கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: தேவி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 13, 2026
பார்வையிட்டோர்: 133 
வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12

அத்தியாயம் – 7

மருத்துவரின் மேசையில் வைக்கப்பட்டிருந்த மிகச் சிறிய செல்லுலாய்ட் தாவரத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஜனனி.

அதைக் கண்ட மருத்துவர் அந்த போன்ஸாய் தாவரத்தை எடுத்து ஜனனியின் கைகளில் கொடுத்தார்.

“டாக்டர் சார், விவரம் தெரிஞ்சதுலேர்ந்தே, டிவில, வாட்ஸ்-அப்ல, நியூஸ் பேப்பர்ல இதுலல்லாம், விவசாயம், வயல்வெளி, தாவரங்கள் இதைப் பார்த்தா கூர்ந்து நோக்குவா டாக்டர்;

வயவெளிங்க பத்தி யாராவது பேசிக்கிட்டிருந்தா போதும். அதை உத்து கவனிச்சிக்கிட்டே நிப்பா டாக்டர் அவ;

நெல்லை கண்டுட்டா உசிரு சார் அவளுக்கு.

அவ கைல ஒரு கிண்ணத்துல நெல்லைப் போட்டுக் குடுத்துட்டாப் போறும். சோறு தண்ணி வேணாம். அதை பார்த்துக் கிட்டே பொழுதைப் போக்கிடுவா டாக்டர். இதெல்லாம் நார்மலா அப் நார்மலா டாக்டர்…?”

“உங்க பொண்ணு ஜனனியைப் பொறுத்தவரை இந்த பிகேவியர்தான் அவளோட ப்ளஸ் பாயிண்ட்.” என்றார் டாக்டர்.

“ஜனனி பாப்பா உனக்கு நெல்லுன்னா அவ்ளோ பிடிக்குமா…?” டாக்டர் கேட்க,

“ம்…” என்ற ஜனனியின் பதிலில் ஜீவன் இருப்பதைக் கண்டார் மருத்துவர்.

ஜனனியிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே, மருத்துவர் தனது லாப்டாப்பில் நெல்சாகுபடி குறித்த தொடர் படத்தை எதிரில் இருந்த திரையில் ஒளிரச் செய்தவுடன் ஜனனி நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

ஐ…நாத்து வுடறாங்க; நாத்து பறி நடக்குது, நடவு ஓடுது, களையெடுக்கறாங்க, அறுவடை… என்று மழலையில் சொல்லி மகிழ்ந்தாள் ஜனனி.

அடுத்தாற்போல், டிரான்ஸ்போர்ட்,

பிறகு மருத்துவம்

இப்படி, வேறு வேறு துறைகளின் வண்ணமிகு சங்கிலித் தொடர் படங்களை போட்டுக் காட்டியபோதும்,

‘டாம் அன்டு ஜெர்ரி’ கார்ட்டூன் படத்தையும் சிறிது நேரம் ஓட விட்டபோதும், எந்த வித எதிர்வினையும் இல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்த ஜனனியைக் கண்டு, விவசாயத்தில் ஜனனிக்கு இருந்த அதீதமான ஈடுபாட்டை உறுதி செய்து கொண்டார் நவீனன்.


“மேடம் உங்க பொண்ணுக்கு இருக்கறது ‘லிட்டில் ப்ரொபசர் சின்ட்ரோம்’ங்கற வகை ஆடிசம்தான். விவசாயத்தைப் பத்தி என்ன பேசினாலும், விவசாயம் சம்பந்தமா எதைக் காட்டினாலும் ஏத்துக்குவா. அதைப்பத்தி அவளுக்குக் கற்றுக் கொடுக்கப்படுவதை விலாவாரியா பேசுவா. மத்த எதையும் சுத்தமா கன்ஸிடரே பண்ண மாட்டா. அவளை விவசாய ஏரியாவுலேயே வெச்சி கொண்டு வந்தா அந்தத் துறைல நிச்சயமா சாதிப்பா.” என்றார் டாக்டர் நவீனன்.

மருத்துவரின் குரலில் அதீத நம்பிக்கை இருந்தது.

இப்போது வஸந்தா பேசினாள்.

“டாக்டர் சார், எங்க அப்பா அம்மாவோட பூர்வீகம் செங்கல்பட்டு தாண்டி சிறுகுடி ன்னு ஒரு கிராமம். அங்கே, பொழுதுக்கும், ஜனனி, தாத்தாவோடதான் வயக்காட்டுலயும், வரப்புலயும்தான் பொழுது போக்குவா டாக்டர்.

அ- அம்மா ன்னுதானே அறிச்சுவடி சொல்லித் தருவாங்க எல்லாரும். ஆனா எங்கப்பா, அ – அரிசி னு அரிச்சுவடி சொல்லி வளர்ந்தவ சார் இவ. அதுவும் குறிப்பா நெல்லு வயலைப் பார்த்துட்டா போறும். அவளுக்கு சோறு தண்ணி கூட வேணாம். வயவெளியப் பாக்கறதும், நெல்லுப் பயிர் பக்கத்துல உட்கார்ந்து அதை செல்லம் கொஞ்சறதுமா இருப்பா டாக்டர்.

அவ தாத்தா அவகிட்டே சின்னக் குழந்தைனு கூட பாக்காம ரொம்ப சீரியஸா நெல்லு பத்தியும் அதன் தன்மை, காற்று, ஈரப்பதம், குருவை, சம்பா, தாளடி இப்படியெல்லாம் பேசுவாங்க சார். ‘பச்ச மண்ணு அது. அதுகிட்டே இப்படி பேசுறீங்களேனு நான் கூடச் சொல்லுவேன்” டாக்டர்.

மருத்துவரிடம் இதையெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தபோதே, அவர்கள் உரையாடலை காது கொடுத்து கவனமாகக் கேட்டபடி இருந்தாள் குழந்தை.

“மழைய நம்பி ஏலேலோ பயிர் இருக்கு ஐலசா…” என்று மழலையில் மிழற்றினாள் ஜனனி.

இதைக் கூர்ந்து கவனித்தார் மருத்துவர்,

தன் தாய் வயல்வெளிகளைப் பற்றியும், பயிர் சுழற்சியைப் பற்றியும், நெல் வகைகளைப் பற்றியும் மருத்துவரிடம் பேசும்போது ஜனனியின் முகபாவத்தையும், அவளின் உணர்வுகளையும் கூர்ந்து கவனித்த நவீனன் நீங்க சொல்றதையும் உங்க மகளோட பிகேவியரையும் வெச்சிப் பார்த்தா, ஜனனிக்கு வேளாண் விஞ்ஞானத்துல நாட்டம் இருக்குங்கறது உறுதியாத் தெரியுது. அதை டெவலப் பண்ணிடலாம் கவலையேப் படாதீங்க…!” என்று உறுதியாக் கூறினார்.

“கொஞ்சம் விவரமாச் சொல்ல முடியுமா டாக்டர்…?”

“மேடம், ‘ஆடிசம் ஸ்பெட்ரம் ஸின்ட்ரோம்’னு சொல்ற நரம்புக் குறைபாட்டுல பல வகைகள் இருக்கு.

குறிப்பா உங்க பொண்ணு ஜனனியோட பிரச்சனை தீர்க்க முடிஞ்ச பிரச்சனைதான்.”

“அப்படியா டாக்டர். ஜனனியோட குறைபாடு தீர்க்க முடியற வகைங்கறதை உங்க வாயால கேட்கும்போதே சந்தோஷமா இருக்கு டாக்டர்?”

நம்பிக்கைதான் வாழ்க்கை என்பது வெறும் அலங்காரச் சொற்றொடர் இல்லை. அதுதான் மனித வாழ்வின் யதார்த்தம்.

நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு.

நல்லதுதான் நடக்கும் என்று நூறு சதவிகிதம் நம்புபவருக்கு நல்லதுதான் நடந்திருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன.

வஸந்தா டாக்டரிடம் உரையாடும்போது அதில் அதீத நம்பிக்கை தெரிந்தது.

“உங்க மகளுக்கு இருக்கற இந்தக் குறைபாட்டை, நான் ஏற்கனவே உங்க கிட்டே சொன்னதைப் போல, ஒரு காலத்துல ‘லிட்டில் ப்ரொபசர் ஸின்ட்ரோம்’ன்னு சொன்னாங்க.

அதாவது சின்ன வயசுலயே ஏதாவது ஒரு துறைல நாட்டம் வந்து அதுல எவ்வளவு முடியுமோ அவ்வளவு முன்னேறுவாங்க, இந்த வகை ஆடிசம் பாதிப்பு உள்ளவங்க.”

“அப்படியா டாக்டர்?”

“ஆமாம். அதைப் பாருங்க.” என்று லேப்டாப்பில் கூகுள் செய்து, திரையில் ஃபோக்கஸ் செய்திருந்த ஐன்ஸ்டீன் படத்தைக் காட்டினார் மருத்துவர்.

“மேடம், ஆடிசம் குறைபாட்டால, நாலு வயசு வரைக்கும், வாய்மொழி பேசாமலே இருந்தவர்… அதுக்கு அப்பறம் கூட ஏழு வயசு வரைக்கும் தனக்குத்தானே வாக்கியங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டவர், இவர்தான் பிற்காலத்துல ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்ன்கற உலகப்புகழ் வாய்ந்த விஞ்ஞானி.

படிச்ச உங்களுக்கு அவரைப் பத்தி, நான் சொல்ல வேண்டியதில்லை.

அது போல ஆடிசம் குறைபாட்டை கடந்து வெளியே வந்து சாதிச்சி, உலகப் புகழ் அடைஞ்ச வேற சில நபர்களையும் சொல்றேன்… என்று சொல்லிவிட்டு,

சர் ஐசக் நியூட்டன், சார்லஸ் டார்வின், நிகோலா டெஸ்ஸா இவர்களின் பெயரைச் சொன்னதுடன், அவர்கள் தங்கள் லிட்டில் ப்ரெபசர் சின்ட்ரோம் என்கிற குறைபாட்டை எப்படி அவர்களுக்குச் சாதகமாகப் பயன் படுத்திக் கொண்டார்கள் என்பதையும் விளக்கமாகச் சொன்னபோது, வஸந்தாவுக்கு தன் மகள் சாதனையாளராக மிளிரச் செய்துவிடலாம் என்ற நம்பிக்கையின் விழுக்காடு உயர்ந்தது.

சிறிது நேர மௌன நகர்வுக்குப் பின், மருத்துவர் நவீனனே தொடர்ந்தார்.

“நிச்சயமா உங்க மக ஜனனியும் வேளாண் துறைல பெருசா சாதிப்பா பாருங்க.” என்றார் நவீனர்.

“உங்க வாயால இப்படிக் கேக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு சார்..” என்று உணர்ச்சி வசப்பட்டாள் வஸந்தா.

“மருந்து குடுத்து சரியாக்க இது வியாதி இல்லை. இது ஒரு குறைபாடு. எந்தக் குறைபாட்டையும் முறைப்படி அணுகினா கொஞ்சம் கொஞ்சமா சரியாக்கிடலாம்.”

“புரியுது டாக்டர். நிச்சயமா நான் இதை முறைப்படி அணுகுவேன் டாக்டர்.”

“குறிப்பா ‘சிறிய பேராசிரியர் குறைபாட்டை’ நீங்க உங்க குழந்தைக்குக் கிடைச்ச வாய்ப்பாப் பயன்படுத்தினாலே போதும். அவளோட வெற்றி நிச்சயம். வாழ்த்துக்கள். நீங்க செய்ய வேண்டியதெல்லாம் அவளை சரியா வழி நடத்தறது ஒண்ணுதான்.”

“ஓகே டாக்டர். இவளை உருப்படியாக்கறது ஒண்ணுதான் என்னுடைய ஒரே நோக்கம். இதை சவாலா எடுத்துக்கிட்டு, முழு வீச்சுல இறங்கி, முழு ஃபோக்கஸ்ல ஒர்க் பண்ணத் தயாரா இருக்கேன். என்னென்ன செய்யணும்னு ப்ரொசிஜர் மட்டும் சொல்லுங்க டாக்டர்.

“நீங்க எந்த நேரமும் வேளாண்மை சம்பந்தமான காட்சிகளையும், புத்தகங்களையும் படிச்சு உங்க பொண்ணுக்கு சொல்லுங்க;

பிரத்யேகமா, அழுத்தமான மடிப்பு உருவாகி தனித் தனியா மூளைல ரிஜிஸ்தர் ஆகிற வரைக்கும் ஒவ்வொரு கான்செப்ட்டையும் பல முறை, பலவேற சூழ்நிலைகள்ல, பல வேறு உத்திகள்ல சொல்லியும், எழுதிக் காட்டியும், ஸ்பெசிமன் காட்டியும் எப்படியோ, குழந்தை மனசுல பதிய வைங்க. மூளைல அழுத்தமா ஒரு முறை பதிய வைச்சிட்டா உயிர் இருக்கற வரைக்கும் அதை யாராலும் அழிக்கவே முடியாதுங்கறதுதான் மூளையோட தனித்தன்மையே;

“…………”

“ஐந்து வயசுல ஒண்ணாங்கிளாஸ் சேர்க்கற வரைக்கும், ஜனனியை முடிஞ்ச வரைக்கும் முழுக்க முழுக்க வயலும் வயல் சார்ந்த இடமுமா இருக்கற ஏரியவுல என்கேஜ் பண்ணுங்க.”

“…………”

தாத்தாவை எப்பவும் போல சீரியஸா வேளாண்மை விஷயங்களை அவளுக்குச் சொல்லவும் என்கரேஜ் பண்ணுங்க.

ஐந்து வயசுல பள்ளிக் கூடத்துல ஒண்ணாம் வகுப்பு சேர்க்கறதுக்குள்ளே, ஓரளவு குழந்தையோட மனநிலையையும், பிகேவியரையும் பேலன்ஸ் பண்ணிடலாம். இந்த நிமிஷத்துலேர்ந்து தொடங்குங்க. ஆல் தி பெஸ்ட்”

இதுபோல நிறைய அறிவுறைகளை வழங்கி நம்பிக்கையூட்டி வஸந்தாவை அனுப்பி வைத்தார் மனநல மருத்துவர் நவீனன்.

பொறுமையாக அனைத்து சாத்தியக் கூறுகளையும் எடுத்துச் சொன்ன, டாக்டரை கையெடுத்துக் கும்பிட்டாள் வஸந்தா.

மனது நிறைய தன்னம்பிக்கையோடும், வைராக்யத்தோடும் மருத்துவமனையை விட்டு ஜனனியுடன் வெளியேறினாள்.


தாயறியா சூல் உண்டா?

அழாமல் கொள்ளாமல் அமைதியாய் இருந்தாலும், மகளின் பசி தெரிந்தவளல்லவா தாய்.

ட்ரீட் மெண்ட் தொடங்குவதற்கு சில மணித்துளிகள் முன் ஜனனியை விட சிறிய குழந்தை பசியால் வீரிட்டு அழுவதைப் பார்த்த வஸந்தா தன் பையில் இருந்த சத்து மாவு டப்பாவை எடுத்துக் கொடுத்ததை மீண்டும் வாங்க மறந்த காரணத்தால், ஜனனிக்கு புட்டி மாவு கலந்து புகட்ட வாய்ப்பில்லாமல் போனது.

முதன் முதலாக, மகளின் வயிற்றுப் பசிக்கு, ரோட்டுக் கடையில் டீ வாங்கிப் புகட்டினாள்.

இனிமேல் ஜனனிக்கு அம்மா மட்டும்தான் என்று உறுதியாக முடிவு செய்துகொண்டாள்.

அடுத்து அடுத்து திட்டம் வகுத்தாள்.

கீழ்பாக்கம் மெட்ரோ பிடித்து, கிண்டியில் இறங்கி, லோக்கல் பிடித்து செங்கல் பட்டு போகலாமா என யோசித்தாள்.

ஷேர் ஆட்டோ கிடைத்தால் சேத்துப்பட்டு, அல்லது நுங்கம் பாக்கத்தில் இறங்கிப் போகலாமே எனவும் தோன்றியது.

அந்த நேரத்தில், மருத்தவ நிலைய நிறுத்தத்தில் 27 D பேருந்து வந்து நிற்க, அதில் ஏறி, எழும்பூரில் வந்து இறங்கினாள் வஸந்தா.

மின்சார ரயிலில் செங்கல்பட்டுக்கு ஜனனியுடன் பயணமானாள்.

அத்தியாயம் – 8

அம்மாவை எப்போது நினைத்தாலும் ஜனனிக்கு பிரமிப்பாய் இருக்கும்.

அம்மா ஒரு அற்புதம்;

தன் தாய் ஒரு கர்மயோகி;

தன்னைப் பெற்றவள் ஒரு புரட்சிப் பெண்;

இப்படியாக, அம்மாவைப் பற்றி எண்ணிலடங்கா பிம்பங்களைச் சுமந்திருப்பவள் ஜனனி.

‘உலகம் போற்றும் விஞ்ஞானி’ என்ற இந்தப் புகழுக்கு, முதல் காரணம் என் அம்மாதான்;

இந்த விருதுகளும், தங்கப் பதக்கமும், சான்றிதழ்களும் அம்மாவுக்குத்தான் முதலில் சொந்தம்;

நான் சுயம்பு இல்லை;

அம்மாதான் என்னை தட்டித் தட்டி உருவமாக்கிவள்.’

“அம்மா மட்டும்தானா…!” அவளுக்குள் ஒரு குரல் அவளையேக் கேட்க…

‘அம்மா, அம்மாதான் முதல் காரணம்…;

அம்மாவைத் தவிர, சமுதாயத்தில், பலர் நேரடியாகவும், மறைமுகமாகவும், பிரதி பலன் எதிர்பார்த்தும், எந்த விதப் பிரதிபலனும் எதிர் பார்க்காமலும் எனக்கு உரமேற்றியிருக்கிறார்கள்;

உயரமேற்றியிருக்கிறார்கள்;

உருவாக்கியிருக்கிறார்கள்;

உன்னதம் செய்திருக்கிறார்கள்;’

இதோ கண்ணெதிரே தனக்காக வாழாமல் எனக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் டாக்டர் மார்த்தாண்டம்.

இந்த மார்த்தாண்டம் நினைத்திருந்தால், தன்னையே அவர் இன்னும் உயரமேற்றிக் கொண்டு இருக்கலாம். நான் தற்போது இருக்கும் இடத்தில் அவர் இருந்திருப்பார்.

ஆடிசம் பாதித்த பெண்-விஞ்ஞானியான நான் உயரமேறுவதற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டு, தியாக வாழ்க்கை வாழும் மார்த்தாண்டம் என்கிற மகத்தான இளைஞனைப் பற்றிச் சிந்தித்தபோது உள்ளுக்குள் ஏதோ ஒரு கல் புரண்டுகொள்ள, உணர்ச்சி வசமானாள் ஜனனி.


மார்த்தாண்டம் காட்டிய அழைப்பிதழைப் நிதானமாகப் பார்த்தாள் ஜனனி.

விழாத் தலைமை

‘டாக்டர் ம்ருணாளிணி’

என்று, பெரிய எழுத்துக்களில் தலைமை தாங்குபவரின் பெயரைப் போட்டு, பெயரைத் தொடர்ந்து சற்றே சிறிய ‘ஃபாண்ட்’களில் அவரின் படிப்பு வரிசையாகக் குறிப்பிடப்பட்டிருந்த பகுதியில் பார்வை நின்றது.

ஜனனியின் பார்வை நிலைக் குத்திய இடத்தை மார்த்தாண்டமும் கவனித்தார்.

ஜனனி ஒரு கணம் மார்த்தாண்டத்தை ஒரு மாதிரி கலாய்ப்பதைப் போலப் பார்த்தாள்.

மார்த்தாண்டம் கூச்சத்தோடு ஜனனியைப் பார்ப்பதைத் தவிர்த்தான்.

ஜனனி இப்போது அர்த்த புஷ்டியோடு புன்னகைத்தபடியே, மார்த்தாண்டத்தை பார்த்தாள்.

‘கல்லூரிக் காலத்துல நீ விழுந்து விழுந்து காதலிச்ச ம்ருணாதான் விழாத் தலைமை போல. உனக்கு வேட்டைதான்…!” என்று ஜனனி தன்னைப் பார்த்துக் கலாய்ப்பதைப் போல இருந்தது அவனுக்கு.

மிருணாளிணி என்ற பெயரை சுட்டு விராலால் சுட்டி, மார்த்தாண்டத்திடம் காட்டினாள் ஜனனி.

‘காதலைப் புதுப்பிச்சிக்க சரியான சந்தர்ப்பம் வந்திருக்கு போல…!’ என்று தன்னைப் பார்த்து ஜனனி கேட்பதாகத் தோன்றியது மார்த்தாண்டத்துக்கு.

ஆம்.

ஆராய்ச்சிப் படிப்பில் இணையும் முன்,

கல்லூரியில் முதுகலைப் படிப்புப் படித்தபோதே, , ம்ருணாளிணியும் தங்கள் வகுப்புத் தோழிதான்.

முதுகலை வேளாண் விஞ்ஞானம் படிக்கும் காலத்தில், மார்த்தாண்டத்தின் மீது தீரா மோகம் கொண்டிருந்தவள் ம்ருணாளிணி.


“ம்ருணா…”

இப்படித்தான், அவளை அப்பொழுதெல்லாம் செல்லமாக அழைப்பான் மார்த்தாண்டம்.

அண்ணாமலைப் பல்கலைக் கழக வளாகத்தில் இருக்கும் பல்வேறு துறைகளிலிருந்தும் எத்தனை எத்தனையோ காதல் ஜோடிகள் பறந்து திரிந்தாலும், ம்ருணாளிணி மார்த்தாண்டம் இணைவு மட்டும் தனித்தன்மையோடு ஒரு சகாப்தமாக இருந்த காலம் அது.

பல்கலைக் கழக விடுமுறை நாட்களில், ஆண்கள் விடுதி மற்றும், பெண்கள் விடுதி என மொத்தமும் காலியாகிவிடும். ஒரு சிலர் அருகே இருபது கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பிச்சாவரம் சென்று போட்டிங் சென்று களிப்பார்கள்.

பெரும்பாலான மாணவ மாணவியர், ஜோடி போட்டுக் கொண்டு சபாநாயகர் கோவில் வளாகத்தில்தான் அடைக்கலம் தேடுவார்கள்…

சிதம்பரத்துக்கே அழகு சேர்க்கும் மேல வீதி, கீழ வீதி, வடக்கு வீதி, தெற்கு வீதி என நான்கு பக்கமும் கம்பீரமாக எழும்பி நிற்கும் நிற்கும் ராஜ கோபுரங்களின் கோபுர வாயில்கள், பல்கலைக் கழக விடுமுறை நாட்களில், காதல் ஜோடிகளின் அணிவகுப்பால் மேலும் அழகு கூடும்.

வழக்கமாக, கீழ வீதி சபாநாயகர் தேர் முட்டியில்தான் தங்கள் காதல் பிரயாணத்தைத் தொடங்குவார்கள் ம்ருணாளிணியும் மார்த்தாண்டமும்.

சிதம்பரத்தில் வழக்கமாக ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் கொண்டாடப் படும் ஆனித் திருவிழா; மற்றும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் நடைபெறும் மார்கழித் திருவிழா இரண்டும் தேர்திருவிழாக்களுக்கு மிகவும் பிரசித்தம்.

தவிர ஆருத்ரா தரிசன நாளில் தேரோட்டம் சிறப்பினும் சிறப்பாக அமையும்.

இதுபோன்ற திருவிழாக்களில் குறிப்பிட்ட நாளன்று தில்லை அம்பல நடராஜா, சிவகாம சுந்தரி அம்பாள், விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வர் ஆகிய மூர்த்திகள் தனித்தனியாக எழுந்தருளக்கூடிய தேர்கள் சின்னதும், பெரியதும், பிரும்மாண்டமானதுமாக தேர் முட்டியில் நிற்கும்.

ஒரு காலத்தில், வெயிலில் காய்ந்து கொண்டும், மழையில் நனைந்துகொண்டும், பனியில் விரைத்துக் கொண்டும் தெருவில் வீசப்படும் குப்பை கூளங்களெல்லாம் காற்றில் அடித்து வரப்பட்டு தேரடியில் குவிவதும், வாகனங்கள் செல்லும்போது கிளம்பும் புழுதி தேர் முழுவதும் படிந்து, அதன் அழகைக் குலைப்பதுமாக இருக்கும் அல்லவா. அதெல்லாம் நாளடைவில் மாறி விட்டது.

கலை ரசிகர்கள் அதை காப்பாற்றத் துவங்கிவிட்டார்கள். தொண்டு நிறுவனங்கள் எல்லாம் இதுபோன்ற கலைச் செல்வங்களைக் காப்பாற்ற போதிய முயற்சிகள் எடுக்கின்றன.

புழுதி படிந்து சோபை இழக்காமல் இருக்கவும், கலை ரசிகர்கள் தேரில் செதுக்கப்பட்டுள்ள கலையம்சங்களை ரசிக்க வசதியாகவும் சபாநாயகர் தேர் குடில் என்று அமைத்துவிட்டார்கள்.

தேர் சக்கரங்கள் உயரத்திற்கு தகரத்தால் அடைப்பும், அதற்கு மேல் ஃபைபர் கண்ணாடியால் அடைப்பும் வைத்து, தென்னாட்டுக் கலைச் செல்வங்கள் பாதுகாக்கப் படுவதால், ‘தேருக்குள்ள சிங்காரம் அதுக்கேத்த அலங்காரம்’ என்பதை கலை ரசிகர்களால் முழுமையாய் ரசிக்க முடிகிறது.

பல்வேறு உயர கனங்களில் உள்ள தேர்கள், படிப் படியாக, கட்டம் கட்டமாகப் பிரிக்கப்பட்டு சொஸ்திக், தாமரை, டைமண்ட், அன்னம், என பல்வேறு பார்டர் டிசைன்களுக்கு மத்தியில் கட்டம் கட்டமாக காட்சிப் படுத்தப்பட்டிருக்கும் பல்வேறு நுட்பனான மரச் செதுக்கு வேலைகளைக் கூர்ந்து கவனிப்பார்கள் மிருணாளிணியும், மார்த்தாண்டமும்.

அவரவருக்குப் பிடித்ததை ஒருவர் மாற்றி ஒருவர் வர்ணிப்பதும், கலையின் உயர்வை போற்றுவதுமாக, பொழுதைக் கழிப்பார்கள்.

தேர் குடிலைச் சுற்றி, ஆங்காங்கே தனித் தனியாக நின்று கொண்டும், கை கோர்த்துக் கொண்டும், ஒருவர் அணைப்பில் ஒருவர் அடைக்கலமாகிய நிலையிலும் அந்த மரச் சிற்பங்களைப் பார்த்து அவைகளை வர்ணித்தும்

அந்த சிற்பங்களில் உள்ளதைப்போல இமிடேட் செய்வதுமாக இருக்கும் மற்ற காதல் ஜோடிகளைப் பார்த்து ரசித்து விமர்சித்தும் சில நேரங்களில் அவர்கள் பொழுது போக்குவார்கள்.

வெளி நாட்டவர்கள் விலை உயர்ந்த கேமராவுடனும், வீடியோக் கருவியுடனும் வந்து ரசிக்கும்போது அவர்களிடம் வலியச் சென்று தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டு, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் பெருமையையும், இந்திய சிற்பக்கலையைப் பற்றிய மேன்மையை எடுத்துரைப்பது அவர்கள் இருவருக்குமே பிடித்த ஒன்று.

ஆடை விலகிய ஒரு சில சிற்பங்களின் அழகைக் கண்டு பூடகமாக ஒருவருக்கு ஒருவர் கருத்து பரிமாறிக் கொள்வதும், அர்த்த புஷ்டியோடு சிரித்துக் கொள்வதுமாக சில மணித் துளிகளைக் கழிப்பார்கள்.

ஆனால் இருவருமே கட்டுப்பாடாகத்தான் இருப்பார்களே ஒழிய ஒருக்காலும் எல்லை மீறும் ரகம் இல்லை.

தேர் குடிலை விட்டு அகன்றபின், திருவாசகத் தேனைச் சிந்திக் கொண்டே, மாணிக்க வாசகர் திருக்கோவிலுக்குள்ளே, எழுந்தருளிய கிழக்கு கோபுர வாசல் வழியாக இருவரும் உள்ளே செல்வார்கள்.

கோபுர வாசலுக்கு உள்ளே நுழைந்ததும் இடப்புறம் அமைந்துள்ள கிணற்றுக் கட்டையும் யாக சாலைக் கட்டமும் அவர்களை அரவணைத்துக் கொள்ளும்.

ஆங்காங்கே காதல் ஜோடிகள் அளவலாவிக் கொண்டிருந்துவிட்டுக் மனமே இல்லாமல் பிரிந்து செல்வதைப் பார்க்கும்போதெல்லாம் “பிரிவுதான் காதலின் சுவாரஸ்யத்தைக் கூட்டும்…” என்று பேசிக் கொள்வார்கள் இருவரும்.

பல சந்தர்ப்பங்களில் கோவிலுக்கு உள்ளே போய் சந்நிதி முன் நின்று ஆடல் வல்லானைக் கூட தரிசிக்காமல், கோவிலை விட்டு வந்த வழியே வெளியேறி ஸ்ரீ கிருஷ்ணா பவனில் சாப்பிட்டுவிட்டு திரும்பியிருக்கிறார்கள் மார்த்தாண்டமும் ம்ருணாளிணியும்.


அப்படி ஓர் நாள் கிணற்றுக் கட்டையில் அமர்ந்து அவர்கள் இருவர் மட்டும் ஏகாந்தமாகப் பேசிக் கொண்டிருந்த போதுதான், ம்ருணாளிணி அந்தக் காகிதத்தை மார்த்தாண்டத்திடம் காண்பித்தாள்.

மார்த்தாண்டத்துக்கு பார்த்தவுடனேயே தெரிந்துவிட்டது, காகிதத்தில் எழுதப்பட்டிருப்பது சங்கேத மொழியில் எழுதப்பட்ட ஆராய்ச்சிக் குறிப்பு என்று.

“இது நீ உருவாக்கின ஃபார்முலாவா ம்ருணா…?”

“நோ… நோ… இது நம்ம பேட்ச்ல பிஜி படிக்கற ஜனனியோடது.”

“ஜனனியோட ஆராய்ச்சிக் குறிப்பு உன் கைல எப்படி…?”

“ஜனனி ஒரு ஆட்டிசம் பேஷண்ட், ஆனா சப்ஜெக்ட்ல ரொம்ப தரவ்வா இருக்கா. அவ எழுதின குறிப்பை ப்ராஜக்ட்டுக்காக அவளே ஃபேர் பண்ண கஷ்டப்பட்டுகிட்டு இருந்தாளா. “நான் ஃபேர் பண்ணித் தரவா ஜனனினு கேட்டு அவகிட்டேயிருந்து அதை வாங்கினேன்;

“…………………….”

“தாங்ஸ் ம்ருணானு சொல்லி என் கிட்டேக் கொடுத்துட்டா…” என்று சொல்லிச் சிரித்தாள்.

“நல்ல விஷயம்தான் ம்ருணா. இப்படி பிறருக்கு உதவற மனசு எல்லாருக்கும் வராது. ஐ ம் வெரி ப்ரௌட் ஆஃப் யூ…” என்று நெகிழ்ந்தவனுக்கு அடுத்த நொடியே அதிர்ச்சி காத்திருந்தது.

“மாரு…”

மார்த்தாண்டத்தை இப்படித்தான் செல்லமாக அழைப்பாள் ம்ருணாளிணி.

“சொல்லு மிருணா…” ஆர்வமாய்க் கேட்டான்.

“நான் இதை வாங்கிக்கிட்டு வந்தது உண்மையிலேயே அவளுக்கு உதவறதுக்கு இல்லை.”

“வேற எதுக்கு?”

இப்போது அப்பாவியாகக் கேட்டான் மார்த்தாண்டம்.

“அந்த கான்சப்டை உல்டா பண்ணி என் பேர்ல ப்ராஜக்ட் சமர்ப்பிக்கலாம்னு திட்டம் போட்டேன். இதை கொஞ்சம் அனலைஸ் பண்ணி மெமரி ஸ்பேஸ்ல எழுதாம விட்டு வெச்சிருக்கற இடங்களை கொஞ்சம் சரி பண்ணித் தாயேன்…”

கேட்டபோது ம்ருணாளிணியின் பேச்சில் ஒரு கொஞ்சல் ஒலித்தது.

“நிஜமாத்தான் சொல்றியா ம்ருணாளிணி. சும்மா விளையாட்டாப் பேசறியா?”

குரலில் கொஞ்சம் கடுமை கலந்து கேட்டான் மார்த்தாண்டம்.

“இதுல விளையாட என்ன இருக்கு…? மண்டையப் போட்டுப் பிச்சிக்காம ப்ராஜக்ட் முடிக்கறதுக்கு இதை விடச் சுலபமான வழி இருந்தாச் சொல்லு, அதைச் செய்யலாம்… ஹ…! ஹ…! ஹ…!”

தவறு செய்கிறோம் என்ற குற்ற உணர்வில்லாமல், அதோடு செய்த தவற்றை நியாயப் படுத்தும் வகையில் பேசிச் குரூரமாய்ச் சிரிக்கும் ம்ருணாளிணியைப் பார்க்கப் பார்க்க ஆத்திரம் பொங்கி எழுந்தது.

‘இத்தனை சுயநலமும், திருட்டு குணமும் உள்ள ஒரு பெண்ணையா நாம் காதலித்திருக்கிறோம்…’ என்று நினைத்தபோதே குமட்டிக் கொண்டு வந்தது மார்த்தாண்டத்திற்கு.

‘திருட்டுகளிலேயே ‘ப்ளேஜியரிசம்’ என்று சொல்லக் கூடிய ‘கருத்துத் திருட்டுதானே’ மிகவும் கொடுமையானது. மூளையைக் கசக்கிப் பிழிந்து ஓயாமல் உழைத்துக் கண்டுபிடித்த கண்டுபிடிப்பை நோகாமல் தங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ளும் இழிகுணம் மிக்க ஒருத்தியையா, நான் இத்தனை நாளும் காதலிந்து வந்திருக்கிறேன்;

தில்லை அம்பல நடராஜா, என்னை இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்று.’ என்று வேண்டிக் கொண்டான்.

சடாரென எழுந்தான்.

அத்தியாயம் – 9

இனம் புரியாத வருத்தத்தோடு, விறுவிறுவென்று கீழ உள் கோபுரத்தை நோக்கி நடந்தான்.

அதன் வழியாக செல்லும் பக்தர்களுக்கு, வாயிற்படியின் வலது பக்கத் தூணில் எண்ணைக் காப்புடன் மினுமினுப்பாய் பிரகாசித்து அருள் பாலிக்கும், மினியேச்சர் அளவில் நுட்பமாகப் பொறிக்கப்பட்ட லோக மாதா காளியின் உருவம் கண்ணில் பட்டே தீரும்.

அதைக் கைக் கூப்பி வணங்காமல் எவரும் உள்ளே செல்லவே மாட்டார்கள். மூர்த்தி அளவில் மிகமிகச் சிறியதுதான் என்றாலும் கீர்த்தி பெரிதல்லவா.

காளியை கை கூப்பி வணங்கினான் மார்த்தாண்டம்.

‘யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய். தீது நன்மையெல்லாம் காளி, தெய்வ லீலையன்றோ…’

என்ற பாரதியின் பாடலை அவன் பின்னால் நின்ற ஒரு சிவனடியார் பலமாய்ப் பாட, மார்த்தாண்டத்தின் காதில் கனமாய் இறங்கியது அது.

தொடர்ந்து, நடராஜர் சந்நிதி சேவிப்பதற்காக, படியிறங்கி நடந்தான்.

“மாரு… மாரு…”

பலமாய் அழைத்துக் கொண்டே, மார்த்தாண்டத்தின் நடைக்கு ஈடாக அவன் பின்னே ஓடோடி வந்தாள் ம்ருணாளிணி.

படிகள் இறங்கி நடந்தவன் நடுவில் இருக்கும் தேவசபை யைத் தாண்டும் முன் ம்ருணாளிணி, மார்த்தாண்டத்தின் முன் வந்து கைகளைப் பரப்பியபடி அவனைத் தடுத்து நிறுத்தினாள்.

“என்னாச்சு மாரு. ஏன் இப்படி வெறி பிடிச்சாப்பல நடந்துக்கறே? இப்ப என்ன ஆகிப் போச்சு? நான் என்ன தப்பாச் சொல்லிட்டேன்…?”

நடராஜா சந்நதிக்குள் நுழையும் தோரணவாயில் கடக்கும் முன் வலதுபுறம் உயரமான இடத்தில் அமைந்திருக்கும் தேவ சபை. அதன் எதிரில் எதிரில் நீளும் இரண்டாம் பிரகாரத்தில் முதல் தூணுக்கருகே நின்றான் மார்த்தாண்டம்.


‘பஞ்ச சபை’ என்பதே சிதம்பரத்தின் சிறப்பு.

சித் சபை, கனக சபை(பொன்னம்பலம்), தேவ சபை, நிருத்த சபை மற்றும் ராஜ சபை எனப்படும் ஐந்து சபைகளில், வீதி உலா சென்று ஜனங்களுக்குக் காட்சியளித்து அருள் பாலிக்கும் பஞ்ச உலோகங்களால வார்க்கப்பட்ட உற்சவ விக்ரகங்கள் அனைத்தும் வைக்கப்பட்டுள்ள இடம்தான் தேவ சபை.

கோவிலுக்குள் வரும்போதெல்லாம் உட்கார்ந்து மிருணாளிணியோடு காதல் மொழிகள் பேசிய அதே தூண் அருகில், இப்போது இருவரும் எலியும் பூனையுமாக நின்றார்கள்.

முரண்தொடை என்பது இதுதானோ?

தன் எதிரில் நிற்கும் மிருணாளிணியின் முகத்தைப் பார்க்கப் பிடிக்கவில்லை மார்த்தாண்டத்துக்கு. அவள் தோளுக்கு மேல் பார்வையை உயர்த்தி பின்னால் இருந்த தேவசபையை நோக்கினான்.

தேவ சபைக்குள்ளே,

ஆங்காங்கே ஏற்றி வைக்கப்பட்ட எண்ணை விளக்குகளைத் தவிர, குறைந்த ஒளியை உமிழும் மின் விளக்கு ஒன்றும், மைய மண்டபத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. அந்த விளக்கின் ஒளியில் சபையினுள்ளே அதனதன் வாகனங்களில், அததற்குரிய அபய, வரத ஆயுத ஹஸ்தங்களோடும் அபூர்வ முத்திரைகளோடும் அதனதன் பீடங்களில் அருள் பாலித்துக் கொண்டிருந்த ஐம்பொன் விக்ரஹங்களும், பீடத்தின் பின் பகுதியில் பொருத்தப்பட்ட திருவாசிகளும்… எரிகின்ற எண்ணை விளக்கின் கோணத்திற்கு ஏற்ப பின்புறம் நிழலை அப்பிக் கொண்டிருந்தன.

பூட்டப்பட்ட இரும்பு அழி கம்பிகளுக்குள் இருந்த விக்ரகங்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் மார்த்தாண்டம்.

சமீபத்தில் அபிஷேகம் செய்யப் பட்டு, அலங்காரங்களுக்கு உட்பட்டிருந்த சிலைகளுக்குச் சூடப்பட்ட மாலைகளும், அணிவிக்கப்பட்ட வஸ்திரங்களும் கொஞ்சம் புது மெருகோடும் மற்றவையெல்லாம் சற்றே மெருகு குறைந்தும் தோற்றமளித்தன.

மிகச் சமீபத்தில் சூட்டப்பட்ட மாலைகள் ஏதும் கண்களில் படவில்லை.

ம்ருணாளிணி மார்த்தாண்டம் காதல் ஜோடியின் தற்போதைய நிலையைப் போல, வாடிய, சுக்காய்க் காய்ந்த நிர்மால்யங்கள் மட்டுமே சிலாரூபங்களில் தொங்கிக் கொண்டு, வாழ்வின் நிதர்சனமான மாற்றங்களைப் பறைசாற்றிக் கொண்டிருந்தன.


‘தேவ சபை’

எவ்வளவு அருமையான, ஆற்றல் மிக்க சொற்கோவை இது.

இந்தக் கம்பீரமான மண்டபம், உற்றுப் பார்த்தால்தான் தெரியும் அளவுக்கு மங்கலாகவும் சோகையாகவும் வாழ்வின் முரண் தொடையாய்த் காட்சியளித்தன.

சபையின் வெளிப்புற மண்டபம், அதன் படிக்கட்டுகள் எல்லாம் சற்றே வெளிச்சமாகத் தெரிந்தன.

தில்லை கோவிந்த பெருமாள் கொடி மரத்தின் முன் பிரகாசிக்கும் சூரிய ஒளியின் கசிவு, சபைக்கு மேல் ஏறும் சிகப்பு வெள்ளை பட்டை அடிக்கப்பட்ட படிகளை சற்றே வெளிச்சம் போட்டுக் காட்டியது.

சபையின் முன் மண்டபத்தில் நிரந்தரமாகக் கிடத்தப்பட்டுள்ள தங்க வண்ணத் தகடுகள் பொறுத்தப்பட்ட, கிட்டத்தட்ட ஆறுக்கு மூணு அளவுள்ள அபிஷேக தாரையின் ஓர் புறம் மங்கல் வெளிச்சமாய்ப் பளிச்சிட, அதனுடைய பக்கவாட்டுப் பகுதி இருளோவென்றிருந்தது.

ஒளியும் நிழலும் சேர்ந்ததுதான் வாழ்க்கை என்பதை குறிப்பால் உணர்த்துவது போல, அழிகம்பிகளுக்கு உள்ளே ஒளிர்ந்து கொண்டு இருந்த சிலைகளின் அருளை சற்றே உயர்த்திக் காட்டியது பின்னணியாக அமைந்த இருள்.

பூ வேலைப்பாடுகளும், தேவ கோஷ்டங்களும், பிறைகளும், புடைப்புகளும், சிலைகளுமாக, மேற்கூரையைத் தாங்கி நின்ற பிரும்மாண்டமான தூண்கள்.

தூண்களின் உச்சியில் யாளிகள் புகுந்து விதானத்தைத் தாங்கிக் கொள்ள, வாழை குலை தள்ளினாற்போல், நீண்டு தொங்கிக் கொண்டிருக்கும் அபிஷேக தாரை வடிவ தண்டியத்தின் முனையில் தேள் கொடுக்கின் முனைபோல செதுக்கப்பட்ட அமைப்பு துருத்திக் கொண்டு அலங்காரமாய்த் தொங்கின.

தன் தீர்க்கமான முட்டை விழிகளால், தன்னைப் பார்த்து “இதுதாண்டா மானிட உலகம். உன் நேர்மையை உன் காதலியுடமும் எதிர்பார்த்து ஏமாந்து போனியா…? எதிர்பார்ப்புனு வந்துட்டா ஏமாற்றத்துக்குத் தயாரா இருக்கணும். இல்லேன்னா உன் உறவே வேண்டாம்னு அறுத்துக் கட்டணும்…” என்றெல்லாம் சொல்லி, அனைத்து யாளிகளும் கோரை பற்கள் உட்பட அனைத்துப் பற்களையும் காட்டி, வாய்விட்டுச் சிரிப்பதாகத் தோன்றியது மார்தாண்டத்துக்கு.

எதிர் பாராத இதுபோன்ற இக்கட்டான சூழலை எதிர் கொள்ள முடியாமல் தவித்தான். லஜ்ஜையாக இருந்தது. தலையைக் குனிந்து கொண்டான்.

“ஏன் இப்படித் தலை குனியறே? மாரு… என்னைப் பாரு…!” ம்ருணாளிணியின் குரலைக் கேட்டு, குரல் வந்த திக்குக்கு எதிர் திசையில் திரும்பி நிமிர்ந்து மேற்கூரையை பார்த்தான்.

தன் தலைகளால் மேற்கூரையைத் தாங்கியபடி சிரித்துக் கொண்டிருக்கும் யாளிகள், தொடர்ந்து அவனைப் பார்த்துச் விடாமல் சிரித்தபடி இருந்தன.

இரண்டு மேற்பக்க ஈற்றிலிருந்தும் உட்புறமாய் வளைந்த மூன்று மூன்று கோரை பற்களும், அதற்கிடையே வெளியில் துருத்திக் கொண்டிருந்த நான்கு முன்னம் பற்களும் பளிச் என்று வெளியே தெரிய,

அனைத்து யாளிகளும் தன்னைப் பார்த்து கண்களை உருட்டிக் கொண்டு ஏளனமாய்ச் சிரிப்பதை பல்வேறு பார்வைக் கோணத்தில் பார்த்து வெட்கினான் மார்த்தாண்டம்.

தன்மேல் தனக்கே வெறுப்பாக இருந்தது.

உள்ளத்தை உறுதிப் படுத்திக் கொண்டு, சிறிதும் தாட்சண்யம் காட்டாமல் மிருணாளிணியிடம் உறுதியாகச் சொன்னான்.

“ஒரு ப்ளேஜியரிஸ்டான உன்னை காதலிச்சதுக்காக நான் ரொம்ப வெட்கப் படறேன். வேதனைப் படறேன். இந்த நிமிஷத்துலேர்ந்து நம்ம லவ் ப்ரேக் அப் ஆகுது…”

காதல் ப்ரபோஸ் பண்ணப்பட்ட அதே இடத்தில் இன்று ப்ரேக் அப்

அடிபட்ட அன்னமாய் ம்ருணாளிணி துவண்டு நிற்க,

அவசர அவசரமாக நடராஜா சந்நிதிக்குச் செல்லும் தோரண வாயிலைக் கடந்து சித் சபையில் தில்லை அம்பலத்தான் முன் சென்று நின்றான் மார்த்தாண்டம்.

மண்ணாகி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ…

மறை நான்கின் அடி முடியும் நீ…

என்று உள்ளம் உருகிக் கதறிக் கொண்டிருந்தார் ஒரு சிவனடியார்.

அவருக்கு அருகில் நின்று கண்களில் கண்ணீர் மல்க நின்றான் மார்த்தாண்டம்.

காதல் முறிவை விடக் கொடுமையிலும் கொடுமை என்ன தெரியுமா?

காதலை பிரேக் அப் செய்த பின்பு, ஒரே இடத்தில் முன்னாள் காதலர்கள் ஒருவரை ஒருவர் வெறுத்தபடி வளைய வரவேண்டிய கட்டாயம்தான்.

அந்தக் கொடுமையையும் அனுபவித்தார்கள் இருவரும்.


ஒருவரின் திறமையை முழு மனதோடு பாராட்ட வேண்டும்.

அதோடு அந்த நபர் தனது திறமையை மேலே மேலே வளர்த்துக் கொள்வதற்கு நாம் உரமாக விளங்க வேண்டும். அதுதான் மனிதம்;

அதிலும், ‘உடலிலோ அல்லது மனத்திலோ குறைபாடு உள்ள, ஒருவரின் திறமையைப் போற்றி வளர்த்து, அவர்களை மேலே மேலே உயர்ந்துவதுதான் மனிதத் தன்மை;

அப்படியெல்லாம் எதுவும் செய்யாமல் போனாலும் பரவாயில்லை;

குறையுள்ள ஒரு பெண்ணின் உண்மையான திறமையை திருட முயல்வது கொடுமையிலும் கொடுமையல்லவா? பாவத்திலும் பெரிய பாவமல்லவா?’

சுயநலத்தின் உச்சத்தில் மனிதர்கள் செய்யும் இதுபோன்ற பாவச் செயல்களை நினைத்து நினைத்து மருகினான் மார்த்தாண்டம்.

அன்று முதல், ஜனனியைப் பற்றிய அனைத்துத் தரவுகளையும் சேகரிக்கத் துவங்கினான்.

ஜனனியின் அப்பா ராஜேந்திரன்.

அவரின் பெற்றோருக்கு ஒரே மகன்.

மகனுக்கு வஸந்தாவை பார்த்துத் திருமணம் செய்து வைத்து, கூட்டுக் குடும்பமாய் அவர்களோடு வாழ்ந்து, மூன்று வருடங்களுக்கு முன்னால்தான் ஆறு மாத இடைவெளியில் அவர்கள் இருவரும் காலமானார்கள்.

அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கியில் அலுவலக உதவியாளர் ராஜேந்திரன்.

அம்மா வஸந்தா.

தன் பெற்றோருக்கு ஒரே மகள்.

ஹோம் மேக்கர்.

பொருளாதார ரீதியாக, நடுத்தரக் குடும்பம்.

செங்கல்பட்டுக்கு அருகே சிறுகுடி என்னும் கிராமத்தில் வசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டிருக்கும் விவசாயக் குடும்பத்தில் ஒரே பெண்ணாகப் பிறந்த வஸந்தாவை பெற்றோர் தேவையான அளவுக்குப் படிக்க வைத்தார்கள்.

வஸந்தாவும் பெற்றோர்களின் நம்பிக்கையை ஈடு செய்யும் விதமாக நன்றாகப் படித்தாள்.

தன் முதுகலைப் பட்ட இறுதியாண்டு தேர்வுக்கு ஒரு வாரம் முன், கல்லூரியில் முகாமிட்டது ஒரு அமெரிக்கத் தொழில் நுட்ப நிறுவனம்.

கேம்பஸ் இன்டர்வியூ என்று பரவலாக அறியப்படும், வளாகத் தேர்வில் வஸந்தாவைத் தேர்ந்தெடுத்தது அந்த நிறுவனம்.

இறுதி செமஸ்டர் தேர்வுகள் முடிந்த அடுத்த நாளே ஹைதராபாத்தில் நடைபெறவிருக்கும் பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்கான ஆணையும் அவளுக்கு வழங்கப்பட்டது.

– தொடரும்…

–  ஜனனி…! ஜெயம் நீ..! (நாவல்), 25-02-2026, தேவியின் கண்மணி.

ஜூனியர்-தேஜ் இயற்பெயர்: வரதராஜன் அ புனைப்பெயர்: ஜூனியர் தேஜ் ரத்த வகை: O Positive பிறந்த தேதி: 04.06.1962 குடும்பம்: மனைவி, மகன், மருமகள் பணி: உதவித் தலைமை ஆசிரியர் (பணி ஓய்வு ஓய்வு பெற்று இப்போது பணி நீட்டிப்பில். 31 மே 2023 ல் ஓய்வு) கல்வித் தகுதி: MA(English).,M.Sc (Counseling Psychology)., B.Ed., CLIS., முதல் ஜோக்: ஜூனியர் விகடன் 1980 களில், சரியான தேதி இல்லை முதல்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *