும்.” சொன்னான்.
எல்லாரும் மறுப்பேதும் சொல்லாமல் ஷாகுல் புகைப்படம் முன் நின்றார்கள்.
ஹரிஸ் அவர்களோடு செல்பி எடுத்தான்.
“அம்மா, என் கைபேசி எண்கள் தர்றேன். அப்புறமாய்ப் பேசுங்கள்” என்றான்.
“சரி” என்ற மும்தாஜ் அருகே மேசை மீது இருந்த தன் கைபேசியை எடுத்து ஹரிசைப் பார்த்தாள்
“சொல்லுங்க…?” சொன்னாள்.
ஹரிஸ் சொன்னான்.
அத்தியாயம் – 8
ஹரிஸ் தூத்துக்குடியை நோக்கி கிழக்குக் கடற்கரைச் சாலையில் காரைச் செலுத்தினான்.
இரு வழி சாலை என்றாலும் மேடு பள்ளம், குண்டு குழி, ஒட்டு வேலைகள் இல்லாமல் நன்றாகவே இருந்தது. அதே சமயம் அதிக போக்குவரத்து குடியிருப்புகள் இல்லாததினால் சாலை வெறிச்சென்று இருந்தது.
சிறிது நேரத்திலேயே கைபேசி ஒலித்தது.
‘அம்மா’
காரின் கணனித் திரையைத் திரையைத் தொட்டு இணைப்புக் கொடுத்தான்.
“சொல்லும்மா..?”
“நாகூர் போனீயா..?”
“முடித்து தூத்துக்குடி போறேன்.”
“பேரென்ன… ஷாகுலா..? பையன் எப்படி இருக்கான்?”
“…ம்… நல்லா இருக்கார்…”
“பேசுனீயா..? செல்பி எடுத்தியா…?”
“எல்லாம் செய்தேன்…!”
“எனக்கு ஏன் தகவல் சொல்லலை..?”
“தூத்துக்குடி போய் அறையில் தங்கி சொல்லலாம்ன்னு நெனைச்சேன்.”
“சரி. இப்போ அந்த செல்பியை அனுப்பேன். நான் அந்த குடும்பத்தைப் பார்க்கிறேன்.”
“அனுப்பறேன். பையன் புகைப்படத்தில் இருக்கான் பார்த்துக்கோ. விபரம் அப்புறம் சொல்றேன்.”
“ஏன்… ஆள் உயிரோடு இல்லையா..?”
“இருக்கான்.”
“வீட்ல இல்லையா…?”
“ஆமா..” சொன்னான்.
“எங்கே..?”
‘உண்மையைச் சொன்னால் அம்மாவிற்கு உடன் வருத்தம் வரும். இது தேவை இல்லாத மனக்கசப்பு, கஷ்டம் தோன்றும். தனியாளாய் இருப்பவள் வேலைகள் பாதிக்கும். வீடு சென்று ஆற அமர அமைதியாகச் சொல்லி தணிக்கலாம்!’ தோன்றியது.
“என்ன ஹரிஸ் பேச்சைக் காணோம்..?”
“வண்டி ஒட்டிக்கிட்டே பேசறேன்ம்மா…”
“தப்பு. நிறுத்திப் பேசு. இல்லே.. நான் நிறுத்தறேன்.”
“வேணாம். நான் நிறுத்திப் பேசறேன்.” சொல்லி காரை ஓரம் கட்டி நிறுத்தினான்.
“சொல்லு..?” என்றான்.
“பையன் எங்கே..?”
“துபாய்ல வேலை செய்றான். திரும்ப அஞ்சு வருசம் ஆகும். வந்ததும் பேசச்சொல்லி நம்ம ரெண்டு பேரோட கைபேசி எண்களையும் கொடுத்துவிட்டு வந்திருக்கேன்”. அஷ்டலட்சுமி அடுத்து ஏதும் கேள்விகள் கேட்காதிருக்க அடைவாய் பதில் சொன்னான் ஹரிஸ் .
“ஓ..! சரி. அந்த செல்பியை அனுப்பு” சொல்லி அணைத்தாள்.
அனுப்பிவிட்டு பயணத்தைத் தொடர்ந்தான்.
ஹரிசுக்கு மீண்டும் தூத்துக்குடி ஞாபகம் வந்தது.
அருமையான நகரம். இயற்கைத் துறைமுகம். பாண்டிய தலைநகரம். முத்துக் குளியல் இடம். ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர், போர்த்துக்கீசியர்கள் என அனைத்து வெளிநாட்டவர்களும் வணிக சம்பந்தமாக உலவிய பூமி.
முக்கியமாக ஆங்கிலேயருக்கு எதிராக சுதந்திரப் போராட்டத் தியாகி தீரர் வ.உ. சிதம்பரனார் தூத்துக்குடிக்கும் இலங்கைக்குமாய் கப்பலோட்டி தன் சொத்துக்களை எல்லாம் இழந்து சிறை சென்று செக்கிழுத்து சிரமப்பட்டவர் உருண்டு புரண்டவர் பூமி. – நினைக்கவே சிலிர்த்தது.
அப்படிப்பட்டவர் இன்றைக்கிருந்தால்… பைத்தியக்காரர், பிழைக்கத் தெரியாத மனிதர்!
ஆட்சிக்கு வருபவர்க்கெல்லாம் கோடி கொடியாய்க் கொள்ளையடித்து தங்கள் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ளும்போது…இவர் மட்டும் நாட்டுக்காக மக்களுக்காக சொத்துக்களை விற்று ஓட்டாண்டியானால் பைத்தியக்காரர்,
பிழைக்கத் தெரியாதவர் தானே..?!
ஹரிஸ் தான் வர வேண்டிய இடத்தில் காரை நிறுத்தினான்.
வீடு பகட்டு படாடோபமாக இல்லாவிட்டாலும் ‘இருப்பவர்’ இருக்கும் இடம் போலிருந்தது.
அழைப்பு மணி அழுத்தினான்.
வேலைக்காரப் பெண்மணி கதவைத் திறந்து கொண்டு வெளி வந்தாள்.
“யாரைப் பார்க்கனும்..?” கேட்டாள்.
சொன்னான்.
“சார் அலுவலகம் போயிருக்காங்க….”
“எந்த அலுவலகம்..?”
“துறை முகத்தில் என்ஜினீயராய் இருக்காங்க…”
“வீட்ல யார் இருக்கா..?”
“ஏன் கேட்குறீங்க..?”
“நான் ஐயாவைப் பார்க்கனும்.”
“அவரைப் பார்க்கிறதாய் இருந்தால் அங்கெ போய் பாருங்க. இங்கே அம்மா மட்டும்தான் இருக்காங்க.”
“புள்ளைங்க…?”
“அந்தக் கேள்வியெல்லாம் உங்களுக்கெதுக்கு..? ரெண்டு ஆம்பளைப் புள்ளைங்களும் குடியும் குடித்தனமுமாய் அமெரிக்காவுல இருக்காங்க…”
“ஐயா கை பேசி எண் கொடுங்க. நான் பேசி சந்திக்கிறேன்.”
“அதெல்லாம் தரமுடியாது. துறைமுகத்தில் போய் ஐயா பெயரைச் சொன்னாலே இடத்தைக் காட்டுவாங்க.”
“உங்க பெயர்..?”
“சொல்லமாட்டேன். ராகினி!”
“நன்றி!” சொல்லி திரும்பினான்.
‘சொல்ல மாட்டேன்! சொல்லமாட்டேன்!’ – என்று எல்லாம் சொன்ன விசித்திர பெண்! உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு காரில் ஏறினான்.
ராகினி சொன்னதுபோல் தடுத்து நிறுத்தப்பட்ட துறைமுக வாயிலிலியே ஆள் பெயரைச் சொன்னதும் வழி விட்டார்கள்.
“அதோ அந்தக் கட்டிடம் சார். ரெண்டாவது மாடி. மூன்றாம் நம்பர் அறை.” இடத்தையும் சுட்டிக்காட்டிச் சொன்னார்கள்.
ஹரிஸ் காரை நிறுத்திவிட்டு படி ஏறினான்.
மூன்றாம் எண் அறையைத் தொட்டான்.
கதவு சாத்தி இருந்தது.
சந்திரசேகரன் B.E. தலைமைப் பொறியாளர் எழுத்துக்கள் பளபளவென்று மின்னியது காவலாளியாய்க் கடைநிலை ஊழியன்.
“ஐயாவைப் பார்க்கனும்.”
“கொஞ்சம் இருங்க. உள்ளே ஆள் இருக்காங்க. அவுங்க வெளி வந்ததும் நீங்க போகலாம்.”
ஹரிஸ் பார்வையாளர்களுக்கென்று போடப்பட்டிருந்த அருகிலிருந்த சோபாவில் அமர்ந்தான்.
‘தன் அண்ணன் வினயன் உடலுறுப்பு ஒன்று எவ்வளவு பெரிய அதிகாரிக்குள் உயிராய் இருந்து உயிர் வாழ வைக்கிறது!’ – நினைக்க சிலிர்ப்பு வந்தது.
அத்தியாயம் – 9
உள்ளே இருந்தவர் வெளிவந்ததும் ஹரிஸ் அறைக்குள் நுழைந்தான்.
ஒரு பெரிய அதிகாரிக்கென்றே அலங்கரிக்கப்பட்ட அறை. சுவர் முழுவதும் எவரையும் உறுத்தாத, வருத்தாத வர்ண பூச்சு. சன்னல், கதவுகளில் ஆடம்பரத் திரைச்சீலைகள். உள்ளே ஓய்வெடுக்க தனி அறை. வந்தவர்கள் அமர ஆடம்பர சோபாக்கள், தரை விரிப்புகள்.
50 வயதில் அவரும் ஒரு அதிகாரிக்கே உரிய முகக்களையில் எடுப்பு தொடுப்பாய் இருந்தார்.
“உட்காருங்க…” சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி எதிர் நாற்காலியைக் காட்டினார் சந்திரசேகரன்.
அமர்ந்தான்.
“வந்த விசயத்தைச் சொல்லுங்க..?”
“நான் ஹரிஸ். உங்களை நலம் விசாரிக்க வந்திருக்கேன்.”
“நலம் விசாரிக்கவா..?!” சந்திரசேகரன் நிமிர்ந்து அமர்ந்தார்.
“ஆமாம் சார். நீங்க மதுரை மீனாட்சி பல்நோக்கு மருத்துவமனையில் இந்த வருடம், இத்தனாம் தேதி கிட்னி மாற்று செய்திருக்கீங்க…”
“ஆமாம். அந்த மருத்துவமனையிலிருந்து விசாரிக்க வந்தீங்களா..?”
“இல்லே சார். உங்களுக்கு கிட்னி கொடுத்தவர் என் அண்ணன்!”
“அப்படியா.??!” துணுக்குற்றார்.
“ஆமாம் சார். அண்ணனுக்கு விபத்தில் மூளைச் சாவு. அதனால் உங்களுக்குக் கிட்னி தானம். அம்மாவுக்கு ஆற்றில் போட்டாலும் அளந்து போட ஆசை. தானம் கொடுத்தாலும் பெற்றவர்கள் முகம் தெரியலைன்னாலும் இன்னார் உடலில் என் மகன் இப்படி இருக்கான் என்று நினைக்க ஆசை. அதனால் பிடிவாதம் பிடித்து மருத்துவமனையில் பெற்றவர்கள் முகவரி எல்லாம் வாங்கினாங்க. எனக்கு அவர்களை விசாரிக்க ஆசை. வந்தேன்.” முழு விபரத்தையும் சுருக்கமாகச் சொன்னான்.
“ஓ..! கேட்கவே ஒரு மாதிரியாய் இருக்கே..? எனக்குக் கிட்னி கொடுத்தவரைப் பார்க்கனும் போலிருக்கே..!” சொன்னார்.
“இதுதான் சார். என் அண்ணன் பெயர் வினயன்.” கைபேசியில் உள்ள படத்தைக் காட்டினான்.
கைபேசியை வாங்கி அதையே ஒரு நிமிடம் ஓயாமல் உற்றுப் பார்த்த சந்திரசேகரன்…
“சின்ன வயசு படமாய் இருக்கே..? அண்ணன் எத்தனை வயசுல விபத்து..?” கேட்டார்.
“பட்டப்படிப்பில் மூன்றாம் வருடம்.”
“இவ்வளவு சின்ன வயசு பையனா ஒரு கிட்னியாய் உள்ளே உட்கார்ந்து என்னை வாழ் வைச்சிக்கிட்டிருக்கான்..?!” சிலிர்ப்பாய்ச் சொல்லி பார்த்தார்.
ஹரிஸ் பதில் ஏதும் சொல்லாமல் மௌனமாக இருந்தான்.
“புது அனுபவமாய் இருக்கு. பையனைப் பார்க்கவே புல்லரிக்குது.” தழுதழுத்தார்.
“…”
“அதிலும் நீங்க தேடி பிடித்து வந்தது விசாரிக்கிறது திரில்லா இருக்கு…”
“அந்த ஆபரேசனுக்குப் பிறகு உங்களுக்குத் தொந்தரவு இல்லையே…”
“இல்லைப்பா… நல்லா இருக்கேன். உங்களை பெத்தப் அம்மா அப்பாவுக்கு நானெல்லாம் ரொம்ப நன்றி சொல்லனும்”
“அம்மாவோட பேசுறீங்களா..?”
“கண்டிப்பா பேசறேன்.”
ஹரிஸ் அவரிடம் இருந்த கைபேசியை வாங்கி வாட்சப்பில் தொடர்பு கொண்டான்.
“அம்மா! கிட்னி சந்திரசேகரன்!” சொல்லி அவரிடம் கைப்பேசியைக் கொடுத்தான்.
வாங்கிய அவர்…
“அம்மா! வணக்கம்மா! நன்றிம்மா! உங்களைக் கடவுளாய்ப் பார்க்கிறேன். உங்க மகனை தெய்வமாய் நினைக்கிறேன்” சொன்னார்.
“நன்றி சார். உங்க மூலமா என் மகனைப் பார்க்கிறேன்!” என்றாள் அஷ்டலட்சுமி.
“உண்மை. கடவுளை நேரில் பார்த்தாப்போல இருக்கு. மனசுக்கு நிறைவு சந்தோசமா இருக்கு.”
“போதும் சார். நல்லா இருங்க. ஹரிஸிடம் கைப்பேசியைக் கொடுங்க…” என்றாள்.
கொடுத்தார்.
“போதும் ஹரிஸ். கிளம்பு!” என்றாள்.
“சரிம்மா…” சொல்லி அணைத்தான்.
“நன்றி சார். உங்களோடு ஒரு செல்பி!” என்று சொல்லி எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.
“ஹரிஸ்! உங்களுக்கு வேற உதவி..?” என்றார் சந்திரசேகர்.
“எதுவும் தேவை இல்லே சார்.” என்று அழுத்தம் திருத்தமாக சொல்லி அறையை விட்டு அகன்றான்.
– தொடரும்…
![]() |
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
சங்கர்லால் வந்துவிட்டார்!
தமிழ்வாணன்
June 14, 2026
மகாசூன்யச் சுழல்
வேங்கடேஷ் புருஷோத்தம்
June 14, 2026
அமெரிக்காவில் கிச்சா
கிரேஸி மோகன்
June 14, 2026
