கண் சிமிட்டும் வானவில்
கதையாசிரியர்: இரஜகை நிலவன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
கிரைம்
கதைப்பதிவு: March 31, 2026
பார்வையிட்டோர்: 144
அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8
அத்தியாயம் 5 – பிரபுவின் சந்தேகக் கண்கள்…

அவர்கள் இருவரும் வழியில் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
நரேன், “ வலது…. இடது…” என்று கண்ணனுக்கு வழி சொல்லிக்கொண்டிருந்தான்.
வசந்த், ’கொஞ்சம் அடக்கியே வாசிக்கலாம்’ என்ற எண்ணத்தில் அமைதியாக இருந்தான்.
திடீரென்று பிரபுவிடமிருந்து அழைப்பு வர, “ அலை பேசியில் கொஞ்சம் தொடர்பு பிர்ச்சினையாக இருக்கிறது. சார். நானே உங்களை அழைக்கிறேன்” என்று தொடர்பைத் துண்டித்து விட்டு, வசந்தைப் பார்த்தான்.
“என்ன விசயம்”? என்று சைகையால் கேட்டான் வசந்த்.
“கண்ணன். தண்ணீர் கொண்டு வந்திருந்தீர்களே… கொஞ்சம் தண்ணீர்பாட்டிலைக் கொடுங்கள்” என்றான்.
கண்ணன் தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொடுக்க,
கண்ணனிடமிருந்து தண்ணீர் வாங்கிக் கொண்ட நரேன், “ கொஞ்சம் வண்டிய பக்கத்திலே நிறுத்துங்களேன்” என்றான்.
“என்ன சார். இடம் வந்துடிச்சா?” என்று கேட்டான்.
“இல்லப்பா… பிரபு சார் கிட்டே கொஞ்சம் பேசணும். சரியா தொடர்பு கிடைக்கமாட்டேங்கிறது..”
“சரி சார்” என்ற கண்ணன் வண்டியை அருகில், ஒரு மரத்தடியில் நிழலில் நிறுத்தினான்.
வசந்த் “வா … ஒரு புகை போடலாம். சிகரெட் வச்சிருக்கேயில்லையா?” என்றான் நரேன்.
”சார். நான் கொண்டு வந்திருக்கிறேன். தரட்டுமா?” என்று மேல் பையில் கைவிட்டான் கண்ணன்.
“இல்லேப்பா எங்க கிட்டே இருக்கு” என்று வசந்த் சொல்ல இருவரும் வண்டியிலேயிருந்து கீழே இறங்கினர்.
கொஞ்சம் தள்ளி வந்து நின்று “ வசந்த், வண்டியிலே, நாம் எங்கே போகிறோம் என்பதைக் கவனிக்க, தனிக் கருவி (ட்ராக்கிங் சிப்ஸ்) மாட்டியிருக்கிறது. நாம் எங்கே போகிறோம் என்பதைக் கவனிப்பதற்கு அவர் கண்ணன் கிட்டேயும் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன்.” என்றான். தாங்கள் பேசுவதைக் கண்ணன் கவனிக்கிறானா என்று…அவன் நின்ற இடத்தைப் பார்த்துக் கொண்டே… கண்ணன் தன்னுடைய அலைபேசியில் பேசிக்கொண்டே அவர்கள் நின்றதையே பார்த்துக் கொண்டிருந்தான்.
‘இதென்னடா… புதுசா ஒரு பிரச்சினை?’ வசந்த் நீளமாக மூச்சு விட்டான்
“நான் இதெல்லாம் முந்தியே எதிர் பார்த்தது தான். ஆனா.. நம்ம மேல இவ்வளவு சீக்கிரமா சந்தேகப்படுவார் என்று எதிர் பார்க்கவில்லை.. சரி… இனி என்ன செய்ய வேண்டுமென்பது தான் முக்கியம்”
“ஆங்… அப்புறம் இன்னொரு விசயம். எக்காரணம் கொண்டும் கண்ணன் இருக்கிற நேரத்திலே எதுவுமே பேசாதே… என்ன?” என்றான் நரேன்
“சரிப்பா… இனி என்ன செய்யலாம் என்று உத்தேசம்?” என்று கேட்டான் வசந்த்.
“ரொம்ப எளிமையான காரியங்கள் தான். ஏன் வீணாக இடியாப்பச்சிக்கலாக முடிகிறது என்று புரியவில்லை… சே!. போனோமா? செடியைப் பறித்துக் கொடுத்தோமா… அந்த வெளி நாட்டுக்கார அமைப்பிற்கு நாலு கோடிக்கு விற்றோமா… ஆளுக்கொரு கோடியாக பிரித்துக் கொண்டு போனோமா… என்று இல்லாமல் இன்னமும் ஏன் ஓடிக்கொண்டிருக்கிறோம்…
வா… வசந்த்… இன்னும் ஒரு பிரச்சினையும் தொடங்கவில்லை என்றே வைத்துக் கொண்டே காரியங்களை வரிசைப்படுத்தி ஒவ்வொன்றாக செய்யலாம்.. ஒன்று மட்டும் ஞாபகம் வைத்துக்கொள்… இனி நாம் நல்ல தேர்ந்த நடிகர்களாக நடிக்க ஆரம்பிக்க வேண்டும்.. நாம் நேராக அந்த சித்தர் கல்லறைக்குப் போக வேண்டாம். நாம் கண்ணன் காரில் போய் ஒரு கிலோ மீட்டருக்கு அந்தப்பக்கம் தங்குவோம். அங்கிருந்து மெதுவாக கண்ணனைக் கழற்றி விட்டு விட்டு.. மெதுவாக அங்கிருந்து அந்தச் சித்தரைப் புதைத்த இடத்தை தேடிப் போகலாம்..” என்றான் நரேன்
“அது சரி தான். நரேன்.. ஆமாம் நாம் எப்படி கண்ணனைக் கழற்றி விடப்போகிறோம்?. ஏற்கனெவே பிரபு எப்படியும் நம்மை விட்டு விலகாதவாறு இருக்கும்படி முன்னேற்பாடுகள் எல்லாம் செய்திருப்பாரே.. ம்..ம்… சரி… நாம் முதலில் எந்த இடத்திற்கு போகிறோம். அதை முடிவு பண்ணு. மற்றதெல்லாம் அப்புறம் பார்க்கலாம்.” என்று கேட்டான் வசந்த்.
கொஞ்சம் வளர்ந்திருந்த தாடியை தடவிக்கொண்டு, “சரி நான் வேறு ஒரு திட்டம் வைத்திருக்கிறேன்… கிளம்பு… அங்கே போய் விட்டு பின் மேலே யோசிக்கலாம்” என்றான் நரேன்.
“ஏம்பா… ஏங்கிட்டே கூட சொல்லக்கூடாதா?”
“வசந்த்… உன்கிட்டே தான் சொல்லக்கூடாது!”
“ம்.க்கும்.. எப்பவுமே என்னை ஒதுக்கி வைக்கிறதிலே குறியாக இரு… ஆமா… இன்றைக்கு ஒரு புறாவும்… ஓ … சொல்லி முடிப்பதற்குள்ஒரு புறா வந்து விட்டது பார்” என்றான் வசந்த்.
“எங்கே..? எங்கே?” ஆர்வமாகத்தேட ஆர்ம்பித்தான் நரேன்.
“நீ முதலிலே திட்டத்தைச் சொல்லு… அப்புறமாக புறாவைக்காட்டுகிறேன்…”
வசந்த்.கிண்டல் பண்ணுகிறான் என்பதைப் புரிந்து கொண்ட நரேன்,
“சரி சரி வா.. போகலாம்” என்றவாறு காரை நோக்கி நடந்தான்.
வசந்தும் பின்னால் வேகமாக நடந்து காரில் ஏறிக்கொண்டான்.
திரும்பவும் காருக்குள் ஒரு பேரமைதி நிலவ.. “வெண்ணிலா வானில் வரும் வேளையிலே…” என கண்ணன் வானொலியைத் திருப்ப சிரித்துக்கொண்டே, “கண்ணன் செம மூடிலே இருக்கிறார் போல் இருக்கு…. ஏதாவது முக்கியமான காரியங்கள் எதுவும் உண்டா?” கண்ணனின் வாயைக் கிளறினான் வசந்த்.
“அது ஒண்ணுமில்லை சார்.. இன்றைக்கு சாயங்காலம் பெண் பார்க்கப் போறோம்” என்றான் வெட்கப்பட்டுக் கொண்டே.
“அடேயப்பா… புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா.. வெட்கத்தை பார். ஆமா.. பொண்ணு யாரு?” திரும்பவும் வசந்த் கேட்டான்.
“அத்தைப் பொண்ணு தான் சார். ஏற்கனெவே தெரிஞ்சவ தான். ஏதோ பூ வைக்கிற சடங்கு ஒண்ணு வைக்கிறாங்க.. அவ்வளவு தான்”
“அவ்வளவு தானா?” என்று நரேனிடம் கண்ணடித்து விட்டு,
“அப்போ இனி தான் போய் சேலை எல்லாம் எடுக்க வேண்டியதிருக்கும்” என்ற வசந்த், “உங்களுக்குச் சீக்கிரம் போக வேண்டியது அவசியமில்லையா… நரேன். நீ ஒண்ணு பண்ணு.. இங்கே இறங்கிக்கோ.. நான் போய் கண்ணனை வந்த நுழை வாயிலிலே கொண்டு போய் விட்டு விட்டு வந்து விடுகிறேன்…” வசந்த் மனதிற்குள் சிரித்துக் கொண்டே…
நரேனும் புரிந்து கொண்டு, மேற்புருவங்களை உயர்த்திப்பார்த்துக் கொண்டே “சரி காரை நிறுத்துங்க… நான் இறங்கிக் கொள்கிறேன்” என்றான்.
“அட அதெல்லாம் ஒன்றும் அவசரமில்லே சார்” கண்ணன் கொஞ்சம் நெளிந்தான்.
“புது மாப்பிள்ளை பூ வைக்கிற நாளிலே., நாங்க, ஏன் சார் உங்களை பிந்தி அனுப்ப வேண்டும்?. நரேன். நீ இறங்கிக் கொள். நான் கண்ணனை நுழை வாயிலில் விட்டு விட்டு வருகிறேன்” என்றான் கண்ணனின் தோள்களை அமுக்கிப் பிடித்துக் கொண்டு.
கண்ணன் காரை நிறுத்த, நரேன் கீழே இறங்கிக்கொண்டான்.
“நீ இங்கேயே நில்லு. நான் கண்ணனை விட்டு விட்டு வந்து விடுகிறேன்” என்றான்.
“சார். பிரபு சாருக்குத்தெரிஞ்சா திட்டுவார்…”
“நீ ஒண்ணுப்பா.. அவருக்கு ஏன் நீ சீக்கிரம் போறது தெரியப்போவுது” என்றான் காரை லாவகமாக வளைத்து திருப்பிக் கொண்டே.
அருகில் ஒரு பாலத்திற்கு அருகில் வந்த நரேன், நெய்லிக்கு போன் பண்ண ஆரம்பித்தான்.
அத்தியாயம் 6 – மதயானைகளின் கூட்டம்
நெய்லி தொலைபேசியில் தொடர்பு கொண்டு “எந்த அளவில் போய்க்கொண்டிருக்கிறது?” என்று கேட்டாள்.
“ம்..ம்… ஏரக்குறைய நெருங்கி விட்டோம் என்று தான் நினைக்கிறேன். ஆங்… நெய்லி.. எனக்கு கொஞ்சம் பணம் வேண்டுமே?” என்றான் நரேன்.
“ஏய்… எப்ப பாரு பணம் கேட்டுக்கொண்டிருக்கிறாய். அப்படி உனக்கு என்ன தான் செலவு இருக்கிறது…? நான் என்ன பணம் காய்க்கும் மரமா என்ன? இங்கே வேலை செய்து உனக்கு செலவிற்கே பணம் அனுப்ப போதுமென்று சலிப்பு தான் தட்டுகிறது..”
“நீ ஒன்றும் சும்மா தர வேண்டாம்”
“ராஜா நரரேந்திர பிரபு நெறைய சொத்து சேத்து வச்சிருக்காரு. ஓ…அத வித்து பணம் தரப்போறாராக்கும்…”
“அதான் கோடிக்கணக்கிலே வரப்போகிறதே.. அதிலே திருப்பித் தந்து விட்டுப் போகிறேன்” என்றான் கேலியாக சிரித்துக் கொண்டே…
“ஆமா போய் இரண்டு வாரமாகப் போகிறது. இன்னும் நுனி வாலைக்கூட பிடிக்க துப்பில்லை”
“ஓகோ… பாரு. நீ அந்த வெளி நாட்டுக் கம்பெனி காரன்கிட்டே சொன்ன உடன்படிக்கை மாதிரி நான் இந்த மாசக் கடைசிக்குள்ளே அந்த செடியோட வர்றேன். அந்த நாலு கோடி ரூபாயும் வாங்கி மொதல்ல உன் கடனைத்தான் திருப்பிக் குடுக்கப் போறேன்”
“சரி..சரி சீக்கிரம் காரியத்தை சாதிக்கப் பாரு. நான் இந்தியா நேரத்திற்கு சரியா ஏழு மணிக்கு கூப்பிடுகிறேன்”
“ம்… சரி சரி…” என்று அவன் பேசி முடிப்பதற்கும், வசந்த் காரில் கண்ணனை விட்டு விட்டு வருவதற்கும் சரியாக இருந்தது.
வசந்த் “ஏறிக்கோ… நீ சொல்லு.. நான் ஓட்டுகிறேன்” என்றான்.
நரேன் வண்டியில் ஏறிக்கொள்ள, அலை பேசியை அவன் கையில் கொடுத்து, “இது காட்டுகிற வழியிலே போ” என்றான்.
வசந்த் வண்டியை ஓட்டிக்கொண்டே, “இன்னும் எத்தனை நாள் தானிந்த காட்டிற்குள் அலைய போகிறோமோ?” என்று சலித்துக் கொண்டே வானொலியை திருக்கினான்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ‘கம்பன் ஏமாந்தான்’ என்று பாட ஆரம்பித்தார். “இளங்கன்னியரை ஒரு மலர் என்றானே.. கற்பனை செய்தானே…” என்று வசந்த் தொடர்ந்தான்.
“என்னடா.. கவிதா ஏதாவது சொன்னாளா?” நரேன் சிரித்தான்
“ஏம்பா பாட்டு கூட படிக்க கூடாதா?”
“படிக்கலாம்… படிக்கலாம்… சரி. நாம இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது. வண்டியை நிறுத்து” என்றான் நரேன்.
வசந்த் வண்டியை அருகிலிருந்த மர நிழலில் நிறுத்தி விட்டு கீழே இறங்கினான்.
“பாரு. நாம் வண்டியை இங்கே விட்டு விட்டு நடக்கலாம்” என்றான் நரேன்.
“கண்டிப்பா நாம் இங்கே வண்டியை விட்டு இறங்கி விட்டோம் எனபதை பிரபு கண்டிப்பா பார்த்திருப்பார்” வசந்த் இறங்கி அருகிலிருந்த மரத்தில் இருந்த மரத்தில் அமர்ந்திருந்த புறாவை மறைத்துக் கொண்டே நின்றான்.
சிரித்துக் கொண்டே நரேன் “வசந்த். புறாவை இரசிப்பதற்கு எல்லா நேரமும் சரியில்லை. நீ சும்மா புறாவை மறைக்கிறதாலே நான் பரர்க்காமல் இருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருக்காதே… வா… அததுக்கு நேரமிருக்கு…” என்று முன்னால் நடந்தான் நரேன்.
“நேரம் என்னப்பா ஆகுது?” என்றான் நரேன்.
“நாலு முப்பது”
“சரி சீக்கிரம் நட… இன்னும் ஒரு கிலோ மீட்டர் நடக்கணும்” வேகமாக நடக்க ஆரம்பித்தான் நரேன்.
எதிரே வந்து கொண்டிருந்த சீறுடை அணிந்த காட்டிலாகா அதிகாரி, திலக், “எங்கேப்பா தம்பிகளா போறீங்க?” என்று கேட்டார்.
“சார். நாங்களும் காட்டிலாகாவிலிருந்து தான் வந்திருக்கிறோம் ஒரு மருந்து செடி இங்கே கிடைப்பதாக அறிந்து அதை தேடி வந்திருக்கிறோம்” என்றான் வசந்த்.
“சரி.. அடையாள அட்டையைக் காட்டுங்கள்”
“நரேன். நான் ஐ கார்டை வண்டியிலே என் பர்சோட போட்டுட்டு வந்துட்டேண்டா.. உன்னுடைய ஐ கார்டைக்காட்டு” என்றான்.
நரேன் தன் பையிருந்த அடையாள அட்டையை எடுத்துக் காட்ட “அஞ்சி மணிக்கு மேலே எல்லாம் இந்த காட்டுக்குள்ளே சுத்தக் கூடாது தெரியுமில்லியா?. போங்க… போயிட்டு நாளைக்கு வாங்க..” என்றான்.
உடனே வசந்த் பிரபுவிற்கு போன் செய்து, “சார். பிரபு சார் உங்ககிட்டே பேசணுமாம்” என்றான்.
திலக், “யாரு. புதுசா வந்திருக்க ஆபீசருங்களா… குடுங்க..” என்று அலைபேசியை வாங்கி, “சார் சொல்லுங்க. ஆங்… இங்கே உங்க ஆட்கள் ரெண்டு பேர் இவ்வளவு லேட்டா சுத்திக்கிட்டிருங்காங்க.. இங்கே சிங்கம், புலி, யானை, எருமையெல்லாம் நடமாடுகிற இடம். எதாவது கொடிய மிருகம் இவங்களை ஏதாவது பண்ணிச்சின்னா யார் பொறுப்பெடுத்துக்கிறது… போயிட்டு நாளைக்கு காலையிலே வரச்சொல்லுங்க…” என்றார்.
பிரபு என்ன சொன்னார் என்று புரியவில்லை. வசந்த் கையிலெ அலை பேசியை வாங்கி,
“சார். இங்கே பக்கத்திலே தான் போகிறோம். சீக்கிரம் திரும்பி விடுவோம். நீங்க அவர்கிட்டே சொன்னீங்கண்ணா எங்களை போக விடுவார்” என்றான்.
எதிர் முனையிலிருந்து பிரபு, “வேண்டாம் வசந்த். திரும்பி வந்து விடுங்கள். வீண் பிரச்சினைகள் வேண்டாம்” என்றார்.
நரேன் வாங்கி, “சார் ஒரு அஞ்சி நிமிடத்திலே வந்து விடுவோம் கொஞ்சம் போக விடச் சொல்லுங்கள்” என்றான்.
எதிர் முனையில் பிரபு, “சரி. அவரிடம் கொடுங்கள்” என்று சொல்ல “சார். பிரபு சார் உங்க கிட்டே பேசணுமாம்” என்று அலை பேசியை அவரிடம் நீட்ட, திலக் , “ஓஓஓஓஓஓஓஓஓ செத்தோம்..” என்று அலறினார்.
வசந்த் திரும்பிப்பார்க்க.. எதிரே யானைக் கூட்டம் நடந்து வந்து கொண்டிருந்தது மெதுவாக…
– தொடரும்…
![]() |
பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க... |
