அமெரிக்காவில் கிச்சா
கதையாசிரியர்: கிரேஸி மோகன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
நகைச்சுவை
கதைப்பதிவு: May 25, 2026
பார்வையிட்டோர்: 28
(2006ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9
4

அமெரிக்கன் எம்பஸியில் கிச்சா உட்கார விசா விழுந்த பிறகு, என்னுடைய ‘லீடர்ஷிப்’ பதவிக்குப் போட்டியிடும் அளவுக்கு கிரேஸி கிரியேஷன்ஸ் குழுவினரின் ஏகோபித்த விசுவாசத்துக்குப் பாத்திரமாகிவிட்டான் கிச்சா! ஏர் போர்ட்டுக்கு அவன் இன்னமும் வராததால் காதலிக்காக விரகதாபத்தோடு காத்திருக்கும் சங்க காலக் காதலன் போல ஏக்கத்தில் சூம்பிப்போயிருந்த குழுவினர்கள் சார்பாக, அவர்களில் ஒருவனான ‘அப்பா’ ரமேஷ், ‘கிச்சா நீ வேகமாக வாராய்’ என்று தன்னை யசோதையாக பாவித்த பாலசரஸ்வதி லெவலில் அபிநயித்து கர்ணகடூரமான குரலில் பாடவும் ஆரம்பித்துவிட்டான்.
கிச்சாவின் இந்தத் திடீர் பாப்புலாரிடியால் எனக்குப் பொறாமை வந்தது. இன்னொரு பக்கம், ‘பிளேன்- ஃபோபியா’ பயத்தால் சித்தி கொடுமையில் பாதிக்கப்பட்ட சவலைக் குழந்தைபோல பரிதாபமாக போஸ் கொடுத்துக் கொண்டிருந்த எங்கள் குழுவைச் சேர்ந்த ‘ஏ.ஆர்.எஸ்.’ஸின் நமநம நச்சரிப்பால் எனக்குப் பொறுமை போனது. (இவன் இதுவரை எந்த டி.வி. சீரியலிலும் வராத கன்னிகழியாத ஜூனியர் ஏ.ஆர்.எஸ்.)
சதா சர்வகாலமும் சர்சர்ரென்று விமானங்கள் வந்து போய்க்கொண்டிருக்கும் சர்வதேச ஏர்போர்ட்டுக்கு சமமாக ஏ.ஆர்.எஸ். வீட்டு பாத்ரூமில் நிமிஷத்துக்கு நாலு என்ற விகிதத்தில் கரப்பான்பூச்சிகள் தாழ்வாகப் பறந்துகொண்டிருக்கும். இதனால் பயந்துபோய் குளிப்பதற்குக்கூட போலீஸ் பந்தோபஸ்தை நாடும் அளவுக்கு தொடை, முட்டி, கணுக்கால் பாத நடுங்கியான ஏ.ஆர்.எஸ்., விமானப் பயணத்தைப் பொறுத்தவரையில் கன்னி-சாமி. இதுபோதாதென்று ‘மலையும் மலையைச் சார்ந்த இடங்களும்’ என்று பூகோளப் பாடத்தில் வருவதுபோல ‘விமானமும் விமானத்தைச் சார்ந்த விபரீத விளைவுகளும்’ என்ற தலைப்பில் ஏதோ ஒரு பதிப்பகம் போட்ட புத்தகத்தைப் படித்ததில் ஏ.ஆர்.எஸ். குலைநடுங்கிப் போய்விட்டான். இதனால் ஏற்கெனவே நெர்வஸாக இருந்த ஏ.ஆர்.எஸ்., என்னருகே வந்து பிசிறு தட்டும் குரலில், “மோகன், ஏயோபேன்ல (பயத்தில் ஏரோப்ளேனை மழலையில் உச்சரித்து) மெட்ராஸ்லேருந்து அமெரிக்கா போய்ச்சேர எத்தனை மணி நேரம் ஆகும்?” என்று கேட்க, எப்போதும் கிண்டலடிக்கும் நக்கல்பேர்வழியான சீனு, ஹைஜாக் எதுவும் இல்லேன்னா இருபத்துநாலு மணி நேரத்துல ஒரேடியா போய்ச் சேந்துரலாம்” என்று சொல்ல, மறுநாள் தூக்கிலிடப்போகும் கைதியின் மரணபயம் ஏ.ஆர்.எஸ். முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.
நான் அவனைத் தனியாக அழைத்துச்சென்று தேற்ற நினைத்தேன். அதற்ககுள் ஒரு சத்ரு வந்து ‘இன்ஷூரன்ஸ் செய்துகொள்ளப் பிரியப்படுகிறீர்களா?” என்று கேட்டு வைத்தான். பதறிப்போன ஏ.ஆர்.எஸ்., “எதற்கு?” என்று குரல் நடுங்கக் கேட்க, வந்த சத்ருவும் விவரம் புரியாமல், “ஒருவேளை விமான விபத்தில் நீங்கள் இயற்கை எய்தி அமரராகும் பட்சத்தில்” என்று ஆரம்பித்தார். அவ்வளவுதான் ஏற்கெனவே ஹைஜாக் பயத்தால் நெற்றியில் முத்துமுத்தாக வேர்த்திருந்த ஏ.ஆர்.எஸ்.க்கு., இப்போது பவழம் பவழமாக வேர்க்க ஆரம்பித்தது.
‘சின்னஞ்சிறு உலகம்’ பட நாகேஷ்போல கற்பனையிலேயே பயந்து செத்துக்கொண்டிருக்கும் அவனை ஏர்போர்ட்டுக்குள் அழைத்துச்சென்று அங்கு விமானப் பயணம் செய்ய குஷியாகக் காத்துக்கொண்டிருக்கும் குழந்தைகள் முதல் கிழங்கள் வரை காட்டி தைரியமூட்டினேன். பின் அவனை செக் இன் செய்து பிளேனில் ஏற்றி, அங்கு நாரதர் கொண்டையோடு எதைக் கேட்டாலும் நயம்பட மறுக்கும் ‘ஆகாசவாணிகளான ஏர் ஹோஸ்டஸ்கள் தரிசனத்தால் விமானம் கப்பல் போல மூழ்கும் அளவுக்கு ஜொள்ளு விட வைத்து இவன் மூடை மாற்றலாம் என்றால், இந்தப் பாழாய்ப் போன கிச்சாவை இன்னமும் காணவில்லை.
‘ஒருவேளை பிளேனைப் பிடிக்க எக்மோர் அல்லது சென்ட்ரல் ஸ்டேஷனுக்குப் போய்த்தொலைத்து விட்டானா?’ என்ற கவலையை சற்று ஓவர் ஆக்டிங்காகவே வெளியே காட்டிக்கொண்ட நான், உள்ளூற சந்தோஷத்தில் புளகாங்கிதமடைந்து கொண்டிருந்தேன். ஏர் இந்தியா விமானம் புறப்பட இன்னும் சரியாக ஒரு மணி நேரம்தான் இருக்கிறது. இந்த ஒரு மணி நேரம் கிச்சா வராமல் கடந்துவிட்டால் எச்சுமிப்பாட்டியின் ஆசீர்வாதத்துக்காக விழுந்தபோது என் காலைப் பிடித்துக்கொண்ட கிச்சா அலையஸ் சனிவிட்டது என்ற நினைப்போடு அவசர அவசரமாக எல்லோரையும் அழைத்துக்கொண்டு ஏர்போர்ட்டுக்குள் நுழைந்தேன்.
கிச்சா இல்லாமல் அமெரிக்கா போகப்போகும் உற்சாகத்தில் உள்ளே நுழைந்த என்னை ஓர் அறிவிப்பு அதிர்ச்சிக்குள்ளாக்கியதோடல்லாமல், என் சந்தோஷத்தை சப்பென்றாக்கியது.
‘யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ். கிரேஸி மோகன் அண்ட் கோ ஆர் கைண்ட்லி ரிக்வஸ்டெட் டு கம் டுதி லவுஞ்ச் கவுண்ட்டர் ப்ளீஸ்’ என்று ஸ்டைலாக ஒரு பெண் குரல் ஆரம்பித்தது. அப்போது கரகரத்த ஆண் குரல் ஊடே பாய்ந்து “யப்பா கிரேஸி மோகன், உங்க ட்ரூப்பைச் சேர்ந்த கிச்சாவும் அவனுடைய பாட்டியும் இங்கே கௌண்ட்டருக்கு வந்து அடிக்கற லூட்டி சகிக்கலை. ஏர்போர்ட்டையே நாஸ்தியாக்கிட்டாங்க. உங்க கால்ல விழுந்து கேட்டுக்கறேன், தயவுசெஞ்சு வந்து எங்களைக் காப்பாத்துங்க” என்று தழுதழுத்த குரலில் முடித்தார். நாங்கள் பதினோரு பேரும் லவுஞ்சை நோக்கி ஓடினோம்.
லவுஞ்ச் கௌண்ட்டரில் எச்சுமிப்பாட்டியும் கிச்சாவும் செய்திருந்த அலங்கோலத்தைக் கண்டு எங்கள் மானம் கப்பல் ஸாரி, விமானம் ஏறியது. அங்கு போடப்பட்ட நாற்காலிகளில் பாட்டியும் பேரனும் சப்பணமிட்டு அமர்ந்தபடி ஈர்க்குச்சியால் தைத்த மந்தார இலையிலிருந்து புளியோதரையை எடுத்து கவளம் கவளமாக ‘மாயா பஜார்’ கடோத்கஜன் போல சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இதில் கிச்சாவுக்கு சேப்பாக்கம் கிரிக்கெட் ஞாபகம் வர, புளியோதரையை கிரிக்கெட் பந்துபோல உருட்டி மேலே தூக்கி எறிந்து வாயால் கேட்ச் பிடித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். எச்சுமிப் பாட்டியும் சுனில் கவாஸ்கர் போல “வெல் டேக்கன்” என்று கமெண்ட்ரி வேறு கொடுத்துக் கொண்டிருந்தாள். இந்த விளையாட்டில் கிச்சா பத்துக்கு இரண்டு தபா கேட்சை கோட்டைவிட, புளியோதரை கீழே சிந்திச் சிதறி மொஸைக் தரையை புளியோதரையாக்கியது.
அமெரிக்கா செல்ல ஆகப்போகும் இருபத்துநாலு மணி நேரப் பயணத்தில் தனது பேரன் கண்டதைச் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக்கொள்ளாமல் இருக்கவேண்டுமே என்கிற கவலை பாட்டிக்கு. எனவே, முறுக்கு, சீடை, நெய் சொட்டச் சொட்ட அதிரசம், நேந்திரங்காய் சிப்ஸ், நியூ யார்க் எம்பயர் ஸ்டேட் பில்டிங் உயரத்துக்கு கேரியரில் சாப்பாடு என்று இவர்கள் இருவரையும் சுற்றி இஷ்டமித்ர பந்துகளைப் போல டப்பா டப்பாவாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதுதவிர, ஒரு கூடையில் ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யா, பலா என்று ஞானப்பழம் நீங்கலாக மற்ற எல்லாப் பழங்களும் குவிக்கப்பட்டிருந்தன!
முதல் முதலாக ஏர்போர்ட்டில் காலடி எடுத்து வைக்கப்போகும் தன் பேரன் கிச்சாவின் ஜாதகத்தை ‘பாலத்து ஜோசியரிடம்’ பாட்டி காட்ட, அவரும் ராகு காலம், எமகண்டம், தெற்கே சூலம், வடக்கே ஈட்டி, கிழக்கே அரிவாள், மேற்கே சைக்கிள் செயின் இப்படி எந்தத் திசையும் இல்லாத நல்ல நேரத்தைக் குறித்துக் கொடுத்துவிட்டார். இதனால் விடியற்காலை ஐந்து மணிக்குப் புறப்படப்போகும் ஏர் இந்தியாவைப் பிடிக்க முந்தின நாள் சாயங்காலம் ஐந்து மணிக்கே ஸ்டவ், பாத்திரம் பண்டங்கள் புடைசூழ பாட்டியும் பேரனும் ஏர்போர்ட்டுக்கு வந்து தனிக்குடித்தனமே செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
பற்கள் பொடிப்பொடியாகி பொக்கையாகும் அளவுக்கு நறநறவென்று கடித்தபடி கடுப்பாக நின்று கொண்டிருந்த ஏர்போர்ட் அதிகாரி திருவாளர் கரகரவின் காலில் நாங்கள் சாஷ்டாங்கமாக விழுந்து பாட்டிக்கும் பேரனுக்கும் பொதுமன்னிப்பு வழங்குமாறு வேண்டினோம்.
அப்போது ஏர் இந்தியா விமானத்தில் செல்லப்போகும் பயணிகள் போர்டிங் பாஸ் வாங்கி செக் இன் செய்து முடித்துக்கொண்டு ‘டிபார்ச்சர் லவுஞ்சுக்கு’ வருமாறு ஆங்கிலம், தமிழ், இந்தி என்று மும்மொழிகளில் துரிதப்படுத்தினார்கள்.
எச்சுமிப்பாட்டி, கிச்சாவின் இரண்டு கைகளிலும் தாயத்து, ரட்சை, மந்திரித்த கயிறு இப்படி மாஞ்சாகயிறு தவிர கிட்டத்தட்ட முப்பது நாப்பது கயிறுகளைக் கட்டினாள். பாட்டியைக் கிச்சா நமஸ்காரம் செய்ய, அவனை எழுப்பி அவனது இரண்டு புஜங்களையும் இறுகப் பிடித்து “கிச்சா… ஆகாசத்துல ஆபத்து ஏதாவது வந்தா நான் சொன்னதை மறந்துடாம நெனவு வெச்சுக்கோ” என்று ஆவேசமாகச் சொன்னாள். அதுவரை லவுஞ்ச் கௌண்ட்டர் லூட்டியில் விமான பயம் மறந்து சகஜநிலையில் இருந்த ஏ.ஆர்.எஸ்., ‘ஆகாச ஆபத்து’ என்று பாட்டி சொன்னதும் மறந்த பயம் நினைவுக்கு வந்து நடுங்க ஆரம்பித்து விட்டான். “பாட்டி, கிச்சாவுக்கு சொன்னதை எனக்கும் சொல்லக்கூடாதா? ஆகாசத்துல அபாயம் வந்தா நானும் அதை நினைவுல வெச்சுண்டு தப்பிச்சுப்பேன் இல்லியா” என்று ஏதோ அபாயம் போக்கும் மந்திரத்தை எதிர்பார்த்துக் கேட்டான்.
“முட்டாள், ஆகாசத்துல அபாயம் வந்தா, மந்திரமாவது மாங்காயாவது! அதோட அம்பேல்தான், நான் நெனவு வெச்சுக்க சொன்னது என்னன்னா, வைகுண்டம் ஆகாசத்துலதான் இருக்கு. அபாயம் வந்து உசிர் போறச்சே ‘கோவிந்தா கோவிந்தா’ ன்னு சொன்னா ஷார்ட்கட்டுல நேரே வைகுண்டம் போய் பெருமாள்பாதத்துல சேந்துரலாம்” என்று சொல்லி ஏ.ஆர்.எஸ்.ஸின் பயத்தைப் பீதியாக்கினாள் பாட்டி!
கிச்சாவின் பத்து லக்கேஜுகளைப் பார்த்த செக் இன் அதிகாரி “தலா ரெண்டு சூட்கேஸ், ஒரு ஹாண்ட் பேக்குக்குத்தான் அனுமதி” என்று சொல்லி முடிப்பதற்குள், எச்சுமிப் பாட்டி, கிச்சாவின் பத்து சூட்கேஸ் சாமான்களையும் ஒரே சூட்கேஸில் வன்முறையாகத் திணித்து அதன்மீது ஏறிக் குதித்து ருத்திர தாண்டவம் ஆடி, சூட்கேஸையும் எப்படியோ லாக் செய்துவிட்டாள்.
போர்டிங் பாஸ் வாங்கிக் கொள்வதற்காக நாங்கள் க்யூவில் நின்றபோது சிறிதும் கூச்சமில்லாமல் கிச்சா எம்பி எம்பி “மேடம், எனக்கும் மோகனுக்கும் ஜன்னல் ஓரமா ஸீட்டு போட்டுடுங்கோ, புகையிலை துப்ப வசதியா இருக்கும்” என்று ரசாபாசமாக, கத்தி க்யூவில் நிற்பவர்களை நெளிய வைத்தான். இது போதாதென்று எல்லோருக்கும் கேட்கும் வகையில் “மோகன், போர்டிங்பாஸ் மட்டும் கொடுத்து ஏமாத்திடப் போறா, ஞாபகமா ‘போர்டிங் அண்ட் லாட்ஜிங்’ பாஸ் கேளு. அப்புறம் பாத்ரூம் அட்டாச்சுடான்னு விசாரிச்சுண்டுடு” என்று கூவினான்.
செக்யூரிட்டி செக்அப்பின்போது ஒருவர், ‘ஹேர்ட்ரையர்’ போன்ற உபகரணத்தை பெருமாள் கோயிலில் ‘சடாரி’ வைப்பதுபோல எங்கள் உச்சந்தலையில் ஆரம்பித்து உள்ளங்கால் வரை வைத்துப் பார்த்தார். துப்பாக்கி, கத்தி போன்ற உலோக வஸ்துக்கள் ஒளிக்கப்பட்டிருந்தால் ‘பீப் பீப்’ என்று சத்தம் போட்டு இந்தக் கருவி காட்டிக்கொடுத்துவிடும். கிச்சாவைப் பரிசோதிக்கும்போது எச்சுமிப்பாட்டி கட்டிவிட்ட தாயத்து, ரட்சைகள் இதுதவிர கிச்சா சொக்காயில் பட்டனுக்கு பதிலாகப் போட்டிருந்த ‘ஸேஃப்டிபின்கள் இவற்றால் அந்த உபகரணம் பலவிதமான விநோத ஒலிகளை ஸ்ருதி லயத்தோடு ஒரு ‘சிம்பொனி’யே வாசித்துக்காட்டியது. சந்தேகித்த செக்யூரிட்டியை ஒருவிதமாக சமாதானப்படுத்தி கிச்சாவை இழுத்துக்கொண்டு பிளேனைப் பிடிக்க நாங்கள் ஓடினோம்.
5
அமெரிக்கா செல்லும் பேரனுக்காக எச்சுமிப்பாட்டி ஓசியில் கேட்டு வாங்கித் தந்த, பீமண்ண முதலித் தெரு குண்டு கஜபதியின் யானைக்கால் சைஸ் ஷூவைப் போட்டுக்கொண்டிருந்தான் கிச்சா. இதனால் அவனுக்கு ஷூவுக்குள்ளேயே சிறிது தூரம் நடந்துவிட்டு, பிறகு ஷூவோடு சேர்ந்து நடக்கவேண்டிய நிர்ப்பந்தம்.
இது தவிர, மொட்டை மாடியில் துணி உலர்த்தும் கயிறு நீளத்துக்கு ஷூ லர்த்தும் கயிறு நீளத்துக்கு ஷூ லேஸ் இருந்ததால், அடிக்கடி அட்ஜெஸ்ட் செய்து கட்டிக்கொள்ள வேண்டிய கட்டாயம். இந்த ஷூ, லேஸ் போன்ற கால் சம்பந்தப்பட்ட காலைக் கடன்களை’ முடிப்பதில் முனைப்பாக இருந்ததில் கிச்சா பின்தங்கிவிட்டான்.
இதற்குள் விமானதளத்தில் மாடிக்கு ஏறிப் போய்விட்ட நாங்கள் மேலேயிருந்து, “கிச்சா, டயமாச்சு. அந்த கஜபதியோட கண்றாவி பூட்ஸை தலையைச் சுத்தி ஓரமா குப்பைத்தொட்டியில் நாசூக்கா எறிஞ்சுட்டு வாடா. நாங்க வேற பூட்ஸ் தர்றோம்” என்று கோரஸாகக் கெஞ்சினோம். பதிலுக்கு கிச்சா கண்களில் நீர் தளும்ப, “பாவிங்களா, கஜபதி எனக்கு பாடிபில்டிங் எல்லாம் கத்துக் குடுத்திருக்கான் தெரியுமா? அவன் பூட்ஸைக் கிண்டல் பண்றீங்களே. ஒண்ணு தெரிஞ்சுக்கோங்கடா, கஜபதியோட பூட்ஸ் இஸ் தி சீக்ரட் ஆஃப் மை எனர்ஜி” என்று சென்டிமெண்டலாகப் பேசிவிட்டு, கஜபதியின் பிரும்மாண்டமான ஷூவுக்குள்ளிருந்து தம்கட்டி எகிறிக் குதித்து வெளியே வந்தான்.
அமெரிக்கா குளிரிலிருந்து பேரனைக் காப்பாற்ற, எச்சுமிப் பாட்டி மவுண்ட் ரோடு ஸ்போர்ட்ஸ் ஷாப்பில் மெகா சீரியல் லெவலில் ஓயாமல் பேரம் பேசி, ஓசியில் வாங்கிய கைக்குப் போட்டுக் கொள்ளும் லெதர் கிளவுஸை, கிச்சா காலில் மாட்டிக்கொண்டு மறுபடி கஜபதியின் பாதாளக் கிணறு ஷூவுக்குள் இறங்கினான்.
ஷூ டைட்டானது. திருப்தியில்லாத கிச்சா, ஷூ லேஸை மளிகைக்கடை பொட்டலம் கட்டும் லாகவத்தில் மேலும் இறுக்கக்கட்டி, இனிமேல் ஷூவை கஜபதிக்குப் பாதத்தோடு வெட்டித்தான் தரவேண்டும் என்ற அளவுக்கு டைட்டாக்கினான்.
ஜானவாச ஊர்வல மாப்பிள்ளை போல எஸ்கலேட்டரில் தனியாக ஏறிவந்த கிச்சா, “என் வழி… தனி வழி..” என்று எங்களைப் பார்த்து ஸ்டைலாகச் சொல்லி எங்கள் வெந்தபுண்ணில் ‘படையப்பா’ வேலை பாய்ச்சினான். அதாவது, நாங்கள் ஏறும்போது ரிப்பேராகிவிட்ட எஸ்கலேட்டர், கிச்சாவின் கால்பட்டதும் நகரத் தொடங்கியது!
“பெங்களூர், ஹைதராபாத்னு லோக்கல் ஃப்ளைட்டுக்குத்தான் நாம பிளேன் வரைக்கும் நடந்துபோய் படியேறி பிளேனுக்குள்ள போகணும். ஃபாரின் போற பிளேன்ல அந்த ப்ராப்ளம் கிடையாது. இங்கேருந்து அதோ அங்க நிக்கற ஃப்ளைட்டை ‘ஏரோ பிரிட்ஜ்’னு குகை மாதிரி ஒரு கூண்டு கனெக்ட் பண்ணும். அந்த ஏரோ பிரிட்ஜ் வழியா நடந்து ஜாலியா போயிரலாம்” என்று ஆச்சரியத்தில் வாயை ஏரோ பிரிட்ஜ் சைஸுக்குப் பிளந்தபடி நிற்கும் நண்பர்களிடம் என் விமான ஞானத்தை தண்டோரா போட்டு நான் முடிக்கவும், எஸ்கலேட்டருக்குப் பிரியாவிடை கொடுத்துவிட்டு கிச்சா மேல்தளத்தில் காலை வைக்கவும் சரியாக இருந்தது.
“மோகன் சொல்றதை நம்பாதீங்க. ரீல் விடறான். சென்ட்ரலுக்கு முன்னாடி பேஸின் பிரிட்ஜ் இல்லியா அது மாதிரி மீனம்பாக்கத்துக்கு முன்னாடி ஏரோ பிரிட்ஜ் முந்தின ஸ்டாப்பிங், அவ்வளவுதான். ரயில்வே ஸ்டேஷன் அவுட்டர் மாதிரின்னு வெச்சுக்கோங்களேன்” என்று உளறிக் கொட்டியபடி விமானநிலைய மேல்தளத்தில் கால் வைத்தான் கிச்சா. அதற்குள் இன்ஸ்டண்ட் இட்லி போல அறிவிப்பு வந்தது. ‘ஏர் இந்தியாவில் செல்லும் பயணிகள் மன்னிக்கவும்.. ஏரோ பிரிட்ஜில் ஏற்பட்ட திடீர் கோளாறினால் பயணிகள் மறுபடி கீழே சென்று நடந்துபோய் வழக்கமான படியில் ஏறி விமானத்துக்குள் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என பயணிகளுக்கு ஏற்பட்ட உபத்திரவத்தை வழக்கம்போல தமிழ், இந்தி, ஆங்கிலத்தில் மூன்று முறை ஏலம் விட்டார்கள்.
கிச்சாவின் வாக்கு பலித்ததில் புல்லரித்துப்போன என் குழுவினர், அவனை மூதறிஞர் ராஜாஜியைப் பார்ப்பதுபோல பார்த்துவிட்டு, “எஸ்கலேட்டர், ஏரோ பிரிட்ஜ் என்று ஆசைகாட்டி மோசம் செய்துவிட்டாயே நஞ்சப்பா! என எம்.என்.நம்பியார் பாணியில் என்னைப் பார்த்து தங்களது ஏகோபித்த அதிருப்தியை பப்ளிக்காகக் காட்டிவிட்டு கீழ்த்தளம் நோக்கி படியில் இறங்க ஆரம்பித்தார்கள். கிச்சா மட்டும் மேல்நோக்கி நகரும் படிக்கட்டான அந்த எஸ்கலேட்டரில் குதித்து கீழ்நோக்கி ஒவ்வொரு படியாக எதிர்நீச்சல் போட்டுத்தான் ஏரோபிக்ஸ்காரர்களுக்கு சவால்விடும் அளவுக்குச் சாதனை படைத்துக் காட்டினான்.
ஆச்சரியத்தில் என் குழுவினர் தங்கள் பாராட்டுதலை தெரிவிக்க, பலமாகத் தமிழில் கைதட்டினார்கள். அப்போது கூடவே ஒரு இங்கிலீஷ் கிளாப் சத்தமும் கேட்டது.
கிளாப்புக்குச் சொந்தக்காரர் எங்களோடு அமெரிக்கா செல்லும் சக பயணியான சிகாகோ கம்ப்யூட்டர் நிறுவனத்தின் அதிபராம். கணிப்பொறியில் கொடிகட்டி துணி உலர்த்தும் பில்கேட்ஸின் சாஃப்ட்வேரான ‘விண்டோஸுக்கு’ போட்டியாக ‘பால்கனி’, ‘போர்டிகோ’ என்று பல சாஃப்ட்வேர்களை உருவாக்கும் முயற்சியில் இருக்கும் இவர், கிச்சாவின் ஊர், பேர், குலம் கோத்திரம் எல்லாவற்றையும் விசாரித்து கர்ம சிரத்தையாகப் பதிவுசெய்து கொண்டார்.
கிச்சாவின் சாதனையை சிகாகோ போய் முதல் காரியமாக இன்டர்நெட்டில் தான் ஆரம்பிக்கப்போகும் வெப்சைட்டான ‘டபிள்யூ டபிள்யூ டபிள்யூ டாட் எஸ்கலேட்டர் அப் அண்ட் டவுன் டாட் காமில்’ (இப்பல்லாம் வத்தகுழம்பு சுட்ட அப்பளத்துக்கெல்லாம்கூட வெப்சைட் வந்துவிட்டது) விரிவாக கவர் செய்யப்போவதாக ‘மதர் ப்ராமீஸ்’ செய்தார்.
இதனால் என்னுடைய கிரேஸி கிரியேஷன்ஸ் குழு நண்பர்கள் மத்தியில், கண்ணாடி இல்லாமலேயே முகத்தைப் பார்த்துக் கொள்ளும் அளவுக்கு கிச்சாவின் ‘இமேஜ்’ வளர்ந்ததென்றால், கம்ப்யூட்டர் மவுஸ் சைஸுக்கு என்னுடைய மவுசு குறைய ஆரம்பித்தது. இந்த ரேட்டில் கிச்சா பிரபலமாக ஆரம்பித்தால் எங்கே அமெரிக்கா போய்வருவதற்குள் கிரேஸி கிரியேஷன்ஸ் ‘கிச்சா கிரியேஷன்ஸ்’ ஆகிவிடுமோ என்ற அச்சத்தில் ‘பிளேன் பிடிக்க டைமாச்சு’ என்று துரிதப்படுத்தி கிச்சா மீது லயித்திருந்த அவர்கள் கவனத்தை கழுத்தைப் பிடித்து திருப்பி விமானத்தை நோக்கி நடக்கச் சொன்னேன். விமானத்தை நெருங்கும் வரையில் கிச்சாவின் தோளில் அந்த சிகாகோகாரர் கைபோட்டபடி ஆங்கிலத்தில் பேச, கிச்சாவும் பதிலுக்கு சங்கத் தமிழ், செந்தமிழ், மெட்ராஸ் பாஷை என்று பல தமிழ்களில் அளவளாவி, அவருக்குப் புரியவைக்க முயற்சிக்க, காதல் கோட்டையில் பார்க்காமலேயே காதலித்த அஜீத்-தேவயானி போல, இந்த இருவரும் ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கொள்வது புரியாமலேயே நண்பர்களானார்கள்.
வருடா வருடம் சபரிமலைக்கு நான்கு ஐந்து தடவைகள் ‘விசு’வுக்கு, ‘மௌலி’க்கு என்று போய்வரும் கிச்சாவுக்கு, விமானத்துக்குள் ஏறிச் செல்லப் போட்டிருந்த படிக்கட்டுகளைப் பார்த்தவுடன் பதினெட்டாம்படி ஞாபகத்துக்கு வந்துவிட்டது. பக்திப் பரவசமான கிச்சா, தன்னுடைய ஹாண்ட் லக்கேஜை தலையில் இருமுடி போல வைத்துக்கொண்டு சிகாகோகாரருக்கே சிலிர்க்கும் அளவுக்கு “சாமியேய் சரணம் அய்யப்பா” என்று சான்பிரான்சிஸ்கோவுக்கே கேட்கும் அளவுக்குக் குரல் கொடுத்தான். இது போதாதென்று எங்களையெல்லாம் விலகச் சொல்லிவிட்டு, “ஒண்ணாம் திருப்படி சரணம் பொன்னய்யப்பா, ரெண்டாம் திருப்படி சரணம் பொன்னய்யப்பா” என்று படிக்குப் படி சரணம் சொல்லி ஏற ஆரம்பித்தான்.
கிச்சாவின் இந்தத் திடீர் உணர்ச்சிவசத்தைப் பற்றி ரயில் ஸ்நேகம் போல கிச்சாவோடு பிளேன் ஸ்நேகமாகிவிட்ட சிகாகோகாரர் விசாரிக்க, நானும் ‘பதினெட்டாம்படி, இருமுடி, சரணம்’ என்று லேசாக விரிசல் விட்டு உடைந்த ஆங்கிலத்தில் ‘ஐயப்ப உபன்யாஸம்’ செய்தேன். புதிதாகக் கேள்விப்படும் எதையும் உதாசீனப்படுத்தாமல் ‘ட்ரை’ பண்ணிப் பார்க்கும் ‘க்யூரியாஸிடி’ கொண்ட ‘டிப்பிக்கல்’ அமெரிக்கக்காரரான அந்த சிகாகோகாரர், தனது லாப்டாப் கம்ப்யூட்டரை தலையில் இருமுடி போல வைத்துக் கொண்டு ‘ஃபர்ஸ்ட் ஸ்டெப் ஸ்டேர்கேஸ் சரண்டர் கோல்டு அய்யப்பா, செகண்ட் ஸ்டெப் ஸ்டேர்கேஸ் சரண்டர் கோல்டு அய்யப்பா” என்று உரக்கக் கூறியபடி கிச்சாவின் நட்புக்கு குரல் கொடுத்தார். பதினேழாவது படியில் கிச்சாவுக்குக் கால் இடற, அதனால் அவன் தலையில் இருந்த ‘இருமுடி’ ஸாரி, ஹாண்ட் லக்கேஜ் நழுவி விழுந்தது. நியூ யார்க் ஒண்ணுவிட்ட பேத்தியின் மசக்கைக்காக எச்சுமிப் பாட்டி ரொப்பியிருந்த கொழ கொழ ‘ஜவ்வரிசி கூழ்’ டப்பாவோடு கொட்டி, சாதாரணப் படிக்கட்டை ஜவ்வரிசி கூழ் வழுக்கலால் கீழ்நோக்கிச் செல்லும் எஸ்கலேட்டர் ஆக்கியது.
ஒரு மாதிரியாக சுதாரித்து உள்ளே நுழைந்த எங்களை விமான வாசலில் நின்றபடி இருகரம் கூப்பி பவ்யமாக, அதே சமயத்தில் கடன் எழவே என்று ‘வெல்கம்’ கூறி வரவேற்கும் ஏர் ஹோஸ்டஸை சக பயணி என்று நினைத்துவிட்டான் கிச்சா.
“மொதல்ல நீ போய் உக்காரும்மா, அப்புறம் உனக்கு உக்கார எடம் கிடைக்காமப் போயிடப் போறது, அட்லீஸ்ட் சீட்டுல கர்ச்சீப்பானா போட்டு வெச்சியா?” என்று கரிசனத்தோடு கூறிவிட்டு அவளை வாத்ஸல்யமாகப் பார்த்து, “எவ்வளவு அழகா இருக்கே! உனக்கு மட்டும் நாலு கையும் நிக்கறதுக்கு கீழே தாமரைப்பூவும் இருந்தா போறும் சாட்சாத் மகாலட்சுமி மாதிரி இருப்பே உனக்கென்ன தலையெழுத்தா கண்டவனுக்கெல்லாம் ‘வெல்கம்’ சொல்ல” என்று கூறியவன், என்னைப் பார்த்து, “ஏண்டா மோகன், இவளை நம்ம சிங்கராச்சாரி தெரு சீமாச்சுக்குப் பாத்தா என்ன? நல்ல அயனான வரன். நீ என்ன கோத்திரம்மா?” என்று கேட்டான்.
அந்த ஏர் ஹோஸ்டஸ் விக்கி விக்கி அழ ஆரம்பித்தாள். வெலவெலத்துப் போன நான், “அம்மா தாயே, அவன் ஒரு ரெண்டுங்கெட்டான். அவன் சார்பா நான்” என்று தொடர்வதற்குள் அவள் இடைமறித்து கிச்சாவைக் கனிவாகப் பார்த்தாள்.
“சார்! நீங்க எச்சுமிப் பாட்டி பேரன் கிச்சாதானே? திருவல்லிக்கேணியில் பாத்திருக்கேன்” என்று கூறி என்னைக் குழப்பினாள்.
“சார்! நீங்க சொன்ன சீமாச்சுவும் நானும் லவ் பண்றோம். ப்ராப்ளம் என்னன்னா சீமாச்சு ஐயங்கார். நான் ஐயர். நீங்கதான் எப்படியானா சீமாச்சு அப்பாவை கன்வின்ஸ் பண்ணி எங்க கல்யாணத்தை நடத்தி வைக்கணும்” என்று கிச்சாவிடம் கெஞ்சினாள். “நீ ஒண்ணும் கவலைப்படாத சீமாச்சுவோட அப்பாவை அந்த காலத்துல படிக்க வெச்சதே எங்க தாத்தாதான். உனக்கும் சீமாச்சுவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கறது என் பொறுப்பு. அப்புறம் ஜானவாச ஊர்வலத்தை காருக்குப் பதிலா பிளேன்ல விட்டு காமிக்கலை ‘கிச்சா’ங்கிற என் பேரை ‘சாக்கி’ மாத்திக்கறேன். போறுமா” என்று வீராவேசமாகப் பேசி என் மார்பில் தட்டினான்.
நெகிழ்ந்துபோன அவள் ஃபாரின் சோப்பு, சீப்பு, செண்ட் பாட்டில், ஷேவிங் ரேஸர் அடங்கிய கிட்டை கிச்சாவுக்கு காம்ப்ளிமெண்டாக அளித்தாள். அதோடு நில்லாமல் எக்கானமி கிளாஸ் டிக்கெட்டில் எங்களோடு டிராவல் செய்ய வேண்டிய கிச்சாவை எக்ஸிக்யூட்டிவ் கிளாஸில் சிகாகோகாரருக்குப் பக்கத்தில் காலியாக இருந்த சீட்டில் உட்கார்ந்து கொள்ளச்சொன்னாள். அதிர்ஷ்டம் அடிக்கும் என்பார்கள். ஆனால், கிச்சாவோ அசிர்ஷ்டத்தை அடித்து தொடையைக் கிள்ளிக் காதைப் பிடித்து தரதரவென்று தன் கூடவே இழுத்துப் போகிறான்.
இதற்குள் சீமாச்சுவின் ஷக்கலக்க பேபி, தன் காதல் காவலன் கிச்சாவைப் பற்றி காக்பிட்டில் ஆரம்பித்து கடைசி டாய்லெட் வரை சொல்ல, பைலட், கோ-பைலட், ஸ்டூவர்ட், வேறு சீமாச்சுகளைக் காதலிக்கும் மற்ற ஏர் ஹோஸ்டஸ்கள் எல்லோரும் கிச்சாவை அயல்நாட்டு அதிபரைப் பார்ப்பது போல பார்த்தார்கள்.
புறப்பட ஆயத்தமான அந்த போயிங் ரன்வேக்குச் செல்ல முதலில் ரிவர்ஸில் மெல்லப் போய், பிறகு ஆறு மாச புள்ளைத்தாச்சி போல அன்னநடை பயில ஆரம்பித்து, திடீரென்று கர்ஜித்து பிளிறியபடி ரன்வேயில் அசுர வேகத்தில் ஓடி, ஒரு கட்டத்தில் ஊளையிட்டபடி டேக் ஆஃப் செய்து, ஆகாசத்தில் அமைதியாக தவழ ஆரம்பித்தது.
6
மீனம்பாக்கத்திலிருந்து டேக் ஆஃப் செய்த ஏர் இந்தியா விமானம், கிச்சா பாஷையில் அடுத்த ஸ்டேஷனான சிங்கப்பூர் ‘சாங்கி’ ஏர்போர்ட் நோக்கி பறக்க ஆரம்பித்தது.
மின்சார நாற்காலியில் மரண தண்டனைக்காக அமர்ந்திருக்கும் கைதி போல பாதுகாப்பு ஸீட் பெல்ட்டை
இறுக்க கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்த ஏ.ஆர்.எஸ்.ஸின் கலவரம், போயிங்கின் அசுர டேக் ஆஃபால் களேபரம் ஆக, கூடுதல் பாதுகாப்புக்காக பெல்ட்டோடு சேர்த்து அருகில் இருந்த என்னையும் கட்டிக்கொண்டான்.
இந்த நேரம் பார்த்து காக்பிட்டிலிருந்து மைக் மூலமாக தன்னை அறிமுகம் செய்துகொண்ட சீஃப் பைலட், “நாம் இப்போது வங்காள விரிகுடா கடலுக்கு மேல் நாற்பதாயிரத்து நானூத்து நாப்பத்துநாலு அடி உயரத்தில் இருக்கிறோம்” என்று என்னமோ நம்பிக்கை இல்லாவிட்டால் பயணிகள் ஸ்கேலை வைத்து அளந்து சரிபார்த்துக் கொள்ளலாம் என்ற ரீதியில் பயணிகளுக்குள் பைசா பிரயோஜனமில்லாத புள்ளிவிவரத்தை அள்ளித் தெளித்தார். இதைக் கேட்டவுடன் ‘மேல பாம்பு, கீழ முதலை’ மாதிரி “மேல ஆகாசம், கீழ கடல்” என்று பிலாஸபிகலாக ஆரம்பித்த ஏ.ஆர்.எஸ்.ஸின் பயம் பிராக்டிகலாக மாறி, “மோகன், இது என்ன டைப் பிளேன் வெஸ்பாவா? லாம்பரட்டாவா? ஏன்னா ஒருவேளை ஸ்பார்க் ப்ளக் அடைச்சுண்டு பிளேன் நின்னு போச்சுன்னா, மாடு சாணி போடற மாதிரி பிளேன் ‘தொப்’புன்னு கடல்ல விழுந்துடும். குழந்தையா இருந்தப்போ தரைல நீஞ்சினதோட சரி.” என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஒப்பாரி வைக்க ஆரம்பித்தான்.
ஒரு வங்கியில் முக்கிய பொறுப்பு வகிக்கும் ஏ.ஆர்.எஸ்.ஸின் கதி இப்படியென்றால், பொறுப்பே இல்லாத, எதுவுமே தெரியாத, ‘மாங்கா தேங்கா பட்டாணி சுண்டல்’ மடையனான கிச்சா, ஏற்கெனவே போட்ட நாலு ரவுண்ட் விஸ்கியால் மப்பாகி ‘கிக்காகோ’ காரராகியிருந்த சிக்காகோகாரரின் கால் மேல் தன் கால் போட்டுக்கொண்டு ஏர்.ஆர்.எஸ். காதில் விழும்படி “போனால் போகட்டும் போடா, இந்த பூமியில் (நிறுத்தி ‘ஸாரி’ சொல்லி) வானத்தில் நிலையாக வாழ்ந்தவர் யாரடா?” என்று பாடிக்கொண்டிருந்தான்.
ஓர் ஏர் ஹோஸ்டஸ் மட்டும் (இவள் ஷக்கலக்க பேபி அல்ல.. உன்னிப்பாக ‘லுக்கு விடும் பேபி’) பாதுகாப்பு பெல்ட் போட்டுக் கொள்ளாமல் கிச்சா உட்கார்ந்து இருப்பதைப் பார்த்து, “ஏன் நீங்கள் மட்டும் பாதுகாப்பு பெல்ட் போட்டுக்கொள்ளவில்லை?” என்று தெரியாத்தனமாகக் கேட்டுத் தொலைத்து விட்டாள்.
அவள் ஆங்கிலத்தில் கேட்டதை அரைகுறையாகப் புரிந்துகொண்ட கிச்சா, தடாலென்று எழுந்து அந்த அம்மணியிடம், “மேடம், வீட்டுலேந்து கிளம்பறச்சவே பக்கத்து வீட்டு பக்தவச்சலம் பொறாமைக் கண்பட்டு என் பெல்ட் பிஞ்சிடுச்சு. ஆபத்துக்கு பாதகமில்லேன்னு பேண்ட்டைச் சுத்தி இறுக்கமா சணல் கயிறால கட்டிண்டிருக்கேன். என் அவஸ்தை புரியாம நாலு பேர் முன்னாடி ‘பெல்ட் போட்டுக்கோ, பெல்ட் போட்டுக்கோ’ன்னு அழிச்சாட்டியமா பிடிவாதம் பண்ணி என் மானத்தை வாங்கறேளே” என்று கிசுகிசுத்தான்.
விமானம் ஆபத்துக்குள்ளாகும் நேரத்தில் தப்பிக்க எமர்ஜென்ஸி வாசல்களைத் திறக்கும் விதத்தையும், விமானத்துக்குள் அழுத்தம் வேறுபடும் நேரங்களில் தலைக்குமேல் பிளாஸ்டிக் பையில் இருக்கும் ஆக்ஸிஜனை உபயோகிக்கும் வழிமுறைகளையும் ஒரு பணிப்பெண் கலாக்ஷேத்ரா நாட்டிய ரேஞ்சில் அபிநயித்துக் காட்ட, இது ஏதோ பயணிகளுக்கான என்டர்டெயின்மெண்ட் என்று நினைத்து புல்லரித்துப்போன கிச்சா படபடவென்று கைதட்டி ‘ஒன்ஸ்மோர்’ என்று கூவி, விசிலடித்து ரசாபாசம் செய்தான்.
டேக் ஆஃபின்போது சிலருக்கு காது அடைக்கும். காதில் பஞ்சை வைத்துக்கொண்டால் அடைப்பு அவஸ்தையைத் தவிர்க்கலாம். இதற்காக பஞ்சை தட்டில் வைத்து விநியோகம் செய்ய வந்தவள், “காட்டன் ப்ளீஸ்” என்று கிச்சாவிடம் சொல்ல, அவன் அந்தத் தட்டிலுள்ள அத்தனை பஞ்சையும் அள்ளி எடுத்து, காதுக்குள் பலாத்காரமாக திணித்துக்கொண்டான்.
எல்லோரும் பிளேனில் வழங்கப்பட்ட ஆரஞ்சு ஜூஸை டீஸன்ட்டாக ஒரு டம்ளர் சாப்பிட்டால், கிச்சா மட்டும் கூச்சப்படாமல் ஆறு அஞ்சு முப்பது டம்ளர் ஜூஸ் சாப்பிட்டு டாய்லெட்டில் ‘வீடு காலியில்லை’ என்று போர்டு போடும் அளவுக்கு அங்கேயே குடியிருந்தான்.
பிரேக் ஃபாஸ்ட் சமயத்தின்போது ‘பெல்ட் போட்டுக்கச் சொன்ன ஒரு காரணத்துக்காக இந்த ராஸ்கல் தன்னைக் கேலி செய்கிறான்’ என்று தவறாகப் புரிந்துகொண்ட அந்த உணர்ச்சிவசப்படும் கறாரான ஏர் ஹோஸ்டஸ், “விமானத்தில் உண்பதற்கு நீங்கள் பிரியப்படுவது வெஜிடேரியனா இல்லை நான்- வெஜிடேரியனா?” என்று எல்லோரிடத்திலும் கேட்டுக் கொண்டே வந்தவள், கிச்சாவை மட்டம் தட்ட நினைத்து, “என்னங்க, நீங்க சைவமா?” என்று தமிழில் கேட்க, ‘இல்லை வைணவம்’ என்று கூறி அவள் நக்கலுக்கு நாமம் போட்டான்.
பிரேக் ஃபாஸ்ட் முடிந்ததும் பல்லு குத்தும் குச்சிகள் அடங்கிய தட்டை பணிப்பெண் நீட்ட, கிச்சா ஐம்பது அறுபது குச்சிகளை எடுத்துக்கொண்டு என்னைப் பார்த்து, “மோகன், நீயும் என் சார்பா நெறைய எடுத்துக்கோடா, நாமம் இட்டுக்க உபயோகமா இருக்கும். அமெரிக்கால ஈர்க்குச்சி எல்லாம் கிடைக்காதாம்” என்று சொல்லி கூசவைத்தான்.
இத்தனை கூத்தடித்தும் சிங்கராச்சாரி தெரு சீமாச்சு, ஏர் ஹோஸ்டஸ் ஷக்கலக்க பேபியின் காதலை நல்லபடியாக கல்யாணத்தில் முடித்துவைக்கப் போகிறவன் என்ற ஒரே தகுதிக்காக ஏர் இந்தியா சிப்பந்திகள் கிச்சாவைப் பொறுத்துக் கொண்டாலும், ‘இதுமாதிரி ஒரு ஜென்மத்தை ட்ரூப்பில் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறாயே?’ என்ற பாவத்தில் எங்களைப் பழைய மாடல் ‘டக்கோட்டா’ விமானத்தைப் பார்ப்பது போல கேவலமாகப் பார்த்தார்கள்.
இதற்கிடையே ஒரு கையால் விஸ்கி குடித்துக்கொண்டே மறுகையால் லாப்டாப் கம்ப்யூட்டரை நோண்டிக் கொண்டிருந்த அந்த சிகாகோகாரருக்கு சைட் டிஷ் ஆக எச்சுமிப் பாட்டி தனக்கு வழித்துணை கொடுத்திருந்த முறுக்கு, சீடைகளை அவருடைய திறந்த வாய்க்குள் ஊட்டிவிட்டுக் கொண்டிருந்தான் கிச்சா. ஏற்கெனவே வாயு பிராப்ளத்தால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் அந்த சிகாகோகாரர், எச்சுமிப் பாட்டியின் உளுந்து பதார்த்தங்களை ஓவராகச் சாப்பிட்டதால் உப்புசமாகி ‘வாயு தூத்தாக’ கை கால் மடங்கி, சோர்ந்து கிச்சாவின் தொடையில் மயங்கி விழுந்தார்.
இதுதான் சமயமென்று கிச்சா அவரது லாப்டாப் கம்ப்யூட்டரை எடுத்துக்கொண்டு என்னிடம் வந்தான். “மோகன், பாட்டிக்கு ஈமெயில் அடிக்கணும். வெள்ளக்காரன் எழுந்து வர்றதுக்குள்ள நான் டிக்டேட் பண்ணறேன். நீ வேகமா டைப் பண்ணிடு” என்று சொன்னவனிடம் “எச்சுமிப் பாட்டியோடக் கம்ப்யூட்டரோட ஈமெயில் அட்ரஸ் சொல்லு” என்று நான் ரெடியானேன்.
“எச்சுமிப் பாட்டி அட் பி பி கே” என்றவனை நிறுத்தி, “அது என்ன அட் பி பி கே?” என்று நான் கேட்க,
“பி பி கே ஃபார் பார்த்தசாரதி பொருமாள் கோயில். பாட்டி ஏதோ ஒரு மெயில் சிட்டிக்குப் போய் ஸ்பெஷலா வாங்கியிருக்காடா” என்ற கிச்சா, விஷயத்தை டிக்டேட் செய்ய ஆரம்பித்தான்.
“டியர் எச்சுமி கிராண்ட்பா” என்றவனை, “முண்டம். பாட்டிக்கு இங்கிலீஷ்ல கிராண்ட்பா இல்லடா கிராண்ட்மா” என்று நான் திட்ட, எனக்கும் இங்கிலீஷ் தெரியும்டா, எச்சுமிப் பாட்டி எனக்கு அப்பா வழிப் பாட்டி, அதான் கிராண்ட்பா, போறுமா” என்று தொடர்ந்தான்:
“திஸ் ஈஸ் கிச்சா ஃப்ரம் ஸ்கை லெவல்.. நத்திங் டு ஸீ அவுட்சைட் விண்டோ வேடிக்கை. ஐ ஸீ ஒன்லி பெருமாள் கலர் ப்ளூ. போயிங் ஈஸ் கோயிங் ஸ்மூத்லி. பைலட் ஈஸ் எ குட் டிரைவர். லைக் அவர் ஜட்கா வண்டி ஏழுமலை. நெக்ஸ்ட் டு பைலட், தேர் ஈஸ் எ க்ளீனர் பாய் ஈஸ் சிட்டிங். கால் ஹிம் கோ-பைலட்” என்று வெள்ளையனை இங்கிலாந்திலிருந்தே விரட்டும் அளவுக்கு டிக்டேஷனைத் தொடர்ந்தான்..
“கமிங் டு தி பால் பாயிண்ட். பை தி பை, ஃபர்காட்டன் தி ரொடீன் ஃபர்ஸ்ட் லைன். வெல் வெல்லறிய ஈகர் டெல் சீமாச்சு ஃபாதர் டு மேரி வத்சலா” என்று உளற பக்கத்தில் நின்றுகொண்டு இதைக் கேட்டுக்கொண்டிருந்த வத்சலா பயந்து, “ஐயோ, நான் லவ் பண்றது ஃபாதரை இல்லை. அவரோட சன்னை” என்று இடைமறித்தாள். கிச்சா கண்களால் அவளைச் சமாதானப்படுத்தி, “மோகன், கரெக்ஷன் வத்சலா ஈஸ் இன் லவ் வித் ஹிஸ் சன்” என்று அடைமழை போல உளறினான்.
“சப்போஸ் இஃப் வத்சலா – சீமாச்சு மேரேஜ் ஈஸ் நாட் வாக்கிங் (அதாவது நடக்கலைன்னா) ஆஸ்க் ஹிம் டு கிவ் பேக் தி ஹண்ட்ரட் ரூபீஸ் டு யுவர் ஹஸ்பண்ட் கேவ் ஃபார் படிக்க வெச்சுஃபையிங் ஹிம். வித் வட்டி (கால்குலேட்டரை வத்சலாவிடமிருந்து வாங்கி கணக்குப்போட்டுப் பார்த்து) நௌ இட் ஈஸ் டூ லாக்ஸ் ருபீஸ். ஸே திஸ் டு சீமாச்சு ஃபாதர் ஆன் மை பிஹாஃப் அண்ட் கன்சீவ் ஹிம்” என்று முடித்தான். கன்வின்சை கன்சீவ் என்று கிச்சா உளறினாலும், இவனைத் திருத்துவது பரீட்சை பேப்பரைத் திருத்துவதைவிட கஷ்டம் என்று புரிந்துகொண்ட நான், ஓரளவு சுத்தமான ஆங்கிலத்தில் அவன் சொன்னதை எல்லாம் டைப் செய்து ஈமெயிலை பாட்டிக்கு அனுப்பினேன்.
பத்தாவது நிமிடம் எச்சுமிப் பாட்டியிடமிருந்து பதில் ஈமெயில்.
“டன். சீமாச்சு ஃபாதர் பிளாகாட் சரண்டர்ட். மேரேஜ் ஃபிக்ஸ்டு இன் தை மன்த். பிகாஸ் தை பர்த் வே பர்த்” (தை பொறந்தா வழி பொறக்குமாம்) என்று ஆங்கிலத்தில் பேரனுக்கு தானும் சளைத்தவளல்ல என்று பாட்டி நிரூபித்தாள்.
“திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயமாறதுன்னு பெரியவா சொல்லுவா. நான் பார், உன் திருமணத்தைக் கிட்டத்தட்ட சொர்க்கத்துக்கிட்ட ஆகாசத்துல நிச்சயம் பண்ணிட்டேன்” என்று வத்சலாவைப் பார்த்துச் சொன்னான் கிச்சா.
கல்யாணம் நிச்சயமான சந்தோஷத்தில் போயிங்காரர்கள் அனைவரும் வத்சலா சார்பாக பேக்கு கிச்சாவுக்கு கேக்கு கொடுத்து கட் பண்ணச் சொன்னார்கள். கேக்கை வெட்டி ஆறு மாதத்துக்குப் பிறகு வரப்போகும் பிறந்த நாளைக் கொண்டாடுவதா, அல்லது ஐந்து மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்ட பிறந்தநாளைக் கொண்டாடுவதா என்ற குழப்பத்தில் இருந்த கிச்சா, திடீரென்று ஒரு முடிவுக்கு வந்து, “தோ பாருங்க, இதான் நான் முதல் தடவையா விமானத்துல பறக்கறேன். ஸோ, பிறந்தநாளுக்குப் பதிலா நான் மொதல்ல பறந்த நாளைக் கொண்டாடுவோம்” என்று கூறி கேக்கை யாரும் சாப்பிட முடியாதபடி சின்னாபின்னமாக வெட்டினான்.
இந்த கூத்தெல்லாம் முடிவதற்கும் சிங்கப்பூர் ‘சாங்கி’ ஏர்போர்ட் ரன்வேயில் ஏர் இந்தியா விமானம் இறங்குவதற்கும் சரியாக இருந்தது.
கிச்சா – எச்சுமிப் பாட்டி ஈமெயில் தாக்குதலால் வைரஸால் பாதிக்கப்பட்ட லாப்டாப் கம்ப்யூட்டர் ‘லப் டப்.. லப் டப் என்று சத்தம் போட, கிச்சா சத்தம் போடாமல் அதை மயங்கிக் கிடக்கும் சிகாகோகாரர் மடியில் வைத்துவிட்டு சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் எங்களுடன் இறங்கினான்.
சிங்கப்பூரை அமெரிக்கா என்று நினைத்த கிச்சா, “மோகன் என்னடாது, தமிழங்க இருக்காங்க. இது தவிர சப்பை மூக்கும் சாணை வாயுமா சைனாக்காரங்க வேற, அமெரிக்கால இருந்தவாள்ளாம் கிளிண்டன்கிட்ட கோச்சுண்டு காலி பண்ணிண்டு போயிட்டாளா?” என்று அபத்தமாக கேட்டான்.
“முட்டாள், காலி பண்ணிண்டு போக அமெரிக்கா என்ன திருவல்லிக்கேணி ஒண்டுக் குடித்தனமா? இது சிங்கப்பூர்டா” என்று சொல்லி அவனை இழுத்துக்கொண்டு நாங்கள் சிங்கப்பூரிலிருந்து நேராக நியூ யார்க் ஜே.எஃப்.கே. ஏர்போர்ட் செல்லும் ‘கொரியன் ஏர்வேஸை’ பிடிக்க விரைந்தோம்.
– தொடரும்…
– அமெரிக்காவில் கிச்சா, முதற் பதிப்பு: மார்ச் 2006, கிழக்கு பதிப்பகம், சென்னை.
| கிரேசி மோகன் (16 அக்டோபர் 1952 - 10 சூன் 2019)[3] தமிழ்த் திரையுலகில் கதை-வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் பணியாற்றியவர். இது தவிர நாடக ஆசிரியராகவும் பணியாற்றியவர். பல மேடை நாடகங்களை இயக்கி நடித்தார்.[4] அடிப்படையில் பொறியாளரான இவர் நடிகர் கமல்ஹாசன் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார். அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு வசனம் எழுதியதைத் தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
ஏவிவிடப்பட்ட கொலையாளி
திசேரா
May 25, 2026
பால்ய காலத்துச் சிநேகிதி!
வ.ந.கிரிதரன்
May 25, 2026
இன்னும் ஒருமுறை படிங்களேன்…
அபிநந்தினி மோகன்
May 25, 2026