மாதம் பிறந்தது
கதையாசிரியர்: விந்தியா
தின/வார இதழ்: கலைமகள்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: May 22, 2026
பார்வையிட்டோர்: 668
(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஸ்ரீமான் சேஷாத்ரி, தொழிலிலே முன்னணிக்கு வந்து கொண்டிருக்கும் வக்கீல். நாவன்மையினால் தொழிலில் பொருளீட்டினார்; வாழ்க்கையிலே ஏற்பட்ட கசப்புக்களை, மளத்திண்மையினாலே பொருள் செய்யாமல் வாழ்ந்தார். நிலையான மாத வருமானம் உள்ளவர் அல்ல அவர்; ஆனால் மாதந்தோறும் நினைப்பிற்கு வரும் நிலையான வருத்தம் ஒன்று, அவரது உள்ளத்திற்கு உண்டு.
மாதந்தோறும் முதல் தேதியன்று இரண்டு மணி யார்டர் தாள்களை எடுப்பார். சிந்தனைகள் எழ இடமளியாமல், சரசரவென்று அவற்றைத் தபாலுக்குத் தயார் செய்துவிட்டு, எண்ணி எடுத்து வைத்திருக்கும் பணத் தொகையுடன் அவற்றை உடனே குமஸ்தாவிடம் ஒப்பித்துவிடுவார். அவர் அனுப்பும் இரண்டு மணியார்டர் தொகைகளிலே ஒன்று, அவர் குடியிருக்கும் வீட்டுச் சொந்தக்காரருக்குச் சேரவேண்டிய குடிக்கூலி; மற்றொன்று, என்றோ அவரை விட்டுப் பிரிந்துபோய்த் தனி வாழ்வு வாழும் முதல் மனைவிக்கு அவர் அனுப்பும் தாலிக் கூலி! வீட்டு வாடகையை எப்படிக் கடமை உணர்ச்சி யுடன் தருகிறாரோ, அதே கடமையுணர்வுதான் மற்றொன்றினை அனுப்புகையிலும் இருந்தது. ஆனால் வாடகையை அனுப்பும் கடமையுணர்ச்சியினூடே நன்றியும், மற்றதை அனுப்பும்பொழுது அவமானமும் எழுவதை அவர் உள்ளந்தான் அறியும். வீட்டுக்காரர் வாடகையை உயர்த்திவிடாமல்-பத்து வருஷங்களாக வாங்குவது போலவே – இப்பொழுதும் இருபத்தைந்து ரூபாய்தான் வாங்குகிறார் என்ற எண்ணமே நன்றியுணர்வுக்குக் காரணம். ஆனால் அவருடைய வருமானம் மேல்மேலும் பெருகியதை அறிந்தும், அவர் முதல் மனைவி அதிகமான ஜீவனாம்சத் தொகை கேட்கவில்லை என்பதைக் குறித்து அவர் துளிகூட மகிழவில்லை! சில காலமாகக் கமலா, ரேடியோவிலே பாடியும், பாட்டு ‘டியூஷன்’கள் ஏற்றும் வருமானத்தை வளர்த்துக்கொள்கிறாள் என்பது சேஷாத் திரியின் செவிகளை எப்படியோ எட்டியது, ‘உன் ஜீவனத்திற்கு நான் இனிப் பொருள் தரவேண்டிய அவசியம் இல்லை’ என்று அவர் வாதாடி யிருக்கலாம் ஆனால் அதைப்பற்றி அவர் ஒன்றுமே நினைக்க விரும்பவதில்லை. எத்தகைய மாறுதலையும் அவர் இந்த விஷயத்திலே செய்ய நினைக்கவில்லை.
இரண்டொரு முறைகள், கமலா விலாசமாற்றம் தெரிவிப்பதற்காகக் கடிதங்கள் எழுதினபோது சேஷாத் திரி கலக்க முற்றார். பின் ஒரு தடவை கமலா, நாலு வரி கொண்ட நீண்ட கடிதமே எழுதிவிட்டாள்! எதற்கு? நன்றி கூறுவதற்கு. “நான்கு மாதங்களாக, மணியார்டர் டாண் என்று மாதம் பிறந்ததும் வந்து விடுவது கண்டு அகமகிழ்கிறேன். சில சமயம் எனக்கு வந்துசேர இரண்டொரு நாள் தாமதமானாலும், அங்கே நீங்கள் அனுப்பும் தேதி, முதல் தேதியாகவே இருந்து வருகிறது. இனியும் இவ்வாறே அனுப்பிவந்தால் நலம். மாதச் சம்பளம்போல இது எனக்குப் பேருதவியாக இருக்கிறது” என்று எழுதினாள் கமலா. உடனே அதைக் கிழித்துப் போட்டுவிட்டார் சேஷாத்திரி. எனினும் அதைப் படித்ததன் நினைவு எங்கே போகும்? ”நன்றி கூறுகிறாளா? இளக்காரம் செய்கிறாளா?” என்று கவன்றார். இளக்காரம் தொனிப்பதாகவே எண்ணி, மனம் பதறினார். ‘உன்மேல் சிரத்தை வந்துவிடவில்லையடி, அகங்காரி! வீட்டின் சொந்தக்காரர் வெளியூர் வாசம் செய்வதனால் மாதம் பிறந்ததும் வீட்டு வாடகையை அவருக்கு அனுப்பும்பொழுது, உனக்கும் தொலைக்கிறேன்! அவ்வளவுதான்!’ என்று ஒரு மறுமொழியை மனத்துள் வீசினார். கடிதம் எழுதுவாரா? அவளை லட்சியம் செய்வதுபோல் ஆகிவிடாதா?
ஒரு நாள் வீட்டின் சொந்தக்காரரிடமிருந்து ஒரு, கடிதம் வந்தது. “நாங்கள் பெருந்தன்மையாக வாடகை உயர்த்தாதிருந்தோம். நீங்களோ அற்பத்தனம் காட்டி விட்டீர்கள். மணியார்டர் கூலி ஆறு அணாவை வெட்டி விட்டு அனுப்பியிருக்கிறீர்கள். கட்டணச் செலவு உமது தான். இனியும் உம்மிடம் எங்கள் பெருந்தன்மையைக் காட்டிப் பயன் இல்லை. இனி நீர் நாற்பது ரூபாய் வாடகை தரவேண்டும். இப்போது அந்த வீட்டிற்கு எழுபதும் எண்பதும் வரும். ஆனால் நீர் பத்து வருஷமாக இருப்பதால், நாற்பதுடன் நிற்கிறேன். வீட்டின் பொருட்டு, நாற்பது ரூபாய் எட்டணா செலவு செய்ய விருப்பம் இருந்தால் நீர் அந்த வீட்டிலே நீடித்து இருக்கலாம்!”
கடிதங் கண்டு, கோபமும் வருத்தமும் கொண்டார் சேஷாத்திரி. இருபது மாதங்களாக அனுப்புவது போலவே சென்ற மாதமும் அனுப்பினார். ஆனால் இப்படிக் கடிதம் வந்திருக்கிறதே!
உடனே மேஜை அறையில் துழாவினார். இந்தத் தடவை, தம் கையாலே மணியார்டரை எழுதாமல் பணத்தை மட்டும் குமாஸ்தாவிடம் கொடுத்தார். குமாஸ்தா தவறு செய்துவிட்டார். கமலாவின் பெயருக்கு அனுப்பும் மணியார்டருக்குத்தான் கட்டணம் குறைப்பது வழக்கம். இந்தத் தடவை அது மாறிவிட்டது. அவளுக்கு முழு இருபத்தைந்து ரூபாய் அனுப்பித் தவறு செய்துவிட்டார் குமாஸ்தா.
சேஷாத்திரியைப் பொறுத்தமட்டில் இந்தச் சிறு பிழை, பெரும் புயலை எழுப்பிவிட்டது. ஆனாலும் அவர் குமாஸ்தாவைக் கோபிக்கவில்லை. வீட்டின் சொந்தக்காரருக்கு ஒரு கடிதம் எழுதினார். பிழை, குமாஸ்தாவினுடையது என்றும், ஆறணாவிற்கு அற்பத்தனமாக ஆத்திரத் தபால் போட்டது வீட்டுக்காரரே என்றும் சுட்டிக்காட்டி எழுதினார்.
நாற்பது ரூபாய் வாடகைகூடக் குறைவுதான் என்பதைத் தாம் ஆமோதிப்பதையும் கூறி, நாசுக்காகத் தம் பெருங்குணத்தைக் காட்டி, அந்தக் கடிதத்தை விடுத்தார். ஆனால் சேஷாத்திரிக்கு வேறொரு கவலை. “கட்டணத்தைக் குறைக்காமல் அனுப்பியிருப்பது கண்டு சந்தோஷிக்கிறேன்!” என்று ஏதேனும் சொல்லிக் கமலா கடிதம் எழுதிவிடுவாளோ?
கொஞ்சநாள் வரையில் அவருக்குத் திகில்தான். இருபது நாள் கழித்துத்தான் அமைதி ஏற்பட்டது. “எழுத மாட்டாள்; முடியாது” என்று தோன்றியது. இதற்குள் மீண்டும் அடுத்த மாதம் பிறந்தது.
மணியார்டர் தாள்கள் இரண்டையும் எடுத்தார் சேஷாத்திரி. ‘நாற்பது ரூபாய் வீட்டு வாடகை; கட்டணம் எட்டணா. சாரதா நிலையத்திற்குக் குடிக்கூலியாக இதை ஏற்கவேண்டும்’ என்று எழுதினார், கமலாவுக்கு அனுப்புவதற்காகத் தாளின்மீது பேனாவை ஊன்றினார். ஆனால் என்றும்போலக் கை ஓடவில்லை. தயங்கினார்.
ஆறு அணாவைக் குறைப்பதா?
அன்று வந்த வீட்டுக்காரர் கடிதம் கண்டு, தமக்கு என்ன தோன்றிற்று? ‘ஆறு அணாவிற்காக அற்பத்தனமாக ஒரு கடிதம் இப்படி எழுதிவிட்டானே? உள்ளூரினின்று வெளியூர் போனவன் அவன்தானே? கட்டணச் செலவு எனதல்ல என்று நான் வாதாடக்கூடாதா?’ என்று கோபம் வந்தது. ஆறு அணா விஷயம், வீட்டுக்காரர்மேல் இருந்த மதிப்பைப் பறித்துவிட்டது!
கமலா என்ன நினைக்கிறாளோ?
கமலாவுக்கு இருபத்தைந்து ரூபாய் ஜீவனாம்சம் ‘அனுப்புவ’தாகத்தான் ஆதியிலேயே பேச்சு கொடுப்பதாக அல்ல! அப்படி இருக்க, முழுத்தொகையாகிய இருபத்தைந்தும் அவளுக்குச் சேரவேண்டாமா? அவள் விஷயத்திலே கண்டிப்பும் கறாருமாக, மனம் கல்லாகிக் கிடப்பதைக் காட்டிக்கொள்ள, ஆறு அணாவைக் குறைப்பது சரிதான்; ஆனால் அது நியாயந்தானா?
‘உன் பெருந்தன்மையாலே அவள் மேன்மேலும் வாடிப்போக வேண்டாமா? துணிச்சலும் அகம்பாவமும் கோழைத்தனமாக மாறவேண்டாமோ அவளுக்கு!’ என்று சிந்தனை ஒரு சுழல் அடித்தது!
குமாஸ்தாவை அழைத்தார். “இதோ பாரும்; தப்புச் செய்யவே வழியில்லை. நாற்பது ரூபாய்க்கு எட்டணா, இருபத்தைந்திற்கு ஆறணா. அறுபத்தாறு ரூபாய்; இதோ நானே மணியார்டர் எழுதியிருக்கிறேன். வெயிலிலே திரும்பி வருவீர்களே; அந்த இரண்டணாவுக்கு ஒரு ‘கூல் டிரிங்க்’ சாப்பிட்டு விடுங்கள்!” என்று கூறிவிட்டு, ரூபாயுடன் குமாஸ்தாவை அனுப்பிவிட்டார். மனசு சற்று லேசாயிருந்தது.
ஆபீஸ் அறையை விட்டு வெளிவந்த சேஷாத்திரி, தம் முகத்தைக் குளிர்ந்த நீரால் அலம்பிக்கொள்ளப் பின் கட்டுக்கு வந்தார். அங்கே இருந்தாள் வைதேகி. அவளுக்குத் தெரியும், கணவர் மணியார்டர்களை அனுப்பி விட்டு வருகிறார் என்று.
இதுபோன்ற சமயங்களில் வைதேகி, அமைதியை நிலைநாட்டும் அழகு அற்புதம். இளையாள் என்னும் நினைப்பை ஒழித்தவளாய், சந்தோஷமும் உரிமையும் துலங்கும்படியாக எல்லாப் பெண்களையும் போல நாலு தினுசாக இருப்பவள் அவள். மாதம் பிறந்ததும் சிறிது மாறுவாள். மற்றச் சமயங்களிலே சினிமாவிற்குப் போகாத சிணுக்கத்தையும், தண்ணீரான பால் பற்றிய அலுப்பையும் வெளியிடத் தயங்காமல், மனைவி என்னும் ஸ்தானத்தின் முழு உரிமையையும் நிலைநாட்டுவாள் அவள். மாதம் பிறந்தால் அலுப்புச் சலிப்புகளை எட்ட நிற்க வைத்து விடுவாள். வீட்டிலே தண்ணீர்க் குழாய் கோளாறாகி, இடக்குச் செய்தால்கூட அலுப்புக் காட்டமாட்டாள்.
இன்றும் வைதேகி சிரித்த முகத்துடன். “டிபனுக்கு இன்று மசால்வடை பண்ணுகிறேன். நிறையவே வைக்கிறேன், மற்றவர்களுக்கும் கொடுப்பதற்கு!” என்று சொன்னாள்.
“பேஷாய்!” என்று உற்சாகத்துடன் கூறிவிட்டு, துண்டினால் முகத்தைத் துடைத்த வண்ணம் ஓரப்பார்வையாக மனைவியைப் பார்த்தார் அவர். பிறகு, குரலிலே தெளிவான ஒரு மாறுதல் தொனிக்க, “இன்றைக்கு முதல் இந்த வீட்டிற்கு வாடகை நாற்பது; நினைவிருக்கிறதா?” என்று கேட்டார்.
‘கணவன்தான் ஒரு பெண்ணின் முதல் குழந்தை’ என்று யாரோ ஒரு பெரியார் கூறிய அறிவுரைக்கு விளக்கம் வைதேகி. தன் கணவன்பால் அவளுக்குப் பரிவு நிரம்பிய அன்பு. முன்பே நொந்த அவர் மனம், மேலும் துன்புறுவதை அவள் விரும்பவில்லை. கமலாவுக்கு அவர் அனுப்பும் மணியார்டரைப் பார்க்க வேண்டும், சோதனை செய்யவேண்டும் என்னும் எண்ணம் அவளுக்குக் கிடையாது. ‘அந்தப் பெண்ணிடம் பற்றுதலே இல்லாதவர். ஆகையால்தானே நம்மை மணந்தார்?’ என்ற நம்பிக்கை வைதேகிக்கு. மணியார்டர் அனுப்புந்தோறும் அந்த முதல் மனைவியிடம் இருக்கும் குறைபாடுகளும் அவள் செய்த அட்டகாசங்களுமே அவர் நினைவில் எழும் என்று அவள் உறுதியாக எண்ணியிருந்தாள்.
அந்த மனைவி வழக்குத் தொடர்ந்து, வாதாடி மாதந் தோறும் ஜீவனாம்சம் பெற்று வந்தாள். வழக்குத் தொடர்ந்த நாளிலே சேஷாத்திரி இளம் வக்கீல் இளைய மனைவி கொண்ட புதுமை அது. அந்த நாளிலே அவர் என்ன பாடு பட்டார்! மனம் வெதும்பினார். மொத்த மாகவே பெருந் தொகையை முதலில் கொடுத்துவிட்டு, ‘பாரம் ஒழிந்தது’ என்று நிம்மதி அடைய விரும்பினார். வருமானம் அதிகம் இல்லாவிடினும், எப்படியோ பணம் புரட்டி, ‘தொந்தம் தொலைந்தது’ என அமைதிகொள்ள எண்ணினார். பயமும் கூச்சமும் துக்கமும் துளும்பும் விழிகளுடன் வைதேகி நோக்கிய நோக்குகளை யெல்லாம் கண்டு, தவிதவித்தார். ஆனால் கமலாவும் அப்பொழுது உயிருடன் இருந்த அவள் தாயும் அதற்கு உடம்படவே இல்லை. ‘முடியாது; மாதச் சம்பளம் போலத்தான் வரவேண்டும்’ என்று அடம் பிடித்தார்கள். நீதிமன்றத்திலும் அப்படியே முடிவாயிற்று, குடும்பச் சிக்கல், அம்பலத்திற்கு ஏறிய அந்த நாளிலே, சேஷாத்திரி பட்ட துன்பம் சொல்ல வொண்ணாதது. கண்கலங்கி அழுதே விட்டார், வைதேகியிடம்.
அன்றுதான் வைதேகி உறுதி பூண்டாள். கடமையைச் செய்வதற்காகக் கணவர். மாதந்தோறும் மணியார்டர்த் தாளிலே கையொப்பம் இடவேண்டும். அந்தச் செயலை அவர் தவிர்க்க இயலாது. கமலாவின் பெயரை இரண்டோர் இடங்களிலே எழுதி ஆகவேண்டும். யந்திரம் இயங்குவது போல் அவர் கைகள் இயங்கும். மனத்திலே அவள் நினைப்பு வந்தாலும், அது துன்ப நினைவாகவே இருக்கும். அதை ஒரு நாளும் பொருள் செய்யக்கூடாது. இதுதான் வைதேகி செய்துகொண்ட சங்கற்பம்.
அப்பொழுதுதான்- அந்தத் துன்பத்திலே – சேஷாத் திரிக்கும் வைதேகிக்கும் ஓர் உள்ளப் பிணைப்பு ஏற்பட் டது. வைதேகி அச்சமும் கூச்சமும் நீங்கியவளாய்ப் பரிவும் கனிவும் கொண்டாள். கணவரிடம். ஆறுதலும் தேறுதலும் சொல்லி, மனமார அன்பு செலுத்தித் துயராற உதவிய வைதேகியைச் சேஷாத்திரி மதிப்புடனும் கௌரவத்துடனும் நேசிக்கத் தொடங்கினார்.
கணவனும் மனைவியும் துன்பத்தின் மூட்டத்திலே அன்பை வளர்த்து வந்தனர். குழந்தை பிறப்பதற்கான அறிகுறிகள் பன்முறை உண்டாகியும், ஒரு குழந்தையும் வைதேகியின் வயிற்றிலே ஒன்பது மாதம் வரை நீடித்திருக்கவில்லை. எல்லாம் கருச் சிதைவுகள், ஒவ்வொரு முறையும் உயிருக்குச் சிக்கல். கமலா, சேஷாத்திரியோடு வாழ்ந்தது சிலகாலம். அவள் தன் தாயைப் போலவே வாய்த்துடுக்குக்காரியாக இருந்தாள். மாமியாரின் சொல்லுக்கு அடங்காமல் பொல்லாங்கு தேடிக்கொண்டாள். தன் தாயின் அரவணைப்புப் போதும் என்று விலகிக்கொண்டு போய் அகம்பாவம் தணியாத பெண்ணாய் விளங்கிப் புற அழகை யாரும் மதியாதபடி செய்து, கொண்டுவிட்டாள்.
கமலா இப்போது தாயை இழந்த அநாதை! ‘பெண்ணோ, பொன்னோ?’ என்று பெண்ணைப் பாதுகாத் துப் பரிவுகாட்டிப் பாழாக்கிவிட்ட பிறகு, கண்ணை மூடி விட்டாள் அந்தத் தாய். ஆனால் அவள் செல்லங் கொடுத்துக் கமலாவுக்கு இழைத்த தீங்கு இன்னமும் நிலைத்திருக்கிறது. அந்தத் தாயின் பக்கபலம் இல்லாதிருப்பின் கமலாவுக்கு இந்த நிலை வந்திராது. இளையாளாக வாழ்க்கைப்படும் துன்பமும் வைதேகிக்கு ஏற்பட்டிராது.
குற்றம், தன்பேரிலும் உண்டோ என்று சேஷாத்திரிக்குச் சில சமயம் தோன்றும்; வக்கீல் ஆகிய அவர், யார் பக்கமும் நீதி, அநீதி காணக்கூடியவர் அல்லவா? ஆனால் அவருடைய சஞ்சலத்திற்கு அணைபோட்டுவிடும் வகையிலே வைதேகி இருந்து வந்தாளாகையால், சேஷாத்திரி, வாழ்க்கையிலே அமைதியையே பெற்றார். ‘வாழ்க்கை. வாழ்வதற்கு’ என்று அவரும் வைதேகியைப் போலவே நினைத்தார். உள்ளூர் மாதர் சங்கத்து அங்கத்தினர்களிலே ஒருத்தியாக வைதேகி, வெளியுலகிலும் குதூகலத்துடன் உலவியதை அவர் வரவேற்றார். தாழ்வு மனப்பான்மையே இல்லாதவளாகப் பெருமிதத்துடன் அவள், வீட்டிலும் வெளியிலும் உற்சாகத்துடன் உலவுகிறாள் என்றால் அவள் மனத்திலே குறையே இல்லை என்பதுதானே பொருள்?
கடந்த ஏழெட்டு ஆண்டுகளில் கமலா இரண்டு மூன்று ஊர்களிலே வாசம் மாறியிருந்ததை மட்டும். வைதேகி, யாரார் மூலமோ கேள்வியுற்றாள். ஆனால் கணவருக்கு விலாசமாற்றம் பற்றிக் கடிதங்கள் வந்தனவா என்றும், அவர் அந்தச் சமயங்களிலே நினைத்தது என்ன என்றும் ஆராய்ச்சி செய்ய அவள் புகவில்லை. ஜீவனாம்சத் தொகையிலே முன்பு ஆறணாக் கட்டணம் வெட்டப்பட்ட தும் அவளுக்குத் தெரியாது; பிறகு ஆறணாக் கூட்டப்பட்டதும் தெரியாது.
ஆனால் கமலா சென்னையிலே ஹிந்தி வாத்தியாரம்மாளாகக் குடியேறிவிட்டதைச் சேஷாத்திரியும் வைதேகியும் எறக்குறைய ஒரே சமயத்தில் அறிந்தார்கள்.
விலாச மாற்றம் தெரிவித்துக் கமலா சேஷாத்திரிக்குக் கடிதம் போட்டாள். ஹைகோர்ட்டிலே அலுவல் விஷயமாகச் சேஷாத்திரி அடிக்கடி சென்னை செல்வார். ஆகையால், அவர் சிறிது மனக்கிளர்ச்சிக்கு உள்ளானார். எங்கேனும் கமலாவைப் பார்க்கும்படி நேர்ந்துவிடுமோ என்று அஞ்சி னார். ‘தென்பட்டாலும் பராமுகமாக இருப்பது சிரமமா!’ என்று பிறகு மனத்தைத் தேற்றினார்.
வைதேகி, மாதர் சங்கத்திலேதான் கேள்விப்பட் டாள். ‘சென்னையிலே என் தங்கைக்குப் பாட்டும் ஹிந் தியும் கற்றுத்தர வந்திருக்கிறாள் ஒருத்தி. கமலாதேவி யாம், முதல்தரமான பாட்டு. அவளை நாம் இங்கே அழைக்கலாம். அடுத்த மாதம் பிறந்ததும் இங்கே கச் சேரி வைக்கலாம்’ என்று உற்காகமாகப் பேச்சைத் துவக்கிய ஒரு பெண், அந்தக் கமலாதேவியின் நிலைமையை விளக்கும் சில தகவல்களையும் சேர்த்துச் சொல்லிவிட் டாள்; அங்கலாய்ப்புடன் தான் சொன்னாள். அருகில் இருந்த ஓர் அங்கத்தினள், தன் கண்களை ஒரு தினுசாகச் சுழற்றி, “பேசாதே!” என்று அந்தப் பெண்ணுக்குச் சமிக்ஞை செய்துவிடவே, அந்தப் பெண் அடங்கிவிட் டாள். பல பேருக்கு அந்தக் கமலாதேவி யார் என்பது தெரிந்திருக்கிற தென்று அறிந்து கொண்டாள் வைதேகி. சங்கத்தின் காரியதரிசியைக் கண்டு, அவள்தன் மனத்தைத் திறந்து விட்டாள்.
‘அவள் பாடும் சங்கீதம் எப்படி இருக்கிறது என்று கேட்கத்தான் நான் விரும்புகிறேன். அவளையே நாம் அழைப்போம்’ என்று கூறினாள். காரியதரிசிக்கு வைதேகியின் துணிவு, வியப்பையும் பரிவையும் உண்டாக்கியது. ‘வேண்டாமே வைதேகி; உன் மனம் நோகலாம்’ என்று சொன்னாள். ஆனால் வைதேகியின் வற்புறுத்த லின்மேல், கமலாதேவிக்கு அழைப்புப் பறந்தது. கமலா தேவியின் விலாசத்தை அறிய, வைதேகி தூதுபோக அவசியமின்றி, சேஷாத்திரி ஜீவனாம்சம் அனுப்புவது அம்பலமாகாமல், நாரீசங்கத்தின் அழைப்பு, கமலாவிற் குப் போனதுதான் ஆச்சரியம்! கமலாவின் சங்கீகத்தைப் புகழ்ந்த பெண் மூலம் காரியம் எளிதிலே நடந்துவிட்டது. ஆனால் அழைப்பைக் கமலா ஏற்றுக்கொள்ளவில்லை. ‘இதுநாள் வரையில் மேடை ஏறிக் கச்சேரி செய்ய நான் முயன்றதும் இல்லை. விரும்பியதும் இல்லை. இளஞ்சிறு பெண்களின் கலை வளர்ச்சிக்கு என் சங்கீதம் இப்போது உதவுவதே எனக்குப் போதும். மன்னியுங்கள்’ என்று எழுதினாள் கமலா. வைதேகி இதைக் கேட்டு, மெய் சிலிர்த்தாள். கணவனிடம் சொல்லத் துடித்தாள். நா எழ வில்லை.
ஆனால் சேஷாத்திரிக்கு விஷயம் எட்டிவிட்டது. கமலாவின் சங்கீதம் நடைபெற்றிருந்தால், பெண்கள் குழாம் அதைப் புகழ்ந்திருக்கலாம்; இகழ்ந்தும் இருக்க லாம். ஆனால் கமலா எழுதிய சிறு கடிதமோ, மிகப் பெரிய கிளர்ச்சியை எழுப்பிவிட்டது. அதைப் பெண்கள், தத்தம் இல்லங்களிலே பரவச் செய்துவிட்டனர். அத்தகைய் கடிதம் வந்ததைக் கேள்வியுற்ற சேஷாத்திரி, *கமலாவின் கடிதமா? என்று அதிசயப்பட்டார். ஏதேனும் பொது இடத்திலே ஒரே ஒருமுறை கமலாவைப் பார்க்கும் படி நேர்ந்தால், அவளுடைய தோற்றத்தின் மூலம் ஏதேனும் மாறுதல் ஏற்பட்டிருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது அவருக்கு.
அவருடைய இந்த நினைப்பு, விடுவிடுவென்று வளருவ தற்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு மாத இறுதியில், சென்னைக்குக் கோர்ட்டு அலுவலாகப் போன சேஷாத்திரி, அங்கே நாலு நாள் தங்க நேர்ந்தது. அவர் சென்னையிலே இருந்தபொழுது மாதம் பிறந்தது.
உள்ளூர் மணியார்டர் அனுப்புவதற்காகத் தாள்களை எடுத்த கைகள், பேனாவை ஏந்தத் தயங்கின. வீட்டின் சொந்தக்காரரைப் பார்த்து நாளாயிற்று. கையிலேயே வாடகைப் பணத்தைக் கொடுத்துவிட்டால் என்ன? அவளுக்கும் வீட்டிலேயே கொடுத்துவிட்டால்? ஒரு முறை, ஒரே தடவை; நொடியிலே பணத்தைத் தந்து விட்டு வரலாம்!
முதல் நாள் மாலைதான் அவர், கமலா வசிக்கும் தெரு வழியே நண்பர் ஒருவருடைய மோட்டாரிலே போனார். இரண்டு ஆண்டுகள் அவருடைய மனைவியாக வாழ்ந்திருந்த கமலா, அந்தத் தெருவில் வசிப்பதை நினைத்தார். அப் பொழுது எழுந்த பெருமூச்சு, கழுதைப்புலியின் விஷந் தோய்ந்த சுவாசம்போல் ஆகி, அவருக்குத் தளர்ச்சியையும் துன்பத்தையும் உண்டாக்கிவிட்டது.
சென்னையிலே அலுவலாக வருபவர் ஆதலால் ரிக்ஷாவிலே ஏறும் வழக்கமே அறியாத சேஷாத்திரி, ஒரு ரிக்ஷாவை அமர்த்தினார். முதலில் கமலாவைக் கண்டு. பணத்தைத் தந்து, ஒரு சுமையை இறக்கிக் கொள்ளலாம் என்றும், பிறகு வீட்டின் சொந்தக்காரரைப் பார்க்கலாம் என்றும் எண்ணினார்.
தெரு முனையில் நுழைகையிலேயே படபடப்பு ஏற் பட்டது; தம்மையே கண்டித்துக்கொண்டார். வீட்டின் இலக்கத்தை நினைவு கூர்ந்தார். வீடும் வந்தது. சுற்று முற்றும் பார்த்தார். யாரையும் காணவில்லை. திரும்பிவிட எண்ணினார். முன் வைத்த காலைப் பின் வைக்க மனம் இல்லை. ரிக்ஷாவினின்றும் இறங்கினார். அந்த வீட்டிலே எத்தனையோ அறைகள் இருக்கலாம். எத்தனை ஒண்டுக் குடிகளோ? சிறிது மலைத்தார். பையன் ஒருவன் கையிலே பை சகிதம் ஓடோடி வந்துகொண் டிருந்தான். அந்த வீட்டினின்று. அவனைத் தடுத்து நிறுத்தி, விசாரித்தார் சேஷாத்திரி. “ஓ! கமலா தேவியா? உள்ளே போங்கோ! கடைசி அறை” என்று சொன்னான் பையன்.
‘கடைசி அறை! எனக்குத்தானே? வைதேகி அறியா மல் வருகிறேனே! எனக்கு வேணும் பூசை!’ யாரோ நாலு அறை அறைவதுபோல மனசு குன்றிவிட்டது. உள்ளே போகச் சேஷாத்திரி விரும்பவில்லை. ஓடும் பையனை நிறுத்தி, ‘ஒரு காரியம், பையா. இதிலே ரூபாய் இருக்கி றது; மாமிக்குக் கொடுத்துவிடுகிறாயா?’ என்று கேட்டார். “கொடுக்கணும்னா கொடுக்கிறேன். சட்டுன்னு தாங்கோ. சீக்கிரம் காய் வாங்கி வராட்டா அம்மா என்னைத் திட்டுவாள்.”
சேஷாத்திரி, பணப்பையைத் திறக்கும்பொழுதே ஒரு குரல் கேட்டது. “நல்ல வேளை ; இருக்கையா பாபு? எங்கே, எனக்கும் கொஞ்சம், கால் வீசை தக்காளிப் பழம் வாங்கி வரயாப்பா?’ என்று கேட்ட அந்தக் குரல் சேஷாத்திரியைத் தலைநிமிரச் செய்தது.
கமலாதான் அந்தக் குரலுக்கு உடையவள்!
“மாமியே வந்தாச்சு; நீங்களே தந்துடுங்கோ. தக் காளியா? அரைச் சேரா?’ என்று பையன் ஓடிவிட்டான்.
“வாருங்கள்” என்று கமலா, தட்டுத் தடுமாறின படியே வரவேற்றாள். “வாடகைப் பணத்தைக் கொண்டு வந்தேன்,கொடுத்து விடலாமென்று” என்று குழறினார் சேஷாத்திரி.
“வாடகையா!” என்று கேட்கப் போதுமான துணிவு இப்போது கமலாவுக்கு இருந்தது.
“இல்லை.– வாடகைன்னா?– அதுவும் கொண்டு வந்திருக்கிறேன் – அதனால்- நான் தரவேண்டிய பணம் இதோ!”
பணப்பையைத் திறக்கத் தலைகுனிந்த சேஷாத்திரி, “வாசலிலேயே நிற்கிறேளே! உள்ளே வாங்கோ!” என்று, கமலா கூறியதும் அவளைத் தொடர்ந்து சென்றார்.
ஏழெட்டு அறைகளிலே வசிக்கும் சிறு சிறு குடித் தனங்களைத் தாண்டிக்கொண்டே போனார்கள் இருவரும். கடைசி அறை; அறை வாசலிலேயே அழகிய திரை. உள்ளே சென்றதும் நாற்காலியிலே அவரை அமரும்படி கூறி, எட்டி நின்றாள் கமலா.
யார் பேசுவது? என்ன பேசுவது?
“முதல் தேதியே,-காலங்கார்த்தாலே” என்று கூறிச் சிரிப்பை வரவழைத்துக்கொண்டாள் கமலா. சற்று மெலிந்திருந்த அவளுடைய தோற்றமும் கண்களிலே தணிவும் மலர்ச்சி இல்லாத சிரிப்பும் தெளிவாகத் தெரிந் தன. வாழ்க்கையிலே, மணம் இருந்தும் அவள் அதை நாற்றமாக மாற்றிக்கொண்டு, துன்புறுவதை அவளே நொந்துகொள்கிறாள் போலும்!
“என்னவோ தோணித்து; இப்படி வந்தேன்” என்று சேஷாத்திரி, உண்மையைச் சொல்லிவிட்டார். கை, பணப் பையைத் திறந்தது. பொட்டலத்தை எடுத்தார். அதை மெல்லப் பெற்றுக்கொண்டு, உடனே பக்கத்தில் இருந்த சிறிய அலமாரியிலே வைத்துவிட்டாள் கமலா. எண்ணிப் பார்க்கத் தோன்றுமா அந்தச் சமயம்?”
“ஏதோ எனக்கும் வரும்படி வருகிறது; இனிமேல் வேண்டாம் என்று எழுதி விடலாமா என்று சில சமயம் நினைப்பேன். ஆனால் அப்படி எழுதவும் மனசாகவில்லை.” இதைச் சொல்வதற்கு, முதலில் ஏற்பட்ட தடுமாற்றத்தை எப்படியோ சமாளித்துக்கொண்டாள் கமலா.
‘மனசாகவில்லை!’
எத்தனை ஒளிவு மறைவின்றிச் சொல்கிறாள்? அவள் சுபாவமே இதுதானே? அந்த நாளிலேயே அவள் பேசு வதும் கேட்கும் கேள்விகளும் பளிச்சுப் பளிச்சு என்று, சிறந்த வக்கீல் பேசுவதுபோலத்தானே இருக்கும்? அதனால்தானே வந்தது தொல்லை ?
சேஷாத்திரி, ஒரு தடவை சும்மா பார்த்தார். பேச வில்லை. ‘எனக்கும் அதிக வருமானம் வருகிறது’ என்று மனத்துள் நினைத்தார்.
“நானே எழுதணும் என்று நினைத்தேன். வக்கீல் என்ற தோரணையிலாவது இங்கே ஒரு முறை உங்களை வரச்சொல்லணும் என்றுதான் யோசனை” என்று கமலாவே மீண்டும் பேசினாள்.
‘எத்தனை விஷயங்கள் எழுத நீ நினைத்தாய்?’ என்னும் வினா, சேஷாத்திரியில் நாவிலே ஊசலாடியது; ஆனால் வெளிவரவில்லை.
“நீங்கள் தான் யோசனை சொல்லணும். ஊரில் இருக்கிற வீட்டைப்பற்றித் தகராறு ஒன்று ஆரம்பம்.”
தொழிலை ஒட்டிய விஷயம் வந்ததும் சேஷாத்திரியின் குரல் எழும்பிவிட்டது.
“அப்படியா? எங்கே, நான் பார்க்கிறேன்! சொல்லுங்கள் … சொல்லு, எல்லாம்.”
கமலா ஒரு தினுசாக அவரைப் பார்த்துவிட்டு, அலமாரியினின்று ஒரு கடிதத்தை எடுத்துவந்து, அவரருகே முக்காலியின் மேல் வைத்தாள்.
அந்த மிரட்டல் கடிதத்தைப் படிக்க அவர் முனைந் ததுமே, கமலா, பக்கத்தில் உள்ள சிறு அறைக்குள் போனாள். லொடபுடவென்று ஏதோ ஓசை. சேஷாத்திரி தலை நிமிர்ந்தார். இப்பொழுதுதான் அந்த அறையைக் கவனித்தார். சுத்தமான அறை; கச்சிதமாகப் பொருள்கள்; சவரோரம் உறையிலே-அது தம்புராதான்- வீணை அல்ல; இரண்டு குமிழ் இல்லை. ஏதேனும் புத்தகத்திலே, ஆசைக்கு, கமலா-சேஷாத்திரி என்று எழுதியிருப்பாளோ?… ஏதாவது புத்தகத்திலே இருக்கலாம்!
மீண்டும் ஓசை அடுத்த அறையிலே, கடிதத்தைப் படிக்கத் தொடங்கினார் சேஷாத்திரி. கமலா வந்தாள். கையிலே கோக்கோக் கிண்ணத்தை ஏந்தி.
“எதற்கு?” என்று கேட்டார் அவர்.
“குடிக்கத்தான்!-குடிக்கக் கூடாதா?” என்று குறு நகை செய்தாள் கமலா.
மறுமொழி கூற இயலாத சேஷாத்திரியின் வாய், கோக்கோவின் துணையை நாடியது.
“நான் கவனிக்கிறேன். இந்த வீட்டு விஷயம். உங்கள் அம்மாவின் வீடு… உனக்குத்தான் சேரும். யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது. நான் இப்போது போகணும். அப்புறமாய் வருகிறேன்.”
சேஷாத்திரி எழுந்துவிட்டார். வாசல் வரையில் வந்து அவரை வழியனுப்பக் கமலாவும் பின் தொடர்ந்தாள்.
“ஒண்ணும் சொல்லாமல் ஓடிப் பூட்டியே சாமி!” என்று கோபித்தான் ரிக்ஷாக்காரன்.
“இன்னொரு இடத்திற்கும் போகவேணுமேப்பா” என்று கூறியவாறே, ரிக்ஷா ஏறினார் சேஷாத்திரி. கமலா, “நமஸ்தே!” என்று கைகூப்ப, சேஷாத்திரியும் கை கூப்பினார்.
கமலா, தெருத்திண்ணையிலேயே நிற்பதைத் தெருத் திருப்பம் காட்டியது. ஏதோ தகாத காரியம் செய்துவிட் டாற்போன்ற பதற்றம் ஒரு புறமும், சாதிக்க முடியாத ஒரு செயலைச் சாதித்து விட்டாற்போன்ற பெருமிதம் மறு புறமும் ஆட்கொண்டன சேஷாத்திரியை. வைதேகியை நினைத்துக்கொண்டார். ‘உனக்குத் துரோகமா?’ என்று மலைத்தார் ஒரு கணம். ‘துரோகமாகுமா? கமலா யார்? வேசியா? பிறன் மனைவியா? இல்லையே! ஐயோ, எப்படித் துரோகம் ஆகும்? இரண்டாண்டுகள் என் மனைவியாக வாழ்ந்தவளாயிற்றே கமலா! வைதேகி?’
கமலா! வைதேகி! சுருள் கூந்தலும் கருவிழிகளும் மாநிற மேனியுங் கொண்ட வைதேகி; இளைய மனைவி/ சிறிது செம்பட்டை பாவிய குழலும், நீள் விழிகளும், சிவந்த மேனியுங் கொண்ட கமலா: முதல் மனைவி! வைதேகி, கமலா இருவரும் அவர் மனைவிகள். அவர் இரு வருடனும் வாழ்ந்தால் என்ன? கூடாதா? இன்றைச் சட் டம் இருமனைவிகளைத் தடை செய்கிறதா?…ஆனால் சட்டம் தெரிந்த வக்கீல் ஆயிற்றே அவர்? சட்டத்தின் கெளிவுசுளிவு அறிவாரே!
சேஷாத்திரி,தாம் குடியிருக்கும் வீட்டின் சொந்தக் காரருக்கு வாடகைப் பணம் கொடுக்க, மீண்டும் பணப் பையைத் திறந்தபொழுதுதான் பணப்பொட்டலம் மாறி விட்டதை அறிந்தார். நாற்பது ரூபாய் போய்விட்டது கமலாவிடம். மனத்துள் சிரித்தவாறே, பையின் தனிப் பகுதியினின்று பதினைந்து ரூபாய்களை எடுத்து, இருபத் தைந்தோடு சேர்த்து வாடகைப் பணத்தை ஒப்பித்தார்.
“மாசம் மாசம் வாடகை கொடுக்கும் தொல்லை உமக் கும் வேண்டாம், அதை வாங்கிக்கொள்ளும் தொல்லை எனக்கும் வேண்டாம். வீட்டை வாங்கிக்கொள்ளுமே, தந்துவிடுகிறேன்!” என்று சொன்னார் வீட்டுக்காரர்.
யோசிக்கிறேன்” என்று கூறிச் சிரித்தார் சேஷாத் திரி. ‘அங்கே வீடு வாங்குவானேன்? சென்னை வாசம் மேற்கொள்ளலாமா?’ என்பதல்லவா அவர் யோசனை?
சில மாதங்களாகவே கமலாதேவியின் கையொப்பமுள்ள மணியார்டர் ரசீதுகள் வீட்டிற்கு வராததை வைதேகி கவனித்தாள். கணவர் பணம் அனுப்புவதில்லையா? அவள் ஏதாவது மீண்டும் வம்பு செய்யமாட்டாளோ?
கணவரைக் கேட்கவும் தயங்கினாள் வைதேகி கோர்ட்டு அலுவல்கள் வரவர அதிகமாகிக் கொண்டு வந்தன அவருக்கு. எப்படி ‘அவள்’ விஷயமாகப் பேச் செடுப்பது? வீட்டில் நிம்மதியாகச் சிரித்துப் பேசும் அவரை எப்படிக் கேட்பது? என்று யோசித்தாள்.
குமாஸ்தாவை விசாரித்தாள். “கமலா தேவின் ஒரு மணியார்டர் அனுப்புவாரே; அந்தம்மா பேருலே ஏதோ கேஸ் தகராறு வந்தது; ஐயா தீர்த்து வச்சாரு. ஒரு வேளை பீஸுக்காக வச்சுக்கச் சொன்னாங்களோ என்னவோ?” என்று சொன்னார் குமாஸ்தா. வைதேகிக்கு ஆச்சரியந்தான். வேறு விவரம் எதுவும் குமாஸ்தாவுக்குத் தெரியவில்லை.
இந்தக் கேள்வி அவளை உறுத்திக்கொண் டிருந்த பொழுதே வேறொரு செய்தி, அவள் காதில் விழுந்தது. அடுத்த தெருவிலிருந்து ஒரு பெண் பட்டணம் போகிறாள். எதற்கு? ஹிந்தி வாத்தியாரம்மாளாக! யாருக்குப் பதில்? கமலாவிற்குப் பதிலாகத்தான்! உடல் நிலை காரணமாக முதலிலே நான்கு மாத ரஜா வேண்டுமென்ற கமலாதேவி, பிறகு வேலை வேண்டாம் என்று ராஜீநாமாச் செய்துவிட் டாளாம். சந்தேகத்துக்கு இடமான முறையிலே பேசினார் கள் கமலாவின் உடல்நிலை பற்றி.
கமலா கெட்டுப்போய்விட்டாளோ? அதனால்தான் அனுப்பக் கணவர் அருவருக்கிறாரோ? அவமானமாக இருப் பதனால்தான் அவர் சில நாளாக ஒரு மாதிரியாக இருக்கி றாரோ? ஒரு நாள் வாய்விட்டு, மனம்விட்டுப் பேசத்தான் வேண்டும். அப்பொழுதுதான் இருவர் மனசும் பாரம் இல்லாமல் இருக்கும். வைதேகிக்கு அமைதி இல்லை. ‘வீட் டிலே குழந்தைகள் இருந்தால் எத்தனை கவலை இருந்தா லும் எங்களுக்கு லட்சியம் இராது. பகவான் சோதனை செய்கிறார். குடியும் குடித்தனமுமாகக் குழந்தையை வேண்டி நிற்கிறோம் நாம். வேண்டாத குழந்தை பிறந்து, அவர் மானத்தை வாங்கப்போகிறதுபோல் இருக்கிறது!” என்று வருத்தப்பட்டுக்கொண்டாள்,
மறுநாள் சென்னையிலிருந்து வந்து சேர்ந்த சேஷாத் திரி, சிறிது அலுப்பும் சோர்வுமாகத்தான் தென்பட்டார். குளித்துச் சாப்பிட்டானதும் எதையோ யோசித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.
எங்கோ வெளியில் போய்விட்டு வந்தார் சேஷாத்திரி. கூடத்தில் உட்கார்ந்திருந்த அவரிடம் வைதேகி வந்து நின்றாள். அவளைச் சேஷாத்திரி கூர்ந்து கவனித்தார். பிறகு ஒரு சீட்டை அவளிடம் நீட்டினார்.
“லேடி டாக்டர் கொடுத்த சீட்டா?” என்று வைதேகி துண்டுச்சீட்டைப் படித்தாள். பன் முறை படித்தாள். ‘நிஜமாகவா?” என்று அயர்ந்துபோனாள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு கருச்சிதைவின்போது விபரீதம் விளையாமல் சஸ்திர சிகிச்சை செய்யப்பட்ட விஷயம் மட்டும் வைதேகிக்குத் தெரிந்திருந்தது. ஆனால், ‘இனிக் குழந்தை உண்டாகாது’ என்று லேடி டாக்டர் அவளிடம் பளிச்சென்று சொல்லவில்லை. மனைவியை அழைத்துவரச் சேஷாத்திரி ஆஸ்பத்திரி சென்றபொழுது, டாக்டரம்மாள் அவரிடம் சீட்டுமூலம் சொல்லிவிட்டாள். வெளிப்படக் கூறக் கூசினாள்போலும்.
அந்தச் சீட்டைப் பாதுகாத்து வைத்திருந்தார் சேஷாத்திரி. “எதற்கு இத்தனை நாள் காட்டாமல் இப் பொழுது சொன்னீர்கள்? முன்பே சொல்லக்கூடாதா எனக்கு?” என்று அழுதாள் வைதேகி.
“வருத்தம் உண்டாகும் என்று சொல்லவில்லை வைதேகி. இப்பொழுது சொல்லும்படி ஒரு நிர்ப்பந்தம்-”
“நிர்ப்பந்தமா? அதென்ன? ஒரு தரம் தவறினால் மூன்றுதரம் தவறுமாமே. மறுபடியும் ஏதாவது கல்யாணம் செய்துகொள்ளவா?”
“அது வேறேயா வைதேகி?” என்று வெற்றுச் சிரிப்புச் சிரித்த சேஷாத்திரி மேலும் சொல்லலானார்.
“கேள், வைதேகி. நானோ வக்கீல். தப்புச் செய் தவன் பக்கத்து வக்கீலானால், அவனைத் தாக்கித்தான் வாதாட வேணும். இப்பொழுது நானே தப்புச் செய்து விட்ட பிறகு?”
கம்பமாய்ப்போன வைதேகி, எந்த இடியையும் ஏற்கத் தயாராகிவிட்டாள்.
“ஜீவனாம்சம் வேண்டாம் என்று எழுத மனசாக வில்லையாம். தொடர்பு அறக்கூடாது என்கிற எண்ண மாம். இப்பொழுது அவளைப் பார், வைதேகி.-உனக்குக் கோபமே வராது. அவளுக்கு மாதம் பிறந்துவிட்டது. நீதான் உதவி செய்யவேணும், வைதேகி”
நொடியிலே அனைத்தையும் ஊகித்தறிந்த வைதேகி, பொங்கிவரும் மனக் குமுறலைக் சில விம்மல்களின் மூலம் வெளியேற்றி ஒழித்துவிட்டாள்.
“மன்னிப்பானேன் நான்? இந்தமட்டும் க்ஷேமம். நான் நினைத்ததுபோல மூன்றாமவள் வரவில்லையே!” என்று மொழிந்த வைதேகியின் சோகச்சிரிப்பிலே இருந்தது என்ன?
– இரட்டைக் கதைகள் (வெள்ளிவிழா வெளியீடு), முதற்பதிப்பு: ஏப்ரல் 1957, கலைமகள் காரியாலயம், சென்னை.
தொடர்புள்ள சிறுகதைகள்
பரிணாமம்
ஜெயந்தி சங்கர்
May 22, 2026
உயர்ந்த உள்ளம்
எஸ்.ராமமூர்த்தி
May 22, 2026