கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 10, 2025
பார்வையிட்டோர்: 4,905 
 
 

சம்பாதிக்கத்தெரிந்த பலருக்கு வாழத்தெரிவதில்லை. பணம், சொத்து சேர ஆரம்பித்த பின் அவற்றை நோக்கியே ஓடுகின்றனர். காரணம் சிறு வயதில் அவை தம்மிடம் இல்லாததால் பெற்ற அவமானங்கள். 

மற்ற எல்லோரையும் விட மேலே வரவேண்டுமென்கிற பேராசை விளைவின் முயற்சியானது ஆயுள் முடியும் வரை வளர்ந்து கொண்டே செல்வதால் வாழ்வை, அதன் முழு நிலையை அடையாமலேயே, தனக்குக்கிடைத்த விலைமதிப்பற்ற உடலை வெறும் பணம் சேர்க்கும் கருவியாக்கி வீணடித்து விடுகின்றனர்.

“ஹலோ… மாமா “

“சொல்லு…”

“என்னோட அப்பா, அம்மா வந்திருக்காங்க…” 

“அதுக்கு என்னை என்ன பண்ணச்சொல்லறே? சாப்பிட வெச்சு அனுப்பி வை….”

“என்னங்க இப்படிசொல்லறீங்க? இருபத்தஞ்சு வருசம் என்னை பெத்து வளர்த்தி, கஷ்டப்பட்டு சம்பாதிச்சு படிக்க வெச்சு, நகைபோட்டு, சீர்வரிசை கொடுத்து கல்யாண செலவு பண்ணி உங்களுக்கு கொடுத்தவங்க. யாரோ தெருவுல போற பிச்சைக்காரங்க இல்லீங்க” சொல்லி அழுதாள் மாதங்கி.

மாதவனுக்கு பணம், பணம், பணம்…. அதை சேர்ப்பது மட்டும் தான் ஒரே குறி. காலை ஆறு மணிக்கே வீட்டிலிருந்து கிளம்பி இரவு பதினோரு மணிக்கு வருவார். இரவு உணவுக்குப்பின் படுத்ததும் உறங்கி விடுவார்.

இரண்டு குழந்தைகள். பெண் பத்தாம் வகுப்பிலும், பையன் ஏழாவது வகுப்பிலும் படிக்கின்றனர். பள்ளியில் சேர்க்க வந்ததோடு சரி. இன்று வரை பள்ளிப்பக்கம் தலைவைத்து கூடப்படுக்காதவர். ஞாயிற்றுக்கிழமை கூட தனது மளிகைக்கடைக்கு விடுமுறை விடாததால் குழந்தைகள் தந்தையைப்பார்த்து பேசவே வாய்ப்பில்லாமல் போய் விட்டது.

“அப்பா” போனில் பேசினான் மகன்.

“என்ன சொல்லனமோ இழுக்காம சீக்கிரம் சொல்லு. கடைல கூட்டம் நின்னு கெடக்குது. இன்னமும் சோத்து பைய தெறக்கலே….”

“இன்னைக்கு எனக்கு பர்த்டே….”

“சேரி. சாயங்காலம் கடைல கூட்டம் கொறைஞ்சதும் கேக்கு கொடுத்து அனுப்பறேன். சாப்பிட்டு போட்டு தூங்கு….” போனை வைத்து விட்டு வியாபாரத்தை கவனித்தார்.

“அந்தப்பையன் பொறந்த நாளுன்னு போன்ல கூப்புட்டு சொன்னானே…. கேட்டதும் கேக்கு வாங்கீட்டு பொறப்பட்டு வரமுடியாதோ…?”

“சோத்துக்கு உங்கொப்பனா அரிசி வாங்கி போடுவான்?”

“சோத்துக்காககத்தான் சம்பாதிக்கறீங்களோ….?” கேட்டவள் அழுதாள்.

“உனக்கெனன்ன தெரியும்? எனக்கப்புறம் கடை வெச்சவன் இன்னைக்கு சொந்த பில்டிங் கட்டிப்போட்டான். அவனோட யோகம். மாமனார் இடம் வாங்கி கொடுத்திருக்கார். நமக்குந்தா வந்து வாச்சிருக்கே. பொண்ணுக்கு போன வேணும்னா தெனத்துக்கும் நூறுவாட்டி போட்டு முழிச்சாச்சா? குளிச்சாச்சா? சாப்புட்டாச்சா? இன்னைக்கு கடை வருமானம் எவ்வளவு? ன்னு கேட்டுக்கிற ஆளுங்கதான் எனக்கு கெடைச்சிருக்காங்க.ம்…என்னோட விதி அப்புடி” சலித்துக்கொண்ட கணவன் மாதவன் மீது கோபம் கொண்டாள் மாதங்கி.

“நானும் அந்த வெள்ளச்சோளத்துங்க கிட்ட அப்பவே சொன்னேன். வேலைக்கு போற பையனுக்கு கட்டிக்கொடுங்க. வாரத்துல ரெண்டு நாள் லீவு கெடைக்கும்னு. நிம்மதியா சந்தோசமா இருக்கலாம்னு. அதுங்க எங்க கேட்டுதுங்க. உறவுக்காரங்க யோசனைய கேட்டுட்டு ‘பையன் நல்ல பாட்டாளி’ ன்னு பணப்பிசாசுக்கு புடிச்சு கட்டி வெச்சு என்ற வாழ்க்கையவே கெடுத்துப்போட்டாங்க” தேம்பினாள்.

“உனக்கு என்ன கொறை இப்போ…? வீட்ல சோத்துக்கு இல்லையா…?”

“அடப்போய்யா… நீயும் உன்ற சோறும். எப்ப பார்த்தாலும் சோறு, சோறுன்னு பேசீட்டு…. யாரு வீட்ல தான் சோறு இல்லாம பட்னில கெடக்கறாங்க? வாழ்க்கைங்கிறது நேரத்துக்கு சாப்பிடறது மட்டுமில்லை. அதுக்கு மேல… அதெல்லாம் உனக்கெங்கே புரியப்போகுது? உடம்பு பசிக்கு சாப்பாடு போடோனும்னு தெரிஞ்ச உனக்கு, உணர்வு பசிக்கு சாப்பாடு போடோனும்னு தெரியல….”

“அப்படின்னா….?”

“அதெல்லாம் சொல்லிக்குடுத்து வாரதில்லை. உன்ற கடைய ஒரு வாரம் சாத்திட்டு வந்து எங்கூட வீட்ல இருந்து பாரு. தானா புரியும். படுத்த உடனே கொரட்டை உடறவங்களுக்கு எங்க புரியப்போகுது?” பேசியவள் குழந்தைகள் படுத்திருக்கும் அறைக்கு சென்று அறைக்கதவை படீரென சாத்தி தாழிட்டுக்கொண்டாள்.

கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *