அமெரிக்காவில் கிச்சா

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: May 28, 2026
பார்வையிட்டோர்: 314 
வாசிப்பு நேரம்: 12 நிமிடங்கள்

(2006ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12

7

ஏர் இந்தியா விமானத்தில் அரையணா ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு அனைவரையும் பாடாகப்படுத்திய கிச்சா, கொரியன் ஏர்லைன்ஸில் ஏறியவுடன் கப்சிப் ஆனான். காரணம், கொரியன் ஏர்வேஸில் ஏர் ஹோஸ்டஸ்களில் ஆரம்பித்து சக கொரியப் பயணிகள் வரை அனைவரும் “மோஸி மோஸி” (ஹலோ.. ஹலோ), “கம்ஸமீட்டா” (மிக்க நன்றி..), “ஏஹயோ கொதாப் மாஸ்தா” (நன்றி.. மீண்டும் வருக) என்று என்னமோ சைனீஸ் ரெஸ்டாரெண்ட் பதார்த்தங்களை பேரர் படிப்பதுபோல கொரியன் பாஷையில் ‘காச்சுமூச்’ என்று பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் கொரியனில் பேசுவது புரியாமல் போக, ‘யாமறிந்த முழிகளிலே கிச்சா முழிபோல முழிப்பதெங்கும் காணோம்’ என்று பாடும் அளவுக்கு கிச்சா பேய்முழி முழித்தான்.

புரட்சித் தலைவரின் ‘வேட்டைக்காரன்’ படத்தை தங்கள் சகாக்களோடு வெலிங்டன் தியேட்டரில் விசிலடித்து ரகளையாக ரசிக்கும் ரசிகர்கள், யதேச்சையாக ஆங்கிலப் புரட்சித்தலைவர் ஜேம்ஸ்பாண்ட் சினிமா பார்க்க சஃபையர் தியேட்டரில் நுழைந்துவிடுவார்கள். அங்கு நிலவும் அமானுஷ்ய அமைதி, எலும்பைக் கூசவைக்கும் ஏ.ஸி.யின் குளிர்ச்சி போன்ற அறிமுகம் இல்லாத சூழ்நிலையால் பாதிக்கப்பட்டு, அச்சம், மடம், நாணம், பயிர்ப்போடு ‘ரீஜெண்ட்டாக’ நடந்துபோய் தங்கள் சீட்டில் பூஞ்சக்காளான் போல அமர்வார்கள். அதுபோல, ஏர் இந்தியாவில் தமிழர்கள் மத்தியில் தூள்பரப்பிய தில்லக்கேணி கிச்சா, கண்ணுக்குப் பிறகு நேராக வாய்தான் எனும் அளவுக்குச் சப்பை மூக்கோடு சர்வ லட்சணமாக முழியும் முழியுமாக (மூக்குதான் இல்லையே) இருந்த கொரியன் ஏர் ஹோஸ்டஸ்ஸிடம், தயங்கியபடி போர்டிங் பாஸைக் காட்டி உக்காச்சிக்க கிச்சாக்கோ ஸீட்” என்று கொரியன் பாஷை ஜாடையில் அவலமாகக் கெஞ்சிக்கொண்டிருந்தான். அவள் அவனை இட்டுச் சென்று, அவன் சீட்டைக் காட்டி “அன்யாங்” (கொரியனில் ‘குட்மார்னிங்’) என்றாள். அர்த்தம் புரியாத கிச்சா, ஏதோ ஒரு தில்லில் “விஷ் யூதி ஸேம் அன்யாங்” என்று கூற, சிலிர்த்துப்போன அந்த கொரியாக்காரி “கம்ஸமீட்டா” என்றாள்.

கொஞ்சம் கூச்சம் தெளிந்த கிச்சா, ‘கம்ஸமீட்டா’வுக்குப் பதிலாக தன் சார்பாக “சிசுபாலமீட்டா” என்று உளற, மூக்குதான் இல்லையே தவிர, தனக்குத்தானே ரகசியம் பேசிக்கொள்ளும் அளவுக்குக் காதுவரை நீண்ட வாய் உடைய அவள், பற்கள் தெரிய பலமாகச் சிரித்து, கொரியாவைச் சிரியாவாக்கினாள்.

பிறகு கிச்சாவிடம் “குடிப்பதற்கு என்ன ஜூஸ் வேண்டும்?” என்று கொரியன் பாஷையில் கேட்டு ஏர்ஹோஸ்டஸ் கடையை விரிக்க, அவள் அபிநயத்தை வைத்து சாராம்சத்தைப் புரிந்துகொண்ட கிச்சா, கொய்யா, தக்காளி, மாம்பழம் போன்ற தனக்குப் பிடித்த ஜூஸ்களுக்கு ஆங்கிலத்தில் என்ன பெயரிட்டுக் கேட்பார்கள் என்று சற்றுக் குழம்பினான். முடிவில் இவளது இம்சையிலிருந்து தப்பித்தால் போதும் என்று “கெட் மி ப்ளெயின் வாட்டர் ஜூஸ்” என்று சொல்லி அவளை மிரளவைத்து அனுப்பினான்.

‘அப்பாடா! இந்த அழகான ராட்சஸியிடமிருந்து தப்பித்தோம்’ என்று ஹாயாக கிச்சா சீட்டில் சாயும் நேரத்தில் அவன் பக்கத்து சீட்டில் ‘இப்பத்தான் பத்து நிமிஷத்துக்கு முன்னாடி குறைப்பிரசவமா பொறந்துருப்பாரோ?’ என்று சந்தேகப்படும் அளவுக்குத் தம்மாத்தூண்டு சைஸில் குந்தியிருந்த ஒரு ஜப்பானியப் பெரியவர் கிச்சாவைப் பார்த்து பவ்யமாகச் சிரித்து, “மோஸி மோஸி” (அதாவது ஹலோ) என்று சொல்ல, ஜூஸ் ஞாபகத்தில் இருந்த கிச்சா “ஜூஸி ஜூஸி” என்று உளற, குழப்பத்தில் அவர் இன்னமும் குள்ளமானார். பிறகு அவர் சீட்டில் கிட்டத்தட்ட உட்கார்ந்தபடி எழுந்து நின்று (அவரால் மட்டும்தான் முடியும். அந்த அளவுக்கு மினியேச்சர் சைஸில் இருந்தார்) தலையை குனிந்து குனிந்து கிச்சாவுக்கு ‘ஜப்பான் நமஸ்தே’ தெரிவித்துவிட்டு தன்னை “சச்சு மாட்ஸியோ குச்சாமி” என்று அறிமுகம் செய்துகொண்டார். ‘சச்சுப் பாட்டியோட பேரன் குருசாமி’ என்பதைத்தான் ஜப்பான் மொழியில் ‘சச்சு மாட்ஸியோ குச்சாமி’ என்று சொல்கிறார் என்று நினைத்து கிச்சா அவரிடம், “எச்சுமிப் பாட்ஸியோ கிச்சாமி” என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டான்.

அவன் அப்படிச் சொன்னது, பெரியவர் (ஸாரி.. சிறியவர்) காதில் ஏதோ ஒரு ஜப்பான் பெயர் போல விழ. ‘அட, இது நம்ம ஆளு!’ என்ற பாவத்தில் பார்த்தார். ‘அமெரிக்கா போகும் வரை பேச்சுத்துணைக்கு வசமாக மாட்டிக்கொண்டான் கபாலி!’ என்ற புளகாங்கிதத்தில் அவருக்குச் சற்று உசரமே கூடிவிட்டது!

‘ஹிரோஷிமா, நாகசாகி, அகிரோ குரோசோவா என்று ஆரம்பித்து இன்றைய ஹோண்டா கவாஸூகி ஜப்பானின் வளர்ச்சியை ஒன்றுவிடாமல் கிச்சா காது கழுதைக் காது சைஸ் ஆகும் அளவுக்கு ‘கிச்சு கிச்சுக்கோ அச்சுபிச்சுச்சோ’ என்று ஜப்பானிய மொழியில் அவர் லெக்சர் அடிக்க, நக்கீரனிடம் மாட்டிக்கொண்ட நாகேஷ் தருமி போல கிச்சா நரக வேதனை அடைந்தான். இப்படியே இவர் வற்றாத ஜீவநதி போல தொணதொணத்துக்கொண்டே இருந்தால், நியூ யார்க் போய்ச் சேருவதற்குள் எங்கே தன் காதில் உள்ள செவிப்பறையில் யாரையாவது குடித்தனம் வைக்கும் அளவுக்கு ஜவ்வு கிழிந்து காலியாகிவிடுமோ என்று பயந்து பொறுமை இழந்தான் கிச்சா.

“அடேய் குள்ளா, திருக்குறள் சைஸுக்கு இருந்துட்டு பெரிய புராணம் ரேஞ்சுல பேசறியே, தெரியாமத்தான் கேக்கறேன், ஜப்பான்ல உனக்குச் சொந்த ஊர டோக்கியோவா இல்லை, டாக்கியோவா?” என்று ஆசை தீர தமிழில் திட்டிவிட்டு, “ஹலோ, ஓல்டு மேன், ஐ அம் நாட் எ ஜப்பான்காரன். லுக் மை நோஸ். இட் ஈஸ் ஆஸ் ஷார்ப் ஆஸ் எ சீவின பென்ஸில், ஓகே” என்று தமிழ் கலந்த ஆங்கிலத்தில் தன்னிலை விளக்கம் அளித்தான்.

ஓரளவுக்கு ஆங்கிலமும் தெரிந்த அந்தப் பெரியவர், “ஐ யாம் ஸாரி, ஐ தாட் யு ஆர் எ ஜப்பானீஸ்” என்று மன்னிப்பு கேட்டவர், “ஆர் யூ எ கொரியன்?” என வினவ, ஆக்ரோஷமான கிச்சா “மிஸ்டர், ஐ யாம் அன் இந்தியன். நாட் ஷங்கர்ஸ் இந்தியன், த்ரு அவுட் தி டே ஐயாம் அன் இந்தியன்” என்று பொரிந்து கொட்டினான்.

அப்போது பார்த்து அந்த ‘அழகான ராட்சஸி’யான கொரியன் ஏர் ஹோஸ்டஸ் ரொம்ப மெனக்கெட்டு ஜூஸிலிருந்து வாட்டரை வடிகட்டி எடுத்துவந்து கிச்சாவிடம், “சார், வாட்டர் ஜூஸ்” என்று கொடுக்க, டம்ளர் அடியில் தேங்கியிருந்த அந்த வாட்டரைப் பார்த்த கிச்சா வெறுப்பாகி “குடிக்கத் தண்ணி கேட்டா இத்துனூண்டு தர்றியே? நான் என்ன காக்காவா, கல்லைப் போட்டுக் குடிக்க. அடியே அம்மங்கா. இது வாட்டர் ஜூஸ் இல்லை, வாட்டர் கஞ்ஜூஸ்” என்று அலறினான்!

‘இன்றைய சிரமம், நாளைய சௌகரியம்’ என்ற சென்னை கார்ப்பரேஷன் போர்டு டைப்பில், கிச்சாவின் இன்றைய தவிப்பு எனக்கு இன்றைய லயிப்பாக இருந்தது. ஏர் இந்தியாவில் கொடிகட்டிய கிச்சாவின் புகழ், கொரியன் ஏர்வேஸில் அரைக்கம்பத்தில் பறப்பது கண்டு மகிழ்ந்தேன்.

அதற்குள் அந்த ஜப்பான்காரர் தனது ஹாண்ட் லக்கேஜிலிருந்து ஒரு ராட்சஸ சைஸ் ரிஸ்ட் வாட்சை எடுத்து அதை கிச்சாவின் மணிக்கட்டில் தூளிபோல கட்டித் தொங்கவிட்டார். அந்தக் கடிகாரம் நேரம் தேதியோடு சேர்த்து மாதம், வருடம், ராசி, லக்னம், அமாவாசை, பௌர்ணமி, தட்சிணாயணம், உத்தராயணம் என்று மண்டையைப்போடும் காலம் தவிர எல்லாவற்றையும் காட்டும் என்று கூறி எனது வெந்த வயிற்றில் எச்சுமிப் பாட்டியின் காரசாரமான வத்தக் குழம்பைப் பாய்ச்சினார்.

கிச்சாவால் எனக்கு அஸிடிட்டி வந்தது என்றால், ஏ.ஆர்.எஸ்.ஸால் எனக்கு ஸ்பாண்டிலிட்டீஸே வந்துவிட்டது. அந்த அளவுக்கு பய-டேட்டா (தன் பயத்துக்குக் காரணமான டேட்டாக்கள்) கேள்விகள் கேட்டு என் கழுத்தை அறுத்துக் கொண்டிருந்தான்.

விமானத்துக்கு வெளியே நிலவும் சீதோஷ்ணநிலை, அழுத்த வேறுபாடு காரணமாக சில சமயங்களில் விமானம் தடால் தடால் என்று எம்பி எம்பிக் குதித்துக் குலங்கி ஆற்காடு ரோட்டில் பல்லவன் பஸ் போவது போல போகும். அடிக்கடி விமானப்பயணம் செய்பவர்கள் பிளேனின் இந்த பம்பர் குலுக்கலை ‘டர்புலன்ஸ்’ (Turbulance) என்று ஆங்கிலத்தில் காஷுவலாகக் கூறிவிட்டு, அதை ஜலதோஷம், ஒத்தைத் தலைவலி போல சகஜமாக எடுத்துக்கொள்வார்கள். நான் சொன்ன இந்த விளக்கத்தை ஏ.ஆர்.எஸ்.ஸால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

“சர்வ சாதாரணமா டர்புலன்ஸ்னு சொல்லிட்டியே, பாவி இந்த ஆட்டம் ஆடறது பிளேன். காஷுவலா எடுத்துண்டு ரசிக்க இது என்ன தில்லானா மோகனாம்பாள் ஆட்டமா?” என்று என்னமோ நான்தான் பிளேனைப் பிடித்துக் குலுக்குவதுபோல குற்றம் சாட்டினான். டர்புலன்ஸால் ஒரு அபாயமும் கிடையாது, அந்த அளவுக்கு பிளேனை டிஸைன் செய்து இருக்கிறார்கள் என்று எப்போதோ படித்த ‘ஏரோ டைனமிக்ஸை’ சொல்லி ஏ.ஆர்.எஸ்.ஸை நான் டெக்னிக்கலாக தேற்ற ஆரம்பிப்பதற்குள், அவசரமாக அவன் “டாய்லெட் போயிட்டு வரேன்” என்று புறப்பட்டான்.

“எல்லாம் என் தலையெழுத்து. பிளேனுக்குள்ளதான் டர்புலன்ஸ்னு பாத்தா, எழவு எடுத்த சாப்பாட்டால என் வயத்துக்குள்ளயும் டர்புலன்ஸ். இரு வரேன்” என்று முணுமுணுத்துக்கொண்டே டாய்லெட் போனவன் பிளேன் நியூ யார்க் கென்னடி ஏர்போர்ட் நெருங்கும் சமயம் வெளியே வந்து கிழிந்த பாயாக சீட்டில் அமர்ந்தான்.

கொரியன் ஏர்வேஸ் தாழ்வாகச் சரிந்து, சரியன் ஏர்வேஸாக மாறி ரன்வேயில் தாமரை இலைத் தண்ணீர் போல ட்டும் படாமல் ஸ்மூத்தாக லேண்டிங் செய்து, வெறியன் ஏர்வேஸாக ஓடி திடீரென்று ‘சாந்தமுலோகா வாகி நின்றது.

சென்னையிலிருந்து புறப்பட்டு சிங்கப்பூர், கொரியாவின் தலைநகரான ‘சியோல்’ வழியாக நியூ யார்க்கை அடைவதற்குள் இரண்டு விடியற்காலை, இரண்டு பட்டப்பகல், ஒன்றரை நட்டநடு ராத்திரி, இரண்ய வதம் போல பகலும் இல்லாத இரவும் இல்லாத ஒரு நேரம் என்று பல குழப்பங்களுக்கு உள்ளானோம்.

‘பாரத வர்ஷே பரத கண்டே’யில் புறப்பட்டு ‘ஆங்கிலேய வர்ஷே அமெரிக்க கண்டே’ வுக்குப் போவதற்குள் கைக்கடிகாரத்தில் உள்ள முள் கடுப்பாகிக் குத்தும் அளவுக்கு, ஒவ்வொரு ஊருக்கு தகுந்தாற்போல நேரத்தை மாற்றியதில், ராகுகாலம், எமகண்டம் போன்றவை எல்லாம் அர்த்தம் இல்லாமல் போய்விட்டது.

பெட் ஸோர் போல சேர் ஸோர் வரும் அளவுக்கு இருபத்து நான்கு மணி நேரம் உட்கார்ந்த நாங்கள் நியூ யார்க்கில் விமானத்திலிருந்து இறங்கி நடக்கும்போதுகூட ஞாபகமறதியாக கால்மேல் கால் போட்டுக்கொள்ள முயன்று அசடு வழிந்தோம்.

மெய்யாகவே முட்டாளா, இல்லை முட்டாள் போல நடிக்கிறானா? இல்லை வெளியே முட்டாள், உள்ளே ஞானியா என்று என்னைக் குழப்பும் கிச்சா இந்த பகல் – இரவு, பயணக் களைப்பு போன்றவற்றால் லவலேசமும் பாதிக்கப்படாமல் அந்த ஜப்பான்காரருக்குப் பெருமாளின் மச்சாவதாரத்தில் ஆரம்பித்து மத்ஸ்ய, கூர்ம, வராக என்று மிச்சாவதாரங்களையும் கூறி அவரை மெய்சிலிர்க்க வைத்தான்.

கொரியன் ஏர்வேஸில் ரிஸ்ட் வாட்ச் தந்தவர் நியூ யார்க்கில் இறங்கும்போது கிச்சாவுக்கு வாக்மேனைப் பரிசாகத் தந்தார். தந்ததோடு நில்லாமல் “வாக்மேனுக்கு தமிழில் என்ன?” என்று கேட்க, கிச்சா “நடை மனிதன்” என்று கூறிவிட்டு, அதோடு நில்லாமல் ரிப்பேரானால் நடைப்பிணம்” என்றும் கூறினான். இரண்டு டேக் ஆஃப்களுக்கிடையே போதிய இடைவெளிகூடக் கொடுக்காமல், இந்த அழகில் நடுவே ஒரு லேண்டிங் வேறு நடக்கும் லெவலுக்கு திருவிழா மிட்டாய்க்கடையில் மொய்க்கும் ஈக்கள்போல, நியூ யார்க் ஜே.எஃப்.கே. ஏர்போர்ட்டில் பிளேன்கள் ரொம்பி வழிந்தன.

ஏர்போர்ட் அரைவல் லவுஞ்சில் எக்ஸிபிஷனில் காணாமல்போன குழந்தைகள் போல நாங்கள் நின்றோம். பின்னர், பட்டிக்காட்டான் பட்டணத்துக் காட்டானைப் பார்ப்பதுபோல வேடிக்கை பார்த்துக்கொண்டே இமிக்ரேஷன், கஸ்டம்ஸுக்கு வந்த நாங்கள், சற்று தள்ளி வந்திருக்கும் பயணிகளை வரவேற்கக் காத்திருப்பவர்கள் மத்தியில், எங்கள் நாடகங்களை அமெரிக்காவில் போடப்போகும் பார்கவி சுந்தர்ராஜனைப் பார்த்தோம்.

8

அமெரிக்காவில் நாங்கள் காணப்போகும் ஒரு பானை பிரும்மாண்டத்துக்கு நியூ யார்க் ஏர்போர்ட்டில் பார்த்த அமெரிக்கர்களே ஒரு சோறு பிரும்மாண்டமாக இருந்தார்கள். ‘பொறந்து வளர்ந்தார்களா..? இல்லை வளர்ந்தே பொறந்தார்களா..?’ என்று குழம்பும் அளவுக்கு ஆண்களும் பெண்களும் எல்.ஐ.ஸி. உசரத்துக்கு என்னமோ ‘வளர்ச்சி எங்கள் பாலிஸி’ என்பது போல பிரும்மாண்டமாக இருந்தார்கள். நேருக்கு நேர் நின்றுகொண்டிருந்தாலும் நாமெல்லாம் அவர்களோடு பேசவேண்டுமென்றால் டெலிபோனில் – அதுவும் எஸ்.டீ.டி. போட்டுப் பேசும் அளவுக்கு உசரத்தில் ரொம்பத் தள்ளி இருந்தார்கள்.

அமெரிக்கர்கள் உயரத்தில் தளும்பி வழிந்தார்கள் என்றால், அகலத்தில் பிதுங்கி வழிந்தார்கள். சாண்டில்யன் ஸ்டைலில், பிருஷ்ட பாகத்தைப் பார்த்து. முன்னால் செல்வது ஆணா, பெண்ணா என்று சொல்லமுடியாது. அவர்களுக்கு முன்பக்கம் சென்று அதுவும் மேலே பார்த்தால்தான் ‘மேலா’ இல்லை ‘ஃபீமேலா’ என்பதை தீர்மானமாகச் சொல்லமுடியும்.

ஷார்ட்ஸ் மட்டும் அணிந்துகொண்டு மேலே எதுவும் போடாமல் ‘பேர் பாடி’யாக திரிந்துகொண்டிருக்கும் ஒரு விச்ராந்தியான அமெரிக்கரைப் பார்த்த கிச்சா, “ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி” என்று கிண்டலாகப் பாட, பதிலுக்கு அவர் “நாங்கள் நம் பாவைக்கு சாற்று நீராட்டினால், தீங்கின்றி நாமெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து” என்று அமெரிக்க ஸ்டைலில் ஆண்டாள் பாசுரம் முப்பதையும் செப்பினார். இதைக் கேட்டு வெலவெலத்துப்போய் செயலிழந்து நின்ற கிச்சாவிடம் தன் பெயர் பரமஹம்ஸானந்தா என்றும் ‘ஹரே கிருஷ்ணா’ இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றும் பக்திசிரத்தையாக அறிமுகம் செய்துகொண்டார்.

அமெரிக்காவில் முன்பின் தெரியாதவராக இருந்தால்கூட கண்ணோடு கண் நோக்கின், ‘ஹலோ, ஹவ் ஆர் யூ’ என்று கரிசனம் காட்டுகிறார்கள். கிச்சாவைப் பார்த்த ஒருவர் அடிப்படை நாகரிகத்தில், “ஹாய், ஹவ் ஆர் யூ” என்று கேட்க, “என்னை உங்களுக்கு ஏற்கெனவே தெரியுமா?” என்று கேட்டபடி அவரைத் தொடர்ந்த கிச்சாவை இழுத்துக்கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

தும்முதல், தெரியாத்தனமாக லேசாக இடித்துக் கொள்ளுதல் போன்ற சின்னச் சின்னத் தவறுகளுக்குக்கூட ‘ஸாரி, ஸாரி, ஸாரி’ என்று இம்போஸிஷன் போல அங்கே ஏகமாக மன்னிப்புக் கேட்கிறார்கள். யார் காலையாவது மிதித்துவிட்டு ‘ஸாரி’ சொல்லிவிட்டால், மிதிபட்டவர் ‘இட்ஸ் ஓகே’ என்று மந்தகாசத்துடன் கூறி, ‘என் காலை நீ மிதித்துக் கூழாக்கி என்னை ஊனமாக்கினாலும் பரவாயில்லை. மறக்காமல் ஸாரி சொல்லிவிடு. நான் எனது இன்றைய ஸ்டாக்கில் உள்ள ‘இட்ஸ் ஓகே’வை சொல்லிவிடுகிறேன்’ என்ற ரீதியில் பாந்தவ்யமாகப் பார்க்கிறார்கள்.

காலையில் பக்கத்து ஊருக்குப் போய் ‘புசு புசு’ நாய்க்குட்டி வாங்கிக்கொண்டு மத்தியானம் வரும் கணவனை ‘கங்கை கொண்டு கடாரம் வென்றானை’ வரவேற்பதுபோல அவனது மனைவி அவன் உதட்டில் தாசில்தார் முத்திரை கும்மாங்குத்தில் மூர்க்கத்தனமாக முத்தமிடுகிறாள்.

பாசம், பரிவு, காதல், காமம், அனுதாபம், ஆக்ரோஷம், இப்படி எல்லாமே அமெரிக்காவில் சினிமா போல ஓவர் ஆக்டிங்கில் நடைபெறுகிறது.

ஐயப்பன் கோயிலுக்குப் பலமுறை சென்று பழுத்த குருசாமிகள், முதல் முறையாகச் செல்லும் கன்னிசாமிகளை எச்சரிப்பது போல, கச்சேரிக்காக அடிக்கடி அமெரிக்கா செல்லும் எனது இசைவான நண்பர் டி.என்.சேஷகோபாலன், “மோகன், அமெரிக்காவுல கஸ்டம்ஸ் ரொம்ப கஷ்டம்ஸ். முக்கியமா நீங்க போடற இந்த வெத்தலை, புகையிலை மாதிரி இலை தழை அயிட்டங்களைப் பாத்தா குப்பைத் தொட்டியில் போட்டுடுவா” என்று சென்னையிலிருந்து நான் புறப்படும் முன் போனில் அட்வைஸித்தார்.

“எதுக்கும் எடுத்துட்டுப் போறேன் சார். என் அதிர்ஷ்டம் கண்டுக்காம விட்டுட்டான்னா ஜாலிதானே, அப்படியே நீங்க சொன்ன மாதிரி குப்பைத்தொட்டில போட்டாலும் போனா போறது” என்று சொன்ன என்னை போனிலேயே ஏற இறங்கப் பார்த்த சேஷகோபாலன், “நான் குப்பைத்தொட்டில போட்டுடுவான்னு சொன்னது வெத்தலை, புகையிலைய இல்ல, உங்களைப் போட்டுடுவான்னேன். அதுவும் குப்பைத்தொட்டில இல்லை, க்வாரண்டைன்ல” என்று போனில் அவர் என்னைப் பயமுறுத்தியதை, என் சகதர்மினி இன்டர்காமில் ஒட்டுக்கேட்டுவிட்டாள்.

அமெரிக்கப் பயணம் தன் கணவனின் வி.எஸ்.பி. (வெத்தலை சீவல் புகையிலை) கெட்டப்பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகிறதென்று அவளுக்குப் பரம சந்தோஷம். சேஷகோபாலன் போல அமெரிக்காவுக்கு அடிக்கடி செல்பவர்களை வீட்டுக்கு வரவழைத்து டிபன் காபி கொடுத்து உபசாரம் செய்து, “வெத்தலை சீவல் புகையிலை எடுத்துச் செல்பவர்களை அமெரிக்காவில் சிறையில் போட்டு டாலரில் செக் இழுக்கச் சொல்வார்கள், கிளிண்டன் ‘ஜூட்’ சொன்னதும் வாஷிங்டன் ஸ்கொயரில் சமணர்களைப் போல கழுவில் ஏற்றுவார்கள், லிபர்டி சிலைக்குப் பலி கொடுப்பார்கள்” என்று ஒவ்வொருவரையும் விதவிதமாக சொல்லவைத்து என்னை ஒரேவிதமாகப் பயமுறுத்தினாள். இதனால் மிரண்டுபோன நான், வெத்தலை சீவல் புகையிலை என்ன நகத்தைக் கடிப்பது, பால்பாயிண்ட் பேனா முனையால் சுகமாகக் காது குடைவது, ஸேஃப்டிபின் வைத்து பல் குத்துவது போன்ற சிற்றின்பங்களைக்கூட தலைமுழுகிவிட்டேன்.

இருந்தாலும் ‘வெத்தலை சீவல் புகையிலை போடாமல் இருப்பது என் வீரத்துக்கு அழகா? அமெரிக்க ஆசையில் புகையிலையை பகிஷ்கரித்தால் புகையிலைக் கட்டை கட்சித் தோழர்கள் ‘நட்புத் துரோகி’ என்று அதே புகையிலைச் சாற்றை என் மீதே காறி உமிழ்வார்களே!’ என்ற எண்ணத்தோடு நான் இருக்குங்கால், அமெரிக்க கஸ்டம்ஸுக்கு டிமிக்கி கொடுத்து, வெத்தலை சீவல் புகையிலையை எடுத்துச்செல்லும் டெக்னிக்கை ஒரு நண்பர் கூறினார். அதாவது, சீவலை பஞ்சுத் தலகாணியில் நிரப்பிவிட வேண்டுமாம். “புகையிலையை பிளாஸ்டிக் காகிதத்தில் சுற்றி, பேனா சைஸ் குழாய்களில் திணித்து காலியான டிரான்சிஸ்டருக்குள் அடுக்கி, ரிப்பேராகிப்போன பிரிண்டட் சர்க்யூட் போர்டால் மூடி” என்று கிட்டத்தட்ட டைமர் வைத்த ஆர்.டி.எக்ஸ். பாம் செய்யும் லெவலில் கூறினார். இவர் சொல்கிறபடி எடுத்து வந்திருந்தால் மீனம்பாக்கத்திலேயே என்னைக் கைது செய்திருப்பார்கள்.

ஆக, இந்த வெத்தலை சீவல் புகையிலையை ஈடுகட்ட மனைவி கொடுத்த புளிப்பு மிட்டாய், பபுள்கம், வெந்தயம், சீரகம் பொடி செய்த மிக்ஸர் போன்றவற்றை மென்றதில் ‘தச்சி மம்மு’ சாப்பிட்ட டைகர் போல மப்பும் மந்தாரமுமாக கஸ்டம்ஸ் க்யூவில் நின்றேன்.

என் தலையெழுத்து அல்லது துரதிர்ஷ்டம். அன்று பார்த்து டியூட்டியில் கஸ்டம்ஸ் அதிகாரியாக அமெரிக்க மனோரமாவான ஹாலிவுட் புகழ் கறுப்பு-கம்-சிரிப்பு நடிகை ‘வூப்பி-கோல்ட்பெர்க்’ ஜாடையில், பெருமாள் கோயில் மூலவர் கலரில், ஒரு நீக்ரோ மாமி நின்றுகொண்டிருந்தாள். பியானோ பட்டன்கள் சைஸுக்கு இருந்த எடுப்பான பற்கள் தெரிய சிரித்தபடி இருந்த அவள், சக கஸ்டம்ஸ் அதிகாரி ஏர்போர்ட்டில் உள்ள அத்தனை பேருக்கும் கேட்கும்படி உரத்த குரலில் சொன்ன லேட்டஸ்ட் கிளிண்டன்-மோனிகா சம்பந்தப்பட்ட கெட்டவார்த்தை ஜோக்கைக் கேட்டு (‘கண்டேன் பேச்சு சுதந்தரத்தை’), விஸ்வாமித்திரர் யாகத்தைக் கெடுக்க வந்த ராமாயண தாடகை போல சிரிக்க ஆரம்பித்தாள்.

இதுதான் சமயமென்று க்யூவில் எங்களுக்கு முன் நின்றவர்கள் அவளிடம் பாஸ்போர்ட் இத்யாதிகளை நீட்ட, அவள் சகட்டு மேனிக்கு சாப்பா குத்து குத்தி ‘வெல்கம் டு அமெரிக்கா’ சொல்லி, கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக க்யூவில் நின்றவர்களை செக் செய்யாமலேயே விரட்டினாள்.

இலை தழைகளுக்குத் தடை என்பதால் வெத்தலை புகையிலை கொண்டுவராமல் போன என் வயித்தெரிச்சலைக் கொட்டிக் கொள்வதுபோல, எனக்கு முன்னே ஒரு மாம்பலம் மாமி, திருமணமாகி பத்து வருடமாகியும் குழந்தை பிறக்காத, நியூ யார்க்கில் வாழும் தனது மகள் சுற்றிவந்து புள்ளை பெற வசதியாக, ஒரு சின்ன சைஸ் அரசமரத்தையே தூக்கிச் சென்று கொண்டிருந்தாள்.

இன்னமும் கிளிண்டன் ஜோக் பாதிப்பில் இருந்த அந்த நீக்ரோ அதிகாரி மாமி, மாம்பலம் மாமியைப் பார்த்து அரசமரத்தைக் காட்டி “வாட் இஸ் திஸ்?” என்று கேட்க, மாம்பலம் மாமி “வாக்கிங் ஸ்டிக்” என்று சாமர்த்தியமாகக் கூறி இமிக்ரேஷன் செய்து கஸ்டம்ஸைத் தாண்டி ஓடியே விட்டாள்.

எங்கள் முறை வந்தபோது மணி பன்னிரண்டு அடித்தது. பழைய டெலிபோன் கலர் கருப்பில் வேறு ஒரு கறாரான அதிகாரி ஷிஃப்ட் மாற்றலாகி வந்தார். எவ்வளவு சொல்லியும் கேட்காமல் சொத்தையான முந்திரிக்கொட்டை போல முன்னே போன கிச்சாவை கோழியை அமுக்குவது போல அமுக்கினார் அவர். கிச்சாவின் பாஸ்போர்ட்டை வாங்கி, அவனது நீளமான பெயரைப் படிக்க முயன்று படுதோல்வி அடைந்தார். அவர் கஷ்டத்தைப் புரிந்துகொண்ட கிச்சா, கால் மி கிச்சா. ஐ வில் ஆன்ஸர் யுவர் கொஸ்சின்ஸ்’ என்றவனை ஏற இறங்கப் பார்த்தவர், “ஓகே, கீசா” என்று ஆரம்பிக்க, “சார், எக்ஸ்கியூஸ்மீ. நாட் கீசா. இட் இஸ் கிச்சா. கி ச் சா கிச்சா” என்று அவருக்கு நன்னன் போல பாடம் எடுக்க, அவரும் பாவம் பதிலுக்குச் சேர்ந்து ‘கி ச் சா கிச்சா’ என்று நூறு தபா சொல்லி பாஸ் செய்தார்.

திடீரென்று அவர் கறாராகி கிச்சாவைப் பார்த்து “கி ச் சா கிச்சா, டு யூ ஹாவ் எனிதிங் டு டிக்ளேர்?” என்று கேட்க, “சார், சிம்பிள் கொஸ்சின் சார். ஆஸ்திரேலியா ஃபோர் சிக்ஸ்டி ஃபார் ஸெவன் அண்ட் டிக்ளேர்ட்” என்று தன் கிரிக்கெட் ஞானத்தைக் காட்டியபோது, அவர் முகத்தில் ‘ஒருவேளை நாம் வீண்வம்பை விலை கொடுத்து வாங்குகிறோமோ?” என்ற கவலை படர ஆரம்பித்தது. இருந்தாலும் கடமை தவறாத அவர் “கிச் சா கிச்சா, யூ ஆர் கேரியிங் எனி டிரக்ஸ்?” என்று சாஸ்திரத்துக்கு கேட்க, கிச்சா பாய்ந்து “வாட் சார், மை ஹாண்ட் லக்கேஜ் இஸ் ஃபுல் ஆஃப் டிரக்ஸ்” என்று கூற அவர் அரண்டுபோய், “கமான் ஓபன் யுவர் பேக்” என்று ஆர்டர் செய்தார்.

கிச்சா பையைத் திறந்து “சார், ஸீ டிரக்ஸ் சார். திஸ் இஸ் குரோசின் ஃபர் ஃபீவர், திஸ் ரோஸ் கலர் மிக்ஸர் இஸ் ஃபார் ‘டூ மல் (‘இரு’மல்) திஸ் இஸ் ‘சுகப்பிரசவ சூரணம்’ ஃபார் (அவர் காதருகில் ரகசியமாக, ‘கான்ஸ்டிபேஷன்’ ப்ரிஸ்க்ரைப்டு பை திருமலை ஆஃப் நல்லதம்பி முதலி தெரு. பேஸிக்கலி எ கம்பௌண்டர். பட் வெரிகுட் ஹாண்ட் லக் (கைராசி) டாக்டர். யூ நோ” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போது அவனது மெயின் சூட்கேஸில் இருந்த மாவடு ஜாடியைப் பார்த்து ‘இது என்ன?’ என்று கோபமாகவே விசாரித்தார். சுற்றுமுற்றும் பார்த்த கிச்சா, அங்கு ‘டெமி மூர்’ ஜாடையில் செக்ஸியான ஒரு பெண் அதிகாரி ஆறு மாத கர்ப்பிணியாக இருப்பதை பார்த்துவிட்டான். பளிச்சென்று ஒரு மாவ டுவை எடுத்து அவள் வாய்க்கு அருகில் கொண்டுபோக, ஒரு கணம் அதிர்ந்து பின்வாங்கிய அவள், மசக்கையால் முன் வந்து மா வ வடுவை கவ்விச் சாப்பிட ஆரம்பித்தாள். “ஸீ மிஸ்டர் கஸ்டம்ஸ், திஸ் இஸ் பிக் ஸ்கார் (மா டு) குட் ஃபார் பிரக்னென்ட் வுமன்” என்று கூற, அந்த அதிகாரியைத் தவிர, அனைவரும் கிச்சா கட்சிக்குத் தாவினார்கள்.

கிச்சாவின் ஹாண்ட் லக்கேஜில் இருந்த வெத்தலை சீவல் புகையிலையை டிரக்ஸ் என்று கூறி அந்த அதிகாரி மறுத்தார். கிச்சா அது டிரக்ஸ் இல்லை என்பதை நிரூபிக்க வெத்தலை சீவல் புகையிலையை வாயில் போட்டுக் குதப்பி மேலே அந்தரத்தில் துப்பி அது கீழே விழுவதற்குள் வாயால் காட்ச் பிடித்து முழுங்கி, தான் மயங்காமல் தெளிவாக இருப்பதை செய்முறையில் விளக்கியும் அந்த அதிகாரி நம்ப மறுத்தார்.

நம்ப மறுத்த அதிகாரி திடீரென்று டென்ஷனாகி, இடதுபக்கம் திரும்பி, ‘கமான்’ என்று கத்த, அங்கிருந்து மோப்பம் பிடிக்கும் நாயான ‘ஸ்நிஃபர் டாக்’ ஒன்று நாசி மலர, பற்கள் தெரிய வெறியோடு நாலு நாலு பதினாறு கால் பாய்ச்சலில் எங்களை நோக்கிப் பாய்ந்து வந்தது.

9

எம்.டெக். படித்துவிட்டு சுந்தரம் – கிளேட்டனில் வேலை பார்த்துக்கொண்டிருந்த நான், (அதாவது மத்தவங்க வேலை பார்ப்பாங்க, நான் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பேன்) ஒருநாள் அயனான அந்த உத்தியோகத்தை ராஜிநாமா செய்தேன்.

‘நாடகக் கிளர்ச்சி, சினிமாக் கவர்ச்சி, டி.வி. சீரியல் காமம்’ என்ற என்னமோ நான் இன்ஜினீயரிங்கை விட்டு காபரே ஆட போய்விட்டது போல, நான் எதிரில் இல்லாத சமயங்களில் எனக்கு வேண்டாதவர்கள் அவர்களுக்கு வேண்டியவர் களிடம், நான் வேலையை விட்டதற்கு பல காரணங்களைக் கூறுவார்கள். இவர்கள் எவ்வளவோ தேவலை என்பதுபோல, எனக்கு ரொம்ப வேண்டப்பட்டவர்கள் அவர்களுக்கு வேண்டப்படாதவர்களை எதேச்சையாகப் பார்த்தால்கூட, என் பொருட்டு பழைய பகைமையை தாற்காலிகமாக மறந்து, “தோ நிக்கறானே தடி ராஸ்கல் (நான்தான்) வேலையை வுட்டுட்டான் சார், ஏன் தெரியுமா? இவன் ஒரு உலக்கை, உதவாக்கரை, உருப்படாத கழுதை” என்று ‘உ’வில் ஆரம்பிக்கும் அத்தனை திட்டல்களையும் திட்டி, என்னை எதிரில் வைத்துக்கொண்டு நான் செய்த ராஜிநாமாவுக்கு காரணங்களாக அடுக்குவார்கள்.

நான் வேலையை விட்டதற்கான மெய்யான காரணம் இருவருக்கு மட்டுமே தெரியும். ஒருவர் – ஸாரி. ஒருவன் – வேலையைவிட்ட நான். மற்றவர், ஸாரி மற்றது என்னை வேலையை விட வைத்த திருவாளர், மீண்டும் ஸாரி, தெருவாளர் நாய்கள்.

சுந்தரம் கிளேட்டனில் நைட் ஷிப்ட் முடித்துவிட்டு, மவுண்ட் ரோடு ஜெமினி சந்திப்பு வழியாக ஸ்கூட்டரில் வரும்போதெல்லாம் என்னை ‘நடு இரவில் உனக்கு இங்கு என்னடா வேலை, நபும்சகா’ என்ற பாவத்தில் நக்கலாகக் குரைத்தபடி பத்து நாய்கள், பத்ம வியூகத்தில் மாட்டிக்கொண்ட அபிமன்யு கணக்கில், ஆதரவற்ற என்னைச் சூழ்ந்துகொள்ளும். பிறகு, நான் ஆணா அல்லது பெண்ணா என்று கண்டுபிடிக்க இயலாத நிலையில் பத்து நாய்களும் ஐந்து ஐந்தாகப் பிரிந்துகொண்டு, முறையே என்னை ‘ஆடம் அண்ட் ஈவ் டீசிங்’ செய்ய ஆரம்பிக்கும். பிறகு, ஜனாதிபதிக்கு முன்னேயும் பின்னேயும் பக்கவாட்டத்திலும் ‘பைலட்’ வருவது போல நாலு பக்கங்களிலும் என்னைத் துரத்தியபடி வரும். பின்னர், காலேஜ் பசங்களுக்கு காஷ்மீரான ஸ்டெல்லா மாரிஸ் காலேஜ் எல்லை வந்ததும், அங்கு போடப்பட்ட லைன் ஆஃப் கண்ட்ரோலுக்கு மரியாதை கொடுத்து, அதைத் தாண்டாமல் “இன்று போய் நாளை வா” என்று என்னைப் பார்த்துக் கூறிவிட்டு, தங்களது பாசறையான ஜெமினி சந்திப்புக்குத் திரும்பும்.

ஜெமினியிலாவது பரவாயில்லை, பத்து நாய்கள்தான். நாய்களுக்குத் தலைக்காவேரியே (உற்பத்தி ஸ்தானம்) இதுதானோ என்று எண்ணும் அளவுக்கு ஸ்டெல்லா மாரிஸ் எல்.ஓ.ஸி. தாண்டி, எனக்காகப் பிரத்தியேகமாகத் தங்கள் வாலை டி.வி. ஆண்டெனா போல நிமிர்த்தியபடி நாப்பது நாய்கள். “டேய் கஸ்மாலம், பேமானி, சோமாறி” என்று கெட்ட கெட்ட வார்த்தையில் குரைத்துக்கொண்டே துரத்தியபடி அடுத்த எல்.ஓ.ஸி.யான மியூஸிக் அகாடமிக்கு என்னை அபத்திரமாகக் கொண்டுபோய் விடும்.

வீடு திரும்பும் நான் என் கடுப்பை மனைவியிடம் காட்ட, அவள் என் நிலை புரியாது, “வீட்டுக்கு வந்ததும் வராததுமா ஏன் இப்படி வள்ளுனு நாய் மாதிரி விழறீங்க” என்று கேட்பாள். நிற்க.

நியூ யார்க்கில் கென்னடி ஏர்போர்ட்டில் கஸ்டம்ஸ் அதிகாரி ‘கமான்’ என்றதும் எங்களை நோக்கிக் குறிபார்த்து ஓடிவந்த மோப்பம் பிடிக்கும் அந்த ஸ்நிஃபர் நாயைப் பார்த்ததும், ‘வருவது நாயா அல்லது ‘நாய் வேஷம் போட்டா குரைச்சுத்தான் ஆகணும்’ என்கிற நியதிக்காகக் குரைக்கும் மாறுவேஷப் புலியா?” என்று பயத்தில் குழம்பும் அளவுக்குப் பெரிய பட்ஜெட்டில் இருந்தது.

உயரம், நீளம், அகலம் முறையே இத்தனை அடி என்று அந்த ஸ்நிஃபரின் நாய்முத்ரிகா லட்சணத்தை வர்ணிக்க முடியாது. தோராயமாகப் பார்த்ததில் ‘நானூறு சதுர அடியில் சிங்கிள் பெட் ரூம், பாத் ரூம் அட்டாச்சுடு ஃபிளாட் சைஸில் நிஜமாகவே சித்தாள், மேஸ்திரி வைத்து கட்டிப்போட்ட நாயாக இருந்தது.

அந்த நாயின் முகத்தைப் பார்த்தால், அந்த காலத்தில் ஆஃப்டர் ஷேவ் லோஷன் எல்லாம் இல்லாததால், அமாவாசைக்கு அமாவாசை எதிர் போட்டு சர்வாங்க ஷவரம் செய்துகொண்டு, அந்த எரிச்சலில் எதிர்ப்படும் மாணவர்களையெல்லாம் பிரம்பால் லத்தி சார்ஜ் செய்யும் ‘புல்-டாக்’ என்ற புனைபெயர் கொண்ட என்னுடைய ஸ்கூல் ஹெட்மாஸ்டரின் கடுகடுப்பான முகம் ஞாபகத்துக்கு வந்து பயத்தைக் கூட்டியது.

‘நாலு காலில் ஓடிவந்தால் ஸ்நிஃபர் டாக். அதுவே இரண்டு காலில் நின்றால் கஸ்டம்ஸ் அதிகாரி’ என்று சொல்லும் அளவுக்கு நாயைவிட உர்ரென்று இருந்த கஸ்டம்ஸ் எஜமானரைப் பார்த்ததும், அதுவரை எங்களைப் பார்த்து மும்முரமாகக் குரைத்துக்கொண்டிருந்த அந்த மோப்ப நாய் வாத்சல்யமாகி, ஆல விழுது லெவலுக்கு நீண்டு தரையில் படர்ந்திருந்த தன் வாலை கிட்டத்தட்ட ஏர்போர்ட்டையே பெருக்கிச் சுத்தம் செய்யும் அளவுக்கு வீசி ஆட்டி, தனது எஜமான விசுவாசத்தைக் காட்டிக்கொண்டது.

“இட்ஸ் ஓகே, இட்ஸ் ஓகே” என்று அதிகாரி செல்லமாகக் கூறிவிட்டு, அதன் நீளமான முதுகை கழுத்தில் ஆரம்பித்து வால் நுனிவரை ஒரே ஸ்ட்ரோக்கில், தறிபோடுவது போல நீவிவிட்டார். பின்னர், சினிமாவில் கவுண்டமணி செந்தில் காமெடி முடிந்து, வில்லன் ரகுவரன் காட்சி ஆரம்பிப்பது போல சட்டென்று சீரியஸாகி, எங்களை நோக்கித் தனது ஆள்காட்டி விரலைக் காட்டி “கோ அஹெட்” என்று கூற, அதுவரை நாலாக மடித்த ஸ்டேப்ளர் போட்டு வாயில் புகையிலை போல பதுக்கியிருந்த தனது ‘வறுமையின் நிறம் சிவப்பு’ கலர் நாக்கைத் தொங்க போட்டபடி (முன்பக்க வால் என்று சொல்லலாம். அவ்வளவு நீளம்) எங்களை நெருங்கியது.

நாங்கள் பன்னிரண்டு பேரும் பெட்டிக் கடையில் தொங்கும் அழுகிப்போன ஒரு டஜன் வாழைப்பழம் போலத் துவண்டு நிற்க, அந்த மோப்ப நாய் எங்கள் ஒவ்வொருவரையும் முகர்ந்து பார்த்துக் குரைத்தது. நம்ம தமிழ்நாட்டு நாய்கள் ‘வள்வள்’, ‘லொள் லொள்’ என்று இரட்டைக் கிளவி இலக்கணக் குறிப்போடு குரைக்கும். இது அமெரிக்க நாய் அல்லவா.. எங்களை ‘ஏ ஃபார் ஏ.ஆர்.எஸ்.. பி ஃபார் பாலாஜி. சி ஃபார் சீனு’ என்று கிராமாடிக்கலாக ஆல்பபெட்டிக் ஆர்டரில் முகர்ந்து பார்த்து மோப்பம் பிடித்துக் குரைத்தது.

எங்கள் குழுவைச் சேர்ந்த ‘ஜி ஃபார் கீதாவை’ மோப்பம் பிடித்த அந்த நாய் குரைக்காமல் அவளை மும்முறை வலம் வந்து நாலு காலையும் பரப்பி நமஸ்காரம் செய்தது. ‘அட, தாய்க்குலத்தின் மகத்துவம் அமெரிக்க நாய்க் குலத்துக்குக்கூடத் தெரிந்திருக்கிறதே என்று மெய் சிலிர்த்தேன்!

இனி, அந்த வரிசையில் ‘கே’ ஃபார் கிச்சா. ‘எம்’ ஃபார் மோகன் (நான்).

ஒரு வேளை அந்த மோப்ப நாய், கிச்சா – கிச்சா சம்பந்தப்பட்ட கச்சாப்பொருள்களை மோப்பம் பிடித்து கஸ்டம்ஸ் அதிகாரியிடம் குரைத்துக் காட்டிக்கொடுத்துவிட்டால். கிச்சாவை குவாரண்டைனில் போட்டுவிடுவார்கள். நாங்கள் நிம்மதியாக அமெரிக்காவில் நாடகம் போடலாம் என்ற எனது நப்பாசை தப்பாசையாகியது. யெஸ், ‘நாய் வாலையே நிமிர்த்தும்’ கிச்சாவின் வாடிக்கையான அதிர்ஷ்டம் இங்கும் கொடிகட்டிப் பறந்தது.

எச்சுமிப் பாட்டியால் பொத்திப் பொத்தி செல்லமாக வளர்க்கப்பட்டதால், கிச்சாவுக்கு எப்போதும் தான் ‘பாக்டீரியா’, ‘வைரஸ்’ போன்ற தீவிர வியாதிகளின் ஹிட் லிஸ்டில் இருப்பதாக ஒரு ‘மேனியா’ உண்டு. அமெரிக்கா செல்லும் தன் பேரனை ‘மெட்ராஸ்-ஐ’யிலிருந்து ‘எய்ட்ஸ்’ வரை எந்த நோய்க் கிருமிகளும் தாக்காமல் இருக்க சர்வரோக நிவாரணியாக பச்சைக் கற்பூரம், துளசி, மிளகு, கிராம்பு, ஜாதிக்காய், குங்கிலியம் என்று அனல் பறக்கும் அயிட்டங்களை வைத்து ‘கோடாலி தைலம்’ என்ற ஒன்றைத் தயாரித்து கிச்சாவிடம் கொடுத்தனுப்பி இருந்தாள். நெடியடிக்கும் அந்தக் கோடாலி தைலத்தை நெற்றி, புருவ மத்தி, காது மடல் ஓரங்கள், நாசித்துவார விளிம்புகள் என்று ஆரம்பித்து பாதம், விரல் இடுக்குகள் என்று பாதாதிகேசம் வரை தடவிக்கொண்டு எந்நேரமும் அடைகாக்கும் கோழி ரேஞ்சில் கதகதப்பாக இருப்பான் கிச்சா.

கிச்சாவை மோப்பம் பிடித்த அந்த ஸ்நிஃபர் டாகின் கைபர் கால்வாய்க்குச் சமமான நாசித் துவாரங்கள், பொறி பறக்கும் கோடாலி தைலத்தின் காரத்தால் சிறுத்து கடுகானது. அந்த நாய் ‘மவனே, ‘கே’ ஃபார் கிச்சா கேட்டுக்கோடா, எனக்கு மூக்கு சிறுத்தாலும் வாக்கு சிறுக்காது” என்று கிச்சாவிடம் சூளுரைத்து குரைக்க முயற்சிக்க, கோடாலி தைலத்தின் வீரியத்தால் இ.என்.டி. மூன்றும் பாதிக்கப்பட்டதில் அதன் வழக்கமான ‘கம்பீரமான குரைப்பு கணிசமாகக் குறைந்து ‘மியாவ்’ என்ற சத்தமாக வெளியேற, அவமானத்தில் அந்த பிரும்மாண்டமான நாய் பொமரேனியன் ஆனது.

‘கில்லாடியான’ நார்காடிஸ் டீலர்ஸ் போதை வஸ்து கடத்தல்காரர்கள் மறந்துபோய் மூக்கைச் சிந்தி போட்டுவிட்டுப் போன டிஷ்யூ பேப்பரை மோப்பம் பிடித்துவிட்டு, அமெரிக்காவிலிருந்து சைபீரியா வரை ஓடி, அங்கே பதுங்கியிருந்த அவர்களைக் காட்டிக்கொடுத்து போலீஸ்காரர்கள் மூக்கின் மேல் விரலை வைக்கும் அளவுக்கு மோப்ப சிகாமணியான தன் மூக்குக்கு இந்த ‘கே’ ஃபார் கிச்சாவால் நோஸ் கட் கிடைத்துவிட்டதே! இது எப்படி?’ என்ற சந்தேக அதிர்ச்சியில் கிச்சாவின் முகத்தை முதல் முறையாகப் பார்த்த அந்த நாய், சந்தோஷ அதிர்ச்சி அடைந்தது.

பூர்வாஸ்ரமத்தில் டூரிஸ்ட்டாக திருவல்லிக்கேணி வந்த ஓர் ஆசாரமான அமெரிக்கரின் கேர்ள் நாய்க்கு, கிச்சா சிறிது காலம் பருப்பு சாதம், தச்சி மம்மு போட்டு வளர்த்த ‘அனந்தசேஷன்’ என்ற நாய் பாய் ஃபிரண்டாகி, அந்த அமெரிக்கர் கோயிலைச் சுற்றி வருவதற்குள் அவை இரண்டும் தாம்பத்திய வாழ்க்கை நடத்திக் கொண்டு விட்டன. விளைவு, அமெரிக்கா சென்ற டூரிஸ்டின் பெண் நாய் கர்ப்பமாகி அனந்தசேஷன் ஜாடையில் குட்டிபோட்டது.

தமிழக மூளையும் அமெரிக்க வீர்யமுமாக வளர்ந்த அந்த நாய், கஸ்டம்ஸ் மோப்பநாயாக மாறி இப்போது கிச்சா அருகில் நிற்கிறது. நாயைப் பார்த்து, ஜாடையை வைத்து “படவா, நீ அனந்தசேஷன் புள்ளைதானே?” என்று நாய் பாஷையில் கிச்சா கேட்க, பதிலுக்கு அது ஆச்சரியத்தில் வாலை ஆட்டாதபடி “நீங்க.. எங்கப்பாவோட எஜமானரே?” என்று கிச்சா பாஷையில் குரைக்க, அப்புறம் என்ன ‘பிரிந்தவர் கூடினால் குரைக்கவும் வேண்டுமோ?’ லெவலில் அந்த மோப்ப நாய் கிச்சாவின் தோளை தனது இரு கால்களால் கட்டியபடி, தான் ஒரு அமெரிக்க செனட்டர் வீட்டில் செல்லமாக வளர்ந்து கடைசியில் இப்படி கஸ்டம்ஸில் வந்து மாட்டிக்கொண்டு ‘நாய் படாதபாடு’ படுவதாகக் கூறி, விக்கி விக்கி அழுதது.

அனிமல் வெல்ஃபேருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அமெரிக்கர்களில் ஒருவரான அந்த கஸ்டம்ஸ் அதிகாரி, இந்த நாய் – கிச்சா நட்பில் நெகிழ்ந்துபோய் தேம்பித் தேம்பி அழுதபடி கிரேஸி கிரியேஷன்ஸ் குழுவைச் சேர்ந்த எங்கள் அனைவரிடமும் காக்கவைத்ததற்காக மன்னிப்பு கேட்டு, எங்கள் பாஸ்போர்ட்டில் சாப்பாகுத்து குத்த, நாங்கள் ஏர்போர்ட்டை விட்டு வெளியேறினோம்.

இருபத்துநாலு மணி நேர பயணத்தில் வெறும் ஜூஸ், பிரட் என்று சாப்பிட்டு அடக்கம் செய்யும் அளவுக்கு செத்துப் போயிருந்த எங்கள் நாக்குக்கு உயிர் கொடுப்பது போல பார்கவி சுந்தர்ராஜனும் அவரது டாக்டர் நண்பியும் சுடச்சுட பொங்கல், கொத்சு, டிகிரி காபி கொடுத்தார்கள்.

பார்கவி எங்களை வேறு ஒரு டெர்மினலுக்கு அழைத்துச்சென்று ‘பாஸ்டனுக்கு’ செல்லும் டிக்கெட்டைக் கொடுத்தார். அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி அன்று பாஸ்டனில் நடக்கவிருக்கும் எங்கள் முதல் நாடகத்துக்காக லோக்கலாகப் பறக்கும் டெல்டா ஏர்வேஸைப் பிடிக்க ஓடினோம்.

கிச்சாவைச் சந்தித்த கஸ்டம்ஸ் மோப்ப நாய், அமெரிக்கா வந்தாலும் அப்பா கலாசாரத்தை மறக்காமல் தனது பூர்வாஸ்ரம தந்தையான அனந்தசேஷன் ஞாபகத்தில் வெகுதூரத்தில் ஊளையிட்ட பிளேன் சத்தத்தையும் து, மீறி எங்கள் காதில் கேட்டது.

– தொடரும்…

– அமெரிக்காவில் கிச்சா, முதற் பதிப்பு: மார்ச் 2006, கிழக்கு பதிப்பகம், சென்னை.

கிரேசி மோகன் (16 அக்டோபர் 1952 - 10 சூன் 2019)[3] தமிழ்த் திரையுலகில் கதை-வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் பணியாற்றியவர். இது தவிர நாடக ஆசிரியராகவும் பணியாற்றியவர். பல மேடை நாடகங்களை இயக்கி நடித்தார்.[4] அடிப்படையில் பொறியாளரான இவர் நடிகர் கமல்ஹாசன் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார். அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு வசனம் எழுதியதைத் தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *