ஜீவா செத்து போனான்
கதையாசிரியர்: யுவராஜ் சம்பத்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: May 16, 2026
பார்வையிட்டோர்: 60

இடையன்காட்டுவலசு கிராமத்தைச் சென்றடைவது அப்படி ஒன்றும் சிரமமாக இருக்கவில்லை. காங்கேயம் – சென்னிமலை நெடுஞ்சாலையிலிருந்து இரண்டு கிலோமீட்டர் உள்ளே இருந்த கிராமம் அது. பாண்டிச்சேரியிலிருந்து ஒரு சில நண்பர்களும், சென்னையிலிருந்து நாங்களும் புறப்பட்டு, ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் சந்திப்பதென முடிவாகி இருந்தது.
காங்கேயம் சென்றடைந்தபோது மாலை மணி நான்கு. நாங்கள் சந்திப்பதாய்ச் சொன்ன அந்தச் சாலைப் பிரிவில் ஒரு இளநீர்க் கடையில் காரை நிறுத்திவிட்டு, பாண்டிச்சேரி நண்பர்களுக்காகக் காத்திருந்தோம். இளநீர் குடித்து முடித்த பத்து நிமிடத்தில் அவர்களும் வந்துவிட்டார்கள். எங்கள் பயணம் தொடர்ந்தது. இடையன்காட்டுவலசு கிராமத்தை அடைவதற்கு முன்னால், சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு ‘ஃபிளக்ஸ்’ (Flex board) எங்கள் கவனத்தை ஈர்த்தது. காரை நிறுத்திவிட்டுப் பார்த்தோம்.
எங்களுக்கு அது போக வேண்டிய பாதையை அம்புக்குறியிட்டுக் காட்டியது. அத்துடன் இறந்த ஜீவாவின் படத்தையும், ‘அகால மரணம்’ என்கிற ஒரு பொய்யையும் சேர்த்துச் சொன்னது.
அகால மரணமா? அது…
பனி மூடிய காலைப் பொழுதில் ஏற்பட்ட ஒரு விபத்தில் ஒரு காலை இழந்து, அரசு உதவியுடன் ஒரு மாற்றுக் காலைப் பொருத்தி, கணிசமான ஓய்வூதியத்தையும் பெற்று, அந்தப் பணத்தில் கட்டியிருந்த வீட்டில் மூன்று சக்கர வாகனத்தின் உதவியுடன் வாழ்ந்து கொண்டிருந்தான் ஜீவா.
மரணத்தை நெருங்கும் வயதுதான் என்றாலும் கூட, அவன் மரணித்த விதம்தான் எல்லோரையும் வருத்தத்திற்கு உள்ளாக்கியது. ஜீவா எங்களின் இனிய நண்பன். கல்லூரி காலத்திலிருந்தே தமிழ் பயின்றவன். தமிழை வெறும் விருப்பப் பாடமாக இல்லாமல், ஒரு மொழியாகவே நேசித்துப் படித்தவன். அதன் பால் அதிக ஈடுபாடு கொண்ட எங்களுக்கு தமிழைப் பற்றிய பெருமைமிகு செய்திகளையும் கூறுபவன் அவன்.
அப்படித்தான் ஒரு நாள், திருக்குறளில் அதிகாரம் 63 ‘இடுக்கண் அழியாமை’ எனும் அதிகாரத்தில் வரும்:
“இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர்”
எனும் குறளுக்கு அவன் அளித்த விளக்கம் இன்னும் மனதில் நீங்காமல் நிலைபெற்று இருக்கிறது.
அது ஒரு திருமண விழா. திருமணத்திற்குத் தலைமை தாங்கியவர் அந்தப் பகுதியில் செல்வாக்கு மிக்க ஓர் அரசியல் கட்சியின் தலைவர்; பல்வேறு பதவிகளை அலங்கரித்தவர்; அவரால் பயன்பெற்றவர்கள் ஏராளம். அந்தத் திருமணம் ஒரு குறிப்பிட்ட தேதியில் நடப்பதாக அழைப்பிதழ் அடித்து ஊர் முழுவதும் விநியோகிக்கப்பட்டிருந்தது.
ஆனால், திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னர், அவருடைய அரசியல் வாழ்வில் ஒரு சிறிய சறுக்கல் ஏற்பட்டு, அதனால் அந்தத் திருமணத்திற்கு வர முடியுமா முடியாதா என்கிற சந்தேகம் நிலவியது. மணவீட்டார் எவ்வளவோ மன்றாடியும் அவருடைய மனதை மாற்ற இயலவில்லை. அப்பொழுது மணமகனின் தந்தை இந்தத் திருக்குறளை எழுதி அவருக்கு ஒரு செய்தியாக அனுப்புகிறார்.”நீங்கள் திருமணத்திற்கு வராவிட்டாலும் பரவாயில்லை, இந்தத் திருக்குறளை வாழ்த்துச் செய்தியாக நினைத்து ஒரு கையொப்பமிட்டுத் தந்து விடுங்கள்” என்று.
இந்தத் திருக்குறளைப் பார்த்தவுடன் அவர் மனம் மாறியதாகவும், கடும் மன உளைச்சலுக்கு இடையிலும் அவர் அந்தத் திருமணத்தில் கலந்துகொண்டு சிறப்பு செய்து, இந்தத் திருக்குறளுக்கு ஒரு நீண்ட விளக்கத்தையும் அளித்தார் என்று சொன்னான் ஜீவா.
ஒரு மனிதனுக்கு எவ்வளவு இடையூறுகள் வந்தாலும், அதையெல்லாம் தாங்கிக்கொண்டு அதைப் புறந்தள்ளி வாழ்வைத் தொடர வேண்டும். அப்படிச் செய்பவனுக்கு, அவனுக்கு வந்த துன்பங்களே ஒரு காலத்தில் “இவனையா இப்படித் துன்பப்படுத்தினோம்?” என்று நாணம் கொள்ளுமாம்.
இந்தத் திருக்குறள் யாருக்குப் பொருந்தியதோ இல்லையோ, ஜீவாவிற்கு மிகவும் பொருந்தியது. கால்களை இழந்த பின் சக்கர நாற்காலியிலும், அதன் பின்னர் சிறப்பு இருசக்கர வாகனத்திலும் பயணித்து, தான் உங்களைப் போலவே மகிழ்ச்சியாக இருப்பதாக ஊரெல்லாம் பறைசாற்றிக் கொண்டிருந்தவன் ஜீவா. அவனுக்குள்ளும் ஒரு சோகம் இருந்திருக்கிறது என்பதை நாங்கள் கவனிக்கத் தவறிவிட்டோம்.
இடையன்காட்டுவலசு ஏறக்குறைய 10 தெருக்களைக் கொண்டது. மாடி வீடு என்று சொல்லக்கூடிய அளவிற்கு எந்த வீடுகளும் அங்கு இல்லை. கான்கிரீட்டில் சாலை வசதி செய்யப்பட்டிருந்தது. இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் வசிக்கும் இடம் என்பதைக் கான்கிரீட் சாலைகள் பளிச்சென்று சொன்னன. ஜீவாவின் வீட்டை அடைந்தோம். ஓட்டு வீடு. ஓடுகளின் மேல் கிராமத்தில் இருக்கும் மற்ற வீடுகளைப் போலவே தென்னங்கீற்றுகள் வேயப்பட்டிருந்தன. இது வெப்பத்தைத் தடுக்கும். உள்ளே மூன்று அறைகள். ஒரு அறையில் ஜீவாவின் மகளும் மனைவியும் அமர்ந்திருக்க, மற்றோர் அறை துக்கம் கேட்க வந்தவர்கள் அமர்ந்து உரையாடும் இடமாக இருந்தது.
வாசலில் 20 மடக்கு நாற்காலிகள். ஜீவாவின் தாய்மாமன் வந்தவர்களிடம் துக்கத்தைச் சொல்லி மனச் சுமையை இறக்கி வைத்துக் கொண்டிருந்தார். நாங்கள் உள்ளே சென்று ஜீவாவின் மனைவியிடம் துக்கம் விசாரித்துவிட்டு வெளியே வந்து அமர்ந்தோம்.
அடுத்து ஒரு மணி நேரத்திற்குப் பேசுவதற்கு விஷயங்கள் ஏதும் இல்லாததால், எங்கள் பேச்சு முழுவதும் ஜீவாவைச் சுற்றியும், அவனோடு தொடர்பிலிருந்த நாட்களைப் பற்றியும், அவன் மரணத்தைப் பற்றியுமே இருந்தது. உதயா தான் ஆரம்பித்தான்.
“இல்லடா, போன முறை நான் வந்தப்ப கூட மகிழ்ச்சியா தான் இருந்தான். கிருஷ்ணமூர்த்தி வீட்டு கல்யாணத்துக்குப் போகலாம் என்று சொன்ன பொழுது, சரி என்று சொல்லி ஜரிகை வேட்டியும் அரைக்கை சட்டையுமாய் வந்தான். அவன் உடலின் கருப்பு நிறத்தையும், அவன் அணிந்திருந்த வெள்ளைச் சட்டையையும் ஒப்பிட்டு நான் கூட கிண்டல் அடித்தேன். ‘மாப்ள… வெள்ளை வேட்டி கட்டுறதுனால உன் உடம்பு அதிகமா கருப்பா தெரியுதா? இல்ல நீ கருப்பா இருக்கிறதுனால வெள்ளை வேட்டி இன்னும் வெள்ளையா தெரியுதா?’ என்று கேட்டேன்.”
“டேய் போடா… வந்தோமா, வேலையைப் பார்த்தோமா, சாப்பிட்டோமா, வீடு திரும்பினோமான்னு இருக்கப் பாருடா… வந்துட்டான் கருப்புக்கும் வெள்ளைக்கும் வியாக்கியானம் பேச!” என்று ஜீவா சிரிப்பான்.
ஜீவா அப்படி ஒன்றும் கறுத்த தோல் நிறத்தைக் கொண்டவன் அல்ல. இருந்தாலும் எங்கள் குழுவில் அவன் சற்று மாநிறம் என்பதால் அவனுக்கு ‘கருப்பு ஜீவா’ என்கிற பட்டப்பெயரும் உண்டு.
உதயா பேசி முடிப்பதற்கும், வழக்கம்போல் துக்க வீட்டில் தருகிற காபி வந்து சேருவதற்கும் சரியாக இருந்தது. குமாரும் தன் பங்கிற்கு ஒரு கதையைச் சொன்னான்.
“ஆமாண்டா, நான் கூட போன வாரம் அவன்கிட்ட பேசும்போது, ‘உனக்கு என்ன மாப்ள வேணும்? படிப்பதற்கு ஏதாவது புத்தகங்கள் வேண்டுமா? அல்லது புதிய போன் வேண்டுமா? பொழுதுபோக்க வேறு ஏதாவது வேண்டுமா?’ என்றெல்லாம் கேட்டேன். அவன் அதற்கு ‘அப்புறம் சொல்றேன்’ என்று சொல்லிவிட்டு வாட்ஸ்அப்பில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினான். அந்தச் செய்திக்கு அப்போது எனக்கு அர்த்தம் புரியவில்லை.”
“என்ன செய்தி அது?”
“என்ன கேட்கப் போகிறேன் உன்னிடம்?
மற்றவர்கள் முகம் கோணாத ஒரு சாவும்,
தூக்கிச் சுமக்க நான்கு நல்ல நண்பர்களும் தேவை
என்பதைத் தவிர
வேறென்ன கேட்டு விடப் போகிறேன்
உன்னிடம்?”
சொல்லி முடிப்பதற்குள் உதயாவின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. யாருக்கும் தெரியாமல் கைக்குட்டையால் முகத்தை மூடித் துடைத்துக் கொண்டான். ஜீவா மற்றவர்கள் முகம் கோணாத அளவிற்குச் சாகவில்லை. அவன் மரணம் துர்மரணம்.
இப்போது நண்பர்கள் அடுத்து யாரும் எதையும் பேசுவதில்லை என்று மனதளவில் முடிவு செய்து கொண்டு அமர்ந்திருந்தோம். பேசப் பேசத் துக்கம் எங்களுக்குள்ளும் அதிகமாகிக் கொண்டே இருந்தது. வீட்டு வாசலில் பரையோசை சற்று அதிகமாக இருந்ததால், நாங்கள் எங்கள் இருக்கையை விட்டு எழுந்து காலார கொஞ்சம் நடந்து விட்டு வரலாம் என்று முடிவு செய்து வெளியே வந்தோம்.
தெருமுனையில் ஒரு சிறிய பெட்டிக்கடை இருந்தது. மீண்டும் துக்க வீட்டிற்குத் திரும்பும்போது ‘பறை’ இசை பற்றிய ஒரு சிறிய கருத்துப் பரிமாறல் நிகழ்ந்தது. இந்தப் பறை சங்க காலத்திலிருந்தே தமிழ் மண்ணில் இருப்பதாகவும், அது மங்கள நிகழ்ச்சிகளுக்கும் பயன்பட்டதாகவும், பின்னாளில் ஜாதிய ஒடுக்குமுறைகள் காரணமாக அது துக்க நிகழ்வுகளுக்கு மட்டுமே தற்போது பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் பேசிக்கொண்டோம்.
அப்பொழுதுதான் உதயா மீண்டும் வாய் திறந்தான். “ஆமாம்பா, இதப் பத்தி கூட ஒருமுறை நான் ஜீவாகிட்ட விவாதிச்சிருக்கேன். நாலடியாரில் ஒரு பாட்டு வரும்:’சென்றேறி யொருகால் சிறுவரை நின்றீத்துப் பொன்றை யறைப்பாரைப் போலொன்றும் – நன்றேகாண் வாழ்நா ளொழியப் பறைதா மறைப்பாரைச் சாவார் சுமந்து பெயர்ந்து.’ இதற்கு ஜீவா ஒரு நல்ல விளக்கம் சொன்னான்.”
“என்ன விளக்கம்?” என்று கேட்டோம். உதயா மீண்டும் கண்ணீர் சிந்தினான். உதயாவால் பேச முடியவில்லை. மீண்டும் அவனைச் சமாதானப்படுத்திப் பேச வைத்தோம். உதயா சொன்னான்: “செத்தாரைச் சாவார் சுமந்து… அப்படின்னா இன்னைக்குச் செத்துப் போனவனை, நாளைக்குச் சாகப் போறவங்க சுமந்து மயானம் கொண்டு புதைப்பர் அப்படிங்கிறதுதான். அது கூட இப்ப அவனுக்குப் பொருந்திருச்சு பாத்தியா… என்னடா வாழ்க்கை இது?” அவன் சொல்லும் பொழுது எங்களுக்குள்ளும் சோகம் அப்பிக் கொண்டது.அப்படிச் சொல்ல முடியாத சோகத்தை நாங்கள் சுமந்து திரிகிற அளவிலான சாவு அது.
“நேற்று மாலை ஜீவா
தற்கொலை செய்து கொண்டு
செத்துப் போனான்.
என்னிடம் சொல்லிவிட்டுப் போய் இருக்கலாம்…
அவனிடம் சொல்ல இன்னமும்
ஒரு கூடை அன்பு உள்ளது என்னிடம்…
அவனுக்கு மிகவும் பிடித்த ஜோதி விலாஸ் டீக்கடை
போண்டாவை விட மரணம் பிடித்துப் போனது.
ஜீவா
அவன் உண்மையான பெயர் என்ன?
எதுவாயிருந்தால் என்ன?
ஜீவனுள்ள மனிதனுக்கு
எல்லாப் பெயரும் பொருந்தும் தானே!
தோலின் நிறம் கருப்பு என்றாலும்
மனம் முழுவதும் வெள்ளை.
ஒல்லியான தேகம்.
ஜீவா போக்குவரத்து கழகத்தில்
பரிசோதனையாளர் வேலை.
பேருந்தில் கூட 40 பேர் சூழச் செல்பவன்,
நேற்று தனியாகச் செத்துப் போனான்.
சாவது என்றானபின் சொல்லிவிட்டா செல்ல முடியும்?
சாவதற்கு முன் என்ன நினைத்திருப்பான்?
என்னைப் பார்க்க வேண்டும் என்றா?
என்னோடு மீண்டும் ஒரு நாள் ஒரு கோப்பை
தேநீர் அருந்த வேண்டும் என்றா?
அப்படி என்ன அவசரம் அவனுக்கு?
போனவன் வாழ்க!
போன பின் வாழ்த்துவோம்…”
ஜீவாவிடம் சொல்லாமல் போன வார்த்தைகள் இன்னும் என்னிடம் இப்படியாக
“ஆறுதல் என்பது காயத்திற்குத் தற்காலிகத் தீர்வு; மாறுதல் மட்டுமே நிரந்தரத் தீர்வு” என்று ஜீவா சொன்னது ஏனோ நினைவுக்கு வந்தது.
“மாப்பிள்ளை போலாமா? ரொம்ப தூரம் டிரைவ் பண்ணனும்.”
உதய தான் தொடங்கிவைத்தான் மீள் பயணத்தை!!
கூகுள் மேப் சென்னைக்கு 7 மணி நேரம் காட்டியது.
தொடர்புள்ள சிறுகதைகள்
நடுத்தெரு நாகரிகம்
கு.ப.ராஜகோபாலன்
May 16, 2026
கவர்ச்சிக் கனவு
அல்போன்ஸ் மோசஸ்
May 13, 2026
வாய்மை – நம்பகத்தன்மை: 96%
சு.அப்துல் கரீம்
May 13, 2026