பூசைக்குள் வரும் பூக்கள்
கதையாசிரியர்: காரை ஆடலரசன்
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: July 17, 2026
பார்வையிட்டோர்: 25
அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4
அத்தியாயம் – 1

வத்தலான உடல் கூர்மையான முகம். போலியோ நோயால் சூம்பிப் போன கால்கள். அவன் அரைக்கால் டிரௌசர் போட்டிருந்தான். அதில் கால்கள் குச்சியாக இருந்தது. இடுப்பிற்கு மேல் அவன் நல்ல ஆண் மகன் போலிருந்தான். அரைக்கை சட்டைப் போட்டிருந்தான். பின்னால் அவன் புது மனைவி அமர்ந்திருக்க அந்த மூன்று சக்கர சைக்கிள் வண்டியை நிதானமாக கடற்கரையை நோக்கி விட்டான்.
பேர் பாலு. உடல் ஊன உபகாரத்தில் ஒரு கம்பெனியில் குமாஸ்தா. கைநிறைய சம்பளம். சென்ற மாதம் வரை இவன் சன்னியாசி. பிறகு சம்சாரி.
இது அலுவலக நண்பர்கள் நல்லவர்களால் போட்ட பிச்சை. அதில் முக்கியமானவர் சூப்பிரண்டு சொக்கலிங்கம். அடுத்த ஆண்டு ஓய்வு பெறப் போகிறவர்.
இவன் கைகளைத் தரையில் ஊன்றி முழங்கால்களை முட்டிப் போட்டு தவழ்ந்து வேலைக்கு வந்த முதல் நாளே அவருக்கு இவனைப் பிடித்துப் போயிற்று.
“தம்பி!” நாற்காலியில் தாவி ஏறிவனை வாஞ்சையாய் அழைத்தார்.
“என்ன சார்?“ அவன் அமர்ந்து கேட்டான்.
“எந்த ஊரு?“
“பக்கம்தான் சார். குப்பம்!”
“நம்ம அலுவலக பக்கம்ன்னா….கோவிந்தன் குப்பமா?”
“ஆமா.”
“வயசு?“
“முப்பது.”
“அம்மா அப்பா இருக்காங்களா?”
“இல்லே!“
“ஏன்?“
:எனக்கு மூணு வயசு ஆகும்போதே செத்துட்டாங்க. மாமாதான் எடுத்து வளர்த்தார். தனிக்கட்டை. அவரும் போன வருசம் போய்ச் சேர்ந்துட்டார். அடுத்து அரசியல்சாதி ஆம்பலத்தடையார்கிட்ட போய் என் நிலைமையைச் சொன்னேன். அவர் இங்கே சிபாரிசு செய்து சேர்த்து விட்டார்.”
“சாப்பாடு?“
“ஓட்டல். சமயத்துல கை சமையல்.”
“வேறு சொந்த பந்தம் இல்லியா..?”
“தெரியலை…?!” பரிதாபமாசச் சொன்னான்.
“கலியாணம்?”
“வேணாம் சார்!”
“ஏன்?“
மௌனமாய் இருந்தான்.
“முயற்சி செய்ய ஆளில்லே. யாரும் பொண்ணு கொடுக்க மாட்டாங்கன்னு பயம். அப்படித்தானே ?!…” அவரே சொன்னார். அவன் அதற்கும் பதில் சொல்லவில்லை.
“அப்படியே வைச்சுக்கிறேன். ஒரு முக்கியமான கேள்வி கேட்பேன் தப்பா நெனைக்காம பதில் சொல்லனும்.”
“கேளுங்க சார்.”
அக்கம் பக்கம் பார்த்து குசுகுசுப்பாய் “கலியாணம் கட்டினா உன்னால பொண்டாட்டியோட சந்தோசமா இருக்க முடியுமா?” கேட்டார். இந்த கேள்வி இவனுக்கு அதிர்ச்சி, தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. முகம் ஒருமாதிரியாகிப் போனது. நேளிந்தான்.
“உன் நன்மைக்காகத்தான் கேட்கிறேன். கூச்சப்படாம தைரியமா சொல்லு?“
“மு…முடியும் சார்!“
“என்ன தட்டுத்தடுமாறி சொல்றே. அழுத்தம் திருத்தமா நெஞ்சில் துணிச்சல் வர்றாப் போல நல்ல திடமா அடிச்சு சொல்லு?”
“முடியும் சார்…!” கறாராய்ச் சொன்னான்.
“இதுக்கு உத்திரவாதம்ன்னா நான் கலியாணத்துக்கு முயற்சி செய்யறேன். சரியா?” சொக்கலிங்கம் அடுத்த ஏற்பாட்டிற்குத் தாவினார்.
“வேணாம் சார்…” தயங்கினான்.
“ஏன்?“
“எந்த பொண்ணும் இஷ்டப்படாது.”
“அதைப்பத்தி உனக்கென்ன கவலை? நான் முடிக்கிறேன். ஆனா….பொண் கண் கலங்கக் கூடாது, உனக்குள்ளே ஒரு தாழ்வு மனப்பான்மை வராம அன்பு ஆசையாய் வைச்சு குடித்தனம் நடத்தனும்.”
“ம்ம்…”
“அப்போ இன்னைக்குச் சாயந்தரம் நீ என் கூட வர்றே?”
“எங்கே சார்?”
“மருத்துவமனைக்கு”
“ஏன்ன்..?“
“நீ ஆம்பளைங்குறதுக்கு எனக்கு மருத்துவ ரீதியாய் சான்று சாட்சி வேணும். பொண்ணையும் பொண் வீட்டுக்காரங்களையும் சம்மதிக்க வைக்கத்தான் இந்த ஏற்பாடு.” காரணத்தைச் சொன்னார்.
மௌனமானான்.
அன்று சாயந்தரமே இவனைக் கையோடு அழைத்துக் கொண்டு மாறன் மருத்துவமனைக்குச் சென்றார். சோதனையில் திருப்தி. டாக்டர் கொடுத்த அந்த மருத்துவச் சான்றிதழை எடுத்துக் கொண்டார். பெண்ணுக்கு அலைந்தார்.
கிடைத்தாள் மாலா. அழகு அம்சமான பெண். ஏழ்மையான குடும்பம். அவளே விரும்பி ஒத்துக் கொண்டாள். திருமணம்.
வண்டி கடற்கரையை அடைந்தது. என்றும் போல் அது இன்றும் கூட்டாமாக இருந்தது. வண்டியை ஓரம் கட்டி வந்தபடியே அதிலேயே இருந்தார்கள். பின்னால் அமர்ந்திருந்த நாலைந்து இளைஞர்களிடமிருந்து பேச்சுக்குரல்.
“ஆண்டவனுக்கு ரொம்ப ஓர வஞ்சனைடா. ஏன்… சமயத்துல அறிவே கிடையாது. உடல் ஊனம், குறை உள்ளவங்களுக்குத்தான் அழகான பொண்ணை முடிச்சுப் போட்டு நல்லவன் வயித்தெரிச்சலையெல்லாம் கொட்டிப்பார்.” என்றான் ஒருவன்.
“என்னடா திடீர்ன்னு சம்பந்தா சம்பந்தமில்லாம உளர்றே?”
அடுத்தவன் விபரம் புரியாமல் திடுக்கிட்டான்.
“எதர்க்கப் பார்!”
“அடப்பாவி! சத்தமா சொல்லி ஏன் அவுங்க மனசை நோகடிக்கிறே?” என்றான் வேறொருவன்.
“அவன் பொய் சொல்லலை.”
இன்னொருத்தன் வக்காலத்து வாங்கினான்.
“நிசத்தைதான் சொன்னான்.”
“இவ எப்படி மனசு வந்து அவனைக் கட்டிக்கிட்டா?” முதலில் பேசியவன் கொக்கி போட்டான்.
“சொந்தம் பந்தமா இருக்கும். இல்லே நெருங்கின தாய் மாமனாய் இருக்கும். பொண் கொடுக்க யார் முன் வருவா? அதான் இவன் அனாதையாகிப் போகாம இவளைக் கட்டியிருப்பாங்க.”
“ஏன்… ஒன்னுமில்லாத ஏழையாய் இருந்தாக்கூட பெத்தவங்க பொண்ணை இப்படி கிணத்துல தள்ளி விடுவாங்க. அவுங்களுக்குப் பொண்ணு கன்னி கழியனும், கைவிட்டுப் போகனும்ங்குற நெனப்பு.” அவர்கள் பேசிக் கொண்டே போனார்கள்.
மாலாவிற்கு அதற்கு மேல் அவர்கள் பட்டிமன்றத்தைக் கேட்க விருப்பமில்லை.
“வாங்க போகலாம்!” கணவனைக் கிளப்பினாள். பாலு எழவில்லை.
“இதெல்லாம் தினம் கேட்டுக் கேட்டு புளிச்சுப் போனதுதானே மாலா. இரு பொறுமையாய் போகலாம்.” அமர்த்தினான்.
“வேணாம்! வேற இடம் போய் உட்காரலாம்!” எழுந்தாள்.
வம்பு வேண்டாமென்று துாரப் போய் அமர்ந்தாள்.
பாலு தன்னுடைய மூன்று சக்கர வாகனத்தை கிளப்பி மனைவிக்கருகில் நிறுத்தி காற்று வாங்கினான்.
கிரகம் இங்கேயும் விடவில்லை. எதிரில் வந்த வேறு நாலு இளைஞர்கள் இவர்களை ஒரு மாதிரியாய்ப் பார்த்துவிட்டு தாண்டிச் சொன்றார்கள். சிறிது துாரம் போய் அமர்ந்தார்கள்.
அதில் ஒருவன் இவளைப் பார்த்தப்படி “அவன் இவளைத் திருப்திப் படுத்துவான்றே?!” மற்றவனிடம் கேட்டான்.
அவன் வம்பை விரும்பாதவன் போல் “எனக்குத் தெரியாது!” இறுக்கமாக சொன்னான்.
“எனக்கொன்னும் அப்படித்தோணலை!” அடுத்தவன் உதட்டைப் பிதுக்கினான்.
“இரு நான் போய் அவுங்களைக் கேட்டுட்டு வர்றேன்!” ஒருவன் சடக்கென்று எழுந்து இவர்களை நோக்கி ஒரு அடி வைத்தான்.
“டேய்! விளையாட்டு வேணாம். இந்த மாதிரி ஆளுங்க பொண்டாட்டியைக் கூட்டிக்கிட்டு வரும்போது எச்சரிக்கையாய் வருவாங்க. தற்காப்புக்காகவும் எவனாவது மனைவியைப் பத்தி தப்பா பேசி கையைத் தொட்டா தொட்ட கையை சடக்குன்னு வெட்டுறதுக்கு வசதியாய் வீச்சரிவாளையோ கத்தியையோ தன் சீட்டுக்கு அடியில மறைச்சு வைச்சிருப்பாங்க. விவரம் தெரியாம போய் எசகுபிசகாய் வெட்டு வாங்கிட்டு திரும்பாதே!” எச்சரித்தான்.
அடி எடுத்து வைத்தவன் பயந்து பின்வாங்கி அவர்களுடன் சேர்ந்தான்.
‘மனிதர்களுக்குத்தான் எத்தனைக் கற்பனை!’ பாலுவிற்குள் சிரிப்பு வந்தது. ‘நல்ல யோசனை ஏன் இப்படி முன்னெச்சரிச்சரிக்கையாய் தன் போன்றவர்கள் வரக்கூடாது?’ நினைத்தான்.
‘என்ன மனிதர்கள்?!’ மாலாவிற்கு எரிச்சல் வந்தது.
“வாங்க வீட்டுக்குப் போகலாம்!” எழுந்து நடந்தாள். பாலு மனைவி நடைக்குத் தக்கவாறு மெல்ல சைக்கிளை வலித்தான்.
வழியில் பெரும்பாலான ஆண்கள் வயது வித்தியாசமில்லாமல் இவர்களை மாறி மாறிப் பார்த்து மாலா மேல வக்கிர பார்வை வீசினார்கள்.
‘மற்றவர்களின் மனம் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் என்ன மனிதர்கள்… சமூகம்?!’ இந்த இரவும் துாக்கம் பிடிக்கவில்லை.
எந்த இரவும் போல் அவளுக்கு
“இதெல்லாம் மற. துாங்கு! பாதை வகுத்த பின்பு பயம் கூடாது!“ பாலு அவளை ஆதரவாக அணைத்து தேற்றினான்.
மறுநாள் காலை. பாலு வீட்டைவிட்டு அலுவலகம் கிளம்பிச் செல்லும் வரை அவர்கள் வீட்டு எதிரிலுள்ள மரத்தடிக்கு யாரும் வரவில்லை.
அவன் 8.45 மணிக்குப் புறப்பட்டுச் சென்ற பின்தான் …. ரகு வந்து அதன் வேரில் வந்து அமர்ந்தான். அடுத்து பாலாவும் சீனுவும் சேர்ந்து வந்தார்கள். கடைசியாக கணேசன் வந்தான். எல்லாருக்கும் வயது 25, 26.
இவர்கள் படித்து முடித்து பெண்களைக் கேலி கிண்டல் செய்து திரியும் வெட்டி ஆபீசர்கள். இங்கு குடி வந்த ஒரு சில நாட்களிலேயே மாலா இவர்களை அடையாளம் கண்டு கொண்டாள். அவர்கள் பார்வை பேச்சு வெடிச்சிரிப்பிலிருந்தே இவர்கள் தனக்காகத்தான் தினம் வந்து இப்படி குடி கொண்டிருக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொண்டாள். கணவனிடம் சொன்னால் வம்பு. ஊருக்கு வேறு புதுசு என்பதால் மவுனமாய் இருந்தாள்.
அவர்களுக்கும் இவளை வீழ்த்துவதில்தான் குறி. இதில் ரகு ரொம்ப துடிப்பு.
அத்தியாயம் – 2
சப்-இன்ஸ்பெக்டர் சாரதிக்குக் கை அசைந்தால் காசு. எவர் புகாருடன் காவல் நிலையத்திற்குள் புகுந்தாலும் பணம்.
“ஏட்டைக் கண்டுக்கிட்டுப் போங்க!” கூச்சமில்லாமல் சொல்வார். எதிலும் அவருக்கு ரொம்ப பிடிவாதம். பிடித்த பிடியை விடமாட்டார். எவரையும் கை நழுவ விடமாட்டார்.
ஆளுக்கு இன்றைக்குப் பகல் நேரம் வருமானம் சரி இல்லை. எனவே….இரவு பதினோரு மணிக்கு மேல் ரோந்துக்குத் தாயாரானார். ஜீப்பை எடுத்து வரச் சொல்லி… ஏட்டு, இரண்டு கான்ஸ்டபுள்களை அள்ளிப் போட்டுக் கொண்டு நகரை வலம் வந்தார். வீதிகள் வெறிச்சோடி இருந்தது. சந்தேக கேஸ் என்று எவரையும் பிடித்து நிறுத்தி விசாரிக்க மனமில்லை. காரணம் மனித உரிமை கழகம் தொல்லை. வேட்டைக் கிடைக்காத தாக்கம் அவருக்குள் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அந்த வேகம்…. சாலையோரத்தில் படுத்திருந்த ஒரு பிச்சைக்காரனை எழுப்பி முதுகில் இரண்டு வைத்து துரத்தினார்.
“டேரா கட்டிக்கிட்டு அசிங்கம் பண்ணுதுங்க பார்!” பிளாட்பார கணவன் மனைவி தாம்பத்தியத்தை திட்டினார்.
“இதுங்க உண்மையான புருசன் பொஞ்சாதியா தொழிலான்னு ஒரு நாளைக்குக் கவனிக்கனும்!” கறுவினார்.
ஏட்டு எத்திராசு மட்டுமில்லாமல் மற்றவர்களும் அதிகாரி மனநிலை புரிந்து…. மௌனமாய் வந்தார்கள்.
சாரதி ஜீப்பை தேசிய நெடுஞ்சாலைக்கு விடச் சொன்னார். ஒரு அத்துவான இடத்தில் ஓரம் கட்டி நிறுத்தச் சொன்னார். நின்றது.
அடுத்த கட்ட வேலலையாய்….ஏட்டு, கான்ஸ்டபுள்கள் அம்பாய் இறங்கி சாலையோரம் நின்று வாகனங்களை மடக்க வழியைப் பார்த்தார்கள்.
சாரதி ஜீப்பில் சாய்ந்து நின்று சிகரெட் பற்ற வைத்தார்.
மாருதி, சான்ட்ரோ, இன்டிகா, இனோவா என்று வகைவகையாய் வாகனங்கள் சர் சர்ரென்று இவர்களைத் தாண்டிச் சென்றது.
இவர்கள் எதிர் பார்க்கிறாற் போல் பெரிய வாகனங்கள் எதுவும் வரவில்லை.
வெகு நேரம் நின்றார்கள்.
மணி 12.00 தாண்டிய நேரம்..
கான்ஸ்டபுள்கள் கொட்டாவி விட்டார்கள்.
எத்திராசுக்கு கண்கள் எரிந்து கால்கள் வலித்தது. பத்தடி நகர்ந்து போய் மலையடிவாரத்தில் ஒன்றுக்குப் போய் வந்தான்.
சாரதி நாலு சிகரெட்டுக்குத் தாவினார். கடுப்பாக இருந்தாலும் முகத்தில் சலனம் காட்டவில்லை.
துாரத்தில் இரண்டு ஹெட் லைட்கள் தெரிந்தது.
‘வர்றது வரட்டும்!’ சாரதிக்கும் பொறுமை இல்லை.
“வர்ற வண்டியை நிறுத்துப்பா!” இருப்பவர்களுக்கு உத்தரவிட்டார்.
அவர்கள் சாலையின் மத்திக்குச் சென்றார்கள். வண்டி நிறுத்தாமல் போனாலும் தாங்கள் மோதி சாகாமல் தப்பிக்க தயாராய் நின்று மேலும் கீழும் கை காட்டினார்கள்.
விளக்கு வெளிச்சத்தில் போலீஸ் தலைகள் தெரிந்ததுமே டிரைவர் புரிந்து தன் டேங்கர் லாரியை ஓரம் கட்டி ஜீப்பிற்கு முன் பத்தடி துாரத்தில் நிறுத்தினான். உள் விளக்கைப் போட்டு பெட்டியைக் குடைந்தான். பக்கத்தில் உதவியாளன் அமர்ந்திருந்தான். தஸ்தாவேசுகளுடன் இறங்கிய டிரைவர் சப்-இன்ஸ்பெக்டரிடம் கொண்டு வந்து நீட்டினான்.
சாரதி டார்ச் அடித்து அவைகளைக் கவனமாக ஆராய்ந்தார். ஓட்டுநர் உரிமம் பார்த்து அவன் முகத்தைக் கவனித்தார். அவன் காக்கி பேண்ட் சட்டை போட்டு சரியான சீருடையில் இருந்தான். போலீஸ் நிறுத்திய பதற்றம் இல்லை.
‘எல்லாம் சரியா இருக்கிற திமிரு! ம்ம்…!’ என்று கறுவி தஸ்தாவேசுகளைக் கையில் பிடித்தபடி லாரி அருகில் சென்றார்.
“வண்டியில என்ன சாராயமா?“
“இல்லே சார் பெட்ரோல் !“
“எந்த ஊர் போகுது?” கேள்வி கேட்டுக் கொண்டே வண்டியில் ஏதாவது குறை உள்ளதா என்று சுற்றி நடந்து கவனமாய் ஆராய்ந்தார்.
டிரைவரும் அவர் பின்னாலேயே வந்து “திருச்சி.” சொன்னான்.
குறை இல்லை.
“வண்டியில ஏறு.”
ஏறினான்.
“ஹெட் லைட் நடுவுல கருப்பு, பல்புல துாரம் குறைவெல்லாம் சரியா இருக்கா?”
“இருக்கு சார் .”
“போடு.”
சுவிட்ச் போட்டு ஒளியேற்றி செய்து காட்டினான்.
சரியாக இருந்தது.
“இன்டிகேட்டர்?”
அதையும் செய்து காட்டினான். முன் பின் மஞ்சளாய் அணைந்து அணைந்து எரிந்தது,
“ஹாரன்?“
ஒலித்துக் காட்டினான். ஒலி அரசு சட்டதிட்டப்படி இருந்தது.
“பையன் வயசென்ன?”
“இருபத்து ஒன்பது சார்!” அதிலும் தப்பில்லை.
“வண்டியில பாட்டில் பாசஞ்சர் இருக்கா?”
“இல்லே சார்.”
பாக்கெட்ல பணம் இருக்கான்னு கேட்கிறது கௌரவக் குறைச்சல் கேட்டாலும் இதுதான் சார் இருக்குன்னு அம்பதுக்கு மேல கொடுக்காம ஓடிடுவான். குறை இருந்தால்தான் மிரட்டி அதிக பணம் கறக்க முடியும்! என்ன குறை? மூளையைக் கசக்கினார்.
‘இவ்வளவு வேலைக் காட்றோம். பயல் பயந்து நடுங்கி இருக்கிறதை எடுத்துக் குடுத்துட்டு ஓடாமல் தெனாவட்டா இருக்கான்னா அந்த அம்பதும் கொடுக்க மாட்டான்!’ சாரதிக்குத் தோல்வியைக் காண விருப்பவில்லை. இப்படி அவருக்கு ஏற்பட்டதும் இல்லை. எப்படி கரக்க ?…
‘டிரைவர் எத்தனுக்கு எத்தன். யோக்கியன். இன்னைக்கு நம்ம ஆள் முகத்துல கரி. வெறும் கை!‘ ஏட்டு, கான்ஸ்டபுள்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது. வருமானம் இல்லை! என்ற நம்பிக்கைக்கு வந்தார்கள்.
சாரதி தீவிரமாய் சிந்தித்தபடி தன் சட்டைப்பையில் கை விட்டு சிகரெட் பாக்கெட்டை எடுத்தார். அதிலிருந்து ஒன்றை உருவி எடுத்து வாயில் வைத்து மேல் சட்டை பேண்ட் பாக்கெட்களைத் தடவினார்.
டிரைவருக்கு அவர் என்ன தேடுகிறார் புரிந்தது. என்கிட்ட எதுவும் பேராது. சீக்கிரம் தேடி கண்டுபிடிச்சு பத்தவைச்சிக்கிட்டு நான் குடுத்ததைக் குடு. சீக்கிரம் போகனும். நினைப்பில் கையைப் பிசைந்தான்.
“டிரைவர்! தீப்பெட்டி குடு” சாரதி கை நீட்டினார்.
இந்தா பத்தவைச்சிக்கிட்டு ஆளை விடு! நினைப்பில் “இந்தாங்க சார்!” இவனும் தன் பாக்கெட்டிலிருந்து எடுத்துக் கொடுத்தான்.
உரசி பற்ற வைக்கும் வெளிச்சத்தில் சாரதி முகம் பூ த்தது. எரிந்த குச்சியை கீழே போட்டு சிகரெட்டை ஆழமாக இழுத்து அடர்த்தியாக புகையை விட்டவர் “டிரைவர்! ஒரு ஐநூறு வெட்டிட்டு கிளம்பு!” மெல்ல சொன்னார்.
“எதுக்கு சார்?!” அவன் திடுக்கிட்டான்.
“பொதுவா டிரைவர் பாக்கெட்ல வத்திப்பெட்டி இருக்கக் கூடாது, அதிலும் பெட்ரோல் டாங்கர் ஓட்றவன் கண்டிப்பா வைச்சிருக்கக்கூடாது…” புகையைவிட்டார்.
டிரைவருக்கு இப்போதுதான் தன் தவறு புரிந்தது. வேர்த்தது.
“சார்ர்ர்…!” மெலிதாக அலறினான்.
இப்படி ஒரு வழியா…?! ஏட்டு, கான்ஸ்டபுள்களால் நம்பவே முடியவில்லை. அசந்தார்கள்.
“சார்! கையில மடியில பணமில்லே. என்மேல கருணைக் காட்டுங்க சார்..”.டிரைவர் சட்டென்று எண்சாண் உடம்பும் ஒரு சாணாகி கெஞ்சினான்.
“இந்த வேலையே வேணாம். வண்டியை வண்டியை நிறுத்தினதுமே அம்பது நுாறோ குடுத்துட்டுப் போனா அது மரியாதை. அவ்வளவு இல்லே..இவ்வளவுதான் இருக்குன்னு கையில இருக்கிறதைக் குடுத்து கருணை காட்டுங்கன்னா மனசு இதங்கும். அதை விட்டுட்டு என்கிட்ட எல்லாம் சரியா இருக்கு. ஒன்னும் பண்ண முடியாதுன்னு திமிறா நின்னா போலீஸ்காரல்லாம் காதுல பூ வைச்சவன்னு நெனப்பா? ஐநுாறுல பைசா குறைக்க மாட்டேன். கேஸ் எழுதினா ஐயாயிரம் கோர்ட்டுல கட்டனும். கேஸ் எழுதறேன்!” எஃப் ஐ ஆர் புத்தகமும் பேனாவும் எடுத்தார்.
“ஐயா! என் சம்பளப்பணம் நானூாருதான்ய்யா இருக்கு. அதுவும் என் பொண்டாட்டி பிரசவத்துக்கு எடுத்துப் போறேன். அவ இன்னைக்கோ நாளைக்கோன்னு இருக்காள். சீக்கிரம் போகனும். துணைக்கு யாருமில்லே.” கெஞ்சி தவித்தான்.
சாரதி அசையவில்லை.
“சாார்ர்… என்னை மன்னிச்சுடுங்க “இவன் தடாலென்று அவர் காலில் விழுந்து எழுந்தான்.
சாரதிக்குக் கொஞ்சமும் இரக்கம் இல்லை.
“பொண்டாட்டி மேல் அக்கரை. சீக்கிரம் போகனும்ன்னா குடுத்துட்டு ஓடு வேற வழி இல்லே.” கறாராக சொன்னார்.
டிரைவருக்கு அதற்கு மேல் நிற்க தெம்பில்லை. நடுக்கத்துடன் மேல் சட்டைப் பாக்கெட்டில் கையைவிட்டு கசங்கிப் போன நான்கு நூறு ருபாய்த் தாள்களை எடுத்து நீட்டினான்.
வெற்றிப் புன்னகையுடன் அலட்சியமாய் வாங்கி பேண்ட் பையில் சொருகிக் கொண்ட சாரதி அவனிடம் தஸ்தாவேசுகளைக் கொடுத்தார்.
‘பாவி!’ அவன் கண்களைத் துடைத்துக் கொண்டு நகர்ந்து வண்டியேறினான்.
டேங்கர் நகர்ந்ததும் “போகலாம்!” சாரதி ஜீப்பில் ஏறினார். உடன் வந்தவர்கள் தொற்றினார்கள்.
“வண்டியை நம்ம வீட்டுப்பக்கம் விடுப்பா” சாய்ந்து அமர்ந்தார்.
புற நகர் பகுதியில் அவர் வீடு. மனைவி ஊரில்லை. அரை மணி நேரத்தில் வீட்டு வாசலில் வண்டி நின்றது. இறங்கினார்.
கேட்டைத் திறந்து வாசல் கதவு திறக்க…. வீடு ஹாவென்று இருந்தது. கதவு சாத்தி…உள் பக்கமாக பூ ட்டி விட்டு மாடியேறி அறைக்குள் நுழைந்தார். சீருடைகளைக் கலைந்து விட்டு பனியன் லுங்கிக்கு மாறினார். குளிர்சாதனப்பெட்டியைத் திறந்து வெளிநாட்டு மது பாட்டிலை எடுத்து சோபாவிற்கு முன்னிருந்த டீபாயில் வைத்தார். அத்துடன் இருந்த முழு வறுத்த கோழிஇ கொஞ்சம் முந்திரி பருப்புகளையும் எடுத்து டீபாயில் வைத்து கிளாசைக் கழுவினார். அமர்ந்து பாட்டிலைத் திறந்து ஊற்றி அதில் ஐஸ் கட்டிகளை மிதக்க விட்டார். மெல்ல குடிக்க ஆரம்பித்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் சாரதிக்கு மதுவை வாயில் வைத்ததுமே பொசுக்கென்று நினைவுக்கு வருவது சாருதான். அவளுடைய உடல் வனப்பு, வளைவு, மொழி, விளையாட்டு எல்லாம் நெஞ்சுக்குழிக்குள் இறங்கி போதையுடன் உடல் மொத்தத்தையும் சூடேற்றும்.
அது இப்போதும் அப்படி ஏற்றியது ஏறியது. போதை ஏற ஏற அதுவும் விஸ்வரூபம் எடுத்து உயர்ந்தது.
சாரதி…கைபேசி எடுத்து எண்களை அழுத்தி காதில் வைத்தார். எதிரணியில் எந்த அசைவும் இல்லை. அணைத்துவிட்டு மீண்டும் எண்களை அழுத்தி காதில் வைத்தார்.
சின்னப்பன் எடுத்தார். அவருக்கு வயது ஐம்பது. இவர்தான் சினிமா வாய்ப்பு தேடி வந்த சாருலதாவை சாருவாக்கி சில படங்களில் தலை காட்ட வைத்து பலான பெண்ணாக்கியவர்.
“என்ன சின்னப்பன்! சாரு போன் ஏன் வேலை செய்யலை?”
“உள்ளே ஆளிருக்கு அணைச்சிருப்பாள் சார்.!”
“செமத்தியான பார்ட்டியா?”
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லே. கொஞ்ச நேரம் கழிச்சுப் பண்ணுங்க. உங்களுக்கு எப்பவும் கதவு திறந்திருக்கும்.”
அணைத்துவிட்டு சாரதி மீண்டும் மதுவைத் தொடர்ந்தார்.
சிறிது நேரத்தில் கை தொலைபேசியை எடுத்து “சா..ரு!” குழறினார்.
– தொடரும்…
![]() |
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
மகாசூன்யச் சுழல்
வேங்கடேஷ் புருஷோத்தம்
July 17, 2026
அட… மெல்ல நட!
கல்பனா ராஜகோபால்
July 17, 2026
அகல் விளக்கு
மு.வரதராசன்
July 17, 2026
